Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   12  பிப்ரவரி 2019  
பொதுக்காலம் 4ம் வாரம் செவ்வாய்க்கிழமை - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
நம் உருவிலும், நம் சாயலிலும் மானிடரை உண்டாக்குவோம்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 20 - 2: 4a

தொடக்கத்தில் கடவுள், "திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!" என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள்திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லா விதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்" என்றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், "கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக" என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.

அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார்.

அப்பொழுது கடவுள், "மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.

விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.

கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார். இவையே விண்ணுலக, மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறைமையாம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 8: 3-4. 5-6. 7-8 (பல்லவி: 1a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் விளங்குகின்றது!

3 உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, 4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? பல்லவி

5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். 6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். பல்லவி

7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், 8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 119: 4a, 36a

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் உம் நியமங்களைத் தந்தீர்; உம் ஒழுங்கு முறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றுகிறீர்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-13

ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள்.

பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.

ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, "உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?" என்று கேட்டனர்.

அதற்கு அவர், "வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்" என்று அவர்களிடம் கூறினார்.

மேலும் அவர், "உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்துவிட்டீர்கள். உன் தந்தையையும் தாயையும் மதித்து நட' என்றும் தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்' என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது `கொர்பான்' ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று' என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.

இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்" என்று அவர்களிடம் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

மரபுகளை நிலைநாட்ட காட்டப்படும் ஆர்வம், கடவுளின் கட்டளையை கடைபிடிக்க காட்டப்பட்டால் நலம் பயக்கும்.

மரபுகள் மனிதனின் விருப்பு, வெறுப்புக்கு உட்பட்டது. காலச் சூழலில் மாறக் கூடியது.

கட்டளைகள் மாறாதவைகள், தனி மனித சூழலுக்கு உட்பட்டது அல்ல.

கடைபிடிக்கப்படக் கூடியவைகள் மரபுகள் அல்ல, கடவுளின் கட்டளைகள்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  மாற்கு 7: 1-13

குற்றம் காணுதல் என்னும் மனநோய்

நிகழ்வு

அது ஒரு கலைக்கல்லூரி. அக்கல்லூரியில் சிறுவயதிலிருந்தே ஓவியத்தின் மேல் உயிரை வைத்திருந்த ஒரு மாணவன் படித்து வந்தான். ஒருநாள் அவன் ஓவியம் ஒன்றை வரைந்து, கல்லூரி வரவேற்பறையில் பொருத்தமான ஓரிடத்தில் மற்றவர்களின் காட்சிக்கு வைத்தான். கூடவே அந்த ஓவியத்துக்குப் பக்கத்தில் ஒரு குறிப்பையும் எழுதிவைத்தான். "இந்த ஓவியத்தில் நீங்கள் ஏதாவது குறையைக் கண்டுபிடித்தால், அந்த இடத்தில் கறுப்பு நிறத்தில் வட்டமிடவும்" என்பதுதான் அந்தக் குறிப்பு.

அன்று மதியத்திற்குமேல் காட்சிக்குவைத்திருந்த தன்னுடைய ஓவியத்தைப் பார்க்க ஆவலோடு போனான். போனவன் அப்படியே அதிர்ந்துபோனான். காரணம் அவனுடைய ஓவியம் முழுக்க கறுப்பு நிற வட்டங்கள் இருந்தன. இதைக்கண்டு அவன் சோர்ந்து போனான். பின்னர் அவன் அந்த ஓவியத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு சற்று தூரத்திலிருந்த கடற்கரைக்குப் போனான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கடலையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

அப்பொழுது யாரோ ஒருவர் அவனுடைய தோளைத் தொடுவது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தவன் பதறியவனாக எழுந்தான். காரணம், அவனுக்கு முன்னால், அவனுடைய பேராசிரியர் நின்றுகொண்டிருந்தார். "என்னப்பா... இங்கு வந்து இப்படித் தனியாக உட்கார்ந்து என்ன செய்துகொண்டிருக்கின்றாய்?" என்று கேட்டார். அந்த மாணவன் கண்கலங்கியவனாக நடந்ததைச் சொன்னான். "இதற்காகவா இவ்வளவு கவலைப்படுகிறாய்... இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை... நான் சொல்வதுபோன்று செய்வாயா?" என்றார் பேராசியர். அவனும் தயக்கத்தோடு "சரி" என்றான். பேராசிரியர் அந்த யோசனையைச் சொன்னார்.

