Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   01  மார்ச் 2019  
    பொதுக்காலம் 7ம் வாரம் வெள்ளிக்கிழமை - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 5-17

இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும்; பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும். அனைவரோடும் நட்புடன் பழகு; ஆனால் ஆயிரத்தில் ஒருவரே உனக்கு ஆலோசகராய் இருக்கட்டும்.

ஆய்ந்து நட்புக்கொள்; நண்பரையும் விரைவில் நம்பிவிடாதே. தன்னலம் தேடும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.

பகைவர்களாய் மாறும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உங்கள் பிணக்கை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி, உனக்கு இழிவைக் கொண்டு வருவார்கள்.

உன்னுடன் விருந்துண்ணும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.

நீ நல்ல நிலையில் இருக்கும்போது, அவர்கள் உன் உயிருக்கு உயிரான நண்பர்களாய் இருப்பார்கள்; உன் பணியாளர்களை ஆட்டிப் படைப்பார்கள்; நீ தாழ்ந்துவிட்டால் உனக்கு எதிராய் அவர்கள் மாறுவார்கள்; உன் முகத்தில் விழிக்க மாட்டார்கள்.

உன் பகைவர்களிடமிருந்து விலகி நில்; உன் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இரு. நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்; இத்தகைய நண்பர்களைக் கண்டவர்கள் புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள்.

நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை; அவர்களது தகைமைக்கு அளவுகோல் இல்லை.

நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்; ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்.

ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்புப் பேணுவோர். அவர்களை அடுத்தவர்களும் அவர்களைப் போலவே இருப்பார்கள்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:119: 12,16. 18, 27. 34,35 (பல்லவி: 35a)
=================================================================================
பல்லவி: உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்.

12 ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும். 16 உம் விதிமுறைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; உம் வாக்குகளை நான் மறக்கமாட்டேன். பல்லவி

18 உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். 27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். பல்லவி

34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். 35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 17:17

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை; உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடவுள் இணைத்ததை, மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12

அக்காலத்தில் இயேசு புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம்போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார்.

பரிசேயர் அவரை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.

அவர் அவர்களிடம் மறுமொழியாக, "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?" என்று கேட்டார்.

அவர்கள், "மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்" என்று கூறினார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.

படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், "ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.

பின்னர் வீட்டில் இதைப்பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.

இயேசு அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

பிரிவினையின் சக்தியாய் இருப்பது கிறிஸ்தவம் அல்ல.

இணைந்திருப்பதுவே இறைவனின் திருவுளம்.

நாம் ஒன்றாய் இருப்பது போல, திரியேக தேவன் ஒரே தேவனாக இருக்கின்றார் என்பதுவே நம்முடைய மறையின் கோட்பாடு, அதே தத்துவத்தின் அடிப்படையில் இணைந்திருப்பதுவே மாண்புள்ளதாகும். மகத்துவமானதும் கூட.




=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  சீராக் 6: 5-17

நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை.

நிகழ்வு

போலந்து நாட்டில், ஜேன் என்றோர் இசைக் கலைஞர் இருந்தார். அவர் அற்புதமாக வயலின் இசைக்கக் கூடியவர். அவருக்கு தன்னுடைய திறமையை உலகிற்கு வெளிக்காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே, அவர் இலண்டனில் நடைபெறவிருந்த இசைக் கச்சேரிக்குத் தன்னையே சிறப்பானவிதமாய்த் தயாரித்துக்கொண்டு, அங்கு புறப்படத் தயாரானார். அதற்கு முன்பாக 'தன்னுடைய நெருங்கிய நண்பரும் வயலின் இசையில் மிகப்பெரிய ஜாம்பவானுமாகிய ஒருவரிடமிருந்து பரிந்துரைக் கடிதம் வாங்கிச் சென்றால், அது இன்னும் நன்றாக இருக்கும்' என்று அவரிடமிருந்து பரிந்துரைக் கேட்டார். அவரும் ஒரு கடிதம் எழுதி, அதை ஒரு கவரில் போட்டு ஒட்டிக்கொடுத்தார்.

