Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   21  பிப்ரவரி 2019  
     பொதுக்காலம் 6ம் வாரம் வியாழக்கிழமை - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
என் உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 9: 1-13

அந்நாள்களில் கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியது: "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள். மண்ணுலகின் விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலின் மீன்கள் அனைத்தும் உங்களுக்கு அஞ்சி நடுங்கட்டும்! அவை உங்கள் கைகளில் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

நடமாடி உயிர்வாழும் அனைத்தும் உங்களுக்கு உணவாகட்டும். உங்களுக்குப் பசுமையான செடிகளை உணவாகத் தந்ததுபோல இவை எல்லாவற்றையும் தருகிறேன்.

இறைச்சியை அதன் உயிராகிய இரத்தத்தோடு உண்ணாதீர்கள். உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் ஈடு கேட்பேன். உயிரினம் ஒவ்வொன்றிடமும் மனிதர் ஒவ்வொருவரிடமும் நான் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவரவர் சகோதரரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன்.

ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும். ஏனெனில், கடவுள் மனிதரைத் தம் உருவில் உண்டாக்கினார். நீங்கள் பலுகிப் பெருகிப் பன்மடங்காகி மண்ணுலகை நிரப்புங்கள்."

கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: "இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழி மரபினரோடும் பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன்.

உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்: சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது."

அப்பொழுது கடவுள், "எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்கும் இடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின் மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும்" என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:102: 15-17. 18, 20, 19. 28,22,21 (பல்லவி: 19b)
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்.

15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். 19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். பல்லவி

28 உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்! 22 அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர். 21 சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 6: 63b,68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
'மெசியா'வாகிய மானிட மகன் பாடுகள் படவேண்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-33

அக்காலத்தில் இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

வழியில் அவர் தம் சீடரை நோக்கி, "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்" என்றார்கள். "ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா" என்று உரைத்தார்.

தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

"மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார்.

பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார்.

ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  தொடக்க நூல் 9: 1-13

"ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ, அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும்"

நிகழ்வு

2017 ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 22 ஆம் நாளன்று வெளிவந்த புதிய தலைமுறை இணைய நாழிதளில் (EPaper) வெளிவந்த நிகழ்வு இது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், அலிகார் மாவட்டத்திலுள்ள ஒரு வனப்பகுதியில் நிரஞ்சன் என்ற இளைஞன் ஏழு வயதுச் சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுபோட்டான். விஷயம் அறிந்த பொதுமக்கள் அவனைப் பிடித்து அடித்துத் துவைத்தார்கள். மக்கள் அடித்த அடியில் அவன் இறந்தே விட்டான். இச்சம்பவம் அந்நாட்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஓர் உயிரை எடுப்பவருக்கு இதுபோன்றே தண்டனைகள் கொடுக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும் என்றும் பேசப்பட்டது.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வு, இன்றைய முதல் வாசகத்தில் வரும் 'ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும்' என்ற இறைவார்த்தையோடு ஒத்துப் போவதாக இருக்கின்றது. எனவே, இந்த இறைவார்த்தையின் வழியாக இறைவன் நமக்கு என்ன செய்தியைச் சொல்கிறார் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவராக கடவுள் நோவாவோடு செய்துகொண்ட உடன்படிக்கை

மக்கள் செய்த பாவத்தினால் மண்ணுலகில் தீமை பெருகியதால் சினமுற்ற கடவுள், அவர்களை அழிக்க மண்ணுலகில் வெள்ளப்பெருக்கை உண்டாக்கினார். இதனால் நாற்பது இரவும் நாற்பது பகலும் பெய்த தொடர்மழையினால் மண்ணுலகில் இருந்த எல்லா உயிரினமும் எல்லா மனிதர்களும் அழிந்துபோகிறார்கள். இதற்குப்பின் வெள்ளம் வடிந்தபின்பு, பேழையிலிருந்து வெளிவந்த நோவாவோடு கடவுள் உடன்படிக்கை செய்துகொள்கின்றார். அந்த உடன்படிக்கையில் இடம்பெறும் ஒரு முக்கியமான கூறுதான் 'ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ, அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும்' என்பதாகும்.

