Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   15  மார்ச் 2019  
            தவக்காலம் முதலாம் வாரம் வெள்ளி - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்?

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28

ஆண்டவர் கூறுவது: தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார்.

அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்பட மாட்டா. அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர். உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து, பொல்லாரைப் போல் வெறுக்கத்தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ? அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானது எதுவும் நினைக்கப்படமாட்டாது. அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும் செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர்.

ஆயினும், 'தலைவரின் வழி செம்மையானதாக இல்லை' என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகள் அன்றோ நேர்மையற்றவை! நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் தம் உயிரை அவர்கள் காத்துக்கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:130: 1-2. 3-4. 5-6ac. 7-8 (பல்லவி: 3)
=================================================================================
   பல்லவி: நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி

3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி

5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். 6யஉ விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. பல்லவி

7 இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எசே 18: 31

எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும் புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர்.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் போய் முதலில் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்லுகிறேன்:

"கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ 'முட்டாளே' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; 'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச்செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

உறவு, நல்லுரவு இறைவன் விரும்புவது நல்லுரவையே.
உறவு ஓப்புக்கு இருக்கலாம்.
நல்லுரவு என்று சொல்லும் போது, அது ஓப்புக்கு அல்ல, மாறாக ஓப்புரவான உறவாகத்தான் இருக்க முடியும்.
இந்த நல்லுரவிலே நடிப்பில்லை, காட்டிக் கொடுக்கும் தன்மையில்லை, முதுகில் குத்தும் மறைமுக எண்ணமில்லை, முகதுதியில்லை இது போன்ற பலவும் இல்லாத உறவே நல்லுருவாக முடியும்.
இதனையே எற்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் இறைவன்.
யாருடைய அழிவையும் அல்ல, மாறாக எல்லாருடைய வாழ்வையும் விரும்பும் உன்னத உயர்ந்த நோக்கமாகும்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எசேக்கியேல் 18: 21-28

தீயோர் தன் தீய வழியிலிருந்து விலகி, நேரிய வழியில் நடந்தால் வாழ்வது உறுதி

நிகழ்வு

நகரில் பிரபல பிக்பாக்கெட் திருடன் ஒருவன் இருந்தான். அவன் சிறுசிறு திருட்டு வேலைகள் செய்துவிட்டு அடிக்கடி சிறைக்குச் சென்றுவந்தான். ஒருநாள் அவனுடைய வழக்கை விசாரித்த நீதிபதி, "இப்படி அடிக்கடித் திருடிவிட்டு சிறைக்கு வருகிறாயே... உனக்கெல்லாம் உழைத்து உண்ணவேண்டும் என்ற எண்ணமேவராதா?" என்றார். பதிலுக்கு அவன், "இப்படி ஒரே மாதிரியான தண்டனையை எனக்குக் கொடுக்கிறீர்களே... வேறெந்தத் தண்டனையும் கொடுக்க சட்டத்தில் இடமில்லையா?" என்றான். அவன் இவ்வாறு சொன்னது நீதிபதிக்கு ஏதோ மாதிரி இருந்தது.

உடனே அவர் அவனை சிறைக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு, அவனுக்குப் பொறுப்பாக இருந்த சிறை அதிகாரியைக் கூப்பிட்டு, ஒருசில வார்த்தைகள் பேசி அனுப்பினார். மறுநாள் சிறைஅதிகாரி அந்த பிரபல பிக்பாக்கெட் திருடனைக் கூப்பிட்டு, "சிறையில் இனிமேல் நீ உழைத்தால்தான் உணவு கிடைக்கும்... உனக்கு ஒருநாள் கூலியாக இருநூறு ரூபாய் கொடுக்கப்படும். அதைக் கொண்டுதான் நீ டீ, டிபன், சாப்பாடு என எல்லாவற்றையும் சாப்பிட்டுக்கொள்ளவேண்டும். ஒருவேளை நீ உழைக்காமல் இருந்தால் அன்றைக்குப் பட்டினிதான்" என்றார். அவனும் அதற்குச் சரியென்று ஒத்துக்கொண்டான். பின்னர் அவனை அங்கிருந்து அனுப்பிவிட்டு, அவனோடு திருட்டுக் குற்றத்தில் கைதான மற்ற ஒன்பது பேரைக் கூப்பிட்டு சிறையதிகாரி பேசத் தொடங்கினார்;

