Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   07  மார்ச் 2019  
    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20

மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன். அது இதுதான்; இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி.

அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.

ஆனால் உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால், இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்து போவாய். நீ உரிமையாக்கிக்கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது. உன்மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும்பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள்.

உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச் செவிகொடு; அவரையே பற்றிக்கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:1: 1-2. 3. 4,6 (பல்லவி: திபா 40: 4a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 17

அல்லேலூயா, அல்லேலூயா! மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 22-25

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி, "மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்" என்று சொன்னார்.

பின்பு அவர் அனைவரையும் நோக்கிக் கூறியது: "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.

ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.

ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

உயிரை தந்தவர் அவரே.
அவரின் பொருட்டு, அவரின் இறையாட்சியின் பொருட்டும் உயிரை இழப்பவருக்கு மீண்டும் கொடுப்பேன் என வாக்களிக்கின்றார்.
வாழ்வை இழக்கவும், வரையரை வேண்டும்.
நல்ல கொள்கைக்காக, நல்ல வாழ்வை இழக்க முற்படும் போது, அதனை காத்துக் கொள்வோம் என்ற உத்திரவாதத்தையே தருகின்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  முதல் வாசகம்

இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20

உன் வாழ்க்கை உன் கையில்

நிகழ்வு

முன்பொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் தனக்குக்கீழ் இருந்த அமைச்சர் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சரிவரச் செய்யாமல், ஊழலில் ஈடுபட்டு வருவதாக கேள்விப்பட்டான். உடனே அவன் அந்நாட்டில் இருந்த திறமையான மூன்று இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, "உங்களை நான் மக்கள் நலப்பணிகளில் அமர்த்தப் போகிறேன். அதற்கு முன்பாக உங்களுக்குக் களப்பயிற்சி தரப்போகிறேன். அதனால் இப்பொழுது உங்களிடம் ஆளுக்கொன்றாகத் தரப்படும் சாக்குப்பையைக் கொண்டு, அருகாமையில் உள்ள காட்டிற்குள் சென்று, அதை நிரப்பிக் கொண்டுவரவேண்டும். இதுதான் நான் உங்களுக்குத் தரும் களப்பயிற்சி" என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

இதற்குப் பின்பு மூன்று இளைஞர்களும் தங்களிடம் கொடுக்கப்பட்ட சாக்குப்பைகளுடன் காட்டிற்குள் சென்றார்கள். முதல் இளைஞன், 'அரசன் சாக்குப் பையை நிரப்பத்தானே சொன்னான், வேறொன்றும் சொல்லவில்லையே' என்று கையில் அகப்பட்ட இலைதழைகளை எல்லாம் பறித்து, சாக்குப் பையில் நிரப்பிவைத்து, அரண்மனைக்கு கொண்டுவந்தான். இரண்டாம் இளைஞனோ, சாக்குப்பையின் மேல் பகுதியில் நல்ல பழங்களைக் கொண்டு நிரப்பிவிட்டு, அடியில் அழுகிய பழங்களைக் கொண்டு நிரப்பி 'இதெல்லாம் அரசனுக்குத் தெரியாது' என்ற நினைப்பில் அந்த சாக்குப்பையை அரண்மனைக்குத் தூக்கிக்கொண்டு வந்தான். மூன்றாவது இளைஞனோ 'நேரமானாலும் பரவாயில்லை, இந்த சாக்குப்பையில் நல்ல பழங்களைச் சேகரித்து கொண்டு போவோம்' என்று காட்டிலிருந்த நல்ல பழங்களை சேகரித்து, அவற்றை அந்த சாக்குப்பையில் போட்டு நிரப்பி அரண்மனைக்குக் கொண்டுவந்தான்.

