Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         07 மே 2019  
                     பாஸ்கா காலம் மூன்றாம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 7: 51 - 8: 1a

அந்நாள்களில் ஸ்தேவான் மக்களையும் மூப்பரையும் மறைநூல் அறிஞரையும் நோக்கிக் கூறியது: "திமிர் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே, உங்களுடைய மூதாதையரைப் போல நீங்களும் தூய ஆவியாரை எப்போதும் எதிர்க்கிறீர்கள்.

எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமல் இருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையும் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக் கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள். கடவுளின் தூதர்கள் வழியாய்த் தரப்பட்ட திருச்சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் அதனைக் கடைப்பிடிக்கவில்லை."

இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள்.

அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்றுநோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, "இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்" என்று கூறினார்.

ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, பெருங் கூச்சலிட்டு, ஒருமிக்க அவர் மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்.

அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர், "ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்" என்று வேண்டிக்கொண்டார்.

பின்பு முழந்தாள்படியிட்டு, உரத்த குரலில், "ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்" என்று சொல்லி உயிர்விட்டார். ஸ்தேவானைக் கொலை செய்வதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா: 31: 2cd-3. 5,6-7a. 16,20b (பல்லவி: 5a)
=================================================================================
பல்லவி: உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.
அல்லது: அல்லேலூயா.

2cd எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும். 3 ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். பல்லவி

5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர். 6 நானோ, பயனற்ற சிலைகளில் பற்றுடையோரை வெறுத்து, ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கின்றேன். 7ய உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன். பல்லவி

16 உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். 20b மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி, உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 6: 35

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; என் தந்தையே.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-35

அக்காலத்தில் மக்கள் இயேசுவிடம், "நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! `அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!" என்றனர்.

இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது" என்றார்.

அவர்கள், "ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்" என்று கேட்டுக்கொண்டார்கள்.

இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


சிந்தனை:

ஸ்தேவான் கொல்லப்பட்டார்.

சிலுவையில் கற்றப் பாடத்தை பின்பற்றினார்.

சவுல் உடந்தையாக இருந்தார்.

சிலுவையின் பாடம் நம்மை உறுதிப்படுத்தும், உண்மையாக இருக்கச் செய்யும், வல்லமையைத் தரும் என்பதற்கு ஸ்தேவானின் மரணம் சாட்சி சொல்லுகின்றது.

சிலுவை தரும் ஞானத்தை பாடமாக்கி, வாழ்விலே வல்லமையை பெற்றவர்களாக பயணப்பட முன்வருவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 யோவான் 6: 30-35

அடையாளங்களைத் தேடி அலையும் மனிதர்கள்

சீடன் ஒருவன் ஜென் துறவியைப் பார்த்து, "குருவே! பக்கத்து ஊரில் இருக்கின்ற துறவி மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்கின்றார். நீரின் மீதும் நடக்கின்றார், நெருப்பை விழுங்குகின்றார். இன்னும் பல மாயாஜாலங்களைச் செய்கின்றார். நீங்கள் ஏன் இதுவரையிலும், எந்த வித்தையையும் எங்களுக்குச் செய்து காட்டவில்லை" என்று கேட்டான்.

அதற்கு அந்த ஜென் குரு, "உண்மைதான்! ஆனால் அதைவிட அதிசயமாக பல விஷயங்கள் இருக்கின்றன. வயிறு பசிக்கின்றது. சாப்பிட்டால் பசி காணாமல் போகின்றது; தூக்கம் கண்களை அசத்துகின்றது. தூங்கினால் களைப்பு காணாமல் போகின்றது. இப்படி நமக்குள்ள இத்தனை அதிசயங்களை வைத்துக்கொண்டு, புற அதிசயங்களில் வீணாக ஏன் மயங்குகின்றாய்?" என்றார். சீடனால் எதுவும் பேச முடியவில்லை.

