Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   08  மார்ச் 2019  
    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு!

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9a

இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே; எக்காளம் முழங்குவதுபோல் உன் குரலை உயர்த்து; என் மக்களுக்கு அவர்களின் வன்செயல்களையும், யாக்கோபின் குடும்பத்தாருக்கு அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு.

அவர்கள், நேர்மையானவற்றைச் செய்யும் மக்களினம்போலும், தங்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்போர் போலும் நாள்தோறும் என்னைத் தேடுகின்றார்கள்; என் நெறிமுறைகள் பற்றிய அறிவை நாடுகின்றார்கள்; நேர்மையான நீதித்தீர்ப்புகளை என்னிடம் வேண்டுகின்றார்கள்; கடவுளை அணுகிவர விழைகின்றார்கள்.

'நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக்கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்?' என்கின்றார்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்; உங்கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள்.

இதோ, வழக்காடவும், வீண் சண்டையிடவும், கொடும் கையால் தாக்கவுமே நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்! இன்றுபோல் நீங்கள் உண்ணா நோன்பிருந்தால் உங்கள் குரல் உன்னதத்தில் கேட்கப்படாது. ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணா நோன்பின் நாளாகத் தெரிந்துகொள்வது? ஒருவன் நாணலைப்போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்?

கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் 'இதோ! நான்' என மறுமொழி தருவார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:51: 1-2. 3-4a. 16-17 (பல்லவி: 17b)
=================================================================================
 பல்லவி: நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. 4a உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். பல்லவி

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றம் உணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
ஆமோ 5: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15


அக்காலத்தில் யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, "நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?'' என்றனர்.

அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

நோன்பு இருப்பது என்பது இன்றைக்கு ஒரு கலாச்சாரமாக மாறி வருகின்றது.

மருத்துவர்கள் சொல்லி பலவற்றை தவிர்ப்பது உண்டு.

தன்னை அழகுபடுத்;திக் கொள்ள, ஜவுளிக்கடை கண்காட்சி பொம்மையைப் போல தங்களை மாற்றிக் கொள்ள இன்று பல பேர் நோன்பிருப்பது உண்டு.

போராட்டங்கள், சலுகை, சம்பள உயர்வு என பல காரணங்களுக்காக உண்ணநோன்பிருப்பது உண்டு.

இதிலே மதரீதியாக கூட இன்றைக்கு காவியுடை உடுத்தி, விரதமிருந்து, நடை நடைந்து திருத்தலங்களுக்கு செல்லுவது என்பது நடைமுறையாகி வரும் போது, விரும்பியதை பெற்றுக் கொள்ள நேர்ச்சை என்ற பெயரில் கூட நோன்பிருந்து வருவது வழக்கமாகி உள்ள காலத்தில் இந்த நோன்பின் காலம் அர்த்தம் இழந்து போகின்றதோ என கேட்க தோன்றுகின்றது.

பாடுகளின் காலத்தில் நோன்பிருப்பது என்பது நம்முடைய பாவங்களை எண்ணி நம்மை அடக்கியாளவும், பாவத்திற்கு பரிகாரம் செய்து கொள்வதற்கும், இதனால் வரும் பொருளாதாரத்தை மற்றவர்களோடு பரிமாறிக் கொள்வதற்கும் என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  எது உண்மையான நோன்பு

பக்தன் ஒருவன் கடுந்தவம் (நோன்பு) புரிந்துவந்தான். ஒரு நாளில் அவன் கடவுளிடத்தில் முறையிடத் தொடங்கினான்.

"கடவுளே! நான் என்னுடைய மதம் போதிக்கின்ற எல்லாக் கோட்பாடுகளையும் தவறாமல் கடைப்பிடித்து வருகிறேன்; கடுந்தவம் புரிந்து, நேரம் தவறாமல் ஜெபித்து வருகிறேன். அப்படி இருக்கும்போது என்னை ஆசிர்வதிக்காமல் என்னுடயை பக்கத்து வீட்டுக்காரனை ஆசிர்வதித்திருக்கிறீர்கள்?, இது உங்களுக்கே நியாயமா?. அவன் ஒரு குடிகாரான், ஒழுங்கம் கெட்டவன். ஒருபோதும் ஜெபிப்பதில்லை. அவனைப் போய் ஆசிர்வதித்திருகிறீர்களே?" என்றான்.

