Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   14  மார்ச் 2019  
            தவக்காலம் 1ம் வாரம் வியாழக்கிழமை- 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
ஆண்டவரே, உமது கைவன்மையால் எங்களைக் காப்பாற்றும்;

எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி) 4: 17

சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை அவர் பின்வருமாறு மன்றாடினார். "என் ஆண்டவரே, நீர் மட்டுமே எங்கள் மன்னர். ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்; ஏனெனில், நான் என் உயிரைப் பணயம் வைத்துள்ளேன். ஆண்டவரே, நீர் எல்லா இனங்களிலிருந்தும் இஸ்ரயேலைத் தெரிந்தெடுத்தீர் என்றும் அவர்களின் மூதாதையர் அனைவரிடையிலிருந்தும் எங்கள் முன்னோரை என்றென்றைக்கும் உம் உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்தீர் என்றும், நீர் அவர்களுக்கு வாக்களித்ததையெல்லாம் நிறைவேற்றினீர் என்றும், நான் பிறந்த நாள்தொட்டு என் குலத்தாரும் குடும்பத்தாரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆண்டவரே, எங்களை நினைவுகூரும்; எங்கள் துன்ப வேளையில் உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தும். தெய்வங்களுக்கெல்லாம் மன்னரே, அரசுகள் அனைத்துக்கும் ஆண்டவரே, எனக்குத் துணிவைத் தாரும். சிங்கத்துக்குமுன் நாவன்மையுடன் பேசும் வரத்தை எனக்கு வழங்கும்; எங்களுக்கு எதிராகப் போரிடுபவனை மன்னர் வெறுக்கச் செய்யும்; இதனால் அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அழியச் செய்யும். ஆண்டவரே, உமது கைவன்மையால் எங்களைக் காப்பாற்றும்; ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:138: 1-2. 2,3. 7-8)
=================================================================================
  ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.

1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2ய உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்.
-பல்லவி

2bஉ உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.
-பல்லவி

7உ உமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (7: 7-12)

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா! ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  எஸ்தர் 4: 17

தன் அடியாருக்கு இறைவன் அருளும் உதவி

நிகழ்வு

ஒரு கிராமத்தில் செல்வம் என்றொரு மனிதர் இருந்தார். அவர் தன்னுடைய பெயருக்கு ஏற்ப மிகப்பெரிய செல்வந்தராய் இருந்தார். அவர் தன்னுடைய மனைவி மற்றும் திருமண வயதில் இருந்த தனது அன்பு மகளோடு வாழ்ந்துவந்தார்; தன்னிடம் உதவி என்று வந்தோருக்கு அவர் வாரி வாரி வழங்கிவந்தார். இதனாலேயே அவரிடமிருந்த செல்வமெல்லாம் குறைந்து அவர் வறுமையில் வாடவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும் அவர் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், கடன் வாங்கியாவது தன்னை அண்டிவந்தவர்களுக்கு உதவி செய்துவந்தார்.

இந்நிலையில் செல்வம் இருந்த அதே ஊரில் இருந்த பணக்காரர் ஒருவர் அவரிடம் வந்து, "அவகசரமாக எனக்கு நூறு பவுன் நகை வேண்டும்" என்றார். "நூறு பவுனா! அதற்கு நான் எங்கு போவேன்... முன்புபோல் என்னிடம் பணமோ, நகையோ எதுவும் இல்லை... என்னிடம் இருந்ததையெல்லாம் என்னை அண்டி வந்த மக்களுக்கு வாரிக் கொடுத்துவிட்டேன்... இப்பொழுது நான் உணவிற்கே மிகவும் கஷ்டப்படுகிறேன். இப்படிப்பட்ட நிலையில் என்னிடம் நீங்கள் நூறு பவுன் நகை கேட்டால் நான் எங்கு போவேன்... இவற்றுக்கு மத்தியில் என் மகளுடைய திருமண காரியம் வேறு நெருங்கிவந்துகொண்டிருக்கின்றது. அதற்கு நான் என்ன செய்யப்போகிறேனோ" என்று வேதனை கலந்த குரலில் சொன்னார் செல்வம்.

"நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தர்... உங்களிடம் நூறு பவுன் நகையில்லையா?... என்னை ஏமாற்றத்தானே இப்படிச் சொல்கிறீர்கள்?... இருங்கள், இன்றிரவு உங்களுடைய வீட்டிற்கு கொள்ளக்கூட்டத் தலைவனை அனுப்பி வைத்து, உங்களிடம் இருப்பதையெல்லாம் அள்ளிக்கொண்டு வரச் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு வேகவேகமாக வெளியேறினார் அந்தப் பணக்காரர். பணக்காரர் வெளியே சென்றதிலிருந்து செல்வத்திற்கு ஒரே பதற்றமாக இருந்தது. "இன்றிரவு கொள்ளையர் கூட்டத்தலைவன் வீட்டுக்கு வருவான் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாரே... இரவில் அவன் வந்து என்னவெல்லாம் செய்யப் போகிறானோ" என்று பயந்துகொண்டே இருந்தார் செல்வம்.

இரவு வந்தது. செல்வம் தன் மனைவியோடு கட்டிலில் படுத்துக்கொண்டு, தன்னுடைய உள்ளக் குமுறலை மனைவியிடம் எடுத்துரைக்கத் தொடங்கினார்: "நமது குடும்பம் முன்புபோல் இல்லை... அன்றாடம் சாப்பாட்டிற்கே பெரிய திண்டாட்டமாக இருக்கின்றது... போதாகுறைக்கு மகளின் திருமணம் வேறு நெருங்கி வருகின்றது. இதற்கிடையில் இந்தப் பணக்காரர் நம்முடைய வீட்டிற்கு ஊரில் இருக்கின்ற கொள்ளைக்கூட்டத் தலைவனை இங்கு அனுப்புவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்... அவன் வந்து என்ன செய்யப் போகிறானோ? என்று நினைத்துத்தான் ஒரே பதற்றமாக இருக்கின்றது." செல்வம் சொன்ன எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த அவருடைய மனைவி, "கவலைப்படாதீர்கள்! நாம் வணங்குகின்ற கடவுள் நம்மை ஒருபோதும் கைவிட்டுவிடமாட்டார்" என்று தேற்றினார்.

இவையெல்லாவற்றையும் செல்வத்தின் வீட்டில் திருடுவதற்காக அவருடைய வீட்டு மாடியில் ஒளிந்துகொண்டிருந்த கொள்ளைக் கூட்டத் தலைவன் கேட்டு, அவர்மீதும் அவருடைய குடும்பத்தின்மீதும் இரக்கம்கொண்டு, நேராக பணக்காரரின் வீட்டிற்குச் சென்று, அங்கிருந்த பல ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துவந்து, அதை செல்வத்தின் வீட்டு வாயிலுக்கு முன்பாகப் போட்டுவிட்டுச் சென்றான். கூடவே அதில் ஒரு காகிதத்தை விட்டுச் சென்றான். அந்தக் காகிதத்தில், "உங்கள் நண்பர் ஒருவருடைய அன்புப் பரிசு, தயவுசெய்து பெற்றுக்கொள்ளுநாள்" என்று குறிப்பிடப்பட்டிந்தது. இதைப் பார்த்துவிட்டு செல்வமும் அவருடைய மனைவியும், "கடவுள்தான் இந்த இக்கட்டான நேரத்தில் இப்படியோர் உதவி செய்திருக்கிறார். உண்மையில் கடவுள் மிகப்பெரியவர்" என்று கடவுளைப் போற்றிப் புகழத் தொடங்கினார்.

கடவுள் தன்னை நம்பிவாழும் அடியவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை இந்நிகழ்வின் வழியாகன் ஆம் அறிந்துகொள்ளலாம்.

