Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   05  பிப்ரவரி 2019  
பொதுக்காலம் 4ம் வாரம் செவ்வாய்க்கிழமை - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4

சகோதரர் சகோதரிகளே, திரண்டு வரும் மேகம்போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார்.

இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள்.

அப்போது நீங்கள் மனம் சோர்ந்து, தளர்ந்து போகமாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:22: 25b-26. 27, 29. 30-31 (பல்லவி: 26b)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக!

25b உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். 26 எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! பல்லவி

27 பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர். 29 மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும், தம் உயிரைக் காத்துக் கொள்ளாதோரும் அவரை வணங்குவர். பல்லவி

30 வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும். 31 அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு "இதை அவரே செய்தார்' என்பர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 8: 17

அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சிறுமியே! உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43

இயேசு படகிலேறி, கடலைக் கடந்து மீண்டும் மறுகரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார்.

தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, "என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்" என்று அவரை வருந்தி வேண்டினார்.

இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்.

அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார்.

ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.

உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்று கேட்டார்.

அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், "இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், "என்னைத் தொட்டவர் யார்? என்கிறீரே!" என்றார்கள்.

ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார்.

இயேசு அவரிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" என்றார்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?" என்றார்கள்.

அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று கூறினார்.

அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார்.

அவர் உள்ளே சென்று, "ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார்.

சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், "தலித்தா கூம்" என்றார். அதற்கு, "சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு' என்பது பொருள்.

உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். "இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது" என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  வாழ்வை வளமாக்கும் நம்பிக்கை

அரையாண்டு விடுமுறை முடிந்து அன்றுதான் பள்ளி வேலைநாள் ஆரம்பமானது. காலைப் பிரார்த்தனை முடிந்ததும், புதிதாய் வந்த ஆசிரியர் ஒருவரை அறிமுகப்படுத்தினர் தலைமை ஆசிரியர். அவர்தான் தமிழாசிரியர் அன்பரசன். எதையுமே புதிய கோணத்தில் பார்பவர், அன்பானவர். தலைமையாசிரியவர் அவரை எட்டாம் வகுப்புக்கு வகுப்பாசிரியராக நியமித்தார்.

முதல் பாடவேளை. புது ஆசிரியரைக் கண்டவுடன் மாணவர்கள் சற்று கலவரத்துடன் காணப்பட்டனர். "மாணவர்களே! இன்று முதல் நாள் என்பதால் உங்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார். முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த முதல் மாணவனைத் தொடர்ந்து அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் மாணவர்களின் படிப்புநிலை பற்றி கேட்டார். வகுப்புத் தலைவன் தமிழ் எழுந்து, "சார், அபி பர்ஸ்ட்ரேங்க், சரண்யா செகண்ட் ரேங்க், செல்வம் தேர்டு ரேங்க்" என்று தொடர்ந்து பத்து ரேங்க் வரை சொல்லி முடித்தான். பத்து பேரும் எழுந்து நின்றனர். அவர்களைக் கவனித்துவிட்டு அமரச் செய்த ஆசிரியர், "ஒழுங்காக படிக்காதவர்கள் எத்தனை பேர்?" என்றதும், அனைவரும் கடைசி பெஞ்சை சுட்டிக்காட்டினர். "அறிவு மட்டும் சுத்தமாக படிக்கமாட்டான் சார். எப்பவும் நல்லா ஊர் சுத்துவான்" என்று சத்தமாகக் கூறினான் ஒரு மாணவன்.

அறிவை எழுந்து நிற்கச் சொன்னார் ஆசிரியர். கடைசி பெஞ்சில் இருந்து எழுந்து நின்றான் அறிவு. பார்ப்பதற்கு சற்று உயரமாகத் தெரிந்தான். "மாணவர்களே! இனி இந்த வகுப்புக்கு இவன் தான் லீடர். இவன் சொல்படிதான் அனைவரும் கேட்க வேண்டும்" என்று ஆசிரியர் கூறிய அடுத்த நொடி, வகுப்பே சிரிப்பிலையில் மூழ்கியது. அவனைத் தவிர அனைவரும் சிரித்ததால் தலை கவிழ்ந்து நின்றான் அறிவு. "அமைதி, அமைதி. ஏன் சிரிக்கிறீர்கள்?, இந்த வகுப்பை வழிநடத்தும் அத்தனைத் திறமையும் அவனிடம் இருக்கிறது. அவனால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று ஆசிரியர் கூறவும், மணி அடிக்கவும் சரியாக இருந்தது. அன்றைய பாடவேளை முடிந்தது.

