Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   09  மார்ச் 2019  
                 திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி- 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 9b-14

ஆண்டவர் கூறுவது: உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும். ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்; வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்; உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்றுபோலும் இருப்பாய். உன் மக்கள் பண்டை நாளிலிருந்து பாழடைந்து கிடப்பவற்றைக் கட்டியெழுப்புவர்; தலைமுறை தலைமுறையாக உள்ள அடித்தளங்களின் மேல் கட்டியெழுப்புவாய்; தகர்ந்த மதிலைத் திரும்பக் கட்டுபவன் என்றும் குடியிருப்பதற்குத் தெருக்களைச் சீர்படுத்துபவன் என்றும் பெயர் பெறுவாய்.

ஓய்வுநாளின் முறைமைகளினின்று விலகிச் செல்லாது, என் புனித நாளில் உன் விருப்பம் போல் செய்யாதிருந்து, ஓய்வுநாள் 'மகிழ்ச்சியின் நாள்' என்றும் 'ஆண்டவரின் மேன்மைமிகு புனித நாள்' எனவும் சொல்லி அதற்கு மதிப்புத் தந்து, உன் சொந்த வழிகளில் செல்லவோ உன் சொந்த ஆதாயத்தை நாடவோ வெற்றுப் பேச்சுகளைப் பேசவோ செய்யாதிருந்தால், அப்பொழுது, ஆண்டவருக்கு ஊழியம் புரியும் மகிழ்ச்சியைப் பெறுவாய்; நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில் உன்னை வலம் வரச்செய்வேன்; உன் மூதாதையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்தின் மூலம் உனக்கு உணவளிப்பேன்; ஆண்டவரின் வாய் இதை உரைத்தது.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:86: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 11a)
=================================================================================
  பல்லவி: ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பியும்.

1 ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன். 2 என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில் நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். பல்லவி

3 என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். 4 உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். பல்லவி

5 ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். 6 ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எசே 33: 11

'தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே என் விருப்பம்,' என்கிறார் ஆண்டவர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32

அக்காலத்தில் இயேசு சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிதண்டுபவர் ஒருவரைக் கண்டார்; அவரிடம், "என்னைப் பின்பற்றி வா!" என்றார். அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரிய விருந்து அளித்தார். வரிதண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள்.

பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், "வரிதண்டுபவர்க ளோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று கேட்டனர்.

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

நம்முடைய கவனம் யார் பக்கம்?

தவறு செய்பவர்களை, வழி மாறி நடப்பவர்களை திசை மாறி செல்பவர்களை கவனத்தோடு கருத்திலே கொண்டு அந்த ஆன்மாக்களை ஆண்டவர் பக்கம் கொண்டு வருவதுவே நம்முடைய பணியாக அமைந்திடல் வேண்டும்.

நல்ல பண்புகளை கொண்டு வாழந்து வருவோர் நங்களது ஆன்மாவை காத்து கொள்ள தெரிந்தவர்கள்.

ஆனால் பாவத்தோடு வாழ்வோர், தடுமாறி நடப்போர் இவர்களை கவனத்தில் கொண்டு, இவர்களை குற்றவாளிகளைப் போல் அல்லாமல், பொறுமையோடு, நோயாளிகளுக்கு எத்தகைய கவனம் தேவையோ அத்தகைய நிலையில் அவாகளது ஆன்மாவை காக்க பொறுப்பேற்பது என்பது அவசியமானது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  என்னைப் பின்பற்றி வா

ஓர் ஊரில் ஞானமடைந்த ஜென் துறவி ஒருவர் இருந்தார். அவரிடத்தில் இளைஞன் ஒருவன் சென்று, தானும் ஞானம் அடைய வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினான்.

அதற்கு அந்த ஜென் துறவி, "உன்னிடத்தில் ஞானம் அடைவதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் நிறைய எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. எனவே நீ போய் உன்னுடைய எதிர்பார்ப்புகளை எல்லாம் விட்டுவிட்டு வா, அதன் பிறகு நீ ஞானம் அடையலாம்" என்றார்.

