Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   27  பிப்ரவரி 2019  
             பொதுக்காலம் 7ம் வாரம் புதன்கிழமை - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்   வியாகுல அன்னையின் தூய கபிரியேல்
=================================================================================
ஞானத்துக்கு அன்பர் ஆண்டவருக்கும் அன்பர்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் (4: 11-19)

ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும்; தன்னைத் தேடுவோர்க்குத் துணை நிற்கும். ஞானத்திற்கு அன்பர் வாழ்விற்கும் அன்பர்; அதனை வைகறையிலேயே தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர்.

அதனைப் பற்றிக்கொள்வோர் மாட்சியை உரிமையாக்கிக் கொள்வர்; அது செல்லும் இடமெல்லாம் ஆண்டவர் ஆசி வழங்குவார். அதற்குப் பணி செய்வோர் தூய இறைவனுக்கே ஊழியம் புரிகின்றனர்; ஞானத்துக்கு அன்பர் ஆண்டவருக்கும் அன்பர்.

ஞானத்துக்குப் பணிவோர் மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்குவர்; அதற்குச் செவிசாய்ப்போர் பாதுகாப்பாய் வாழ்வர்; ஞானத்தை நம்புவோர் அதனை உரிமையாக்கிக் கொள்வர்; அவர்களுடைய வழிமரபினரும் அதனை உடைமையாக்கிக் கொள்வர். முதலில் அவர்களை அது கோணல் வழியில் அழைத்துச் செல்லும்; அவர்களுக்கு அச்ச நடுக்கத்தை வருவிக்கும்; தனக்கு அவர்கள்மீது நம்பிக்கை ஏற்படும்வரை அவர்களை அது கண்டிக்கும், வதைக்கும்; தன் நெறிமுறைகளால் அவர்களைச் சோதிக்கும். அது மீண்டும் அவர்களிடமே வந்து அவர்களை மகிழ்விக்கும்; அவர்களுக்குத் தன் இரகசியங்களை வெளிப்படுத்தும். அதை விட்டு அவர்கள் விலகிச் சென்றால், அவர்களை அது கைவிட்டுவிடும்; அழிவுக்கு அவர்களை இட்டுச்செல்லும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:119: 165,168. 171,172. 174,175 (பல்லவி: 165a)
=================================================================================
 பல்லவி: திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு.

165 உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை.
168 உம் நியமங்களையும் ஒழுங்குமுறைகளையும் நான் கடைப் பிடிக்கின்றேன்; ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை.
-பல்லவி

171 உம் விதிமுறைகளை எனக்கு நீர் கற்பிப்பதால், என் இதழ்களினின்று திருப்புகழ் பொங்கிவரும்.
172 உம் வாக்கைக் குறித்து என் நா பாடுவதாக! ஏனெனில், உம் கட்டளைகள் எல்லாம் நீதியானவை.
-பல்லவி

174 ஆண்டவரே! உம்மிடமிருந்து வரும் மீட்பை நான் நாடுகின்றேன்; உமது திருச்சட்டத்தில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
175 உயிர் பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக! உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக!
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (9: 38-40)

அக்காலத்தில் யோவான் இயேசுவிடம், "போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்றார்.

அதற்கு இயேசு கூறியது: "தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்."


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  மாற்கு 9: 38-40

எல்லாரையும் வளரவிடும் இயேசு

நிகழ்வு

இந்தோனேசியாவில் உள்ள காடுகளில் 'உபாஸ்' என்றோர் அரியவகை மரம் உள்ளது. இது அடர்த்தியாகவும் அதேநேரத்தில் மிக உயரமாகவும் வளரும். இப்படி அடர்த்தியாகவும் உயரமாகவும் வளருகின்ற இம்மரம் தன்னுடைய கிளைகளிலோ அல்லது தனக்குக் கீழோ எந்தவொரு செடியையும் வளரவிடாது. அந்தளவுக்கு இந்த மரம் விஷத்தன்மை வாய்ந்தது. ஒருவேளை ஏதாவது ஒரு தாவரமோ அல்லது செடியோ இந்த மரத்தின் அடியில் வளர்ந்துவிட்டால், அதை இம்மரம் தன்னுடைய விஷக் காற்றால் கருகிப்போகச் செய்துவிடும்.

