Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   22  மார்ச் 2019  
                        தவக்காலம் 2ம் வாரம் திங்கள்- 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
இதோ வருகிறான் கனவின் மன்னன்! வாருங்கள், அவனைக் கொன்றுபோடுவோம்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 37: 3-4, 12-13a, 17b-28

இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப் புதல்வரையும்விட அதிகமாக நேசித்து வந்தார். அவருக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார்.

அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை அவரை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு அவரை வெறுத்தனர். அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை. அப்படி இருக்கையில் அவர் சகோதரர் செக்கேமில் தம் தந்தையின் மந்தைகளை மேய்க்கச் சென்றனர்.

இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி; "உன் சகோதரர்கள் செக்கேமில் ஆடு மேய்க்கிறார்கள் அல்லவா? அவர்களிடம் உன்னை அனுப்பப்போகிறேன்'' என்றார்.

யோசேப்பு தம் சகோதரரைத் தேடிச் சென்று தோத்தானில் அவர்களைக் கண்டுபிடித்தார். தொலையில் அவர் வருவதைக் கண்ட அவர்கள் தங்களுக்கு அருகில் அவர் வருமுன் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.

அவர் சகோதரர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, "இதோ வருகிறான் கனவின் மன்னன்! நாம் அவனைக் கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு, ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்றுவிட்டதென்று சொல்வோம்.

அப்பொழுது அவனுடைய கனவுகள் என்ன ஆகும் என்று பார்ப்போம்'' என்றனர். ரூபன் இவற்றைக் கேட்டு, அவரை அவர்கள் கையிலிருந்து தப்புவிக்கும் எண்ணத்தில் அவர்களை நோக்கி, "நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்'' என்றார். ரூபன் அவர்களை நோக்கி, "அவன் இரத்தத்தைச் சிந்தாதீர்கள். அவனைப் பாலை நிலத்திலுள்ள இந்த ஆழ்குழிக்குள் தள்ளிவிடுங்கள். அவன் மீது கை வைக்காதீர்கள்'' என்று சொன்னார்.

ஏனெனில் அவர் அவர்கள் கையிலிருந்து அவரைத் தப்புவித்துத் தம் தந்தையிடம் சேர்ப்பிக்கும் நோக்கம் கொண்டிருந்தார். யோசேப்பு தம் சகோதரரிடம் வந்து சேர்ந்தவுடன் அவர் அணிந்திருந்த அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியை உரிந்துவிட்டு, அவரை ஆழ்குழியில் தூக்கிப் போட்டனர். அது தண்ணீரில்லாத வெறும் குழி. பின்பு, அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர்.

அப்பொழுது அவர்கள் கண்களை உயர்த்தி, கிலயாதிலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மயேலரின் வணிகக் குழுவைப் பார்த்தனர். நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும், வெள்ளைப் போளத்தையும் அவர்கள் ஒட்டகங்களின்மேல் ஏற்றி எகிப்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது யூதா தம் சகோதரர்களை நோக்கி, "நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு என்ன பயன்? வாருங்கள்; இஸ்மயேலருக்கு அவனை விற்றுவிடுவோம். அவன் மேல் நாம் கை வைக்க வேண்டாம். ஏனெனில் அவன் நம் சகோதரனும் நம் சொந்தச் சதையுமாய் இருக்கிறான்'' என்று சொல்ல, அவர்கள் சம்மதித்தனர்.

ஆகையால் மிதியான் நாட்டு வணிகர் அவர்களைக் கடந்து செல்கையில், குழியிலிருந்து யோசேப்பை வெளியே தூக்கி அந்த இஸ்மயேலரிடம் இருபது வெள்ளிக் காசுக்கு விற்றனர். அவர்களும் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு சென்றனர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:105: 16-17. 18-19. 20-21 (பல்லவி: 5a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!

16 நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்; உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார். 17 அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பி வைத்தார்; யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார். பல்லவி

18 அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர். 19 காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று; ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவர் என மெய்ப்பித்தது. பல்லவி

20 மன்னர் ஆள் அனுப்பி அவரை விடுதலை செய்தார்; மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்; 21 அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்; தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 3: 16

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு கொள்ளும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 33-43, 45-46

அக்காலத்தில் இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: "மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக் குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்கiளைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.

தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.

தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.

அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள், `இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள். எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?'' என இயேசு கேட்டார்.

அவர்கள் அவரிடம், "அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்'' என்றார்கள்.

இயேசு அவர்களிடம், " `கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்." தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்ட போது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்துகொண்டனர். அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

பொறாமையும் பேராசையும் கொலை செய்யும் வெறிக்கு, மனித இனத்தை அழைத்து செல்கின்றது, என்பதனை இன்றைய வாசகங்கள் விளளக்குகின்றது.

மற்றவரது வளர்ச்சியை முன்னேற்றத்தை வரவேற்கும் மனது, பொறாமையில் இருந்து விடுதலை பெறுகின்றது.

இருப்பதில் நிறைவும், அமைதியும் காணும் மனம் பேராசையில்p இருந்து விடுதலை பெறுகின்றது.

இத்தகைய மனத்தினை பெற்று, இறையாசீர் பெறுவோம்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  தொடக்கநூல் 37: 3-4, 12-13, 17-28

வெறுப்புக்குப் பதிலாக மன்னிப்பையும் அன்பையும் விதைப்போம்

நிகழ்வு

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், அங்கிருந்த இந்திய வம்சாவளித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களால் சரியான ஊதியம் கொடுக்கப்படாமல் வஞ்சிக்கப்படுவதைக் குறித்துக் கேள்விப்பட்டார். உடனே அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க, விசாரணை நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தது.

இப்படிப்பட்ட சமயத்தில் ஒருநாள் காந்தியடிகள் தான் தங்கியிருந்த இடத்திற்குத் தனியாக வந்துகொண்டிருந்தார். வழியில் தேயிலைத் தோட்ட உரிமையார்களும் அவர்களுடைய பிள்ளைகளும் அவர்களுடைய நண்பர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் காந்தியடிகளைக் கண்டதும் கற்களை எடுத்து, அவர்மீது வீசியடிக்கத் தொடங்கினார்கள். இன்னும் ஒருசிலர் அவரைப் பிடித்து கடுமையாகத் தாக்கத் தொடங்கினார்கள். இதனால் காந்தியடிகள் வலிதாங்க முடியாமல் அலறத் தொடங்கினார்.

இந்நேரத்தில் அவ்வழியாக வந்த அலெக்ஸாண்டர் என்ற காவல்துறை ஆய்வாளரும் அவருடைய துணைவியாரும் முரடர்கள் சிலர் யாரோ ஒருவரைப் போட்டு அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அருகில் வந்தனர். அதற்குள் காந்தியடிகளை அடித்துக்கொண்டிருந்த முரடர்கள் கூட்டம் பக்கத்தில் இருந்த பக்கத்தில் இருந்த புதருக்குள் ஓடி மறைந்துகொண்டது. காந்தியடிகள் மட்டுமே அங்கு உடலெல்லாம் பலத்த காயங்களோடு கிடந்தார். அவரைப் பார்த்ததும் அதிர்ந்துபோன காவல்துறை ஆய்வாளரும் அவருடைய துணைவியாரும் அவரை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு சென்று, சிகிச்சை அளித்தனர்.

ஓரளவுக்குக் காந்தியடிகளின் உடல் நலம்தேறியதும், காவல்துறை ஆய்வாளர் அவரிடம் கேட்டார், "ஐயா! நீங்கள் மட்டும் உங்களை அடித்துத் துன்புறுத்திய அந்தக் கயவர்களை எனக்கு அடையாளம் காட்டினால், நான் அவர்களை சட்டத்திற்கு முன்பாக நிறுத்தி, சரியான தண்டனை வாங்கிக் கொடுப்பேன்." அதற்குக் காந்தியடிகள் அவரிடம் சொன்னார், "அவர்களுக்கு அப்படியொன்றும் தண்டனை வாங்கித் தரவேண்டாம்... எப்படி இயேசு கிறிஸ்து தன்னைச் சிலுவையில் அறைந்து துன்புறுத்தியவர்களை மன்னித்தாரோ, அதுபோன்று நான் என்னை அடித்துத் துன்புறுத்தியவர்களை மனதார மன்னிக்கிறேன்." காந்தியடிகள் இவ்வாறு சொன்னதைக் கேட்ட அந்த காவல்துறை ஆய்வாளர், "இப்படியும் ஒரு மனிதரா என்று காந்தியடிகளை வியப்புடன் பார்த்தார்.

