|
|
12
மார்ச் 2019 |
|
|
தவக்காலம் முதலாம் வாரம் செவ்வாய்- 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11
ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன;
அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு
விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத்
திரும்பிச் செல்வதில்லை.
அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும்.
அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ
அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி
வருவதில்லை.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா: 34: 3-4. 5-6. 15-16.
17-18 (பல்லவி: 17b)
=================================================================================
பல்லவி: நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும்
விடுவிக்கின்றார்.
3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க
மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்;
அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார். பல்லவி
5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள்
முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்;
ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும்
அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி
15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது
மன்றாட்டைக் கேட்கின்றன. 16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு
எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச்
செய்வார். பல்லவி
17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;
அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். 18 உடைந்த
உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை
அவர் காப்பாற்றுகின்றார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 4b
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும்
வாழ்வர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம்
வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்;
மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல்
கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
நீங்கள் அவர்களைப்போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள்
கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: "விண்ணுலகிலிருக்கிற
எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி
வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும்
நிறைவேறுக!
இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக்
குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை
மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து
எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும்
உமக்கே. ஆமென்.''
மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால்
உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை
நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை
மன்னிக்க மாட்டார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
முதல் வாசகம்
என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11
வல்லமை நிறைந்த இறைவார்த்தை
நிகழ்வு
பீட்டர் வி. டெய்சன் (Peter V. Deison) என்ற எழுத்தாளர் சொல்லக்கூடிய
ஒரு நிகழ்வு. முன்பொரு காலத்தில் ராமத் (Ramad) என்று ஒருவன்
இருந்தான். அவன் ஒரு பெரிய கொள்ளக்கூட்டத்திற்குத் தலைவன். அவன்
ஒவ்வோர் ஊராகக் குறிவைத்து, இரவில் மக்கள் அயர்ந்து
தூங்குகின்ற வேளையில், தன்னுடைய கூட்டாளிகளோடு சேர்ந்து வீடுகளில்
புகுந்து சூறையாடி வந்தான். அவனைக் குறித்துக் கேள்விப்பட்ட காவல்துறையினர்,
"அவனை உயிரோடு பிடித்தோ அல்லது அவன் இருக்கக்கூடிய இடத்தைக்
காட்டியோ குடுப்பவருக்கு தக்க சன்மானம் கொடுக்கப்படும்" என்று
அறிவித்திருந்தது. காவல்துறை இப்படியோர் அறிவிப்பை விடுத்தபோதும்,
ராமத் தன் கைவரிசையைத் தொடர்ந்து காட்டி வந்தான்.
ஒருநாள் அவன் ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களையெல்லாம்
சூறையாடிக்கொண்டு இருக்கும்போது, கறுப்பு நிறத்தில் ஒரு புத்தகம்
அவனுடைய கண்ணில் பட்டது. அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.
அது மட்டுமல்லாமல், அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் கஞ்சாவைச்
சுருட்டி வைத்துப் புகைப்பதற்கும் வசதியாக இருக்கும் என்று அவன்
தூக்கி வீசாமல், தன்னோடு வைத்துக்கொண்டான்.
இதற்குப் பின்பு அவன் தன்னுடைய இரவுணவிற்குப் பின், கையோடு எடுத்து
வந்திருந்த புத்த்தகத்தின் ஒவ்வொரு பக்கமாகக் கிழித்து, அதனுள்
கஞ்சாவை வைத்துப் புகைக்கத் தொடங்கினான். அந்த சுவை அவனுக்கு
மிகவும் புதிதாக இருந்தது. இப்படியே பல நாட்கள்
சென்றுகொண்டிருந்தன. ஒருநாள் அவன் வழக்கம்போல் அந்தப் புத்தகத்தின்
பக்கத்தைக் கிழித்து, அதனுள் கஞ்சாவை வைத்து இழுக்கும்போது, அந்தப்
புத்தகத்தில் பயன்படுத்தப்பட்ட மொழி, அவருடைய தாய்மொழி என்பதை
உணர்ந்து, வாசிக்கத் தொடங்கினான். அவன் அந்தப் புத்தகத்தை
வாசிக்க வாசிக்க, அது அவனுள் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தத்
தொடங்கியது. இதற்குப் பின் அவன் தன்னுடைய தவற்றை உணர்ந்து, இயேசுவிடம்
மன்னிப்புக் கேட்டான். ஏனெனில், அவன் வாசித்த வந்த புத்தகம்
விவிலியமாகும்.
