Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   21  மார்ச் 2019  
            தவக்காலம் 2ம் வாரம் வியாழக்கிழமை- 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-10


ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச் செடிக்கு ஒப்பாவர். பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்; பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பர். ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது.

வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்; வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும். இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது; அதனை நலமாக்க முடியாது.

அதனை யார்தான் புரிந்துகொள்வர்? ஆண்டவராகிய நானே இதயச் சிந்தனைகளை ஆய்பவர்; உள்ளுணர்வுகளைச் சோதித்து அறிபவர். ஒவ்வொருவரின் வழிகளுக்கும் செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு நடத்துபவர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 1: 1-2. 3. 4,6 (பல்லவி:40: 4a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனி தந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 8: 15

சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர்.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இப்பொழுது இலாசர் ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31

அக்காலத்தில் இயேசு பரிசேயரை நோக்கிக் கூறியது: `'செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.

இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.

அவர், 'தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்' என்று உரக்கக் கூறினார்.

அதற்கு ஆபிரகாம், 'மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது' என்றார்.

அவர், 'அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே' என்றார்.

அதற்கு ஆபிரகாம், 'மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார்.

அவர், 'அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்' என்றார்.

ஆபிரகாம், 'அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள்' என்றார்.'

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  அடுத்தவர்மீது அக்கறை

கடந்த நூற்றாண்டில் மும்பையில் நடைபெற்ற ஒரு தமிழ்க்கழக கூட்டத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் சென்றிருந்தார்.

அவர் கூட்டம் நடைபெற்று முடிந்தவுடன் தன்னிடம் இருக்கும் வேட்டியைத் துவைத்துக் காயப்போட்டுவிட்டு, லுங்கியை அணிந்துகொள்வார். அடுத்த நாள் கூட்டத்திற்குச் செல்லும்போது முந்தைய நாள் துவைத்துக் காயப்போட்ட வேட்டியை எடுத்து அணிந்துகொண்டு கூட்டத்திற்குச் செல்வார். ஏனென்றால் அவரிடம் ஒரே ஒரு வேட்டிதான் இருந்தது.

இதைக் கவனித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அவருக்கு 12 மில் வேட்டிகளை வாங்கிக்கொடுத்து, அணிந்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார்கள். அவர் அதைப் பெற்றுக் கொண்டார். ஆனால் அவர் அதை தன்னோடு வைத்துக்கொள்ளவில்லை. மாறாக பக்கத்தில் இருந்த சேரியில் வாழ்ந்த மக்களுக்குக் கொடுத்துவிட்டு, மீண்டுமாக ஒரே ஒரு வேட்டியோடே வலம்வந்தார்.

இப்படி எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும், ஏழைகள்மீது அக்கறை கொண்டும் வாழ்ந்தவர் வேறுயாருமல்ல, தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய தலைவர்களில் ஒருவரான ஜீவானந்தம் எனப்படும் பா.ஜீவா அவர்களே. நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், நம்மோடு வாழும் ஏழை, எளிய மக்கள்மீது அக்கறைகொண்டு வாழவேண்டும் என்பதை இவருடைய வாழ்க்கையானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

ஆனால் இன்றைக்கு மனிதர்கள் தனக்கு அடுத்திருப்பவரைப் பற்றி எந்தவொரு அக்கறையும் இல்லாமல், சுயநலச் சேற்றில் வாழ்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்ககூடிய பணக்காரன்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு செல்வரும், இலாசரும் பற்றிய உவமையை சொல்கிறார். செல்வரோ நாள்தோறும் ஆடம்பரமாக ஆடை உடுத்தி, அறுசுவை உணவு உண்டு வாழ்கிறான். ஆனால் அவனுடைய வீட்டு வாசலில் உடலெல்லாம் புண்களோடு, வறிய நிலையில் ஏழை இலாசர் படுத்துக்கிடக்கிறான். அவனைப் பற்றி, செல்வந்தன் கொஞ்சம்கூட அக்கறைகொள்ளவில்லை. அதனால்தான் அவன் இறந்த பிறகு பாதாளத்திலும், ஏழை இலாசாரோ ஆபிரகாமின் மடியிலும் இருக்கிறார்கள்.