நம்பினோரைக் கைவிடாத இறைவன்

இன்றைய முதல் வாசகத்தில் எஸ்தர் அரசி, எதிரியிடமிருந்து இஸ்ரயேல் மக்களை/ யூதர்களை காப்பாற்றவேண்டும் என்று இறைவனை நோக்கி மன்றாடுகிறார். எஸ்தரை அகஸ்வர் மணமுடித்திருந்தான். இந்த அகஸ்வருக்குக் கீழ் வேலைபார்த்து வந்த ஆமான், எஸ்தரின் மாமா மொர்தக்காயின் செயலால் மிகவும் பாதிக்கப்பட்டு, அரசரின் உதவியோடு ஒட்டுமொத்த யூதர்களையும் கொன்றொழிக்கத் திட்டம் தீட்டினான். இதை அறிந்த எஸ்தர் அரசி, கடவுளிடம் தன் மக்களை விட்டுவிக்குமாறு நோன்பிருந்து மன்றாடுகின்றார். கடவுளும் அவருடைய மன்றாட்டைக் கேட்டு, இஸ்ரயேல் மக்களை ஆமானின் கையிலிருந்து விடுவிக்கின்றார். ஆகையால், யாராரெல்லாம் கடவுளிடம் மிக உருக்கமாக மன்றாடுகின்றார்களோ அவர்களுடைய மான்றாட்டுக் கேட்கப்படும் என்பது உறுதி.

சிந்தனை

"நான் கடவுளை நோக்கி மன்றாடுவேன்; ஆண்டவரும் என்னை மீட்டருள்வார்" (திபா 55:16). என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகவே, துன்ப நேரத்தில் - எல்லா நேரத்திலும் - எஸ்தர் அரசியைப் போன்று இறைவனை நோக்கி மன்றாடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 7: 7-12

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்

நிகழ்வு

ஜியார்ஜியாவில் நீதிபதியாக இருந்தவர் கெர்மிட் பிராட் ஃபோர்டு என்பவர். அவர் ஒரு நேர்மையான நீதிபதி மட்டுமல்ல, பக்திநெறியில் சிறந்து விளங்கிய மனிதரும்கூட. பலர் அவரிடத்தில் தங்களுக்காக வேண்டச் சொல்லிக் கேட்பார்கள். அவரும் அவர்களுக்காக இறைவனிடம் வேண்ட அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறும்.

ஒருநாள் அவருக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய ஒரு பெண்மணி, தன்னுடைய 18 வயது பெண்குழந்தைக்கு மூலையில் கட்டி இருப்பதாகவும் அந்தக் கட்டியை நீக்க மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சை நல்லமுறையில் நடைபெற வேண்டும் என்பதற்காகவும் அவரை இறைவனிடம் வேண்டக் கேட்டுக்கொண்டார். அவரும் அந்தப் பெண்மணியின் குழந்தைக்காக வேண்டினார். கடைசியில் அந்தப் பெண்மணியின் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முயன்ற மருத்துவர்கள், தலையில் கட்டி இல்லாதது கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இதற்காக அந்தப் பெண்மணி இன்னொரு நாளில் கெர்மிட் பிராட் ஃபோர்டை வந்து சந்தித்து, தன்னுடைய நன்றியைத் தெரிவித்தார்.

நற்செய்தியில் இயேசு, "கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்" என்கின்றார். இவ்வார்த்தைகளை இயேசு ஒரு பேச்சுக்குச் (!) சொல்லிவிடவில்லை... அர்த்தத்தோடுதான் சொல்லியிருக்கின்றார் என்பதற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டுதான் மேலே இடம்பெறும் நிகழ்வு.

பின்னணி என்ன?

