Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   18  பிப்ரவரி 2019  
         பொதுக்காலம் 6ம் வாரம் திங்கட்கிழமை - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
காயின் தன் சகோதரன் ஆபேலைக் கொன்றான்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் (4: 1-15,25)

அந்நாள்களில் ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள் "ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்"என்றாள்.

பின்பு அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான்.

சில நாள்கள் சென்றன. காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான். ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான்.

ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்.

ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ் சினமுற்றான். அவன் முகம் வாடியது.

ஆகவே, ஆண்டவர் காயினிடம், "நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்? நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்"என்றார்.

காயின் தன் சகோதரன் ஆபேலிடம், "நாம் வயல்வெளிக்குப் போவோம்" என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின்மேல் பாய்ந்து அவனைக் கொன்றான்.

ஆண்டவர் காயினிடம், "உன் சகோதரன் ஆபேல் எங்கே?"என்று கேட்டார். அதற்கு அவன், "எனக்குத் தெரியாது, நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?"என்றான்.

அதற்கு ஆண்டவர், "நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய். நீ மண்ணில் பயிரிடும்பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்"என்றார்.

காயின் ஆண்டவரிடம், "எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது. இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்; உமது முன்னிலையினின்று நான் மறைக்கப் பட்டுள்ளேன். மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது. என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே!" என்றான்.

ஆண்டவர் அவனிடம் "அப்படியன்று; காயினைக் கொல்கின்ற எவனும் ஏழு முறை பழி வாங்கப்படுவான்"என்று சொல்லி, காயினைக் கண்டுபிடிக்கும் எவனும் அவனைக் கொல்லாமல் இருக்க ஆண்டவர் அவன்மேல் ஓர் அடையாளம் இட்டார். ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் மகன் ஒருவனைப் பெற்று அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டாள்.

"காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில் இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார்"என்றாள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:50: 1,8. 16bc-17. 20-21 (பல்லவி: 14a)
=================================================================================
 பல்லவி: கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்.

1 தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்; கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார்.
8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.
-பல்லவி

16 என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?
17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள்.
-பல்லவி

20 உங்கள் சகோதரரைப் பற்றி இழிவாகப் பேசுகின்றீர்கள்; உங்கள் தாயின் மக்களைப் பற்றி அவதூறு பேசுகின்றீர்கள்.
21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக் கின்றேன்.
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்?

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (8: 11-13)


அக்காலத்தில் பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர்.

அவர் பெருமூச்சுவிட்டு, "இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்"என்றார்.

அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  மாற்கு 8: 11-13

அவநம்பிக்கையிலிருந்து நம்பிக்கைக்கு...

நிகழ்வு

கிராமப்புறத்தில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய வந்த இளங்குருவானவர் ஒருவர், ஒருநாள் திருப்பலிக்குத் தவறாது வந்த ஒரு மூதாட்டியை அழைத்து, "பாட்டி! நம்பிக்கை என்றால் என்ன? அதை மட்டும் சொல்லிவிட்டுப் போங்கள் என்றார். மூதாட்டியோ சற்றுத் தயக்கத்துடன், "சுவாமி! நான் அவ்வளவாகப் படித்தது கிடையாது... என்னிடத்தில் போய் இப்படியொரு கேள்வியைக் கேட்கிறீர்களே என்றார்.

"பரவாயில்லை பாட்டி! நான் கேட்ட கேள்விக்கு பதில்சொல்ல நிறையப் படித்திருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை... நீங்கள் ஒவ்வொருநாளும் ஆலயத்திற்குத் தவறாமல் வருகிறீர்கள் அல்லவா! அதனால்தான் இந்தக் கேள்வியைக் உங்களிடம் கேட்கிறேன் என்றார் குருவானவர். மூதாட்டி சிறிதுநேரம் யோசித்துப் பார்த்துவிட்டு, "என்னைப் பொறுத்தவரையில், நம்பிக்கை என்பது விவிலியத்தில் ஆண்டவர் சொன்ன வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்வது, அவ்வளவுதான் என்றார். அந்த மூதாட்டி சொன்ன பதிலைக் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்ட குருவானவர், "பாட்டி! உங்கள் பதில் மிகச்சிறப்பாக இருக்கின்றது... நம்பிக்கை என்பதற்கு இதைவிடவும் சிறப்பான பதிலை யாரும் சொல்லிவிட முடியாது... மகிழ்ச்சி! என்று அவரை இருகைகள் கூப்பி வணங்கினார்.

