Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   16  மார்ச் 2019  
      தவக்காலம் முதலாம் வாரம் சனிக்கிழமை- 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19

மோசே மக்களை நோக்கிக் கூறியது: இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு.

ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும், உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும் கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாக வும், அவர் குரலுக்குச் செவிகொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய்.

நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும், அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:119: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 1b)
=================================================================================
  பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். பல்லவி

4 ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர். 5 உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! பல்லவி

7 உம் நீதி நெறிகளை நான் கற்றுக்கொண்டு நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன். 8 உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்; என்னை ஒருபோதும் கைவிட்டுவிடாதேயும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 கொரி 6: 2b

இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: (உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', (பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக' எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.

ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?

நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  பகைவருக்கு அன்பு

நம்முடைய இந்தியத் திருநாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற சாதுக்களில் ஒருவர் ஏக்நாத் என்பவர். மக்களிடம் அவர் அதிகமான செல்வாக்குப் பெற்றிருந்தார். அவருடைய வளர்ச்சியையும், புகழையும் பிடிக்காத ஒருசிலர் அவரிடம் நிறையக் குறைகள் உண்டு என்பதை நிரூபிப்பதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அதற்காக அவர்கள் ஒரு மனிதனை பணம்கொடுத்து ஏற்பாடு செய்து, அவரை சிக்கலில் மாட்டிவிட காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஏக்நாத் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்த உடன், அருகே ஒடக்கூடிய ஆற்றில் குளிக்கச் செல்வது வழக்கம். அதேபோன்று அன்றும் அவர் ஆற்றுக்குக் குளிக்கச் சென்றார்.

அவர் ஆற்றில் குளித்துவிட்டு, வெளியே வரும்போது அவருடைய எதிரிகள் ஏற்பாடு செய்துவைத்திருந்த மனிதர் சாதுவின் முகத்தில் காறித் துப்பினார். உடனே அவர் மறுபடியும் ஆற்றில்போய் குளித்துவிட்டு கரைக்கு வந்தார். அப்போதும் அந்த மனிதர் அவருடைய முகத்தில் காறி உமிழ்ந்தார். அவர் இப்படி ஆற்றில் குளித்துவிட்டு வருவதும், அந்த மனிதர் அவர்மீது காறி உமிழ்வதும் நடந்துகொண்டே இருந்தது. ஒருமுறை இரண்டுமுறை அல்ல ஏறக்குறைய நூற்று ஏழுமுறை. (நம்புவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மை)

சாது நூற்று எட்டாம் முறை ஆற்றில் குளித்துவிட்டு கரையில் ஏறியபோது அம்மனிதர் தன்னுடைய தவறை உணர்ந்து அவருடைய காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். அத்தோடு அவர் கூலிக்காகத்தான் இவ்வாறு செய்தேன் என்று எல்லாவற்றையும் அவரிடம் சொன்னார். அதற்கு அவர், "நீ கூலிக்குதான் என்மீது காறி உமிழ்கிறாய் என்று தெரிந்தால், இன்னும் நீ பலமுறை என்மீது துப்ப அனுமதித்திருப்பேனே" என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.

"இந்த நாள் என்னுடைய வாழ்வில் ஒரு நன்னாள். ஏனென்றால் இன்றைக்குத் தான் நான் நூற்றுஎட்டு முறை குளித்திருக்கிறேன். இப்படி நான் நூற்று எட்டு முறை குளிப்பதற்குக் காராணமாக இருந்த உனக்குத்தான் நான் நன்றி செலுத்தவேண்டும்" என்று சொல்லி, அவனுடைய தவறை மனதார மன்னித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார்.

"உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்" என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தைக்கு அர்த்தம் தருவதாக இருக்கின்றது இந்த நிகழ்வு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு புதிய ஒரு கட்டளையைத் தருகிறார் அதுதான் பகைவருக்கு அன்பு என்னும் கட்டளை. வழக்கமாக யூதருடைய சட்டம் 'உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக; பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக' என்றுதான் இருந்தது. ஆனால் ஆண்டவர் இயேசுவோ, "பகைவரிடம் அன்பு செலுத்துங்கள், அவர்களுக்காக ஜெபியுங்கள்" என்னும் புதிய கட்டளையைத் தருகிறார்.

இதனால் பல்வேறு நன்மைகள் விளையும். அதில் முதலாவது வன்முறைகள் குறையும். நமக்குத் தீமை செய்கிறவனுக்கு நாமும் பதிலுக்குத் தீமைசெய்தால் வன்முறையும், கலகமும்தான் பெருகும். அதேநேரத்தில் நமக்கு எதிராகத் தீமை செய்கிறவரை மன்னிக்கிறபோது, அவரை முழுமையாக அன்பு செய்கிறபோது அங்கே அமைதி பெருகும். வெ. இறையன்பு என்ற எழுத்தாளர் கூறுவார், "நாம் அன்பு மயமாக மாறுகிறபோது, நம் எதிரே இருப்பவர்களும் அன்பு மயமாக மாறுவார்கள்; நாம் புன்னகைக்கிறபோது, எதிரே வருபவனும் புன்னகைத்தே தீருவான். அப்போதுதான், உலகம் முழுவதிலும் இருக்கின்ற வன்முறைகள், வன்மங்கள் குறையும்" என்று. ஆகவே நாம், நமக்கு எதிராக தீமை செய்வோரை மன்னித்து, அன்பு செய்யக் கற்றுக்கொள்வோம்.

இரண்டாவது நாம் நமக்கெதிராகத் தீமை செய்வோரை மன்னிகிறபோது விண்ணகத் தந்தையின் மக்களாகின்றோம். காரணம் கடவுள் நல்லோர்மீதும் தீயோர்மீதும் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர்மீதும், நேர்மையற்றோர்மீதும் மழை பொழியச் செய்கிறார்.

ஆகவே விண்ணகத் தந்தையின் அன்புப் பிள்ளைகளாக இருக்கும் நாம் நமக்கெதிராகத் தீமை செய்யும் மக்களை மன்னித்து, அன்பு செய்து வாழ்வும். இவ்வுலகில் பகையும், வெறுப்பும் மறைந்து அன்பு பெருக உழைப்போம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

இணைச்சட்டம் 26: 16-19

(கடவுளுக்குக்) கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்

நிகழ்வு

அமெரிக்காவில் 1861 ஆம் ஆண்டிலிருந்து 1865 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். அமெரிக்காவில் இருந்த அடிமைச் சந்தைமுறையைக் கூண்டோடு ஒழித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

இவர் ஜனாதிபதியாக இருந்த சமயம் இவரைப் பார்க்க நண்பர் ஒருவர் இவருடைய வீட்டிற்கு வந்திருந்தார். வந்தவர் ஆபிரகாம் லிங்கனோடு ஒரு முக்கியமான விடயத்தைக் குறித்துப் பேசத் தொடங்கினார். இருவரும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கையில், ஆபிரகாம் லிங்கனின் மகன் அங்கு வந்து பயங்கரமாகச் சத்தம் போட்டு விளையாடத் தொடங்கினான். இது வந்தவருக்குப் பெரிய தொந்தரவாக இருந்தது. உடனே அவர் லிங்கனின் மகனைக் கூப்பிட்டு, "தம்பி! நாங்கள் இருவரும் பேசி முடிக்கும்வரைக்கும் நீ அமைதியாக இருந்தாய் எனில், உனக்கொரு கைகடிகாரத்தைப் பரிசாகக் கொடுப்பேன்" என்றார். அச்சிறுவனும் வந்தவர் சொன்ன வார்த்தைகளை கேட்டு, தனக்குக் கைகடிகாரம் கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையில் அமைதியாக இருந்தான்.