மூன்று இளைஞர்களும் அரண்மனைக்கு வந்ததும், அரசன் அவர்களிடம், "நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சாக்குப்பையை நிரப்பிக்கொண்டு வந்திருக்கிறீர்கள் அல்லவா! மிகவும் மிகழ்ச்சி. இப்பொழுது நீங்கள் உங்களுடைய சாக்குப் பையில் உள்ளவற்றை சாப்பிட்டுக் காலி செய்யுங்கள்" என்றான். இதைக் கேட்டுவிட்டு முதல் இளைஞன், "அரசே! நான் என்னுடைய சாக்குப்பையில் இலைதழைகளை நிரப்பிக் கொண்டுவந்திருக்கின்றேன்... அவற்றை என்னால் சாப்பிடமுடியாது... என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று அரசனுடைய காலில் விழுந்தான். இரண்டாம் இளைஞனோ, "அரசே! என்னுடைய பையில் அழுகிய பழங்கள் இருக்கின்றன. அவற்றை என்னால் சாப்பிடமுடியாது... என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று அவனும் அரசனுடைய காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.

மூன்றாவது இளைஞன் தன்னுடைய சாக்குப் பையில் நல்ல பழங்களை நிரப்பிக் கொண்டு வந்ததால், அவற்றை அரசனுக்கு முன்பாகச் சாப்பிட்டு முடித்தான். இதைப் பார்த்துவிட்டு அரசன் அந்த மூன்றாவது இளைஞனிடம், "மற்ற இரண்டு இளைஞர்களைவிட நீ உனக்க்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பில் உண்மையாகவும் பொறுப்பாகவும் இருந்ததால் உன்னை நான் அமைச்சராக உயர்த்துகிறேன்" என்று அந்த மூன்றாவது இளைஞனை அமைச்சராக உயர்த்தினான் அந்த அரசன்.

ஒவ்வொருவரும் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கையை எப்படிப் பயன்படுத்துகிறார்களோ அதைப் பொறுத்து, அவர்களுடைய வாழ்வும் தாழ்வும் இருக்கிறது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகமும் இத்தகையதொரு செய்தியைத்தான் எடுத்துச் சொல்கின்றது, நம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

வாழ்வா? சாவா?

இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் மக்களை பார்த்து, "வாழ்வையும் நன்மையையும் சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்" என்கின்றார். கடவுள் வாழ்வு என்று குறிப்பிடுவது அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வது, சாவு என்று குறிப்பிடுவது அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல் வாழ்வது. இஸ்ரயேல் மக்கள் தன்னுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் அவர்கள் ஆசியும் கடைப்பிடிக்காமல் வாழ்ந்தால் தண்டனையும் பெறுவார்கள் என்கின்றார் கடவுள். அவர் சொன்னது போன்று யாராரெல்லாம் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தார்களோ, அவர்களெல்லாம் ஆசியும் யாராரெல்லாம் கடைப்பிடித்து வாழவில்லையோ, அவர்கள் தண்டனையும் பெற்றார்கள்.

இயேசுவின்மீது நம்பிக்கை வைப்போர் வாழ்வர்

இணைச்சட்ட நூலில் கொடுக்கப்பட்ட அதே கட்டளைகளுக்கு இணையாக யோவான் நற்செய்தியில் ஒரு கட்டளை தரப்படுகின்றது. அதுதான் 'இயேசுவின்மீது நம்பிக்கை வைத்தால் வாழ்வும் அவர்மீது அவநம்பிக்கை கொண்டால் தண்டனைத் தீர்ப்பும்' என்பது (யோவா 3:18). இதையே நம் ஒவ்வொருவருடைய வாழ்விற்கான பாடமாக எடுத்துக்கொள்ளலாம். உண்மையில் யாராரெல்லாம் இயேசுவின்மீது வைத்து, அவருடைய விழுமியங்களின்படி வாழ்கிறார்களோ அவர்கள் வாழ்கிறார்கள். இதற்கு மாறாக, யாராரெல்லாம் அவர்மீது நம்பிக்கை வைக்காமலும் அவருடைய விழுமியங்களின்படி நடக்காமலும் இருக்கிறார்களோ, அவர்கள் அதற்கேற்ற கைமாறினைப் பெறுகிறார்கள். இந்த இரு வகையினரில் நாம் யார் என்பதை நாமே முடிவுசெய்து கொள்வோம்.

சிந்தனை

கடவுள், நாம் அழிந்துபோக வேண்டும் என்றெல்ல, வாழவேண்டும் என்றே விரும்புகிறார் (2பேது 3:9) எனவே, அத்தகைய அன்பு இறைவன்மீது நம்பிக்கை கொண்டு, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 தன்னலம் துறந்து இயேசுவின் சீடர்களாவோம்.