நம்பிக்கை என்பதற்கு மூதாட்டி சொன்ன பதிலை விடவும் சிறந்த பதில் அல்லது சிறந்த விளக்கம் வேறு யாராலும் கொடுத்துவிட முடியுமா? என்று தெரியவில்லை. நம்பிக்கை என்பது இறைவனின் வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என்று இருக்கும்போது, அதற்கு முற்றிலும் மாறாக இயேசு சொன்னதை நம்பாமல், அவநம்பிக்கையோடு அவரிடத்தில் அடையாளம் கேட்ட, பரிசேயக் கூட்டத்திற்கு இயேசு என்ன பதிலளித்தார் என்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகமாக இருக்கின்றது. நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவிடம் அடையாளம் கேட்ட பரிசேயக்கூட்டம்

நற்செய்தி வாசகத்தில், பரிசேயர் இயேசுவிடம் வந்து, வானிலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி கேட்கின்றார்கள். அவர்கள் இயேசு வழக்கமாகச் செய்துகொண்டிருந்த பேய் ஓட்டுதல், பிணிகளைப் போக்குதல் போன்ற அடையாளங்களைக் கேட்கவில்லை. மாறாக, அடையாளம் என்று அவர்கள் கேட்டதெல்லாம் விண்ணிலிருந்து நெருப்பு விழுவது மாதிரியான அடையாளம் (யோவா 6: 30-31). இதனால் இயேசு அவர்களிடம் உங்களுக்கு எந்த அடையாளமும் கொடுக்கப்பட மாட்டாது என்று மிக உறுதியாகச் சொல்கின்றார். இஸ்ரயேல் மக்கள் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அப்படிப்பட்டவர்களிடம் இறைவன் மட்டில் ஆழமான நம்பிக்கை இருந்திருக்கவேண்டும்!. ஆனால், அத்தகைய நம்பிக்கை அவர்களிடம் இல்லாததினால் இயேசு வருத்தப்படுகின்றார்.

அடையாளம் கேட்பது எதைக் குறிக்கின்றது

பரிசேயர் இயேசுவிடம் அடையாளம் காட்டும்படி கேட்டபோது, இயேசு அவர்களிடம் எந்த அடையாளமும் கொடுக்கப்பட மாட்டாது என்று சொல்கின்றாரே, உண்மையில் அடையாளம் கேட்பது விவிலியத்தில் எதைக் குறிக்கின்றது? என்று தெரிந்துகொள்வது நல்லது.

இஸ்ரயேல் மக்கள் சீன் பாலைவனத்தில் நடந்துசென்றபோது, தண்ணீர் கேட்டு மேசேயிடம் வாதாடினார்கள். அதுமட்டுமல்லாமல், எகிப்திலிருந்து தங்களை அழைத்துக்கொண்டு வந்தது, இப்படித் தண்ணீர் இல்லாமல் சாகடிக்கவா? என்றெல்லாம் பேசுவார்கள். இவ்வாறு அவர்கள் கடவுளின் உடன் உறைதலையும் (Presence) சோதிப்பார்கள். இதனால் அந்த இடம் மாஸா என்றும் மெரிபா என்றும் அழைக்கப்பட்டது (விப 17:1-7). இஸ்ரயேல் மக்கள் இப்படி மோசேயையும் இறைவனையும் தண்ணீர் கேட்டு சோதித்ததால், அடையாளம் கேட்பது என்பது அவநம்பிக்கைக்குச் சமமாகும். பரிசேயர் இயேசுவிடம் அடையாளம் கேட்டதையும் அவர்கள் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதைத்தான் நமக்கு தெளிவாக எடுத்துக்கூறுகின்றது.

மாற்கு நற்செய்தியில் யோனாவின் அடையாளம் கொடுக்கப்படாதது ஏன்?

