Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         08 மே 2019  
                     பாஸ்கா காலம் மூன்றாம் வாரம்   - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 1b-8

அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்கு உள்ளாகியது. திருத்தூதர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர். இறைப்பற்று உள்ள மக்கள் ஸ்தேவானை அடக்கம் செய்து, அவருக்காக மாரடித்துப் பெரிதும் புலம்பினர். சவுல் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக் கொண்டுபோய், அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தார். இவ்வாறு அவர் திருச்சபையை அழித்துவந்தார்.

சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர். பிலிப்பு சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார்.

பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒருமனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்த குரலுடன் கூச்சலிட்டுக்கொண்டே வெளியேறின.

முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா : 66: 1-3a. 4-5. 6-7a (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
அல்லது: அல்லேலூயா.

1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். 3a கடவுளை நோக்கி 'உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை' என்று சொல்லுங்கள். பல்லவி

4 'அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள். 5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. பல்லவி

6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். 7a அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 6: 35

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 35-40

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி: "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் கண்டிருந்தும் நம்பவில்லை. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்.

ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச்செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்.

மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்" என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

ஸ்தேவான் இறப்புக்குப் பின்னர், சபை சிதறடிக்கப்பட்டது.
பல இடங்களுக்கு அலைந்து திரிய நேர்ந்தது.
கந்தமாலில் ஏற்பட்ட சூழலே அன்று நேர்ந்தது.
ஆனால் சபை மகிழ்ந்தது என்று எழுதப்பட்டுள்ளது.
காரணம் சென்றவிடமெல்லாம் நன்மை செய்ததோடு நற்செய்தியை அறிவித்து கொண்டேயிருந்தனர்.
அது அவர்களுக்கு மகிழ்வினைத் தந்தது.
துன்பமான நேரங்களையும், மகிழ்வின் நாட்களாக அமைத்துத் தர இறைவன் வல்லவரே என்பதனை உணர்வோம்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 யோவான் 6: 35-40

மறையுரைச் சிந்தனை - வாழ்வுதரும் உணவு

ஒருமுறை நான்கு குருக்கள் விவிலிய மொழிபெயர்ப்பில் எந்தப் பதிப்பு (Version) சிறந்தது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒரு குருவானவர் எழுந்து நின்று, "என்னைப் பொறுத்தளவில் 'King James Version' தான் சிறந்தது; ஏனென்றால் அதுதான் வாசிப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கும்" என்றார். அவருக்கு அடுத்து, இன்னொரு குருவானவர் எழுந்து, "என்னைக் கேட்டால் நான் "American Standard Version' thathaதான் சிறந்தது சொல்வேன். ஏனென்றால் அதுதான் மூலமொழியிலிருந்து (ஹீப்ரு, கிரேக்கம்) அப்படியே மொழிபெயர்க்கப்பட்டது" என்றார்.

அவருக்கு அடுத்ததாக மூன்றாவது குருவானவர் எழுந்து நின்று, "நான் 'Moffatt' Mozமொழிபெயர்ப்புதான் சிறந்தது என்று சொல்வேன். காரணம், அதுதான் இந்தக் காலச் சூழலுக்கான வார்த்தைகளில் எழுதப்பட்டிருக்கிறது" என்றார்.

மூன்று குருக்களும் தங்களுடைய கருத்தைச் சொல்லிவிட்டு அமர்ந்தனர். அவர்களில் ஒரு குரு மட்டும் பேசாமல் அமைதியாக இருந்தார். அப்போது மற்ற மூன்று குருக்களும் அவரிடம், "உமக்கு விவிலியத்தின் எந்தப் பதிப்பு பிடிக்கும்?" என்றனர். அதற்கு அவர், "எனக்கு என்னுடைய தாயின் பதிப்புதான் பிடிக்கும்" என்றார். இதைக்கேட்ட அந்த மூன்று குருக்களும், "அது என்ன தாயின் பதிப்பு?" என்றனர்.