இதன்பிறகு வந்தவர் லிங்கனோடு நீண்டநேரம் பேசினார். தான் வந்த நோக்கம் நிறைவேறியவுடன் அவர் லிங்கனுக்கு நன்றிசொல்லிவிட்டு, அவரிடமிருந்து விடைபெறத் தொடங்கினார். அப்பொழுது லிங்கன் அவரிடம், "நண்பரே! என் மகனுக்குக் கொடுப்பதாகச் சொன்ன கைக்கடிகாரம் எங்கே?" என்று கேட்டார். "அதுவா... பையன் அமைதியாக இருக்கவேண்டும் என்பதற்காக விளையாட்டுக்காகச் சொன்னேன்" என்றார் அவர். "விளையாட்டுக்காகச் சொன்னீர்களா... கைக்கடிகாரம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதைக் கொடுக்காமல் போனால், 'கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தேவையில்லை போலும்' என்ற எண்ணம் என் பையனுடைய உள்ளத்தில் உருவாகும். அதன்பிறகு அவனும் மற்றவர்களை இப்படிச் சொல்லி ஏமாற்றத் தொடங்கிவிடுவான். அதனால் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை தயவுசெய்து நிறைவேற்றிவிட்டுப் போங்கள்" என்று ஆபிரகாம் லிங்கன் தன் நண்பருக்கு அன்புக் கட்டளை விடுத்தார்.

ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவது எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இஸ்ரயேல் மக்களுக்கு மோசே விடுத்த அழைப்பு

இணைச்சட்ட நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், மோசே இஸ்ரயேல் மக்களைப் பர்த்துக் கூறுகின்றார், "நீ ஆண்டவரை உன் கடவுளாகவும் அவருடைய வழியில் நடப்பதாகவும் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதாகவும் அவருடைய குரலுக்குச் செவிகொடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தாயே, அதைக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு."

இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனைத் தங்களுடைய கடவுளாகவும் அவர் வழியில் நடப்பதாகும் மூன்று முறை வாக்குறுதி அளித்தார்கள் (இன்றைய முதல் வாசகம் தவிர்த்து விப 19: 7-8; 24: 3-8). ஆனால், அவர்கள் கடவுளுக்கு கொடுத்த வாக்குறுதியைக் கடைப்பிடிக்காமல், அதாவது யாவே இறைவனை வழிபடாமல் பிற தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள். பிறதெய்வத்தை வழிபடுவது சிலைவழிபாட்டிற்குச் சமம் (விப 20: 1-6) அப்படிப்பட்ட தவற்றினைச் செய்ததால் அதற்கான தண்டனையை அனுபவித்தார்கள் (இச 13). ஆகவே, கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருப்பதாக, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதாக வாக்குறுதி தந்துவிட்டு, அதை நிறைவேற்றாமல் போவது மிகப்பெரிய குற்றம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

கடவுளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ஆசி

முதல் வாசகத்தில், மோசே இஸ்ரயேல் மக்களிடம், கடவுளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்று கட்டளையிட்ட அதே நேரத்தில் அவர், கடவுளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் கிடைக்கும் நன்மைகளையும் ஆசியையும் அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார். இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் அவர்கள் அவருக்குச் சொந்த மக்களாகவும் புகழிலும் பெயரிலும் மாட்சியிலும் மற்ற எல்லா இனத்தாரையும்விட உயர்ந்தும் தூய மக்களினமாகவும் ஆவார்கள் என்கிறார் மோசே.

ஒருவர் கடவுளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது அவரைக் கடவுள் எப்படியெல்லாம் ஆசியால் நிரப்புகிறார் என்பதை கற்பனை செய்து பார்க்கின்றபோது, நமக்கே வியப்பாக இருக்கின்றது. இத்தகைய ஆசியை ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் என்றால், நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்கும் அயலாருக்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்வது நல்லது.

