Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   28  பிப்ரவரி 2019  
     பொதுக்காலம் 7ம் வாரம் வியாழக்கிழமை - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
ஆண்டவரிடம் திரும்பிச் செல்ல, காலம் தாழ்த்தாதே.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 5: 1-8

உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே; 'எனக்கு அவை போதும்' எனச் சொல்லாதே. உன் நாட்டங்களுக்கும் வலிமைக்கும் அடிமையாகாதே; உன் உள்ளத்து விருப்பங்களைப் பின்பற்றாதே.

எனக்கு எதிராய்ச் செயல்படக்கூடியவர் யார்? எனச் சொல்லாதே; ஆண்டவர் உன்னைத் தண்டியாமல் விடமாட்டார். 'நான் பாவம் செய்தேன்; இருப்பினும், எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?' எனக் கூறாதே; ஆண்டவர் பொறுமை உள்ளவர். பாவத்துக்கு மேல் பாவம் செய்யும் அளவுக்குப் பாவ மன்னிப்புப்பற்றி அச்சம் இல்லாமல் இராதே.

'ஆண்டவரின் பரிவு எல்லையற்றது; எண்ணற்ற என் பாவங்களை அவர் மன்னித்துவிடுவார்' என உரைக்காதே.

அவரிடம் இரக்கமும் சினமும் உள்ளன; அவரது சீற்றம் பாவிகளைத் தாக்கும். ஆண்டவரிடம் திரும்பிச் செல்லக் காலம் தாழ்த்தாதே.

நாள்களைத் தள்ளிப்போடாதே.

ஆண்டவரின் சினம் திடீரென்று பொங்கியெழும்; அவர் தண்டிக்கும் காலத்தில் நீ அழிந்துபோவாய்.

முறைகேடான செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே; பேரிடரின் நாளில் அவற்றால் உனக்குப் பயன் இராது.

-இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:1: 1-2. 3. 4, 6 (பல்லவி: 40: 4a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டோர் பேறுபெற்றோர்.

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2 ஆனால் அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்.
-பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவ காலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.
-பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.
6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
1 தெச 2: 13

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இரு கையுடையவராய் நரகத்துக்குத் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது நல்லது.

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (9: 41-50)

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: "நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.

உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.

உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.

உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது.

நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது. ஏனெனில் பலிப் பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவது போல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர்.

உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- இறைவா உமக்கு நன்றி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்.

சீராக் 5: 1-8

உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே

நிகழ்வு

ஒரு கிராமத்தில் கந்தசாமி என்று ஒருவன் இருந்தான். அவன் படு கஞ்சன். அவன் உண்ணாமல், உறங்காமல் காசு காசு என்று அலைந்து திரிந்து, பணத்தைச் சேகரித்தான். அப்படிச் சேகரித்ததை எல்லாம் ஒரு கோணிப்பையில் போட்டு பத்திரமாக வைத்தான்.

பிறகொரு நாள் 'பணத்தை வட்டிக்குக் கொடுத்தால் இன்னும் அதிகம் சம்பாதிக்கலாம்' என்று எண்ணி, தன்னிடமிருந்த பணத்தை வட்டிக்குவிட்டான். குறிப்பிட்ட இடைவெளியில் யாராரெல்லாம் தன்னிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருந்தார்களோ, அவரிகளிடமெல்லாம் மிகவும் கறாராய் வட்டியும் முதலைமாய் வாங்கினான். இப்படி வட்டிமேல் வட்டி வாங்கி அதிகமான பணத்தைச் சேர்த்த கந்தசாமிக்குக் கல்யாணம் ஆகாததால் குடும்பச் செலவும் பாதியாகக் குறைந்தது.

அவனது ஒரே குறிக்கோள் பணம்தான். அதற்காக அவன் எதையும் செய்யத் துணிந்தான். அது மட்டுமல்லாமல், அவன் தன்னிடம் எவ்வளவு பணம் இருகின்றது என்று ஒவ்வொரு இரவும் எண்ணிப் பார்த்துக் கொண்டான். அதில் அவனுக்கு அவ்வளவு ஆனந்தம்! ஒருநாள் இரவு, வழக்கம்போல் அவன் வீட்டை நன்றாகப் பூட்டிவிட்டு, விளக்கைப் போட்டுக்கொண்டு பணத்தை எண்ணத் தொடங்கியபோது 'பணம் திருடுபோய்விடுமோ' என்ற பயம் அவனை தொற்றிகொள்ளத் தொடங்கியது. இதனால் இவன் நிம்மதியையும் தூக்கத்தையும் தொலைத்தான். தான் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை சரியாக அனுபவிக்க முடியாமல் போய்விடுமோ' என்று புலம்பத் தொடங்கினான்.

