|
|
04
மே 2019 |
|
|
பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி நிறைந்தவர்களுமான
எழுவரைத் தெரிந்தெடுத்தார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்
6: 1-7
அந்நாள்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது,
கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில்
முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு
எதிராக முணுமுணுத்தனர்.
எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து,
"நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில்
பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல.
ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும்
தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக்
கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம்.
நாங்களோ இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய்
நிலைத்திருப்போம்"என்று கூறினர்.
திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக் கருத்தை ஏற்றுக்
கொண்டனர்.
அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த
ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா,
யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத்
தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள்.
திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர்.
கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை
எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக்கொண்டே சென்றது. குருக்களுள்
பெருங்கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை
கொண்டனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-திபா: 33: 1-2. 4-5. 18-19 (பல்லவி:
22)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
அல்லது: அல்லேலூயா.
1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப்
புகழ்வது பொருத்தமானதே. 2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி
செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
பல்லவி
4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு
உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்;
அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி
18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக்
காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச்
சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும்
வாழ்விக்கின்றார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; அனைத்தையும்
படைத்தவர் அவரே; மானிடக்குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு கடல்மீது நடந்து வருவதைச்
சீடர்கள் கண்டனர்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
6: 16-21
மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து, படகேறி
மறுகரையிலுள்ள கப்பர்நாகுமுக்குப் புறப்பட்டார்கள், ஏற்கெனவே
இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை.
அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது. அவர்கள்
ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது
நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள்.
இயேசு அவர்களிடம், "நான்தான், அஞ்சாதீர்கள்"என்றார். அவர்கள்
அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள்.
ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம் போய்ச் சேர்ந்துவிட்டது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
பணி பகிர்வு என்பது நீர்வாகத்திற்கு மிகவும் வளம் சேர்க்கக்
கூடியது.
தற்போதைய திருத்தந்தை கர்தினார்மார் எட்டு பேரை
தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணிக்கு உதவிட கேட்டு இருக்கின்றார்.
பலமுறை அவர்களது அமர்வு நடந்தேறியிருக்கின்றது. திருஅவையை
முன்னெடுத்து செல்வதற்கு இது துணை செய்கின்றது என்பதனை உணர்கின்றோம்.
தன்னுடைய பணிகளை பகிர்ந்து திறம்பட செயல்பட முன்வருவதற்கு தைரியம்
தேவையானது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
யோவான் 6: 16-21
அஞ்சாதீர்கள், நான்தான்
கடந்த நூற்றாண்டில் ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ஒரு கடற்கரை
கிராமத்தில் மறைபோதகப் பணியைச் செய்து வந்தவர் அலென் கார்டினர்
(Allen Gardinar) என்பவர். ஒருநாள் அவர் கடலில் பயணம்
செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர் பயணம்செய்த கப்பல்
எதிரே வந்த கப்பல்மீது மோதி விபத்துக்குள்ளாக இரண்டு கப்பலிலும்
இருந்தவர்களும் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். அலென் கார்டினர்
என்ற அந்த மறைபோதகரும் அவர்களோடு சேர்ந்து இறந்து போனார்.
இரண்டு நாட்கள் கழித்தே மீட்புக் குழு வந்து விபத்தில் இறந்தவர்களை
மீட்டது. மீட்புக் குழு அலென் கார்டினரை மீட்டபோது அவரோடு
சேர்த்து ஒரு நாட்குறிப்பேடையும் கண்டுபிடித்தது. அதில் அவர்
தன்னுடைய வாழ்வில் சந்தித்த துன்பங்கள், தனிமை, தூக்கமின்மை,
பட்டினி, அவமானங்கள் அனைத்தையும் எழுதி வைத்திருந்தார். அதோடு
சேர்த்து கடைசியாக ஒரு குறிப்பையும் எழுதி வைத்திருந்தார். அந்தக்
குறிப்பு இதுதான்: (I am overwhelmed with the sense of
goodness of God) நான் அனுபவித்த துன்பங்கள், வேதனைகள், தனியான
சூழ்நிலைகள் இவையாவற்றிலும் கடவுள் என்னோடு இருக்கின்றார் என்பதையும்
அவர் எத்துணை இனியவர் என்பதை உணர்ந்துகொண்டேன்". எவ்வளவு ஆழமான
அனுபவ வார்த்தைகள்.