அந்த இளைஞனும் துறவியிடமிருந்து விடைபெற்றுச் சென்று, பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து, எதிர்பார்ப்புகளை எல்லாம் விட்டுவிட்டு, மீண்டுமாக ஜென் துறவியிடம் வந்தான். அவன் அவரிடம், "குருவே! நான் பல ஆண்டுகள் கடுந்தவம் செய்து, எதிர்பார்ப்புகளை எல்லாம் விட்டுவிட்டு, இப்போது உங்கள் முன்பாக வெறுமையாக நிற்கின்றேன்" என்றான். அதற்கு துறவி, "முதலில் போய் அந்த வெறுமையையும் விட்டெறிந்துவிட்டு வா" என்றார்.

துறவு வாழ்வுக்கு/ ஞானம் அடைவதற்கு எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்பதை இந்த நிகழ்வானது தெளிவாக எடுத்துரைக்கிறது. "துறந்துவிட்டோம் என்ற எண்ணத்தையும் துறப்பதுதான் உண்மையான துறவு" என்பார் வெ. இறையன்பு என்ற எழுத்தாளர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் லேவியின் (மத்தேயுவின்) அழைப்பைக் குறித்து வாசிக்கின்றோம். ஆண்டவர் இயேசு சுங்கச்சாவடியில் வரிவசூலித்துக் கொண்டிருக்கும் லேவியிடம், "என்னைப் பின்பற்றி வா" என்கிறார். உடனே அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார். இவ்வாறு அவர் ஒரு சீடன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

லூக்கா நற்செய்தி 14 :25,26 ஆகிய வசனங்களில் இயேசு கூறுவார், "என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது" என்று.


ஆக, இயேசுவின் சீடர் என்பவர் மற்ற எல்லாரையும்விட, ஏன் எல்லாவற்றையும் விட இயேசுவுக்கு முன்னுரிமை தரவேண்டும். அதனைத் தான் லேவி என்னும் மத்தேயு செய்துகாட்டினார். இயேசு அவரை அழைத்தபோது எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார்.


இயேசுவின் சீடர்களாக இருக்கக்கூடிய நாமும் மற்ற எல்லாரையும்விட, எல்லாவற்றையும் விட இயேசுவுக்கு முன்னுரிமை தருகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


ஆனால் பல நேரங்களில் நாம் ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, உலக காரியங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் தருகிறோம்; இந்த உலகோடு நம்முடைய வாழ்வு முடிந்துவிடபோகிறது என்ற மனநிலையில் வாழ்கிறோம். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு காரியம்.


பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 3: 17,18 ஆகிய வசனங்களில் பவுலடியார் கூறுவார், "கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்" என்று.


ஆகவே இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் மற்ற எல்லாவற்றையும் விட இயேசுவுக்கும், விண்ணுலகு சார்ந்த காரியங்களுக்கும் முக்கியத்துவம் தருவோம். இறைவன் தரும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
எசாயா 58: 9-14

வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால்...
நிகழ்வு

அமுதன் நகராட்சிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புப் படித்து வந்தான். அவனுடைய தந்தை கணியன் பூங்குன்றன் ஒரு மோட்டார்சைக்கிள் விற்பனைக் கடையில் பழுதுபார்ப்பவராக வேலைசெய்து வந்தார். அவருடைய வருமானம் குடும்பத்தை நடத்துமளவுக்கு மட்டுமே இருந்ததால், தன் ஒரே மகன் ஆசை ஆசையாய்க் கேட்பதை வாங்கித்தர முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்துகொண்டே இருந்தது.

அமுதன் தினசரி பள்ளிக்கு நடந்துசெல்லும் வழியில் ஒரு செருப்புக்கடையில் பார்வைக்கு வைக்கப்பட்டிந்த விதவிதமான காலணிகளைப் பார்த்து பெருமூச்சு விட்டுவந்தான். அங்கு சிவப்புக் கலரில், மிதிக்கும்போது குதிங்கால் பகுதியில் விளக்கு எரியுமாறு இருந்த ஒரு செருப்பை மிகவும் விரும்பினான். ஒருநாள் அவன் தன் அப்பாவிடம் சிவப்புக் கலரில் இருந்த செருப்பைக் காட்டி, அதை அணிய ஆசையாக இருக்கிறது என்று கொஞ்சினான். அருகில் சென்று விலையைப் பார்த்த கணியன் பூங்குன்றன் அதிர்ந்துபோனார். ஏனெனில், அவரால் அப்போதைக்கு வாங்கித்தரமுடியாத விலையில் அந்தச் செருப்பு இருந்தது. .
"இப்போதைக்கு என்னால் வாங்கித்தரமுடியாது" என்று அமுதனை கணியன் பூங்குன்றன் சமாதானப்படுத்திவிட்டாலும், .தன் மகனுக்கு அதை எப்படியாவது வாங்கித் தந்துவிடவேண்டுமென்று சிறுகச் சிறுக பணத்தைச் சேர்த்தார். ஒருநாள் அமுதனை அழைத்துக்கொண்டு அந்தக் கடைக்குச் சென்று அவனுக்கு அந்த செருப்பை வாங்கித்தருவதாய் சந்தோஷமாகச் சொன்னார். ஆனால், அமுதனிடம் அவர் எதிர்பார்த்த உற்சாகமில்லாதது கண்டு வியந்து நின்றார். "அமுதா! உனக்கு .சந்தோஷமாக இல்லையா... உனக்காகத்தானே பணத்தைக் கஷ்டப்பட்ட சேர்த்து வைத்தான்... வாங்கிக்கொள்" என்றார்.