புதிதாக வந்த ஆசிரியர் அவ்வாறு கூறியவுடன் அன்று முழுவதும் மிகுந்த குழப்பத்துடன் காணப்பட்டான் அறிவு. வழக்கமாகச் சேரும் மாணவர்களுடன் சேராமல் தனியே இருந்தான். மறுநாள் காலை பள்ளி வழக்கம் போல் ஆரம்பித்தது. ஆனால், அறிவு மட்டும் வழக்கத்திற்கு மாறாக காணப்பட்டான். ஆம், தினமும் தாமதமாக வந்து உடற்கல்வி ஆசிரியரிடம் திட்டு வாங்குவான், இன்று 8.30 மணிக்கே வந்துவிட்டான். இந்தச் செய்தி, ஆசிரியர் அன்பரசனின் காதுக்கு எட்டியது. தன்னுடைய முயற்சியில் முதல் படியைக் கடந்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தார். அன்று முதல் ஒழுக்கமான மாணவனாக திகழ்ந்தான் அறிவு.

நாட்கள் கடந்தன. மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வந்தது. அறிவு மிகவும் கஷ்டப்பட்டு படித்தான். இதுவரையிலும் படிப்பு பற்றி கவலையே படாதவன், முதல் முறையாக படிக்க எண்ணினான். ஆனால், எல்லாமே அவனுக்கு புதிதாகத் தெரிந்தது. ஒன்றுமே புரியவில்லை. எனவே, ஆசிரியர்களிடம் தனியாகச் சென்று சந்தேகம் கேட்டான். அவனின் இந்த செய்கை மற்ற ஆசிரியர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. அவர்களும் அவனுக்கு ஒத்துழைத்து, புரியாத பாடங்களை புரிய வைத்தனர்.

மூன்றாம் இடைப்பருவத் தேர்வு முடிவு வந்தது. இதுவரையில் ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெறாத அறிவு, முதல் முறையாக எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆங்கிலம், கணக்கில் மட்டும் மதிப்பெண்கள் கொஞ்சம் கம்மியாக வாங்கியிருந்தான். இவனின் வெற்றிக்கு காரணமான வகுப்பாசிரியர் அன்பரசனை அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர். தொடர்ந்து அவன் முன்னேறுவான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. நம்பிக்கையினால் எத்தகைய மாற்றம் நடக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

நற்செய்தி வாசகத்திலும் நம்பிக்கையினால் நலம்பெற்ற தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் மகளைக் குறித்தும், பனிரெண்டு ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணியைக் குறித்தும் படிக்கின்றோம். இவர்கள் இருவரும் குணம்பெற்றது நம்பிக்கையினால்தான் என்றால் அது மிகையாகாது. தொழுகைக்கூடத் தலைவரின் மகள் குணம்பெறக் காரணமாக இருந்தது அவருடைய (தொழுகைக்கூடத் தலைவர்) நம்பிக்கையாகும். அவர் பெரிய பதவியிலிருந்தாலும், அதிலிருந்து இறங்கி, நம்பிக்கையோடு இயேசு கிறிஸ்துவிடம் வருகிறார். அதனால் அவர், இறந்த தன்னுடைய மகள் உயிர்பெற்றெழ காரணமாக இருக்கின்றார். இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி, "நான் ஆண்டவர் இயேசுவின் ஆடையைத் தொட்டாலே போதும் குணம்பெறுவேன்" என்று நம்பித் தொடுகின்றார். அதனால் தன்னுடைய நோய் நீங்கப் பெறுகின்றார். ஆகவே, நம்பிக்கைதான் இருவருக்கும் நலம்தரும் மருந்தாக இருந்திருக்கிறது என்பதை இதன் வழியாக நாம் அறிந்துகொள்கிறோம்.

திருப்பாடல் 32:10 ல் வாசிக்கின்றோம், "ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோரை அவரது பேரன்பு சூழ்ந்திருக்கும்" என்று. ஆகவே, நாம் ஆண்டவரிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழ்வோம், அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
எபிரேயர் 12: 1-4

வாழ்க்கைப் பந்தயத்தில் மனவுறுதியோடு ஓடுவோம்

நிகழ்வு

ஒரு கிராமத்தில் இருந்த விவசாயிக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள். அந்த நான்குபேரும் வாழ்க்கையில் வருகின்ற பிரச்சினைகளைச் சந்திக்கத் திராணியில்லாதவர்களாக இருந்தார்கள். இதைப் பார்த்த அந்த விவசாயத் தந்தை, தன்னுடைய நான்கு மகன்களையும் தன்னிடம் அழைத்து, பக்கத்து ஊரில் தனக்குச் சொந்தமாக இருந்த மாந்தோப்பைப் பார்த்துவிட்டு வரச்சொன்னார், அதுவும் தனித்தனியாக

