Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   26  பிப்ரவரி 2019  
பொதுக்காலம் 7ம் வாரம் செவ்வாய்க்கிழமை - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
சோதனைகளை எதிர்கொள்ள தயார் செய்துகொள்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் (2: 1-11)

குழந்தாய், ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால், சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள். உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு; உறுதியாக இரு; துன்ப வேளையில் பதற்றமுடன் செயலாற்றாதே. ஆண்டவரைச் சிக்கெனப் பிடித்துக்கொள்; அவரை விட்டு விலகிச் செல்லாதே.

உன் வாழ்க்கையின் முடிவில் வளமை அடைவாய். என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்; இழிவு வரும்போது பொறுமையாய் இரு. நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது; ஏற்புடைய மனிதர் மானக்கேடு எனும் உலையில் சோதித்துப் பார்க்கப்படுகின்றனர்.

ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்; அவர் உனக்குத் துணை செய்வார். உன் வழிகளைச் சீர்படுத்து; அவரிடம் நம்பிக்கை கொள். ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரிடம் இரக்கத்துக்காகக் காத்திருங்கள்; நெறி பிறழாதீர்கள்; பிறழ்ந்தால் வீழ்ச்சி அடைவீர்கள்.

ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்; உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காமற் போகாது.

ஆண்டவருக்கு அஞ்சுவோரே, நல்லவைமீது நம்பிக்கை கொள்ளுங்கள்; நிலையான மகிழ்ச்சியையும் இரக்கத்தையும் எதிர்நோக்கி இருங்கள். முந்திய தலைமுறைகளை எண்ணிப் பாருங்கள். ஆண்டவரிடம் பற்றுறுதி கொண்டிருந்தோருள் ஏமாற்றம் அடைந்தவர் யார்? அவருக்கு அஞ்சி நடந்தோருள் கைவிடப்பட்டவர் யார்? அவரை மன்றாடினோருள் புறக்கணிக்கப்பட்டவர் யார்?

ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்; பாவங்களை மன்னிப்பவர்; துன்ப வேளையில் காப்பாற்றுகிறவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:37: 3-4. 18-19. 27-28. 39-40 (பல்லவி: 5b)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.

3 ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத்தக்கவராய் வாழ்.
4 ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.
-பல்லவி

18 சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்; அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும்.
19 கேடு காலத்தில் அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை; பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவடைவார்கள்.
-பல்லவி

27 தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.
28 ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர்.
-பல்லவி

39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில்அவர்களுக்கு வலிமையும் அவரே.
40 ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார்.
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
கலா 6: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன். அதன் வழியாகவே, உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் அனைவரிலும் கடையராக இருக்கட்டும்.

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (9: 30-37)

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் மலையை விட்டுப் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள்.

அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், "மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.

அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள்.

அவர்கள் வீட்டில் இருந்தபொழுது இயேசு, "வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார்.

அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள்.

அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார்.

பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, "இத்தகைய சிறு பிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்" என்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

கடையராக இருப்பது, பணி செய்திட வழி கோலும்.

உயர்வு மனிதனை தனிமைப்படுத்தும்.

உயர்வு மனிதனை அகந்தை கொள்ள செய்யும்.

உயர்வு மனிதனை பணிவிடை பெறச் செய்யும், பணிவிடை புரிய தூண்டாது.

இதிலே கவனம் செலுத்தி எவ்வளவு உயர்ந்தாலும் தன் நிலை மறக்காது, தன்னுடைய பழைய வாழ்வினை மறக்காது இருப்;பவர்கள் தன் வாழ்வை காத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் வீழ்ந்து போவார்கள். இதுவே உண்மை.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  *ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால்...(சீராக் 2: 1-11)