நம்முடைய வாழ்வின் எல்லாச் சூழ்நிலையிலும் கடவுள் நம்மோடு இருக்கின்றார்,
அவர் நமக்கு நல்லதையே செய்கிறார் என்பதைத்தான் இந்த நிகழ்வு
நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் சீடர்கள் படகில் ஏறி கப்பர்நாகுமுக்கு
சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது கடலில் பெருங்காற்று
வீசுகிறது; கடல் பொங்கி எழுகிறது; இத்தகைய சூழ்நிலையில் இயேசு
சீடர்கள் இருக்கும் படகை நோக்கி கடந்துமீது நடந்து வருகிறார்.
இதைப் பார்த்து சீடர்கள் அனைவரும் பயந்து நடுங்குகிறார்கள். இயேசு
அவர்களிடம், "நான்தான், அஞ்சாதீர்கள்" என்று சொல்லி அவர்களை அமைதி
கொள்ளச் செய்கின்றார். யோவான் நற்செய்தியில் வரும் இந்த நிகழ்வு
நமக்கு ஒருசில உண்மைகளைத் தெளிவாக விளக்குகின்றது. அவை என்னென்ன
என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுள் எப்போதும் நம்மை பார்த்துக்கொண்டே இருக்கின்றார்.
இதுதான் இந்த நிகழ்வு நமக்கு முதலாவது உண்மையாக இருகின்றது.
ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து ஐயாயிரம்
பேருக்கு பகிர்ந்தளித்த இயேசு கிறிஸ்து அதன்பின்னர் தன்னுடைய
சீடர்களை கப்பர்நாகுமுக்கு முன்னதாகவே அனுப்பிவிட்டு, தனியாக
இறைவனிடத்தில் ஜெபிக்கச் செல்கிறார். இயேசு இறைவனிடத்தில்
ஜெபித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய சீடர்கள் மீது ஒரு கண்ணை
பதித்தவராகவே இருக்கின்றார். சீடர்கள் சென்றுகொண்டிருந்த
கடலில் கொந்தளிப்பு ஏற்படுகின்றது என்பதை அறிந்ததும் இயேசு
அங்கிருந்து விரைந்து சென்று சீடர்களுக்கு உதவச் செல்கிறார்.
இவ்வாறு இயேசு தன்னுடைய சீடர்கள் மீது தன் மக்கள்மீது
எப்போதும் ஒரு கண்ணைப் பதித்து அவர்களுக்கு என்ன நேரிடுகிறது
என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதைப்
புரிந்துகொள்ளலாம்.
இயேசு நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பவர் மட்டுமல்ல, மாறாக அவர்
நமக்கு உதவி செய்ய விரைந்து வருகின்றார். இதுதான் இந்த நிகழ்வு
நமக்கு உணர்த்தும் இரண்டாவது உண்மையாக இருக்கின்றது.
இறைவனிடத்தில் ஜெபித்துக்கொண்டிருந்த இயேசு சீடர்களுக்கு ஒரு
துன்பம் என்று விரைந்து வருகின்றார். கடவுள் தன்னுடைய
பிள்ளைகள் மீது எந்தளவு அக்கறைகொண்டிருக்கிறார் என்பதை இந்த
நிகழ்வின் வழியாக உணர்ந்துகொள்ளலாம். நம்முடைய கடவுள் வெறுமென
நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பவர் மட்டுமல்ல, அவர் நமக்கு உதவி
செய்ய ஓடோடி வருபவர். திருப்பாடல் 81:7ல் வருகின்ற, "துன்ப
வேளையில் என்னை நோக்கி மன்றாடினீர்கள்; நான் உங்களை
விடுவித்தேன்" என்ற இறைவார்த்தை இதைத்தான் நமக்கு
உணர்த்துகின்றது.
