Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   20  பிப்ரவரி 2019  
             பொதுக்காலம் 6ம் வாரம் புதன்கிழமை - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
இதோ! நிலமெல்லாம் உலர்ந்திருப்பதை நோவா கண்டார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 8: 6-13, 20-22

நாற்பது நாள்கள் முடிந்தபின் பேழையில் தாம் அமைத்திருந்த சாளரத்தை நோவா திறந்து, காகம் ஒன்றை வெளியே அனுப்பினார். அது மண்ணுலகில் வெள்ளம் வற்றும்வரை போவதும் வருவதுமாக இருந்தது.

பின்னர், நிலப்பரப்பிலிருந்து வெள்ளம் வடிந்துவிட்டதா என்று பார்க்கப் புறா ஒன்றைத் தம்மிடமிருந்து வெளியே அனுப்பினார். ஆனால் அதற்குக் கால்வைத்துத் தங்குவதற்கு இடம் தென்படாததால், அது அவரிடமே பேழைக்குத் திரும்பி வந்தது. ஏனெனில் நிலப்பரப்பு முழுவதிலும் இன்னும் வெள்ளம் நின்றது.

ஆகவே அவர் தம் கையை நீட்டி அதைப் பிடித்துத் தம்மிடம் பேழைக்குள் சேர்த்துக்கொண்டார். அவர் இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்து மீண்டும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே அனுப்பினார். மாலையில் அது அவரிடம் திரும்பி வந்தபொழுது, அதன் அலகில் அது கொத்திக்கொண்டு வந்த ஒலிவ இலை இருந்தது. அப்பொழுது நோவா மண்ணுலகில் வெள்ளம் வற்றிவிட்டது என்று தெரிந்துகொண்டார்.

இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்தபின், புறாவை வெளியே அனுப்பினார். அது அவரிடம் மறுபடி திரும்பி வரவில்லை. அவருக்கு அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தில் முதல் நாளில் மண்ணுலகப் பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது.

அப்பொழுது நோவா பேழையின் மேற்கூரையைத் திறந்து பார்த்தார். இதோ! நிலமெல்லாம் உலர்ந்திருந்தது. அப்பொழுது நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதன்மேல் எல்லா வகைத் தக்க விலங்குகள், தக்க பறவைகளிலிருந்து எடுக்கப் பட்டவற்றை எரிபலியாகச் செலுத்தினார்.

ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக்கொண்டது: "மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன். மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும், குளிரும் வெப்பமும், கோடைக் காலமும் குளிர்க் காலமும், பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:116: 12-13. 14-15. 18-19 (பல்லவி: 17a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.

12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி

14 இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். 15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. பல்லவி

18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்; 19 உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். அல்லேலூயா! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எபே 1: 17-19 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவன் நம்மை அழைத்ததால் எத்தகைய எதிர்நோக்கு ஏற்பட்டுள்ளது என்று நாம் அறிந்துகொள்ளும்படி, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தை நம் அகக் கண்களுக்கு ஒளி தருவாராக! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பார்வை பெற்றவர் அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 22-26

அக்காலத்தில் இயேசுவும் சீடர்களும் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர். அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார்.

அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, "ஏதாவது தெரிகிறதா?"என்று கேட்டார்.

அவர் நிமிர்ந்து பார்த்து, "மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்"என்று சொன்னார்.

இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப்பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.

இயேசு அவரிடம், "ஊரில் நுழைய வேண்டாம்"என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

மனித சக்தியிலே மனிதர் பார்ப்பது தெளிவற்ற நிலையே.

தெளிவாக பார்க்க தெய்வத்தினால் நாம் தொடப்பட வேண்டும்.

சக்கேயு தெளிவற்று பார்த்து வந்தார், ஆண்டவரால் தொடப்பட்டப் பின்னர் தெளிவாக பார்த்தார், தன்னை உயர்த்திக் கொண்டார், இறையாசீர் பெற்றார்.