மூத்தவன் சென்று வந்து, "மரத்தில் இலைகளே இல்லை" என்றான். ஏனெனில் அவன் சென்றது இலையுதிர் காலம். இரண்டாவன் சென்று வந்து, "மரத்தில் இலைகள் எல்லாம் பச்சைப் பசேல் என இருக்கின்றன" என்றான். ஏனெனில், அவன் சென்றது குளிர்காலம். மூன்றாமவன் சென்று வந்து, "மரத்தில் உள்ள இலைகள் எல்லாம் செந்நிறத்தில் இருக்கின்றன" என்றான். ஏனெனில் அவன் சென்றதோ வசந்த காலம். நான்காமவன் சென்று வந்து, "மரத்தில் மாம்பழங்கள் காய்த்துத் தொங்குகின்றன" என்றான். ஏனெனில் அவன் சென்றது கோடைக் காலம்.

நான்கு மகன்கள் சொன்னதையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட தந்தை பெதுவாகப் பேசத் தொடங்கினார், "அன்பு பிள்ளைகளே! நான் உங்களுக்குச் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் மாந்தோப்பைப் பார்க்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் சென்றீர்கள்... இலையுதிர் காலத்தில் மரத்தில் இருக்கும் இலைகள் எல்லாம் உதிர்வதைப் பார்த்துவிட்டு, இந்த மரத்தால் ஆவது ஒன்றுமில்லை என்று மனந்தளர்ந்து போய்விட்டால், அல்லது குளிர்காலத்தில் இலைகள் பச்சையாக இருப்பதையும் வசந்த காலத்தில் இலைகள் செந்நிறத்தில் இருப்பதையும் பார்த்துவிட்டு இதனால் பயனேதும் இல்லை என்று இருந்தால், கோடைகாலத்தில் கிடைக்கக்கூடிய சுவைமிகு மாம்பழங்கள் உங்களுக்குக் கிடைக்காமலே போய்விடும்.

இதுபோன்றுதான் வாழ்க்கையும்... வாழ்க்கையில் வருகின்ற தோல்விகள், அவமானங்களைக் கண்டு துவண்டு போய்விட்டால், பின்னாளில் கிடைக்கக்கூடிய வெற்றிக் கனியை சுவைக்க முடியாமலே போய்விடும். ஆதலால், தோல்விகளால் துவண்டு போகாமல், மனவுறுதியோடு தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். வெற்றிக் கனி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்".

வாழ்க்கையில் நாம் பிரச்சினைகளையும் தோல்விகளையும் சந்திக்கின்றபோது, அதனால் துவண்டுபோய்விடாமல், மனவுறுதியோடு தொடர்ந்து முன்னேறினால் வெற்றி நிச்சயம் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

வாழ்க்கைக்கு மனவுறுதி அவசியம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், மனவுறுதியின் முக்கியத்துவத்தைக் குறித்துப் பேசுகின்றார். கிறிஸ்தவ - மனித - வாழ்க்கை என்பது ஒரு தொடர் ஓட்டம். இதில் நாம் இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். பிரச்சினைகள் வருகிறதே, தோல்விகள் வருகின்றதே என்று நாம் வருந்திக் கொண்டிருந்தோமெனில், நம்மால் குறிக்கப்பட்ட இலக்கினை ஒருபோதும் அடைய முடியாது. ஆகவேதான், நமது வாழ்விற்கு மனவுறுதி என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது.

இயேசுவின்மீது கண்களைப் பதியவைக்கவேண்டும்

நமது வாழ்விற்கு மனவுறுதி என்பது எவ்வளவு முக்கியமானது என எடுத்துச் சொல்லும் ஆசிரியர், இயேசுவின்மீது நமது கண்களைப் பதிய வைத்து வாழச் செல்கின்றார். ஏனெனில், அவர், தான் அடைய இருந்த மாட்சியின் பொருட்டு அவமானங்களையும் பாடுகளையும் ஏன் சிலுவைச் சாவையும்கூட தாங்கிக்கொண்டார். இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பார்க்கின்றபோது, அவர் சந்தித்த சவால்கள், பிரச்சினைகள், அவமானங்கள் எத்தனை எத்தனை என்பது நமக்குப் புரிந்துவிடும். தன் சொந்த மக்களாலே அவர் புறக்கணிக்கப்பட்டார்; காயப்பட்டார்; அடித்து நொறுக்கப்பட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவர் மனம் தளரவில்லை. மாறாக, மனவுறுதியோடு இருந்தார். அதுமட்டுமல்லாமல், நாம் 'மனவுறுதியோடு இருக்கவேண்டும்' என்பதற்காக நமக்கு முன்மாதிரியாக விளங்குகின்றார்.