பரிசேயர் இயேசுவிடம் அடையாளம் கேட்கும்போது, மத்தேயு நற்செய்தியில் இயேசு, யோனாவின் அடையாளத்தைக் கொடுப்பது மாதிரி இடம்பெறும். ஆனால், மாற்கு நற்செய்தியில் அப்படி எதுவும் இடம்பெறாததற்குக் காரணம், மாற்கு நற்செய்தியானது புறவினத்து மக்களுக்கு எழுதப்பட்டது. அதைக் கருத்தில் கொண்டுதான் யோனாவின் அடையாளம் மாற்கு நற்செய்தியில் இடம்பெறாமல் இருக்கின்றது. இயேசு தன்னுடைய பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றை மிகப்பெரிய அடையாளமாகக் குறித்துக் காட்டவே யோனானின் அடையாளத்தைப் பயன்படுத்தினார் என்பதை இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டும். அப்படியிருந்தும் பரிசேயர்கள் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளாமல் இருந்ததுதான் விந்தையிலும் விந்தையான ஒரு செயல்.

சிந்தனை

"இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமை அளித்தார்" என்பார் யோவான் நற்செய்தியாளர் (யோவா 1: 12). நாம் பரிசேயர்களைப் போன்று இயேசுவிடம் அவ நம்பிக்கை கொண்டிருக்காமல், நூற்றுவத் தலைவனைப் போன்று கானானியப் பெண்மணியைப் போன்று இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
தொடக்க நூல் 4: 1-15; 25

"ஆகவே, காயின் சினமுற்றான்"

நிகழ்வு

புதூர் என்ற கிராமத்தில், ராஜா என்ற கூலித் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடத்தில் ஒரு வேட்டை நாய் இருந்தது. அது, அவர் எங்கு சென்றாலும் அவர் கூடவே செல்லும்; அவர் வீட்டையும் அது பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்.

ராஜா, பக்கத்து ஊரில் இருந்த செல்வம் என்பவரிடத்தில், கடனாக ஒரு சிறுதொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுத்துவிடுவதாக வாக்குறுதி தந்து வாங்கியிருந்தார். குறிப்பிட்ட காலமும் முடிந்து, அவரால் பணத்தைக் கட்டமுடியாமல் போனதால், தன்னிடத்தில் இருந்த வேட்டை நாயை, அவர் பணம் பெற்றிருந்த செல்வத்திடம் கொடுத்து, "நான் உங்களிடம் வாங்கியிருக்கின்ற பணத்தை உங்களிடத்தில் திருப்பிச் செலுத்தும் வரை, இந்த வேட்டை நாயை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்... இது மிகவும் திறமையானது. திருடர்கள் யாரையும் வீட்டை அண்டவிடாது பார்த்துக்கொள்ளும் என்று சொல்லிக் கொடுத்தார்.

பின்னர் அவர் அந்த வேட்டை நாயைப் பார்த்து, "இனிமேல் இவர்தான் உன்னுடைய முதலாளி, எனவே, இவருக்கு விசுவாசமாக இரு என்று சொல்லிவிட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்தார். வேட்டை நாயைப் பெற்றுக்கொண்ட செல்வம் அதைத் தன்னுடைய வீட்டிற்கு முன்பாக உலவ விட்டுவிட்டு தூங்கப்போனார். அன்று இரவு திருடர்கள் அவருடைய வீட்டில் திருட வந்தார்கள். வீட்டிற்கு முன்பாக வேட்டை நாய் இருப்பது தெரியாமல், திருடர்கள் வீட்டிற்குள் குதித்ததுதான் தாமதம், அது சத்தமாகக் குரைத்து, வீட்டில் இருந்த செல்வம் மற்றும் அவருடைய வீட்டு வேலையாட்களை எழுப்பிவிட்டது. இதனால அவர்கள் அனைவரும் ஓடிவந்து, திருடர்களை பிடித்து, நையப்புடைத்து அனுப்பினார்கள்.