இயேசு கூறும் இந்த உவமை நமக்கு ஒருசில உண்மைகளை சுட்டிக்காட்டத் தவறவில்லை. முதலாவதாக நாம் ஒவ்வொருவரும் நம்மோடு வாழக்கூடிய மக்கள்மீது அக்கறைகொண்டு வாழவேண்டும். உவமையில் வரும் செல்வந்தன் ஏழை இலாசருக்கு தீங்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அதேவேளையில் அவன் தன்னுடைய வீட்டுவாசலில் இருந்த ஏழை இலாசரைக் கண்டுகொள்ளவில்லை. கண்டுகொள்ளாமையே செல்வந்தனுக்கு மிகபெரிய தண்டனையைக் கொண்டுவந்து சேர்த்தது.

அடுத்ததாக நாம் ஒவ்வொருவரும் கடவுளையே நம்பி வாழும் மக்களாக வேண்டும் என்றதொரு அழைப்பினையும் இந்த உவமையானது நமக்குக் கற்றுத்தருகிறது. உவமையில் வரும் இலாசரை இந்த உலகமானது வஞ்சித்திருந்தாலும் அவர் கடவுள்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்திருக்கலாம். அதனால்தான் கடவுள் அவருக்கு பேரின்ப வீட்டின் கதவுகளைத் திறந்துவிடுகின்றார். ஆகவே நாம் ஒவ்வொருவரும் கடவுளை நம்பி வாழும் மக்களாக மாறவேண்டும்.

மத்தேயு நற்செய்தி 5:3 ல் வாசிக்கின்றோம், "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது" என்று. நாம் ஏழைகளைப் போன்று/ இலாசரைப் போன்று கடவுள்தான் எனக்கு எல்லாம் என்று வாழ்கிறபோது அவர் நமக்கு எல்லா ஆசிரையும் தருவார் என்பது உண்மை.

எனவே நம்மோடு வாழும் மக்கள்மீது அக்கறைகொண்டு வாழ்வோம். அதேநேரத்தில் கடவுளை நம்பி நமது வாழ்வை அமைப்போம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
எரேமியா 17: 5-10

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்

நிகழ்வு

முல்லா வசித்துவந்த ஊரில் ஒரு நாத்திகன் வசித்து வந்தான். சிறிதும் இறைவன்மீது நம்பிக்கை இல்லாதவன். அவன் இறைநம்பிக்கை உடைய முல்லா போன்றவர்களை எப்பொழுது பார்த்தாலும் கேலியும் கிண்டலும் செய்து, பரிகசித்துக்கொண்டிருந்தான்.

ஓருநாள் சந்தை வெளியில் அந்த நாத்திகன் நின்றுகொண்டிருந்தான். அவ்வழியாக முல்லா நடந்து வந்துகொண்டிருந்தார். அங்கு திரளாகக் கூடியிருந்த மக்களுக்கு மத்தியில் முல்லாவை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணினான். எனவே அவன் முல்லா அருகில் வந்ததும், "முல்லா அவர்களே! உலகத்திலேயே நீங்கள்தான் முற்றம் துறந்த துறவி என்று மக்கள் பேசிக்கொள்கிறார்களே? அப்படி நீங்கள் எதைத் துறந்து ஞானியானீர்கள்?" என்று கேலியாகக் கேட்டான். உடனே முல்லா அவனைப் பார்த்து, "எந்த முட்டாள் அந்த மாதிரி சொன்னான்? என்னைவிட மிகவும் மகத்துவம் வாய்ந்த துறவி ஒருவர் இருக்கிறாரே!" என்றார்

முல்லா இவ்வாறு சொன்னது, நாத்திகனுக்கு மட்டுமல்லாது, அங்கு நடமாடிக் கொண்டிருந்த மக்களுக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. 'முல்லாவையும்விட மேலான தறவி இந்த ஊரில் யார் இருக்க முடியும்?'என்று மக்கள் யோசிக்கத் தொடங்கினார்கள். நாத்தினோ முல்லா சொன்னதைக் கேட்டு வியப்படைந்து, "முல்லா இந்த ஊரில் உள்ள அந்த மகத்துவம் வாய்ந்த துறவி யார்?" என்ற கேட்டான். "அந்தத் துறவி நீர் தான்" என்று முல்லா கூறியதைக் கேட்ட நாத்திகன் அதிர்ச்சியடைந்துவிட்டான். "நானா அந்தத் துறவி? அது எப்படி?" என்று கேட்டான் அவன்.