நண்பரிடமிருந்து பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ஜேன், மிகவும் நம்பிக்கையோடு இலண்டனுக்குச் சென்று, தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். அவருடைய திறமையைப் பார்த்துவிட்டு எல்லாரும் அவரை வியந்து பாராட்டினார்கள். இத்தகைக்கும் ஜேன் தன்னுடைய நண்பரிடமிருந்து பெற்றுச் சென்ற பரிந்துரைக் கடிதத்தை யாரிடமும் காட்டாமலேயே, எல்லாமே சிறப்பாக நடந்து முடிந்தன.

இசைக் கச்சேரி முடிந்தபிறகு, ஒரு குறிப்பட்ட நாளில் ஜேன், தன்னுடைய நண்பர் பரிந்துரைக் கடிதத்தில் அப்படி என்ன எழுதியிருக்கிறார் என்று கடிதத்தைத் திறந்துபார்த்தார். அக்கடிதத்தைத் திறந்துபார்த்ததும் அவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார். ஏனெனில் அந்த பரிந்துரைக் கடிதத்தில் அவருடைய நண்பர், "ஜேன் வயலின் வாசிப்பவன்தான், ஆனால், அவ்வளவு திறமைசாலி இல்லை" என்று எழுதி இருந்தார். இதை வாசித்த ஜேன், 'நண்பனின் (!) சுயரூபம் இதுதானோ... இது தெரியாமல்தான் நான் இத்தனை நாளும் அவனோடு பழகிஇருக்கிறேனா' மிகவும் வேதனைப்பட்டார்.

வயலின் இசைக்கலைஞர் ஜேனுக்கு வாய்த்த நண்பரைப் போன்றுதான் பலர், நண்பர்கள் என்ற பெயரில் சந்தர்பவாதிகளாகவும் சுயநலவாதிகளாகவும் இருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் நல்ல, நம்பிக்கைக்குரிய நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது?, நாம் எப்படி நல்ல நண்பர்களாக இருப்பது? என்பதை சீராக்கின் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தின் வழியாக சிந்தித்துப் பார்ப்போம்.

ஆழ்ந்து நட்புகொள்

சீராக் நூலின் ஆசிரியர், இந்நூலை எழுதிய காலகட்டத்தில் கிரேக்க இலக்கியங்களிலும் ஹெலலிஸ்ட் கலாச்சாரத்திலும் நட்பைக் குறித்து அதிகமாகப் பேசப்பட்டது. எனவே இவர் தன்னுடைய நூலில் நட்பின் அல்லது நண்பர்களின் முக்கியத்துவத்தைக் குறித்து எழுதத் தொடங்குகின்றார். அதற்குச் சான்றாக இருப்பவைதான் இன்றைய முதல் வாசகமும் பின்வரும் இறைவாக்குப் பகுதிகளும் (9: 10; 11: 29-14:2; 22: 19-26; 37: 1-6). இன்றைய முதல் வாசகமாக எடுக்கப்பட்ட பகுதியில், ஆசிரியர் நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது, உண்மையான நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களை அடைய ஒருவர் என்ன செய்யவேண்டும் என்பவை குறித்துப் பேசுகின்றார். முதலில் நல்ல நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதைக் குறித்து ஆசிரியர் என்ன சொல்கின்றார் என்று பார்ப்போம்.

இவ்வுலகில் பலவிதமான மனிதர்கள் நண்பர்கள் - இருக்கின்றார்கள். சுயநலத்திற்காகப் பழகக்கூடியவர்களும் பணத்திற்காகப் பழகக்கூடியவர்களும் நல்ல நிலையில் இருக்கின்றபோது மட்டும் பழகக்கூடிய நண்பர்களும் இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களில் நல்ல, நம்பிக்கைக்குரிய நண்பர்களைத் தேர்ந்தெடுக்க ஒருவர் அவசரப் படாமல், ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்றார் ஆசிரியர்.