இயேசு நம்முடைய துன்ப வேளையில் உதவுபவர் மட்டுமல்ல, அவர் நம்மை
விண்ணகத்திற்கு கூட்டிச் சேர்ப்பவர். இதுதான் இந்த நிகழ்வு
உணர்த்தும் மூன்றாவது உண்மையாக இருக்கின்றது. சீடர்கள் அவரைப்
படகில் ஏற்றுக்கொள்ள விரும்பியபோது, படகு உடனே அவர்கள்
சேரவேண்டிய இடம்போய்ச் சேர்ந்தது என்று நற்செய்தியில்
வாசிக்கின்றோம். இதைக் குறித்து சொல்கின்றபோது விவிலிய
அறிஞர்கள், சேரவேண்டிய இடம் என்றால் விண்ணகம் என்றே
சொல்வார்கள். திருப்பாடல் 107:30 இதனை இன்னும் சிறப்பாக
விளக்கும். "அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக்
கொண்டு போய்ச் சேர்ந்தார்".
எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில்
கடவுள் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறார்; உதவி
செய்ய வருகின்றார். அது மட்டுமல்லாமல், நம்மை விண்ணகத்திற்கு
கூட்டிச் சேர்க்கின்றார் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய்
அச்சமில்லா வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
சனிக்கிழமை 04 05 2019
யோவான் 6: 16-21
அஞ்சாதே... ஆண்டவர்க்கு எல்லாம் தெரியும்...
நிகழ்வு
நம்முடைய இந்தியத் திருநாட்டிற்கு ஆண்டவரின் நற்செய்தியை
எடுத்துரைக்க வெளிநாட்டிலிருந்து வந்தவர் பலர். இதில் சிலர்
மக்களுக்கு நன்று அறிமுகமானவர்கள். பலர் மக்களுக்கு
அறிமுகமாகாதவர்கள். மக்களுக்கு அவ்வளவாக அறிமுகமாகாத,
அதேநேரத்தில் மிகவும் சிறப்பான முறையில் நற்செய்திப் பணியைச்
செய்தவர் எமி கார்மைக்கேல் (1867- 1951) என்பவர்.
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த இவர், இருபதாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் தமிழகத்திற்கு வந்து, ஆண்டவரின் நற்செய்தியை மிக
அற்புதமாக எடுத்துரைத்து வந்தார். இப்படிப்பட்ட சமயத்தில்
திடீரென்று நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். இதற்குப்
பின்பு நான்கு சுவர்களுக்குள்தான் இவருடைய வாழ்க்கை கழிந்தது.
ஆனாலும் இவர் எதற்கும் அஞ்சாமல் மனவுறுதியோடு இருந்தார்.
அப்படி இவர் எதற்கும் அஞ்சாமல் மனவுறுதியோடு இருந்ததற்கு ஒரு
காரணமும் இருந்தது. அதுதான் அவருடைய அறையில்
பொறிக்கப்பட்டிருந்த
'அஞ்சாதே', '(ஆண்டவர்க்கு) எல்லாம்
தெரியும்' என்ற வார்த்தைகள் (Fear not, I know). இவ்விரண்டு
வார்த்தைகள்தான் படுத்தபடுக்கையாய் கிடந்த எமி கார்மைக்கேல்
என்ற நற்செய்திப் பணியாளர்க்கு மனவுறுதியைத் தந்தது.
இவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டிய இன்னொரு விடயம்
என்னவெனில், இவர் இந்தியாவில் பணிசெய்த ஐம்பது ஆண்டுகளில்
ஒருமுறையேனும் தன்னுடைய நாடான இங்கிலாந்திற்குச் செல்லவில்லை
என்பதேயாகும்.