தன்னிடம் கடன்பட்ட ராஜா கொடுத்துப்போன வேட்டை நாயால்தான் தன்னுடைய வீட்டிலிருந்த விலையுயர்ந்த பொருட்கள் காக்கப்பட்டன என்பதை உணர்ந்த செல்வம், ராஜாவிற்கு ஒரு கடினம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர், "நீ என்னிடம் கொடுத்துவிட்டுப் போன உன்னுடைய வேட்டை நாயால்தான் என்னுடைய வீட்டிலிருக்கும் விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் திருடர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டன... அதனால் நீ பட்ட கடனைத் தள்ளுபடி செய்து, நீ என்னிடத்தில் கொடுத்த வேட்டை நாய் உன்னிடத்தில் திரும்பி அனுப்பி வைக்கிறேன் என்று எழுதி, அதனை வேட்டை நாயின் கழுத்தில் கட்டி ராஜாவிடம் அனுப்பிவைத்தார்.

மறுநாள் காலையில் வீட்டு வாசலைத் திறந்த ராஜா, தன் வீட்டு வாசல் முன்பாக செல்வத்திடம் கொடுத்த தன்னுடைய வேட்டைநாய் நிற்பது கண்டு அதிர்ச்சியடைந்து நின்றான். அவனுக்குக் கடுமையான கோபம் வந்தது, "ஏ நாயே! உன்னிடம் என்ன சொல்லி விட்டுவிட்டு வந்தேன்... பணத்தைத் திரும்பிச் செலுத்தும் வரைக்கும் அவரோடு இருக்கச் சொல்லிவிட்டுத்தானே வந்தேன்.. இப்படி ஒரேநாளில் அவரிடமிருந்து இங்கு வந்துவிட்டாயே... என்னைக் குறித்து அவர் என்ன நினைப்பார் என்று சொல்லி, ராஜா கோபத்தில் வேட்டை நாயைத் திட்டித் தீர்த்தார். அப்படியிருந்தும் அவரிடத்தில் இருந்த கோபம் தணியாததால், அருகில் கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அதன் தலையில் போட்டு கொன்றுபோட்டார்.

நாய் துடிக்கத் துடிக்க இறந்தபோதுதான், அதன் கழுத்தில் ஒரு கடிதம் இருப்பதைக் கண்டார். அந்த கடிதத்தைத் திறந்து, அதிலுள்ளவற்றை வாசித்தபோது அதிர்ச்சிக்குள்ளானார். "ஆத்திரத்தில் (கோபத்தில்) இப்படியொரு நல்ல நாயை அநியாயமாகக் கொன்றுபோட்டுவிட்டோமே" என்று மிகவும் வருத்தப்பட்டார்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் ராஜாவைப் போன்றுதான் நாமும் பலநேரங்களில் கோபத்தில் எதை எதையோ செய்து அதன் விளைவுகளை வாழ்நாள் முழுவதும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.

சினமுற்ற காயின்

இன்றைய முதல் வாசகத்தில் காயினும் அவனுடைய சகோதரனான ஆபேலும் கடவுளுக்குப் பலிசெலுத்தும்போது, கடவுள் ஆபேலின் பலியை ஏற்றுக்கொண்டு, காயினின் பலியை ஏற்றுக்கொள்ளாமல் விடுகின்றார். காயினின் பலி ஏற்றுக்கொள்ளப்படாததற்கு முக்கியக் காரணம், அவன் கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதால்தான் (எபி 11:4) தன்னுடைய காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் போனதால், காயின் தன் சகோதன்மீது சினமுறுகிறான். அந்த சினம் ஆபேலின் உயிரைப் பறிக்கக் காரணமாக அமைந்துவிடுகின்றது. இதனால் அவன் "நாடோடியாய் அலைவாய்" என்ற கடவுளின் தண்டனைக்கு உள்ளாகின்றான்.

சினம் மிகவும் கொடியது என்பதால்தான் நற்செய்தியில் இயேசு சினம் கொள்ளாதீர்கள் என்று அறிவுறுத்துகின்றார். ஆகையால், நாம் எல்லாத் தீச்செயல்களுக்கும் காரணமாக இருக்கும் சினத்தை அப்புறப்படுத்திவிட்டு, டுத்தவரோடு சகோதர உறவில் வாழ்வோம்.

