Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   18  மார்ச் 2019  
                        தவக்காலம் 2ம் வாரம் திங்கள்- 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4b-

என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்! நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்; பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைவிட்டோம்.

எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் இறைவாக்கினர்களாகிய உம் ஊழியர்கள் உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவிகொடுக்கவில்லை. என் தலைவரே! நீதி உமக்கு உரியது; எமக்கோ இன்று வரை கிடைத்துள்ளது அவமானமே.

ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும், இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் ஆகிய நாங்கள், உமக்கு எதிராகச் செய்த துரோகத்தின் பொருட்டு, அருகிலோ தொலையிலோ உள்ள எல்லா நாடுகளுக்கும் உம்மால் இன்றுவரை விரட்டப்பட்டுள்ளோம்.

ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்து நின்றோம்.

எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார். நாங்களோ அவரது குரலொலியை ஏற்கவில்லை.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் -  79: 8. 9. 11. 13 (பல்லவி: திபா 103: 10a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்.

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். பல்லவி

9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். பல்லவி

11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. பல்லவி

13 அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறை தோறும் உமது புகழை எடுத்துரைப்போம். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 6: 63b, 68b

ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 36-38

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள்.

மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  லூக்கா 6: 36-38

விண்ணகத் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாய்...

நிகழ்வு

ஒருசமயம் பின்லாந்து நாட்டில், கனரக வாகனமொன்றில் அடிபட்ட நாய் ஒன்று, சிரமப்பட்டுத் தவழ்ந்து ஒரு வீட்டு வாசலில் தீனக்குரல் எழுப்பியது. அந்த வீட்டில் இருந்த பதினைந்து வயதுச் சிறுவன் நாய்மீது கல்லெறிந்ததோடு மட்டுமின்றி சுடுநீரையும் ஊற்றினான். இதனால் நாய் அந்த இடத்திலேயே இறந்தது.

இதை அந்த வழியாக வழியாக வந்த நீதிபதியொருவர் பார்த்துவிட்டு, சக நீதிபதிகளுடன் கலந்து பேசி, அந்தச் சிறுவனைச் சிறைபிடித்தார். சந்தை நாளில் மக்கள் முன்னிலையில் அவனுக்கு, '50 கசையடிகளும் கழுத்தில் 'மனிதாபிமானமற்ற அரக்ககுணம் படைத்த சிறுவன்' என்ற பலகையும் தொங்கவிடப் படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் சொல்லப்பட்டவாறே சிறுவனுடைய கழுத்தில், 'மனிதாபிமானமற்ற அரக்ககுணம் படைத்த சிறுவன்' என்ற பலகை தொங்கவிடப்பட்டது. பின்னர் கசையடிகள் தொடர்ந்தன. 25 கசையடிகள் விழுந்ததும் சிறுவன் வலிதாங்காமல் துடிப்பதைக் கண்டு, நீதிபதி அவனிடம் சொன்னார், "சிறுவனே! அந்த நாய் அனுபவித்த வலியின் ஒரு துளியைத்தான் இப்போது அனுபவிக்கிறாய்... இனிமேலாவது இரக்கம் பழகு."

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் சிறுவனைப் போன்றுதான் பலரும் தங்களோடு வாழும் மனிதர்களிடமும் உயிரினங்களிடமும் இரக்கமே இல்லாமல் நடந்துகொள்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய நற்செய்தி வாசகம் இரக்கமுள்ளவர்களாய் இருக்க, அதுவும் விண்ணகத் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாய் இருக்க அழைப்புத் தருகின்றது.

இரக்கமுள்ள இறைவன்

நற்செய்தி வாசகத்தில் இயேசு, "உங்கள் விண்ணகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்" என்கின்றார். இரக்கம் என்பது இறைவனின் இயல்பாகும். அதை அவரிடமிருந்து பிரிக்கமுடியாது. அதைப் போன்று இறைவனின் மக்கள் அனைவரும் இரக்கமுள்ளவர்களாக இருக்கவேண்டும். அதைதான் இயேசு இங்கு எடுத்துரைக்கின்றார். இறைவனின் மக்களாக இருப்போர் எப்படி விண்ணகத்தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாக இருப்பது, அதற்கு இன்றைய இறைவார்த்தை எல்லா சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

தீர்ப்பிடாமலும் கண்டனம் செய்யாமல் இருத்தல்

ஐய்யன் திருவள்ளுவர் சொல்வார், "அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நல்லவை நாடி இனிய சொலின்." ஒருவர் இனிய சொற்களைப் பேசினால், தீமைகள் மறைந்து நன்மைகள் ஓங்கும் என்பது இதன் அர்த்தமாகும். இதை இன்றைய இறைவார்த்தையோடு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தோமெனில், ஒருவர் விண்ணகத் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்றால், அவர் தன்னிடமுள்ள தீயவற்றை குறிப்பாக தீர்ப்பிடுவதையும் கண்டனம் செய்வதையும் அகற்றவேண்டும். ஏனென்றால், தீர்ப்பிடுவதும் கண்டனம் செய்வதும் எங்கே நடக்கின்றது என்று சிந்தித்துப் பார்த்தோமெனில் இரக்கமில்லாத இதயத்தில்தான் நடக்கின்றது என்று புரிந்துவிடும்.