நற்செய்திப்பணி செய்கையில் நோய்வாய்ப்பட்டுப் படுத்த
படுக்கையானாலும்,
'அஞ்சாதே' என்ற ஆண்டவரின் வார்த்தையை நம்பி
மனவுறுதியோடு இருந்த எமி கார்மைக்கேல் நமக்கெல்லாம் ஒரு
மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இன்றைய நற்செய்தி வாசகத்திலும்
ஆண்டவர் இயேசு, அஞ்சாதீர்கள் என்ற செய்தியைத்தான்
சொல்கின்றார். அஞ்சாதே என்று இயேசு சொல்கின்ற வார்த்தை எத்துணை
முக்கியத்துவம் வாய்ந்தது, இதன்வழியாக இயேசு நமக்குத் தரும்
செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
அதிசயத்திற்குப் பின்னால் அமைதிக்குப் பின்னால் புயல்
இயேசு ஐயாயிரம் பேர்க்கு உணவளித்ததைத் தொடர்ந்து, மக்கள்
அவரைப் பிடித்துக்கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை
உணர்ந்த, அவர் அவர்களிடமிருந்து விலகித் தனியாய் மலைக்குச்
செல்கின்றார். இன்னொரு பக்கம் சீடர்கள், நேரமானதும்
மறுகரைக்குச் செல்லத் தொடங்குகிறார்கள். இப்படிப்பட்ட
சமயத்தில்தான் கடலில் பெருங்காற்று வீசுகின்றது; புயல்
அடிக்கின்றது.
இதில் நாம் கவனிக்கவேண்டிய விடயம் என்னவெனில், இயேசு
அப்பங்களைப் பலுகச் செய்ததைத் தொடர்ந்து மக்கள் அவரைப்
பிடித்துக்கொண்டு அரசராக்கப்போகிறார்கள் என்ற செய்தியைக்
கேட்டு, 'காசாளராக' இருந்த யூதாஸ் இஸ்காரியோத்து மிகவும்
மகிழ்ந்திருக்கக்கூடும். காரணம், மக்கள் இயேசுவைப்
பிடித்துக்கொண்டு போய் அரசராக்கும் பட்சத்தில் தன்னைத்தான்
இயேசு நிதி அமைச்சராக நியமிப்பார் என்று அவர்
நினைத்திருக்கலாம். திருத்தூதர்களின் தலைவராக இருந்த பேதுருவோ,
இயேசு தன்னைத் முதன்மை மந்திரியாக பிரதம மந்திரியாக
ஏற்படுத்துவார் என்று நினைத்திருக்கலாம். மற்ற சீடர்களும்
இதற்கு விதிவிலக்கல்ல.
இப்படிப்பட்ட ஒரு கற்பனை உலகத்தில் தன்னுடைய சீடர்கள்
இருந்துவிடக்கூடாது என்பதற்காக இயேசு, கடலில் ஏற்பட்ட புயலில்
வழியாக, வாழ்க்கை என்பது ஏற்றங்களை மட்டும் கொண்டதில்லை
இறக்கங்களையும் கொண்டது, இன்பத்தை மட்டும் கொண்டதில்லை,
துன்பத்தையும் கொண்டது என்ற பாடத்தை அவர்களுக்குக்
கற்பிக்கின்றார். பல நேரங்களில் நாமும் இயேசுவின் சீடர்களைப்
போன்று வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துக்கொண்டு,
'இதுதான் வாழ்க்கை' என்று நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இன்றைய நற்செய்தி வழியாக
ஆண்டவர் இயேசு கூறுகின்ற
'வாழ்க்கைக்கு இரண்டு பக்கங்கள்
உண்டு' என்ற செய்தி கவனிக்கத் தக்கதாக இருக்கின்றது.