மத்தேயு சுங்கத் துறையில் இருந்தவரை தெளிவற்று இருந்தார், ஆண்டவரால் தொடப்பட்டு அழைக்கப்பட்டப் பின்னர், தெளிவானார்.

நாமும் தெய்வத்தால் தொடப்பட வேண்டும். நம்மையே ஒப்புக் கொடுப்போம். இறையாசீர் பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  இதோ! நிலமெல்லாம் உலர்ந்திருப்பதை நோவா கண்டார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 8: 6-13, 20-22

இனி எந்த உயிரையும் அழிக்கமாட்டேன்
நிகழ்வு

ஒரு குக்கிராமத்தில் குயவர் ஒருவர் இருந்தார். அவர் அழகழகாய் மண் பாண்டங்கள் செய்து, வழியோரமாக இருந்த தன்னுடைய வீட்டு முன்பாக அடுக்கி வைத்திருந்தார்.

ஒருநாள் அந்த வழியே சென்ற ஒரு வழிபோக்கர் குயவரின் வீட்டுக்கு முன்பாக இருந்த ஒரு வேப்பமரத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டை பார்த்துவிட்டு, "இந்த ஆட்டை ஏன் இப்படிக் கட்டி வைத்திருக்கின்றீர்கள்?" என்று குயவரிடம் கேட்டார். "நான் கடவுளை மகிழ்விக்க இதைப் பலிதரப் போகிறேன்... அதனால்தான் இந்த ஆட்டை இப்படிக் கட்டி வைத்திருக்கிறேன்" என்றார் குயவர். வந்தவர், "'அப்படியா" என்று கேட்டுவிட்டு அங்கிருந்த, அழகிய மண் பாண்டங்களை ஒவ்வொன்றாகப் போட்டு உடைக்க ஆரம்பித்தார். பதறிப் போய் ஓடிவந்த குயவர், "உமக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.... நான் கஷ்டப்பட்டுச் செய்து வைத்திருக்கின்ற இந்த அழகழகான மண் பாண்டங்களை இப்படிக் கீழே போட்டு உடைக்கிறாயே" என்று கத்தினார். அதற்கு வழிபோக்கர், 'உனக்கு சந்தோஷமாக இருக்குமே என நினைத்தேன்" என்றார்.

"என்னது... நான் செய்த மண் பாண்டங்களை என் கண்முன்னால் போட்டு உடைத்தால் எனக்கு சந்தோஷம் வருமா?" என்றார் குயவர் கோபமாக. "நீங்கள் மட்டும் இறைவனின் படைப்பை அவர் கண்முன்னால் கொன்றால் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்குமென நினைக்கிறீர்களா!" என்றார் வழிபோக்கர். குயவருக்கு அப்பொழுதுதான் உண்மை புரிந்தது. உடனே அவர் அங்கு கட்டப்பட்டிருந்த ஆட்டை கழற்றி சுதந்திரமாக அலையவிட்டார்.

இறைவன் யாருடைய சாவிலும் மகிழ்வதில்லை என்றோர் அருமையான உண்மையினை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

வெள்ளைப் பெருக்கிற்குப் பிறகு கடவுள் நோவாவோடு செய்துகொண்ட உடன்படிக்கை

மனிதர்கள் செய்த தீமையினால்/தவற்றினால் மிகவும் மனவேதனை அடைந்த ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகின்மீது வெள்ளபெருக்கு வரச் செய்து, நோவாவின் குடும்பத்தைத் தவிர மற்ற எல்லாரையும் அழிக்கின்றார். ஏறக்குறைய நாற்பது பகல், நாற்பது இரவு பெய்த மழையினால், அதனால் ஏற்பட்ட வெள்ளத்தினால், மண்ணுலகில் இருந்த எல்லாரையும் எல்லாவற்றையும் - அழிக்கின்றார். இதற்குப் பின்பு தன் ஊழியர் நோவாவோடு ஓர் உடன்படிக்கை செய்துகொள்கின்றார். அது என்ன உடன்படிக்கை, அந்த உடன்படிக்கையின் முக்கியக் கூறுகள் என்னவென்ன என்று இப்போது பார்ப்போம்.

