Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   11  மார்ச் 2019  
            தவக்காலம் முதலாம் வாரம் திங்கள் - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 11-18


ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்! களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும் ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும், என் பெயரால் பொய்யாணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள்.

நான் ஆண்டவர்! அடுத்திருப்பவரை ஒடுக்கவோ அவருக்குரியதைக் கொள்ளையிடவோ வேண்டாம்; வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது. காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட.

நான் ஆண்டவர்! தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே. உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே!

நான் ஆண்டவர்! உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கு அடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்துகொள். பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 19: 7. 8. 9. 14 (பல்லவி: யோவா 6: 63b)
=================================================================================
  பல்லவி: ஆண்டவருடைய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி

14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 கொரி 6: 2b

இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.

ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, 'என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் 'ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், 'மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, 'சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை' என்பார்.

அதற்கு அவர்கள், 'ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள்.

அப்பொழுது அவர், 'மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார்.

இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

மண்ணுலகில் எந்தக் காரிங்களை நல்லதோ கெட்டதோ, அது இறைவனுக்கே செய்ததாகும்.

இதனையே சவுலிடம் ஆண்டவர் சொன்னார், நீ துன்புறும் இயேசு தான் நான் என்று.

தன்னை தன் மக்களோடு இணைத்துப் பார்க்கின்ற பார்வையே இறைவனது பார்வையாகும்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  மத்தேயு 25: 31-46

என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்...

நிகழ்வு

"நீங்கள் நல்ல மனிதராக இருக்கும்போது இறைவனே இறங்கிவந்து, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பார்" என்ற பிரபல வரிகளை அடிக்கடி நினைத்துக்கொண்டு செயல்படுபவர், முன்னாள் நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியர் சுக்ரியா சாகு.

இவர் நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, அங்கிருந்த ஊனமுற்றவர்களைக் கணக்கெடுத்து, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களை உயர்த்தினார்; மனித நேயத்துடனும் சுற்றுச்சூழல் அக்கறையோடும் செயல்பட்டு ஊட்டி ஏரியைத் தூர்வாரி அதிகமான மரக்கன்றுகளை நட்டார். இதனால் இவர் கின்னஸ் புத்தகத்தில் சாதனைப் பெண்மணியாக இடம்பெற்றார். .

'மிகச் சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்' என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில் வாழ்ந்து வரும் சுக்ரியா சாகு கின்னஸ் புத்தகத்தில் இடம் புத்தகத்தில் இடம்பிடித்தது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இப்படிப்பட்டவர் ஒருநாள் விண்ணகத்தில் இடம்பிடிப்பார் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

இறுதித் தீர்ப்பு பற்றிய இயேசவின் உவமை

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, இறுதித் தீர்ப்பு பற்றிய உவமையை எடுத்துக்கூறுகின்றார். இவ்வுவமை உலக முடிவின்போது, உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் அவர்களுடைய செயல்களுக்கு ஏற்றார்போல் தீர்ப்பு வழங்கப்படும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

கருமமே கட்டளைக் கல்

'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்' என்பார் ஐய்யன் திருவள்ளுவர். இதனுடைய அர்த்தம்: ஒருவனுடைய பெருமைக்கும் அதாவது, உயர்வுக்கும் அவனுடைய சிறுமைக்கும் அதாவது, தாழ்வுக்கும் அவனுடைய செயல்களே உரைகல்லாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறும் உவமையில் வரும், ஆயர் ஒருவர் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் பிரிக்கின்றார். அவ்வாறு அவர் பிரிப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது, அவர்களுடைய செயல்கள்தான். வலப்பக்கத்தில் இருந்தவர்கள் பசித்தோருக்கு உணவும் தங்க இடமில்லாதவருக்கு இடமும் ஆடையில்லாதவருக்கு ஆடையும் கொடுத்து, நோயுற்றவர்களைக் கவனித்தும் சிறையிலிருந்தவர்களைப் பார்த்தும் அன்னியர்களை வீடுகளில் ஏற்றுக்கொண்டும் வந்தார்கள். அதனால் அவர்கள் ஆட்சியை விண்ணகத்தை - உரிமைப் பேறாகப் பெற்றுக்கொண்டார்கள். இடப்பக்கத்தில் இருந்தவர்களோ மேலே சொல்லப்பட்ட நற்செயல்களை செய்யாமல் போனதால், அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட அணையா நெருப்புக்கள் தள்ளப்பட்டார்கள். இதன்மூலம் ஒருவருடைய செயலும் அவர் வாழ்ந்த வாழ்வும்தான் அவர் இறைவனின் ஆட்சியை உரித்தாக்கிக் கொள்வதற்கும் அல்லது அணையா நெருப்புக்குள் தள்ளப்படுவதற்கும் அடிப்படைக் காரணமாக இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