ஆபத்தில் உதவி செய்ய வரும் இயேசு
யோவான் நற்செய்தியில் இடம்பெறும் இயேசு கடல்மீது நடந்துவரும்
நிகழ்வு ஒவ்வொரு நற்செய்தியிலும் ஒவ்வொரு மாதிரியாக
இடம்பெறுகின்றது. மத்தேயு நற்செய்தியில், இயேசு கடல்மீது
நடந்து வந்ததைத் தொடர்ந்து, பேதுரு கடல்மீது நடந்து
வருவதாகவும் (மத் 14: 28 -30) மாற்கு நற்செய்தியில் சீடர்கள்
தண்டு வலிக்கப் பெரிதும் வருந்தியதைத் தொடர்ந்து இயேசு
கடல்மீது நடந்து வருவதாகும் (மாற் 6:48) வருகின்றது.
இதிலிருந்து நாம் ஒன்றை உறுதியாகச் சொல்லலாம். அது என்னவெனில்,
புயலில் பெரிதும் வருந்திய சீடர்களுக்கு உதவுவதற்காகத்தான்
இயேசு அவர்களை நோக்கி வருகின்றார் என்பதாகும். சீடர்களை நோக்கி
வரும் இயேசு, நான்தான் அஞ்சாதீர்கள் என்று சொல்லி அவர்களைத்
திடப்படுத்துகின்றார்.
அன்று சீடர்களுக்கு உதவி புரியவும் அஞ்சாதீர்கள் என்று
சொல்லித் தேற்றவும் செய்த இயேசு, இன்றைக்கு நமக்கு உதவி
புரியவும் ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி உறுதிபடுத்துவும்
வருகிறார் என்பது உண்மை.
சிந்தனை
'தூயகத்திலிருந்து அவர் உமக்கு உதவி அனுப்புவாராக!
சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை செய்வாராக' (திபா 20:2)
என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகவே, நாம் நமக்கு எப்போதும்
உதவி செய்ய இறைவன் துணை இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு,
அஞ்சாது ஆண்டவரின் பணி செய்வோம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய்ப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
யோவான் 6: 16-21
மறையுரைச் சிந்தனை
நான்தான், அஞ்சாதீர்கள்
ஒரு வீட்டில் தாயும், அவளுடைய நான்குவயது குழந்தையும் தனியாக
இருந்தார்கள். வழக்கமாக அலுவலத்திற்குப் போய்விட்டு,
சீக்கிரமாக வீட்டுக்குத் திரும்பிவிடும் குழந்தையின் தந்தை
அன்று இரவு வெகுநேரமாகியும்கூட வீட்டிற்கு திரும்பவில்லை.
இதனால் அவள் பயப்படத் தொடங்கினாள்.
அவளுடைய பயத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக, திடிரென்று
மின்சாரமானது தடைபட்டது. இதனால் குழந்தையோடு தாயும் பயப்படத்
தொடங்கினாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அரவணைத்துக்
கொண்டு, படுக்கையறையில் சென்று படுத்துக்கொண்டார்கள்.
அந்நேரத்தில் படுக்கையறையில் இருந்த ஜன்னலின் வழியாக
நிலவொளியானது உள்ளே வந்தது. இதைப் பார்த்தும் குழந்தை தன்னுடைய
தாயிடம், "அம்மா! இந்த நிலவொளி வானத்தில் இருக்கின்ற
கடவுளிடமிருந்து வரும் ஒளியா?" என்று தன்னுடைய சந்தேகத்தைக்
கேட்டாள். அதற்குத் தாயானவள், "ஆமாம். இந்த நிலைவொளி
கடவுளிடமிருந்து வரும் ஒளிதான். இது எப்போதும் பிரகாசமாக
எரியும் ஒளி" என்றான்.
உடனே குழந்தை தன்னுடைய தாயிடம், "அப்படியானால் ஒருவேளை
கடவுளுக்கு தூக்கம் வந்து, நிலவொளியை அணைத்துச்
சென்றுவிட்டால், நாம் இருளில் அல்லவா கிடக்கவேண்டும்?"
