Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   02  மார்ச் 2019  
            பொதுக்காலம் 7ம் வாரம் சனிக்கிழமை - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
கடவுள் தமது சாயலாகவே மனிதரை உருவாக்கினார்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 17: 1-15

ஆண்டவர் மனிதரை மண்ணால் படைத்தார்; மீண்டும் அந்த மண்ணுக்கே திரும்புமாறு செய்கிறார். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலவரையை வகுத்தார்; மண்ணுலகில் உள்ளவற்றின்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

தமக்கு உள்ளதைப் போன்ற வலிமையை அவர்களுக்கு வழங்கினார்; தமது சாயலாகவே அவர்களை உருவாக்கினார். எல்லா உயிரினங்களும் மனிதருக்கு அஞ்சும்படி செய்தார்; விலங்குகள், பறவைகள்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

தம் ஐந்தறிவைப் பயன்படுத்தும் உரிமையை ஆண்டவர் அவர்களுக்கு அளித்தார்; ஆறாவதாகத் தம் அறிவுத்திறனில் பங்கு கொடுத்தார்; அந்த ஆறறிவையும் விளக்கும் பகுத்தறிவை ஏழாவது கொடையாக வழங்கினார். விருப்புரிமை, நாக்கு, கண், காது ஆகியவற்றையும் சிந்திப்பதற்கு ஓர் உள்ளத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்.

அவர்களை அறிவாலும் கூர்மதியாலும் நிரப்பினார்; நன்மை தீமையையும் அவர்களுக்குக் காட்டினார். அவர்களின் உள்ளத்தைப் பற்றி விழிப்பாய் இருந்தார்; தம் செயல்களில் மேன்மையைக் காட்டினார். தம் வியத்தகு செயல்கள் பற்றி என்றும் பெருமைப்படும் உரிமையை அவர்களுக்கு அளித்தார்.

அவர்கள் அவரது திருப்பெயரைப் புகழ்வார்கள்; இவ்வாறு அவருடைய செயல்களின் மேன்மையைப் பறைசாற்றுவார்கள். அறிவை அவர்களுக்கு வழங்கினார்; வாழ்வு அளிக்கும் திருச்சட்டத்தை அவர்களுக்கு உரிமையாக்கினார்.

அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்துகொண்டார்; தம் தீர்ப்புகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அவர்களின் கண்கள் அவருடைய மாட்சியைக் கண்டன; அவர்களின் செவிகள் அவரது மாட்சியின் குரலைக் கேட்டன. `எல்லா வகைத் தீமைகள் குறித்தும் கவனமாய் இருங்கள்' என்று அவர் எச்சரித்தார்; அடுத்திருப்பவர்களைப் பற்றிய கட்டளைகளை அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். மனிதரின் வழிகளை ஆண்டவர் எப்போதும் அறிவார்; அவரின் பார்வையிலிருந்து அவை மறைந்திருப்பதில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:103: 13-14. 15-16. 17-18 (பல்லவி: 17a காண்க)
=================================================================================
 பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சுவோர்மீது அவரது பேரன்பு நிலைத்திருக்கும்.

13 தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார்.
14 அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவில் உள்ளது.
-பல்லவி

15 மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள்.
16 அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது.
-பல்லவி

17 ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும்.
18 அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்குள் நுழையமாட்டார்.

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (10: 13-16)

அக்காலத்தில் சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.

இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.

இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

சிந்தனை

சிறியவர்கள் யதார்த்தமானவர்கள்.
யதார்த்த உணர்வு நம்மிடையே இருப்பது நம்மையும் சிறியவர்களாக மாற்றும்.
இத்தகையோருக்கே இறையரசு உண்டு என்கின்றார்.
நாமும் இறையரசின் மக்களாக யதார்த்த உணர்வுடனே வாழ நம்மை ஒப்புக் கொடுப்போம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  சீராக் 17: 1-15

அடுத்திருப்பவர்களைப் பற்றிய கட்டளைகளை அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்

நிகழ்வு


ஜப்பானியர்கள் இயல்பிலேயே பிறர்நலத்தோடு இருப்பவர்கள். இப்படிப்பட்ட பண்பு அவர்களிடம் எப்படி வந்தது என்பதற்குச் சொல்லப்படுகின்ற ஒரு நிகழ்வு.

