Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   23  மார்ச் 2019  
                   தவக்காலம் 2ம் வாரம் சனிக்கிழமை- 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்.

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20

ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்ததுபோல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டு வந்த நாளில் நடந்தது போல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன்.

உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து, நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்; அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்.

பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது போல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:103: 1-2. 3-4. 9-10. 11-12 (பல்லவி: 8a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். 10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. 12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 15: 18

நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்' என்று அவரிடம் சொல்வேன்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32

அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், `'இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே" என்று முணுமுணுத்தனர்.

அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: `'ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார்.

அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.

பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.

அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண்டார்.

உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார்.

தந்தை தம் பணியாளரை நோக்கி, 'முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும் காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்துகொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, 'இதெல்லாம் என்ன?' என்று வினவினார்.

அதற்கு ஊழியர் அவரிடம், 'உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.

அதற்கு அவர் தந்தையிடம், 'பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.

ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார்.

அதற்குத் தந்தை, 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில்இ அவர் பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்; அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்.

பாவத்தை பார்க்காமல், பாவியின் வாழ்வில் அக்கரை கொண்டவரே நம் இறைவன்.

நம்பிக்கை கொண்டவராக, நம்முடைய பாவங்களை ஓப்புக் கொண்டு, பாவ மன்னிப்பின் மீது அக்கரை கொண்டவராக, இத்தவக்காலத்தில் பாவத்தை அகற்றி, மன்னிப்பு பெற்றவர்களாக வாழ முன்வருவோம்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32

தவறை உணர்ந்து, மனம்மாறும் காலமிது

ஆங்கில அகராதியை முதல்முறையாக வடிவமைத்தவர் சாமுவேல் ஜான்சன் என்பவர். அவர் ஆங்கில அகராதியை வடிவமைத்ததோடு மட்டுமல்லாமல், ஆங்கில இலக்கியத்தில் மிகப்பெரிய சாதனைகளையும் நிகழ்த்தியவர். அவரது சாதனைகளைப் பாராட்டுவதற்காக பாராட்டுக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டார்கள்.

கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் எல்லாரும் சாமுவேல் ஜான்சனை வாயார வாழ்த்திப் பேசினார்கள். அப்போது திடிரென்று கூட்டத்திலிருந்து எழுந்த ஒரு பெண்மணி சாமுவேல் ஜான்சனிடம், "பெரும் மதிப்பிற்குரிய சாமுவேல் ஜான்சன் அவர்களே! நீங்கள் ஆங்கில இலக்கியத்திற்குச் செய்த சேவைக்காக உங்களை மனதாரப் பாராட்டுகிறேன், ஆனால் அதேவேளையில் உங்களுடைய படைப்பில் ஒரு தவறு இருக்கிறது" என்றார்.

அதைக்கேட்ட கூட்டம் ஒருநிமிடம் அமைதியானது. அப்போது சாமுவேல் ஜான்சன் அப்பெண்மணியிடம், "என்னுடைய படைப்பில் தவறு இருப்பதாகச் சொல்கிறீர்களே, அதனைத் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டார். அதற்கு அப்பெண்மணி "ஆம்" என்று சொல்லிவிட்டு அதனை நிரூபித்துக் காட்டார்.

உடனே சாமுவேல் ஜான்சன், "அம்மா! இந்தத் தவறு என்னுடைய அறியாமையில் நிகழ்ந்தது. இதை நான் திருத்திக்கொள்கிறேன். அதேவேளையில் இந்தத் தவறுக்காக நான் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன்" என்றார். சாமுவேல் ஜான்சன் தன்னுடைய தவறை தெரிந்துகொண்டபோது, அதைப் பெருந்தன்மையோடு திருத்திக்கொள்ள முன்வருகிறார். இப்படிப்பட்ட குணமானது உண்மையிலே பாராட்டுக்குரியது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன்னுடைய தவறை உணர்ந்து தந்தையிடம் திரும்பி வந்த ஊதாரி மைந்தனுடைய உவமையை நாம் வாசிக்கக் கேட்கின்றோம். இவ்வுவமை தந்தையின்/தந்தைக் கடவுளின் அளவுக் கடந்த இரக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது என்பதை நாம் அறிவோம். அதே வேளையில் நாம் ஒவ்வொருவரும் மனம்மாறி கடவுளிடம் திரும்பி வரவேண்டும் என்ற செய்தியையையும் இவ்வுவமை நமக்குச் சுட்டிகாட்டுகிறது என்பதை மறக்கமுடியாது.