மிகச் சிறியோரில் இயேசு

நற்செய்தியில் வரும் அரசர்/இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகள், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்வதையெல்லாம் எனக்கே செய்தீர்கள்" என்பதாகும். இயேசுவின் இவ்வார்த்தைகள் அவர் எல்லாரிலும் இருந்தாலும் எளியவர், சிறியோரில் இருக்கின்றார் என்ற உண்மையை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. அப்படியானால், சமுதாயத்தில் இருக்கக்கூடிய எளியோரையும் வறியோரையும் அன்பு செய்யாமல், அதன் வெளிப்பாடாக அவர்களுக்கு நல்லது செய்யாமல் ஒருவர் இறைவனின் ஆட்சியை உரித்தாக்கிக் கொள்ள முடியாது என்பது உண்மை. இங்கு தூய யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் கூறுகின்ற, "தன் கண்முன்னே உள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது' (1 யோவா 4:20) என்ற வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், இயேசுவின் வார்த்தைகள் இன்னும் தெளிவாக விளங்கும்.

இறையாட்சியை உரிமைப்பேறாகப் பெற தந்தையின் ஆசி கட்டாயம்

உவமையில் வரும் அரசர், தன் வலப்பக்கத்தில் உள்ளோர்களைப் பார்த்து, "என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, வாருங்கள்" என்கின்றார். தந்தையின் ஆசி பெற்றவர்கள் யார் என்றால், அவர்மீது நம்பிக்கை வைத்தவர்கள்; அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக நற்செயல்கள் புரிந்து கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆனவர்கள் (எபி 11:6). ஆகையால், கடவுளின் ஆசி பெற்றவர்களாக நாம் மாறவேண்டும் என்றால், அவர்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும், அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக நற்செயல்கள் செய்யவேண்டும். இதைச் செய்யாமல் போனதால்தான் இடப்பக்கத்தில் இருந்தவர்கள் அணையா நெருப்புக்குள் தள்ளப்பட்டார்கள். எனவே, நமது வாழ்வில் நம்பிக்கையும் நற்செயல்களும் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டு வாழவேண்டும்.

சிந்தனை

நம் விண்ணகத் தந்தையாம் இறைவன், விண்ணகத்தை உரிமைப் பேறாகத் தர இருக்கின்றார்கள். அதற்கு நாம் அவரிடம் நம்பிக்கையும் அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக நற்செயல்களையும் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
லேவியர் 19: 1-2, 11-18

'உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக!

நிகழ்வு

ஒருசமயம் ஒரு குருவும் அவரது சீடரும் குளக்கரையில் அமர்ந்திருந்தரகள். சீடர் பல கேள்விகளைக் குருவிடம் கேட்டுக்கொண்டிருந்தார். குருவும் சீடர் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் நிதானமாகப் பதிலளித்துக் கொண்டிருந்தார். "குருவே! சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? அதற்கான விளக்கத்தை எனக்குக் கூறுங்கள்" என்றார் சீடர். சீடர் கேட்ட இக்கேள்விக்கு எப்படி விளக்கம் தருவது என்று சுற்றும் முற்றும் பார்த்தார் குரு. அப்பொழுது ஓர் இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் போட்டு மீன்களைப் பிடித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப்போட்ட மீன்கள் துடித்துக்கொண்டிருந்தன.

