Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   22  பிப்ரவரி 2019  
    பொதுக்காலம் 6ம் வாரம் வெள்ளிக்கிழமை - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்   திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் விழா
=================================================================================
நான் கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சி, உங்கள் உடன்மூப்பன்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4

அன்புக்குரியவர்களே, கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்குகொள்ளப் போகிறவனுமாகிய நான், உடன்மூப்பன் என்னும் முறையில் மூப்பர்களுக்குக் கூறும் அறிவுரை: உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள்.

உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரிகளாய் இருங்கள். தலைமை ஆயர் வெளிப்படும் போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:23: 1-3. 4. 5. 6 (பல்லவி: 1)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். பல்லவி

4 சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 16: 18
அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா, என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

அக்காலத்தில் இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, "மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள்.

"ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார்.

அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் விழா
=================================================================================
  இன்று திருஅவையானது பேதுருவின் தலைமைப்பீட விழாவை நினைவுகூர்ந்து கொண்டாடுகிறது.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பேதுருவிடம், உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்கிறார் (மத் 16:18,19). இவ்வாறு சொல்வதன் வழியாக இயேசு பேதுருவைத் திருச்சபையின் தலைவராக ஏற்படுத்துகிறார். அதனடிப்படையில் பேதுருவின் தலைப்பீட விழாவை நாம் கொண்டாடுகின்றோம்.

கி.பி. 354 ஆம் ஆண்டிலிருந்து இவ்விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நாம் பேதுருவின் தலைமைத்துவத்தை சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கிறோம். அதோடு குருத்துவத்தின் மேன்மைகளை உணர்ந்து பெருமைப்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம்.

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பிறகு பேதுருதான் திருச்சபையின் தலைவராக இருந்து, அதனை கட்டிக்காத்தார் என்று சொன்னால் மிகையாகது. பெந்தேகோஸ்தே நாளில் பேதுருதான் யூதர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் முன்பாக எழுந்து நின்று இயேசுவைப் பற்றி உரையாற்றுகிறார். ஒரு சாதாரண, படிக்காத, பாரமராக இருந்த பேதுரு இப்படித் துணிவுடன் மக்களுக்கு முன்பாக பேசுகிறார் என்றால் அது கடவுளின் அருளால் அன்றி, வேறொன்றும் இல்லை.

மேலும் விவிலியத்தை நாம் ஆழமாகப் படிக்கும்போது பேதுரு ஆண்டவர் இயேசுவைப் போற்று செயல்பட்டார் என்ற உண்மையை நாம் உணர்த்துகொள்ளலாம். இயேசு கால் ஊனமுற்றவரைக் குணப்படுத்தியது போன்று, பேதுருவும் கால் ஊனமுற்றவரைக் குணப்படுத்துகிறார் (திப 3:6). இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டவர்கள் நலமடைந்தது போன்று, பேதுரு வீதிகளில் நடக்கின்றபோது, அவரது நிழல்பட்டவர்கள் குணமடைந்தார்கள் (திப 5:15). இயேசு இறந்தவர்களை உயிர்பித்ததுபோன்று பேதுருவும் தப்பித்தா என்ற பெண்ணை உயிர்ப்பிக்கின்றார். இவ்வாறு பேதுரு ஆண்டவர் இயேசுவின் பதிலாளாக, அவருடைய பிரதிநிதியாகச் செயல்படுகின்றார்.

பேதுருவின் தலைமைப்பீட விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிக்கக்கேட்பது போன்று கடவுளின் மந்தையைப் பேணிப் பாதுகாக்கவேண்டும். கடவுளின் மந்தையைப் பேணிக் காப்பது நமது தலையாய கடமையும்கூட. ஆண்டவர் இயேசு உயிர்த்தபின்பு தன்னுடைய சீடர்களுக்கு மூன்றாம் முறையாக காட்சியளிக்கும்போது பேதுருவைப் பார்த்துச் சொல்வார், "என் ஆடுகளைப் பேணி வளர்" என்று. (யோவான் 21) ஆம், பேதுரு ஆண்டவர் இயேசு, தனக்குக் கொடுத்த அழைப்பின் பேரில் தொடக்கத் திருச்சபையை சிறப்பாகப் பேணி வளர்த்தார். திருச்சபை பல்வேறு துன்பங்களையும், இன்னல்களையும் சந்தித்தபோது பேதுரு உடனிருந்து அதனை பேணி வளர்த்தார்.