நற்செய்தி வாசகத்தில் இயேசு, "கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் ..." என்கின்றார். அவர் பேசிய இவ்வார்த்தைகளுக்கும் இதற்கு முந்தைய பகுதிக்கும் சற்றும் தொடர்பில்லையே என்று நினைக்கலாம். ஏனென்றால், இதற்கு முந்தைய பகுதியில் இயேசு, தீர்ப்பிடாமல் இருப்பது குறித்துப் பேசியிருப்பார். அப்படியிருக்கும்போது இறைவனிடம் வேண்டுவது குறித்து வருகின்ற இப்பகுதி முந்தைய பகுதிக்குச் சிறிதும் தொடர்பில்லாமல் இருக்கின்றதே என்ற எண்ணம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

இது குறித்து விவிலிய அறிஞர்கள் சொல்கின்றபோது, மனிதர்கள் யாவரும் முன்சார்பு எண்ணத்தோடு அடுத்தவரைத் தீர்ப்பிடுகிறார்கள். அப்படியிருக்கும்போது ஒருவரைக் குறித்து முழுமையாக அறிந்துகொள்வதற்கு இறைவனிடம் வேண்டுவது, துணையாக இருக்கும் என்பதால் மத்தேயு நற்செய்தியாளர் இறைவேண்டல் குறித்து வருகின்ற இப்பகுதியை தீர்ப்பிடாதே என்ற பகுதிக்கு அடுத்ததாக வைத்ததாகச் சொல்வார்கள். இது உண்மையென்று நிரூபிக்கும் வகையில் விவிலியத்தில் வருகின்ற ஒருசில பகுதிகள் வருகின்றன. நாம் அவற்றைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

தெளிவுபெற இறைவனிடம் வேண்டுவது நல்லது

அரசர்கள் முதல் நூல், மூன்றாம் அதிகாரத்தில் இடம்பெறும் ஒரு நிகழ்வு. இங்கு சாலமோன் அரசர் ஆண்டவராகிய கடவுளிடம், "மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்" என்று வேண்டுவார் (1அர 3:9). கடவுளும் அவர் வேண்டியதுபோன்றே ஞானம் நிறைந்த உள்ளத்தை அருள்வார். திருத்தூதர்கள் தூய யாக்கோபு எழுதிய திருமுகத்திலோ, "உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும். அப்போது அவரும் ஞானத்தைக் கொடுப்பார்" (யாக் 1:5) என்று இடம்பெறுகின்றது. இந்த இரண்டு இறைவார்த்தைப் பகுதிகளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்க்கும்போது, குறைவான ஞானம் கொண்டிருக்கும் ஒருவர், இறைவனிடம் நிறைவான ஞானத்தை அருளுமாறு கேட்டால், அவர் நிச்சயம் தருவார் என்பது உண்மையாகின்றது.

கேட்பதைக் கொடுக்கும் இறைவன்

இறைவன் தன்னிடம் கேட்பவருக்குக் கொடுப்பார் என்பதை இயேசு இப்பகுதியில் மிகவும் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்கிறார். அதற்காக அவர் பயன்படுத்தும் உருவகம் தான் தந்தை மகன். இவ்வுலகில் உள்ள எந்தத் தந்தையும் பிள்ளை அப்பம் கேட்கின்றபோது கல்லையோ, மீனைக் கேட்கின்றபோது பாம்பையோ தருவது கிடையாது. பிள்ளை கேட்பதை எப்படியாவது கொடுத்துவிடவேண்டும் என்பதாகத்தான் ஒரு தந்தையும் தன்னுடைய உடல், பொருள், ஆவி அத்தனையும் தந்துகொண்டிருக்கிறார்கள். இப்படி மனிதர்களே தங்களுடைய பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்கு முன்வருகின்றபோது, விண்ணகத்தந்தை தன்னிடம் கேட்போருக்குத் தராமல் போவாரா? என்பதுதான் இயேசுவின் கேள்வியாக இருக்கின்றது.

ஆகையால், ஒருவர் இறைவனிடம் ஞானத்தையோ, உடல் நலத்தையோ வேறு எதையோ கேட்டால் அதைக் கட்டாயம் தருவார் என்பதுதான் நிதர்சனம். ஆனால், அது இறைவனின் திருவுளத்திற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் ஒருவர் இறைவனிடம் கேட்பது கிடைக்கும், ஏன் கேட்பதற்கு அதிகமாகக்கூடக் கிடைக்கும்.