ஆற்றங்கரை ஓரத்தில் துறவி ஒருவர் குருகுலம் நடத்தி வந்தார். அந்த குருகுலத்தில் பயிற்சிபெற்ற சீடர்கள் இருவர், தங்களுடைய பயிற்சியை முடித்துவிட்டு, விடைபெறுவதற்கு முன்பாக துறவியிடம் இறுதி ஆசிர் பெறுவதற்காக வந்தார்கள். அப்போது துறவி அவர்கள் இருவரையும் பார்த்து, "மீண்டுமாக நீங்கள் என்னைச் சந்திக்குபோது ஏதாவது ஒரு சாதனையோடுதான் வரவேண்டும்" என்றார். அதற்கு அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்கள்.

இரண்டு சீடர்களும் ஆற்றங்கரையின் இரண்டு ஓரமாக அமர்ந்துகொண்டு தங்களுடைய தவத்தைத் தொடங்கினார்கள். மூன்று ஆண்டுகள் கடுமையான தவம் புரிந்துவிட்டு தங்களுடைய குருவை (துறவியைப்) பார்க்க வந்தார்கள்.

அப்போது அவர் அவர்களிடத்தில், "நீங்கள் என்ன சாதித்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு முதலாவது சீடன், "நான் ஆற்றில் நடப்பதற்கான ஆற்றலைப் பெற்றிருக்கிறேன்" என்று சொல்லி ஆற்றிலே நடந்துகாட்டினார். துறவி அந்த சீடரின் சாதனையை மெச்சினாலும், கொஞ்சம் அலுத்துக்கொண்டார். அவர் அந்த சீடனிடத்தில் சொன்னார், "இதற்காகவா உன்னுடைய மூன்று ஆண்டுகளையும் விரயமாக்கினாய்?. பேசாமல் படகோட்டியிடம் கொஞ்சம் பணம் கொடுத்தால், அவன் உன்னை ஆற்றின் மறுகரைக்கு கூட்டிக்கொண்டு போய்விடுவான்" என்றார்.

பின்னர் குரு அடுத்த சீடனிடத்தில், "நீ என்ன சாதனை செய்தாய்?" என்று கேட்டார். அதற்கு அவன், "நான் இந்த மூன்று ஆண்டுகள் கடுந்தவம் செய்தேன். அதோடு எனக்கு நேரம் கிடைக்கின்றபோது எல்லாம் அருகே கிடந்த கருங்கற்களை எல்லாம் எடுத்து பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் போட்டு, சிறுபாலம் ஒன்று அமைத்தேன்" என்றான்.

சீடன் சொன்ன நேரத்தில் அங்கே ஒருசில மனிதர்கள், ஆற்றின் குறுக்கே இருந்த சிறிய பாலத்தில் நடந்துகொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த துறவி அந்த சீடனிடத்தில், "உண்மையில் உன்னுடைய செயலைப் பாராட்டுகிறேன். ஏனென்றால் மற்ற சீடனோ தான் எப்படி ஆற்றில் நடப்பது என்பது குறித்துத்தான் கவலைப்பட்டான். ஆனால் நீயோ மக்களை எப்படி இந்த ஆற்றின் குறுக்கே நடக்கச் செய்வது என்பது குறித்து யோசித்தாய். பிறரைப் பற்றி அக்கறைகொண்ட நீதான் என்னுடைய உண்மையான சீடன்" என்று சொல்லி அவனை வெகுவாகப் பாராட்டினார்.

பிறரைப் பற்றிய அக்கறைகொள்பவனே உண்மையான சீடன் என்பதை இக்கதையானது நமக்கு தெளிவாக விளக்குகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னைப் பின்பற்றி வருபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பது குறித்துப் பேசுகிறார். "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்கிறார் இயேசு. ஆக, இயேசுவின் சீடராக இருப்பதற்கான முதல் தகுதியே தன்னலத்தைத் துறந்து பொதுநலத்தோடு வாழ்வதுதான்.

எவர் ஒருவர் தன்னலத்தைத் துறந்து பொதுநலத்தோடு வாழ்கிறாரோ அவரிடத்தில் இயல்பாகவே (இயேசுவுக்காக) துன்பங்களையும், சிலுவைகளையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் வரும்.

