Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   04  பிப்ரவரி 2019  
  பொதுக்காலம் 4ம் வாரம் திங்கள்கிழமை -1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 நம்பிக்கையினாலேயே நீதித்தலைவர்கள் அரசுகளை வென்றார்கள்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 32-40

சகோதரர் சகோதரிகளே, கிதியோன், பாராக்கு, சிம்சோன், இப்தாகு, தாவீது, சாமுவேல் ஆகியோர் பற்றியும், இறைவாக்கினர் பற்றியும் எடுத்துரைக்க எனக்கு நேரமில்லை.

நம்பிக்கையினாலேயே இவர்கள் அரசுகளை வென்றார்கள்; நேர்மையாகச் செயல்பட்டார்கள்; கடவுள் வாக்களித்தவற்றைப் பெற்றார்கள்; சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்; தீயின் கொடுமையைத் தணித்தார்கள்; வாள்முனைக்குத் தப்பினார்கள்; வலுவற்றவராய் இருந்தும் வலிமை பெற்றார்கள்; போரில் வீரம் காட்டினார்கள்; மாற்றார் படைகளை முறியடித்தார்கள். பெண்கள் இறந்த தம் உறவினரை உயிர்த்தெழுந்தவராய்ப் பெற்றுக்கொண்டார்கள்.

உயிர்த்தெழுந்து சிறப்புறும் பொருட்டு, சிலர் விடுதலை பெற மறுத்து, வதையுண்டு மடிந்தனர். வேறு சிலர் ஏளனங்களுக்கும் கசையடிகளுக்கும் ஆளாயினர்; விலங்கிடப்பட்டுச் சிறையில்கூட அடைக்கப்பட்டனர். சிலர் கல்லெறிபட்டனர்; இரண்டாக அறுக்கப்பட்டனர்; வாளுக்கு இரையாகி மடிந்தனர்; செம்மறியின் தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு அலைந்து திரிந்தனர்; வறுமையுற்று வாடினர்; துன்புறுத்தப்பட்டனர்; கொடுமைக்கு உள்ளாயினர். அவர்களை ஏற்க இவ்வுலகுக்குத் தகுதியில்லாமல் போயிற்று.

மலைகளிலும் குகைகளிலும் நிலவெடிப்புகளிலும் பாலைவெளிகளிலும் அவர்கள் அலைந்து திரிந்தார்கள். இவர்கள் அனைவரும் தம் நம்பிக்கையினாலே நற்சான்று பெற்றார்கள். ஆயினும் கடவுள் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை. ஏனெனில், நம்மோடு இணைந்துதான் அவர்கள் நிறைவுபெற முடியும் என்பதைக் கடவுள் கருத்தில் கொண்டு, நமக்காகச் சிறந்த திட்டம் ஒன்றை வகுத்திருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 31: 19-20a. 20bc. 21. 22. 23 (பல்லவி: 24 காண்க)
=================================================================================
பல்லவி: ஆண்டவரை நம்புவோரே, உங்கள் உள்ளம் உறுதி கொள்வதாக.

19 உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! 20a மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! பல்லவி

20bc நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! பல்லவி

21 ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில், அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில் எனக்கு விளங்கச் செய்தார். பல்லவி

22 நானோ, கலக்கமுற்ற நிலையில் 'உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன்' என்று சொல்லிக்கொண்டேன்; ஆனால், நான் உம்மிடம் உதவிக்காக வேண்டினபோது, நீர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தீர். பல்லவி

23 ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்; ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்; ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-20

அக்காலத்தில் இயேசுவும் அவர் சீடரும் கடலுக்கு அக்கரையில் இருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகை விட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால் கூடக் கட்டிவைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.

அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு, ஓடிவந்து அவரைப் பணிந்து, "இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்" என்று உரத்த குரலில் கத்தினார்.

ஏனெனில் இயேசு அவரிடம், "தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ" என்று சொல்லியிருந்தார்.

அவர் அம்மனிதரிடம், "உம் பெயர் என்ன?" என்று கேட்க அவர், "என் பெயர் 'இலேகியோன்', ஏனெனில் நாங்கள் பலர்" என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாம் என்று அவரை வருந்தி வேண்டினார். அங்கே மலைப் பகுதியில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. "நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்" என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன.

ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.

பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர்.

அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.

அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடுகூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எபிரேயர் 11: 32-40

இறைவன்மீது கொள்ளும் நம்பிக்கையால் நற்சான்று பெறுவோம்

நிகழ்வு

ரஷ்யாவில் தோன்றிய மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர் பிரெஷ்னேவ் (Brezhnev). இவர், கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்யாவை ஆண்டுகொண்டிருந்த சமயத்தில் அக்கட்சியின் செயலராக இருந்து, மிகச்சிறப்பான பணிகளை மக்களுக்குச் செய்தவர். இவருடைய காலத்தில் கிறிஸ்தவர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்தித்து வந்தார்கள். மேலும் தங்களுடைய நம்பிக்கையை அறிக்கையிடவோ, அதன்படி வாழவோ உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இருந்தார்கள். ஒருவேளை, யாராவது தங்களுடைய நம்பிக்கை அறிக்கையிட்டாலோ அல்லது அதன்படி வாழ்ந்தாலோ அவர்கள் கடுமையாகச் சித்ரவதை செய்யப்பட்டார்கள்.

இவற்றுக்கு மத்தியிலும் பிரெஷ்னேவ்வின் மனைவி கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார். பிரெஷ்னேவ் அவரை எவ்வளவோ சொல்லியும் அவர் தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். ஒருநாள் பிரெஷ்னேவ் தன் மனைவியிடம், "நீ என்னுடைய மனைவி என்பதற்காகத்தான் நான் சும்மா விடுகிறேன்... இதுவே வேறொரு ஆள் கிறிஸ்துவ நம்பிக்கையின்படி வாழ்ந்துகொண்டிருந்தால், நான் அவரை உயிரோடு விட்டு வைத்திருக்கமாட்டேன்" என்றார். அதற்கு அவருடைய மனைவி, "நான் உங்களுடைய மனைவியாக இருப்பதால்தான் இப்படி கிறிஸ்துவ நம்பிக்கையின்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று நினைக்காதீர்கள்... உங்கள் மனைவியாக இல்லாவிட்டாலும்கூட நான் கிறிஸ்துவ நம்பிக்கையின்படிதான் வாழ்வேன்" என்று உறுதியாகச் சொன்னார்.

இது நடந்து சில மாதங்கள் கழித்து, பிரெஷ்னேவ் இறந்துபோனார். அவருடைய உடலானது இறுதி அஞ்சலிக்காக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாட்டில் இருந்த பெரிய பெரிய தலைவர்களெல்லாம் வந்து போனார்கள். பொதுமக்களும்கூட அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டுப் போனார்கள். கடைசியில் அவருடைய மனைவி அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அவர் பிரெஷ்னேவ்வின் பிரேதத்திற்கு முன்பாகச் சிறிதுநேரம் அமைதியாக இருந்துவிட்டு, அவருடைய நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து அஞ்சலி செலுத்தினார். இதைப் பார்த்துவிட்டு அங்கிருந்த அனைவரும் 'கிறிஸ்துவ நமபிக்கையை வெளிப்படுத்தக்கூடாது என்று சட்டம் இருந்தபோதும் இவர் இவ்வளவு துணிச்சலாக தன்னுடைய நம்பிக்கையைப் வெளிப்டுத்துகிறாரே' என்று வியப்போடு பார்த்தார்கள். அவரோ தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, தான் ஒருபோதும் கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கையிலிருந்து விலக மாட்டேன் என்று உறுதியாக இருந்தார்.

தனக்கு என்ன துன்பம் வந்தாலும் பரவாயில்லை. தான் ஒருபோதும் கிறிஸ்துவின்மீதுள்ள நம்பிக்கையிலிருந்து விலக மாட்டேன் என்று உறுதியாக இருந்த பிரெஷ்னேவ்வினுடைய மனைவியின் நம்பிக்கை நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது.

நம்பிக்கை வீரர்கள்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், இறைவன்மீது கொண்ட நம்பிக்கையால், அவருக்கு நற்சான்று பகர்ந்த மாமனிதர்களைக் குறித்துப் பேசுகிறார். கிதியோன் முதல் சிங்கத்திடமிருந்து தப்பித்த தானியேல் வரை எடுத்துச் சொல்லும் ஆசிரியர், நம்பிக்கைக்காக அவர்கள் பட்ட வேதனைகள், துன்பங்கள் என எல்லாவற்றையும் எடுத்துச் சொல்கின்றார்.