உடனே கடவுள் அவனுக்கு முன்பாகத் தோன்றி, "அவனை நான் ஆசிர்வதிப்பதற்குக் காரணம், அவன் உன்னைப் போன்று வளவளவென்று பேசி என்னைப் போரடிக்கமாட்டான், அதனால்தான்" என்றார்.

ஜெபம் என்று சொன்னால் வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போகவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இக்கதை ஒரு சாட்டையடி.

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் கடவுளிடம், "நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்?, நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்று முறையிடுகிறார்கள். அதற்கு கடவுள், " ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும், சாம்பலையையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும், ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்?.

கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!" என்கிறார்.

ஆக உண்மையான நோன்பு/ ஜெபம் என்பது வறியவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, அவர்களை மனித மாண்போடு நடத்துவதுதானே ஒழிய ஜெபத்தை தவறாது சொல்லிக்கொண்டிருப்பது அல்ல.

நற்செய்தி வாசகத்தில்கூட நோன்பு பற்றிய கேள்வி எழுகிறபோது, அதாவது யோவானின் சீடர்கள் இயேசுவிடம், "நாங்களும், பரிசேயர்களும் நோன்பு இருக்கிறபோது உம்முடைய சீடர்கள் மட்டும் ஏன் நோன்பிருப்பதில்லை?" என்று கேட்கிறபோது இயேசு, "மணமகன் மனவீட்டாரோடு இருக்கும்போது நோன்பிருக்க முடியுமா?, மணமகன் மனவீட்டாரைப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்கள் நோன்பிருப்பார்கள்" என்கிறார்.இங்கே இயேசு கிறிஸ்து நோன்பிருக்க ஒரு காலம் உண்டு என்று சொல்லி அவர்களுக்கு பதிலடி தருகிறார்.

பொதுவாக பெரியவர்கள் சொல்லக்கூடிய கருத்து, "மதத்தைப் பின்பற்றுவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதில் மற்றவர்கள் மூக்கை நுழைக்கக்கூடாது" என்று. யோவானின் சீடர்கள் தவறாது நோன்பிருந்ததில் எந்தவிதத் தவறும் இல்லை. அதற்காக இயேசுவின் சீடர்களும் நோன்பிருக்கவேண்டும் என்று வற்புறுத்தியதுதான் மிகப்பெரிய தவறு.

ஆகவே இந்தத் தவக்காலத்தில் நோன்பு/ ஜெபம் என்பதை வெறுமனே கடமைக்காகச் செய்யாமல் பொருள் உணர்ந்து செய்வோம். குறிப்பாக வறியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வோம். அப்போது எசாயா இறைவாக்கினர் சொல்வது போல "உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்;

உன் நேர்மை உனக்கு முன் செல்லும்;ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும்".

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மக்களை நேசிப்பதும் அவர்கள் துயரத்தைத் துடைப்பதுமே
உண்மையான வழிபாடு


நிகழ்வு

யூத இராபி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவரிடம் குதிரைவண்டிக்காரன் ஒருவன் வந்தான். அவன் அவரிடம், "ஐயா! உங்களுடைய போதனையை இந்த வழியாகப் போகிறபோதும் வருகிறபோதும் அவ்வப்போது கேட்பேன்... ஆனால், நீங்கள் போதிப்பது போன்றுதான் என்னால் வாழமுடியவில்லை... நீங்கள் இறைவனை அடிக்கடி வழிபடவேண்டும் என்று சொல்கிறீர்கள்... என்னால் அப்படி வழிபடமுடியவில்லை" என்றான்.

அதற்கு இராபி அவனிடம், "அய்யனே! இறைவனை வழிபட முடியாத அளவிற்கு அப்படி என்ன வேலை பார்க்கிறாய்?" என்றார். "நான் ஒரு குதிரைவண்டிக்காரன்... ஒவ்வொருநாளும் நீண்டநேரம் வண்டி ஓட்டினால்தான், என்னை நம்பி இருக்கக்கூடிய குடும்பத்திற்கு உணவு கொடுக்க முடியும்... இதில் எங்கு போய் நான் இறைவனை அடிக்கடி வழிபட முடியும்!. அதற்கெல்லாம் நேரமில்லை" என்றான் குதிரை வண்டிக்காரன்.