இதற்கிடையில் அங்கிருந்த மாவட்ட ஆட்சியாளரிடமிருந்து ஓர் எச்சரிக்கை வந்தது. "ஊரில் பூகம்பம் வரக்கூடிய சூழ்நிலை உள்ளது... அது எந்த நேரமும் வரலாம்... எனவே, மக்கள் ஊரைக் காலி செய்துவிட்டு பாதுகாப்பான ஓர் இடத்துக்குப் போய் விடுங்கள்" என்பதுதான் அந்த எச்சரிக்கை. கந்தசாமியோ தன்னிடமிருந்த இரண்டு பணப்பைகளையும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான். காவலர்கள் வீடுகளில் இருந்தவர்களை ஊரைக் காலிசெய்துவிட்டுப் போகுமாறு அவசரப்படுத்தினார்கள். எனவே, அவன் இரண்டு பணப்பைகளையும் தனது தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு வேகமாக ஓட ஆரம்பித்தான். அவனால் ஓட முடியவில்லை. - நடக்கவே முடியவில்லை, பிறகு எங்கே ஓடுவது!. அதற்குள் பூகம்பம் வந்துவிட்டது. கந்தசாமி தனது பணப்பைகளோடு ஒரு குழிக்குள் விழுந்து, பரிதாபமாய் மாய்ந்து போனான்.

கந்தசாமியிடம் ஏராளமான பணம் இருந்தது. அந்த பணத்தால் அவன் ஒரு பயனும் அடைய வில்லை. மாறாக, அவன் சேர்த்துவைத்த பணமே அவன் சாவுக்கு காரணமாயிற்று. ஒருவர் பணத்தின்மீது/செல்வத்தின் மீது வைக்கும் அளவுகடந்த நம்பிக்கை அவரை அப்பணம் எத்தகையோர் அழிவுக்குக் கொண்டுபோய் சேர்கின்றது என்ற உண்மையை உரக்கச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

செல்வம் ஒருவரை சுயநலவாதியாக மாற்றும்

சீராக்கின் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், அதன் ஆசிரியர், "உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே' என்று எச்சரிக்கை விடுக்கின்றார். செல்வம் அல்லது பணம் இல்லாமல் இங்கு ஒன்றும் நடக்காது என்றாலும் ஒருவர் செல்வத்தின்மீது வைக்கும் அளவுகடந்த நம்பிக்கை, அவரைப் பல தீமைகளிலும் விழத்தாட்டுகின்றது என்பதால் ஆசிரியர் அப்படிச் சொல்கின்றார்.

செல்வத்தினால் ஆகும் மிகப் பெரிய தீமை, அது ஒருவரை சுயநலவாதியாக மாற்றும் என்பதாகும். செல்வம் பெருகினால் பிறருக்கு உதவலாம் என்று நினைக்கலாம். ஆனால், நாம் நினைப்பதற்கு மாறாக, ஒருவரிடம் பெருகும் செல்வம், அவரை மேலும் மேலும் செல்வம் சேர்க்கத் தூண்டுகிறதே ஒழிய, அவரைப் பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்று தூண்டாது. இயேசு சொல்கின்ற அறிவற்ற செல்வந்தன் உவமை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. அவன் தனக்கு நல்ல விளைச்சல் ஏற்பட்டதும் களஞ்சியத்தைப் பெரிதாகக் கட்ட யோசித்தானே ஒழிய, பிறருக்குக் கொடுத்து உதவவேண்டும் என்று நினைக்கவில்லை. அவன் தன்னுடைய செல்வத்தின்மீது கொண்டிருந்த அளவுகடந்த பற்று அவனை அழிவுக்கு இட்டுத் தள்ளுகிறது. (லூக்கா 12).

செல்வம் ஒருவரை இந்த உலகத்தைப் பற்றியே யோசிக்கச் செய்கிறது

செல்வத்தின்மீது ஒருவர் வைக்கும் அளவுகடந்த பற்று, அவரை மருவுலகு சார்ந்தவற்றை நாடக் செய்யாமல், இந்த உலகு சார்ந்தவற்றைப் பற்றியே நாடச் செய்கிறது. ஏழை லாசர் உவமையில் வரும் பணக்காரன் தன்னிடம் ஏராளமான செல்வம் இருந்ததால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தான். அதனால் அவன் இறந்தபோது நரகத்திற்குச் சென்றான். இவ்வாறு அவனுடைய மண்ணுலகு சார்ந்த வாழ்க்கை அவன இறைவனைப் பற்றியோ சக மனிதரைப் பற்றியோ சிந்திக்க விடாமல் செய்து, அவனுடைய அழிவுக்குக் காரணமாகின்றது.