நண்பரகளுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை

நண்பர்களைத் ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல, நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் வேறேதும் இல்லை என்றும் அவர்கள், நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள் என்றும் குறிப்பிடுகின்றார். உண்மையில் ஒருவருக்கு நல்ல நண்பர்கள் கிடைத்துவிட்டால், அதைவிட உயர்ந்த செல்வம் வேறெதுவும் இல்லை. இப்படிப்பட்ட நண்பர்களை ஒருவர் எப்படிப் பெரியமுடியும் என்பதற்கு ஆசிரியர், "ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்" என்கின்றார். இறையச்சம் ஞானத்தின் தொடக்கம் என்பதுபோல ஒருவர் நல்ல நண்பர்களைப் பெற, அவர் ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர் நல்ல நண்பர்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சிந்தனை

'உலகின் அதிபதியாயிருப்பினும் ஒரு நண்பன் இல்லாவிடில், அவன் ஏழைதான், உலகைக் கொடுத்து, ஒரு நண்பனை வாங்கினாலும், அது ஆதாயம்தான்' என்பார் யங் என்ற அறிஞர். (உயிர்) நண்பர்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியாதுதான். ஆனால், இத்தகைய நண்பர்களைப் பெற நாம் ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவேண்டும். அதுவே நாம் செய்யவேண்டிய தலையாய காரியமாக இருக்கின்றது.

ஆகவே, நாம் ஆண்டவருக்கு அஞ்சி நடப்போம். அதன்வழியாக நல்ல, நம்பிக்கைக்குரிய நண்பர்களைப் பெற்று, இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 10: 1-12

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.

நிகழ்வு

நகரில் இருந்த பிரபல மருத்துவமனை அது. ஒரு காலைவேளையில் தன் கையிலிருந்த காயத்துக்கு மருந்துபோட வந்த முதியவர் ஒருவர் அங்கிருந்த மருத்துவரிடம் கேட்டார், "என்னைச் சீக்கிரம் இங்கிருந்து அனுப்ப முடியுமா?... இன்னொரு மருத்துவமனைக்கு அரைமணி நேரத்தில் நான் போகவேண்டும்." "ஏனிந்த அவசரம்?" என்று அந்த மருத்துவர் கேட்டபோது, பெரியவர் சொன்னார், "என் மனைவி அங்கே அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்... நான் உட்பட யாருமே அடையாளம் தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாள்... அவளோடுதான் தினமும் காலை உணவு சாப்பிடுவேன்".

பெரியவர் சொன்னதை ஆச்சரியம் மேலிடக் கேட்டுக்கொண்டிருந்த மருத்துவர் அவரைப் பார்த்துக் கேட்டார், "உங்கள் மனைவிக்குத்தான் உங்களை அடையாளம் தெரியாதே! ஏன் அவர் தனியாய் சாப்பிட்டால் என்ன?". முதியவர் சிறிதும் தாமதியாமல் சொன்னார், "அவளுக்கு நான் யார் என்று தெரியாது... அவள் யார் என்று எனக்குத் தெரியுமே".

தன் மனைவி சுயநினைவு இல்லாமல் இருந்த சூழ்நிலையிலும், அவரை நல்லவிதமாய் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று துடித்த அந்தப் பெரியவரின் அன்பு நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது.

மணவிலக்கு தொடர்பான பரிசேயர்களின் கேள்வி

நற்செய்தியில், இயேசு யோர்தான் அக்கரைப் பகுதிக்கு வருகின்றபோது, அவரை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்று 'துடியாய்த் துடித்த' பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது?" என்றொரு கேள்வியைக் கேட்கிறார்கள்.

முதலில் இந்நிகழ்வு நடந்தது எங்கே? இப்பகுதியில் நிலவிய அரசியல் என்ன? என்பதைத் தெரிந்துகொண்டோம் எனில், பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்விக்குப் பின்னால் இருந்த 'வக்கிரப் புத்தி' நமக்குப் புரிந்துவிடும். இயேசு இருந்தது யோர்தான் அக்கரைப் பகுதி, இப்பகுதியை அப்போது ஆண்டுவந்தவன் ஏரோது அந்திபாஸ். இவன்தான் தன் சகோதரனான பிலிப்புவின் மனைவியோடு வாழ்ந்துவந்தவன்; இவள் பொருட்டு திருமுழுக்கு யோவானைக் கொல்லத் துணிந்தவன் (மாற் 6: 14-29). இந்தப் பின்னணியில்தான் இப்போது பரிசேயர்கள், தாங்கள் கேள்விக்கின்ற மணவிலக்கு தொடர்பான கேள்விக்கு இயேசு என்ன சொன்னாலும் அதை ஏரோது அந்திபாஸுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, இயேசுவைச் சிக்கலில் மாட்டிவிடலாம் என்ற எண்ணத்தோடு இப்படியொரு கேள்வியைக் கேட்கிறார்கள்.