நிகழ்வு

அது ஒரு மடாலயம். அந்த மடாலயத்தில் சீடர்களாகப் புதிதாகச் சேர்ந்திருந்த இளைஞர்களுக்குப் பாடம் எடுக்க, பேராசிரியர் ஒருவர் வெளியே இருந்து அழைக்கப்பட்டிருந்தார். அவர் வகுப்பெடுக்க வந்தபோது, கையில் அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு தேநீர் கோப்பையோடு வந்திருந்தார். சீடர்கள் எல்லாரும் பேராசிரியர் என்ன சொல்லப் போகிறார் என்று அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது பேராசிரியர் சீடர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார், "அன்பார்ந்தவர்களே! என்னுடைய கையில் உள்ள இந்த தேநீர் கோப்பை சாதாரணமானது கிடையாது... பேசும் வல்லமை கொண்டது... அது என்ன பேசுகின்றது என்று கவனமாகக் கேளுங்கள்...பின்னர் நான் உங்களுக்கு என்ன கற்றுத் தரவேண்டுமோ, அதைக் கற்றுத் தருகிறேன்." இவ்வாறு சொல்லிவிட்டு அவர், தன் கையில் கொண்டுவந்த தேநீர் கோப்பையை, தனக்கு முன்பாக் இருந்த மேசையின்மீது வைத்தார். அப்பொழுது அந்த அதிசயத் தேநீர் கோப்பை பேசத் தொடங்கியது:

"எல்லாருக்கும் வணக்கம்! உங்கள் முன்பாக பார்வைக்கு இனிதாய் இருக்கின்ற நான், திடீரென்று இப்படி ஆகிவிடவில்லை. தொடக்கத்தில் நான் எங்கோ ஒரு மூலையில் வெறும் களிமண்ணாகத்தான் கிடந்தேன். அப்பொழுது ஒருவர் வந்து என்னை ஒரு சாக்கினில் அள்ளிக்கொண்டு போய். ஒரு சமதளமான தரையில் போட்டு, என்மேல் தண்ணீர் ஊற்றி, மிதி மிதி என மிதித்தார். அப்பொழுது நான், 'ஐயோ வலிக்கிறது... என்னை விட்டுவிடுங்கள், விட்டுவிடுங்கள்' என்று கத்தினேன், அவரோ என்னிடம், 'கொஞ்சம் பொறுத்துக்கொள்' என்று சொல்லி நன்றாக மிதித்தார். பின்னர் அவர் என்னை ஒரு மேசையில் போட்டு, ஒரு வடிவாக அறுத்தார். அப்பொழுதும் நான் வலிக்கிறது என்று கத்தினேன். அதற்கு அவர், முன்பு சொன்ன அதே வார்த்தைகளைச் சொல்லி என்னை சமாதானப்படுத்தினார்.

அதன்பின்னர் ஒரு வடிவாக அறுக்கப்பட்ட என்னை, ஒரு சக்கரத்தில் வைத்து அழுத்திப் பிடித்துகொண்டே சுற்றினார். அப்பொழுது எனக்கு தலை சுற்றியது. அதையும் பொறுத்துக்கொண்டேன். பின்னர் அவர் என்னை அடுப்பில் வைத்து வேக வைத்தார். நானோ வேதனை தாங்கமுடியாமல் கத்தினேன். ஆனாலும் அவர், 'சிறிது பொறுத்துக்கொள்' என்று சொல்லி, நீண்டநேரம் என்னை அடுப்பில் வேகவைத்தார். அதன்பிறகு அவர் என்னுடலில் வண்ணங்கள் பூசினார். எல்லாவற்றையும் முடித்துவிட்டு என்னை உலரவைத்தார். அப்பொழுது என்னை நான் பார்த்தபோது, 'இது நான்தானா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது'. அந்நேரத்தில்தான் அந்த மனிதர் என்னை ஏன் காலில் போட்டு மிதித்து, பலகையால் அறுத்து, தீயில் போட்டு சுட்டார் என்ற உண்மை புரிந்தது. நீங்களும் உங்களுடைய வாழ்வில் வரும் துன்பங்களையும் சோதனைகளையும் தாங்கிக்கொண்டீர்கள் என்றால், ஒருநாள் நீங்கள் என்னைப் போன்று எல்லாராலும் வியந்து பார்க்கப்படும் மனிதர்கள் ஆவீர்கள்."

அதிசயத் தேநீர் கோப்பை இவ்வாறு பேசி முடித்த பின்னர், பேராசிரியர் மாணவர்களிடம், "அன்பார்ந்தவர்களே! எல்லாவற்றையும் இந்த அதிசயத் தேநீர் கோப்பையே பேசிவிட்டது. அதனால் புதிதாக நான் எதையும் பேசப்போவதில்லை... ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்... இறைப்பணிக்காக வந்திருக்கின்ற நீங்கள் உங்களுடைய வாழ்வில் வரும் துன்பங்களையும் சோதனைகளையும் மனவலிமையோடு தாங்கிக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்களால் எதிர்காலத்தில் இந்த உலகமே கண்டு வியக்கும் நல்லதுறவிகளாக வரமுடியும்" என்று சொல்லி தன் உரையை முடித்தார்.