அதிசயங்களைத் தேடி அலையும் மனிதர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு சாட்டையடிதான். ஒவ்வொருநாளும் நம்முடைய கண்முன்னே ஏராளமான அதிசயங்களை கடவுள் நிகழ்த்துகின்றபோது, தனியாக அதிசயங்களைத் தேடி அலைவது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் யூதர்கள் இயேசுவிடம், "நாங்கள் உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்?, அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்?" என்று கேட்கின்றார். யூதர்கள் இயேசுவிடம் இப்படிக் கேட்பதற்குக் காரணமில்லாமல் இல்லை. ஏனென்றால் யூதர்களின் முதல் மீட்பரான மோசே வானத்திலிருந்து மன்னாவைப் பொழியச் செய்தது போன்று (உண்மை வேறொன்றாக இருக்க, அவர்கள் இப்படியாக நினைத்தார்கள்) கடைசி மீட்பரும் மெசியாவுமானவர் வானத்திலிருந்து மன்னாவைப் பொழியச் செய்யவேண்டும். யூத இரபிக்கள் மக்களிடம் இதனைச் சொல்லி வைத்திருந்தார்கள். அதனால் யூதர்கள் இயேசுவிடம் இப்படியான ஒரு கேள்வியைக் கேட்கின்றார்கள்.

யூதர்களின் கேள்விக்கு இயேசு இரண்டு விதமான பதில்களைத் தருகின்றார். ஒன்று விண்ணகத்திலிருந்து மன்னாவைப் பொழியச் செய்தது மோசே அல்ல, ஆண்டவராகிய கடவுள்தான். இரண்டாவது விண்ணகத்திலிருந்து பொழியப்பட்ட மன்னா உண்மையான வாழ்வுதரும் உணவு அல்ல, அது வாழ்வுதரும் உணவின் ஒரு முன் அடையாளம். எனவே, உண்மையான வாழ்வ்வுதரக்கூடிய உணவைத் தரக்கூடியவர் கடவுள் ஒருவரே என்று அவர்களுக்கு சரியான விளக்கம் தருகின்றார். அப்போது யூதர்கள் இயேசுவிடம், "ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்" என்கிறார்கள். இயேசுவோ, "வாழ்வுதரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்கு பேசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" என்கிறார்.

இந்த நிகழ்வு நமக்கு ஒருசில உண்மைகளைத் தெளிவாக விளக்கின்றது. அதில் முதலாவது கடவுளை அடையாளங்களில் தேடுகின்ற போக்கினை விட்டுவிட வேண்டும் என்பதாகும். மெசியா என்றால் வானத்திலிருந்து மன்னாவைப் பொழியச் செய்யவேண்டும், அது போன்ற காரியங்களைச் செய்யவேண்டும் என்று யூதர்கள் நினைத்தார்கள். இன்றைக்குக் கூட மனிதர்கள் எங்கே புதுமைகள் நடக்கும், எங்கு அதிசயங்கள் நடக்கும் என்றுதான் பரபரத்து ஓடுகிறார்கள். அவர்கள் கடவுளின் பிரசன்னம் எங்கும் நிறைந்து இருக்கின்றது என்ற உண்மையை மறந்து போய்விடுகிறார்கள். இது வேதனையான ஒரு செயலாகும்.

இரண்டாவதாக மீட்பினை, வாழ்வினை நாம் பெறவேண்டும் என்றால் இயேசு ஒருவரிடம் மட்டுமே செல்லவேண்டும். காரணம் அவர் ஒருவரால் மட்டும்தான் நமக்கு நிலைவாழ்வினைத் தரமுடியும்.

இன்றைக்கு மனிதர்கள் நிறையக் காரியங்களில் நிம்மதியும் வாழ்வும் இருப்பதாக நினைத்துக்கொண்டு அவற்றுக்குப் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள். மனிதர்களால், பொருட்களால் நமக்கு ஒருபோதும் நிம்மதியைத் தரமுடியாது என்பதுதான் உண்மையாக இருக்கின்றது. எனவே, நாம் வாழ்வினைக் கொடையாகப் பெறவேண்டும் என்றால் ஆண்டவர் ஒருவரிடம் மட்டுமே தஞ்சம் புகவேண்டும், அவர் ஒருவரிடம் மட்டும் நம்முடைய நம்பிக்கையை பதிய வைக்கவேண்டும்.