நிலத்தை இனி நான் சபிக்கமாட்டேன்

ஆண்டவராகிய கடவுள் நோவாவோடு செய்துகொண்ட உடன்படிக்கையில் இடம்பெறும் முதன்மையான கூறு, கடவுள் இனிமேல் ஒருபோதும் நிலத்தை சபிக்கமாட்டார் என்பதாகும். ஏற்கனவே ஆதாம் தவறு செய்தபோதும் அவருடைய மகன் காயின் தவறு செய்தபோதும் நிலத்தை சபித்த கடவுள், இந்த வெள்ளப்பெருக்கு நிகழ்விற்குப் பிறகு நிலத்தை சபிக்கவே மாட்டேன் என்று உறுதிகூறுகின்றார். நிலம்தான் ஒருவருக்கு அடையாளம் என்றிருக்கும் இன்றைய சூழலில், கடவுளின் இக்கூற்று சிந்திக்கத் தக்கதாக இருக்கின்றது. அதைவிட நிலச் சுரண்டல்களுக்கு எதிராக நாம் போராடும் தேவையை ஏற்படுத்துகின்றது.

இனி எந்த உயிரையும் அழிக்கமாட்டேன்

தன் ஊழியர் நோவாவோடு ஆண்டவராகிய கடவுள் செய்துகொள்ளும் உடன்படிக்கையில் இடம்பெறும் இரண்டாவது முக்கியமான கூறு, இனி எந்த உயிரையும் அவர் அழிக்க மாட்டார் என்பதாகும். இதற்கு முக்கியமான காரணம், மனிதருடைய இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது என்பதாகும். வெள்ளப்பெருக்கினால் கடவுள் மனிதர்கள் அழித்த பின்பும் அவர்கள் பாவம்செய்யாமல் இருந்தார்களா? என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்படி அவர்களுடைய இதயச் சிந்தனை இயல்பிலே தீமையை உண்டாக்கக்கூடியதாக இருந்ததால், அவர்களை அழிப்பதால் ஒன்றும் ஆகிவிடாது என்று, மனிதர்களை இனிமேல் வெள்ளப்பெருக்கினால் அழிக்கமாட்டேன் என்று கடவுள் உடன்படிக்கை செய்கின்றார்.

அப்படியானால், இன்றைக்கு ஏற்படக்கூடிய இயற்கைச் சீற்றங்கள் இவற்றுக்கெல்லாம் இறைவன் காரணமில்லையா? என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இன்றைக்கு ஏற்படக்கூடிய பெரும்பாலான பேரழிவுகளுக்கும் இயற்கைச் சீற்றங்களுக்கும் மனிதர்களின் சுயநலமும் பேராசையும்தான் காரணமாக இருக்கின்றன. இது யாரும் மறுக்கமுடியாத உண்மை.

உலகம் ஓய்வில்லாமல் இயங்கும்

நோவாவோடு ஆண்டவர் செய்துகொண்ட உடன்படிக்கையில் இடம்பெறும் மூன்றாவது முக்கியமான கூறு, மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலாமும் அறுவடைக் காலமும் குளிரும் வெப்பமும் கோடை காலமும் குளிர்காலமும் பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை என்பதாகும். இக்கூற்றிலிருந்து காலம் ஒருபோதும் அதாவது இரவு பகலாகவோ அல்லது பகல் இரவாகவோ மாறவே மாறாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சிந்தனை

'யாரும் அழிந்துபோகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென்றே கடவுள் விரும்புகிறார்' என்கிறது பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்தின் மூன்றாவது அதிகாரத்தில் வருகின்ற ஒன்பவதாவது இறைவார்த்தை. நாம் அழிந்து போகாமல் நிலைவாழ்வு பெறவேண்டும் என்று விரும்பும் கடவுளின் விரும்பத்திற்கு ஏற்ப, நாம் அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 8: 22-26

பிறரின் துயரை நம் துயர்போல் பார்க்கப் பழகுவோம்!