இன்றைக்குப் பலர் ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமலும் அவர் செய்தது என்னவென்று தெரியாமலும் தீர்ப்பிடுவதும் கண்டனம் செய்வதும் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம், சக மனிதன்மீது இரக்கமும் அன்பும் இல்லாமையே. என்றைக்கு ஒருவர் இரக்கத்தோடு இருக்கின்றாரோ, அன்றைக்கு அவர் பிறரைக் குறித்துத் தீர்ப்பிடவோ, கண்டனம் செய்யவோ யோசிப்பார். ஆதனால், விண்ணகத்தந்தையைப் போன்று ஒருவர் இரக்கமுள்ளவராக இருக்க அவர் தீர்ப்பிடாமலும் கண்டனம் செய்யாமலும் இருப்பது நல்லது.

மன்னிக்கும் மற்றும் கொடுக்கும் மனதோடு இருக்கவேண்டும்

விண்ணகத்தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாக இருக்க ஒருவர் தன்னிடம் இருக்கும் அல்லவைகளான தீர்ப்பிடுவதையும் கண்டனை செய்வதையும் அகற்றவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்தோம். இதைச் செய்தால் மட்டும் ஒருவர் இரக்கமுடையவராக இருக்கமுடியாது. இதை விடமும் மேலானவற்றைச் செய்யவேண்டும். அவை என்னவெனில், ஒருவர் மன்னிக்கின்றவராக, தாராளமாகக் கொடுக்கக்கூடியவராக இருக்கவேண்டும். ஏனெனில், மன்னிப்பவராலும் கொடுப்பவராலும் மட்டுமே இரக்கமுள்ளவராக இருக்கமுடியும். அல்லது யார் ஒருவர் இரக்கமுள்ளவராக இருக்கின்றாரோ அவரால் மட்டுமே கொடுக்கவும் மன்னிக்கவும் முடியும்.

ஆண்டவராகிய கடவுள் மக்களுடைய பாவங்களைத் தாராளமாக மன்னிக்கின்றார் (மத் 18: 21-35) அது மட்டுமல்லாமல் அவர் தாராளமாகக் கொடுக்கின்றார். இவ்வாறு அவர் இரக்கமுள்ளவராய் விளங்குகின்றார். அவரைப் போன்று இரக்கமுள்ளவராக இருக்கவேண்டுமெனில் கொடுக்கவும் மன்னிக்கவும் தயாராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரால் மட்டுமே விண்ணகத் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவராக இருக்க முடியும்.

சிந்தனை

'நற்பண்புகள் என்ற விண்மீன்களுக்கிடையே இரக்கம் நிலவைப் போன்று அவ்வளவு முக்கியமானது' என்பார் சேப்பின் என்ற அறிஞர். ஆகையால், அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இரக்கத்தை நம்முடைய உள்ளத்தில் தாங்கி, விண்ணகத் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவகளாய் இருந்து, இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
தானியேல் 9: 4-11

இறைவன்முன் பாவத்தை அறிக்கையிடுவோம்

நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பாக, அமெரிக்காவில் இருந்த இளைஞன் ஒருவன் ஒரு கொலைக்குற்றம் செய்தான். அவனுடைய வழக்கை விசாரித்த நீதிபதி அவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார். மேலும் அவன் இந்தத் தேதியில் தூக்கிலிடப்படவேண்டும் என்று அதற்கான நாளையும் குறித்தார்.

செய்தி அறிந்த அந்த இளைஞனுடைய ஊர் மக்களும் அவனுடைய தாயும் கதறி அழுதனர். உடனே அவர்கள் அந்த இளைஞனுடைய தண்டனையைக் குறைக்கவேண்டும் என்று ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதற்குப் பதில் வரவில்லை. அதைத் தொடர்ந்து அந்த இளைஞருடைய தாயும், "எனக்கு இவன் மட்டும்தான் இருக்கிறான்... இவனும் என்னை விட்டுப் பிரிந்துவிட்டால், அதன்பிறகு என்னுடைய வாழ்க்கையே கேள்விக்குள்ளாகிவிடும். அதனால் தயவுசெய்து என் மகனுடைய தண்டனைக் காலத்தைக் குறையுங்கள்" என்று ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதற்கும் எந்தவொரு பதிலும் வரவில்லை.