எசாயாப் புத்தகம் 55:1-3 வரை உள்ள பகுதிகளில் வாசிக்கின்றோம், "தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே நீங்களும் வாருங்கள்... எனக்கு செவி கொடுங்கள்; என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள்" என்று. ஆம், ஆண்டவரை நாம் நாடிச் சென்று, அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அதனை வாழ்வாக்குகின்றபோது வாழ்வையும் நிம்மதியையும் பரிசாகப் பெறுவோம் என்பது உறுதி.

எனவே, இறைவனை அதிசயங்களிலும் அடையாளங்களிலும் காணுகின்ற போக்கினை விடுவோம். நிலைவாழ்வினைத் தரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
யோவான் 6: 30-35

கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கே ஏற்ற செயல்

ஒருமுறை மாவீரன் நெப்போலியன் போனபார்ட் எகிப்து நாட்டோடு போர்தொடுத்து, வெற்றியடைந்த பிறகு, தன்னுடைய சொந்த நாடான பிரான்சுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய படையில் இருந்த ஒருசில உயரதிகாரிகள் 'கடவுள் இருக்கிறாரா?' என்பது பற்றிய விவாதத்தில் இறங்கினார்கள். ஏனென்றால் அந்தக் காலக்கட்டத்தில் கடவுள் நம்பிக்கையானது மிகவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. பிரஞ்சுப் புரட்சி நடந்து முடிந்த தருனம்வேறு. அவர்களது விவாதம் காரசாரமாகப் போனது.

அவ்வேளையில் நெப்போலியனின் படையில் இருந்த உயர் அதிகாரி ஒருவர், "ஏன் அரசரிடம் இது பற்றிக் கேட்கக்கூடாது? என்று சொல்லிவிட்டு, நெப்போலியனிடம், "கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்வியைக் கேட்டார்கள். அதற்கு அவர், தூரத்தில் தெரிந்த வானத்தையும், அதிலிருந்த மேகத்தையும் சுட்டிக்காட்டிவிட்டு, "இதையெல்லாம் படைத்தது யார்?" என்று கேட்டார். அவர்கள் ஒன்றுமே பேசாமல் அமைதி காத்தார்கள்.

இந்த உலகமும், அதில் உள்ள படைப்புகள் யாவுமே, கடவுள் இந்த உலகத்தில் பிரசன்னமாக இருக்கிறார் என்பதை மேலே சொன்ன நிகழ்வானது நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆதலால் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று விவாதத்தில் இறங்காமல், அவருடைய பிரசன்னத்தை இந்த உலகில், மனிதர்களிடத்தில் கண்டுகொள்வோம்.

நற்செய்தி வாசகத்தில் யூதர்கள் ஆண்டவர் இயேசுவிடம், "நாங்கள் உம்மைக் கண்டு (நீர் இறைமகன் என்று) நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்?" அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்?" என்று கேட்கின்றனர். யூதர்களுடைய விவாதம் எல்லாம், பாலை நிலத்தில் அவர்களுடைய முன்னோர்கள் உண்பதற்கு மோசே (?) மன்னா பொழிந்தது போன்று, இயேசு மன்னா பொழியவில்லையே என்பதுதான். அதற்கு இயேசு அவர்களிடம் மிகத் தெளிவாக விளக்கம் தருகின்றார். "வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல, என் தந்தையே! என்று.

இயேசு தொடர்ந்து அவர்களிடம் கூறுவார், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்கு பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொள்பவருக்கு என்றுமே தாகமே இராது" என்று. ஆக, இயேசு தன்மீது நம்பிக்கை கொள்ளும் எல்லாருக்கும் நிலைவாழ்வை, நிலையான அருளைத் தருகிறார் என்பதை இதிலிருந்து நாம் உணர்ந்துகொள்ளலாம்.