தன்மீது வெறுப்பை உமிழ்ந்து, அடித்துத் துன்புறுத்திய கயவர்களைக் காந்தியடிகள் மன்னித்தது, உண்மையிலேயே பாராட்டக்கூடிய ஒரு விடயம். இதுபோன்று தன்மீது வெறுப்பை உமிழ்ந்து, காசுக்கு விலைக்கு விற்றவர்களைப் (பின்னாளில்) மன்னித்த ஒருவரைக் குறித்து இன்றைய முதல் வாசகம் எடுத்துச் சொல்கிறது. அவர் யார்? அவருக்கு ஏன் அப்படியோர் அநீதி இழைக்கப்பட்டது என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

யோசேப்பின் மீது வெறுப்பை உமிழ்ந்த அவருடைய சகோதரர்கள்

இன்றைய முதல் வாசகம், யாக்கோபுவின் இஸ்ரயேலின் புதல்வர்களில் ஒருவரான யோசேப்பை அவருடைய சகோதரர்கள் இஸ்மாயலருக்கு இருபது வெள்ளிக்காசுக்கு விலைக்கு விற்றதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. யோசேப்பின் சகோதரர்கள் அவருக்கு எதிராக ஏன் இப்படிச் செயல்பட்டார்கள் என்று சிந்தித்துப் பார்க்கின்றபோது, இரண்டு காரணங்கள் நம் முன்னால் வருகின்றன. ஒன்று, யோசேப்பை யாக்கோப்பு மற்ற எல்லாரையும் விட மிகுதியாய் அன்பு அன்பு செய்தது. இரண்டு, அந்த அன்பின் வெளிப்பாடாக அவருக்கு விலையுயர்ந்த ஓர் அங்கியைப் பரிசாக அளித்தது. இந்த இரண்டு காரணங்களும்தான் யோசேப்பின்மீது அவருடைய சகோதரர்களுக்கு வெறுப்பை வரவைத்தன.

யாக்கோபு ஏன் யோசேப்பை மிகுதியாக அன்பு செய்தார் என்பதையும் தெரிந்துகொள்வது நல்லது. யாக்கோபின் முதிர்ந்த வயதில்தான் யோசேப்பு பிறந்தார். மேலும் யோசேப்பு, யாக்கோபு மிகுதியாக அன்பு செய்த ராக்கேலின் மகன். ஒருவகையில் யாக்கோபுக்கு யோசேப்புதான் தலைமகன். அந்த வகையில் யாக்கோபு யோசேப்பை மற்ற எல்லாரையும் விட மிகுதியாக அன்பு செய்திருக்கவேண்டும். இதைப் புரிந்துகொள்ளாமல்தான் மற்றவர்கள் யோசேப்பின் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள்.

யோசேப்பை மற்றவர்கள் வெறுக்கிறார்கள் என்று தெரிந்தும் யாக்கோபு ஏன் யோசேப்பை அவர்களிடம் அனுப்பி வைக்கவேண்டும்?

யாக்கோபு யோசேப்பை மிகுதியாக அன்பு செய்தது, அவருடைய சகோதர்களுக்குப் பிடிக்கவில்லை, அவர்கள் அவரை வெறுக்கிறார்கள் என்பது யாக்கோபுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தபோதும் அவர் எதற்கு யோசேப்பைத் தனியாக அனுப்பி வைக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம்.

கடவுளின் திட்டமும் ஞானமும் வேறொன்றாக இருக்கின்றது. அது மனிதர்களால் சிந்தித்துப் பார்க்கமுடியாதது (நீமொ 21:30). பின்னாளில் ஏற்படக்கூடிய கொடிய பஞ்சத்தின் பொருட்டு, கடவுள் யாக்கோபின் வழியாக யோசேப்பை அவருடைய சகோதரர்களிடம் அனுப்பி வைக்க, அவர்கள் அவரை இஸ்மாயலரிடம் விற்கிறார்கள். அதன்பிறகு நடந்தது எல்லாம் வரலாறு. எனவே, யாக்கோபு, யோசேப்பை ஏன் அவரை வெறுத்தவர்களிடம் அனுப்பி வைத்தார் என்று கேள்வி எழுப்புவதையும்விட, இறைவனின் திட்டம் இப்படி இருக்கின்றது. அதனால்தான் யோசேப்பை அவருடைய சகோதரர்கள் இஸ்மாயலரிடம் அனுப்பி வைத்தார்கள் என்பதைப் புரிந்துகொள்வது நல்லது.