உடனே குரு அந்த இளைஞனிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார், "தம்பி! மீன் என்றால் உனக்கு மிகவும் பிடிக்குமோ?" "ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியைச் சமைக்கச் சொல்லி, ஒரு பிடி பிடிக்கப் போகிறேன்; உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்; குளத்தில் நிறைய மீன்கள் கிடக்கின்றன" என்றான் அந்த இளைஞன். அதற்குக் குரு அவனிடம், "எனக்கு வேண்டாம் தம்பி!" என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்தார். நடப்பதையெல்லாம் சீடர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். சிறிதுநேரத்திற்குப் பிறகு அந்த இளைஞன் மீன்பிடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அவன் சென்றபிறகு வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் குளக்கரைக்கு வந்தார். அவர் கையில் ஒரு வெள்ளைநிறப் பை இருந்தது. குரு அதை உற்றுப்பார்த்தார். அந்தப் பை முழுவதும் பொறிகள் இருந்தன. அந்தப் பெரியவர் பையிலிருந்த பொறியை எடுத்து தண்ணீர் தூவினார். அப்பொழுது நூற்றுக்கணக்கான மீன்கள் பொறி இருக்கும் இடத்தை எறும்புகள் போல் மொய்த்தன. குரு அந்தப் பெரியவரிடம் பேச்சுக் கொடுத்தார்: "என்ன பெரியவரே! மீன் என்றால் மிகவும் பிடிக்குமோ?" என்று சற்றுமுன் இளைஞனிடம் கேட்ட அந்த கேள்வியை அந்தப் பெரியவரிடம் கேட்டார். பெரியவரும், "ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர்; எனக்கு எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ, அப்பொழுதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன்" என்றார்.

குரு அந்தப் பெரியவரிடம் பேசிவிட்டு சீடர் பக்கம் திரும்பினார். "பார்த்தாயா! இருவரும் மீனின்மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் 'மீனென்றால் உயிர்' என்று கூறும்போது தெரிந்திருக்கும். ஆனால், அந்த இளைஞன் மீன்களைத் தன்னுடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டான். இந்தப் பெரியவரோ மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளிகிறார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தன. ஆனால், இருவரின் நோக்கம் வேறு வேறு. மொத்தத்தில், அன்பில் சுயநலமிருந்தால் அது அன்பே இல்லை; சுயநலமில்லாத அன்புதான் உண்மையானது, நிரந்தரமானது" என்றார்.

எந்தவொரு எதிர்பார்ப்பும் சுயநலமும் இல்லாமல் இருப்பதே உண்மையான அன்பு என்று அன்பிற்கு புது விளக்கம் தரும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. லேவியர் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகமும் உண்மையான அன்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துச் சொல்கின்றது.

அன்பு நன்மைசெய்யும்; தன்னலம் நாடாது

லேவியர் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், இறை மனித அன்பைக் குறித்துப் பேசுகின்றது. "உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயோரக இருப்பது போல், நீங்களும் தூயோராய் இருங்கள்" என்கின்றார் கடவுள். கடவுள் யாரையும் வஞ்சிப்பதோ, ஒடுக்குவதோ, இடறச் செய்வதோ அல்லது யாருக்கும் அநீதி இழைப்பதோ கிடையாது. மாறாக, அவர் எல்லார்மீதும் அன்பும் பரிவும் இரக்கமும் மட்டுமே கொள்கின்றார். அதனாலேயே அவர் தூயோராக இருக்கின்றார். அவருடைய மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் அவரைபோன்று யாரையும் வஞ்சிக்காமல், ஒடுக்காமல், இடறி விழச் செய்யாமல், அன்பும் இரக்கமும் பரிவும் கொண்டிருந்தால் அவரைப் போன்று தூயவராகவும் அதன்மூலம் அவரையும் அடுத்திருப்பவர்களையும் அன்பு செய்பவர்களாக மாற முடியும்

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: "அன்பு நன்மைசெய்யும்; தன்னலம் நாடாது." (1 கொரி 13: 4-5). உண்மையாகவே ஆண்டவரையும் அடுத்தவரையும் அன்பு செய்யும் ஒருவர் நன்மை மட்டுமே செய்வார். ஏனென்றால், கடவுளின் நீட்சிதான் தான், தன்னுடைய நீட்சிதான் பிறர் என்பதை அவர் நன்கு உணர்ந்திருப்பார். அப்படிப்பட்ட ஒருவர் தன்னை வெறுப்பதும் இல்லை, தனக்கேதிராகச் செயல்படுவதும் இல்லை.