இப்படி ஒருவர் செல்வத்தின் மீது வைக்கும் அளவுகடந்த நம்பிக்கை அவருடைய அழிவுக்குக் காரணமாக இருப்பதால்தான் ஆண்டவர்மீது நம்பிக்கை வைப்பது தேவையான ஒன்றாக இருக்கின்றது.

சிந்தனை

செல்வத்தின்மீது வைக்கும் நம்பிக்கையல்ல, ஆண்டவர்மீது வைக்கும் நம்பிக்கையே நமக்கு எல்லாவிதமான ஆசியையும் பெற்றுத் தரும். ஆகவே, நாம் இறைவனிடத்தில் நம்பிக்கை வைத்து, அவருடைய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 9: 41-50

உங்கள் கை/கால்/கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால்...

நிகழ்வு

ஒரு கிராமத்தில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். ஒருநாள் அவர் தன்னுடைய சாவு நெருங்கி வருவதை உணர்ந்து, தன்னுடைய மூன்று மகன்களையும் அழைத்து, "என் அன்பு மக்களே! என்னுடைய சாவு நெருங்கி வருவதை நான் உணர்கிறேன்... நான் இறப்பதற்கு முன்பு ஒரே ஒரு விடயத்தை மட்டும் உங்களிடம் சொல்லித் தெளிவுபடுத்திவிட்டால், நான் நிம்மதியாக உயிர் துறப்பேன்" என்றார். "என்ன விடயம்... சொல்லுங்கள் அப்பா... நாங்கள் அதை உடனே செய்கிறோம்" என்று ஆர்வத்தோடு கேட்டார்கள் அவருடைய மூன்று மகன்களும்.

உடனே தந்தை இளைய மகனைப் பார்த்து, "என் அன்பு மகனே! ஓரிரு வாரங்களுக்கு முன்பாக நம்முடைய தோட்டத்தில் நட்ட மல்லிகைச் செடியைப் பிடுங்கிக்கொண்டு வா" என்றார். "இதோ வருகிறேன்" என்று சொல்லிவிட்டு இளைய மகன் தோட்டத்தில் நடப்பட்டிருந்த மல்லிகைச் செடி ஒன்றைப் பிடுங்கிக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான். பின்னர் அவர் தன்னுடைய இரண்டாவது மகனிடம், "என் அன்பு மகனே! நான் சொல்வதை நீ தட்டாமல் செய்வாய் என்று நம்புகிறேன்... நம்முடைய தோட்டத்தின் ஓரத்தில் மண்டிக்கிடக்கின்ற புதரிலிருந்து ஒரு செடியைப் பிடுங்கிக்கொண்டு வா" என்றார். அவனும், "இதோ வருகிறேன்!" என்று சொல்லிவிட்டு தோட்டத்தின் ஓரத்தில் மண்டிக்கிடந்த புதரிலிருந்து நன்றாக வளர்ந்திருந்த ஒரு செடியை தனது ஒரு கையால் பிடுங்க முயற்சி செய்தான் அது முடியாமல் போகவே, தன்னுடைய இரண்டு கைகளையும் பயன்படுத்தி, அந்தச் செடியை வேரோடு பிடுங்கிக்கொண்டு வந்து தந்தையிடம் கொடுத்தான்.

கடைசியாகத் தந்தை மூத்த மகனைக் கூப்பிட்டு, "என் அன்பு மகனே! நம்முடைய தோட்டத்தின் நடுவில் வளர்ந்திருகின்ற வேப்பமரத்தைப் பிடுங்கிக் கொண்டு வா" என்றார். அவனும் தந்தை சொல்லிவிட்டார் என்பதற்காக எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்காமல், தோட்டத்திற்குச் சென்று, அதன் நடுவில் இருந்த வேப்பமரத்தைப் பிடுங்குவதற்கு முயற்சி செய்து பார்த்தான். அவன் எவ்வளவோ முயற்சி செய்தும், வேப்பமரத்தைப் பிடுங்க முடியாமல் போகவே, தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான். அப்பொழுது தந்தை, மற்ற இரண்டு மகன்களையும் பார்த்து, "நீங்களும் அவனோடு சென்று வேப்ப மரத்தைப் பிடுங்குவதற்கு முயற்சிசெய்து பாருங்கள்" என்றார். அவர்களும் தோட்டத்திற்குச் சென்று, அதன் நடுவில் இருந்த வேப்பமரத்தைப் பிடுங்குவதற்கு எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள். அது முடியாமல் போகவே, தந்தையிடம் வந்து தங்களுடைய தோல்வியை ஒத்துக்கொண்டார்.