தான் மட்டும் வளரவேண்டும், வேறு யாரும் வளரக்கூடாது என்றிருக்கும் இந்த உபாஸ் மரத்தைப் போன்றுதான் ஒருசில மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இத்தகையதொரு குறுகிய மனப்பான்மை விட்டு வெளிவரவேண்டும்... இயேசுவைப் போன்று எல்லாரும் வளரவேண்டும், வாழவேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகமானது எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவின் பெயரால் பேய் ஒட்டிய மனிதர்

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் பெயரால் ஒருவர் பேய் ஓட்டியதையும் அதை சீடர்கள் தடுத்ததையும் பற்றி யோவான் இயேசுவிடம் விவரிக்கின்றார். இயேசு தன்னிடம் இவ்வாறு சொன்ன யோவான் சொன்னதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பாக, இந்நிகழ்வு நடந்த பின்னணி என்ன என்பதை அறிந்துகொள்வது நல்லது.

நற்செய்தியின் இப்பகுதிக்குச் சற்று முந்தைய பகுதியில், பேய்பிடித்துப் பேச்சிழந்த தன்னுடைய மகனை சீடர்களால் குணப்படுத்த முடியவில்லை என்று தந்தை ஒருவர் இயேசுவிடம் எடுத்துச் சொல்வார். அதற்கு இயேசு சீடர்களின் நம்பிக்கையற்ற தன்மையைக் கடிந்துகொள்வார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதாவது இயேசு தன்னுடைய சீடர்களுக்கு நம்பிக்கையில்லை என்று கடிந்துகொண்டிருக்கின்ற தருணத்தில், அவருடைய கவனத்தைத் திசை திருப்புவதற்கு யோவான் புதியதொரு சிக்கலை இயேசுவிடம் எடுத்துச் சொல்கின்றார். அந்தச் சிக்கல்தான் இயேசுவின் பெயரால் ஒருவர் பேய் ஓட்டியதாகும்.

தாங்கள் மட்டுமே வளரவேண்டும் என்று நினைத்த இயேசுவின் சீடர்கள்

இயேசுவின் காலத்தில் பரிசேயர்கள் உட்பட (மத் 12:27) பலரும் பேய் ஓட்டி வந்தார்கள். அதற்கு முக்கியக் காரணம், மனிதர்களுக்கு வந்த எல்லா நோய்களுக்குக் காரணம் பேய் அல்லது சாத்தான் என நம்பப்பட்டு வந்தது (யோவா 9: 2). அதனால்தான் ஆளாளுக்குப் (!) பேய் ஓட்டி வந்தார்கள். இந்தப் பின்னணியில்தான் நற்செய்தியில் வருகின்ற மனிதரும் பேயை ஓட்டுகின்றார், ஆனால் அவர் இயேசுவின் பெயரால் பேயை ஓட்டுகின்றார். இதைக் கண்டு பொறுக்க முடியாத இயேசுவின் சீடர்கள் அவரைத் தடுக்க முயல்கின்றார்கள்.

இங்கு சீடர்களிடம் வெளிப்பட்ட குறுகிய கண்ணோட்டத்தை அல்லது குறுகிய மனப்பான்மையைக் குறித்து சிறிது தெரிந்துகொள்ளவேண்டும். இயேசுவின் சீடர்களுடைய நினைப்பெல்லாம் தாங்கள்தான் இயேசுவின் சீடர்கள், ஆகையால் தாங்கள்தான் அவருடைய பெயரால் பேயை ஓட்டவேண்டும், வேறு யாரும் ஓட்டக்கூடாது என்பதாக இருந்தது. இது இன்றைக்கு இருக்கின்ற, 'இது எங்கள் கடவுள்/கோவில் எங்களுக்குத்தான் சொந்தம், வேறு யாரும் சொந்தம் கொண்டாடக்கூடாது' என்பவர்களுடைய மனநிலையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கின்றது. இதனால்தான் இயேசு தன்னிடம் இச்செய்தியைச் சொன்ன யோவானிடம், "தடுக்கவேண்டாம்" என்று சொல்கின்றார்.