சிந்தனை

'என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்படிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்' (விப 20:6) என்பார் கடவுள். எனவே வாக்கு மாறாத இறைவனிடம் நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, அவருடைய அன்பு மக்களாவோம்; அதன்மூலம் அவருடைய அருளை நிறைவாய்ப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
மத்தேயு 5: 43-48

நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்!

நிகழ்வு

காந்தியடிகள் இருந்த சபர்மதி ஆசிரமத்தில், ஒருநாள் இரவு திருடன் புகுந்து, அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்களைத் திருட முயன்றான். ஆனால், அவன் எதிர்பாராத விதமாக அங்கிருந்த காவலர்களிடம் மாட்டிக்கொள்ள, அவர்கள் அவனை மரத்தில் கட்டிவைத்து நையப்புடைத்தனர். மறுநாள் காலையில், இறைவழிபாடு முடித்துவிட்டு வந்த காந்தியடிகளிடம் இரவு நடந்ததையெல்லாம் சொன்னார்கள். உடனே அவர் அவர்களிடம், அவனுக்குக் காலை உணவு கொடுத்தீர்களா? என்றார். திருட வந்தவனுக்குக் காலை உணவா? என்று அவர்கள் இழுக்க, ஏன் திருடனுக்கு வயிறு இருக்காதா? அவனுக்குப் பசி எடுக்காதா? என்றார் காந்தியடிகள். உடனே அவர்கள் அவனுக்குக் காலை உணவு கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.

திருட வந்தவனுக்கும் நல்லது செய்ய நினைத்த அந்த நல்ல மனம்தான் காந்தியடிகளை மற்ற எல்லாரிலிருந்தும் அவரைத் தனித்துத் தெரிய வைத்தது. நன்மை செய்வதருக்கு மட்டுமல்ல, தீமை செய்தவருக்கும் நன்மை செய்யவேண்டும். அன்பு செய்தவரை மட்டுமல்ல, பகைவரையும் அன்பு செய்யவேண்டும். அதுதான் உயர்ந்த நெறி. அப்படிப்பட்ட நெறியைத்தான் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் மக்களுக்குப் போதிக்கின்றார்.

உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்

இயேசு தன்னுடைய மலைப்பொழிவின் போது, ஆறுவகையான பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளுக்கு புதிய அர்த்தத்தைத் தருகின்றார். அவ்வாறு அவர் புது அர்த்தம் தரும் பழைய ஏற்பாட்டுக் கட்டளைதான் 'உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', 'பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயா' என்ற கட்டளையாகும்.

யூதர்கள் தங்கள் இனத்தாரைத்தான் அன்பு செய்தார்கள். பகைவர்களான புறவினத்து மக்களை வெறுத்து ஒதுக்கிறார்கள். ஏன் அவர்களை நாயினும் கீழாகக் கருதினார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இயேசு அவர்களிடம், உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள் என்று புதிய கட்டளையைத் தருகின்றார். இக்கட்டளை மூலம் பகைவர்கள் யார் யார் என்பதையும் அடுத்திருப்பவர் யார் என்பதையும் மிகத் தெளிவாக விளக்குகின்றார். முதலில் பகைவர்கள் யார் என்பதற்கு அவர் கொடுக்கின்ற வரையறையைப் பார்ப்போம். பகைவர்கள் என்றால், ஓயாமல் நம்மோடு சண்டை போட்டுக்கொண்டிருப்பவர் மட்டுமல்ல, நம்மைச் சபிப்பவரையும் துன்புருவோரையும் சுரண்டுவோரையும் பகைவர் என்றே வரையறுகின்றார; இப்படிப்பட்டவர்களிடம் அன்புகூரவேண்டும் என்றும் கூறுகின்றார்.