வாழ்வு என்பது கடவுள் கொடுத்த கொடை

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த வாழ்வானது கடவுள் கொடுத்த கொடை. எனவே, இந்த வாழ்வென்னும் கொடையைப் பறிப்பதற்கு கடவுளைத் தவிர வேறு எவருக்கும் உரிமை. அவருக்குத்தான் எல்லா அதிகாரமும் இருக்கின்றது. அதனால்தான் காயினால் ஆபேல் கொல்லப்பட்டபோது, "நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது... ஆதலால் மண்ணுலகில் நீ நாடோடியாய் அலைந்து திரிவாய்" என்கின்றார் கடவுள் (தொநூ 4: 10-12). இதன்மூலம் நாம் உயிரின் மதிப்பை உணர்ந்து கொள்வதும் நமக்குக் கொடுக்கப்பட்ட இந்த வாழ்வினை அர்த்தமுள்ளதாக்குவதும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.

மனிதர்கள் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டவர்கள்

ஆண்டவராகிய கடவுள் மேற்சொன்ன வார்த்தைகளை உதிர்ப்பதற்கு இன்னொரு காரணம், கடவுள் மானிடரைப் படைத்தபோது, தம் உருவிலும் சாயலிலும் படைத்தார் (தொநூ1:26). இதன்மூலம் கடவுள் ஒவ்வொருவரிலும் குடிகொண்டிருக்கின்றார் என்பது உண்மையாகின்றது. இதனை எண்பிக்கின்ற வகையில், பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இடம்பெறும் வார்த்தைகள் இருக்கின்றன. "நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்ககளில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார்" என்கிறார் பவுலடியார் (1 கொரி 3: 16-17). ஆகவே, ஒவ்வொருவரிலும் கடவுள் குடிகொண்டிருக்கின்றார் என்பதை உணர்ந்து, அவருக்குத் தகுந்த மதிப்பளித்து, அவருக்கு எந்தவொரு தீமையும் செய்யாமல் இருப்பது நல்லது.

தண்டிப்பது கடவுளின் நோக்கம் கிடையாது, திருந்தி நடக்கவேண்டும் என்பதுதான் கடவுளின் நோக்கம்

'ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும்' என்று கடவுள் சொல்கிறார் எனில், அவரால் இரத்தம் சிந்தப்படும் என்று அர்த்தம் கிடையாது. அவருடைய இடத்தில் இருக்கும் அரசுகள் அப்படிப்பட்ட பணிகளைச் செய்யும் என்று புரிந்துகொள்ளவேண்டும். இன்றைய சூழலில் குற்றம் புரிகின்றவரை அல்லது ஒருவருடைய உயிரைப் பறிப்பவருக்கு தண்டனைக் கொடுக்கின்ற பொறுப்பு அரசாங்கத்திடத்தில் இருக்கின்றது. ஆனால், அது நேர்மையற்ற விதத்தில் நடத்துகொண்டால், 'சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுவது போல, 'அரசியலில் பிழை செய்தோருக்கு அறம்தான் கூற்றாக அமையும்'. ஆகையால் பொறுப்பில் இருப்பவர்கள் தாங்கள் கடவுள் இடத்தில் இருந்துகொண்டு அப்படிப்பட்ட பணியினைச் செய்கிறோம் என்பதை உணர்ந்து, நேர்மையான வழியில் நடப்பது நல்லது. அதே நேரத்தில் தவறுசெய்வோர் மனம்திருந்தி நடப்பது நல்லது.