எல்லாரும் வரலவேண்டும் என்று நினைத்த இயேசு

இயேசு, தன் பெயரால் பேயை ஓட்டியவரை சீடர்கள் தடுத்ததாகச் சொன்ன யோவானிடம், "தடுக்கவேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்" என்கின்றார். இதற்குக் காரணம் இயேசுவின் பரந்த எண்ணமே ஆகும்.

இயேசுவின் உள்ளக்கிடக்கையை நன்குணர்ந்தவராய் தூய பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் மடலில் இதை இவ்வாறு கூறுவார்: "எல்லா மனிதரும் மீட்பு பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்." (1திமொ 2:4) இயேசுவைப் பொறுத்தளவில் எல்லாரும் உடன் பணியாளர்கள், எனவே இதில் யாரையும் வேண்டாம் என்று ஒதுக்குவது நல்லதல்ல என்பதால்தான் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு அப்படியொரு செய்தியைக் கூறுகின்றார். ஆகையால், இயேசுவிடம் இருந்த பரந்துபட்ட பார்வையை நமதாக்கிக் கொண்டு ஒத்த கருத்தோடு இருப்பவர்களை ஒன்றாகச் சேர்த்துக்கொண்டு, இறையாட்சியை இம்மண்ணில் நனவாக்க முயற்சி செய்வோம்.

சிந்தனை

இறையாட்சி என்ற ஒற்றைக் கனவை நனவாக்க, ஒத்தக் கருத்தோடு உள்ளவர்களோடு இணைந்து பயணிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
சீராக் 4: 11-19

ஞானம் தன் மக்களை மேம்படுத்தும்!

நிகழ்வு

ஒரு சிற்றூரில் பெரிய பணக்காரன் ஒருவன் இருந்தான். அவன் தன் பெரிய மாளிகையில் தன் மனைவி, குழந்தைகளுடன் எந்தவொரு குறையுமின்றி சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள் அவன் மனம் மிகவும் நிம்மதியிழந்து இருந்தது. அதனால் அவன் ஞானத்தைத் தேடி புறப்பட்டான். அவ்வாறு அவன் புறப்படும்போது, தான் வைத்திருந்த குதிரையில் பல ஊர்களுக்குச் சென்று, பல துறவிகள், ஞானிகள் மற்றும் குருக்களைச் சந்தித்து, அவர்கள் கால்களில் தங்கத்தையும் வைரத்தையும் வைத்து, தனக்கு ஞானம் தருமாறு வேண்டினான். இருப்பினும் அவர்களால் அவனுக்கு ஞானத்தைத் தரமுடியவில்லை. அப்பொழுது அவனிடம், அந்த வழியாக வந்த வழிபோக்கர் ஒருவர், "இந்த காட்டின் உட்பகுதியில் ஒரு குகையில் துறவி ஒருவர் வாழ்ந்து வருகிறார்... அவரிடம் நீங்கள் சென்று உங்கள் பிரச்சனையை சொன்னால், அவர் கண்டிப்பாகத் தீர்த்து வைப்பார்" என்று கூறினார். அவனும் அவரால் முடியும் என்று,, அவன் கூறியதைக் கேட்டு, ஒரு மூட்டை நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த காட்டின் உட்பகுதியில் இருந்த துறவியைத் தேடிச் சென்றான்.