"சரி, நீ குதிரைவண்டியை ஓட்டிச் செல்லும்போது யாரிடமாவது பணம் வாங்காமல், வண்டி ஓட்டியிருக்கிறாயா? என்றார் இராபி. உடனே அந்த குதிரைவண்டிகாரன், "எப்பொழுதெல்லாம் வறியவரையும் ஏழையையும் கர்ப்பிணிப் பெண்ணையும் குழந்தையையும் என்னுடைய வண்டியில் ஏற்றுகிறேனோ, அப்பொழுதெல்லாம் அவர்களிடமிருந்து பணம் வாங்குவதில்லை" என்றான் குதிரைவண்டிக்காரன். இதைக் கேட்ட இராபி அவனிடம், "இதைவிட சிறந்த வழிபாடு வேறெதுவும் இல்லை" என்று அவனை மனதார வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

'மக்களை நேசிப்பதும் அவர்களின் துயரத்தைத் துடைப்பதுமே சிறந்த வழிபாடு' என்பார் வெ. இறையன்பு என்ற எழுத்தாளர். இவ்வார்த்தைகளுக்கு அர்த்தம் தருவதாய் இருக்கின்றது மேலே உள்ள நிகழ்வு. இன்றைய முதல் வாசகமும் உண்மயான வழிபாடு என்பது எது என்பதற்கு மிகச் சிறப்பான ஒரு வரையறையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

வழிபாடு என்பது வெளியடையாளங்கள் அல்ல

இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளிடம், "நாங்கள் நோன்பிருந்து மன்றாடியபோதும் நீர் ஏன் எங்களுடைய மன்றாட்டைக் கேட்கவில்லை?" என்று கேட்கின்றார்கள். அதற்குக் கடவுள் அவர்களிடம், ஒருவன் தன்னை ஒடுக்கிக் கொள்வதையும் நாணலைப் போன்று தன்னைத் தாழ்த்திக் கொள்வதையுமா நோன்பு/ வழிபாடு என்று நினைக்கிறீர்கள்... அதுவல்ல நோன்பு அல்லது வழிபாடு என்கிறார் கடவுள்.

யூதர்கள் சடங்குமுறைகளைக் கடைப்பிடிப்பது மட்டுமே வழிபாடு என்று நினைத்தார்கள். அதனால் அவர்கள் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவந்தார்கள். அந்த வழிபாடு சுட்டிக்காட்டும் இறையன்பையும் பிறரன்பையும் அவர்கள் கடைப்பிடிக்கத் தவறினார்கள். அதனால்தான் அவர்கள் வறியவர்களையும் ஏழைகளையும் ஒடுக்கினார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான், வழிபாடு என்பது எது என்ற விளக்கத்தை கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குத் தருகின்றார்.

உண்மையான வழிபாடு என்பது இறையன்பின் வெளிப்பாடாக விளங்கும் இரக்கச் செயல்பாடுகளே!

எது வழிபாடு கிடையாது என்று சொன்ன கடவுள், உண்மையான வழிபாடு என்பது கொடுமைத்தளைகளை அகற்றுவதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும் பசித்தோருக்கு உண்ணக் கொடுப்பதும் வறியவருக்கு தங்க இடமளிப்பதும் ஆடையில்லாத ஏழையைக் கண்டால் உடுத்துவதும்... என்கின்றார். அப்படியென்றால், உண்மையான வழிபாடு என்பது வெளியடையாளங்களில் இல்லை, மாறாக, உள்ளார்ந்த அன்பில் வெளிப்படும் அன்புச் செயல்களாக அல்லது இரக்கச் செயல்களாக இருக்கின்றது