இறைப்பணிக்காக தங்களை அர்ப்பணிக்கின்ற ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்வில் வரும் சோதனைகளையும் துங்களையும் தாங்கிக்கொண்டால், பின்னாளில் அவர்கள் நல்ல துறவிகளாக வருவார்கள் என்ற உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு அழகுற எடுத்துக்கூறுகின்றது.

சோதனைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இரு

சீராக்கின் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், ஆண்டவருடைய பணிக்காக தன்னை அர்ப்பணிக்கின்ற ஒருவர் சோதனைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். ஏன் சோதனைகளைத் தாங்கிக்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என்றால், இறைப்பணி என்பது அவ்வளவு எளிதான பணி கிடையாது, அது நிறைய சவால்கள் நிறைந்த பணி. அத்தகைய பணிக்குத் தன்னை அர்ப்பணிக்கின்ற ஒருவர் சோதனைகளையும் துன்பங்களையும் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்..

இயேசு கூட தன்னுடைய சீடர்களிடம், "என்னைப் பின்பற்றி விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்றுதான் கூறுகின்றார் (மத் 16: 24). ஆகையால், இறைப்பணிக்கு வந்திருக்கின்ற நாம், சோதனைகளைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையும் துன்பங்களைச் சந்திக்கின்றபோது பதற்றமடையாத பக்குவமும் பெறுவோம்.

சிந்தனை

துன்பங்களும் சோதனைகளும் இல்லாத பணிகள் இல்லை. துன்பங்களையும் சோதனைகளையும் தாங்கிக்கொண்டால், நம்மை வெல்ல இவ்வுலகில் யாருமில்லை. ஆகையால், இறைப்பணியில் மட்டுமல்லாது, அன்றாட வாழ்க்கையில் வரும் துன்பங்களையும் சோதனைகளையும் மனவுறுதியோடு தாங்கிக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 9: 30-37

இயேசுவை ஏற்றுக்கொள்வோர் யார்?

நிகழ்வு

மேற்கு வங்காளத்தில் வித்யாசாகர் என்றோர் அறிஞர் இருந்தார். பெயருக்கு ஏற்றார் போல் அவர் கல்விக் கடலாக விளங்கினார்; அவரிடம் பேசுவதை மக்கள் பெருமையாக நினைத்தார்கள். ஒருநாள் அவருடைய தலைமையில் சொற்பொழிவாற்றும் அறியதோர் வாய்ப்பு ஓர் இளைஞனுக்குக் கிடைத்தது. பகட்டாக ஆடையணிந்துகொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு இருப்பூர்தியில் (இரயில்) வந்து இறங்கினான் அந்த இளைஞன். கையில் வைத்திருந்த பெட்டியைத் தூக்கிச் செல்வது அவனுக்கு மிகவும் இழிவாக இருந்தது. எனவே, அவன் கூலியாளைத் தேடினான். அவன் நேரத்திற்கு, கூலியாள் யாரும் அங்கு கிடைக்கவில்லை.

அவன் இவ்வாறு தவிப்பதைப் பார்த்த பெரியவர் ஒருவர், "ஏதேனும் உதவி வேண்டுமா?" என்று கேட்டார். "இங்கு கூலியாள் யாரும் இல்லை... அதனால் இந்தப் பெட்டியை அரங்கம்வரை தூக்கி வரவேண்டும்" என்றார். "அவ்வளவுதானா..." என்ற அவர், "நானும் அங்குதான் செல்கிறேன்... உன்னுடைய பெட்டியை நான் தூக்கிகொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டு அரங்கம் நோக்கி நடக்கத் தொடங்கினார்.