சிந்தனை

சினமுற்றாலும் பாவம் செய்யாதீர்கள்; பொழுது சாய்வதற்குள் சினம் தணியட்டும்" (எபே 4:26) என்பார் பவுல். நாம், நமக்கு வரக்கூடிய சினத்தைத் தவிர்த்து அன்புறவு கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
"பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர்"(மாற்கு 8:11)

மனிதருக்கு நலம் கொணர்வதற்காக இயேசு புதுமைகள் பல செய்தார் என மாற்கு பதிவுசெய்துள்ளார். இயேசு புரிந்த புதுமைகளையும் அரும்செயல்களையும் அவருடைய சீடர்களும் பிறரும் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் உடனேயே இயேசுவிடம் நம்பிக்கை கொண்டார்கள் என்று கூற முடியாது. சிலர் அரும்செயல்களைக் கண்டபிறகும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. பரிசேயர் இவ்வாறு நம்பிக்கை கொள்ளாதிருந்தனர் என்கிறார் மாற்கு. அவர்கள் இயேசுவோடு "வாதாடத் தொடங்குகிறார்கள்". அதோடு அவரைச் "சோதிக்கிறார்கள்". பாலைநிலத்தில் இயேசுவைச் சோதித்தது சாத்தான் (மாற் 1:13). இங்கோ அவரைச் சோதிப்பவர்கள் பரிசேயர். அவர்கள் இயேசுவிடம் "வானத்திலிருந்து அடையாளம்"வேண்டும் எனக் கேட்கின்றார்கள். இது புதுமையான கேள்விதான்! இயேசு ஏற்கெனவே எத்தனையோ அடையாளங்களைக் காட்டிவிட்டார்: நோயாளருக்குக் குணம் நல்குவதும், பசித்த மக்களுக்கு உணவளிப்பதும், பார்வையற்றோர்க்குப் பார்வை வழங்குவதும் என பல வகைகளில் இயேசு அரும்செயல்களை நிகழ்த்தியிருந்தார். ஆனால் பரிசேயர் இயேசு ஆற்றிய அரும் செயல்கள் பற்றிக் கவலைப்படவில்லை. அவர்கள் எதிர்பார்த்தது "வானத்திலிருந்து ஓர் அடையாளம்".

பரிசேயரின் வேண்டுகோளை ஏற்க மறுக்கிறார் இயேசு. அதிசய செயல்களைப் பார்த்து இயேசுவை ஏற்பவர்கள் உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. இயேசுவிடத்தில் உண்மையான நம்பிக்கை கொள்கின்ற மனிதர்கள் அதிசயங்களின் அடிப்படையில் நம்பிக்கை கொள்வதில்லை. மனித கற்பனையில் கடவுள் இவ்வாறு இவ்வாறு இருக்க வேண்டும் என அவர்கள் தீர்மானிக்காமல், கடவுளின் சொல்லை ஏற்று அவரிடத்திலும் அவர் அனுப்பிய இயேசுவிடத்திலும் நம்பிக்கை கொள்வார்கள். புதுமைகளைத் தேடிச் செல்வோர் ஏமாற்றமடைவர். ஏனென்றால் புதுமைகளுக்குள் கடவுளை அடக்கிவிடலாம் என்றோ, ஒருசில உத்திகளைப் பயன்படுத்தி கடவுளைக் கைவசப்படுத்திவிடலாம் என்றோ நாம் நினைத்தால் அது உண்மையான நம்பிக்கைக்கு எதிரான போக்காகவே இருக்கும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
அடையாளம் நம்பிக்கைக்கு தரப்படுவது உண்டு.

அமைதியின் அரசர் - கன்னியின் வயிற்றில் பிறப்பார் என எசாயா நூலில் அடையாளம் கொடுக்கப்பட்டது.

மரியாளுக்கு மலடி என்ற பெயர் பெற்ற எலிசபெத்தம்மாள் அடையாளமானார்கள்.

காலம் காலமாக அடையாளம் காட்டப்பட்ட பொழுதும், தன்னை சோதித்தறிந்து பார்க்க முற்பட்ட போது சினம் கொண்டு தரப்படாது என கூறுகிறார்.

ஏற்கனவே உள்ள அடையாளங்கள் காட்டும் கடவுளை நம்பி விசுவசிப்போம்.