பழைய ஏற்பாட்டில், பாலைவனத்தில் பாம்பால் கடிக்கப்பட்ட யாவரும் வெண்கலப் பாம்பைப் கண்டதும் உயிர்பிழைத்தார்கள் (எண் 21: 4-9). அதுபோன்று சிலுவையில் உயர்த்தப்பட்டிருக்கின்ற இயேசுவை நாம் உற்றுநோக்கி, அவரில் நம்முடைய பார்வையைப் பதிய வைத்து, அவர் வழியில் நடந்தோம் என்றால், நம்மாலும் அவரைப் போன்று உயர்ந்த நிலையை அடைய முடியும்.

சிந்தனை

'வாழ்க்கையே போர்க்களம். வாழ்ந்துதான் பார்க்கணும்' என்ற வரிகளுக்கு ஏற்ப போர்க்களமான இந்த வாழ்க்கையை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிடாமல், வாழ்ந்து காட்டவேண்டும். அதற்கு இயேசுவிடம் இருந்த மனவுறுதி நமக்கிருக்க வேண்டும்.

ஆகவே, நமது வாழ்வில் இறுதிவரை மனவுறுதியோடு இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
மாற்கு 5: 21-43

நம்பினோர் கைவிடப்படார்

நிகழ்வு

ஒரு கிராமத்தில் அருள்நேசர் என்றோர் ஏழை வாழ்ந்து வந்தார். அவர் 'கடவுள்மீது நம்பிக்கை வைப்போர் கைவிடப்படார்' என்ற வார்த்தைகளை ஆழமான நம்பி, அதன்படி கடவுள்மீது பக்திகொண்டு வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையில் அருள்நேசரைக் குறித்துக் கேள்விப்பட்ட அந்நாட்டு அரசர், அருள்நேசர் நம்பி வந்த கூற்றினை பொய்யாக்க விரும்பினார். ஒரு குறிப்பிட்ட நாளில், அருள்நேசரை அழைத்த அரசர், அவரிடம் தான் அணிந்திருந்த வைர மோதிரத்தைக் கொடுத்து, "இதைப் பத்திரமாக வைத்துக்கொள்ளும்... ஒருமாதம் கழித்து இதை நான் உம்மிடத்தில் கேட்பேன்... அப்போது நீர் தந்தால் போதும். ஒருவேளை நீர் மட்டும் இந்த வைர மோதிரத்தைத் திரும்பிப் தரவில்லை என்றால், உன்னைத் தலைவெட்டிக் கொன்றுபோட்டுவிடுவேன்" என்றார். அரசரின் உத்தரவு, மீறி எதுவும் பேசக்கூடாது என்று, அரசர் கொடுத்த வைர மோதிரத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அருள்நேசர் வீட்டுக்கு வந்ததும் அரசர் ஒற்றரை அழைத்து, அருள்நேசரிடமிருந்து எப்படியாது தான் கொடுத்த வைரமோதிரத்தை அவருக்குத் தெரியாமல், எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டார். ஒற்றரும் தக்க தருணம் பார்த்து அருள்நேசரின் வீட்டிற்குள் புகுந்து அரசருடைய வைரமோதிரத்தை எடுத்துக்கொண்டு வந்து அரசரிடம் கொடுத்தார். வெளியே சென்று திரும்பிய அருள்நேசர், வீட்டில் வைத்திருந்த அரசரின் வைரமோதிரம் களவுபோனதை அறிந்து அதிர்ந்துபோனார். எங்கெல்லாமோ தேடிப்பார்த்தும் கிடைக்காததால் அவர் மிகவும் கவலை கொள்ளத் தொடங்கினார். அப்பொழுது அவருடைய மனைவி, "கடவுளை நம்பிய உங்களை, அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்" என்று தேற்றினார். இதற்குப் பின்பு அவர் ஆறுதலடைந்தார்.