இன்றைய வாசகங்கள் தரும் இரண்டாவது பாடம். மந்தைக்கு, மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதே ஆகும். பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிக்கின்றோம், "உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல், மந்தைக்கு முன்மாதிரியாக இருங்கள்" என்று.

ஆகவே, நாம் ஒவ்வொருவரும், குறிப்பாக தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் பிறருக்கு முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து காட்டவேண்டும்.

நம்முடைய இந்தியத் திருநாட்டின் முன்னால் பிரதம மந்திரியாக இருந்தவர் லால் பகதூர் சாஸ்திரி. தன்னுடைய நேர்மையான வாழ்வுக்கும், முன்மாதிரியான வாழ்வுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர். ஒருநாள் அவருடைய மகன் அவரிடம் ஒரு கடிதத்தைக் கொண்டுவந்து, "அப்பா! எனக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் அதிகச் சம்பளத்துடன் வேலை கிடைத்திருக்கிறது" என்று சொன்னான்.

அதற்கு லால் பகதூர் சாஸ்திரி அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார், "கடிதத்தைப் பார்க்கும்போது இந்த வேலையானது உன்னுடைய திறமையின் அடிப்படையில் கொடுக்கப்படவில்லை, மாறாக உன்னுடைய தந்தை அதாவது நான் இந்தியப் பிரதமராக இருக்கிறேன் என்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. உண்மையைச் சொன்னால் இந்த வேலைக்கு நீ தகுதியற்றவன். ஆதலால் இந்த வேலையை நீ திருப்பிக் கொடுத்துவிடு, ஏனென்றால் இதைப் பார்க்கும் மக்கள், இவன் தன்னுடைய மகனுக்கு, தந்து அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரிய நிறுவனத்தில் வேலை வாங்கியிருக்கிறான் என்று சொல்வார்கள். அந்த அவச் சொல் எனக்குத் தேவையில்லை" என்று சொல்லி தன்னுடைய மகனைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒருபோதும் நேர்மை தவறி நடக்கக்கூடாது என்ற உண்மையை இந்த நிகழ்வானது நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. பேதுரு தன்னுடைய அழைப்புக்கு முன்பாக எப்படி இருந்தாலும், அழைப்புப் பின் முன்மாதிரியான ஒரு தலைவராக இருந்தார். தலைவர் என்பவர் சுயலமற்றவராக இருக்கவேண்டும் என்பார் பிளாட்டோ என்ற அறிஞர்.

ஆகவே, பேதுருவின் தலைமைப்பீட விழாவைக் கொண்டாடும் நாம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நமது முன்மாதிரியான வாழ்வால் பேணிக் காப்போம். அதன் வழியாக இறையருள் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் விழா
=================================================================================
தூய பேதுருவின் தலைமைப்பீடம்

நிகழ்வு

தலைமை திருத்தூதரான பேதுரு, அந்தியோக்கு நகரில் நற்செய்திப் பணியாற்றிக்கொண்டிந்தபோது அந்நகரின் ஆளுநராக இருந்த தியோப்பிலிஸ் என்பவன் பேதுருவைக் கைதுசெய்து சிறையில் அடைத்தான். சிறையில் இருந்த பேதுருவுக்கு அவன் சரியாக தண்ணீர், உணவு கூடக் கொடுக்கவில்லை. இதனால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது அவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து வேண்டினார், "இயேசுவே! என் தலைவரே! எனக்கு எதற்கு இத்தகைய கொடிய தண்டனை?" .அதற்கு ஆண்டவர் இயேசு அவருக்கு இவ்வாறு பதிலுரைத்தார். "பேதுரு! நான் உன்னை ஒருபோதும் கைவிட்டுவிடமாட்டேன் என்று உனக்குத் தெரியாதா?, சிறுது பொறுத்திருந்து பார். எல்லாமே நல்லதாகவே நடக்கும்".