சிந்தனை

கடவுள் நமக்கு இந்த வாழ்வினைப் பரிசாகக் கொடுத்தது போன்று எல்லாருக்கும் கொடுத்திருக்கிறார். ஆகவே, ஒவ்வொருவரிலும் கடவுள் இருக்கிறார் என்ற உணர்வோடு ஒருவரை ஒருவரை நேசிக்கவும் அன்புசெய்யவும் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 8: 27-33

மானிடமகன் பலவாறு துன்பப்படவும்...

நிகழ்வு

வயதான சிற்பி ஒருவர் இருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஒருநாள் அவர் தன் இரு மகன்களையும் அழைத்து, "எனக்கு வயதாகிக்கொண்டே போகிறது. கண்பார்வை வேறு மங்கிவிட்டது. நான் உங்களுக்கு சொத்துப்பத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை. என்னிடம் உள்ள கருவிகளை உங்களுக்குத் தருகிறேன். அதை வைத்து நீங்கள் உங்கள் வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ளுங்கள்" என்றார். இருவரும் அதற்குச் சரி என்று சொன்னதும், அவர் தன்னிடமிருந்த கருவிகளை அவர்களுக்கு சரி சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தார். அவர் கொடுத்த கருவிகளில் சிற்பம் வடிக்கும் பல்வேறு கருவிகள் இருந்தன.

பெரிய மகன் முகிலன் சரியான சோம்பேறி, ஊதாரியும்கூட. அவன், 'தந்தை கொடுத்த உளிகளையும் சுத்திகளையும் வைத்து நான் என்ன செய்வது? பேசாமல் கிடைத்த வேலையைப் பார்த்துகொண்டு நிம்மதியாக இருப்போம்' என்று எண்ணி, தந்தை தந்த கருவிகளை வீட்டிலேயே வைத்துவிட்டு வேலைதேடிப் புறப்பட்டான். எங்கெல்லாமோ வேலை தேடி அலைந்தான். ஆனால், அவனுக்கு அவன் 'நினைத்த மாதிரி' வேலை கிடைக்கவில்லை. அதனால் அவன் அங்கும் இங்கும் சுற்றிச் சுற்றி வந்தான்.

இளையவன் வளவனோ பெரியவனுக்கு அப்படியே நேர் எதிர். அவன் தந்தை தனக்குத் தந்த கருவிகளைக் கொண்டு மிகக் கடினமாக உழைத்து, சிறு சிறு சிற்பங்கள் வடித்து, விற்பனை செய்தான், அதன்மூலம் கிடைத்த வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றி வந்தான். அவன் செய்துவந்த இந்தத் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காவிட்டாலும், மனநிறைவோடு குடும்பத்தை வழிநடத்தி வந்தான். ஒருமுறை பக்கத்துக்கு நகரில் சிற்பபோட்டி ஒன்று நடந்தது. வளவன் தான் மிகக்கடினமாக உழைத்து அழகிய சிற்பம் ஒன்றை போட்டிக்கு அனுப்பி வைத்தான். போட்டியில் அந்த அழகு சிற்பம் முதல் பரிசுக்கு தேர்வாகி, வளவனுக்கு பொன்முடிப்பை பரிசாகப் பெற்றுத்தந்தது. அத்துடன் குறுநில மன்னரால் பாராட்டப்பட்டு அரசாங்கத்தில் சிற்பப் பணி செய்யும் வேலையும் கிடைத்தது. அதன்பிறகு வளவன் வாழ்வே வசந்தமானது.