இதற்குப் பின்பு அவன் தாமாகவே காவல்துறையினரிடம் சென்று, தன்னை
அவர்களிடம் ஒப்படைத்தான். அவர்கள் அவனைச் சிறையில் அடைத்து
வைத்தார்கள். சிறைக்கு வந்தபிறகு ராமத்தின் வாழ்க்கை
முற்றிலுமாக மாறியது. அவன் தான் வாசித்த நற்செய்தியை அங்கிருந்த
சிறைக்கைதிகளுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினான். இதனால் பலரும்
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல், சிறையில்
அவனுடைய நன்னடத்தையைக் கண்ட சிறையதிகாரிகள் அவனுடைய தண்டனைக்
காலத்தைக் குறைத்து, அவனை விடுதலை செய்து அனுப்பினர்.
சிறையிலிருந்து வெளியே வந்த ராமத் புது மணிதனாய் வாழத் தொடங்கினான்.
ஒரு பெரிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவன், இயேசுவின் வார்த்தைகளால்
தொடப்பட்டும் மனம்மாறினால் என்றால், இறைவார்த்தைக்கு எவ்வளவு
வல்லமையும் ஆற்றலும் இருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இன்றைய முதல் வாசகம் இறைவார்த்தைக்கு இருக்கும் வல்லமையையும்
ஆற்றலையும் குறித்துப் பேசுகின்றது. நாம் அதைக் குறித்து இப்போது
சிந்தித்துப் பார்ப்போம்.
மழையாய் பனியாய் வரும் இறைவார்த்தை
இறைவாக்கினர் எசாயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில்,
ஆண்டவராகியக் கடவுள், எப்படி மழையும் பனியும் வானத்திலிருந்து
இறங்கி வந்து, அதற்குண்டான பலனைத் தந்துவிட்டுப் போகின்றதோ, அதுபோன்று
தன்னுடைய வார்த்தையும் எந்த நோக்கத்திற்காக அனுப்பப்பட்டதோ, அதை
நிறைவேற்றாமல் போகாது என்கின்றார்.
உண்மையில் இறைவனின் வார்த்தை நிலத்தில் விதைக்கப்பட்ட ஒரு
விதைக்கு ஒப்பாகும் (லூக் 8:11). ஒருவேளை அந்த நிலம் பலன்கொடுக்காமல்
போகலாம். ஆனால், இறைவனின் வார்த்தை பலன்கொடுக்காமல் போகாது.
மாறாக அது என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் (எசா 40:8)
இறைவார்த்தையோடு நாம் ஒத்துழைக்கவேண்டும்
இறைவார்த்தை என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடியது என்று மேலே
பார்த்தோம். அப்படிப்பட்ட இறைவார்த்தை ஒருவருள் பலன் கொடுக்கவேண்டும்
என்றால், அவர் இறைவார்த்தையோடு ஒத்துழைக்கவேண்டும். 'திறக்காத
மனங்கள் களவாடப்படுவதில்லை' என்பர். அதுபோன்றுதான் ஒருவருள் இறைவார்த்தை
பலன் கொடுக்க வேண்டும் எனில், அவர் இறைவார்த்தை தன்னை ஊடுருவ
அனுமதிக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரிடம்தான் இறைவார்த்தை
மாற்றத்தை ஏற்படுத்தும்.
சிந்தனை
'பச்சிலையோ, களிம்போ அவர்களுக்கு நலம் அளிக்கவில்லை. ஆண்டவருடைய
வார்த்தையே எல்லா மனிதருக்கும் நலமளித்தது' (சாஞா 16:12) என்கின்றது
சாலமோனின் ஞான நூல். ஆகவே, இத்தகைய இறைவார்த்தை நம்முடைய
வாழ்வில் பலன் கொடுக்க நாம் இறைவார்த்தையோடு ஒத்துழைப்போம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
நற்செய்தி வாசகம்
நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15
நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்...
நிகழ்வு
ஒரு சமயம் இளைஞர்கள் சிலர், கடலுக்கு நடுவில் இருந்த ஒரு
தீவுக்குச் செல்வதற்காக கடற்கரையோரமாய் நின்றுகொண்டிருந்த ஒரு
படகோட்டியிடம் வந்து, தங்களுடைய விருப்பத்தைச் சொன்னார்கள்.
அவரோ அவர்கள் சொன்னதைக் கேட்டுவிட்டு, கடற்கரை மணலில் மண்டியிட்டு
இறைவனை வழிபடத் தொடங்கினார்.