அதற்கு அந்தக் குருவானவர், "என்னுடைய தாயானவள் விவிலியத்தில் சொல்லப்பட்ட இறைவார்த்தையை அன்றாடம் வாழ்ந்து காட்டுபவள், அதனால்தான் எனக்கு என்னுடைய தாயின் மொழிபெயர்ப்பே/பதிப்பே பிடிக்கும் என்று சொன்னேன்" என்றார். விவிலியத்தை எல்லா மொழிகளிலும் மொழிபெயர்ப்பதைவிடவும், அதில் இருக்கக்கூடிய இறைவார்த்தையை வாழ்ந்துக்காட்டுவதுதான் மிகச் சிறந்த மொழிபெர்ப்பாக இருக்கும் என்பதை இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் உணர்ந்துகொள்ளலாம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு வாழ்வுதரும் உணவான 'இறைவார்த்தையைக்" குறித்துப் பேசுகின்றார். "வாழ்வுதரும் உணவு நானே; என்னிடம் வருபவருக்கு பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" என்கிறார். ஆம், ஆண்டவராகிய இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உயிருள்ள வார்த்தை; அவரிடம் நாம் நம்பிக்கைகொண்டு வாழும்போது நாம் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதே அசைக்க முடியாத உண்மை.

யோவான் நற்செய்தி 6:1-15 வரையுள்ள இறைவார்த்தையில், தன்னை நாடிவந்த மக்களின் வயிற்றுக்கு உணவளித்த இயேசு, இப்பகுதியில் 'உள்ள உணவான' இறைவர்த்தையைத் மக்களுக்குத் தருகின்றார். இதன்மூலம் 'மனிதன் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்வான்' என்ற இறைவார்த்தையை (இச 8: 3) தன்வழியாக நிறைவுறச் செய்கின்றார். ஆக, இயேசுவின் வார்த்தையை நாம் கேட்டு, அதன்படி நம்முடைய வாழ்வை அமைத்துக்கொள்ளும்போது நாம் நிலைவாழ்வை பெற்றுக்கொள்ள் முடியும் என்பது திண்ணம்.

ஆனால், பல நேரங்களில் நாம் இறைவார்த்தைக்கு முக்கியத்தும் தருவதில்லை என்பதே வேதனையான காரியம். 'விவிலியத்தை அறியாதவன் கிறிஸ்துவையே அறியாதவன்' என்பார் புனித ஜெரோம். நாம் விவிலியத்தை அறிந்துகொள்ள முயற்சிப்பதுமில்லை, கிறிஸ்துவையும் அறிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. அதனால் பெயருக்குக் கிறிஸ்தவர்கள் என்ற ரீதியில் இருக்கின்றோம்.

இணைச்சட்ட நூல் 5:33 ல் வாசிக்கின்றோம், "உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டுக்கூறிய எல்லா வழிகளிலும் நடங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள், அது உங்களுக்கு நலமாகும். நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டிலும் நெடுநாள் வாழ்வீர்கள்" என்று சொல்லப்படுகின்றது. நாம் இறைவனுடைய வார்த்தையை கேட்டு, அதன்படி நடக்கின்றபோது நெடுநாள் வாழ்ந்திருப்போம் என்பது உறுதி.

நாம் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்போம். அதன்படி நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம். இறையருளால் நெடுநாள் வாழ்ந்திருப்போம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
யோவான் 6: 35-40

"என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்"

நிகழ்வு

மாவீரன் நெப்போலியனுடைய படையில் படைவீரன் ஒருவன் இருந்தான். அவனுக்கு நெப்போலியன்மீது அளவுகடந்த பாசமும் அவனால் எதையும் செய்யமுடியும் நம்பிக்கையும் இருந்தது. ஒருநாள் அந்தப் படைவீரன் எதிரிநாட்டோடு நடந்த போரில் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். அப்பொழுது அவன் மற்ற படைவீரர்களிடம், "எனக்காக இப்போது நெப்போலியனை இங்கு அழைத்து வரமுடியுமா? அவர் மட்டும் இங்கு வந்தால், என்னைச் சாவிலிருந்து காப்பாற்றி விடுவார்" என்றான். அந்தப் படைவீரன் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாவீரன் நெப்போலியன் அவனிடம் அழைத்துவரப்பட்டான்.