"அப்பா! நீங்கள் சேர்த்து வைத்த இந்தப் பணம், நான் செருப்பு வாங்குவதற்குத்தானே" என்று சந்தேகத்தோடு கேட்டான் அமுதன். "ஆமாப்பா! அதிலென்ன சந்தேகம்" என்றார் கணியன் பூங்குன்றன். உடனே அமுதன், "அப்படியானால் இந்தப் பணத்தில் கம்மி விலையில் இரண்டு ஜோடிச் செருப்பு வாங்கித்தாருங்கள்" என்றான். "ஏன் அமுதா அப்படிக் கேட்கிறாய்... உனக்கு எதற்கு இரண்டு ஜோடிச் செருப்பு?" என்று கேட்ட தன் தந்தையிடம், அமுதன், "அந்த இரண்டும் எனக்கில்லை... என்னோடு படிக்கும் வளவனுக்குத்தான்ப்பா... வளவன் மிகவும் ஏழை, அவனுடைய அப்பா ஒரு கூலித்தொழிலாளி, அவரால் தன் மகன் வளவனுக்கு ஒரு செருப்புகூட வாங்கிதர முடியவில்லை. இதனால் அவன் ஒவ்வொருநாளும் காலில் செருப்பில்லாமலேயே பள்ளிக்கு வருகிறான். சில சமயங்களில் அவன் செருப்பில்லாமல் வெயிலில் நடப்பதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. அதனால்தான் நான் உங்களிடம் அப்படிக் கேட்டேன்" என்றான்.

தன் மகன் சொன்ன எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த கணியன் பூங்குன்றன், அவனுடைய 'வறியவரிலும் வறியவருக்கு உதவும் மனதை' நினைத்து, அவனைக் கட்டித்தழுவி முத்தமிட்டார். பின்னர் அவன் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப அவனுக்கு ஒன்றும் அவனுடைய நண்பனுக்கு ஒன்றுமாக இரண்டு ஜோடிச் செருப்புகளை வாங்கிக் கொடுத்தார்

நம்மோடு வாழும் வறியவருக்கு உதவவேண்டும் என்பதை இந்நிகழ்வு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகம், வறியவருக்கு உதவுவதே உண்மையான வழிபாடு, நோன்பு என்ற செய்தியை எடுத்துச் சொல்கிறது. நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

வறியோருக்கு உதவுவதே உண்மையான வழிபாடு

இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் உண்மையான வழிபாடு என்பது எது? என்பதற்கு ஆகச் சிறந்த ஒரு வரையறையைத் தருகின்றது.

யூதர்களில் ஒருசிலர் 'நோன்பிருக்கிருக்கிறேன் பேர்வழி' என்று ஆண்டிற்கு ஒருமுறை இருக்கவேண்டிய நோன்பினை (லேவி16: 29-31), வாரத்திற்கு இரண்டுமுறை நோன்பிருந்தார்கள். அப்படியே அவர்கள் வாரத்திற்கு இரண்டுமுறை நோன்பிருந்தாலும், நோன்பிருப்பதன் வழியாக மிச்சமாகும் உணவை ஏழைகளுக்குக் கொடுக்காமல், 'நாங்கள் இத்தனைமுறை நோன்பிருக்கிறோம்' என்று கடவுளிடமும் மற்றவரிடமும் பெருமையடித்துக் கொண்டார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான் கடவுள், இறைவாக்கினர் எசாயா வழியாக 'பசித்தோருக்காக உன்னைக் கையளித்து, வறியோரின் தேவையை நிறைவுசெய்வதே உண்மையான நோன்பு/ வழிபாடு" என்கின்றார்.