அவர் இவ்வாறு செய்வததைப் பார்த்த இளைஞர்கள் "காற்றில்லை... கடல்
அமைதியாக இருக்கிறது... பிறகு எதற்கு இவர் இப்படி
வேண்டிக்கிறார்" என்று கேலி செய்தார்கள். படகோட்டி அவர்கள்
பேசிய எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல், அவர்களைப் படகில் ஏற்றிக்கொண்டு,
இயக்கத் தொடங்கினார். சிறிது தூரம் போனதும் காற்று பலமாக வீசியது...
இளைஞர்களோ இறைவனை நோக்கி உருக்கமாக வேண்டத் தொடங்கினார்கள்.
படகோட்டி அந்நேரத்தில் இறைவனிடம் வேண்டாமல், படகை மிகவும் எச்சரிக்கையாய்
இயக்கி, கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தார்.
கரை இறங்கியதும் இளைஞர்கள் படகோட்டியைப் பார்த்து, "ஆபத்து என்றதும்
நாங்கள் இறைவனை நோக்கி வேண்டியபோது, நீங்கள் மட்டும் ஏன் எங்களோடு
சேர்ந்து இறைவனை வேண்டவில்லை" என்று கேட்டார்கள். அதற்கு அவர்,
"ஆபத்து வேளையில் உங்களைப் போன்று நானும் இறைவனிடம்
வேண்டிக்கொண்டிருந்தால் படகை யார் இயக்குவது?" என்றார். இப்படிச்
சொல்லிவிட்டு அவர் அவர்களிடம் தொடர்ந்து பேசத் தொடங்கினார்,
"ஆபத்து வேளையில் பதற்றத்தோடு வேண்டுவது இறைவேண்டல் இல்லை. அதற்குப்
பெயர் சந்தர்ப்பவாதம்... எந்த வேளையில் வேண்டினாலும் உள்ளார்ந்த
விதமாய் வேண்டவேண்டும். அதுதான் உண்மையான இறைவேண்டல்." படகோட்டி
சொன்ன வார்த்தைகளை நெஞ்சத்தில் நிறுத்தியவர்களாய் அந்த இளைஞர்கள்
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, இல்லம் திரும்பினார்கள்.
ஆபத்துக்கு மட்டும் இறைவனை வேண்டுவது இறைவேண்டலாக இருக்காது,
உள்ளார்ந்த விதமாய் செய்யப்படும் இறைவேண்டலே, உண்மையான இறைவேண்டல்
என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
இறைவனிடம் வேண்டுவதற்குக் கற்றுத்தரும் இயேசு
நற்செய்தி வாசகத்தில் இயேசு, தன்னுடைய சீடர்களுக்கு இறைவனிடம்
வேண்டுவதற்குக் கற்றுத் தருகின்றார். அவர் தன்னுடைய சீடர்களுக்கு
இறைவனின் வேண்டுவதற்குக் கற்றுத்தர முக்கியமான ஒரு காரணம் இருந்தது.
அது என்னவெனில், யூதர்கள் இறைவேண்டல் என்ற பெயரில் தொழுகைக்கூடங்களிலும்
வீதியோரங்களிலும் நின்றுகொண்டு, மக்கள் பார்க்கவேண்டும் என்று
உரக்கக் கத்தி வேண்டினார்கள். இப்படிப்பட்ட பழக்கம் முதலில் புறவினத்தாரிடம்
இருந்தது (1 அர 18:26) அதை அப்படியே எடுத்துக்கொண்ட யூதர்கள்,
அவர்களைப் போன்று கத்தி இறைவனிடம் வேண்டத் தொடங்கினார்கள். இப்படிப்பட்ட
நிலையில்தான் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு வேண்டுவதற்குக் கற்றுத்
தருகின்றார்.
இயேசு தன்னுடைய சீடர்கள் வேண்டக் கற்றுக்கொடுத்ததும் அதைத் தொடர்ந்து
அவர் கற்றுக்கொடுத்த இறைவேண்டலும் (விண்ணுலகிலிருக்கின்ற எங்கள்
தந்தையே என்ற இறைவேண்டல்) நமக்கு ஒருசில உண்மைகளை மிகத்
தெளிவாக எடுத்துரைக்கின்றன. அவை என்ன என்று இப்போது
பார்ப்போம்.
இறைவேண்டல், உள்ளார்ந்தவிதமாகவும் உண்மையாகவும் இருக்கவேண்டும்
இயேசு தன்னுடைய சீடர்களுக்கு இறைவனிடம் வேண்டுவதற்கு கற்றுத்தருவதற்கு
முன்பாகச் சொல்கின்ற வார்த்தைகள், "நீங்கள் இறைவனிடம்
வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்றவேண்டும்" என்பதாகும்.