அப்பொழுது தந்தை அவர்கள் மூவரையும் பார்த்துச் சொன்னார், "என் அன்பு மக்களே! எந்தவொரு பாவத்திலும் விழுந்துவிடாதீர்கள்... ஒருவேளை நீங்கள் ஒரு பாவத்தில் விழுந்துவிட்டால், அதனை உடனடியாக உங்களிடமிருந்து களைவதற்கு முயற்சி செய்து பாருங்கள்... அப்படியில்லை என்றால் பெரிய மரம்போல் உங்களுடைய பாவம் வளர்ந்துவிடும் அல்லது அந்தப் பாவத்திற்கு முற்றிலுமாக நீங்கள் அடிமையாகிவிடுவீர்கள். பிறகு அதை உங்களுடைய வாழ்விலிருந்து அகற்றுவது மிகவும் கடினம்... அவ்வளவுதான் நான் சொல்ல வந்த செய்தி." இவ்வாறு அவர் தன் மகன்களிடம் பேசிவிட்டு, தன்னுடைய ஆவியைத் துறந்தார்.

பாவத்தைத் தொடக்கத்திலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

மாசற்றோராய் வாழ இயேசு விடுக்கும் அழைப்பு

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு, யாருக்கும் இடறலாக இராதீர்கள்... அப்படி யாராவது, யாருக்கும் இடறலாக இருந்தால் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி கடலில் தள்ளுவது நல்லது என்று சொல்லிவிட்டு, நம்முடைய கையோ, காலோ, கண்ணோ நம்மைப் பாவத்தில் விழச் செய்தால் உடனே அதனைப் பிடுங்கியோ, வெட்டியோ எறிந்துவிடுங்கள், இல்லையென்றால் நரகத்தில் தள்ளப்படுவீர்கள் என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் சற்றுக் கடினமாக இருந்தாலும், ஒவ்வொருவருடைய உள்ளமும் தூய்மையாக இருக்கவேண்டும், ஏனெனில், உள்ளேயிருந்துதான் எல்லா வகையான தீய எண்ணங்களும் தோன்றுகின்றன என்பதால் (மாற் 7: 20-23) அப்படிச் சொல்கின்றார்.

நரகம் பற்றிய இயேசுவின் கருத்து

இயேசு சொன்ன செய்தியை உள்வாங்கிக் கொள்ளாமல், பாவத்திற்கு அடிமையாவோர் நரகத்தில் நல்லப்படுவதாகவும் இயேசு சொல்கிறார். நரகம் எனப் பொருள்படும் கெஹன்னா (Gehenna) என்ற வார்த்தை 'ஹின்னன் பள்ளத்தாக்கு' (Valley of Hinnon) என்ற எபிரேய மூலத்திலிருந்து வந்த வார்த்தையாகும். இந்த ஹின்னன் பள்ளத்தாக்கு எருசலேமிற்கு வெளியில் இருக்கின்ற ஒரு பள்ளத்தாக்காகும். இப்பள்ளத்தாக்கு எப்போதும் நெருப்பு மயமாக இருக்கும். மேலும் இங்குதான் ஆகாஸ் மன்னன் மொலேக் எனப்படும் நெருப்புக் கடவுளுக்கு தன் மகன்களையே பலிகொடுத்தான் (1 குறி 28: 1-3). பாவத்திற்கு அடிமையாவோரும் இந்த ஹின்னன் பள்ளத்தாக்கினை போன்று நெருப்பு மாயமாக இருக்கும் நரகத்திற்குள் தள்ளப்படுவார்கள் என்பது இயேசு நமக்குச் சொல்லும் செய்தியாக இருக்கின்றது.

சிந்தனை

'தூயோராய் இருங்கள். ஏனென்னில் உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவர்' என்கிறது இறைவார்த்தை (லேவி 19:2). ஆகவே, கடவுளைப் போன்று தூயோராய் இருக்க நம்மிடம் இருக்கின்ற பாவத்தை அகற்றி வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
"உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள்.
நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது" (மாற்கு 9:43)


அன்பார்ந்த நண்பர்களே!