சிந்தனை

"தன் சகோதர சகோதரிகளை வெறுப்பவர் அனைவரும் கொலையாளிகள். எந்தக் கொலையாளியிடமும் நிலைவாழ்வு இராது என்பார் தூய யோவான் (1 யோவா 3:15). ஆகவே, யோசேப்பின் சகோதரர்களைப் போன்று நாம், நம்மோடு வாழ்பவர்களை வெறுக்காமல், யோசேப்பைப் போன்று வெறுப்புக்குப் பதில் அன்பையும் மன்னிப்பையும் காட்டுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 21: 33-43, 45-46

மிகுந்த கனிதருவோம்

நிகழ்வு

ஆற்றங்கரையோரம் தியானத்தில் இருந்த ஒரு துறவியிடம் வந்த ஓர் இளைஞன், ஒரு செடியைக் காட்டி சவால்விட்டான். "இது பூக்குமா? பூக்காதா?". சிறிது நேரம் கண்மூடிய அந்தத் துறவி உறுதியாகச் சொன்னார். "இது பூக்கும்". மறுவினாடி அதனைப் பிடுங்கி வீசினான் அந்த இளைஞன்.

அன்று மாலை வீசிய சுழற்காற்றும் மழையும் மக்களை நிலைகுனியச் செய்தது. ஆனால், பிடுங்கி வீசப்பட்ட செடி மட்டும் மண்ணில் வேரூன்றி எழுந்தது. செடியைப் பிடுங்கி எறிந்த இளைஞன் துறவியிடம் வந்து காரணத்தைக் கேட்டான். துறவி சொன்னார், "நான் ஜோதிடம் சொல்லவில்லை... அந்தத் தாவரத்தின் இயல்பில் மலரவேண்டும் என்ற தவிப்பு இருப்பதைத் தெரிந்துகொண்டேன். அதனால்தான் அவ்வளவு உறுதியாய்ச் சொன்னேன். வளரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் நிச்சயம் வளர்வார்கள்".

இந்த மண்ணுலகில் பிறந்த ஒவ்வொருவரும் வளரவேண்டியவர்கள், வளர்வதோடு மட்டுமல்லாமல், மிகுந்த கனிகொடுக்க வேண்டியவர்கள். இப்படிப்பட்ட உயர்ந்த செய்தியை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

இஸ்ரயேல் என்னும் திராட்சைத் தோட்டம்

நற்செய்தியில் இயேசு கொடிய திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இயேசு சொல்லும் இவ்வுவமை இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்தில் (5: 1-7) இடம்பெறும் இறைவார்த்தையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கின்றது.

வழக்கமாகத் திராட்சைத் தோட்டம் அமைக்கும் ஒருவர், நிலத்தை நன்றாகப் பண்படுத்தி, அதிலுள்ள கற்களை எல்லாம் அகற்றி, நல்ல இனத் திராட்சைச் செடிகளை நட்டுவைப்பார். மேலும் அதற்கு எந்தவிதத்திலும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக சுற்றிலும் வேலி போட்டு, பிழிவுக்குழி வெட்டி, காவல்மாடம் அமைப்பார். இப்படியெல்லாம் செய்துதான் ஒருவர் திராட்சைத் தோட்டத்தை அமைப்பார்.