"நாளையிலிருந்து இந்த பிக்பாக்கெட் திருடனைப் பின்தொடர்வது உங்களுடைய வேலை. இவன் எக்காரணத்தைக் கொண்டும் இவனுக்குக் கொடுக்கப்படும் இருநூறு ரூபாயைக் கொண்டு சாப்பாடு வாங்கி உண்டுவிடக்கூடாது. ஒருவேளை இவன் தனக்குக் கொடுக்கப்படும் கூலியைக் கொண்டு சாப்பாடு வாங்கி உண்டானெனில், உங்களுக்குச் சாப்பாடு கிடைக்காது, நீங்கள் பட்டினிதான் கிடக்கவேண்டும்." சிறைஅதிகாரி விதித்த இந்த நிபந்தனைக்கு அந்த ஒன்பதுபேரும் சரியென்று ஒப்புக்கொண்டு பிக்பாக்கெட் திருடனைப் பின்தொடரத் தொடங்கினார்கள்.

அடுத்தநாள் பிக்பாக்கெட் திருடன் தன்னுடைய வேலையெல்லாம் முடித்துவிட்டு சிறை அதிகரியிடமிருந்து இருநூறு ருபாய்க் கூலியை வாங்கிக்கொண்டு, சாப்பாடு வாங்க நின்றான். அப்பொழுது திடிரென்று அங்கு வந்த அந்த ஒன்பது பேரில் ஒருவன் பிக்பாக்கெட் திருடனிடமிருந்து இருநூறு ரூபாயைத் திருடிவிட்டு வேகமாய் ஓடிமறைந்தான். தன்னிடமிருந்த பணம் திருடுபோனதால் அன்றைக்கு அவன் சாப்பாடு வாங்கக் காசில்லாமல், பட்டினி கிடந்தான். இப்படியே இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்தன. இதனால் அவன் உணவு கிடைக்காமல் மிகவும் சோர்ந்துபோனான். அதேநேரத்தில் பணத்தைப் பறிகொடுப்பவர் எப்படி எல்லாம் கஷ்டப்படுவார் என்று உணர்ந்தான். மறுபக்கம் பிக்பாக்கெட் திருடனிடமிருந்து பணத்தை எடுக்க அவனைப் பின்தொடர்ந்த மற்ற ஒன்பது பேரும், 'பணத்தைப் பறிகொடுத்தவன் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறான்' என்பதை உணர்ந்தார்கள்.

ஒருவாரத்தில் அந்தப் பத்துப்பேருடைய தண்டனைக் காலம் முடிவுற்று, சிறையிலிருந்து விடுதலையாகவேண்டிய நாள் வந்தது. அன்றைய நாளில் அவர்களை வந்து சந்தித்த நீதிபதி, "நீங்கள் அனைவரும் திருந்தி நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் இப்படியொரு தண்டனை கொடுத்தேன்" என்றார். இதைக் கேட்ட பிக்பாக்கெட் திருடனும் அவனோடு இருந்த ஒன்பதுபேரும், "ஐயா! பணத்தைப் பறிகொடுப்பவர் எப்படிஎல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதை இந்த ஒருவாரத்தில் உணர்ந்துகொண்டோம்... இனிமேலும் நாங்கள் யாரிடமும் திருடமாட்டோம்" என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

குற்றவாளிகள் மானம்மாறி, நல்லதொரு வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக அந்த நீதிபதி கையாண்ட வித்தியாசமான முறை நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகமும் பாவிகள் மனந்திரும்பி வாழ்வுபெறவேண்டும் என்பதற்காக ஆண்டவர் சொல்கின்ற வழிமுறையைப் பற்றிப் பேசுகின்றது. அது என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

அனைவரும் வாழ்வுபெற விரும்பும் இறைவன்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள், "பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழியினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விரும்பம்" (எசே 18: 23: 2பேது 3:9)) என்கின்றார்.