இந்நேரத்தில் பேதுரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட பவுல் அந்தியோக்கியா நகர் ஆளுநரைச் சந்தித்து, "நீங்கள் சிறை பிடித்து வைத்திருக்கும் மனிதர் சாதாரண மனிதர் கிடையாது. அவர் இறை மனிதர். அவரால் இறந்துபோன உங்களது மகனை உயிர்த்தெழ வைக்க முடியும்" என்றார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ஆளுநன் தியோப்பிலிஸ், "ஒருவேளை நீ சொல்வது உண்மையானால், நான் அவரை விடுதலை செய்து அனுப்புவேன்" என்றான். பின்னர் பவுல் ஆளுநனோடு சிறைகூடத்திற்கு வந்து, பேதுருவை இறந்த ஆளுநனின் மகனை உயிர்பெற்றழச் செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு பேதுரு, "அது எப்படி என்னால் முடியும்?" என்று சொல்ல, "இறைவனை வேண்டிவிட்டு காரியத்தில் இறங்கு, எல்லாம் உன்னால் முடியும்" என்றார். பவுல்.

உடனே பேதுரு இறைவனிடம் உருக்கமாக வேண்டிவிட்டு, பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துபோன ஆளுநனின் மகனை உயிர்த்தெழச் செய்தார். இதைக் கண்டு பிரமித்துப் போன ஆளுநன், பேதுருவை விடுதலைசெய்ததோடு மட்டுமல்லாமல், அந்தியோக்கு நகரில் இருந்த மக்கள் அனைவரையும் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளச் செய்தான். மேலும் நகரின் மையத்தில் ஒரு பெரிய ஆலயம் கட்டி, அதன் நடுவே ஓர் அரியணையை நிறுவி, அதில் பேதுருவை அமரச் செய்தான். இவ்வாறு அந்தியோக்கு நகரில் இருந்த மக்கள் அனைவரும் பேதுரு பேசுவதை கேட்கக்கூடிய அளவில் அந்த அரியணையை நிறுவினான். அங்கே பேதுரு ஏழு ஆண்டுகள் நற்செய்திப் பணியாற்றினார். பின்னர் அவர் உரோமைக்குச் சென்று நற்செய்தி அறிவித்து மறைசாட்சியாக கிறிஸ்துவுக்காக தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார். ( பேதுருவின் தலைமைப்பீடம் தொடர்பாக சொல்லப்படும் ஒரு தொன்மம்)

வரலாற்றுப் பின்னணி

இன்று நாம் பேதுருவின் தலைமைப் பீட விழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் ஆண்டவர் இயேசு பேதுருவுக்குக் கொடுத்த ஆட்சியுரிமையை, அதிகாரத்தை சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கின்றோம்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு பேதுருவிடம், "உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடை செய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்கிறார் (மத் 16: 18 -19). இவ்வார்த்தைகளைக் கொண்டு, இயேசு கிறிஸ்து பேதுருவை திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தி அதனைக் கட்டிக்காக்கின்ற எல்லாப் பொறுப்புகளையும் கொடுத்துவிட்டார் என நாம் புரிந்துகொள்ளலாம்.

நற்செய்தியின் இன்னும் ஒருசில இடங்களிலும் இயேசு, பேதுருவின் தலைமைப் பொறுப்பை வலியுறுத்திக் கூறுகின்றார். "சீமோனே! சீமோனே! நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிபடுத்து" என்று வார்த்தைகளிலும் (லூக் 22:32), "என் ஆடுகளை பேணி வளர்" என்ற வார்த்தைகளிலும் இது மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. ஆகவே, பேதுருவை ஆண்டவர் இயேசு திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தி, அதனை கட்டிகாட்டும் எல்லாப் பொறுப்புகளையும் அவருக்கும் அவர் வழிவரும் திருத்தந்தையர், மற்றும் ஆயர்களுக்கும் கொடுத்திருக்கிறார் என நாம் புரிந்துகொள்ளலாம்.