ஒரு சமயம் ஒருதாய் தெருவில் அமர்ந்துகொண்டு, இரண்டு குழந்தைகளை மடியில் வைத்து அவர்களுக்குச் சோறூட்டிக் கொண்டிருந்தாள். அப்பொழுது எதிரிநாட்டவர் ஜப்பானுக்குள் புகுந்து, கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்த்துக்கொண்டே வந்தார்கள. இதனால் அனைவரும் அலறியடித்துக் கொண்டு நாலாபக்கமும் சிதறி ஓடினார்கள். மடியில் இரண்டு குழந்தைகளையும் வைத்துச் சோறூட்டிக் கொண்டிருந்த அந்தத் தாயோ, எதிரிநாட்டவர் கையில் வாளோடும் ஈட்டியோடும் தன்னை நோக்கி வேகமாக வருவதை அறிந்து, 'கையில் இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு வேகமாக ஓட முடியாதே... அப்படி ஓடினால் இரண்டு குழந்தைகளும் கொல்லப்படுவார்களே... என்ன செய்வது?' என்று யோசித்தாள். உடனே அவள் தன்னுடைய இடபக்கம் இருந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு, வலப்பக்கம் இருந்த குழந்தையை தன் தோள்மேல் போட்டுக்கொண்டு வேகமாக ஓடி மறைந்தாள்

அவள் ஓடிமறைவதற்கும் எதிரி நாட்டவர் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது. பின்னர் அவர்கள் தெருவில் தனித்துவிடப்பட்ட குழந்தையை வெட்டிச் சாய்த்துவிட்டு வேகமாகப் பறந்தனர். இதையெல்லாம் தனது வீட்டுச் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர், அந்த தாயை அழைத்து, "எம்மா!... எந்தத் தாயாவது தன்னுடைய குழந்தைகளில் பாடுபாடு பார்ப்பாரா? நீ ஏன் ஒருகுழந்தையை இங்கு விட்டுவிட்டு இன்னொரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடினாய்? இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு ஓடியிருக்கலாமே?"என்றார்.

அந்தத் தாய் பெரியவர் சொன்ன எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டுவிட்டு தொடர்ந்தார். "ஐயா! நீங்கள் சொல்வதுபோல் இரண்டு குழந்தைகளையும் கையில் தூக்கிக்கொண்டு ஓடியிருந்தால், என்னால் அவ்வளவு வேகமாக ஓடியிருக்க முடியாது... அப்படி ஓடியிருந்தால் எதிரிகளின் கையில் எல்லாரும் மாட்டிக்கொண்டு வாளுக்கு இரையாயிருக்கத்தான் வேண்டும். அதனால்தான் ஒரு குழந்தைத் தூக்கிக்கொண்டு வேகமாக ஓடினேன். இன்னொரு செய்தியையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். என்னுடைய கையில் நான் தூக்கிக்கொண்டு ஓடிய இந்தக் குழந்தை என்னுடைய குழந்தை கிடையாது... பக்கத்து வீட்டுக் குழந்தை. பக்கத்து வீட்டிலிருந்த பெண்ணானவள் என்னிடம் இந்தக் குழந்தையை ஒப்படைத்துவிட்டுவிட்டு வீட்டுவேலையைச் செய்ய புறப்பட்டுப் போனாள். இப்படி என்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட குழந்தையை என் விருப்பப்படி எதிரி நாட்டவரின் கையில் ஒப்படைக்கலாமா? கூடாதுதானே... அதனால்தான் என் குழந்தையைத் தெருவில் விட்டுவிட்டு, பக்கத்துக்கு வீட்டுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடினேன்."