அன்றிரவே அவன் தன் வீட்டிற்குச் சென்று ஓர் அழகான ஓவியத்தை வரைந்தான். மறுநாள் காலை அதை எடுத்துக்கொண்டு சென்று கல்லூரியின் வரவேற்பறையில் காட்சிக்கு வைத்தான். இந்த முறையும் ஒரு குறிப்பை எழுதிவைத்தான். ஆனால், அந்தப் பேராசிரியர் சொன்னபடி "இந்த ஓவியத்தில் நீங்கள் எதையாவது குற்றம் கண்டுபிடித்தால் அதைச் சரிசெய்யவும்" என்று எழுதி வைத்தான்.

அன்று மதியத்திற்குமேல் தான் வைத்திருந்த ஓவியம் இருந்த இடத்துக்குப் போனான். அவன் ஓவியத்தில் ஒரு திருத்தமும் இல்லை. அவன் எப்படி வைத்துவிட்டுப் போயிருந்தானோ, அப்படியே அது இருந்தது. அதைப் பார்த்துவிட்டு ஆச்சரியம் தாங்க முடியாமல், நேராக அந்தப் பேராசிரியர் இருந்த அறைக்குப் போனான். "ஐயா! நீங்கள் சொன்னபடியே செய்தேன்.... இந்த முறை யாரும் எந்தத் திருத்தமும் செய்யலை" என்று விஷயத்தைச் சொன்னான். அவன் சொன்னதைப் பொறுமையாகக் கேட்ட பேராசிரியர், "அது ஒன்றுமில்லை... ஒருவர் செய்யும் வேலையில் மற்றவர் எளிதாகக் குற்றம் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், அதைச் சரி செய்ய ஒருவரும் வரமாட்டார்கள். அதுதான் உன்னுடைய விஷயத்திலும் நடந்தது" என்றார்.

அடுத்தவரிடம் அல்லது அடுத்தவர் செய்யும் செயலில் குற்றம் கண்டுபிடிப்பதற்கு மக்கள் எப்படித் துடியாய் துடிக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வானது பதிவுசெய்கின்றது.

மூதாதையர் மரபை மீறியதாக இயேசுவின் சீடர்கள்மீது குற்றம் சுமத்திய பரிசேயக்கூட்டம்

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் சீடர்கள் கை கழுவாமல் உண்டதைப் பார்த்த பரிசேயர்களும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர்களும் அவர்கள்மீது மூதாதையர் மரபை மீறிவிட்டதாகக் குற்றம் சுமத்துகிறார்கள். கை கழுவாமல் உண்டதை மிகப் பெரிய குற்றம்போல் பார்த்த இந்த பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்கள், எதற்காக இப்படிக் குற்றம் காணும் மனிதர்காக இருந்தார்கள் என்று என்று தெரிந்துகொள்வது நல்லது.

இரண்டு காரணங்கள்

இயேசு தன்னுடைய பணிவாழ்வில் பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்களின் அதிகாரத்தைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருந்தார். இதனால் அவர்கள் இயேசுவின்மீதும் அவருடைய சீடர்கள் மீதும் குற்றம் காணத் தொடங்கினார்கள். இதைவிட மிக முக்கியமான காரணம், பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் எப்போதும் மற்றவர்களை விடத் தங்களை 'விஷேசமானவர்களாகக்' (Special) காட்டிக்கொள்ள விரும்பினார்கள். அதற்கு அவர்களுக்கு இதுபோன்றே மூதாதையர்களின் மரபுகள் தேவைப்பட்டன. இதுபோன்ற மரபுகளினால் மக்களுக்கு நன்மை எதுவும் விளையவில்லை. ஆனால் அவற்றைக்கொண்டு மக்களை ஒடுக்கினார்கள் (மத் 23:4). அதே மரபுகளைக் கொண்டுதான் நற்செய்தியிலும் அவர்கள் இயேசுவின் சீடர்களை ஒடுக்குகிறார்கள்; தங்களைப் பெரியவர்கள் போன்று காட்டிக்கொள்கிறார்கள். இதைப் பார்த்துவிட்டுத்தான் இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.