பலநேரங்களில் நாம் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்களைப் போன்று, பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் போன்று இயேசுவின்மீது உண்மையான நம்பிக்கை கொள்ளத் தவறிவிடுகின்றோம்; அவர் அளிக்கும் நிலைவாழ்வை, நிலையான அருளைப் பெற்றுக்கொள்ள மறுக்கின்றோம். இயேசு மெய்யாகவே இறைமகன், அவர் வானிலிருந்து இறங்கிவந்த வாழ்வளிக்கும் உணவு.

ஆகவே, நாம் அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு, நம்பிவாழவேண்டும். விவிலிய அறிஞரான எரோமிமுஸ் ஒருமுறை இவ்வாறு குறிபிட்டார், "கடவுள் அனுப்பியவரை நம்புவது என்பது அவரைப் பற்றிய சில உண்மைகளை மட்டும் நம்புவது அன்று. மாறாக அவரை, அவர் பார்வைகளை, கொள்கைகளை ஏற்று, அவரை மையமாக வைத்து வாழ்வதே கடவுளுக்கு ஏற்ற செயலாகும்" என்று குறிப்பிட்டார்.

இன்றைக்கு நாம் கடவுளைப் பற்றிய கொள்கைகளை, கோட்பாடுகளைக்கூட நம்பி ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அவர் நமக்கு விட்டுச்சென்ற மதிப்பீடுகளின்படி, போதனைகளின்படி வாழத் தவறிவிடுகிறோம். உண்மையான கிறிஸ்தவம் என்பது கோவில் வழிபாட்டோடு நின்றுவிடக்கூடியது அல்ல, அது நம்முடைய வாழ்க்கையோடு தொடர்புடையது. ஆகவே, இயேசுவே இறைமகன், மெசியா என நம்பி ஏற்றுக்கொள்வோம்; அந்த நம்பிக்கையை நமது வாழ்வில் வாழ்ந்து காட்டுவோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

"ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே! நீங்கள் அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில் அவரே உங்களுக்கு துணையும், கேடயமும் ஆவார்" (திருப்பாடல் 115:11)


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
யோவான் 6: 30-35

வானிலிருந்து உங்களுக்கு உணவு அருள்பவர் என் தந்தையே

நிகழ்வு

ஒரு சமயம் 'ஹாதிமி' என்ற ஞானியிடம் ஒரு நாத்திகவாதி வந்தார். அவர் ஹாதிமியிடம், "ஐயா! உங்களுக்கு ஒவ்வொருநாளும் உணவு எங்கிருந்து வருகின்றது?" என்று கேட்டார். அதற்கு ஹாதிமி சிறிதும் தாமதியாமல், "விண்ணகத்திலிருக்கின்ற இறைவனிடமிருந்து வருகின்றது" என்றார். ஹாதிமியிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்த்திராத நாத்திகவாதி அவரிடம், "என்ன நீங்கள்... மனிதர்களிடமிருந்து உணவைப் பெற்றுக்கொண்டு இறைவனிடமிருந்து வந்ததாகச் சொல்கிறீர்களே" என்றார்.

உடனே ஹாதிமி, "நான் என்றைக்காவது உங்களிடமிருந்து உணவு வாங்கியிருக்கிறேனா?" என்று கேட்டார். "நீங்கள் என்னிடமிருந்து உணவு வாங்கவில்லை என்பதற்காக இறைவன்தான் உங்களுக்கு உணவு அளிக்கிறார் என்று சொல்லிவிடமுடியுமா? முடியவே முடியாது" என்றார் நாத்திகவாதி. "நீங்கள் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். நான் மட்டுமல்ல, இந்த உலகத்தில் இருக்கின்ற அத்தனை உயிரினங்களுக்கும் இறைவனே உணவு அளிக்கிறார்" என்றார் ஹாதிமி.