சிந்தனை

தன்னிடம் கேட்போருக்குக் கொடகைகளை வாரி வாரி வழங்கும் இறைவனிடம் நாம் மனந்தளராது கேட்போம், கேட்டுக் கொண்டே இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
கேளுங்கள் கொடுக்கப்படும்

அமெரிக்காவின் முதல் அதிபராக இருந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன் என்பவர். அவர் அமெரிக்க அதிபராக இருப்பதற்கு முன்பாக அமெரிக்க இராணுவத்தின் படைத்தளபதியாக இருந்தார்.

ஒருமுறை அவர் எதிரி நாட்டோடு போர்தொடுக்க வேண்டிய ஒரு கட்டாயச் சூழல் ஏற்பட்டது. அதனால் அவர் தன்னுடைய படைவீரர்களுடன் எதிரி நாட்டின்மீது படையெடுத்துச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் போகிற வழியிலே ஓர் ஆறு வந்தது. அந்த ஆற்றை இரவுக்குள் எப்படியாவது கடந்துவிட வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது.

உடனே ஜார்ஜ் வாஷிங்டன் ஓரிடத்தில் முழந்தாள் படியிட்டு, உருக்கமாக விடுதலைப் பயண நூல் 14 ஆம் அதிகாரத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். "கடவுளே இஸ்ரயேல் மக்கள் எப்படி செங்கடலை கடந்து சென்றார்களோ, அதுபோன்று நாங்களும் இந்த ஆற்றைக் கடந்து செல்லவேண்டும்" என்று அவர் இறைவனிடம் உருக்கமாக வேண்டினார். அவர் தன்னுடன் வந்த படைவீர்களையும் இறைவனைப் பார்த்து வேண்டச் சொன்னார்.

என்ன ஆச்சரியம்! அப்போது கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. ஆற்றில் வேகமாகப் போய்க்கொண்டிருந்த வெள்ளமானது சிறுது நேரத்தில் உருகி பனிக்கட்டியானது. உடனே ஜார்ஜ் வாஷிங்டன் "ஆற்றைக் கடப்பதற்கு இதுதான் சரியான தருணம்" என்று சொல்லி வேகமாக மறுகரைக்குச் சென்றார்.

அடுத்த நாள் காலை வேளையில் சூரியன் மெல்ல எழுந்துவர, ஆற்றில் வெள்ளமானது கரைபுரண்டு ஓடியது. இதைப் பார்த்த ஜார்ஜ் வாஷிங்டனும், மற்ற படைவீரர்களும் கடவுள் தங்களுக்குச் செய்த அதிசயத்தை எண்ணி அவரைப் போற்றினர். அத்தோடு அவர்கள் எதிரி நாட்டோடு போர்தொடுத்து எளிதாக வெற்றியும் பெற்றார்கள்.

கடவுளிடம் நம்பிக்கையோடு கேட்கும்போது/ வேண்டும்போது அதனை நிச்சயமாகப் பெற்றுக்கொள்வோம் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கிறது.

இன்றைய இறைவார்த்தையானது இறைவனிடம் நம்பிக்கையோடு கேட்கிறபோது அதனை பெற்றுக்கொள்கிறோம் என்ற சிந்தனையைத் தருகின்றது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்" என்கிறார். அதற்கு எடுத்துக்காட்டாக முதல்வாசகத்தில் இஸ்ரயேல் மக்களின் வெற்றியைப் பார்க்கிறோம்.

முதல் வாசகத்தில் எஸ்தர் அரசி இஸ்ரயேல் மக்களை எதிரிகளின் கையிலிருந்து விடுவிக்குமாறு இறைவனிடம் உருக்கமாக மன்றாடுகிறார். இறுதியில் இறைவனின் அருளால் எதிரியின் படை தோற்க்கடிக்கப்பட்டு, இஸ்ரயேல் மக்கள் வெற்றியைப் பெறுகிறார்கள். ஆக நாம் இறைவனிடம் (நம்பிக்கையோடு) கேட்கிறபோது அதனைப் பெற்றுக்கொள்கிறோம் என்பது நாம் அறிந்துகொள்ளக்கூடிய ஆழமான உண்மையாக இருக்கின்றது.