அதற்கு முல்லா அவனிடம், "என்னைப் போன்ற சாதாரணமானத் துறவிகள் கேவலம் இவ்வுலகில் இருக்கும் பொருட்களைத்தான் துறப்பது வழக்கம்... நீரோ கடவுளையே துறந்து விட்ட துறவியாயிற்றே! உம்மை மிஞ்சக்கூடிய துறவி உலகத்தில் ஏது?" என்றார். இதைக் கேட்டுவிட்டு அங்கு சூழ்ந்திருந்த மக்கள் நாத்திகனைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கத் தொடங்கினர். நாத்திகனோ தலைகுனிந்தவாறு அவ்விடத்தை விட்டு, வேகமாக அகன்றான்.

இந்நிகழ்வில் வரும் நாத்திகனை கடவுளையே துறந்தவர்களைப் போன்றுதான் பலர் கடவுள்மீது நம்பிக்கை வைக்காமல், யாராரிடமோ அல்லது எவற்றில் எல்லாமோ நம்பிக்கை வைத்து வாழ்கின்றார்கள். இப்படிபபட்டவர்கள் எத்தகைய அழிவினைச் சந்திப்பார்கள் என்பதையும் ஆண்டவர்மீது நம்பிக்கை வாழ்பவர்கள் எத்தகைய ஆசியைப் பெறுவார்கள் என்பதையும் இறைவாக்கினர் எரேமியா நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் மிக அருமையாக எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்க மறுத்த/மறந்த இஸ்ரயேல் தலைவர்கள்

இறைவாக்கினர் எரேமியா, யோசியா (Josiah) அரசன் யூதாவை ஆட்சி செய்த இருபதாம் ஆண்டில் (கிமு. 626) தன்னுடைய இறைவாக்குப் பணியைச் செய்யத் தொடங்கினார். இக்காலத்தில் அசிரியர் யூதாவின்மீது படையெடுத்து வரும் ஓர் இக்கட்டான சூழ்நிலை நிலவியது. இத்தகைய தருணத்தில்தான் இறைவாக்கினர் எரேமியா தென்னாடாம் யூதா நாட்டுத் தலைவர்களிடம் ஆண்டவர்மீது நம்பிக்கை வாழுங்கள் என்றதோர் உயரிய அழைப்பினை விடுத்தார். ஏற்கனவே இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்காமல் போனதால் எப்படிப்பட்ட அழிவினைச் சந்தித்தார்கள் (எண் 13-14) என்பதை நன்கு அறிந்திருந்த எரேமியா, இனிமேலும் அப்படிப்பட்ட தவற்றினைத் செய்திடாமல் இருக்க அவர்களை ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ அழைப்பு விடுத்தார். அவர்களோ ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்காமல், பாபிலோனியர்கள்மீது நம்பிக்கை வைத்தார்கள். கடைசியில் மிகப்பெரிய அழிவனைச் சந்தித்தார்கள் என்பது வரலாறு.

இஸ்ரயேல் தலைவர்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்காமல், மனிதர்கள்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்ததை, எரேமியா இறைவாக்கினர் பாலைவனத்துப் புதர் செடிக்கு ஒப்பிடுகின்றார். பாலைவனத்துப் புதர்செடி ஒருபோதும் பயனளிப்பதில்லை (திபா 1:3-4) அதுபோன்றுதான் ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்காதோரும் இருப்பர் என்கின்றார் அவர்.

ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோர் பெறும் ஆசி

ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்காமல் வாழ்வோர் எப்படி அழிவைச் சந்திப்பர் என்று சொன்ன இறைவாக்கினர் எரேமியா, ஆண்டவர் மீது நம்பிக்கை வாழ்வோர் எப்படிப்பட்ட ஆசியைப் பெறுவர் என்கின்றார். ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோர் நீரோடையோரம் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பாவர் என்று சொல்லிவிட்டு அவர்கள் பருவ காலத்தில் தக்க பயன்தருவர் என்கின்றார் அவர்.