பொல்லார் அல்லது பாவிகள் மனமாறவேண்டும், இதுதான் இறைவனின் திருவுளம். இதற்கு அவர்கள் ஆண்டவரின் நெறியைக் கைக்கொண்டு நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்து வாழவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வாழ்வடைய முடியும். அதேநேரத்தில் நேர்மையாளர்கள் தங்களுடைய நேர்மையான வழியை விட்டு விலகி, தீய வழியில் நடந்தால், அவர்கள் அழிந்துபோவார்கள். எனவே, ஒருவர் பொல்லாராக இருக்கிறாரோ அல்லது நேர்மையாளராக இருக்கின்றாரோ எப்படி இருந்தாலும் அவர் ஆண்டவரின் நெறியின்படி நடக்க முயற்சி செய்யவேண்டும். அப்பொழுதுதான் அவர் வாழ்வடைய முடியும்.

சிந்தனை

'எல்லா மனிதரும் மீட்டுப் பெறவேண்டும் என்று இறைவன் விரும்புகிறார்' என்பார் (1 திமொ 2: 4) தூய பவுல். எனவே, கடவுளின் இத்தகைய மேலான நோக்கத்தை உணர்ந்து, ஆண்டவரிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 5: 20-26

சினம்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்

நிகழ்வு

ஒரு கிராமத்தில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பெருங்கோபக்காரன். அவனுடைய கோபத்தால் பலரும் பாதிக்கப்பட்டதுண்டு. ஆயினும், அவன் அது குறித்து கவலை கொண்டதில்லை. ஒருமுறை எதிர்பாராமல் ஒரு மகானைச் சந்தித்தான். அவர் முன் அமைதியாக அமர்ந்திருந்தபோது, அவனுக்குத் தன் தவறுகள் ஒவ்வொன்றாய்த் தெரிந்தன. உடனே அவன் அவரிடம், "நான் என் கோபத்துக்காக தண்டிக்கப்படுவேனா?" என்று தயக்கத்துடன் கேட்டான். அதற்கு அந்த மகான் சொன்னார், "இல்லை! உன் கோபத்தாலேயே நீ தண்டிக்கப்படுவாய்."

மகான் சொன்ன வார்த்தைகள் உண்மையிலும் உண்மையான வார்த்தைகள். ஏனெனில் கோபப்படுபவருக்கு வேறு யாரும் தண்டனை தரத் தண்டனை தரத் தேவையில்லை. யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டிக்கொள்வது போல, அவர்களே அவர்களுக்குத் தண்டனைத் தந்து கொள்வார்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய இறைவார்த்தையின் வழியாக இயேசு சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

சினமே கொலைக்குக் காரணம்

நற்செய்தி வாசகத்தில் இயேசு, மலைப்பொழிவின் ஓர் அங்கமாக 'சினம் கொள்ளாதே' என்று போதிக்கின்றார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில், கொலை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. அதனால் கொலை செய்யாதே என்று சொல்லப்பட்டது. இயேசுவோ இப்பழைய ஏற்பாட்டுக் கட்டளைக்கு புதிய விளக்கம் தருகின்றார்.

ஒருவன் ஒருவரைக் கொலை செய்வது என்பது வெளி அடையாளம்தான். ஆனால், அந்த வெளி அடையாளத்திற்குக் காரணமாக இருப்பது அவனுடைய உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் சினம். எப்படி நாள்பட்ட காயம் சீழ்வைத்து பெரிய புண்ணாகின்றதோ, அதுபோன்று உள்ளத்தில் தேக்கி வைக்கப்பட்ட சினம், கொலையில் போய் முடிகின்றது. அதனால்தான் இயேசு, "தன் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்" என்கின்றார். யோவானும் தன்னுடைய முதல் திருமுகத்தில் இதைத்தான், "தன் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள்" என்று கூறுகின்றார் (1யோவா 3:15).