வழிபாடு என்பது வெளியடையாளங்கள் அல்ல (எசாயா 1: 10-15, 29;13; மத் 15: 8-9), அது இறைவனுக்கு முன்பாக தாழ்ந்திருப்பதும் அதன்மூலம் அடுத்திருப்பவருக்கு உதவி செய்வதுதான் (மத் 6: 16-18) என்ற உண்மையை உணராமல்தான் அன்றைக்கு யூதர்கள் (இன்றைக்கு நாம்) வெளியடையாளங்களில் கவனம் செலுத்தும் நிலை ஏற்பட்டது /ஏற்படுகின்றது. இத்தகையதொரு நிலை மாறி, நம்முடைய வழிபாடு அடுத்தவர் நலனில் அக்கறைகொள்ள உந்தித் தள்ளுவதாக இருக்கச் செய்யவேண்டும்.

சிந்தனை

'என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரல்ல, மாறாக விண்ணுலகில் இருக்கின்ற என் தந்தையின் திருவுளத்தின்படி நடப்பவரே விண்ணரசுக்குள் செல்வர்' (மத் 7:21) என்பார் இயேசு. நாம் வழிபாடு என்று நினைத்து வெளியடையாளங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், அது சுட்டிக்காட்டும் இறையன்பையும் பிறரன்பையும் நம்முடைய வாழ்வில் வாழ்ந்து காட்டுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
லூக்கா 5: 27-32

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம்மாற அழைக்கவந்தேன்

நிகழ்வு

கிரீஸ் நாட்டின் தத்துவஞானியான டையோஜீனஸ், பெரிய நகரான ஏதென்சில் வாழ்ந்துகொண்டிருந்தபோது, சிறிய நகரான ஸ்பாட்டாவை அடிக்கடி உயர்த்திப் பேசுவார்.

ஒருநாள் அவருக்கு அறிமுகமான ஒருவர் டையோஜீனசைப் பார்த்து, "நீர் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, ஏதென்ஸ் நகரைத் தாழ்த்தியும் குக்கிரமமான ஸ்பாட்டாவை உயர்த்தியும் பேசுகிறீரே... நீர் ஏன் ஸ்பாட்டாவுக்குப் போய் வாழக்கூடாது?" என்று கேட்டார். அதற்கு டையோஜீனஸ் மிகவும் தெளிவான குரலில், "ஸ்பாட்டாவில் போய் வாழலாம்தான்... ஆனால் நான் எந்த நகருக்கு அதிகமாகத் தேவைப்படுகிறேனோ, அங்குதான் என்னால் தங்கியிருக்க முடியும்" என்றார்.

ஏதென்சிஸ் நகரில் வழிதவறி நடந்தோர் பலர் இருந்தனர். அவர்களை நல்வழிப்படுத்தவே டையோஜீனஸ் அங்கு தங்கி இருந்தார்.

தத்துவஞானி டையோஜீனஸின் இச்செயல் நேர்மையாளர்கள் அல்ல, பாவிகளையே மனமாற அழைக்கவந்தேன் என்று வார்த்தைகளோடு ஒத்துப் போவதாக இருக்கின்றது. இயேசு பாவிகளின் ஈடேத்திற்காக எப்படி உழைத்தார் என்பதை இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தின் வழியாக அறிந்துகொள்வோம்.

'பாவியாகிய' லேவியை அழைத்த இயேசு

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, வரிதண்டுபவரான லேவியை அழைப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். லேவியின் அழைப்பில், மூன்று முக்கியமான காரியங்கள் நடக்கின்றன. ஒன்று. இழந்து போனதைத் தேடிமீட்க வந்த இயேசுவின் திட்டம் நிறைவேறுகின்றது (லூக் 19:10). இரண்டு. இயேசு லேவியைத் தன்னுடைய திருத்தூதர்கள் குழுவில் இணைத்துகொள்கின்றார். மூன்று. இயேசு தன்னுடைய பணியைக் குறித்து எல்லாருக்கும் எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கின்றது.