நற்செய்தியில் இயேசு, இஸ்ரயேல் மக்களைத் திராட்சைத் தோட்டத்திற்கு ஒப்பிடுகின்றார். எப்படி ஒரு திராட்சைத் தோட்டத்தைப் பராமரிக்க திராட்சைத் தோட்ட உரிமையாளர் மேலே கண்டவாறு என்னவெல்லாம் செய்கின்றாரோ, அது போன்று ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேல் மக்களை அடிமைத்தன வீடாக எகிப்திலிருந்து விடுவித்து, பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்தை அவர்களுக்கு வழங்கினார். அது மட்டுமல்லமால், அவர்களை வழிநடத்துவதற்கு இறைவாக்கினர்களையும் நீதித்தலைவர்களையும் அனுப்பிவைத்தார். இப்படியெல்லாம் இஸ்ரேயல் மக்களுக்கு நன்மைகளைச் செய்த இறைவன், அவர்களிடமிருந்து பலனை எதிர்பார்ப்பதுதானே முறை. ஆனால், அவர்கள் பலனைக் கொடுக்காமல், பலனைக் கேட்கச் சென்ற எல்லாரையும் பிடித்து அடித்துத் துன்புறுத்துகின்றார்கள்.

இறைமகன் இயேசுவைப் புறக்கணித்த இஸ்ரேயல் மக்கள்

இறைவாக்கினர்களையும் இறையடியார்களையும் பிடித்துத் துன்புறுத்திய இஸ்ரேயல் மக்களிடம், ஆண்டவராக கடவுள், தன் மகனை அனுப்பினாலாவது உரிய பலனைத் தருவார்கள் என்று இயேசுவை அனுப்பி வைக்கிறார். அவர்களோ அவரைப் பிடித்து, வெளியே தள்ளிக் கொன்றுபோடுகிறார்கள் (எபி 13: 12-13). இதனால் சினம்கொள்ளும் கடவுள் யூதர்களிடம் இருந்த இறையாட்சியை புறவினத்து மக்களுக்குக் கொடுக்கின்றார். கடவுளிடமிருந்து ஏராளமாக ஆசி பெற்ற இஸ்ரேயல் அதற்கான பலனைத் தந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் பலன்தராது போனதால் அவர்களிடமிருந்த வாய்ப்பு பறிக்கப்பட்டு, வேறு மக்களுக்குப் கொடுக்கப்படுகின்றது.

கனிகொடுத்த வாழ்வதே கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை

யோவான் நற்செய்தியில் இயேசு கூறுவார், "நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது." (யோவா 15:8). யூதர்களுக்குக் கனி கொடுப்பதற்கான எல்லா வாய்ப்பு வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன. அப்படியிருந்தும் அவர்கள் கனிகொடுக்காமல் போனதால், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு புறவினத்து மக்களுக்கு கொடுக்கப்படுகின்றது. எனவே, கனிகொடுக்காமல் இருக்கின்றபோது, யூதர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் என்பதை மறந்துவிடக்கூடாது.

இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் யூதர்கள் யாரை வேண்டாமென்று ஒதுக்கினார்களோ அவரே இயேசுவே - மூலைக்கல்லாக மாறுகின்றார் (1பேது 2: 7-9) அதே நேரத்தில் யாராரெல்லாம் அவரிடம் நம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு அவர் விலைமதிப்புள்ளவராக மாறுகின்றார். ஆகவே, இயேசுவை யாராரெல்லாம் ஏற்றுக்கொண்டு, அவர்மீது நம்பிக்கை வைத்து, அதன்படி வாழ்கின்றார்களோ அவர்கள் மிகுந்த கணிதருவார்கள் என்பது உறுதி.

சிந்தனை

நமக்கு முன்பாக இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன. ஒன்று இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருடைய விழுமியங்களின் படி வாழ்ந்து, மிகுந்த கணிதருவது. இன்னொன்று இயேசுவைப் புறக்கணித்து வாழ்வைத் தொலைப்பது. இவ்விரண்டில் எதைத் தேர்ந்தெடுக்கின்றோமோ அதற்கேற்ப நம் வாழ்வு அமைகின்றது.

நாம் இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு, அவருடைய விழுமியங்களின் படி வாழ்ந்து, மிகுந்த கணிதருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வோம்

புத்தருடைய நெடுநாளையச் சீடன் அவன். ஒருநாள் புத்தர் அவனிடத்தில், "உன்னுடைய வயது என்ன?" என்று கேட்டார். அதற்கு அவர், "என்னுடைய வயது ஐந்து" என்றார்.