சிந்தனை

'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்பது அவ்வையின் வாக்கு. நாம் பிறரிடத்தில் குற்றம் மட்டுமே கண்டுகொண்டிருக்கமால், இயேசுவைப் போன்று பெருந்தன்மையோடு நல்லதைப் பார்ப்போம். அதைவிடவும் நல்லதைப் பாராட்டுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
தொடக்க நூல் 1: 20-2:4

கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார்.

அவை மிகவும் நன்றாய் இருந்தன

நிகழ்வு

ஒரு கிராமத்தில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்த பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.

ஒருநாள் குயவனிடம், வைரம் தீட்டுபவன், "எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?" என்று கேட்டான். குயவன், "அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை... நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு, கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது... உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!" என்று கொட்டாவி விட்டான். அதற்கு வைர வியாபாரி சொன்னான், "உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி... நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனைமுறை நான் என் கையை அறுத்து, ரத்தக் காயப்படுத்திக் கொள்கிறேன். உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே... வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்" என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப்போன தன் கைகளைக் காட்டினான்.

'அப்படியானால் எல்லாருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது?' என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை. கடைசியில் ஊரில் எல்லாரும் மதித்து நடக்கும், சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவரிடம் சென்று, "ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது... எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக்கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டார்கள். பெரியவர் புன்னகைத்துக் கொண்டே, "உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?" என்று கேட்டார். அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள்.

உடனே அவர் "உலகில் மண்பாண்டங்களும் தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?" என்று என்று அவர்களிடம் கேட்டார். "எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!" என்று பயத்துடன் பதில் சொன்னார்கள். "அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?" பெரியவர் கேட்டார். "களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும் இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான்" என்று இருவரும் சொன்னார்கள். "உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை. குறைகளை நிறைவுசெய்யவேண்டிய வாய்ப்பாகப் பார்ப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். குறைகளை சிரமங்களாகப் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான்" என்று முடித்தார்.

மனிதர்கள் தாங்கள் செய்கின்ற பணிகளை அர்ப்பண உணர்வோடு செய்து, அதில் மனநிறைவு காணவேண்டும். அப்படியில்லாது, தங்கள் செய்கின்ற பணிகளை அலுப்போடும் ஒருவிதமான சலிப்போடும் செய்தால் அங்கு மகிழ்ச்சிக்கோ மனநிறைவுக்கோ வழியே இல்லை. அத்தகையதொரு செய்தியை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

படைக்கப்பட்டவை நன்றாக இருப்பதாய் உணர்ந்த கடவுள்

ஆண்டவராகிய கடவுள் ஐந்து நாட்களில் வானம், நிலம், கடல், சூரியன், நிலா என எல்லாவற்றையும் படைத்துவிட்டு, ஆறாம் நாளில் காட்டுவிலங்குகளையும் பறவைகளையும் படைத்துவிட்டு, இறுதியாக படைப்பிற்கெல்லாம் மணிமகுடமாகிய மனிதரை தன் உருவிலும் சாயலிலும் படைக்கின்றார். அதற்குப்பின் தான் படைத்த அனைத்தையும் உற்றுநோக்கி, அவை நன்றாக இருப்பதாக உணர்கின்றார். கடவுள் தான் உண்டாக்கிய/படைத்த ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துப் படைத்திருக்கவேண்டும். அதனால்தான் அவர் தான் படைத்த அனைத்தும் நன்றாக இருப்பதாய் உணர்கின்றார். நாமும் நாம் செய்பவற்றை பார்த்துப் பார்த்து, லயித்து லயித்துச் செய்தோமெனில் கடவுளுக்கு ஏற்பட அந்த உணர்வு நமக்கும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

சிந்தனை

இந்த உலகத்தில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் ஏதோவொரு விசயத்தில் படைப்பாளிதான். ஆகவே, நாம் படைப்பவற்றை அல்லது செய்பவற்றை கடமைக்காகச் செய்யாமல், லயித்துச் செய்வோம். அதன்வழியாக மனநிறைவும் இறையருளும் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!