யூத சமூகத்தில் வரிதண்டுபவர்களின் நிலை

இயேசு, வரிதண்டுபவரான லேவியைத் தன்னுடைய பணிக்காக அழைத்தது மிகவும் துணிச்சலான காரியம் என்று சொல்லலாம். ஏனென்றால், வரிதண்டுபவர்கள் உரோமை அரசாங்கத்தின் கீழ் வேலைசெய்து வந்ததால், அவர்கள் நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கு இணையாகக் கருதப்பட்டார்கள். இன்னொரு பக்கம், வரிதண்டுபவர்கள் மக்களிடமிருந்து வரிவசூலித்தபோது, அவர்கள் 'வச்சதுதான் வரிசை' என்று தங்களுடைய விருப்பதற்கு ஏற்றாற்போல் மக்களிடமிருந்து அதிகமான வரியை வசூலித்தார்கள். இதனால் மக்களுடைய வெறுப்பைச் சம்பாதித்தார்கள். வரிதண்டுபவர்கள் அடிப்படையில் பாவிகள் இல்லையென்றாலும் (லூக் 3: 12-13), அவர்கள் செய்துவந்த தொழில் யூதர்கள் மத்தியில் அவர்களைப் பாவிகளாகக் கருதும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில் இருந்த ஒருவரான லேவியைத்தான் தன்னுடைய திருத்தூதர்களில் ஒருவராக இருக்க இயேசு அழைக்கின்றார்.

மத்தேயுவான லேவி

இயேசு, லேவியைத் தன்னுடைய பணிக்காக அழைத்தும் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். எப்படியென்றால், சமூகத்தால் பாவி என்று முத்திரை குத்தப்பட்ட தன்னை, இயேசு தன்னுடைய அழைத்ததும் லேவி பெரியதொரு விருந்தினை ஏற்பாடு செய்து தன்னுடைய மகிழ்ச்சியைக் கொண்டாடுகின்றார். மேலும் அதுவரைக்கும் லேவி என்று அறியப்பட்ட அவர், இந்நிகழ்விற்குப் பின்னர் மத்தேயு என்ற அறியப்படுகின்றார். விவிலியத்தில் பெயர் மாற்றம் எவ்வளவு முக்கியமானது என்பதை ஆபிரகாம், பேதுரு ஆகிய பெயர்களோடு ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்த்தால் புரிந்துவிடும்.

பரிசேயர்களின் சலசலப்பும் இயேசு அவர்களுக்கு அளித்த பதிலும்

மத்தேயு, இயேசுவால் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தன்னுடைய வீட்டில் பெரியதொரு விருந்து படைக்கின்றார், அந்த விருந்தில் இயேசு உட்பட பலதரப்பட்ட மனிதர்கள் கலந்துகொள்கிறார்கள். அப்போழுது பரிசேயக் கூட்டம் இயேசுவின் சீடர்களிடம், "வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்கிறார்கள். இயேசு மறுமொழியாக, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை" என்கின்றார்.

பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும், வரிதண்டுபவர்களைப் பாவிகள் என்று முத்திரை குத்தியபோது, இயேசு அவர்களைப் பாவிகளாகப் பார்க்காமல், நோயாளிகளாகப் பார்த்தார். நோயாளிகள் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, அவர்கள் அன்பு செலுத்தப்படவேண்டியவர்கள். அதனால்தான் ஒவ்வொரு பாவியையும் இயேசு நோயாளியாகப் பார்த்து, அவர்கள்மீது அன்பு காட்டினார். பரிசேயர்களிடம் இத்தகைய பார்வை இல்லாததினால்தான் அவர்கள் 'பாவிகளை' (!) வெறுத்து ஒதுக்கினார்கள்.

ஆகவே, இந்த சமூகம் வெறுத்து ஒதுக்குபவர்களை இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் பரிசேயர்களைப் போன்று வெறுத்து ஒதுக்காமல், இயேசுவைப் போன்று அன்பு செய்வது தேவையான ஒன்று.

சிந்தனை

இயேசு எல்லா மனிதர்களையும் தன்னுடைய உயிரைப் போன்றே பார்த்தார், அன்பு செய்தார். இயேசுவின் வழியில் நடக்கும் நாமும் இந்த சமூகம் வெறுத்து ஒதுக்குபவர்களை அன்பு செய்யவும் அவர்களை மனித மாண்போடு நடத்தவும் முயற்சி செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!