யூதர்கள் தங்களோடு இருந்த ஏழைகளையும் வறியவர்களையும் கைவிடப்பட்டவர்களையும் ஒடுக்கினார்கள்; கடுமையாக வஞ்சித்தார்கள். அதனால்தான் அவர்களுடைய வழிபாடுகள் உண்மையான வழிபாடாக இல்லாமல், வெளியடையாளங்களாக இருந்தன. மட்டுமல்லாமல், அவை இறைவனிடமிருந்து அருளைப் பெற்றுத் தரமுடியாத நிலையில் இருந்தன. சில சமயங்களில் நம்முடைய மன்றாட்டுக்கள் கேட்கப்படாமல் இருப்பதற்குக் காரணம் இதுதான். ஒருவர் அடுத்தவரை ஒடுக்கிக் கொண்டிருந்தால், ஆண்டவர் எப்படி அவருடைய மன்றாட்டைக் கேட்பார்! நிச்சயமாகக் கேட்கமாட்டார். ஆதலால், உண்மையான வழிபாடு இறையன்பில் வெளிப்பட்ட பிறரன்புச் செயல்கள்தானே தவிர், வெளியடையாளங்கள் அல்ல என்ற உண்மையை உணர்ந்துகொள்வது நல்லது.

உண்மையான வழிபாடு செய்வோருக்கு இறைவன் அளிக்கும் ஆசி

ஆண்டவராகிய கடவுள், எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, உண்மையாக வழிபாடு செய்வோரின் ஒளி விடியலைப் போல எழும் என்றும் நலமான வாழ்வு கிடைக்கும் என்றும் நேர்மை அவர்களைப் முன்தொடரும் என்றும் தன்னுடைய மாட்சி பின்தொடரும் என்றும் கூறுகின்றார். உண்மைதான். உண்மையாக இறைவனை வழிபடுவோருக்கு ஆண்டவரின் ஆசி அளப்பெரியது. அத்தகைய ஆசியைப் பெற ஒவ்வொருவரும் உண்மையாக வழிபாடு செய்வோம்.

சிந்தனை

'அன்பில் சிறந்த தவமில்லை நோன்பில்லை' என்பர் சான்றோர். நாம் செய்யும் எல்லா வழிபாடுகளையும் அன்பில் மையப்படுத்திச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
நோன்பெனப்படுவது யாதெனில்...

நிகழ்வு

சுவாமி விவேகானந்தர் இளைஞராக இருந்தபோது, அவரது வீட்டு வாசலில் ஒரு துறவி வந்து யாசகம் கேட்டார். அவரை விவேகானந்தர் கூர்ந்து நோக்கியபோது, அவரது உடலில் கிழிந்து உடைகள் தொங்கிக்கொண்டிருந்தன. விவேகானந்தர் அப்போதுதான் ஒரு புதிய துணியை அணிந்திருந்தார். இதற்கிடையில் விவேகானந்தர் தன் ஆடையைக் கருணையோடு பார்ப்பதைக் கண்ட துறவி, "தம்பி உன் ஆடையை எனக்குத் தருவாயா?" என்று கேட்க, மறுகணமே அவர் தன் ஆடைகளை அந்தத் துறவிக்குக் கழற்றிக் கொடுத்தார்.

பசித்திருப்பவருக்கு உண்ணக் கொடுப்பதும் தங்க இடமில்லாதவருக்கு இடமளிப்பதும் அடையில்லாதவருக்கு ஆடை கொடுப்பதுதான் உண்மையான நோன்பு (எசா 58:7) என்கின்றது விவிலியம். அந்த வகையில் பார்க்கின்றபோது, சுவாமி விவேகானந்தரின் இச்செயல் உண்மையான நோன்பிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

நோன்பு குறித்த கேள்வி

நற்செய்தி வாசகத்தில், யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, "நாங்களும் பரிசேயர்களும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் இருப்பதில்லை?" என்றொரு கேள்வியைக் கேட்கின்றார்கள். இயேசு அவர்களுக்கு என்ன பதிலளித்தார் என்று சிந்தித்துப் பார்ப்பது முன்பாக, யோவானின் சீடர் நோன்பு என்று எதைக் குறிப்பிடுகின்றனர்?, அவர்கள் நோன்பிருந்த விதம் எப்படி இருந்தது? அவர்கள் ஏன் இயேசுவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