இதைக்கேட்ட அந்த நாத்திகவாதி, "ஐயா! நீங்கள் சொல்வதுபோன்று இறைவன்தான் உங்களுக்கு உணவளிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்... இரண்டு நாட்கள் உங்களை உங்களுடைய அறைக்குள் அடைத்து வைத்தால், அப்போதும் இறைவன் உங்களுக்கு உணவுதருவாரா?" என்று கேட்டார். ஹாதிமி மறுமொழியாக அவரிடம், "நான் பிறந்து, எனக்கு இரண்டு வயது ஆகும்வரைக்கும் ஓர் அறைக்குள்தான் இருந்தேன். அப்போது எனக்கு உணவளித்த இறைவன், இப்போது அளிக்கமாட்டாரா என்ன?" என்றார். நாத்திகவாதி விடாமல் அவரிடம், "ஒரு தாய் தன் பிள்ளைக்கு உணவளிப்பதை எப்படி இறைவன் உணவளிப்பததாகச் சொல்லலாம்?" என்றார். "வானில் பறந்து செல்லும் பறவைக்கும் மண்ணில் ஊர்ந்து செல்லும் எறும்புக்கும் இறைவன் எப்படி உணவளிக்கிறாரோ அப்படித்தான் எனக்கும் உணவளிக்கிறார்" என்றார் ஹாதிமி.

இதைக் கேட்டதும் அந்த நாத்திகவாதி ஹாதிமியின் காலில் விழுந்து, "ஐயா! என்னை மன்னித்தருள்க. இறைவன்தான் எல்லா உயிர்களுக்கும் உணவளிக்கின்றார் என்று இப்போது நம்புகிறேன்" என்றார்.

ஹாதிமி என்ற ஞானியின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு, நற்செய்தியில் இயேசு கூறுகின்ற, "வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே" என்ற வார்த்தைகளை நினைவுபடுத்துகின்றன. இது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

மன்னா குறித்த விளக்கத்தை அளித்த இயேசு

நற்செய்தியில் (யோவா 6:29) இயேசு, "கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்" என்று சொன்னதும் யூதர்கள், "நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? 'அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்' என்று எழுதப்பட்டுள்ளதே" என்கின்றனர்.

யூதர்களின் நினைப்பெல்லாம், 'மோசேதான் அவர்களுக்கு பாலைநிலத்தில் மன்னா வழங்கினார் என்பதாகும். இப்படிப்பட்ட நிலையில்தான் இயேசு அவர்களிடம், "மோசே அல்ல, என் தந்தையே" (திபா 78:24) என்ற தெளிவினைத் தருகின்றார். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் குழப்பமான சூழ்நிலைகளை நாம் சந்திக்கின்றபோது, அது தொடர்பான தெளிவினைப் பெறவேண்டுமெனில், இயேசுவிடம் நம் இதயக் கதவினைத் திறந்துவைத்தால், நிச்சயம் தெளிவினைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.

வானிலிருந்து இறங்கி வந்த உணவு இயேசு

இயேசு யூதர்களுக்கு மன்னாவை யார் வழங்கினார் என்ற விளக்கத்தைத் தந்த பின்பு, தந்தையாம் கடவுள் அளிக்கின்ற வாழ்வளிக்கும் உணவினைக் குறித்துப் பேசுகின்றார்.

தந்தையாம் கடவுள் அளிக்க இருப்பதாக இயேசு கூறுகின்ற வாழ்வளிக்கும் உணவு என்பது, யூத மக்களுக்கு மட்டுமல்லாது எல்லா மக்களுக்கும் உரித்தானது. மன்னா உணவினை யூதர்கள் மட்டும்தான் உண்டார்கள். ஆனால், வாழ்வளிக்கும் உணவினை அவர்மீது நம்பிக்கை கொண்ட எல்லா மக்களும் உண்ணலாம். மேலும் இவ்வுணவு சாதாரண உணவு கிடையாது. சாதாரண உணவு உடலுக்கு மட்டுமே வலிவினை ஊட்டும். வாழ்வளிக்கும் உணவு ஆன்மாவிற்கு வலுவூட்டும். அப்படிப்பட்ட உணவினைத் தான் தந்தைக் கடவுள் தரப்போவதாகவும் அவ்வுணவு நானே என்பதை இயேசு அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.