நெப்போலியனைப் பார்த்ததும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தப் படைவீரனுக்கு, 'நெப்போலியனால் எப்படியும் தன்னைக் காப்பற்றிவிட முடியும்' என்ற நம்பிக்கை பிறந்தது. நெப்போலியன் அந்தப் படைவீரனுடைய அருகில் வந்து, அவனுடைய கையைப் பிடித்துப் பார்த்தான். அப்போது அவன் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுபோல் தலையாட்டினான். இதைப் பார்த்து அந்தப் படைவீரன், "அரசே! உங்களால் என்னைச் சாவிலிருந்து காப்பாற்ற முடியும் என்றல்லவா நம்பிக்கொண்டிருந்தேன்... இப்படி ஒன்றுமே செய்யமுடியாது என்பதுபோல் தலையாட்டுகிறீர்களே! இன்னும் சிறிதுநேரத்திற்குள் நான் இறந்துவிடுவேன். அதற்குள் என்னைக் காப்பாற்றுங்கள்!" என்று கத்தினான்

ஒருகட்டத்தில் நெப்போலியனால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தவனாய் அந்தப் படைவீரன் கத்தாமல், அசைவுற்று இருந்து, அப்படியே இறந்துபோனான்.

மாவீரன் நெப்போலியன் மிகப்பெரிய அரசனாக, வீரனாக இருந்தாலும், அவனால் ஒருவரைச் சாவிலிருந்து காப்பாற்ற முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசம் அல்லது வேதனை கலந்த உண்மை. மாவீரன் நெப்போலியனால் மட்டுமல்ல, இந்த உலகத்தில் இருக்கின்ற யாராலும் ஒருவரைச் சாவிலிருந்து, அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது. ஆனால், இயேசுவால் முடியும். அது எப்படி என்று இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

மானிடரை அழிய விடாமல் இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்யும் இயேசு

நற்செய்தியில் இயேசு யூதர்களிடம், "என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்; அவர் (தந்தை) என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழியவிடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்யவேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்" என்கின்றார்.

எவரும் அழிந்துபோய்விடக்கூடாது அல்லது அனைவரும் உயிர்த்தெழ வேண்டும் இதுதான் தந்தையின் விரும்பமும் இயேசுவின் விருப்பமும் ஆகும். இதைத்தான் தூய பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்தில், "எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்" (1திமொ 2:4) என்று கூறுவார். தூய பேதுருவோ, "யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார்" (2பேது 3:9) என்று கூறுவார். இறைவனின் இவ்விரும்பம் அதாவது எல்லாரும் மீட்புப் பெறவேண்டும் என்பது நிறைவேறவேண்டும் என்றால், அதற்கு மானிடர் யாவரும் ஒன்றைச் செய்தாக வேண்டும். அது என்ன என்று இப்போது பாப்போம்.

இறுதிநாளில் உயிர்த்தெழ அல்லது நிலைவாழ்வு பெற இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும்

எல்லாரும் மீட்புப் பெறுவது அல்லது உயிர்த்தெழுவது இறைவனின் திருவுளம் என்றால், அதற்கு மானிடர் யாவரும் ஒன்றைச் செய்யவேண்டும். அதுதான் இயேசுவின்மீது ஒவ்வொருவரும் கொள்ளக்கூடிய நம்பிக்கை. நற்செய்தியில் அதைத்தான் இயேசு, "மகனைக் கண்டு, அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்" என்று கூறுகின்றார்.