இன்றைய உலகில் நடைபெறும் பெரும்பாலான கொலைக் குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக எது இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்த்தால், இயேசு சொல்லக்கூடிய வார்த்தையின் அர்த்தம் புரியும். சினமே கொலைக்கும் இன்னபிற தீமைகளுக்கு காரணமாக இருப்பதால், ஒருவர் தன்னுடைய வாழ்வில் சினம் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

சினத்திற்கு மருந்து என்ன?

சினம் கொள்வது தண்டனைக்குரிய குற்றம் எனச் சொல்லும் இயேசு, அதற்கான தீர்வினையும் - மருந்தினையும் - எடுத்துச் சொல்கின்றார். அதுதான் நல்லுறவாகும். இந்த உலகில் தீர்க்கமுடியாத அல்லது தீர்வேயில்லாத பிரச்சினை என்று எதுவும் இல்லை. அந்த வகையில் சினத்திற்கும் தீர்வு இருக்கின்றது, அதுதான் இயேசு சொல்லக்கூடிய நல்லுறவாகும். நல்லுறவினால் சினத்தின் மூலம் ஏற்பட்ட காயங்களை ஆற்றமுடியும். அதே நேரத்தில் உள்ளத்தில் சினத்தை வைத்துக்கொண்டு பலி செலுத்தினாலும், அது கடவுளுக்கு உகந்ததாக இருக்காது. அதனால்தான் இயேசு, "நீங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது, உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள்மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின் வந்து காணிக்கையைச் செலுத்துங்கள்" என்கின்றார்.

உள்ளத்தில் வெறுப்பையும் சினத்தையும் வைத்துக்கொண்டு காணிக்கை செலுத்துவோருடைய காணிக்கை எப்படி இறைவனால் ஏற்றுக்கொள்ள முடியும்? ஒருபோதும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதுதான் நிதர்சனம்.

அப்படியானால், அநீதியைக் கண்டு சினம் கொள்ளக்கூடாதா?

இயேசு சினம்கொள்ள வேண்டாம் என்று சொல்கிறாரே, அப்படியானால் கண்முன்னே அநீதி நடந்தாலும் அதைப் பொறுத்துக்கொண்டு போகவேண்டுமா? என்ற கேள்வி எழலாம். அநீதியைக் கண்டு சினம் கொள்ளவேண்டியது கட்டாயம். இயேசு எருசலேம் திருக்கோவிலில் வாணிபம் செய்துவந்தவர்களை சினம்கொண்டு சாட்டையால் அடித்து விரட்டினார். இது இயேசு சொல்கின்ற 'சினத்திற்குள்' வராது. இதற்குப் பெயர் அறச்சீற்றம். இத்தகைய அறச்சீற்றம் அல்லது அறம் சார்ந்த சினம் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் வரவேண்டும். எதற்கெடுத்தாலும் அநியாயத்திற்குத்தான் சினம் வரக்கூடாது. இந்தத் தெளிவினை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சிந்தனை

'சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்' என்பார் தூய பவுல் ( எபே 4:26). சினம் கொள்வதைத் தவிர்க்க முடியாது என்றாலும், உடனடியாக அது தணிவது நல்லது. ஆகவே, நாம் இயேசுவைப் போன்று அறச்சீற்றம் கொண்டு வாழ்வோம். அதே நேரத்தில் அடிக்கடி அநியாயத்திற்கு - சினம் கொள்வதைத் தவிர்த்து, பிறரோடு நல்லுறவோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி

ஆஸ்திரியாவில் கென்னி என்ற ஒரு செவிலித்தாய் (Nurse) இருந்தார். அவர் ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