ஆதலால், வாழ்வளிக்கும் உணவாம் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அவர் அளிக்கும் நிலைவாழ்வைப் பெறத் தயாராவது நல்லது.

சிந்தனை

'அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்' (யோவா 3:15) என்பார் தூய யோவான். ஆகவே, நமக்கு நிலைவாழ்வை அளிப்பவரும் வாழ்வளிக்கும் உணவானவருமான இயேசுவின்மீது நம்பிக்கை வைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
முதல் வாசகம்

ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 7: 51 - 8: 1a

இயேசுவைப் போன்று மன்னித்த ஸ்தேவான்

நிகழ்வு

மத்திய அமெரிக்காவில் உள்ளது நிகரகுவா (Nicaragua) என்றொரு குட்டிநாட்டு. இங்குள்ள அரசாங்கத்திற்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டிப் போராட்டம் நடத்தினார் என்பதற்காக தாமஸ் போர்கே (Thomas Borge) என்பவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இவருக்கு 500 மணிநேரத் தொடர் தண்டனை கொடுக்கப்பட்டது. அத்தண்டனைக்குப் பிறகு இவருடைய உடலில் உயிர் மட்டும்தான் இருந்ததே ஒழிய, செத்தவர்போல்தான் கிடந்தார். இவர் பழையநிலைக்குத் திரும்பவர ஒருமாதத்திற்கு மேல் ஆயிற்று.

இதற்கிடையில் மக்கள் நடத்திவந்த தொடர் போராட்டம் வெற்றிபெற்றது. இதனால் கொடிய அரசாங்கம் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய அரசாங்கம் உருவானது. அந்த அரசாங்கத்தில் தாமஸ் போர்கேவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

ஆண்டுகள் பல உருண்டோடின. ஒருநாள் தாமஸ் போர்கே ஒரு பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு எதிரே முன்பு அவரைச் சிறைச்சாலையில் வைத்து 500 மணிநேரம் தொடர் சித்ரவதை செய்த சிறை அதிகாரி வந்துகொண்டிருந்தார். அந்தச் சிறைஅதிகாரி தாமஸ் போர்கேவைக் கண்டதும், 'அவர் தன்னை என்ன செய்யப்போகிறாரோ' என்று பயந்துகொண்டே சாலையை விட்டு சற்று ஒதுங்கிச் சென்றார். தாமஸ் போர்கே அவரைக் கண்டதும் அவர் அருகே வேகமாகச் சென்று, "நீங்கள்தானே என்னைச் சிறையில் வைத்து கடுமையாகச் சித்ரவதை செய்தீர்கள்... உங்களை இப்பொழுது என்ன செய்கிறேன் பாருங்கள்!" என்றார். அவரோ 'என்ன நடக்கப்போகிறதோ' என்று அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றார்.

அப்பொழுது தாமஸ் போர்கே தன்னுடைய கையை அவரிடம் கொடுத்து, "நீங்கள் என்னைச் சித்ரவதை செய்ததற்காக இப்பொழுது நான் உங்களை மனதார மன்னிக்கப் போகிறேன்" என்றார். இதைச் சற்றும் எதிர்பார்த்திராத அந்தச் சிறைஅதிகாரி தான் அவ்வாறு நடந்துகொண்டதற்காக மன்னிப்புக் கேட்டார். தாமஸ் போர்கேவும் அவரை மனதார மன்னித்தார். இதனால் அந்த இடமே மகிழ்ச்சி பொங்கி வழியும் இடமாக மாறியது.