மாற்கு நற்செய்தி 11:24 ல் இயேசு கூறுவார், "ஆகவே நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ, அவற்றையெல்லாம் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்" என்று. எனவே நாம் இறைவனிடம் ஜெபிக்கும் நம்பிக்கையோடு ஜெபிப்போம்.

பல நேரங்களில் நாம் கேட்டது கிடைக்கலாம். அல்லது கிடைக்காமலும் போகலாம். இல்லையென்றால் கேட்டதைவிட அதிகமாகக் கிடைக்கலாம். ஒரு சில நேரங்களில் நாம் கேட்டது தாமதமாகக்கூடக் கிடைக்கலாம். அத்தகைய தருணங்களில் நாம் மனம் தளர்ந்துபோகக்கூடாது. ஏனென்றால் நமது விண்ணத் தந்தை பிள்ளைகளாகிய நமக்கு எப்போது, என்ன கொடுக்கலாம் என அறிந்துவைத்திருப்பார். ஆதலால் நாம் இறைவனிடம் நம்பிக்கையோடும் ஜெபிப்போம். அதன்பிறகு நடப்பதை இறைத் திருவுளம் என ஏற்றுக்கொள்வோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
'இயேசு, 'கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்' என்றார்'' (மத்தேயு 7:7)

மனிதர் தம் தேவைகளை நிறைவுசெய்ய எவ்வளவுதான் முயன்றாலும் அதில் முழுமையாக வெற்றிபெறுவதில்லை. மனித வாழ்வின் நிறைவு அந்த வாழ்வையும் தாண்டிச் செல்கின்ற ஒன்றாகவே இருக்கிறது. அந்த நிறைவை நமக்குக் கடவுள் ஒருவரே கொடையாக வழங்க முடியும். அதே நேரத்தில் நம் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவுசெய்யவும் நாம் கடவுளின் உதவியை நாட வேண்டும் என்றும், அவ்வாறு நாம் கடவுளை நாடிச் செல்லும்போது அவர் நமக்கு உதவுவார் என்றும் இயேசு கற்பிக்கிறார். நாம் கேட்பதையெல்லாம் கடவுள் தருவார் என்பதற்குப் பதிலாக நமக்குத் தேவை எது என கடவுள் கருதுகிறாரோ அதை நமக்குத் தருவார் என்பது பொருத்தமாகும். வீட்டில் பிள்ளைகள் தாம் விரும்பும் பொருள்களைத் தம் பெற்றோரிடம் கேட்டுப் பெறுவார்கள். இயேசுவுக்கும் அந்த வாழ்வு அனுபவம் இருந்தது. எனவே அவர் நம் வானகத் தந்தையாகிய கடவுளை, நாம் அவருடைய பிள்ளைகள் என்னும் முறையில் அணுகிச் சென்று நம் தேவைகளை அவரிடம் எடுத்துக் கூறினால் நமக்கு எது நன்மையோ அதைக் கடவுள் செய்யாமல் இருக்கமாட்டார் என்று கற்பித்தார்.

கடவுளின் பிள்ளைகளாக நாம் இயேசுவின் வழியாகப் புதுப்பிறப்பு அடைந்துள்ளோம். எனவே உரிமையோடு நாம் கடவுளை நம் தந்தை என அழைக்கமுடியும், அவ்வாறே அழைக்கவும் வேண்டும். அப்போது தந்தைக்குரிய பாசத்தோடு கடவுள் நம் தேவைகளை நிறைவுசெய்வார். அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான்: நாம் அவருடைய அன்புப் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்றால் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப நம் வாழ்வை அமைத்திட வேண்டும்; சகோதர அன்போடு எல்லா மனிதரையும் அணைத்துப் பேணிட வேண்டும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!