கேள்விகேட்ட புத்தர் ஒரு நிமிடம் அதிர்ந்துபோய் நின்றார். பின்னர் சுதாரித்துக்கொண்டு கேட்டார், "உன்னைப் பார்த்தால் அறுபதிலிருந்து எழுபது வயது உள்ளவர் போன்றுதான் இருக்கிறது. அப்படியிருக்கும்போது வெறும் ஐந்து வயதுதான் என்று சொல்கிறீரே, இது என்ன அர்த்தம்?" என்று கேட்டார்.

அதற்கு அவர், "என்னுடைய உடல் வயது எழுபது இருக்கலாம். ஆனால் என்னுடைய உண்மையான வயது ஐந்துதான். ஏனென்றால் இந்த ஐந்து ஆண்டுகள்தான் நான் பல்வேறு தவமுயற்சிகள், ஒருத்தல்முயற்சிகள் வழியாக என்னுடைய வாழ்க்கையின் அர்த்தம் என்ன?, எதற்காக இந்த பூமியில் நான் பிறந்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்கிறேன்" என்றார்.

எவன் ஒருவன் தன்னுடைய வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்துகொண்டு வாழ்கிறானோ, அவனே உண்மையான மனிதன் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கொடிய குத்தகைக்காரர் உவமையைப் பற்றிப் பேசுகிறார். நிலக்கிழார் ஒருவர் நன்றாகப் பராமரிக்கப்பட்ட தோட்டத்தை, குத்தகைக்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நெடும்பயணம் செல்கிறார். சில நாட்களுக்குப் பிறகு குத்தகைப்பணத்தை அவர்களிடம் இருந்து வாங்குவதற்காக தன்னுடைய பணியாளர்களை நிலக்கிழார் அனுப்புகிறார். ஆனால் அந்த குத்தகைக்காரர்களோ நிலக்கிழார் அனுப்பிய பணியாளர்களை அடித்துத் துன்புறுத்துகிறார்கள்; ஒருசிலரை கொலைசெய்கிறார்கள். இதனால் கடுஞ்சினம்கொண்ட நிலக்கிழார் அந்த கொடிய குத்தைகைக்காரர்களிடமிருந்து திராட்சைத் தோட்டத்தை எடுத்து வேறொருவரிடம் கொடுக்கிறார்.

இந்த உவமையை நாம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரேயல் மக்களுக்கு வளமிக்க நாட்டைக் கொடுத்தார்; அவர்களைச் சிறப்பாகப் பராமரித்து வந்தார். ஆனால் அவர்களோ உண்மையான கடவுளை மறந்து, வேற்று தெய்வத்திருக்குப் பின்னால் சென்றார்கள்; தீச்செயலிலே மூழ்கிப்போனார்கள். இதனால் சினம்கொண்ட கடவுள் அவர்களைத் தண்டிக்கிறார்.

இஸ்ரயேல் மக்களைப் போன்றுதான் நமக்கும் கடவுள் ஏராளமான வாய்ப்பு, வசதிகளை, திறமைகளைத் தந்திருக்கிறார். அதை வைத்துக்கொண்டு நாம் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். யோவான் நற்செய்தி 15:8 ல் வாசிக்கின்றோம், "நீங்கள் மிகுந்த கனிதந்து என்னுடைய சீடராக இருப்பதே என்னுடைய தந்தைக்கு மாட்சியளிக்கிறது" என்று. ஆகவே நாம் ஒவ்வொருவரும் கனிதரும் மக்களாகவும், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்காகவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

"வாழ்க்கையை ஒரு சிறு மெழுகுவர்த்தியாக நான் கருதவில்லை. அதை ஓர் அற்புத ஜோதியாக மதிக்கிறேன். அதை எதிர்காலச் சந்ததியாருக்குக் கொடுக்கும் முன் எவ்வளவு பிரகாசமாக எரிய வைக்க முடியுமோ அவ்வளவு பிரகாசமாக எரிய வைக்க விரும்புகிறேன்" என்பார் பெர்னாட்ஷா என்ற அறிஞர். அதேபோன்று "அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டே நம் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதுதான் வாழ்க்கை முறை" என்பார் மேக்கனல் என்ற அறிஞர்.

ஆகவே கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாழ்வென்னும் கொடையை அர்த்தமுள்ளதாக்குவோம், பிறர் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!