எனவே, நாம் நமக்கு எல்லாவிதமான ஆசியைத் தரும் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவர் வழங்கும் அருளை நிறைவாய்ப் பெற முயற்சி செய்வோம்.

சிந்தனை

'பாவங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் இறை நம்பிக்கையின்மையே' என்பார் பார்ரோ என்ற எழுத்தாளர். ஆகையால், இறைவன் நம்பிக்கை வைக்காமல், பாவத்தில் விழுவதைவிடவும், எல்லா ஆசியையும் தரும் இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.




Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
லூக்கா 16: 19-31

அடுத்திருப்பவரை அன்பு செய்யாதவர் ஆண்டவரை அடையமுடியாது

நிகழ்வு

போலந்து நாட்டின் மதிப்புமிக்க தியாகியாகவும் தேசபக்தராகவும் கருதப்படுபவர் கோஸ்ஸியஸ்கோ என்பவர். இவர் அந்நாட்டின் ஜெனரலாக இருந்தபோது முக்கியமான ஒரு செய்தியைச் சொல்லிவர, வேறு எந்தக் குதிரையும் இல்லாததால், தனது குதிரையைக் கொடுத்து ஒரு வீரனை அனுப்பி வைத்தார். அந்த வீரன் ஜெனரலின் குதிரையில் சென்று செய்தியைச் சொல்லிவிட்டு வந்தான்.

அவன் குதிரையைவிட்டு இறங்கி அதை கோஸ்ஸியஸ்கோவிடம் ஒப்படைக்கும்போது, "அடுத்த முறை எனக்கு வேறொரு குதிரையைக் கொடுங்கள்" என்றான். அவர் அதற்கான காரணத்தைக் கேட்டபோது அவன், "செல்லும்வழியில், எங்கெல்லாம் ஏழைகள் வீடு இருந்தததோ, அங்கெல்லாம் இக்குதிரை நின்றுவிட்டது; பிச்சைக்காரரர்களைக் கண்டாலும் அப்படியேதான் செய்தது. இதனால் நீங்கள் சொல்லி அனுப்பிய செய்தியை சொல்லிவிட்டு, உடனடியாக என்னால் திரும்பிவர முடியவில்லை" என்றான். அந்தளவுக்கு கோஸ்ஸியஸ்கோ தன் குதிரையை ஏழை எளியவரைக் கண்டு இரங்கும் அளவுக்கு வளர்த்திருந்தார்.

ஏழை எளியவரைக் கண்டு இரங்கவேண்டும் என்று ஒரு குதிரைக்கு இருக்கும் உணர்வு, ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு இல்லாதது மிகவும் வருத்தத்திற்கு உரிய ஒரு காரியம்.

செல்வந்தரும் ஏழை லாசரும்

நற்செய்தி வாசகத்தில் இயேசு, 'செல்வந்தவரும் ஏழை லாசரும்'உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இவ்வுவமையில் வரும் ஏழைக்கு லாசர் என்று பெயர் இருக்க, செல்வந்தருக்குப் பெயர் இல்லாதது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. ஏழை இலாசர் ஆண்டவர்மீது பற்றுக்கொண்டு வாழ்ந்தார். செல்வந்தவரோ தன் செல்வத்தின் பற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தார். அதனால்தான் ஏழை லாசருக்கு விண்ணகமும் செல்வந்தருக்குப் பாதாளமும் பரிசாகக் கிடைக்கின்றது.