ஆனால் இன்றைக்கு நம்மால் தன்னலத்தைத் துறந்து, இயேசுவின் உண்மையான சீடர்களாக இருக்க முடிகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. "இந்தச் சட்டை என்னுடையது, இந்த வீடு என்னுடையது என்ற குறுகிய சுயலத்தை விடுங்கள். இந்த ஊர் என்னுடையது, இந்த உலகம் என்னுடையது என்று எல்லாவற்றையும் உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள்" என்பான் கவிஞன் ஒருவன்.

ஆகவே இயேசுவின் உண்மைச் சீடர்களாக இருக்கக்கூடிய நாம் தன்னலத்தைத் துறப்போம். பொதுநலத்தோடு வாழ்வோம். இயேசுவுக்காக எதையும் தாங்கிக்கொள்ளும் மனத்திடம் பெறுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
நற்செய்தி வாசகம்

என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 22-25

இயேசுவின் சீடர்!

நிகழ்வு

ஆண்ட்ரூ கார்னகியைக் குறித்து எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?... ஸ்காட்லாந்திலிருந்து அமெரிக்காவிற்குச் சென்று, சின்னச் சின்ன வேலைகளைச் செய்து, பிறகு உலகின் மிகப்பெரிய எஃகு தொழிற்சாலை உரிமையாளராக உயர்ந்தவர்தான் ஆண்ட்ரூ கார்னகி. ஒருசமயம் அவரிடம் ஒருவர் கேட்டார், "இவ்வளவு பெரிய உயரத்தை எட்டும் முன், பலதரப்பட்ட சூழ்நிலைகளை, அவமானமான அனுபவங்களை சந்தித்து வந்திருப்பீர்கள்... அதையெல்லாம் எப்படி சமாளித்தீர்கள்?".

ஆண்ட்ரூ கார்னகி அவரிடம் மிகவும் பொறுமையாகப் பதில் சொன்னார். "தங்கச் சுரங்கத்தில் இறங்கும்போது புழுதியும் மணலும் அழுக்கும் அப்பிக் கொள்கின்றன... அவற்றைக் கடந்து போனால்தான் தங்கம் கிடைக்கிறது. புழுதிக்குப் பயந்தால் தங்கம் எடுக்க முடியாது... சிரமங்களுக்குப் பயந்தால் சிகரம் தொட முடியாது".

எவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் இவை. எப்படி சிரமங்களுக்குப் பயப்படும் யாரும் சிகரம் தொடமுடியாதோ, அதுபோன்று சிலுவைக்குப் பயப்படும் யாரும் இயேசுவின் சீடராக முடியாது. இயேசுவின் பொருட்டு வாழ்வில் வரும் சிலுவைகளைச் சுமக்கும் ஒருவரால் மட்டுமே இயேசுவின் சீடராக இருக்க முடியும். நற்செய்தியில் இயேசு கிறிஸ்து, தன்னுடைய பாடுகளைக் குறித்தும் தன்னைப் பின்பற்றி வருகின்றவர் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் குறித்துப் பேசுகின்றார். நாம் இவ்விரண்டையும் குறித்து சிந்தித்துப் பார்த்து, இயேசுவின் உண்மையான சீடராக இருப்பதற்கு முயற்சி செய்வோம்.

தன் பாடுகளைக் குறித்து முன்னறிவித்த இயேசு

நற்செய்தியில் இயேசு கிறிஸ்து, தன்னுடைய பாடுகளைக் குறித்து முன்னறிவிக்கின்றார். இங்கு மட்டுமல்லாது, பல இடங்களிலும் இயேசு தன்னுடைய பாடுகளைக் குறித்து முன்னறிவிக்கின்றார்.