இதுதவிர யூதர்களிடம் மணவிலக்கு தொடர்பாக இன்னொரு பிரச்சினையும் இருந்தது. அது என்னவென்று இப்போது பார்ப்போம்.

மணவிலக்கு தொடர்பாக யூதர்கள் மத்தியில் இருந்த இருவேறு கருத்துகள்

பொதுவாக யூத இரபிக்கள் மணவிலக்கு தொடர்பாகப் பேசுவதற்கு யோசிப்பார்கள். ஏனென்றால், அவர்களிடம் இருந்த இருவேறு குழுக்கள், இருவேறு விதமான கருத்துகளைக் கொண்டிருந்தார்கள். யூத இரபி ஹில்லல் என்பவரோ, எந்தவொரு காரணமும் இல்லாமல் கணவன் தன் மனைவியை விலக்கிவிடலாம் எனச் சொல்லிவந்தார். இரபி ஷிம்மாய் (Shimmai) என்பவரோ 'தன் மனைவி ஒழுக்கமில்லாதவள்' என்று கண்டால் மட்டும் அவளை விளக்கி விடலாம் என்ற சொல்லிவந்தார். இப்படி இருவேறு கருத்துகள் நிலவிக் கொண்டிருந்த சூழ்நிலையில், இயேசு மணவிலக்கு செய்வது முறை அல்லது முறையில்லை என்று எப்படிச் சொன்னாலும் ஒருசாராரை இயேசுவுக்கு எதிராகத் திரும்பிவிட்டு, சிக்கலில் மாட்டிவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த பரிசேயர்களிடம் இயேசு, இது முறை, முறையில்லை என்பதை நேரடியாகச் சொல்லாமல், "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?" என்ற கேள்வியைக் கேட்டு அவர்களை மடைமாற்றி விடுகின்றார்.

மோசே இட்ட கட்டளை என்ன?

ஓர் ஆண் அல்லது கணவன் தன் மனைவி 'ஒழுக்கமில்லாமல்' இருக்கின்றாள் என்று கண்டால், அவளிடம் முறிவுச் சீட்டு எழுதிக்கொடுத்துவிட்டு, வேறொரு பெண்ணை மணக்கலாம், அந்தப் பெண்ணும் வேறோர் ஆணை மணக்கலாம் (இச 24: 1-4). இதுதான் மோசே யூதர்களுக்குக் கொடுத்த சட்டம். இச்சட்டம் பெண்ணை 'ஒரு பொருட்டாகக் கூட' மதிக்காத அன்றைய யூத சமூகத்தில், அவள் வேறோர் ஆணை மறுமணம் செய்துகொள்ளலாம் என்பதற்காகவாவது உரிமை அளித்திருக்கின்றே என்று மகிழ்ச்சியடையலாம். அனால், இச்சட்டம் கூட யூதர்களின் கடின உள்ளத்தின் பொருட்டுத்தான் கொடுக்கப்பட்டது என்கின்றார். இயேசு. அப்படியானால் மணமுறிவு தொடர்பாக இயேசு சொல்கின்ற கருத்துதான் என்ன? என்று கேள்வி எழலாம்.

ஓருடலாய் வாழவேண்டும்

மணவிலக்கு தொடர்பாக பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்விக்கு கடைசியில் இயேசு தொடக்க நூலில் வருகின்ற வார்த்தைகளைச் சொல்லி (தொநூ 1: 27, 2: 21-25) விளக்கம் அளிக்கின்றார். 'கணவனும் மனைவியும் ஓருடலாக வாழவேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பமே ஒழிய, அவர்கள் பிரிந்து வாழவேண்டும் என்பதல்ல' என்று இயேசு அவர்களுக்கு அழகாகப் பதில் சொல்கின்றார். ஆகையால், இயேசு சொல்வது போன்று கணவனும் மனைவியும் ஓருடலாய் நிலைத்திருக்க அவர்கள் பிரமாணிக்கமாகவும் அன்பாகவும் வாழ்வது நல்லது.