வயல்வெளி

'நாம் வயல்வெளிக்குப் போவோம்' (காண். தொநூ 4:1-15, 25)

ஆதாம் - ஏவாள் என்னும் நம் முதற்பெற்றோரின் முதல் பிள்ளைகள் காயின் - ஆபேல், நம் மூத்த சகோதரர்களின் வாழ்க்கை நிகழ்வு ஒன்றை நாம் நாளைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம்.

ஆபேல் ஆடு மேய்ப்பவர். காயின் விவசாயம் செய்பவர். மனுக்குலத்தின் தொடக்ககால பணிகள் இவை இரண்டும்தான். இரண்டு பேருமே ஆண்டவருக்குப் பலி செலுத்துகின்றனர். ஆபேலின் பலி ஏற்கப்படுகிறது. காயினின் பலி நிராகரிக்கப்படுகின்றது. காயினுக்கு பொறாமை வந்துவிடுகிறது. தன் சகோதரன் ஆபேலைக் கொன்றுவிட முடிவெடுக்கின்றார்.

'வயல்வெளிக்குப் போவோம்' என்கிறார் காயின்.

தன் வாழ்விடத்திற்கு தன் தம்பியை அழைக்கிறார் காயின்.
வயல்வெளியில் இருக்கும்போது அவர்மேல் பாய்ந்து கொல்கின்றார் காயின்.

'வயல்வெளி' விவிலியத்தில் ஒரு முக்கியமான இடம்.

யோசேப்பு தன் சகோதரர்களைக் கண்டது வயல்வெளியில்தான்.

மோசே எகிப்தியன் ஒருவனைக் கொன்றது வயல்வெளியில்தான்.

வயல்வெளி என்பது வெட்ட வெளி.

சின்ன வயசுல எங்க ஊருல வயல்காட்டு வழியாக சுத்தித் திரிவதுண்டு. வயல்வெளி இயல்பாகவே பயத்தைத் தரும்.

காயின் எதற்காக வயல்வெளியைத் தேர்ந்தெடுத்தார்?

தன் சகோதரனை காட்டு விலங்கு கொன்றுவிட்டது என்று காட்டவா?

அல்லது தன் இடம் என்பதால் தனக்கு பாதுகாப்பு என்றா?

எப்படி இருந்தாலும், வயல்வெளியில் இருவர் சாட்சிகளாக திகழ்கின்றனர். மேலே வானம். கீழே பூமி. வானமும், வானத்தில் உறையும் கடவுள் மேலிருந்து இந்தக் கொலையைப் பார்க்க, பூமி தன் வாயைத் திறந்து இரத்தத்தைக் குடித்துவிடுகிறது.

எது தனக்கு பாதுகாப்பு என காயின் நினைத்தாரோ அதுவே அவர் காலுக்குக் கண்ணியாகிவிடுகிறது.

எனக்கு இங்கே ஒரு கேள்வி:

தனக்கு ஏற்புடைய பலி செலுத்தி தனக்கு ஏற்புடையவராக இருந்த ஆபேலை கடவுள் ஏன் காப்பாற்றவில்லை?

'ஆபேல்' என்ற வார்த்தையிலிருந்து 'ஹாவேல்' என்ற வார்த்தையை உருவாக்கும் சபை உரையாளர் 'ஹாவேல் ஹவாலிம்' ('வீணிலும் வீண்') என்கிறார். ஆபேல் அநியாயமாகக் கொல்லப்பட்டதன் பின்புலத்தில்தான், 'விதித்துள்ளபடிதான் எல்லாம் நேரிடும். நேர்மையானவர்களுக்கும், பொல்லாதவர்களுக்கும், நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும், மாசற்றவர்களுக்கும், மாசுள்ளவர்களுக்கும், பலி செலுத்துகிறவர்களுக்கும், பலி செலுத்தாதவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும்' (rc 9:2) என்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

நம் பலி கடவுளின் மனதை மாற்றுவது இல்லை.

நிற்க.

நாம் கற்கும் பாடம் என்ன?

நம் அண்ணனே கூப்பிட்டாலும் நமக்கு உரிமை இல்லாத இடத்திற்குச் சென்றால் நாமும் அங்கே மடிய வாய்ப்புண்டு.

ஆபேல் பாய் தன் ஆடுகளோடு இருந்திருக்கலாம்!

'வயல்வெளிக்குப் போவோம்!'

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!