ஊதாரி மகன்/ இளைய மகன் தன்னுடைய தந்தையிடமிருந்து சொத்தை எல்லாம் பிரித்துக்கொண்டு, தொலைநாட்டுக்குச் சென்று, தாறுமாறான வாழ்க்கை வாழ்கிறான். ஒருகட்டத்தில் தன்னுடைய தவறை உணர்ந்து, தந்தையிடம் திரும்பி வந்து மன்னிப்புக் கேட்கிறான். அப்போது தந்தையானவர் அவனை மனதார மன்னித்து ஏற்றுக்கொள்கிறார்.

"வீழ்வது பலவீனம், வீழ்ந்து கிடப்பதுதான் மதியீனம்" என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப ஊதாரி மகன் பாவத்தில் விழுகிறான். ஆனால் அவன் அப்படியே பாவத்தில் விழுந்துகிடைக்கவில்லை. மாறாக தன்னுடைய தவறை உணர்ந்து, தந்தையிடம் திரும்பி வந்து, மன்னிப்புக் கேட்கிறான், புது மனிதனாக வாழ்கிறான். ஆகவே மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பாவத்தில் வீழ்வது பலவீனமாக இருந்தாலும், அதில் அப்படியே விழுந்து கிடக்காமால், மீண்டுமாக எழுந்து வரவேண்டும் என்பதுதான் இந்த உவமையானது நமக்குக் கற்றுத் தரும் பாடமாக இருக்கிறது.

யோவேல் புத்தகம் அதிகாரம் 2:12 ல் வாசிக்கின்றோம், "இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, என்னிடம் திரும்பி வாருங்கள் என்கிறார் ஆண்டவர்" என்று.

எனவே இந்த தவக்காலத்தில் நாம் நமது தவற்றை உணர்ந்து, ஊதாரி மகனைப் போன்று தந்தையிடம்/ தந்தைக் கடவுளிடம் திரும்பி வருவோம். அதன் வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மீக்கா 7: 14-15, 18-20

உமக்கு நிகரான இறைவன் யார்?


நிகழ்வு

மண்ணகத்தில் தூய வாழ்க்கை வாழ்ந்து, விண்ணகத்திற்குச் சென்ற ஜெஸ்வந்த் என்ற பெரியவர் ஒருநாள் மாலை வேளையில், விண்ணகத்தின் வீதிகளில் உலா வந்தார். அப்படி அவர் உலா வந்த நேரம், கடவுள் தன் அரியணையில் வீற்றிருக்காமல், வேறு எங்கோ சென்றிருந்தார். உடனே ஜெஸ்வந்திற்குக் கடவுள் அமர்ந்திருக்கும் அரியணை எப்படி இருக்கின்றது, அவர் வழக்கமாக இருக்கும் அறை எப்படி இருக்கின்றது என்று பார்க்க பேராவல் ஏற்பட்டது. எனவே அவர் கடவுள் அமர்ந்திருக்கும் அரியணை அருகே சென்று பார்த்தார். அது பார்ப்பது அவ்வளவு அழகாக இருந்தது. பின்னர் அவர் கடவுள் இருக்கும் அறையை எட்டிப் பார்த்தார். அங்கு ஒரு பெரிய கண்ணாடி இருந்தது. அந்தக் கண்ணாடி எதற்கு இங்கிருக்கின்றது என்று அவர் அதன்முன்பு போய் நின்று பார்த்தார். அவருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. ஏனென்றால், அந்தக் கண்ணாடியில், மண்ணகத்தில் யார் யார் என்னென்ன செய்கின்றார்கள் என்று அவ்வளவு தத்ரூபமாகத் தெரிந்தது.