சிறிதுநேரத்தில் இருவரும் அரங்கத்தை அடைந்தார்கள். அப்பொழுது பெட்டியைத் தூக்கிவந்த அந்தப் பெரியவரை அங்கிருந்த எல்லாரும் மாலை மரியாதையோடு வரவேற்று மேடைக்குக் அழைத்துச் சென்றார்கள். அதன்பிறகுதான் அந்த இளைஞனுக்குத் தெரிந்தது, அவர் வித்யாசாகர் என்று. உடனே அவன், 'எல்லாரும் போற்றி வணங்கும் அறிஞர் பெருமகனாரையா இப்படி வேலை வாங்கினேன்... பெரிய தவறு செய்துவிட்டேனே' என்று, அவருடைய திருவடிகளில் விழுந்து, "ஐயா! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று மன்னிப்புக் கேட்டான்.

அவனைத் தூக்கிய அவர், "இளைஞனே! வருந்தவேண்டாம்.... பிறர் துன்பப்பட்டால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது... அதனால்தான் உன்னுடைய துன்பத்தைப் போக்க உதவிசெய்தேன்" என்றார்.

எல்லாராலும் உயர்வாக மதிக்கப்பட்ட வித்யாசாகர் சாதாரண ஒரு பணியாளரைப் போன்று பணிசெய்தது நமக்கு வியப்பாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியிலும் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு இத்தகையதோர் அறிவுரையைத்தான் தருகின்றார். எனவே, நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீடர்கள்

இயேசு தன் சீடர்களிடம், எருசலேமில் தான் படவேண்டிய பாடுகளைக் குறித்து எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றார். சீடர்களோ இதைப் பற்றி எதுவும் கவலைப்படாமல், 'தங்களுடைய பிரச்சினை தங்களுக்கு' என்பதுபோல் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்கள். இப்படியிருந்த சீடர்களுக்கு இயேசு என்ன அறிவுரை சொன்னார் என்று சிந்தித்துப் பார்ப்பது முன்னால், அவர்கள் ஏன் இப்படியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள் என்று அறிந்துகொள்வது நல்லது.

இயேசு மலைக்குச் செல்லும்போது தன்னோடு பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூவரையும் கூட்டிக்கொண்டு போகின்றார். இத்தகைய சூழ்நிலையில்தான் இயேசுயின் சீடர்கள், 'நான் பெரியவனா, நீ பெரியவனா' என்ற வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்கள். இயேசு அவ்வளவு வேதனயுடன் தன்னுடைய பாடுகளைக் குறித்து எடுத்துரைத்துக் கொண்டிருக்கும்போது, சீடர்களோ அந்த கனாகனத்தைப் புரிந்துகொள்ளாமல், இப்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டது மிகவும் வியப்பாக இருக்கின்றது.

முதல்வராக இருக்க விரும்புகிறவர் கடைசியானவராகவும் தொண்டராகவும் இருக்கவேண்டும்

தன்னுடைய சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அறிந்த இயேசு அவர்களை அழைத்து, "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்கின்றார். இப்படிச் சொல்லிவிட்டு ஒரு சிறுபிள்ளையை எடுத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்" என்கின்றார்.

இயேசு பேசிய அரமேயிக் மொழியில் குழந்தைக்கும் பணியாளருக்கும் ஒரே சொல்தான் பயன்படுத்தப்படுகின்றது. பணியாளர் குழந்தையின் மனநிலையோடு தாழ்ச்சியாக இருப்பார், இருக்கவேண்டும். குழந்தையோ ஒரு பணியாளருக்குரிய தாழ்ச்சியுடன் இருக்கவேண்டும் இதை உள்வாங்கிக்கொள்ளும் இயேசு, ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் குழந்தையைப் போன்றும் பணியாளரைப் போன்றும் தாழ்ச்சியோடு இருக்கவேண்டும், தாழ்ச்சியோடு பணிசெய்ய வேண்டும் என்று திட்டவட்டமாக எடுத்துரைக்கின்றார். இந்த உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதுதான் விருப்பமாக இருக்கின்றது.

சிந்தனை

'மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆதரவும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" (,மத் 20: 28) என்பார் இயேசு. அவரைப் போன்று நாம் தாழ்ச்சியோடு வாழவும் பணிசெய்யவும் முயற்சிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
பிறகு இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, 'இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்றார்" (மாற்கு 9:36-37)

அன்பார்ந்த நண்பர்களே!