சிந்தனை

'அன்பின் வழியது உயர்நிலை' என்பார் திருவள்ளுவர். நாம் கடவுளையும் பிறரையும் முழு இதயத்தோடு அன்பு செய்து, உயர்நிலை அடைவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக

ஒரு ஊரில் கடவுள் பக்தை ஒருத்தி இருந்தாள். அவள் பெரிய பணக்காரியும் கூட. எந்நேரமும் கோவில் ஒன்றே தஞ்சமெனக் கிடப்பாள். கடவுளிடம் அவள் 'எப்போது உன் திருமுக தரிசனம் எனக்குக் கிடைக்கும்' என்று அடிக்கடி வேண்டி வந்தாள்.

ஒருநாள் இரவில் அவள் தூங்கிக்கொண்டிருக்கும்போது கனவொன்று கண்டாள். அக்கனவில் கடவுள், "நாளை உன் வீட்டுக்கு நான் வர இருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு மறைந்தார். இதைக் கேட்டு அவள் மிகவும் மகிழ்ந்தாள்.

அடுத்த நாள் காலை அவள் அதிகாலையிலேயே எழுந்து, வீட்டைச் சுத்தம் செய்து, அறுசுவை உணவைத் தயாரித்து வைத்து கடவுளுக்காகக் காத்திருந்தார். ஆனால் கடவுள் வரவில்லை.

அந்நேரத்தில் ஒரு வயதான பெரியவர் கையில் ஊன்றுகோலை வைத்துக்கொண்டு அப்பெண்ணின் வீட்டுக்கு முன்பாக வந்து நின்றார். அவர் அப்பெண்ணிடம், "அம்மா! நான் பக்கத்திலிருக்கும் மருத்துவமனைக்குச் செல்லவேண்டும், என்னால் அதுவரை நடக்க முடியாது. ஆதலால் தயவுசெய்து நீங்கள் என்னை கைத் தாங்கலாக அங்கே கூட்டிக்கொண்டு போனால் அது எனக்கு பேருதவியாக இருக்கும்" என்றார். அதற்கு அப்பெண், "அதுவெல்லாம் என்னால் செய்ய முடியாது, ஏனென்றால் கடவுள் என்னுடைய வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார், நான் அவரைக் கவனிக்கவேண்டும்" என்று சொல்லி அவரை அங்கிருந்து அனுப்பி விட்டார்.

சிறுது நேரத்தில் ஒரு பிச்சைக்காரன் அவளுடைய வீட்டுக்கு முன்பாக வந்து, "அம்மா! தாயே! எனக்கு ஏதாவது உணவு போடுங்கள், நான் சாப்பிட்டு ஒரு வாரம் ஆகிறது" என்றான். அதற்கு அந்தப் பெண்மணி, "இங்கே சாப்பாடு எல்லாம் போடமுடியாது, நான் கடவுளின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். வேண்டுமானால் நீ நாளைக்கு வா" என்று சொல்லி அவரை அங்கிருந்து அனுப்பினார்.

நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. ஆனால் கடவுள் மட்டும் வருவே இல்லை. பொழுது சாய்வதற்கு முன்பாக, ஓர் இளம்பெண் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அவளிடம் வந்து, "அம்மா! நாங்கள் மிகவும் வறிய நிலையில் இருக்கிறோம். உணவுக்காக மிகவும் கஷ்டப்படுகின்றோம். ஆதலால் ஏதாவது கொஞ்சம் பணம் தந்தால் அது எங்களுக்கு பேருதவியாக இருக்கும்" என்றாள். அதற்கு அந்தப் பணக்காரப் பெண்மணி, "நானே கடவுள் இன்னும் வரவில்லையே என்று கவலையாக இருக்கிறேன். நீ வேறு இந்த நேரத்தில், இங்கு வந்து என்னைத் தொந்தரவு செய்கிறாயே" என்று சொல்லி அவளையும் அங்கிருந்து விரட்டினார்.