உடனே அவர் தன்னுடைய வீட்டில் உள்ளா எல்லாரும் என்ன செய்கின்றார் என்று பார்த்தார். அவருடைய வீட்டில் இருந்த எல்லாரும் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தூங்கிகொண்டிருந்னர். அவ்வேளையில் பக்கத்து வீட்டில் இருந்த பெரியவர் ஒருவர் இவருடைய வீட்டிற்குள் புகுந்து விலையுயர்ந்த நாற்காலியை அவருடைய வீட்டிற்குத் தூக்கிக்கொண்டு போனார். இதைப் பார்த்த ஜெஸ்வந்திற்கு கடுமையாகக் கோபம் வந்தது. அதனால் பக்கத்தில் கிடந்த கடவுளின் பாதபீடத்தை (Footstool) எடுத்து, அந்தப் பெரியவரை நோக்கி எறிந்தார். ஆனால், அவர் எறிந்தது பெரியவர்மேல் படாமல், அவருக்குப் பக்கத்தில் சென்று விழுந்தது.

இதற்கிடையில் வெளியே சென்ற கடவுள் உள்ளே வருகின்ற சத்தம் கேட்டு, ஜெஸ்வந்த் அங்கிருந்து வேக ஓடி, தான் இருந்த மாளிகைக்குள் சென்று மறைந்தார். தன்னுடைய அறைக்குள் வந்த கடவுள், தான் கால் வைக்கும் பாதபீடம் இல்லாதது கண்டு அதிர்ந்து போனார். உடனே அவர் வானதூதர்களைக் கூப்பிட்டு, யார் அந்த பாதகச் செயலைச் செய்தார் என்று பார்த்து வரச் சொன்னார். கடவுள் இட்ட கட்டளைக்கிணங்க வானதூதர்கள் விண்ணகத்தில் இருந்த ஒவ்வொருவரிடமும் சென்று, "கடவுளின் பாதபீடத்தை எடுத்தீர்களா?" என்று கேட்டார்கள். வானதூதர்கள் கேட்ட கேள்விக்கு எல்லாரும் "இல்லை, இல்லை" என்று பதிலளித்தார்கள்.

அவர்கள் ஜெஸ்வந்த்தின் மாளிகைக்குச் சென்றபோது, அவர் வானதூதர்களின் முகங்களைப் பார்க்கத் தைரியமில்லாமல், ஒரு மூலையில் போய் ஒடுங்கியிருந்தார். இதைப் பார்த்துவிட்டு, 'ஜெஸ்வந்த்தான் கடவுளின் பாதபீடத்தை எடுத்திருக்ககவேண்டும்' என்று அவரை கடவுளுக்கு முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். கடவுள் அவரிடம், "நீங்கள்தான் என்னுடைய பாதபீடத்தை எடுத்தீர்களா?" என்று கேட்டார். அதற்கு ஜெஸ்வந்த், நடந்த அனைத்தையும் எடுத்துச் சொன்னார். அவர் சொன்ன எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டுக் கடவுள் சொன்னார், "உங்களைப் போன்று நானும் தவறுசெய்கின்ற ஒவ்வொருவரின்மீதும் ஏதாவது ஒரு பொருளை எடுத்து வீசத் தொடங்கினால், விண்ணகத்தில் ஒருபொருளும் மிஞ்சாது. ஏனெனில், நான் தவறு செய்கின்றவர்களைத் தண்டிக்கின்ற கடவுள் அல்ல, அவர்கள்மீது இரக்கம்கொண்டு மன்னிக்கின்ற கடவுள்."

உண்மைதான். நம்முடைய கடவுள் தவறுசெய்கின்றவர்களைத் தண்டிக்கின்ற கடவுள் அல்ல. மாறாக, அவர்கள்மீது இரக்கம்கொண்டு மன்னிக்கின்ற கடவுள். இன்றைய முதல் வாசகம் அத்தகைய செய்தியைத்தான் நமக்கு எடுத்துச் சொல்கின்றது.