திருமுழுக்கு யோவான் இயேசுவைக் குறித்து "இவரே கடவுளின் ஆட்டுக்குட்டி" (யோவா 1:29) என்று சொன்னதுபோக, எருசலேம் திருக்கோவிலின் அழிவைக் குறித்துப் பேசுகின்றபோதும் (யோவா 2:15) பாலைவனத்தில் வெண்கலப் பாம்பு உயர்த்தப்பட்டதைக் குறித்துப் பேசுகின்றபோதும் (யோவா 3: 14) யோனாவைக் குறித்துப் பேசுகின்றபோதும் (மத் 12: 38-40) இயேசு தன்னுடைய பாடுகளைக் குறித்து மிக வெளிப்படையாகவே பேசுகின்றார். இதன்மூலமாக இயேசு தான் யார் என்பதை சீடர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டே இருந்தார். அப்படியிருந்தும் சீடர்களால் இயேசு சொன்னதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு முக்கியமான காரணம், சீடர்களுடைய மந்தமான நிலைதான் (யோவா 16:12).

தன்னுடைய பாடுகளைக் குறித்துப் பேசிவிட்டு, இயேசு தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்தும் பேசுகின்றார். நாம் அதைக் குறித்து இப்போது பார்ப்போம்.

தன்னலம் துறக்கவேண்டும்

தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்துப் பேசும் இயேசு, அவர்கள் தன்னலத்தைத் துறந்தவர்களாக இருக்கவேண்டும் என்கின்றார. இயேசு செய்யும் இறையாட்சிப் பணி, எல்லாருமானது. அப்படிப்பட்ட பணியில் ஒருவர் தனக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடாது என்பதால், "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலத்தைத் துறக்கவேண்டும்" என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். உண்மையில் சுயத்தை அல்லது தன்னலத்தைத் துறக்கின்ற ஒருவரால் மட்டுமே இயேசுவின் சீடராக முடியும். அப்படித் துறக்காதவர் ஒருபோதும் இயேசுவின் சீடராக இருக்க முடியாது.

தன் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்பற்றவேண்டும்.

இயேசுவைப் பின்பற்ற விரும்புகின்ற ஒருவர் அடுத்ததாகச் செய்யவேண்டியது, தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்பற்றவேண்டும். 'குரு எவ்வழியோ, அவ்வழியே சீடர்களும்' என்பதுபோல, இயேசுவைப் பின்பற்ற விரும்புகின்றவர் அல்லது அவருடைய சீடராக இருக்க விரும்புகின்றவர், அவரைப் போன்று சிலுவை நாள்தோறும் தூக்கிக்கொண்டு அவரைப் பின்பற்றவேண்டும். இன்றைக்குச் சிலுவையை சுமந்துவிட்டு நாளைக்குப் தூரக் கடாசிவிடலாம் என்பதில்லை. நாள்தோறும் சிலுவைத் தூக்கிக்கொண்டு, வேறு யாரையும் அல்ல, இயேசுவைப் பின்பற்றிச் செல்ல வேண்டும்.

இந்த மாணவர்களுக்கும் சீடர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். மாணவர்கள் என்பவர்கள் ஆசிரியர் சொல்வதை அப்படியே கேட்கக்கூடியவர்கள். ஆனால், சீடர்களோ ஒருபடி மேலே சென்று, ஆசிரியர் சொல்வதைக் கேட்பதோடு மட்டுமல்லாமல், அதைக் கடைப்பிடித்து வாழவேண்டும். இங்கு இயேசு விரும்புவது, தன்னைப் பின்பற்றி வருகின்றவர்கள் சீட்ரகளாக இருக்கவேண்டும் என்றுதானே ஒழிய, மாணவர்களாக அல்ல.

எனவே, இயேசுவைப் பின்பற்ற விரும்புகின்றவர் அவரைப் போன்று எல்லாவிதமான சிலுவைகளையும் தாங்கிக் கொள்ளவேண்டும், தேவைப்பட்டால் உயிரையும் தரவேண்டும். அதுதான் இயேசுவின் சீடருக்கு அழகு. அப்படிப்பட்டவர் தன் உயிரை இழந்தாலும், அதை நிலைவாழ்வுக்குக் காத்துக் கொள்வார்.

சிந்தனை

'சிலுவைகளே சிகரத்தில் ஏற்றிவைக்கும் ஏணிப்படிகள்'. இந்த உண்மையை உணர்ந்து, வாழ்வில் வரும் சிலுவைகளைத் தாங்கிக்கொண்டு இயேசுவின் வழியில் நடந்து, அவரது உண்மைச் சீடர்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!