பேதுரு தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை சிறப்பாக செயல்படுத்தினார் என்பதையும் நாம் விவிலியத்தின் பல பகுதிகளிலிருந்தும் வாசிக்கின்றோம். மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது பேதுருதான் எல்லார் சார்பாகவும் பேசுகின்றார் (திப 2). அதேபோன்று பேதுரு ஆண்டவர் இயேசுவிடமிருந்து வல்லமையையும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார் என்பதை அவரால் ஆகும் வல்ல செயல்கள் வழியாகக் காண முடிகின்றது. இயேசு எப்படி இறந்தவர்களை உயிர்பித்தாரோ அது போன்று பேதுருவும் இறந்த தபித்தா என்ற பெண்மணியை உயிர்பிக்கின்றார். இயேசுவின் நிழல்பட்ட நோயாளிகள் எப்படி குணமடைந்தார்களோ அதுபோன்று பேதுருவின் நிழல் பட்ட நோயாளிகள் குணமடைந்தார்கள். இவ்வாறு பேதுரு, தான் ஆண்டவர் இயேசுவிடமிருந்து அதிகாரத்தை வல்லமையைப் பெற்றுகொண்டவர் என்பதை வெளிபடுத்தினார்.

பேதுருவின் தலைமைப்பீடத்திற்குக் அல்லது அவரது அதிகாரத்திற்கு மரியாதை செலுத்தக்கூடிய மரபு தொடக்கக் காலத்திலிருந்தே இருந்திருந்திருக்கிறது என்பதை அந்தியோக்கு நகர இஞ்ஞாசியாரின் எழுத்துக்களிலிருந்து நாம் கண்டுகொள்ளலாம். அவர் பேதுருவுக்கும் அவருக்குப் பின்னால் வந்த திருத்தந்தையர்களுக்கும் தகுந்த மரியாதை செலுத்தினார். அதேபோன்று லியோன்ஸ் நகர எரேனியுசும் இதற்கு தகுந்த மரியாதை செலுத்தினார் என நாம் அறிகின்றோம்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் பேதுருவின் தலைமை என்பது குருத்துவத்திற்கும் குருமரபினருக்கும் நாம் எந்தளவுக்கு மரியாதை செலுத்துகிறோம் என்பதைக் குறித்துக் காட்டுவதாக இருக்கின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பேதுருவின் தலைமைப்பீட விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழாவிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. பொறுப்புகளை கட்டாயத்தினால் அல்ல, மன உவப்புடன் செய்வோம்.

பொறுப்புகளில், ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை கட்டாயத்தினால் அல்ல, மாறாக மன உவப்புடன், மகிழ்வுடன் செய்யவேண்டும் அதைத்தான் இந்த விழா நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

பேதுரு தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை கட்டாயத்தினால் செய்யவில்லை. அவர் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் பொறுமையோடு தாங்கிக்கொண்டு மன உவப்போடுதான் செய்தார். அதைதான் அவர் மக்களுக்கும் போதிக்கின்றார், "உங்கள் பொறுப்புகளிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரியாய் இருங்கள். தலைமை ஆயர் வெளிப்படும்போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக் கொள்வீர்கள்" ( 1 5: பேதுரு 2-4).

ஆகவே நாம் எந்தப் பணியைச் செய்தாலும் அது குருத்துவப்பணியாக இருக்கட்டும் வேறு எந்தப் பணியாக இருக்கட்டும் நமக்குக் கொடுக்கப்பட்ட பணியை மன உவப்புடன் செய்யவேண்டும். அதேநேரத்தில் நமக்குக் கீழே இருப்பவர்களை அடக்கியாள நினைக்காமல், உண்மையான அன்போடு அவர்களுக்குப் பணி செய்யவேண்டும்.

ஓர் உதாரணம். ஒரு விஞ்ஞானக்கூடத்தில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த விஞ்ஞானி தன் மேலதிகாரியிடம் வேண்டினார். "நான் என் பிள்ளைககளை இன்று கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறேன். மாலை ஐந்தரை மணிக்குச் செல்ல அனுமதி வேண்டும்". அதற்கு அந்த மேலதிகாரியும் அனுமதித்தார். வேலை மும்முரத்தில் மூழ்கிய விஞ்ஞானி கடிகாரத்தைப் பார்த்தபோது மணி இரவு எட்டரை. ஒரு நிமிடம் அவர் திடுக்கிட்டுப் போனார். பிள்ளைகள் வீட்டில் பிரளயம் கிளப்புவார்கள் என்ற பயத்துடன் அந்த விஞ்ஞானி போனார்.