அந்தத் தாய் சொன்னதைக் கேட்டு பெரியவர் மலைத்துப் போய் நின்றார். இந்நிகழ்வு எல்லாருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் என்பதற்காக ஜப்பானியர்களின் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றது. இந்நிகழ்வைப் படிக்கின்ற குழந்தைகள் எக்காரணத்தைக் கொண்டும் தன்னலத்தை நாடாமல் பிறர்நலத்தை நாடுபவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

அடுத்திருப்பவருடைய நலனில் அக்கறை கொண்டு வாழவேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு வாழும் ஜப்பானியர்கள் நமக்கெல்லாம் மிகப்பெரிய முன்மாதிரிகைகள். சீராக் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், "ஆண்டவராகிய கடவுள் ஒவ்வொருவருக்கும் அடுத்திருப்பவர்களைப் பற்றிய கட்டளைகளைக் கொடுத்தார்"என்று கூறுகின்றார். உண்மையில் அடுத்திருப்பவர் யார்? அவர்களைக் குறித்த கட்டளை என்ன? என்பதை இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.


அடுத்திருப்பவர் என்றால் சொந்த இனத்தவர் அல்ல, தேவையில் இருப்பவர்


லேவியர் புத்தகம், "உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக"(லேவி 19:18) என்று சொல்லியிருந்தாலும், யூதர்கள் தங்களுடைய சொந்த இனத்தவரைத்தான் அடுத்திருப்பவர் என நினைத்து அவர்களை மட்டும் அன்புசெய்து, புறவினத்து மக்களை வெறுத்து ஒதுக்கினார்கள். ஆனால், இயேசு 'தேவையில் உள்ள எல்லாரும் அடுத்திருப்பவர்' என்று சொல்லி அடுத்திருப்பவருக்குப் புதிய விளக்கம் தருகின்றார்.

ஆகையால், இன்றைய முதல் வாசகம், "அடுத்திருப்பவரைப் பற்றிய கட்டளைகளை அவர்கள் ஒவ்வொருவருக்கும் (ஆண்டவர்) கொடுத்தார்"என்று கூறுகின்றது என்றால், நாம் ஒவ்வொருவரும் தேவையில் உள்ள யாவரையும் அடுத்திருப்பவராகப் பார்த்து, அவர்களுக்கு உதவவேண்டும் என்றுதான் கூறுகின்றது. இவ்வுண்மையை உணர்ந்து, தேவையில் உள்ள ஒவ்வொருவர்மீதும் அன்புகாட்டி, அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்ய நாம் முயற்சி செய்வோம்.


சிந்தனை

'ஒவ்வொரு மனிதனும் என் நண்பன், ஒவ்வொரு மனிதனும் என் சகோதரன்' என்று சொல்லும் ஒரு பழைய கிறிஸ்தவப் பாடல். நாம் தேவையில் உள்ள யாவரையும் அடுத்திருப்பவராகப் பார்த்து, அவர்களுக்கு உதவி செய்ய விரைவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 10: 13-16

குழந்தைகளும் இறையாட்சியும்

நிகழ்வு

அது ஒரு மழலையர் பள்ளி. அந்தப் பள்ளியில் அன்று நன்றி தெரிவிக்கின்ற நாள். முதல் வகுப்பு ஆசிரியை தன் மாணவர்களிடம் தங்கள் நன்றிக்குரிய மனிதரையோ, பொருளையோ படமோ வரையச் சொன்னார். பலரும் பல படங்களை வரைந்தார்கள். ஒரு சிறுவன் மட்டும் ஒரு கையின் படத்தை வரைந்தான். "அது யாருடைய கை"என்று ஆசிரியை கேட்டபோது, "டீச்சர்! உங்களுடைய கை"என்றான்.

உடனே ஆசிரியை, அந்தச் சிறுவனிடம், "மற்ற எல்லாரும் மனிதர்களுடைய படத்தை வரைந்திருக்கும்போது, நீ மட்டும் ஏன் கையை வரைந்து வைத்திருக்கிறாய்?"என்று கேட்டதற்குச் சிறுவன், "இந்தக் கைதான் என் பிஞ்சு விரல்களைப் பிடித்து எழுதக் கற்றுக்கொடுத்தது; இந்தக் கைதான் என் விரல் பிடித்து அழைத்துவந்தது; இந்தக் கைதான் என் கன்னத்தை வருடிக்கொடுத்தது; இந்தக் கைதான் என்னுடைய தலையைத் தடவிக் கொடுத்தது"என்று விளக்கம் அளித்தான்.

குழந்தைகள் வெள்ளை உள்ளத்தவர்; உள்ளதை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடிகள்; வித்தியாசமாக யோசிக்கக்கூடியவர்கள். இப்படிப்பட்டவருக்கே இறையாட்சிக்கு உரியது என்று இயேசு சொன்னதில் வியப்பேதும் இல்லை.