இறைவேண்டல் என்பது யாருடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவோ அல்லது
பாராட்டைப் பெறுவதற்காகவோ செய்யப்படக்கூடாது என்பதில் இயேசு மிகவும்
கவனமாக இருந்தார். எனவேதான் அவர் வெளிவேடத்தனமான வேண்டுதல் (மத்
6:5) அல்ல, உள்ளார்ந்த வேண்டுதலே (மத் 26:36-46) உண்மையான
வேண்டுதல் என்கின்றார்
இறைவேண்டல், கடவுள் திருவுளத்திற்கு ஏற்றார்போல் இருக்கவேண்டும்
இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்த இறைவேண்டலில் வருகின்ற
வார்த்தைகள் யாவும், தந்தைக் கடவுளையும் பொதுநலத்தையும்
முன்னிலைப்படுத்துவதாக இருக்கின்றன. இயேசு கற்றுத்தரும் இறைவேண்டலில்
எங்கினும் 'நான்', 'எனது' என்ற வார்த்தைகளுக்கு இடமில்லை.
'எங்கள்' என்ற வார்த்தைதான் அதிகமான இடம்பெறுகின்றது. இதன்மூலம்
நாம் இறைவனின் திருவுளத்தையும் பொதுநலத்தையும் நாடுகின்றபோது,
இறைவன் நம்முடைய நலத்தைப் பார்த்துக்கொள்வார் என்பது உறுதியாகின்றது.
ஏனெனில் நம் இறைவன், நாம் கேட்கும் முன்பே நம் தேவைகளை அறிந்து
வைத்திருக்கின்றார் (மத் 6:8).
இறைவேண்டல், மன்னிக்கும் மனதோடு இருக்கவேண்டும்
இயேசு தன்னுடைய சீடர்களுக்கு, இறைவனிடம் வேண்டுவதற்குக் கற்றுத்தரும்போது
முக்கியமான ஒரு கருத்தினை மனதில் வைத்து வேண்டச் சொல்கின்றார்.
அதுதான் மன்னிப்பு என்பதாகும். அடுத்தவரின் குற்றத்தை மன்னிக்கின்றபோதுதான்
இறைவன் நம் குற்றத்தையும் மன்னிப்பார் என்று சொல்லும் இயேசு,
மன்னிக்கும் மனது எவ்வளவு இன்றையாமையாதது என்பதை எடுத்துரைக்கின்றார்.
சிந்தனை
இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கொடுத்த 'விண்ணுலகிலுள்ள எங்கள்
தந்தையே' என்ற இறைவேண்டலை ஒவ்வொருநாளும் எத்தனையோ முறை நாம்
சொல்கின்றோம். ஆனால், அதை உள்ளார்ந்த விதமாய்ச் சொல்கின்றோமா?
என்பது கேள்விக்குறி. எனவே, நாம் உள்ளார்ந்த விதமாய் இறைவனிடம்
வேண்டுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
நீங்கள் கேட்கும்முன்பே உங்கள் தேவைகளை உங்கள் விண்ணகத்தந்தை
அறிந்து வைத்திருக்கிறார்.
வியாபாரி ஒருவர் பெரிய கடை ஒன்றை நடத்தி வந்தார். ஆனால் அவருக்குத்
தொழிலில் நட்டத்திற்கு மேல் நட்டம். கடன் வாங்கியும் வியாபாரம்
நடத்தி வந்தார். அப்போதும் அவரைப் பிடித்திருந்த தரித்திரம்
அவரை விட்டுப் போகவில்லை. இதனால் அவருக்குப் பின்னால் எப்போதும்
கடன்காரர்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.
ஒருகட்டத்தில் நிம்மதியை இழந்த அந்த வியாபாரி தற்கொலை
செய்துகொள்ளும் எண்ணத்திற்கு வந்தார். அதனால் தன்னுடைய
வீட்டின் கதவுகளை எல்லாம் அடைத்துக்கொண்டு, தான் வாங்கியிருந்த
விஷக் குப்பியை எடுத்துக் வாயில் வைக்கத் தொடங்கினார்.