-- பாவம் என்பது கடவுளின் விருப்பப்படி நாம் நடக்காமல் நம் சுய நலப் போக்கிலே நடப்பதைக் குறிக்கும். ஒருவர் நன்னெறியில் செல்லாமல் தவறான வழிகளில் சென்றால் அது ஏற்கத் தகாதது. ஆனால் பிறரையும் தவறான வழியில் நடக்கத் தூண்டுவது அதைவிடப் பெரிய குற்றமாகக் கருதப்படும். இயேசு இத்தகைய குற்றத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். "பிறரைப் பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஒரு எந்திரக் கல்லைக் கட்டிச் கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது" (மாற் 9:42) என இயேசு கற்பிக்கிறார். கை, கால், கண் போன்ற உடல் உறுப்புகளை இழந்தாலும் கூட நாம் பாவம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என இயேசு கூறுவது மிகைக் கூற்றாகப் படலாம். நம் உடல் உறுப்புகளைத் துண்டிக்க வேண்டும் என்பதல்ல கருத்து. மாறாக, பாவம் என்பது நம்மைக் கடவுளிடமிருந்து பிரிக்கின்ற தீய சக்தியாக இருப்பதால் அதை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என இயேசு அறிவுறுத்துகிறார். பாவம் செய்வோர் "அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவர்" (காண்க: மாற் 9:43) என்பதன் பொருள் என்ன?

-- இங்கே "நரகம்" என வரும் சொல் எபிரேயத்தில் "கெகன்னா" என்பதாகும். இது "கெ பென்-ஹின்னோம்" என்னும் எபிரேயச் சொல்லின் கிரேக்க-இலத்தீன் வடிவமாகும். அதற்கு "பென் இ(ஹி)ன்னோம் பள்ளத்தாக்கு" என்பது பொருள் (காண்க: 2 அர 23:10). அதாவது ஹின்னோம் என்பவரின் மகனோடு தொடர்புடைய பள்ளத்தாக்கு எனப் பொருள். இது எருசலேம் நகரின் தென்மேற்குப் பகுதியில் இருந்தது. ஆகாசு, மனாசே ஆகிய இஸ்ரயேல் மன்னர்கள் இப்பள்ளத்தாக்கில் மோலெக்கு என்னும் பிற தெய்வத்திற்குத் தங்கள் பிள்ளைகளைப் பலியாகத் தீயில் சுட்டெரித்தனர் என்னும் செய்தி விவிலியத்தில் உள்ளது (காண்க: 2 குறி 28:3; 33:5; எரே 32:35). மன்னன் யோசேயா இக்கொடிய பழக்கத்தை ஒழித்தார் (காண்க: 2 அர 23:10). பின்னர் குப்பைக் கூழங்களைக் கொட்டுகின்ற இடமாக அப்பள்ளத்தாக்கு மாறியது. அவற்றைச் சுட்டெரிக்கும்படி மூட்டப்பட்ட தீ எப்போதும் எரிந்து புகைந்துகொண்டே இருக்கும். எரிந்து சாம்பலாகாமல் போன குப்பைக் கூழங்கள் நடுவே புழுக்கள் நௌpவதும் உண்டு. அந்த இடத்தையே இயேசு "அணையாத நெருப்புள்ள நரகம்" என விவரித்தார். கைகால் இழந்த நிலையில் நிலைவாழ்வில் புகுவது அந்த எரி குண்டமாகிய நரகத்தில் இரு கையுடையவராய் தள்ளப்பட்டு, துன்புற்று, எரிந்து சாம்பலாவதைவிட மேலானது என்றார் இயேசு. பாவம் செய்தால் கடவுள் நம்மைத் தண்டிப்பார் என்னும் கருத்து விவிலியத்தில் உள்ளது. ஆனால் கடவுள் நம்மை அன்புசெய்கிறார் என்பதால் நாம் அவரை அன்பு செய்ய அழைக்கப்படுகிறோம். கடவுளிடம் அன்பு காட்டுவோர் பிற மனிதரை அன்பு செய்யாமல் இருக்க இயலாது. ஏனென்றால் எல்லா மனிதரையும் வேறுபாடின்றி அன்பு செய்வது கடவுளின் பண்பு. அத்தகைய பண்பு நம்மில் துலங்கும் போது நாம் நரக தண்டனைக்குப் பயந்து பாவத்தை விலக்காமல், கடவுளின் அன்புக்கு எதிராகச் செயல்படலாகாது என்னும் உயரிய நோக்கத்தோடு வாழ்ந்திடுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!