என்றாள். "கடவுளுக்கு அப்படியெல்லாம் தூக்கம் வாராது, அவர்
ஒருபோதும் நிலவொளியை அணைத்துவிட்டுத் தூங்கச் செல்லமாட்டார்"
என்றாள் தாய்.
அதற்கு குழந்தை தன்னுடைய தாயிடம், "கடவுளுக்குத் தூக்கம் வராது
என்றால் நிலவொளியை அணைக்கமாட்டார். நிலவொளியை அணைக்கவில்லை
என்றால் எனக்குப் பயமில்லை" என்று மிக வெகுளித்தனமாகச்
சொன்னாள். அதுவரைக்கும் சிறுது பயந்துகொண்டிருந்த தாயானவள்
குழந்தையின் வார்த்தையைக் கேட்ட பிறகு பயம் நீங்கப் பெற்றாள்.
கடவுள் நம்மோடு இருந்து, நம்மைப் பராமரிக்கும்போது, நாம்
எதற்குப் பயப்படவேண்டும் என்பதை இந்தக் கதையானது நமக்கு அழகுற
எடுத்துக் கூறுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு
தன்னுடைய சீடர்களை படகில் முன்னதாகவே அனுப்பிவிட்டு, இரவில்
கடலிலே நடந்துவருகின்றார். அவரைப் பார்த்த சீடர்கள் அஞ்சி
நடுங்குகிறார்கள். ஏற்கனவே பெருங்காற்று வீசி, கடல் பொங்கி
எழுந்ததால் அவர்கள் ஏற்கனவே அச்சத்திற்கு உள்ளாகி
இருந்தார்கள். இப்போது இயேசு கடல்மீது நடந்துவருவதைப்
பார்த்ததும் சீடர்கள் இன்னும் பயப்படுகிறார்கள். உடனே இயேசு
அவர்களிடம், "அஞ்சாதீர்கள், நான்தான்" என்றுசொல்லி, அவர்களைத்
தேற்றுகிறார்.
பயத்தினாலும், துன்பத்தினாலும் நாம் கலங்கித் தவிக்கும்போது
இயேசு நம்மைப் பார்த்துச் சொல்லும் வார்த்தை இதுதான்,
"அஞ்சாதீர்கள், நான் உங்களோடு இருக்கிறேன்" என்பதாகும்..
இயேசுவின்/கடவுளின் இந்த ஆறுதலான வார்த்தைகளை விவிலியத்தில் பல
இடங்களில் படிக்கக் கேட்கின்றோம். எசாயா புத்தகம் 43 ஆம்
அதிகாரம் 2 இறைவார்த்தையில் வாசிக்கின்றோம் "நீர்நிலைகள்
வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக்
கடந்து செல்லும்போது அவை உன்னை மூழ்கடிக்கமாட்டா; தீயில் நீ
நடந்தாலும் சுட்டெரிக்கப் படமாட்டாய்; நெருப்பு உன்மேல் பற்றி
எரியாது" என்று.
அதேபோன்று எரேமியா புத்தகம் 1:8 ல் வாசிக்கின்றோம். அங்கே
கடவுள் எரேமியா இறைவாக்கினரைப் பார்த்துச் சொல்கிறார்,
"அவர்கள் முன் அஞ்சாதே! ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு
இருக்கிறேன்" என்று. ஆக, கடவுள் நம்மோடு எல்லா நேரத்திலும்,
எல்லா இடத்திலும் உடனிருக்கிறார் என்பதையே இந்த இறைவார்த்தைகள்
நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
ஆகவே, நாம் நம்மோடு இருந்து நம்மைப் பாதுகாக்கும் இறைவனின்
துணியை நம்புவோம். எல்லா அச்ச உணர்வுகளிலிருந்து விடுதலை
பெறுவோம்; இறையருளை நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|