அப்போது அவருடைய வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
'இந்த நேரத்தில் யார் கதவைத் தட்டுகிறார்கள்?' என்று ஒரு நிமிடம்
விஷம் குடிக்கும் எண்ணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு,
கதவைத் திறந்து வெளியே வந்தார். அங்கே அஞ்சல்காரர் கையில் தபாலை
வைத்துக்கொண்டு காத்திருந்தார். அதை அவரிடமிருந்து பெற்று திறந்து
பார்த்த வியாபாரிக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ஏனென்றால்
அவர் ஒரு வாரத்திற்கு முன்பாக வாங்கியிருந்த லாட்டரிக்கு ஒரு
கோடி ரூபாய் பணம் பரிசாக விழுந்திருந்தது. அப்போதுதான் அவர்
உணர்ந்துகொண்டார் கடவுள் தன்னைக் கைவிட்டுவிடவில்லை என்று.
அந்த அஞ்சல்காரர் சிறிது நேரம் காலதாமதமாக வந்திருந்தாலும்
வியாபாரியின் கதை அவ்வளவுதான். ஆனாலும்கூட கடவுள் அவருக்குத்
தகுந்த நேரத்தில் உதவி செய்திருக்கிறார் என்கிறபோதுதான் கடவுள்
நம் ஒவ்வொருவரின் தேவையையும் அறிந்து வைத்திருக்கிறார் என்பதையும்,
தக்க நேரத்தில் நமக்கு உதவிடுவார் என்பதையும் நம்மால்
புரிந்துகொள்ள முடிகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறுவார், "நீங்கள்
கேட்கும் முன்பே உங்கள் தேவைகளை உங்களுடைய விண்ணகத்தந்தை அறிந்து
வைத்திருக்கிறார்" என்று. ஆம், மேலே சொல்லப்பட்ட கதையில் கடவுள்
வியாபாரியின் தேவையை அறிந்து வைத்திருந்ததால்தான் அவருக்குத்
தக்க நேரத்தில் உதவிட முடிந்தது. அதுபோன்று நம்முடைய தேவைகளையும்
கடவுள் அறிந்துவைத்திருக்கிறார் என்பது ஆழமான உண்மை.
நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து நாம் எப்படி ஜெபிக்கவேண்டும்
என்பதை நமக்குக் கற்றுத் தருகிறார். அதற்கு முன்னதாக ஜெபம் என்பது
எப்படி இருக்கக்கூடாது என்பதையும் கற்றுத் தருகிறார். மக்கள்
பார்க்கவேண்டும் என்றோ அல்லது மிகுதியான வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே
போவது உண்மையான ஜெபமாக இருக்காது என்பதை மிக ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார்.
மேலும் ஒரு ஜெபம் என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதையும்
மிக அழகாக எடுத்துரைக்கிறார்.
இயேசு நமக்குக் கற்றுத் தந்திருக்கும் "கர்த்தர் கற்பித்த ஜெபத்தில்"
இரண்டு பகுதிகள் இருக்கின்றன. முதலாவது பகுதி கடவுளைப் போற்றுவதாகவும்,
இரண்டாவது பகுதி நமது தேவைகளை எடுத்துரைப்பதாகவும் இருக்கின்றது.
நமது தேவைகளை எடுத்துச் சொல்லியே கடவுளைச் சோர்வடையச்
செய்துவிட்ட நமக்கு இயேசு கற்றுத் தந்திருக்கும் ஜெபம் சற்று
வித்தியாசமானதாக இருக்கின்றது. ஏனென்றால் இயேசு கற்பித்த ஜெபத்தில்
இறைவனைப் புகழ்தல்தான் முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்துத்தான்
நமது வேண்டுதல்களை, விண்ணப்பங்களை எடுத்துச் சொல்லுதல் எல்லாம்.
இச்செபத்தில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் இயேசு கிறிஸ்து கடவுளை
தந்தையே! என்று அழைக்கிறார். அதாவது ஒரு தந்தையிடம் மகன்/மகள்
எப்படியெல்லாம் உறவாடுகிறாரோ அதுபோன்று நாமும் உறவாடி, உரையாடி
ஜெபிக்கவேண்டும் என்பதை இயேசு நமக்குக் கற்றுத் தருகிறார்.
ஆகவே நமது தேவைகளை எல்லாம் அறிந்து வைத்திருக்கின்ற தந்தை கடவுளிடம்
ஒரு தந்தையிடம் உறவாடுவதுபோன்று நாம் உறவாடுவோம். பிள்ளைகளுக்கு
எந்த நேரத்தில் என்ன தேவை என்பதை அறிந்து வைத்திருக்கும் கடவுள்
நமக்கு எல்லா ஆசிரும் அளித்து, முடிவில்லா வாழ்வைத் தருவார்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|