நிகழ்வு

ஒரு மழலையர் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படித்துவந்த மகிழன் என்ற மாணவன், ஒருநாள் வகுப்பறையில், தன் இருக்கையில் அமர்ந்திருந்தபோது தனது கால்சட்டை ஈரமாகியிருப்பதை உணர்ந்தான். உடனே அவன் கீழே குனிந்து பார்த்தான், அவனது கால்களுக்குக் கீழ் சிறுநீர்க் தேக்கம் இருந்தது கண்டு அதிர்ச்சிக்கு உள்ளானான்.

அவனால் நம்ப முடியவில்லை. 'எப்படி நான் இப்படியொரு காரியத்தைச் செய்தேன்! இதற்கு முன்பு இப்படி நடந்ததேயில்லையே. இன்னும் சிறிது நேரத்தில் பையன்கள் பார்த்துவிடுவார்கள். அதன்பிறகு மானமே போய்விடும். பெண்பிள்ளைகளுக்குத் தெரிந்தால், அவர்கள் இன்னும் அருவருப்பாகப் பார்ப்பார்கள். நான் என்ன செய்யப் போகிறேன்! இன்னும் ஓரிரு நிமிடங்களில் எல்லாருக்கும் தெரிந்துவிடும். அதன்பிறகு சிரிப்பும் கிண்டலும் அருவருப்பான பார்வையுமாகத்தான் இருக்கும். இவற்றையெல்லாம் நான் எப்படித் தாங்கப்போகிறேன' என்று அவன் குழம்பித் தவித்தான்.

அந்நேரம் பார்த்து ஆசிரியயை அவனை நோக்கி வந்தார். 'ஐயோ! அவர் கண்டுபிடித்துவிட்டார் போலிருக்கின்றதே... அவர் என்னைப் பார்த்துக்கொண்டே வருகிறார்... இப்பொழுது நான் என்ன செய்வேன்' என்று உள்ளக்குள் புலம்பித் தவித்தான் அவன். அப்பொழுது அறிவியல் கண்காட்சிக்காக கையில் மீன் தொட்டியுடன் குறுக்கே வந்த மகிழினி என்ற அவனுடைய வகுப்புத் தோழி, கால் இடறிக் கீழே விழுந்தாள். இதனால் அவளுடைய கையிலிருந்த மீன்தொட்டியானது மகிழன்மீது விழுந்து, அவன்மீதும் அவனைச் சுற்றிலும் தண்ணீர் கொட்டியது. இதற்குப் பின்பு நிலைமை தலைகீழானது. எல்லாருடைய கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகவேண்டிய மகிழன் இப்போது எல்லாருடைய பரிதாபத்திற்கு ஆளானான். ஆசிரியை மகிழனின் துணிகளை உலர்த்த உதவினார். அதே நேரத்தில் அவர் மகிழினியை, "பார்த்து வரக்கூடாதா' என்று செல்லமாகக் கடிந்துகொண்டார்.