இதற்கிடையில் வளவனின் அண்ணன் முகிலன் பல ஊர்களைச் சுற்றி அலைந்துவிட்டு, 'நினைத்த மாதிரி' வேலை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்கு திரும்பினான். வறுமையால் தவித்த அவன், உடல் மெலிந்து காணப்பட்டான்.. அப்பொழுது அங்கு வந்த அவனுடைய தந்தை, அவனின் பரிதாப நிலையைப் பார்த்துவிட்டு, "மகனே! நீ கஷ்டப்படாமல் வாழ்க்கையில் முன்னேற நினைத்தாய். ஆனால், உனக்கு நேர்ந்ததோ இப்படியோர் அவலநிலை. உன் தம்பி அப்படியில்லை. அவன் மிகக் கடினமாக உழைத்து, இன்றைக்கு வாழ்க்கையில் முன்னேறியிருக்கின்றான். இனிமேலாவது நீயும் கடினமாக உழைக்கக் கற்றுக்கொள். அப்பொழுதுதான் உன்னால் வாழ்க்கையில் முன்னேற முடியும்" என்றார். அன்று முதல் அவன், தம்பி செய்துவந்த சிற்பத் தொழிலில் மிகக் கடினமான உழைப்பினைச் செலுத்தி, வாழ்க்கையில் முன்னேறத் தொடங்கினான்.

'துன்பமில்லாமல் இன்பமில்லை' 'வலிகள் இல்லாமல் வாழ்க்கை' என்ற இந்த கூற்றுகளுக்கு ஏற்ப, எவர் ஒருவர் துன்பங்களைத் துணிவோடு தாங்கிக்கொள்கின்றாரோ, அவரே வாழ்க்கையில் உன்னதநிலையை அடைகின்றார்.

தம்மைப் பற்றி எவரிடமும் சொல்லவேண்டாம் என்று சொன்ன இயேசு

இயேசு தன் சீடர்களிடம், "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டுவிட்டு, தொடர்ந்து அவர்களிடம், "நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று கேட்க, சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா" என்று உரைக்கின்றார். உடனே இயேசு அவரிடம்/ அவர்களிடம், தம்மை குறித்து எவரிடமும் சொல்லவேண்டாம் என்று மிகக் கண்டிப்பாகக் கூறுகின்றார். இயேசு தம் சீடர்களிடம் இவ்வாறு கூறக் காரணம், அவர்கள் இயேசுதான் மெசியா என்று மக்களிடத்தில் சொன்னால், மெசியா வருவார், அதுவும் எல்லா நாடுகளின்மீதும் அதிகாரம் செலுத்தும் அரசியல் மெசியாவாக வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் ஒருவிதமான பதற்றமான சூழ்நிலை ஏற்படும், அது கடவுளின் திருவுளம் நிறைவேறத் தடையாக இருக்கும் என்று சீடர்களும் அப்படிச் சொல்கின்றார்.

இயேசு என்னும் துன்புறும் மெசியா

தம்மைக் குறித்து யாரிடமும் சொல்லவேண்டாம் என்று தன் சீடர்களும் மிகக் கண்டிப்பாகக் கூறிய இயேசு, அதன்பிறகு எருசலேமில் தான் அடையயிருக்கும் பாடுகளைக் குறித்து வெளிப்படையாக எடுத்துக்கூறுகின்றார். இது இயேசுவின் சீடர்களுக்கு உவகையை அளிக்கவில்லை என்றாலும், அவர் அவர்களிடம் மீண்டும் மீண்டுமாகச் சொல்லிப் புரிய வைக்க முயற்கின்றார். இதற்கு மிக முக்கியமான காரணம், இயேசு இந்த உலகிற்கு வந்தது மக்களை அடக்கி ஆளவோ, அதிகாரம் செலுத்தவோ அல்ல, தன்னுடைய உடலைப் பலியாகத் தந்து அனைவரையும் மீட்கத்தான். இந்த உண்மையை நாம் உணர்கையில், நம்முடைய வாழ்க்கையில் வரும் துன்ப, துயரங்களை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வோம்.

சிந்தனை

'இன்பம் என்பது சுட்ட நிலக்கரி போன்றது. அது ஒரு செய்பொருளின் விளைவேயாகும்' என்பது முதுமொழி. நம்முடைய வாழ்க்கையிலும் இன்பம் என்பது உடனடியாகக் கிடைத்துவிடாது. துன்பத்தைத் தாங்குகின்றபோதுதான் அது கிடைக்கும். ஆகவே, வாழ்க்கையில் வரும் துன்பங்களைத் துணிவோடு தாங்கிக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!