நீண்டநாள் அலைச்சலுக்குப் பிறகு, அவன் அந்த துறவியின் குகையைக் கண்டுப்பிடித்து, அவரை வணங்கி தன் பிரச்சனையைக் கூறினான். அப்பொழுது துறவி அவனிடம், "நீ இங்கு எப்படி வந்தாய்?" என்று கேட்டார். அதற்கு அவன் "குதிரையில்!" என்றான். பின் அவர், "அப்படியென்றால் எதற்கு ஞானத்தை தேடுகிறாய்... முதலில் உன் குதிரையைத் தேடு!" என்று கூறினார். உடனே அவன் அவரிடம், "என்ன குருவே! இப்படி முட்டாள் தனமாக பேசுகிறீர்கள்... என்னிடம் தான் குதிரை இருக்கிறதே... பின் எதற்கு நான் அதைத் தேட வேண்டும்" என்று சொன்னான். அப்பொழுது குரு அவனிடம், "எப்படி உன்னிடம் குதிரை இருக்கிறதோ, அதுபோல்தான் ஞானமும் உன்னிடமே இருக்கிறது... ஆகவே, அதை வெளியே தேடி அலையாமல், உனக்குள்ளேயே தேடித் தெரிந்துக்கொள்" என்று கூறி, குகைக்குள் சென்று தியானம் செய்ய, ஆரம்பித்துவிட்டார்.

ஞானம் எங்கேயும் இல்லை, அது நமக்குள்தான் இருக்கின்றது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம் ஞானத்தினால் ஒருவர் அடையும் நன்மைகளைக் குறித்துப் பேசுகின்றது. ஆகையால், நாம் அந்த ஞானத்தையும் அது கொடுக்கும் நன்மைகளையும் எப்படிப் பெற்றுக்கொள்வது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

ஞானம் மக்களை மேம்படுத்தும்

சீராக் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஞானத்தினால் ஒருவர் அடையும் பல்வேறு நன்மைகளைக் குறித்துப் படித்து அறிகின்றோம். அவ்வாறு ஒருவர் அடையும் முதலாவது நன்மை, வாழ்வில் மேம்படுதல் என்பதாகும். ஆண்டவராகிய கடவுள் சாலமோன் அரசரிடம், "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்கும்போது அவர், "எனக்கு ஞானம் வேண்டும்" என்பார். கடவுளும் அவருக்கு ஞானத்தை அபரிவிதமாய் ஞானத்தை வழங்குவதால், அவரால் மக்களுக்கு நல்லமுறையில் தீர்ப்பு வழங்க முடிந்தது; அவருடைய பேச்சைக் கேட்க பல இடங்களிலிருந்தும் மக்கள் வந்துபோகும் நிலை ஏற்பட்டது. அந்தளவுக்கு அவருடைய வாழ்வை அவர் பெற்றுக்கொண்ட ஞானம் உயர்த்தியது அல்லது மேம்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது. நாமும் ஞானத்தைத் தேடிக் கண்டுகொண்டால், நம்முடைய வாழ்வும் மேம்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஞானம் தன்னைத் தேடுவோருக்குத் துணை நிற்கும்

ஞானத்தினால் ஒருவருக்குக் கிடைக்கும் இரண்டாவது நன்மை, அது தருகின்ற துணைதான். யோவான் நற்செய்தியில் வருகின்ற ஒரு நிகழ்வு. படைவீரர்கள் இயேசுவைப் பிடித்துக் கொண்டு போக வரும்போது, இயேசு அவர்களிடம், "யாரைத் தேடுகிறீர்கள்?" என்று கேட்பார். அவர்களோ, "நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்" என்பார்கள். உடனே இயேசு அவர்களிடம், "நான்தான்" என்பார். அவர் நான்தான் என்று சொன்னதும் அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுவார்கள் (யோவா 18:6). இங்கு இயேசுவுக்கு அவரிடத்தில் இருந்த ஞானம் துணை இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த இடத்தில் மட்டுமல்லாது, இது போன்று பல இடங்களிலும் அவரை எதிர்த்து நின்றோர் அவரோடு வாதாட முடியாமல் தோற்றுப்போனதற்கு மிக முக்கியமான காரணம் அவருடைய இருந்த ஞானம்தான் என்றால் அது மிகையில்லை.