அன்று மாலை, பேருந்தில் மகிழினியைச் சந்தித்த மகிழன், "நீ வேண்டுமென்றுதானே அவ்வாறு செய்தாய்?" என்று கேட்டான். மகிழினியோ புன்னகைத்துக்கொண்டே, "எனது உடையும் ஒருமுறை இப்படித்தான் ஈரமானது. அதனால்தான் எனக்கு நேர்ந்த அவமானம் உனக்கு நேரக்கூடாது என்பதற்காக அப்படிச் செய்தேன்" என்றாள். மகிழினியின் இவ்வார்த்தைகள் மகிழனுக்கு மயிலிறகால் வருடுவதுபோல் இருந்தது. இதன்பிறகு அவன் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு, அவளிடமிருந்து விடைபெற்றான்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் மகிழினி தன் வகுப்புத் தோழன் மகிழனின் துயரத்தை தன்னுடைய துயரமாகப் பார்த்து, அதனைப் போக்க முன்வந்தது நமது கவனத்திற்கு உரியது. நற்செய்தியில், ஆண்டவர் இயேசுவும் தன்னிடம் வந்த பார்வையற்ற மனிதரின் துயரத்தை தன்னுடைய துயரமாகப் பார்த்து அவருக்குப் பார்வையளிகின்றார். இயேசு பார்வையற்ற அந்த மனிதரிடம் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் எத்தகையது? நாம் வாழும் இந்த சமூகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நாம் என்ன செய்யலாம்? என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

பார்வையற்றவர் இயேசுவிடம் கொண்டு வரப்படல்

இயேசு பெத்சாய்தாவிற்கு வந்தபோது, ஒருசிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டு வந்து, அவரைத் தொடச் சொல்கிறார்கள். பார்வையற்றவரை இயேசுவிடம் கொண்டுவந்த அந்த ஒருசிலரின் அன்பும் அக்கறையும் பாராட்டுதற்குரியது. எத்தனையோ மனிதர்கள் அங்கு இருந்தாலும் இந்த 'ஒருசிலர்' பார்வையற்றவரை இயேசுவிடம் கொண்டுசெல்லவேண்டும், அவருக்கு இயேசுவிடமிருந்து ஆசியை/பார்வையைப் பெற்றுத்தரவேண்டும் என்ற நம்பிக்கையோடு வருகிறார்கள். அதன்மூலம் பார்வையற்ற அந்த மனிதர் பார்வை பெறுவதற்குக் காரணமாக இருக்கிறார்கள்.

நற்செய்தியில் வருகின்ற இந்த 'ஒருசிலரை'ப் போன்று நாமும் கிறிஸ்துவை அறியாத மக்களை அவரிடத்தில் அழைத்துக்கொண்டு போய், அவர்களுக்கு இயேசுவின் ஆசியைப் பெற்றத் தருவது நல்லது.

பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இயேசு

பார்வையற்ற மனிதர் தன்னிடம் கொண்டு வரப்பட்டதும், இயேசு அவரை மக்கள்கூட்டத்திற்கு முன்பாகக் குணப்படுத்தவில்லை. மாறாக, அவரை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று பார்வையளிக்கின்றார். இயேசுவின் இச்செயல் பார்வையற்ற அந்த மனிதரிடம் அவர் தனிக்கவனமும் தனிப்பட்ட அன்பும் கட்டினார் என்பதையும் அதைவிட அவர் அந்தப் பார்வையற்றவின் துயரத்தை தன்னுடைய துயரமாகப் பார்த்தார் என்று எண்ணத் தோன்றுகின்றது. ஒருவேளை இயேசு பார்வையற்ற அம்மனிதரை மக்கள்கூட்டத்திற்கு முன்பாக வைத்துக் குணப்படுத்தியிருந்தால், அவர்கள் அவரை ஏளனமாகப் பார்த்திருக்கக்கூடும் என்பதால் அப்படிச் செய்கின்றார். இதன்மூலம் இயேசு 'பிறிதின்நோய் தந்நோய் போல்' பார்க்கும் மனப்பான்மை நமக்குக் கற்றுத் தருகின்றார்.

சிந்தன

'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய் போல் போற்றாக் கடை' என்பார் வள்ளுவர். ஒருவருடைய துன்பத்தை தன்னுடைய துன்பமாகப் பார்க்காத ஒருவருக்கு எவ்வளவு அறிவு இருந்தாலும் அதனால் பயனேதும் இல்லை என்பதுதான் இதன் அர்த்தம். இயேசு எப்படி பிறரின் துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகப் பார்த்து அதைப் போக்க முன்வந்தாரோ, அதுபோன்று நாமும் முன்வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!