எப்போதும் அவர் மிகவும் பொறுமையாக, புறத்தூண்டல்களால் பாதிக்கப்படாமல், சினம்கொள்ளாமல் பணியாற்றிக் கொண்டிருந்தார். இதனைக் கவனித்த அவருடைய நெருங்கிய தோழி அவரிடம், "இவ்வளவு பொறுமையாகவும், சினம்கொள்ளாமலும் பணியாற்றுவதன் இரகசியம் என்ன?" என்று கேட்டார். அதற்கு அவர், "என்னுடைய சிறுவயதிலே தாய் எனக்கொரு பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறார்கள். அந்தப் பாடம்தான், நான் சினம் கொள்ளாமல் இருப்பதற்கான உந்து சக்தியாக இருக்கின்றது. அந்தப் பாடம் இதுதான் "எப்போது நீ சினம்கொள்கிறாயோ அப்போது மற்றவர்கள் உன்மீது வெற்றிகொள்ள நீ அனுமதித்துவிடுகிறாய்".

இதைக் கேட்க அவருடைய தோழி, அவரை வெகுவாகப் பாராட்டியதுடன், தானும் அதைக் கடைப்பிடிப்பதாக உறுதிபூண்டார்.

"கோபம் அரக்க மனத்தின் ஆயுதம், அதற்கு அழிக்கத்தான் தெரியும்; கோபம் வாழ்க்கையைச் சிக்கலாக்கும், உறவுகளைச் சிதைக்கும், அமைதியைக் குலைக்கும், ஆயுளைக் குறைக்கும்" என்பார் புத்தர்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு புதிய நெறியைப் போதிக்கின்றார். அதுதான் சினம் கொள்ளாது இருத்தல் ஆகும். இயேசு கூறுகிறார், "கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்" என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; "தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ "முட்டாளே" என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; "அறிவிலியே" என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்" என்று.

ஆகவே சினம்கொள்கிறவனுக்கு எதிரி என்பவன் வேறு எவரும் இல்லை, அவனுடைய சினமே அவனுக்கு எதிரியாக மாறி, அழிவைத் தந்துவிடுகிறது என்ற உண்மையை நாம் ஆழமாக உணர்ந்துகொண்டு வாழ்வது மிகச் சிறந்த ஒன்றாகும்.

"இயலாமையின் வெளிப்பாடுதான் கோபம், எந்தக் கோபமும் நம் முட்டாள்தனத்தில் பிறந்து, கழிவிரக்கத்தில் முடிகிறது" என்பார் வள்ளலார். அது முற்றிலும் உண்மை. பல நேரங்களில் நம்முடைய கோபம் நம்மால் ஒன்றும் முடியாதபோதுதான் உண்டாகின்றது அல்லது நாம் நினைத்தற்கு ஏற்ப நடக்காதபோதுதான் ஏற்படுகின்றது. இதனால் பாதிக்கப்படுவோர் வேறு யாரும் கிடையாது, நாம் மட்டும்தான்.

இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் படிக்கின்றோம், "தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு மனம்மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும், நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர் வாழ்வது உறுதி" என்று. இங்கே தீயவர்கள் என்பதை சினம்கொள்கிறவர்கள் என்றுகூட பொருள் எடுத்துக்கொள்ளலாம்.

எப்போதும், எதற்கெடுத்தாலும் சினம் கொள்கிறவர்கள் தங்களுடைய தவற்றை உணர்ந்து, மனம் மாறி ஆண்டவரிடம் திரும்பி வந்தால் அவர்கள் நிச்சயம் வாழ்வு பெறுவார்கள் என்பது இறைவன் அளிக்கும் வாக்குதியாக இருக்கின்றது.

ஆகவே சினம் என்னும் கொடிய நோயை நம்முடைய வாழ்விலிருந்து அகற்றிவிடுவோம். தூய பவுல் எபேசியயருக்கு எழுதிய திருமுகம் 4:26 ல் வாசிப்பதுபோல பொழுது சாய்வதற்கு நம்முடைய சினம் தணியட்டும், நம்முடைய வாழ்வில் இருக்கும் எல்லா தீவினைகளையும் அகலட்டும். அதன்வழியாக ஆண்டவரின் அருள் நம்மில் நிறைவாய் தங்கட்டும்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!