இரவு நீண்டநேரம் கடவுளுக்காக காத்திருந்தார். ஆனால் கடவுள் வரவே இல்லை. இப்படி நாள் முழுவதும் அவள் கடவுளுக்காக காத்திருந்ததால், மிகவும் சோர்வுற்றுப் போயிருந்தாள். அதனால் அவள் அப்படியே தூங்கிவிட்டாள்.

அன்றிரவு கடவுள் மீண்டுமாக அவளுடைய கனவில் வந்தார். அவரைப் பார்த்த அப்பெண்மணி சற்று கோபத்தோடு, "கடவுளே! நான் உன்னை வரவேற்பதற்காக நாள் முழுவதும் வாசலில் காத்திருந்தேனே! ஆனால் நீரோ வராமல் என்னை ஏமாற்றிவிட்டீர்" என்று வருத்தப்பட்டாள். அதற்கு கடவுள், "நான்தான் உன்னைக் காண்பதற்காக மூன்றுமுறை வந்தேனே, நீதான் என்னைக் கண்டுகொள்ளாமல் விரட்டிவிட்டாய்" என்றார். அப்போதுதான் அவள் உணர்ந்தாள் வயதானவர், பிச்சைக்காரர், ஏழைப் பெண் போன்றோரின் உருவில் வந்தது கடவுள் என்று.

கடவுள் மனித உருவில் வருகிறார் என்பதை இக்கதையானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் இறுதித் தீர்ப்பைக் குறித்து வாசிக்கின்றோம். மத்தேயு நற்செய்தியில் மட்டுமே வரக்கூடிய இந்த இறுதித் தீர்ப்பில் ஆண்டவராகிய இயேசு, மிகச் சிறிய சகோதர, சகோதரிகளுக்கு செய்வதையெல்லாம் எனக்கே செய்வதாகச் சொல்கிறார் (மத் 25:40).

பசியாய் இருக்கிறவர்களுக்கு உணவிடுகிறபோது, தாகமாக இருப்பவர்களுக்கு தண்ணீர் தருகிறபோது, ஆடையின்றி இருப்பவரை உடுத்துகிறபோது, அந்நியனாக இருப்பவரை வீட்டில் ஏற்றுக்கொள்கிறபோது, நோயாளியைக் கவனித்துக் கொள்கிறபோது, சிறையில் இருப்போரைப் பார்க்கச் செல்கிறபோது இன்னும் இது போன்ற இரக்கச் செயல்களை நம்மோடு வாழும் சக மனிதர்களுக்குச் நாம் செய்கிறபோது கடவுளுக்கே செய்கிறோம். அதேவேளையில் இப்படிப்பட்ட இரக்கச் செயல்களை சாதாரண மனிதர்களுக்குச் செய்யாதபோது கடவுளுக்கும் செய்யாதவர்கள் ஆகிறோம்.

"எங்கெல்லாம் உயிர் இருக்கிறதோ; துடிப்பு இருக்கிறதோ; துளிர்ப்பு நிகழ்கிறதோ அங்கெல்லாம் நிச்சயம் இறைமை இருக்கிறது, ஏனென்றால் இறைமை என்பதே உயிர்ப்புதான்" என்பான் அப்துல் ரகுமான் என்ற கவிஞன்.

நாம் நம்மோடு வாழும் மனிதர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம். Fr. Maria Antony, Palayamkottai.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
சிறிய வழிகள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறுதித்தீர்ப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். என் சிறுவயதில் நான் அடிக்கடி வாசித்து இரசித்த, வியந்த, பயந்த விவிலியப் பகுதி இது. இந்த நிகழ்வை கற்பனை செய்து பார்க்கும்போது வியப்பாக இருக்கும். உலகில் உள்ள எல்லாரையும் - உலகம் தொடக்கமுதல் இன்று வரை - ஒரே தளத்தில் கூட்ட வேண்டும். இரண்டாகப் பிரிக்க வேண்டும். அவர்கள் அனைவருக்கும் கேட்கும்படி அரசர் பேச வேண்டும்.