-- கிறிஸ்தவ நம்பிக்கையைத் தம் வாழ்வில் கடைப்பிடித்து, அதைப் பிறருக்கு அறிவிக்கின்ற மனிதர்கள் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது வரலாறு கூறும் உண்மை. இயேசுவே துன்பங்களை எதிர்கொண்டார்; சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டார். ஆயினும், இயேசு தாம் துன்பங்கள் அனுபவிக்க வேண்டும் என்று கூறியது அவருடைய சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. மாற்கு நற்செய்தியில் இயேசு தாம் கொல்லப்படப் போவதை ஒருமுறையல்ல, இருமுறையல்ல, மூன்று முறை முன்னறிவித்தார் எனக் காண்கிறோம் (காண்க: மாற் 8:31-38; 9:30-32; 10:32-34). ஆனாலும் அவருடைய சீடர்கள் "துன்புறும் மெசியா"வை ஏற்க மறுத்தார்கள். அவர்களுடைய பார்வையில் இயேசு அதிகாரத்தோடு போதித்து, இஸ்ரயேல் மக்களை அடிமைநிலையிலிருந்து விடுவித்து, அவர்களைச் சுதந்திர மக்களாக்கி ஆட்சி செய்வார்; மகிமை மிகுந்த அவரது ஆட்சியில் தங்களுக்கும் அதிகாரப் பொறுப்புகள் வழங்கப்படும் என இயேசுவின் சீடர்கள் கனவு கண்டார்கள். எனவே, இயேசு துன்புறப் போகிறாரே என்பது பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் சீடர்கள் மட்டும் "தங்களுள் யார் பெரியவர்" என்னும் வாதத்தில் ஈடுபட்டார்கள்.

-- அப்போது இயேசு சீடர்களுக்கு ஒரு முக்கியமான போதனையை வழங்குகிறார். "இயேசு அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிடுகிறார்". பின் அவர்களைப் பார்த்து, அவர்கள் முதலிடங்களை நாடுவதற்குப் பதிலாக "அனைவருக்கும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும்" மாற வேண்டும் என்கிறார் (மாற் 9: 35). "கடைசியானவர்" எப்படி இருப்பார் என்பதை இயேசு ஒரு செயல் வழியாகக் காட்டுகிறார். அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, சீடர் நடுவே நிறுத்துகிறார். அப்பிள்ளையை அன்போடு அரவணைக்கிறார். "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்" எனக் கூறுகின்றார் (மாற் 9:37). சிறுபிள்ளைகள் அக்காலத்தில் தம் தந்தையரின் "உடைமை" எனக் கருதப்பட்டார்கள். சிறுபிள்ளைகளுக்கு உரிமைகள் கிடையாது; சமுதாயத்தில் மதிப்போ மரியாதையோ கிடையாது. அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவுசெய்ய பிறரைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. ஆக, சமுதாயத்தில் கடைநிலையில் இருந்த "சிறு பிள்ளை" போல யார் தம்மையே தாழ்த்தக்கொள்கிறார்களோ அவர்களே கடவுள் முன் பெரியவர்கள் ஆவர் என இயேசு போதிக்கிறார். மேலும் இயேசு தம்மையே அச்சிறு பிள்ளைக்கு ஒப்பிடுகிறார். சமுதயாத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை நாம் மதிப்போடும் மரியாதையோடும் நடத்தும்போது நாம் உண்மையிலேயே துன்புற்ற இயேசுவை ஏற்று மதிப்பளிக்கிறோம் என்பது ஓர் ஆழ்ந்த உண்மை. ஏழைகளின் மட்டில் தனிக் கவனம் செலுத்துவது கிறிஸ்தவ மரபு. அதைப் பின்பற்றி நாமும் பெருமையையும் செல்வத்தையும் தேடிச் செல்வதற்குப் பதிலாகக் கடவுளின் பார்வை கொண்டு செயல்பட வேண்டும். அப்போது சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோரின் முகத்தைப் பார்க்கும்போது அங்கே இயேசுவையே நாம் காண்போம். "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்" (மாற் 8:37) என்னும் இயேசுவின் சொற்கள் நாம் கடவுளின் பார்வையில் பெரியவர்களாக மாறுவதற்கான வழியைச் சுட்டிக்காட்டுகின்றன. மன மகிழ்வோடு பிறருக்குப் பணிசெய்வதே அந்த வழி.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!