இதற்கிடையில் சிறையில் இருந்த அந்த இளைஞனைப் பார்ப்பதற்காக குருவானவர் ஒருவர் வந்தார். அவர் அந்த இளைஞனிடம், "தம்பி! உன்னைக் குறித்து எல்லாவற்றையும் கேள்விப்பட்டேன்... நாளைய நாளில் உனக்கு மரணதண்டனை விதிக்கப்பட இருக்கிறது அல்லவா... அதனால் உன்னுடைய பாவங்களை எல்லாம் என்னிடம் அறிக்கையிடு, உனக்கு நிச்சயம் விடுதலை கிடைக்கும்" என்றார். அதற்கு அந்த இளைஞன், "என்னுடைய தண்டனைக் காலத்தைக் குறைத்து, என்னை விரைவில் விடுதலைசெய்ய வேண்டும் என்று என்னுடைய தாயும் என்னுடைய ஊர் மக்களும் ஆளுநருக்கு இரண்டு கடிதங்கள் எழுதியபோதும் எனக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை இரத்து செய்யப்படவில்லை. அப்படி இருக்கும்போது உங்களிடம் நான் பாவத்தை அறிக்கையிடுவதால் மட்டும் என்னுடைய மரணதண்டனை இரத்து செய்யப்படுமா என்ன?" என்று அவநம்பிக்கையோடு பேசினான்.

குருவானவர் மீண்டும் அவனிடம், "ஆமாம் தம்பி! என்னிடம் உன்னுடைய பாவத்தை அறிக்கையிட்டால், உன்னுடைய மரண தண்டனை இரத்து செய்யப்படும்" என்றார். அவனோ குருவானவர் சொன்ன வார்த்தைகளை நம்ப முடியாதவனாய், கடைசிவரைக்கும் அவரிடம் தன்னுடைய பாவத்தை அறிக்கையிடவில்லை. இதனால் அந்தக் குருவானவர் அவனை விட்டு மிகவும் வருத்தத்தோடு சென்றார்.

அவர் சிறைக்கூடத்தை விட்டுச் சென்றதும், அங்கிருந்த சிறைக்காவலர் அவனிடம் ஓடோடி வந்து, "தம்பி! இப்பொழுது இங்கு வந்தது யாரென்று தெரியுமா?... இவர்தான் நம்முடைய நாட்டின் ஆளுநர்" என்றார். "இப்பொழுது வந்தது ஆளுநரா! ஐயயோ! இதுகூடத் தெரியாமல் அவரிடம் பாவத்தை அறிக்கையிடாமல், இப்படி என்னுடைய அழிவுக்கு நானே காரணமாகிவிட்டேனே" என்று மனம் நொந்து அழுதான்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் இந்த இளைஞனைப் போன்றுதான் பலரும் தங்களுடைய பாவத்தை இறைவனிடம் அறிக்கையிடாமல், அந்த பாவத்திலேயே கிடந்து அழிந்து போகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய முதல் வாசகம் இறைவனிடம் பாவத்தை அறிக்கையிடுவதன் முக்கியத்துவத்தைக் குறித்துப் பேசுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இஸ்ரேயல் மக்கள் சார்பாக பாவத்தை அறிக்கையிட்ட தானியேல்

இறைவாக்கினர் தானியேல் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், அவர், இஸ்ரயேல் மக்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த பாவத்தை அவர்கள் சார்பாக அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்கின்றார்.

இஸ்ரேயல் மக்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த பாவம் என்னவெனில், அவர்கள் கடவுள் கொடுத்த கட்டளைகளையும் நியமங்களையும் கடைபிடிக்கவில்லை. குறிப்பாக அவர்கள் யாவே இறைவனை வழிபடமால் (விப 20: 1-6), பிற தெய்வத்தை வழிபட்டார்கள். அதனாலேயே அவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள்; பிற நாட்டில் அடிமைகளாக இருந்தார்கள். இப்படிப்பட்ட குற்றத்திற்காகத்தான் இறைவாக்கினர் தானியேல் இறைவனிடமிருந்து மன்னிப்புக் கேட்கின்றார்.

பாவத்தை அறிக்கையிடுவது இறைவனிடமிருந்து குணத்தை/ ஆசியைப் பெறுவதற்கான முதற்படி

'பாவத்தை ஏன் அறிக்கையிடவேண்டும்? இறைவனுக்குத்தான் எல்லாம் தெரியுமே!' ஒன்று ஒருசிலர கேட்கலாம். இதற்கான பதில் தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுகின்றார். "பாவங்களை அறிக்கை செய்துகொள்ளுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள்" (5:16) ஆகவே, தவறு செய்கின்ற ஒருவர் பாவத்தை அறிக்கையிடுவது மிகவும் கட்டாயம். அந்தப் பாவத்தைக் குருக்களிடம் அறிக்கையிடுவது அதைவிடக் கட்டாயம் (யோவா 20: 23). ஒருவேளை பாவத்தை அறிக்கையிடாமல், அதை அப்படியே வைத்திருந்தால் அது நாள்பட்ட காயம்போல் மிகப்பெரிய ஆபத்தில் முடியும். ஆகவே, தானியேல் இறைவாக்கினரைப் போன்று பாவத்தை அறிக்கையிட்டு இறைவனின் மன்னிப்பையும் அருளையும் பெற முயற்சி செய்வோம்.

சிந்தனை

'கடவுளுக்கு ஏற்ற பலி நொறுங்கிய நெஞ்சம்' (திபா 51:17) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகவே, நொறுங்கிய நெஞ்சத்தோடு நம்முடைய குற்றங்களை அறிக்கையிட்டு ஆண்டவரோடு ஐக்கியமாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!