இங்குதான் பிரச்சினையே இருக்கின்றது. இயேசு சொன்ன வார்த்தைகளைக் கேட்டும் அவர் செய்த செயல்களைக் கண்டும் யூதர்கள் அவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல், 'இவர் தச்சர் மகன்தானே' 'இவரைப் பற்றி நமக்குத் தெரியாதா?' என்று புறக்கணித்தார்கள். நாமும் பலநேரங்களில் இறைவனின் வார்த்தையைக் கேட்டும் அவர் நம் நடுவில் செயலாற்றுவதைக் கண்டும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இப்படி இறைவன்மீதும் அவர் மகன் இயேசுவின்மீதும் நம்பிக்கை கொள்ளாமல் வாழ்ந்தோமெனில், இறுதிநாளில் உயிர்த்தெழ முடியாது என்பது உண்மை.

சிந்தனை

'உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் இறப்பினும் வாழ்வார்' (யோவா 11:25) என்பார் இயேசு. ஆகவே, நம்மை உயிர்த்தெழவும் அழியவிடாமல் காக்கவும் செய்யும் இறைமகன் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அவர் காட்டிய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
முதல் வாசகம்

தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 1b-8

யூதர்க்கும் சமாரியர்க்கும் இடையே உறவுப்பாலத்தைக் கட்டிய பிலிப்பு

நிகழ்வு

ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் இருவர் அடுத்தடுத்த பண்ணைகளில் வசித்து வந்தார்கள். இருவரும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இயந்திரச் சாதனங்கள் பகிர்ந்துக் கொள்வதிலும் ஏனைய பொருட்களைக் கொடுத்து வாங்குவதிலும் பரஸ்பரமாக வாழ்ந்துவந்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கிடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிதாக ஆரம்பித்த வாக்குவாதம் பெரிய அளவில் வெடித்து, கசப்பான வார்த்தைகளைப் பரிமாறியப்பிறகு, பேச்சுவார்த்தைகூட நின்றுபோனது.

ஒருநாள் அதிகாலையில், மூத்த சகோதரருடைய வீட்டுக்கதவு தட்டப்பட்டது. அவர் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, ஒரு தச்சன் வேலைசெய்வதற்கு வேண்டிய கருவிகளை வைத்துக்கொண்டிருந்தான். "ஏதாவது வேலை இருக்குமா? உதவிச் செய்ய எனக்கு விருப்பம்!" என்று கேட்டான். சிறிதுநேரம் அமைதியாக இருந்த அந்த மூத்த சகோதரர், "ஒரு வேலை இருக்கிறது. அதோ பண்ணையில் இருக்கும் நீரோடை தெரிகின்றதா? அங்கு வசிப்பது என் சகோதரர்தான். கடந்தவாரம் எங்களுக்கிடையே இருந்த நட்பைப்போலவே அங்கு ஒரு அழகான புல்வெளி இருந்தது. தற்பொழுது அந்தப் புல்வெளியைப் பிளந்து, மனதிலிருந்த விரிசலை வெளிப்படுத்தியுள்ளார். அதுதான் அந்த நீரோடை. என்மேல் இருக்கும் வெறுப்பில்கூட செய்திருக்கலாம் . அதற்கு பதிலடியாக அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் மரத் துண்டுகள் தெரிகின்றதா? அதை வைத்து எட்டு அடி உயரமுள்ள வேலியைக் கட்டிக் கொடுத்தால், நான் அவனையோ அவன் இடத்தையோ பார்க்காமல் இருக்கலாம்" என்று கூறினார்.

"எனக்குச் சூழ்நிலை புரிகின்றது. ஆணிகளையும் மரக்கம்பு நடுவதற்கான இடத்தையும் காண்பித்தால், உங்களுக்குப் பிடித்தமான வேலையைச் செய்கின்றேன்" என்றான் தச்சன். அவன் சொன்னதுபோன்று மூத்த சகோதரர் கருவிகளைக் கொடுத்துவிட்டு ஒரு முக்கியமான விடயமாக நகர்புறம் சென்றார். தச்சன் நாள் முழுவதும் மரத் துண்டுகளை அறுத்தலும் ஆணி அடித்தலுமாக வேலை செய்தார்.