அடுத்ததாக, அடுத்திருப்பவர் என்பதற்கு அவர் கொடுக்கின்ற விளக்கத்தைப் பார்ப்போம். யூதர்களைப் பொறுத்தளவில் அடுத்திருப்பவர் என்றால், அவர்களுடைய சொந்த இனத்தவர். ஆனால், இயேசு தேவையில் உள்ள எவரும் அடுத்திருப்பவர்தான் என்பதை நல்ல சமாரியன் உவமையின் வழியாக மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார். இவ்வாறு இயேசு, தன் சொந்த இனத்தவரை மட்டுமல்ல, எல்லா இனத்தவரையும், ஏன் வெறுப்பவர், சபிப்பவர், துன்புறுத்துபவர், தீங்கு நினைப்பவர், சுரண்டுபவர் என எல்லாரையும் அன்பு செய்யச் சொல்கின்றார். இப்படி அன்பு செய்வதனால் மட்டுமே இம்மண்ணுலகில் இறையாட்சியானது மலரும் என்பதையும் அவர் நினைவூட்டுகின்றார்.



பகைவரிடம் அன்பு கூர்வதால் என்ன நடக்கும்



பகைவர்மீது அன்பு கூரச்சொல்லும் இயேசு, பகைவர்மீது அன்பு கூர்வதனால், என்ன நடக்கும் என்பதை மிகத் தெளிவாக விளக்குகின்றார். பகைவர் மீது அன்புகூர்வதனால் கடவுளின் மக்களாகும் பேறு ஒருவருக்குக் கிடைகின்றது. ஏனென்றால், கடவுள் கதிரவனைப் போன்று, மழையைப் போன்று எந்தவொரு பாடுபாடும் பார்க்காமல் எல்லார்மீதும் அன்புகூர்கின்றவர். ஒருவன் தீயவன் என்பதற்காகவோ, நேர்மையற்றவன் என்பதற்காகவோ அவன்மீது மழை பெய்யாமலோ, கதிரவன் உதிக்காமலோ இல்லை. மாறாக, எல்லார்மீதும் கதிரவன் உதிக்கிறது, எல்லார்மீதும் மழை பெய்கின்றது. அதுபோன்றுதான் கடவுளும். அவர் எல்லார்மீதும் அன்புகூர்கின்றார். அந்த அடிப்படையில் ஒருவர் பகைவர்மீது அன்புகூர்ந்தால், அவர் கடவுளின் மகனாக/மகளாக மாறுகின்றார்.



அடுத்ததாக ஒருவர் பகைவர்மீது அன்புகூர்வதனால், அவர் மற்றவரை விடவும் சிறந்தவராகவும் உயர்ந்தவராகவும் மாறுகின்றார். எப்படியென்றால், அன்பு செலுத்துவோர்மீது அன்பு செலுத்துவது புறவினத்தார் (!) இயல்பு. பகைவர் மீது அன்பு செலுத்துவதுதான் கடவுளின் மக்களது இயல்பு. ஆகவே, ஒருவர் பகைவர்மீது அன்புகூர்வதன் வழியாக மற்ற எல்லாரையும் விட உயர்ந்தவர் ஆகின்றார். நிறைவாக, ஒருவர் பகைவர் மீதும் அன்பு கூர்வதன் வழியாக, விண்ணகத் தந்தையைப் போன்று நிறைவுள்ளவராகின்றார். விண்ணகத்தந்தை மட்டுமே நிறைவுள்ளவர்கள். அப்படிப்பட்டவரைப் போன்று ஒருவர் நிறைவுள்ளவராக வேண்டுமெனில், அவர் பகைவர்மீதும் அன்பு கூர்வது கட்டாயம்.

சிந்தனை



வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்றிருக்கும் இவ்வுலகில், வன்முறைக்கு அன்பு ஒன்றே தீர்வு என்று சொல்லும் இயேசுவின் புதிய நெறி வாழ்வாக்கப்பட வேண்டிய ஒரு உன்னதமான நெறி. ஆகையால், நாம் பகைவர்மீது அன்புகூர்வோம்; தீமை செய்தவருக்கு நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!