இந்த நம்பிக்கை வீரர்கள் யாவரும், எதிரிகள் தங்களைக் கொடுமைப்படுத்துகிறார்களே, தீயில் போட்டுச் சுட்டெறிகிறார்களே என்று தங்களுடைய நம்பிக்கையிலிருந்து விலகவோ அல்லது பின்வாங்கவோ இல்லை. மாறாக, இறைவன்மீது கொண்ட நம்பிக்கையில் இறுதிவரை நிலைத்து நின்றார்கள். இவ்வாறு அவர்கள் இறைவன்மீது கொண்ட ஆழமான நம்பிக்கையால் அவருக்குச் சான்று பகர்ந்தார்கள்.

இயேசுவின் சீடர்கள் யாவரும் நம்பிக்கை வீரர்களாக வாழ அழைப்பு

நம்பிக்கையினால் இறைவனுக்கு நற்சான்று பகர்ந்து பழைய ஏற்பாட்டுக் கதாநாயகர்கள் நம்மையும் நமது நம்பிக்கையினால் இறைவனுக்கு நற்சான்று பகர அழைக்கிறார்கள். நாம் நமது நம்பிக்கையினால் இறைவனுக்கு நற்சான்று பகர்கின்றவர்களாக இருக்கின்றோமா? அல்லது அவர்மீது அவநம்பிக்கையோடு வாழ்கின்றோமா? என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
மாற்கு நற்செய்தியில் இயேசு கூறுவார், "எனது பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பர். ஆனால் இறுதிவரை மனவுறுதியோடு இருப்பவரே மீட்புப் பெறுவர்" என்று (மாற் 13:13). நம்முடைய நம்பிக்கை வாழ்வில் ஏற்ற இறக்கங்களை, மேடு பள்ளங்களை, துன்ப துயரங்களைச் சந்தித்தாலும் இறுதிவரை மனவுறுதியோடும் இறைவன்மீது நம்பிக்கையோடு இருப்பதே சாலச் சிறந்த ஒரு செயலாகும்.

சிந்தனை

இயேசுவின் வழியில் நடக்கும் நமக்கு நிறைய எதிர்ப்புகளும் இடையூறுகளும் வரலாம். அவற்றைக் கண்டு நாம் மனமுடைந்து போகாமல், நம்பிக்கையோடு இருக்கவேண்டும். ஏனெனில், நம்பிக்கையினால் மட்டுமே நம்மால் இறைவனுக்கு நற்சான்று பகர முடியும். ஆகவே, பழைய ஏற்பாட்டு நம்பிக்கை நாயகர்களைப் போல் இறைவன்மீது ஆழமான நம்பிக்கை வைத்து, அந்த நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 5: 1-20

தேவையில் உள்ளவருக்கு உதவி

நிகழ்வு

அது ஒரு பரபரப்பான சாலை. அந்த சாலையை ஒருநாள் பிற்பகல் இரண்டு மணியளவில் உயர்ரக நாய்க்குட்டி ஒன்று கடந்து சென்றது. அப்பொழுது வேகமாக வந்த ஒரு நான்கு சக்கர வாகனம் அதன்மேல் மோதி, மோதியதுகூடத் தெரியாமல் வேகமாகச் சென்றது. ஆனால், வாகனத்தில் அடிபட்ட நாயோ ரத்த வெள்ளத்தில் சற்றுத் தொலைவில் சென்று விழுந்தது.

அந்த வழியாக ஏராளமானோர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தனர். அடிபட்டு, முனங்கிக்கொண்டிருந்த அந்த நாயை மட்டும் யாரும் கவனிக்கவில்லை. அந்நேரத்தில் வேகமாக ஓடிவந்த தெரு நாய் ஒன்று, அடிபட்டுக்கிடந்த உயர்ரக நாய்குட்டியின் ஒரு காலைக் கவ்வி இழுத்துக்கொண்டு போய் சாலையோரத்தில் போட்டுவிட்டதுச் சென்றது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த அங்கிருந்த மனிதர்கள் யாவரும், சாதாரண ஒரு நாய்க்கு இருக்கும் கரிசனையும் அக்கறையும் உதவி செய்யும் மனபாண்மையும் நமக்கில்லையே என்று வருத்தப்பட்டார்கள். பின்னர் அங்கிருந்த ஒரு 'நல்ல மனிதர்' அடிபட்டுக் கிடந்த அந்த உயர் ரக நாய்குட்டியை தன்னுடைய வீட்டிற்குத் தூக்கிக்கொண்டு போய், அதனுடைய காயங்களுக்குக் கடுப்போட்டு, அனுப்பி வைத்தார்.