அந்தி மங்கும் நேரத்தில் மூத்த சகோதரர் திரும்பி வந்தபோது, தச்சன் முடித்த வேலையைப் பார்த்து வியப்புற்றார். நீரோடையின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு அழகானப் பாலம் ஒன்றிருந்தது. இளைய சகோதரர் அங்கு வந்து, "நான் இவ்வளவு வெறுப்பு வெளிப்படுத்திய பிறகும்கூட நீ எவ்வளவு அழகாக ஒரு பாலத்தை அமைத்து இருக்கிறாய்" என்று பெருமையாக கூறினார். பின்னர் அவர் தன் கைகளை விரித்தப்படி அண்ணனை அணைக்க வந்தார். மூத்த சகோதரரும் அவருடைய கைகளைப் பிடித்து அணைத்துக்கொண்டார். இதற்குப் பின்பு மூத்த சகோதரர் தச்சரைப் பார்த்து சொன்னார், "உனக்கு இங்கு நிறைய பணிகள் இருக்கின்றன. இங்கேயே தங்கிக்கொண்டு உதவி செய்யவும்." தச்சர் மறுமொழியாக அவரிடம், "ஐயா! உங்களுடைய அன்பிற்கு நன்றி. இந்த ஊரில் பல (உறவுப்) பாலங்களை கட்டியெழுப்பவேண்டி இருக்கின்றது. அதனால் நான் வருகிறேன்" என்றார். சகோதரர்கள் இருவரும் அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து போய் அவருக்கு ஏராளமாகப் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.

பிரிந்திருந்த சகோதர்களுக்கு இடையே உறவுப் பாலத்தைக் கட்டி எழுப்பிய அந்த தச்சரைப் போன்று, நாமும் பல்வேறு காரணங்களால் பிரிந்துகிடக்கின்ற மக்களிடையே உறவுப் பாலத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையை இந்நிகழ்வானது நமக்கு உணர்த்துகின்றது. இன்றைய முதல் வாசகமும் யூதராக, சமாரியராகப் பிரிந்திருந்த மக்களிடைய உறவுப் பாலத்தைக் கட்டி எழுப்பிய பிலிப்பைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. நாம் அவர் ஆற்றிய பணியைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

சவுலின் துன்புறுத்தலால் கிறிஸ்தவர்கள் சிதறி ஓடுதலும் பிரிந்துகிடந்த மக்களை பிலிப்பு ஒன்று சேர்த்தலும்

திருத்தூதர் பணிகள் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தின் முதல் பகுதி, பவுலாகிய மாறிய சவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதைக் குறித்து பேசுகின்றது. சவுல் வீடுவீடாகச் சென்று கிறிஸ்துவைப் பின்பற்றிய ஆண்களையும் பெண்களையும் பிடித்துக்கொண்டுபோய்ச் சிறையில் அடைத்தார். இதனால் கிறிஸ்தவர்கள் சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறி ஓடினர். இந்த சமயத்தில் பிலிப்பு சமாரியர்களுக்கு நற்செய்தி அறிவிக்கின்றார். சமாரியர்கள் அடிப்படையில் யூதர்கள்தான். ஆனால் அவர்கள் அசிரியர்களின் படையெடுப்பினால் (கி.மு 732) நாடு கடத்தப்பட்டு, அங்குள்ள மக்களோடு சேர்ந்து வாழ்ந்ததால், தென்னாட்டில் இருந்த யூதர்கள் அவர்களை 'தீட்டானவர்கள்' என்று ஒதுக்கினார்கள், யூதர்கள் என்று அவர்களை அழைப்பதற்கும் தயங்கினார்கள்.