குழந்தைகளின் பெற்றோரை அதட்டிய சீடர்கள்


நற்செய்தியில், ஒருசில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள்மீது இயேசு ஆசி வழங்கவேண்டும் என்று அவர்களை இயேசுவிடம் தூக்கிக்கொண்டும் கூட்டிக்கொண்டும் வருகின்றார்கள். யூத இரபிக்கள் குழந்தைகளுக்கு ஆசி வழங்குவது வழக்கமாக நடைபெறுகின்ற ஒரு செயல். அந்தமுறையில்தான் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வருகின்றார்கள். ஆனால், இயேசுவோடு இருந்த அவருடைய சீடர்களோ, பெற்றோர்களை இயேசுவை அணுகவிடாதவாறு அதட்டுகிறார்கள்.

இயேசுவின் சீடர்கள், குழந்தைகளின் பெற்றோர்களை ஏன் அதட்டுகின்றார்கள் என்று சிந்தித்துப் பார்ப்பது தேவையான ஒரு காரியம். முதலாவது, இயேசுவின் சீடர்கள் அவருக்குப் பாதுகாப்புத் (!) தரவேண்டும் என்று நினைத்தார்கள். ஏனெனில், பலர் அவரிடம் வருவதும் போவதுமாய் இருந்ததால், இயேசு எப்போதும் பரபரப்பாகவே இருந்தார். இதைக் கருத்தில் கொண்டு சீடர்கள் அவருக்கு ஓய்வுதரவேண்டும், பாதுகாப்புத் தரவேண்டும் என்ற நோக்கில், தங்களுடைய குழந்தைகளுக்கு ஆசி வேண்டி வந்த குழந்தைகளின் பெற்றோர்களை அதட்டுகிறார்கள்.

இயேசுவின் சீடர்கள் இவ்வாறு நடந்துகொண்டதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. அது என்னவெனில், யூத சமூகத்தில் குழந்தைகள் ஒரு பொருட்டாகக்கூட மதிக்கப்படவில்லை. இயேசு அப்பங்களைப் பலுகச் செய்தபோது, மக்களின் எண்ணிக்கையை 4000, 5000 என்று கணக்கிட்டபோது குழந்தைகள், பெண்கள் நீங்கலாகத்தான் கணக்கிட்டார்கள். அப்படியென்றால், குழந்தைகள் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அதனால்தான் குழந்தைகள் எல்லாம் எதற்கு இயேசுவிடமிருந்து ஆசி பெறவேண்டும் என்று சீடர்கள், அக்குழந்தைகளின் பெற்றோரை அதட்டுகிறார்கள். இதைக் கண்டுதான் இயேசு தன் சீடர்கள்மீது கோபம் கொள்கின்றார்.


சிறுபிள்ளைகளை தன்னிடம் வரச் சொன்ன இயேசு


சிறு பிள்ளைகளையும் குழந்தைகளையும் ஒரு பொருட்டாகவே கருதாத யூத சமூகத்திற்கு, அக்குழந்தைகளே இறையாட்சி உரியவர்கள் என்று இயேசு உரக்கச் சொல்கின்றார். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், யாரை இந்த சமூகம் ஒன்றுக்கும் உதவாதவர்கள், ஒரு பொருட்டாகக் கூட கருதப்படத் தகுதியற்றவர்கள் என்று நினைத்தோ, அவர்களையே இறையாட்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய் இயேசு முன்மொழிகின்றார்.


குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றானவர்கள்


இயேசு, 'இறையாட்சி இத்தகையோருக்கே உரியது' என்று சொல்லக்காரணம் அவர்களிடம் மாசுமருவற்ற தன்மையும் தாழ்ச்சியும் நம்பிக்கையும் இருப்பதால்தான். பெரியவர்களிடம், தான் என்ற ஆணவம், கோபம் இதுபோன்ற தீய குணங்கள் நிறைந்து இருக்கின்றன. குழந்தைகள் அப்படியில்லை, அவர்கள் வெள்ளை மனத்தவர்களாக இருக்கின்றார்கள். மேலும் அவர்கள், நான் பெரியவன், உயர்ந்தவன், எல்லாம் தெரியவன் என்று ஆணவத்தோடு இருப்பதோடு கிடையாது. பெரியவர்கள் (!) என்று சொல்லிக்கொள்பவர்கள்தான் அப்படி இருக்கின்றார்கள். ஆனால், குழந்தைகள் தாழ்ச்சிக்கு இலக்கணமாக இருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை, மூத்தோர்களை நம்பியே வாழக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இது கடவுள்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதற்கு இணையாக இருக்கின்றது. இப்படியெல்லாம் இருப்பதால்தான் இயேசு இறையாட்சி இத்தகையோருக்கே உரியது என்கின்றார்.

நாமும் குழந்தைளின் உள்ளத்தோடு வாழ்ந்தோமெனில் இறையாட்சியை உரித்தாக்கிக் கொள்வோம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.


சிந்தனை


'தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்' (மத் 5:8) என்பார் இயேசு. நாம் குழந்தைகளைப் போன்று தூய மனத்தவராய் வாழ்வோம். அதன்வழியாக இறையாட்சியை நமக்கு உரித்தாக்கிக் கொண்டு, இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
சிறுகுழந்தைகளை வரவிடுங்கள்

பொதுவாக யூதத்தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளைப் போதகர்களிடம் கொண்டுவந்து ஆசீர் பெற்றுச்செல்வது வழக்கம். குறிப்பாக தங்கள் குழந்தைகளின் முதல் பிறந்தநாளில் இதை அவர்கள் தவறாமல் செய்தார்கள். இந்த ஒரு நோக்கத்தோடு தான், அவர்கள் தங்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். சீடர்களுக்கும் இது நன்றாகத்தெரியும். சீடர்களுக்கு நிச்சயமாக குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்து ஆசீர்பெற்றச்செல்வது மகிழ்ச்சிதான். ஆனால், இங்கே அவர்கள் கோபப்படுவதற்குக்காரணம் 'சூழ்நிலை'. இயேசு ஏற்கெனவே இரண்டு முறை தான் பாடுகள் பட்டு இறக்கப்போவதை சீடர்களுக்கு அறிவித்துவிட்டார். சீடர்களுக்கு அது என்னவென்று முழுமையாகப்புரியவில்லை என்றாலும், இயேசுவின் முகத்தில் படிந்திருந்த கலக்க ரேகைகளை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனவே, இயேசுவோடு இருந்து அவரைப்பாதுகாப்பதும், தேவையில்லாத தொந்தரவுகளிலிருந்து அவரைக்காப்பாற்றி அவருக்கு ஓய்வுகொடுக்க நினைப்பதும் சீடர்களுடைய எண்ணமாக இருந்தது. எனவேதான், அவர்கள் பெற்றோரை அதட்டினர்.

இயேசுவோ, சிறு குழந்தைகளை தன்னிடம் வரவிட அவர்களைப்பணிக்கிறார். தனக்கு எவ்வளவுதான் துன்பங்கள் இருந்தாலும், கலக்கம் இருந்தாலும், அதிலே மூழ்கிப்போய் தவிக்காமல், தன்னுடைய கடமையை நிறைவாகச்செய்வதில் அதிக அக்கறை எடுக்கிறார். இறைவனின் பிரசன்னத்தை, அன்பை, இரக்கத்தை, ஆசீரை மனுக்குலம் உணரச்செய்வதுதான் இயேசுவின் கடமை. அதை நிறைவாகச்செய்வதின் சிறப்பான உதாரணம்தான் இந்த நற்செய்திப்பகுதி. தன்னுடைய பணிவாழ்வில் ஒவ்வொருநிமிடமும் இயேசு விழிப்பாக இருந்தார் என்பதைத்தான் இது காட்டுகிறது. அவருடைய பணிவாழ்வில் தன் சுயநலத்துக்காக எதையும் குறை வைப்பதற்கு தயாரில்லை.