வீட்டில் மனைவி மட்டுமே இருந்தார். "குழந்தைகள் எங்கே?" என்று அவர் அவளிடத்தில் கேட்டதும் மனைவி சொன்னார். "சரியாக ஐந்தரை மணிக்கு இங்கிருந்து கிளம்பி கண்காட்சிக்குப் போய்விட்டார்கள். உங்கள் மேலதிகாரிதான் வந்து அவர்களை அழைத்துப் போனார்" என்று. விஞ்ஞானி வேலையில் மூழ்கிவிட்டதைப் பார்த்த மேலதிகாரி, அவர் கவனத்தையும் கலைக்க விரும்பவில்லை, குழந்தைகள் கனவையும் கலைக்க விரும்பவில்லை. தானே சென்று குழந்தைகளை அழைத்துச் சென்றார். அந்த மேலதிகாரியின் பெயர்... ஏ.பி.ஜே அப்துல் கலாம். நம்முடைய இந்தியத் திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர்.

ஒரு தலைவர் தனக்குக் கீழே பணிபுரியும் பணியாளர்களிடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை இந்த நிழவானது அருமையாக விளக்குகின்றது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் இதை நன்கு உணர்ந்து வாழவேண்டும். அதே நேரத்தில் பணியாளர்களும் தலைமைக்கு தகுந்த மதிப்பளித்து வாழவேண்டும்.

ஆகவே, பேதுருவின் தலைமைபீட விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாம் திருச்சபையின் திருமரபிற்கு தகுந்த மரியாதை செலுத்துவோம், குருத்துவத்திற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையை நன்கு பேணுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் விழா

மறையுரைச் சிந்தனை

நாளை பேதுருவின் தலைமைப்பீட விழாவைக் கொண்டாடுகிறோம்.


உரோமை தூய பேதுரு பேராலயத்தில் நம் வலது புறத்தில் பேதுருவின் வெண்கலச்சிலை ஒன்று உண்டு. வழக்கமாக வைத்திருக்கும் சாவிகள் இல்லாமல் ஒரு நாற்காலி, ஒரு தொப்பி என ஒய்யாரமாக அமர்ந்திருப்பார். அவரின் பாதங்கள் பக்தர்களின் கரம் பட்டதால் சூம்பிப்போய் இருக்கும்.

பேதுருவின் வித்தியாசமான இந்த முகத்தையே நாளை திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

பேதுருவின் வாழ்க்கையை 'கண்ணீருக்கு முன்,' 'கண்ணீருக்கு பின்' என்று இரண்டாகப் பிரிக்கலாம். சேவல் கூவிய அந்த இளங்காலைப் பொழுதில் அவர் வடித்த கண்ணீர்த்துளிகள்தாம்.

தினமும் காலையில் சேவல் கூவும் சத்தம் கேட்கும்போதெல்லாம் இவருக்கு தான் செய்த பாவம்தானே நினைவிற்கு வந்திருக்கும்!

பழையது நல்லது என்றால் நாம் திரும்ப நினைத்து அசைபோடுகின்றோம்.

கெட்டது என்றால் அதைப்பற்றியே நினைக்க மறுக்கின்றோம்.

பேதுருவை தலைமைத்துவத்திற்கு உயர்த்தியது கடவுளின் அருள்தான் என்றாலும், அவரின் இந்த நல்ல குணமும்தான். அதாவது, தவறு செய்துவிட்டேன். கண்ணீர் வடித்துவிட்டேன். மாறிவிட்டேன். தன் குற்ற உணர்வு தன்னைக் கட்டிப்போட அவர் அனுமதிக்கவில்லை.

இந்தக் கட்டின்மையே எல்லா ஆன்மீகத்தின் ஆணிவேர்.

எந்த இடத்திலும் நாம் கட்டின்மையை அடையலாம்.

இறுதியாக,

'ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே!
எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?'

என்கிறார் பேதுரு.

தான் மறுதலித்ததையும் மறந்துவிட்டார் பேதுரு. அன்பின் வலிமை இதுவே.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!