இப்படிப்பட்ட நிலையில்தான் சவுலின் தாக்குதலால் சமாரியாவிற்கு வந்த யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் பிலிப்பு ஆண்டவரின் வார்த்தையை எடுத்துரைத்து அவர்களுக்கிடையே உறவுப் பாலத்தைக் கட்டி எழுப்புகின்றார். பிலிப்புவின் செயல் நாமும் பிரிந்து கிடக்கும் மக்களிடையே உறவுப் பாலத்தைக் கட்டி எழுப்பும் தேவையை ஏற்படுத்துகின்றது. எனவே, அதை உணர்ந்து மக்களிடையே உறவுப் பாலத்தை ஏற்படுத்துவது நல்லது.

சிந்தனை

'அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார்' (எபே 2:14). என்பார் பவுல். ஆகவே, இயேசுவைப் போன்று, பிலிப்பை போன்று மக்களிடையே இருக்கும் பிழவுகளை வேரறுத்து, உறவுப் பாலத்தைக் கட்டி எழுப்புவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
யோவான் 6: 35-40

வாழ்வுதரும் உணவு இயேசு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய கவிஞர் பிரான்சிஸ் தாம்சன் (Francis Thompson) என்பவர். அவர் எழுதிய The Hound of Heaven என்ற கவிதை நூல் மிகவும் பிரபலமானது. அந்தக் கவிதை நூலில் அவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒருசில சுவாரசிய நிகழ்வுகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

அதில் ஒன்றுதான் இது. பிரான்சிஸ் தாம்சன் கடவுளை மறந்து குடிபோதைக்கு அடிமையாகி தன்னுடைய வாழ்வைத் தொலைத்த தருணம். அப்போது ஒருநாள் அவர் குடித்துவிட்டு சாலையோரமாக நடந்துவந்துகொண்டிருந்தபோது நிலை தடுமாறி பக்கத்தில் இருந்த சாக்கடையில் விழுந்துவிட்டார். எத்தனையோ மனிதர்கள் அந்த வழியாகக் கடந்து சென்றாலும் கூட யாருமே அவரைக் கண்டுகொள்ளவில்லை. பிரான்சிஸ் தாம்சன் அடிக்கடி இதுபோன்று குடித்துவிட்டு சாக்கடையில் விழுந்து கிடப்பதாலும் மக்கள் அவரைக் கண்டுகொள்ளமால் இருந்திருக்கலாம். இப்படி எல்லாரும் அவரைக் கடந்து போகும்போது ஒரே ஒருவர் மட்டும் அவர்மீது அக்கறைகொண்டு அவரை சாக்கடையிலிருந்து மேலே தூக்கி, அவரைக் குளிப்பாட்டி, அவரை அவருடைய வீட்டில் கொண்டுபோய் சேர்த்தார்.

அந்த மனிதரின் செய்கையால் மிகவும் தொடப்பட்ட பிரான்சிஸ் தாம்சன் அவரிடம், "எது உங்களை சாக்கடையில் கிடந்த என்னை தூக்கி, குளிப்பாட்டி இங்கு கொண்டு வரச் செய்தது" என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "சாக்கடையில் கிடந்த உங்களிடம் கடவுளின் திருமுகத்தைப் பார்த்தேன், அதனால்தான் நான் உங்களை அங்கிருந்து மீட்டு, இங்கே கொண்டு வந்தேன்" என்றார். "என்னில் கடவுளின் திருமுகம் தெரிகின்றதா?, அப்படியானால் நான் எப்படிப்பட்ட வாழக்கை வாழவேண்டும், இப்படி குடித்துக் குடித்து வாழ்க்கையைச் சீரழித்துக்கொண்டிருக்கின்றேனே, இனிமேலும் நான் ஒருபோதும் குடிக்கமாட்டேன். கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வேன்" என்றார் அவர்.