வாழும் ஒவ்வொரு கணமும் நிறைவோடு வாழ வேண்டும். நம்முடைய கவலைகளும், கலக்கங்களும் நாம் மற்றவருக்கு உதவி செய்வதற்கு தடையாக இருக்கக்கூடாது. அது ஒரு பொருட்டாகவும் இருக்கக்கூடாது. இறைவனைத்துணையாகக்கொண்டு நமது வாழ்வை சிறப்பாக வாழ்வோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
நற்செய்தி (மாற் 10:13-16) சிறுபிள்ளைகள்

'எல்லாரும் கடலின் கரையில் நின்று, 'எவ்வளவு தண்ணீர்த் துளிகள்!' என்று வியக்கும்போது, ஞானி, 'எத்தனை பெரிய தண்ணீர்த் துளி!' என்று வியக்கின்றான்' எனப் பதிவு செய்கிறார் கலீல் கிப்ரான்.

கடலை, 'நிறைய தண்ணீர்த் துளிகளின் தொகுப்பு' என்றும் பார்க்கலாம், 'ஒருங்கிணைந்த ஒற்றைத் தண்ணீர்த் துளி' என்றும் பார்க்கலாம். முதல் வகைப் பார்வை பிரித்துப் பார்க்கிறது. இரண்டாவது வகைப் பார்வை இணைத்துப் பார்க்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், சிறுபிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று சிலர் அவரிடம் கொண்டு வருகின்றனர். சீடர்கள் அவர்களை அதட்டுகின்றனர். ஆனால், இயேசு சீடர்கள்மேல் கோபம் கொண்டு அவர்களைக் கடிந்துகொள்கின்றார். மேலும், 'இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார்' எனவும் எச்சரிக்கின்றார்.

சீடர்கள் சிறு பிள்ளைகளை வாழ்க்கைப் பருவத்தின் சிறு துளிகள் என்று எண்ணினார்கள். ஆனால், இயேசுவோ அவர்கள் ஒவ்வொருவரிலும் மானிடத்தின் மொத்த உருவைக் கண்டார். மேலும், 'அவர்கள் எப்படி இருக்கிறார்கள்' என்பதை மையமாக வைத்து சீடர்கள் செயல்பட்டார்கள். ஆனால், 'அவர்கள் எப்படி மாறுவார்கள்' என்பதை மையமாக வைத்து இயேசு செயல்படுகின்றார். சீடர்களின் பார்வை அவர்களின் 'இருத்தலில்' இருந்தது. இயேசுவின் பார்வை குழந்தைகளின் 'மாற்றத்தில்' இருந்தது.

மரத்தின் கனியில் விதையைப் பார்த்தவர்கள் நடுவில், விதையில் மரத்தின் கனியைப் பார்க்கிறார் இயேசு.

இப்படிப் பார்க்கின்ற ஒருவரால்தான் எல்லாரையும் ஏற்றுக்கொள்ள முடியும். அதே போல, இப்படிப் பார்க்கின்ற பார்வைதான் புதுமைக்கு வழிவகுக்கும். எல்லாரும் மார்பிளைக் கற்கள் என்று பார்க்கும்போது, மைக்கேல் ஆஞ்சலோ, அவற்றில் ஒளிந்திருக்கும் 'தாவீது,' 'மோசே,' 'பியத்தா' போன்ற உருவங்களைப் பார்த்தார். மீன்பிடித்துக் கொண்டிருந்த பேதுருவில் தன் திருச்சபையின் தலைவரைப் பார்த்தார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணில் அவருடைய எதிர்காலத்தைப் பார்த்தார். துன்புறுத்தச் சென்ற சவுலில் புறவினத்தாரின் திருத்தூதரைப் பார்த்தார்.

இப்படிப் பார்ப்பவர்கள் தங்களைப் போலவே பிறரை எண்ணுவார்கள். தங்களின் நலம் போல பிறர்நலம் பேணுவார்கள்.

இன்றைய முதல் வாசகமும் (காண். சீஞா 17:1-15), சிறியவர், பெரியவர், ஆண், பெண் என அனைவரிடமும் ஒரே இறைச்சாயல் துலங்குகிறது என்றும், ஒருவரின் விருப்புரிமையே அவரின் பார்வையை கூர்மைப்படுத்தவும், விரிவாக்கவும் செய்கிறது என்றும் சொல்கிறது.

சிறிதிலும் பெரிது பார்க்கும் பார்வை இருந்தால் எத்துணை நலம்!


Rev. Fr. Yesu Karunanidhi
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!