இந்த நிகழ்வு சொல்வது ஒரே செய்திதான்:

மானிட மகனின் மாட்சியில் வலப்பக்கம் நிற்பதற்கு பெரிய தகுதிகள் எவற்றையும் இயேசு நிர்ணயிக்கவில்லை:

திருச்சட்டத்தை மனப்பாடம் செய்ய வேண்டும், பத்துக் கட்டளைகள் கடைப்பிடிக்க வேண்டும், இறையியல், விவிலியம் படிக்க வேண்டும், மெய்யியலில் தெளிவு வேண்டும், இந்த வேலை செய்ய வேண்டும், அந்த வேலை செய்ய வேண்டும், இவ்வளவு படித்திருக்க வேண்டும், இவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும், இவ்வளவு கையிருப்பு வேண்டும், இன்னென்ன பொருள்கள் வைத்திருக்க வேண்டும் - இப்படி எதுவும் இல்லை தகுதிகள் லிஸ்டில்.

இறையாட்சிக்குள் நுழைவதற்கான வழிகள் எல்லாமே சிறிய வழிகள்.

சிறிய வழிகள் வழியாக, சிறியவர்களுக்குச் சிறியவர்களாக மாறினால் போதும் - வலப்பக்கம் நின்றுவிடலாம்.

மேலும், இந்நிகழ்வில் ஆண்டவரே, அரசரே தன்னை சிறியவர்களோடு ஒன்றிணைத்துக்கொள்கிறார்.

1. பசித்தோருக்கு உணவு
2. தாகமுள்ளோருக்கு தண்ணீர்
3. அந்நியருக்கு வரவேற்பு
4. ஆடை இல்லாதவருக்கு ஆடை
5. நோயுற்றோரைச் சந்தித்தல்
6. சிறையிலிருப்போரைச் சந்தித்தல்

வெறும் ஆறு நிகழ்வுகள். ஆறும் சின்னஞ்சிறு நிகழ்வுகள். கையில் கொஞ்சம் பணமும், இருக்க ஒரு சிறிய வீடும், கொஞ்ச நேரமும் இருந்தால் இந்த ஆறையும் செய்து முடித்துவிடலாம்.

ஆனால், இதைச் செய்வதற்குக் கடினமாக இருக்கக் காரணம் என்னவென்றால், நாம் சிறியவர்களாக மாற மறுப்பதும், சிறியவர்களில் அவரைக் காண மறுப்பதும், சிறிய வழிகளைத் தேர்ந்தெடுக்க மறப்பதும்தான்.

மேலும், இவற்றைச் செய்வதால் இறையாட்சியை உரிமையாக்கிக்கொள்ள முடியும் என்ற நிலையிலும் செய்யக்கூடாது. ஏனெனில், அப்படிப்பட்ட ஒரு மனநிலையில் நாம் இவர்களைப் 'பயன்படுத்தி' நம் இறையாட்சியைச் சம்பாதிக்க விரும்புவோம். ஒரு மனிதர் தன் சக மனிதரைப் பயன்படுத்துவது இன்னும் ஆபத்தானது.

மேலும், பசி, தாகம், அந்நியம், நிர்வாணம், நோய், தனிமை ஆகியவற்றை மானுடத்தின் முகத்திலிருந்து அகற்றுவதும் அவசியம்.

இவை அனைத்தையும் ஒற்றை வரியில் சொல்லிவிடுகிறது இன்றைய முதல் வாசகம் (காண். லேவி 19:1-2, 11-18): 'உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!'

என்னை நான் அன்பு செய்வது மிக எளிது என்றால், அடுத்திருப்பவரை அன்பு செய்வதும் அப்படித்தானே!

சிறிய வழிகள், எளிய செயல்கள் - இறையாட்சியின் சாவிகள்

- Rev. Fr. Yesu Karunanidhi

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!