உவமையில் வரும் செல்வந்தர் விலையுயர்ந்த ஆடை உடுத்தி, நாள்தோறும் விருந்துண்டு வாழ்ந்து வருகின்றார். மறுபக்கமோ ஏழை இலாசர் செல்வந்தரின் மேசையிலிருந்து விழும் சிறிசிறு துண்டுகளால் தன்னுடைய வயிற்றை நிரப்புகின்றார். ஏன் இப்படியொரு ஏற்றத்தாழ்வு என்பதற்கு விவிலிய அறிஞர்கள் சொல்கின்ற விளக்கம் இது: "யூத சமூகத்தில் இருந்த நிலம் படைத்தோர், ஏழு ஏழு ஆண்டுகள் கழித்து வரும் யூபிலி ஆண்டில் ஐம்பதாம் ஆண்டில் - நிலத்தில் உழவோ, பயிர் செய்யவோ கூடாது. மாறாக அந்நிலத்தை அவர்கள் தங்களுக்குக்கீழ் வேலைபார்த்த கூலியாட்கள், அடிமைகள் போன்றோருடைய பயன்பாட்டிற்கு விட்டுவிடவேண்டும். ஒருவேளை அவர்கள் கடன்பட்டிருந்தால், அவர்களது கடன் அனைத்தையும் நிலம் வைத்திருக்கும் முதலாளிகள் தள்ளுபடி செய்யவேண்டும். இதுதான் வழக்கம் (லேவி 25). ஆனால், யூத சமூகத்தில் இருந்த நிலம் வைத்திருந்தோர் வசதி படைத்தோர் யூபிலி ஆண்டை முறையாகக் கடைபிடிக்கவில்லை. இதனால் செல்வர் மேலும் செல்வராகவும் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆனார்கள்".

மேலும், 'சமூகத்தில் உள்ள ஏழைகளைப் பராமரிக்கவேண்டும் (நீமொ 14:21), அப்படிப் பராமரிப்பவர் இன்பம் துய்ப்பர்'என்று இறைவன் இஸ்ரயேல் மக்களுக்குத் தொடர்ந்து நினைவுவூட்டிக் கொண்டே இருந்தார். அதையும் யூத சமூகத்தில் இருந்த செல்வம் படைத்தோர் வசதியாக மறந்து போனார்கள். அதனால்தான் யூத சமூகத்தில் ஒருசாரார் வளமையாக வாழ்ந்ததற்கும் இன்னொரு சாரார் பட்டினியில் வாடியதும் காரணமாகும். நாம் வாழும் இந்த சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

பணத்தாசை/பொருளாசையோ எல்லாத் தீமைகளுக்கு ஆணிவேர்

உவமையில் வரும் செல்வந்தர் கடவுள் கொடுத்த கட்டளையை மறந்து, ஏன் கடவுளையே மறந்து பணத்திற்கும் பொருளுக்கும் அடிமையாகி வாழ்ந்ததால் இறந்தபிறகு பாதாளத்திற்குச் செல்கின்றார், ஏழை இலாசரோ ஆண்டவர்மீது மட்டும் பற்றுக் கொண்டு வாழ்ந்தால் அவர் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகின்றார். ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். செல்வந்தர், அவர் பணம் படைத்தவராக இருந்தார் என்பதற்காக பாதாளம் செல்லவில்லை. மாறாக, அவர் கடவுள்மீது நம்பிக்கை வைக்காமல், செல்வத்தின்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்ததனால் பாதாளம் செல்கின்றார். ஏழை இலாசர் ஏழையாக இருந்தார் என்பதற்காக விண்ணகம் செல்லவில்லை, மாறாக அவர் கடவுள்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்ததனால் விண்ணகம் செல்கின்றார். அதனால் ஒருவருடைய வாழ்வும் தாழ்வும் அவர் கடவுள்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையைப் பொறுத்து அமைகின்றது என்று உறுதியாகச் சொல்லலாம்.


சிந்தனை
'காசு கண்ணை மறைத்தது'என்று சொல்வார்கள் அல்லவா... அந்த நிலைதான் உவமையில் வரும் செல்வந்தருக்கு ஏற்பட்டது. தன்னிடமிருந்த செல்வந்தைக் கொண்டு, தன் வீட்டு வாயிலில் இருந்த ஏழைக்கு அவர் உதவியிருக்கலாம், குறைந்தது அவர் இலாசர்மீது இரக்கம் கொண்டிருக்கலாம். ஆனால், அவர் இரக்கம் கொள்ளவில்லை. அதனால்தான் அவருக்கு அப்படியொரு முடிவு ஏற்பட்டது.

ஆகவே, நம்மிடம் இருக்கும் வளங்களை, வசதி வாய்ப்புகளைக் கொண்டு நம்மோடு வாழும் ஏழை எளியவருக்கு உதவிசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!