தான் சொன்னது போன்றே பிரான்சிஸ் தாம்சன் தன்னுடைய பாவ வாழ்க்கையை உதவித் தள்ளிவிட்டு, ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கினார். இப்படியான ஒரு புதிய வாழ்க்கை வாழத் தொடங்கிய பிரான்சிஸ் தாம்சன் அதன்பின் எழுதிய நூல்தான் "The Hound of Heaven" என்பதாகும்.

பிரான்சிஸ் தாம்சன் என்ற அந்த ஆங்கிலக் கவிஞர் இறைவனால் தொடப்படுவதற்கு முன்பு ஏனோதானோ என்று வாழ்ந்தார். ஆனால் ஆண்டவரால் தொடப்பட்ட பின்பு புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கினார். வாழ்வாகிய - வாழ்வு தரும் உணவாகிய - இயேசு பிரான்சிஸ் தாம்சனுக்கு புதிய வாழ்வினைத் தந்தார் என்பதை இதன்வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "வாழ்வுதரும் உணவு நானே" என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகளை எப்படி புரிந்துகொள்வது என்று சிந்தித்துப் பார்ப்போம். முதலில் உணவென்றால் என்ன என்பதையும், பின்னர் வாழ்வென்றால் என்ன என்பதையும் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

உணவு என்று சொல்கின்றபோது அது நமது உடலுக்கு நலத்தையும் ஆரோக்கியத்தையும் வலுவினையும் தரக்கூடியதாக இருக்கின்றது. வாழ்வு தரும் உணவு என்று சொல்கின்றபோது அது நம்முடைய உடலுக்கு மட்டுமல்ல, ஆன்மாவிற்கும் நலத்தையும் ஆரோக்கியத்தையும் வாழ்வினையும் தரக்கூடியது என்ற விதத்தில் புரிந்துகொள்ளலாம். இயேசு வாழ்வு தரும் உணவு என்று சொல்லும்போது, அவர் உடலுக்கும் ஆன்மாவிற்கும் வாழ்வினைத் தரக்கூடியவர் என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இயேசு தரக்கூடிய வாழ்வினை நாம் எப்படிப் பெற்றுக்கொள்வது என்பது அடுத்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியதொன்றாக இருக்கின்றது. இயேசு தரக்கூடிய வாழ்வினை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றால் அதற்கு நாம் முதலில் அவருடைய பிரசன்னத்தை விவிலியத்திலும், அருட்சாதனங்களிலும் ஒவ்வொரு மனிதரிலும் இனம்கண்டு கொள்ளவேண்டும். இனங்கண்டு கொள்வதோடு மட்டுமல்லாமல் அவரிடத்தில் நாம் (நெருங்கி) வரவேண்டும். அவரிடத்தில் நெருங்கி வருதல் என்பது நாம் வாழ்வினைப் பெற்றுக்கொள்வதற்கான இரண்டாவது படிநிலையாக இருக்கின்றது. மூன்றாவதாக நாம் செய்யவேண்டியது, இயேசுவை இனங்கண்டு கொண்ட நாம் அவரிடத்தில் நெருங்கி வரவேண்டும், அது மட்டுமல்லாமல் அவர்மீது நம்பிக்கை கொண்டு, அதன்வழியாக அவரோடு நல்லுறவுகொண்டு அவர் காட்டிய போதனைகளின் வாழவேண்டும். அப்போதுதான் நாம் வாழ்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வந்த பிரான்சிஸ் தாம்சன் அப்படித்தான் இயேசுவிடம் வந்து அவர்மீது நம்பிக்கை கொண்டு புதிய வாழ்வினை வாழ்ந்தார். அதனால்தான் அவர் இன்றைக்கும் நினைவுகூறப்படுகின்றார்.

ஆகையால், வாழ்வு தரும் உணவாகிய இயேசுவிடமிருந்து வாழ்வினைப் பெற நாம் அவரிடம் நெருங்கி வந்து, அவர் வாழ்ந்து காட்டிய போதனைகளின் படி வாழ்வோம், அதன்வழியாக இறைவன் தரும் நிலைவாழ்வினைப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!