குற்றகளைப் பொறுத்து மன்னிக்கின்ற கடவுள்

இறைவாக்கினர் மீக்கா நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் மீக்கா, "உமக்கு நிகரான இறைவன் யார்?" என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, அதற்கான பதிலை அவரே தருகின்றார். மீக்கா என்றாலும் கடவுளுக்கு நீர் யார் என்பதுதான். இத்தகையதொரு கேள்வியைக் கேட்டுவிட்டு இறைவாக்கினர் மீக்கா, கடவுள் மக்களுடைய குற்றங்களைப் பொறுத்து மன்னிக்கின்ற கடவுள் என்றும் சினத்தில் நிலைத்து நிற்காமல், அன்புகூருகின்ற கடவுள் என்கின்றார்.

இறைவாக்கினர் மீக்கா இறைவனைக் குறித்துச் சொல்கின்ற இவ்வார்த்தைகள் விடுதலைப் பயண நூலில் இருக்கின்ற, "இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினங்கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்" என்ற வார்த்தைகளோடு (விப 34: 6-7) ஒத்துப் போக்கின்றது. இவ்வார்த்தைகளை ஒவ்வொருவரும் தங்களுடைய உள்ளத்தில் இருத்தி, கடவுளுக்கு உகந்த மக்களாய் வாழ்வது சிறப்பு.

சிந்தனை

'நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன் பணியாளருக்கு காட்டியிருக்க வேண்டும் அல்லவா' (மத் 18: 33) என்று கூறுவார் இயேசு. ஆகவே, தந்தைக் கடவுளைப் போன்று இரக்கமுள்ளவர்களாக, அன்புள்ளவர்களாக, மன்னிப்பவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
லூக்கா 15: 1-3, 11-32

என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்

நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பாக கேரளா மாநிலம், கோட்டயத்தைச் சார்ந்த ஜாய் என்ற இளம்பொறியாளர் ஒருவருக்கு மும்பையிலுள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. உடனே அவர் தன்னுடைய அன்பான மனைவி மற்றும் அழகான மகளை விட்டுவிட்டு மும்பைக்குச் சென்றார். அங்கு அவர் குடிப்பழத்திற்கும் பல்வேறு தீய பழக்கவழக்கத்திற்கும் அடிமையாகி வாழ்வைத் தொலைக்கத் தொடங்கினார். இதனால் குடும்பத்தையும் மறந்தார்.

இதற்கிடையில் ஒருநாள் பள்ளிக்கூடம் விட்டு வீடுதிரும்பிய ஜாயின் மகள்மீது வாகனம் ஒன்று மோத, அவள் பயங்கரக் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். செய்தி ஜாய்க்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே ஜாய் மும்பையிலிருந்து மகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு ஓடிவந்தார். அவர் வருவதற்குள் அவருடைய மகள் இறந்துபோனாள். தன்னுடைய மனைவியையும் மகளையும் நல்லமுறையில் பராமரிக்காததால்தான் மகளுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளது என்று நினைத்து கதறி அழுத ஜோய், அப்போதிலிருந்தே தன்னுடைய பாவ வாழ்க்கையைத் துறந்துவிட்டு, புதிய மனிதராய் வாழத் தொடங்கினார்.

எப்படி ஜோய் தனது குற்றத்தை உணர்ந்து, மனம்வருந்தி, புது வாழ்க்கை வாழத் தொடங்கினாரோ, அதுபோன்று ஊதாரி மைந்தன் உவமையில் வரும் இளைய மகன் தன்னுடைய குற்றத்தை உணர்ந்து, திருந்தி நடக்கத் தொடங்கினான். அதனால் அவன் தந்தையின் அன்பு மகனானான். ஜாயைப் போன்று, ஊதாரி மைந்தனைப் போன்று கடவுளை விட்டு வெகுதொலைவில் போயிருக்கும் ஒவ்வொருவரும், கடவுளின் பேரன்பை உணர்ந்து, அவரிடமிருந்து திரும்பிவரவேண்டும் என்றுதான் இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது. எனவே, நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

பேரன்புகொண்ட இறைவன்

நற்செய்தியில் இயேசு செய்துவந்த பணிகளைப் பார்த்துவிட்டு, "இவர் பாவிகளை வரவேற்று, அவர்களோடு உணவருந்துகிறாரே" என்று பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவருக்கு எதிராக முணுமுணுக்கத் தொடங்குகிறார்கள். அப்பொழுது இயேசு அவர்களுக்கு ஊதாரி மைந்தன் உவமையைச் சொல்கின்றார்.