சிந்தனை

'மனிதன். தனித்திருப்பது நல்லதல்ல' என்று நினைத்துதான் கடவுள் ஆதாமுக்குத் துணையாக ஏவாளைப் படைத்தார். ஆகையால், பிரிந்துவிடவேண்டும், விட்டு விலகிவிட வேண்டும் என்ற எண்ணத்தை அப்புறப்படுத்திவிட்டு அன்பு மயமான குடும்பத்தைக் கட்டியெழுப்ப ஒவ்வொருவரும் முயற்சி எடுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
"பரிசேயர் இயேசுவை அணுகி, 'கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?'
என்று கேட்டு அவரைச் சோதித்தனர்" (மாற்கு 10:2)

அன்பார்ந்த நண்பர்களே!

-- ஒரு பொருள் பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என அறிய விரும்பும்போது நாம் அவர்களிடம் அப்பொருள் பற்றிக் கேள்வி கேட்கிறோம். ஆனால் கேள்விகள் பல விதம். சிலர் நேர்மையான உள்ளத்தோடு பிறருடைய கருத்தை அறியும் ஆவலோடு கேள்வி கேட்பார்கள். வேறு சிலரோ பிறரிடம் குற்றம் காண்கின்ற நோக்கத்தோடு கேள்வி கேட்பார்கள். இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் பலர் இருந்தார்கள். சிலர் நேர்மையான உள்ளத்தோடு அவரை அணுகியதுண்டு. ஆனால் வேறு சிலரோ "இயேசுவைச் சோதிக்கும் எண்ணத்துடன்" அவரிடம் கேள்வி கேட்டார்கள். மண விலக்குப் பற்றி இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தது. எனவேதான் இயேசு தம்மிடம் கேள்வி கேட்ட பரிசேயரிடம் ஒரு மறு கேள்வியைக் கேட்கிறார்: "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?" (மாற் 10:3). கணவன் மணவிலக்குச் சான்று எழுதி, தன் மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே அனுமதி அளித்ததாக அவர்கள் பதிலிறுக்கிறார்கள் (மாற் 10:4). உண்மையில் மோசே மண விலக்குப் பற்றி எந்தவொரு "கட்டளை"யும் கொடுக்கவில்லை. மாறாக, மண விலக்குச் செய்யும் கணவன் மீண்டும் அதே பெண்ணை மணமுடித்தல் ஆகாது என்பதே சட்டம்.

-- எவ்வாறிருந்தாலும், அக்காலத்தில் திருமண உறவு சீர்குலையத் தொடங்கியது என்பது மட்டும் தெரிகிறது. இயேசு வீண் வாதங்களில் ஈடுபடுவர் அல்ல. அதே நேரத்தில் அவர் திருமணம் பற்றி "படைப்பின் தொடக்கத்திலேயே" கடவுள் வழங்கிய சட்டத்தைத் தம் எதிரிகளுக்கு நினைவூட்டுகிறார். அதாவது, கடவுள் மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்கள் திருமண உறவில் வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்க வேண்டும் எனவும், "கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்கலாகாது" எனவும் தொடக்கத்திலிருந்தே கட்டளை தந்துள்ளார் (காண்க: தொநூ 2:24; மாற் 10:6-9). இன்றைய உலகில் திருமண உறவு பல விதங்களில் முறிந்துவிடும் நிலையில் உள்ளது. கணவனும் மனைவியும் கடவுள் தங்கள் மீது காட்டுகின்ற அன்பின் அடிப்படையில் ஒருவர் ஒருவரை ஏற்கும்போது திருமண அன்பு நிலைத்துநிற்கும். மாறாக, தன்னலப் போக்கு குடும்பத்தின் உள்ளே நுழைந்துவிட்டால் குடும்ப உறவும் அதன் அடிப்படையான திருமண ஒன்றிப்பும் ஆபத்துக்கு உள்ளாகக் கூடும். ஆனால் கடவுளின் விருப்பம் யாதென இயேசு தெளிவாகக் கற்பிக்கிறார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் அனைவரும் திருமண மற்றும் குடும்ப உறவும் ஒற்றுமையும் இன்றைய உலகில் தழைத்தோங்க வேண்டும் என்னும் குறிக்கோளை அடைய உழைத்திட வேண்டும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!