தன்னைத் தொடர் சித்ரவதை செய்த சிறைஅதிகாரியை மன்னித்து, தாமஸ் போர்கே மன்னிப்பிற்கு இலக்கணமாகத் திகழ்கின்றார். இந்த முதல் வாசகத்திலும் மன்னிப்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்த ஒருவரைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் யார்? அவர் எப்படித் தன்னைத் துன்புறுத்தியவர்களை மன்னித்தார்? என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இறைவார்த்தைக்குச் செவிமடுக்காமலும் இறைவாக்கினர்களைத் துன்புறுத்தியும் வந்த யூதர்கள்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், திருத்தொண்டரான ஸ்தேவான் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் பார்த்து, திமிர்பிடித்தவர்களே! இறைவார்த்தையை கேட்க மறுக்கும் செவியும் ஏற்ப மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே! இறைவாக்கினர்களை கொன்றுபோட்டவர்களே! என்று கடுமையாகச் சாடுகின்றார். இதனால் அவர்கள் சினம்கொண்டு, பற்களை நறநறவெனக் கடித்து, அவரை நகருக்கு வெளியே இழுத்துப் போட்டுக் கல்லெறிந்து கொன்றுபோடுகின்றார்கள்.

இஸ்ரயேல் மக்களின் வரலாற்றை வாசித்துப் பார்த்துக்கும்போது, ஆண்டவராகிய கடவுள் அவர்கள்மேல் இரக்கும்கொண்டு அவர்கள் நடுவே இறைவாக்கினர்களை அனுப்பியதும் அவர்களோ அவர்களை அடித்துத் துன்புறுத்துத்தியதும் சித்ரவதை செய்ததும்தான் நம் கண்முன்னால் வந்துபோகிறது. அந்த வரிசையில்தான் இறைவாக்கை எடுத்துச் சொன்ன ஸ்தேவானை அவர்கள் கல்லால் எறிந்து கொல்கிறார்கள்.

தன்னை கொன்றவர்களைக் மன்னிக்குமாறு இறைவனிடம் வேண்டிய ஸ்தேவான்

ஸ்தேவான் அறிவித்த செய்தியை யூதர்கள் காதுகொடுத்துக் கேட்டிருக்கவேண்டும். காரணம் அவர் தூய ஆவியாரால் நிரப்பப்பட்டவர், ஞானமும் நம்பிக்கையும் நிறைந்தவர் (திப 6: 5,8). அப்படிப்பட்டவருடைய வார்த்தையை அவர்கள் கேட்காமல், தங்களுடைய காதுகளை அடைத்துக்கொள்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், அவர்கள் அவரை நகருக்கு வெளியே இழுத்துக்கொண்டு சென்று கல்லால் எறிந்துகொள்கின்றார்கள். ஸ்தேவானோ தன்னைத் துன்புறுத்தியவர்களைச் சபித்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், அவர்களை இறைவன் மன்னிக்குமாறு, "ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்" என்று இறைவனிடம் மன்ன்றாடுகின்றார். இவ்வாறு அவர் இயேசுவைப் போன்று மன்னிக்கின்றார் (லூக் 23: 34, 46, திப 7: 59-60).

இறைவார்த்தை எடுத்துரைத்த ஸ்தேவானை எப்படி யூதர்கள் எப்படிக் கொன்றுபோட்டார்களோ, அதுபோன்று நாமும் இறைவார்த்தையை எடுத்துரைப்பதாலும் இறைவழியில் நடப்பதாலும் சித்ரவதை செய்யப்படலாம். அப்படிப்பட்ட தருணத்தில் நாம் ஸ்தேவானைப் போன்று மன்னிக்கும் மனிதர்களாக வாழ்வது சிறப்பு.

சிந்தனை

'மன்னிப்பு என்பது இறைவனின் கட்டளை' என்பார் மார்டின் லூதர் (1483 -1546). ஆகவே, நாம் இயேசுவைப் போன்று ஸ்தேவானைப் போன்று நமக்கு எதிராகத் தீமை செய்தவர்களை மன்னிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!