தேவையில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதற்கு எவ்வளவோ வாய்ப்புக் கிடைத்தும் அவற்றை உதாசினப்படுத்திவிட்டு, கண்டும் காணாமல் போகின்ற நம்முடைய வெளிவேடத்தை இந்நிகழ்வானது வேதனையோடு பதிவுசெய்கின்றது. இத்தகைய பின்னணில் தேவையில் இருந்த அல்லது தீய பிடித்து வாழ்ந்து வந்த மனிதரை ஆண்டவர் இயேசு குணப்படுத்தி, அவருக்குப் புதுவாழ்வு தந்தது நமக்கு ஒரு பாடமாக இருக்கின்றது.

தீய ஆவி பிடித்து கல்லறைகளுக்கு நடுவில் வாழ்ந்துவந்த மனிதர்

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு அக்கரையிலிருந்த கேரசெனர் பகுதிக்கு வருகின்றார். இது புறவினத்தார் வாழும் பகுதி. இங்குதான் கல்லறைகளுக்கு நடுவே சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் தீய ஆவி பிடித்த ஒருவர் இருக்கின்றார். இந்த மனிதருக்கு ஏதாவது உதவிசெய்யவேண்டும், இவரை முன்னைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. மாறாக, அவர் அப்படியே இருக்கட்டும் என்று அவர் வாழ்ந்துவந்த சமூகம் வைத்திருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் இயேசு அவரிடத்தில் வந்து, "தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ" என்கின்றார்.

இங்கு இயேசுவிடத்தில் இருந்த தேவையில் இருப்பவருக்கு உதவி செய்யும் மனப்பான்மைதான் நாம் உள்வாங்கிக் கொள்ளவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

தீய ஆவி(களை)யைப் பன்றிக் கூட்டத்தின் நடுவே அனுப்பியே இயேசு

சங்கிலிகளாலும் விலங்குகளாலும் கட்டப்பட்டிருந்த அந்த மனிதரின் நிலை கண்டு, அவர்மீது மனமிரங்கிய இயேசு, அவனிடமிருந்து தீய ஆவியை தீய ஆவிகளை விரட்ட முன்வருகின்றார். அப்பொழுது அந்த மனிதரில் இருந்த தீய ஆவிகள் இயேசுவிடம், எங்களைப் பன்றிகளுக்குள்ளே அனுப்பிவிடுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றன. இயேசு தீய ஆவிகளை எதற்கு பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்பவேண்டும்? அப்படியே விரட்டியடித்திருக்கலாமே என்று நினைக்கலாம். இயேசு, தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதரிடமிருந்து தீய ஆவி முற்றிலுமாக வெளியேறிவிட்டது என்பதை நிரூபிக்க அதைப் பன்றிக்கூட்டத்தின் நடுவே அனுப்புகின்றார். இந்த நிகழ்விற்குப் பிறகு தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதர் ஆடையணிந்து அறிவுத் தெளிவோடு இருப்பதே இதற்குச் சான்றாக அமைகின்றது.

மனிதர்களா? உடைமைகளா?

இயேசு, தீய ஆவி பிடித்திருந்த மனிதரிடமிருந்து தீய ஆவியை இரண்டாயிரம் பன்றிகளுக்கு நடுவே அனுப்பி, வெளியேற்றிய செய்தி, பன்றிகளின் உரிமையாளர்களுக்குத் தெரியவர, அவர்கள் இயேசுவை அப்பகுதிலிருந்து போய்விடுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள். இங்கு தீய ஆவி பிடித்திருந்த மனிதர் அறிவுத் தெளிவோடு இருப்பதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சி கொள்ளவில்லை. மாறாக, தங்களுடைய இரண்டாயிரம் பன்றிகள் செங்குத்து பாறையிலிருந்து விழுந்து மாயந்துபோனதை நினைத்து மனிதர்கள் மிகவும் வருந்துகிறார்கள். இந்நிகழ்வில் வரும் பன்றிகளின் உரிமையாளரைப் போன்றுதான் மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பொருட்களுக்கும் உடைமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்கின்ற பலர் இங்கு இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் பொருட்களுக்கும் உடைமைகளுக்கும் மட்டும் முக்கியத்தும் கொடுத்து வாழாமல், சக மனிதர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்வது நல்லது.

சிந்தனை

இயேசு கிறிஸ்து, விலங்கைப் போன்று இருந்த மனிதரிடமிருந்து தீய ஆவியை விரட்டி அவருக்குப் புதுவாழ்வு கொடுத்தார். நாமும் நம்முன்னே பல்வேறு தேவைகளோடு, அடிப்படை வசதிகள் கூட இல்லாது இருக்கின்ற மக்கள்மீது இரங்கி, அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களுக்குப் புதுவாழ்வு தருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!