இயேசு சொல்லும் இவ்வுவமை இறைவனின் பேரன்பை மிக அருமையாக எடுத்துச் சொல்கின்றது என்றால், அது மிகையாகாது. ஏனென்றால், ஊதாரி மைந்தன் உவமையில் வரும் தந்தை, இளைய மகன் சொத்தைப் பிரித்துத் தருமாறு கேட்கும்போது, அவனுடைய சுதந்திரத்திற்கு மதிப்பளித்து, சொத்தைப் பகிர்ந்து தருகின்றார். யூத சமூகத்தில், சொத்தில் (100) மூன்றில் இரண்டு பங்கு (66.67) மூத்த மகனுக்கும் ஒரு பங்கு (33.33) இளைய மகனுக்குப் போய்ச் சேரவேண்டும். ஆனால், உவமையில் வருகின்ற தந்தை சொத்தைப் பகிர்ந்தளிக்கின்றார் (50) என்று வாசிக்கின்றோம். அப்படியானால், தந்தை இளைய மகனிடம் பெருந்தன்மையோடு அல்லது பேரன்போடு நடந்து கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். இதுமட்டுமல்லாமல், தந்தையை விட்டுப் பிரிந்துசென்ற இளைய மகன், தன்னிடம் இருந்த பணமெல்லாம் தீர்ந்துபோனபின்பு, பிழைப்பிற்காகப் பன்றிகளை மேய்க்கின்றான். யூதர்கள் தூய்மை கருதி பன்றிகளை வெறுத்து ஒதுக்கினார்கள். அப்படிப்பட்ட விலங்குகளை இளைய மகன் மேய்த்தான் எனில், அவன் வெறுத்து ஒதுக்கப்படவேண்டிவன், அந்நிலையிலும் தந்தை அவனை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார்.

மேலும் இளைய மகன் தன்னுடைய தவற்றை உணர்ந்து தந்தையிடம் திரும்பி வந்தபோது, அவன் சொன்ன நினைத்தையெல்லாம் சொல்வதற்கு முன்பாகவே, அவனுடைய குற்றங்களை எல்லாம் மன்னித்து, அவனைத் தனது அன்பு மகனாக ஏற்றுக்கொள்கின்றார். இப்படி ஒவ்வொருநிலையிலும் தந்தை இளையமகனிடம் பேரன்போடு நடந்துகொள்வதால், அவர் பேரன்புகொண்ட கடவுள் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

கடவுள் நம்மீது பேரன்பு கொள்ளக் காரணமென்ன?

கடவுள் மனிதர்கள் ஒவ்வொருவர்மீதும் பேரன்புகொள்ளக் காரணம், அவர்கள் அவருக்கு உரியவர்கள் (உரோ 1:31) என்பதாலும் படைப்பின் சிகரம் (தொநூ 1:31) என்பதாலும்தான். யாராவது தனக்குச் சொந்தமானதை இழக்க விரும்புவார்களா? நிச்சயமாக விரும்ப மாட்டார்கள். அதுபோன்றுதான் கடவுளும் தனக்குச் சொந்தமான மனிதர்களை இழக்க விரும்பாமல் அவர்கள்மீது பேரன்பு கொள்கின்றார். அவர்கள் அவரை விட்டு விலகிச் சென்றாலும், எப்போது வருவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றார். இப்படியெல்லாம் அவர் மனிதர்கள் ஒவ்வொருவரின்மீதும் பேரன்பைக் காட்டுகின்றார்.

சிந்தனை

'உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் பேரன்புமிக்கவன்' (யோவே 2: 12,13) என்று இறைவாக்கினர் யோவேல் நூலில் ஆண்டவராகிய கடவுள் கூறுவார். ஆகையால், கடவுளின் பேரன்பை உணர்ந்து, பாவத்திற்கு அடிமையாயிருக்கும் நாம் அவரிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!