மறுபக்கம் அருள்நேசரிடமிருந்து ஒற்றர் வழியாக எடுத்துக்கொண்ட தன்னுடைய வைர மோதிரத்தை அரசர் தனது கையில் அணிந்துகொண்டு ஆற்றில் பயணம் செய்தார். அப்படிப் பயணம் செய்யும்போது மோதிரம் அணிந்திருந்த கையை படகிற்கு வெளியே நீட்டி, ஆற்றுத்தண்ணீரை அள்ளி அள்ளி வீசி விளையாடிக் கொண்டே வந்தார். அவர் கரையை வந்தடைந்தபோதுதான் தனது கையில் அணிந்திருந்த வைரமோதிரம் ஆற்றுக்குள் விழுந்துவிட்டதை அறிந்தார். ஆற்றுக்குள் விழுந்த மோதிரத்தை எடுப்பது மிகவும் கடினம் என்று அதை அப்படியே விட்டுவிட்டார்.

நாட்கள் சென்றன. அருள்நேசருக்கு அரசர் கொடுத்திருந்த கடைசி நாள் வந்தது. அன்றைக்கு அவர் தன்னுடைய மனைவியிடம், "அரசர் என்னிடத்தில் கொடுத்த மோதிரம் இல்லாதது கண்டு, எப்படியும் அவர் என்னைத் தலைவெட்டிக் கொன்றுபோடுவார். அதற்கு முன்பாக உன் கையால் விருந்து சாப்பிட ஆசைப்படுகிறேன்... நீ சந்தைக்குப் போய் பெரிய மீன் ஒன்று வாங்கிவந்து மீன்குழம்பு வை" என்றார். அவருடைய மனைவியும் சந்தைக்குச் சென்று, பெரிய மீன் ஒன்றை வாங்கிவந்து வெட்டினார். அப்பொழுது அந்த மீனிலிருந்து அரசர் கொடுத்த அதே வைரமோதிரம் வெளியே வந்து விழுந்தது. அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அருள்நேசர், 'கடவுளை நம்புவோர் கைவிடப்படார்' என்பது எவ்வளவு உண்மை... கடவுள் மிகப் பெரியவர்" என்று கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே, அரசர் கொடுத்த மோதிரத்தை அவரிடத்தில் கொண்டுபோய் கொடுத்தார். ஒன்றுமே புரியாமல் விழித்த அரசரிடம் அருள்நேசர் நடந்த அனைத்தையும் சொன்னபோது, அவரும் கடவுளிடத்தில் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்.

'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்பது வெறும் வார்த்தை மட்டும் கிடையாது அது மந்திரம்.

நம்முடைய பிரச்சினைகளுக்கு இயேசுவால் மட்டுமே தீர்வு கிடைக்கும்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, சாகும்தருவாயில் இருக்கும் யாயிரின் மகளைக் குணப்படுத்த விரைந்து செல்கின்றார். அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண்மணி, 'நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம்பெறுவேன்' என்று நம்பித் தொடுக்கின்றார், குணம்பெறுகிறார். பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய இப்பெண்மணி, எத்தனையோ மருத்துவர்களை போய்ப் பார்த்தும் தன்னிடத்திலிருந்த எல்லாப் பணத்தைச் செலவழித்தும் குணம் பெறமுடியாமல், கடைசியில் இயேசுவிடம் வருகின்றார். குணம்பெறுகின்றார். இயேசுவால் மட்டுமே நலமும் ஆசியும் இளைப்பாறுதலும் கிடைக்கும் என்பதை இந்நிகழ்வு நமக்கு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது.

நம்பினோர் கைவிடப்படுவதில்லை

எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்தும் குணம் பெறாத இப்பெண்மணி, ஆண்டவரிடத்தில் நம்பிக்கையோடு வந்து அவருடையைத் தொடுக்கின்றார், குணம்பெறுகின்றார். நம்பிக்கையோடு இயேசுவிடத்தில் வந்தால், நிச்சயம் குணம் கிடைக்கும் என்பதையும் இந்நிகழ்வு நமக்கு எடுத்துரைகின்றது. இயேசு அவசரமாகப் போய்க்கொண்டிருக்கிறாரே, கூட்டம் அவரைச் சுற்றியிருக்கின்றதே என்றெல்லாம் நினைத்து அவர் கவலைப் பட்டுக்கொண்டிருக்காமல், இயேசுவிடம் நம்பிக்கையோடு சென்று குணம்பெறுகின்றார். இயேசுவும் அவருடைய நம்பிக்கையை எல்லாரும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு வெளிப்படுத்தி, அவரை முழுமையாகக் குணப்படுத்துகின்றார்.

சிந்தனை

'அவரில் நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார்' (1பேது 2:6) என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப, நாம் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!