ஞானம், மகிழ்ச்சியையும் மாட்சியையும் ஆசியையும் பாதுகாப்பையும் தருவதாக சீராக் கூறுகின்றார். ஆகவே, இத்தகைய நன்மைகளை நமக்குத் தருகின்ற ஞானத்தை உரித்தாக்கிக் கொள்ள முயற்சி செய்வோம்.

சிந்தனை

'ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் தொடக்கம்' என்பார் சீராக் (1:14). ஆகையால், நாம் ஆண்டவர் அஞ்சி வாழ்ந்து, அவர் தருகின்ற ஞானத்தையும் அதன்வழியாக அவர் வழங்குகின்ற எல்லா ஆசியையும் இறையருளையும் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
வியாகுல அன்னையின் தூய கபிரியேல்

இயேசு அனைவருக்கும் சொந்தம்

இயேசு வாழ்ந்த காலத்தில் மக்கள் தீய ஆவிகள் இருக்கிறது என்று நம்பினர். தீய ஆவிகளை ஓட்டுவதற்கு ஏராளமான மந்திரவாதிகளும் இருந்தனர். அவர்களின் நம்பிக்கைப்படி, ஒருவனிடம் தீய ஆவி இருந்து, அந்தத்தீய ஆவியை ஓட்ட, அந்தத்தீய ஆவியைவிட வலிமையான ஆவியின் பெயரால் கட்டளையிட்டால், அந்த தீய ஆவி பணிந்து ஓடிவிடும். அந்தப்பெயரைக் கண்டுபிடித்துவிட்டால் பேயை எளிதாக ஓட்டிவிடலாம். இப்படித்தான் பொதுவாக தீய ஆவிகளை மக்கள் மத்தியில் வாழ்ந்த மந்திரவாதிகளும், போதகர்களும் செய்துவந்தனர்.

இங்கே நற்செய்தியில் காணப்படுவதும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிதான். யோவான் இயேசுவிடம் தங்களைச்சாராத ஒருவர் இயேசுவின் பெயரைப்பயன்படுத்தி தீய ஆவிகளை ஓட்டுவதாக குற்றம் சாட்டுகிறார். ஆனால், இயேசுவோ 'நமக்கு எதிராக இராதவர், நம்மோடு இருக்கிறார்' என்று அவருக்கு பதில்சொல்கிறார். அதாவது, நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தங்களின் செயல்பாடுகளை அமைத்துக்கொள்கிறவர்களுக்கு கடவுள் நிச்சயம் உதவுவார் என்பதுதான் இயேசு இங்கே கற்றுத்தருகிற பாடம். குறிப்பிட்ட நபர்தான் நன்மை செய்ய வேண்டும் என்றில்லை. யார் வேண்டுமானாலும் நல்லது செய்யலாம். அவர்களைப்பாராட்டி, ஊக்கப்படுத்துவது, அனைவரும் செய்ய வேண்டியது என்கிற செய்தியும் இங்கே தரப்படுகிறது. நன்மை செய்வது சுய இலாபத்துக்காக அல்ல, மற்றவர்கள் பயன்பெற செய்வது. மற்றவர்களுக்காக செய்வது.

இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உரியவர் அல்ல. தெளிந்த உணர்வோடு, உண்மையான, நேர்மையான உள்ளத்தோடு வாழ்வைத்தேடுகிற, வாழ்கிற எல்லோர்க்கும் உரியவர். அவர் எனக்கு மட்டும்தான் என்கிற குறுகிய உணர்வு நமக்கு இருக்கக்கூடாது. இயேசுவின் அன்பை இந்த உலகில் உள்ள அனைவரும் உணர நம்மால் இயன்றதைச்செய்வோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!