வெளிவேடத்திற்காக நோன்பிருந்தவர்கள்

ஆண்டுக்கொரு முறை பாவப் பரிகார நாளில் நோன்பிருப்பது யூதர்களின் வழக்கம். அதை ஒவ்வொரு யூதரும் தவறாமல் கடைப்பிடித்து வந்தனர். ஆனால், நாட்கள் ஆக ஆக 'சமயக் காவலர்கள்' என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்ட பரிசேயர்கள், மற்றவர்களை விடத் தங்களை உயர்ந்தவர்கள் என்று காட்டிக்கொள்ள விரும்பி, வாரம் இருமுறை நோன்பிருக்கத் தொடங்கினார்கள் (லூக் 18:12). இந்த இரண்டு நாட்களுமே சந்தை கூடும் நாட்கள் என்பது இன்னொரு தகவல். மக்கள் அதிகமாகக் கூடிவரும் சந்தை நாட்களில் தாங்கள் நோன்பிருப்பது போன்று (மத் 6:16) மக்களிடம் காட்டிக்கொண்டால், மக்கள் தங்களைப் புகழ்வார்கள் என்பதற்காக நோன்பிருந்தார்கள். பரிசேயர்கள் பின்பற்றி வந்த இந்த வழக்கத்தை யோவானின் சீடர்களும் கடைபிடித்தார்கள் என்பதுதான் இதிலுள்ள வேடிக்கை.

இப்படிப்பட்டவர்கள் தாங்கள் நோன்பிருந்ததோடு மட்டுமல்லாமல், இயேசுவிடம் வந்து, "உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?" என்று கேட்பதுதான் மிகவும் அபத்தமாக இருக்கின்றது. அப்பொழுதுதான் இயேசு அவர்களிடம், தன்னுடைய சீடர்கள் ஏன் நோன்பிருக்கவில்லை என்ற காரணத்தை விளக்குகின்றார்.

இவ்வுலகிற்குத் துக்கத்தை அல்ல, மகிழ்ச்சியைக் கொண்டுவந்த இயேசு

'மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்பொழுது அவர்களும் நோன்பு இருப்பார்கள்" இதுதான் இயேசு யோவானின் சீடர்களுக்குச் சொல்கின்ற பதிலாக இருக்கின்றது.

யூதர்களின் திருமண விழா ஒருவாரத்திற்கு மேல் நடைபெறும். அந்த ஒருவாரம் முழுவதும் மணமக்களை வாழ்த்துவதற்காகவும் அவர்கள் அளிக்கின்ற விருந்தில் கலந்துகொள்வதற்காகவும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். இதனால் மணவீடே மிகவும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இங்கு தன்னை மணமகனாகச் சுட்டிக்காட்டும் இயேசு, தான் தன்னுடைய சீடர்களோடு/ பிரியமானவர்களோடு இருக்கும்போது அவர்கள் எப்படி துக்கம் கொண்டாட முடியும்?. தான் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய நாள்வரும். அப்பொழுது அவர்கள் நோன்பிருப்பார்கள் என்று இயேசு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

இயேசு யோவானின் சீடர்களுக்கு கூறுகின்ற பதிலிலிருந்து ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். இயேசு இந்த உலகத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்தாரே ஒழிய, துக்கத்தை அல்ல (யோவா 15:11). ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் அவரோடு இணைந்து மகிழ்ந்திருப்பது நல்லது. அதைவிடுத்து 'நான் நோன்பிருக்கிறேன், நீ ஏன் நோன்பிருக்கவில்லை' என்று அடுத்தவரிடம் குற்றம் காண்பது எந்தவிதத்திலும் சரியானதாக இருக்காது.

சிந்தனை

இறைவனை வழிபடுவதும் வழிபடாததும் அவரவருடைய தனிப்பட்ட விருப்பம். அதைவிடுத்து, ஒருவர் வழிபடவில்லை என்பதற்காக அவரிடம் நாம் குற்றம் காண்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது இல்லை. மேலும், நாம் இருக்கும் நோன்பு வெறும் சடங்காக மட்டும் இருந்துவிடாமல், அது செயல்வடிவம் பெற்று, எளியவரின் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட நோன்பே உண்மையான நோன்பு.

ஆகவே, நோன்பின் அர்த்தத்தை உணர்ந்து நோன்பிருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!