Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   01  பிப்ரவரி 2019  
  பொதுக்காலம் 3ம் வாரம் வெள்ளிக்கிழமை - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 பெரிய போராட்டத்தையே மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்; எனவே எதிர்நோக்கை இழந்துவிடாதீர்!

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 32-39

சகோதரர் சகோதரிகளே, முன்னைய நாள்களை நினைவுகூருங்கள். நீங்கள் ஒளி பெற்றபின் உங்களுக்கு நேரிட்ட துன்பம் நிறைந்த போராட்டத்தை மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள். சில வேளைகளில், நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, வேடிக்கைப் பொருளானீர்கள். வேறு சில வேளைகளில், இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள். கைதிகளுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள்.

உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோதும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். ஏனெனில் சிறந்த, நிலையான உடைமைகள் உங்களுக்கு உள்ளன என்பதை அறிவீர்கள். உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டு விடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மன உறுதி தேவை.

இன்னும், "மிக மிகக் குறுகிய காலமே இருக்கிறது; வர இருக்கிறவர் வந்துவிடுவார், காலம் தாழ்த்தமாட்டார். நேர்மையுடன் நடக்கும் என் அடியார், நம்பிக்கையினால் வாழ்வு அடைவார். எவராவது பின்வாங்கிச் செல்வார் என்றால் அவரில் நான் மகிழ்ச்சியுறேன்." நாமோ பின்வாங்கிச் சென்று அழிவுறுவோர் அல்ல. மாறாக, நம்பிக்கையையும் வாழ்வையும் காத்துக்கொள்வோர் ஆவோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:37: 3-4. 5-6. 23-24. 39-40 (பல்லவி: 39a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரிடமிருந்தே மீட்பு நேர்மையாளருக்கு வருகின்றது.

3 ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ். 4 ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். பல்லவி

5 உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார். 6 உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். பல்லவி

23 தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார். 24 அவர்கள் விழுந்தாலும் வீழ்ந்துகிடக்க மாட்டார்கள்; ஆண்டவர் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்துவார். பல்லவி

39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே. 40 ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34

அக்காலத்தில் இயேசு கூட்டத்தை நோக்கி, "இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது" என்று கூறினார்.

மேலும் அவர், "இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்" என்று கூறினார்.

அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மாற்கு 4: 26-34

மிகச் சிறியதிலிருந்து மிகப்பெரியவற்றிற்கு...

நிகழ்வு

அர்ஜென்டினாவில் 'பான்ஸ்வாலா' என்ற ஓர் அரியவகைப் பறவை இனம் இருக்கின்றது. இது தன் இனப்பெருக்கத்திற்காக அங்கிருந்து கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காபிஸ்ட்ரோனோ பகுதிக்கு வந்து, இனப்பெருக்கம் செய்துவிட்டுத் திரும்பும். இப்பறவை இனம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் தன்னுடைய பயணத்தைத் தொடங்கி, மார்ச் மாதம் இறுதியில் கலிபோனியாயை வந்தடையும். இனப்பெருக்கத்தை முடித்துக்கொண்டு அக்டோபர் மாதத் தொடக்கத்தில் கலிபோனியாவிலிருந்து கிளம்பும் இப்பறவை, டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அர்ஜென்டினாவை வந்தடையும்.

இப்படி தன் இனப்பெருக்கத்திற்காக பான்ஸ்வாலா பறவை இனம் ஒவ்வோர் ஆண்டும் பயணிக்கக்கூடிய தூரம் பதினாறாயிரத்து அறுநூறு கிலோமீட்டர். (போவதற்கு எட்டாயிரத்து முந்நூறு கிலோமீட்டரும் திரும்பி வருவதற்கு எட்டாயிரத்து முந்நூறு கிலோமீட்டரும் ஆகும்). உலகிலுள்ள பெரும்பாலான பறவை இனங்கள் இதுபோன்றுதான் தன் இனப்பெருக்கத்திற்காக நீண்டதூரம் பயணிக்கிறது... அப்படியிருக்கும்போது இந்த பான்ஸ்வாலா பறவையிடத்தில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்...

அர்ஜென்டினாவிற்கும் கலிபோனியாவிற்கும் இடையில் நிலப்பரப்போ அல்லது மலையோ எதுவும் கிடையாது. கடல்தான் வியாபித்திருக்கின்றது. அப்படியானால் இந்த பான்ஸ்வாலா பறவையினம் பதினாறாயித்து அறுநூறு கிலோமீட்டரையும் ஒரே மூச்சில்தான் பறந்து கடக்குமா?.... இடையில் பசியெடுத்தாலோ, தாகம் எடுத்தாலோ அல்லது களைப்புற்றாலோ அது என்னசெய்யும் என்று கேட்கலாம். அதற்கு அது செய்யும் ஒரு காரியம்தான் எல்லாரையும் ஆச்சரியப்பட வைக்கின்றது. பான்ஸ்வாலா பறவை இனம் கடலைக் கடந்துவரும்போது தன்னுடைய அலகில் ஒருசிறிய குச்சியைக் கவ்விக்கொண்டு வரும். இப்படி வருகையில் இடையில் அதற்குப் பசியெடுத்தாலோ, தாகமுற்றாலோ அல்லது களைப்புற்றாலோ அது தன் அலகில் சுமந்துகொண்டு வரும் குச்சியை கடல்மேல் போட்டு பசியாறவோ அல்லது இளைப்பாறவோ செய்யும். இப்படிப்பட்டத்தான் அந்தப் பறவையினம் கடலைக் கடக்க்கும்

பான்ஸ்வாலா பறவை இனத்திற்கு ஒரு சாதாரண குச்சி பதினாறாயிரத்து அறுநூறு கிலோமீட்டரைக் கடக்க உதவியாக இருக்கும்போது, படைப்பின் மணிமகுடமாக இருக்கும் நமக்கு கொடுக்கப்படும் எவ்வளவோ வாய்ப்பு வசதிகளைப் பயன்படுத்தி நாம் எவ்வளவோ சாதிக்கலாம் அல்லவா!

இறையாட்சி கடுகுவிதைக்கு ஒப்பாகும்

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, இறையாட்சியைக் கடுகுவிதைக்கு ஒப்பிடுகின்றார். கடுகுவிதையானது அளவில் சிறியது. ஆனால் அதுவே மிகச் சிறியவிதை கிடையாது. அதைவிடவும் மிகச் சிறிய விதைகள் உண்டு. ஆனால், யூதர்களைப் பொறுத்தளவில் கடுகுவிதைதான் உலகத்தில் இருக்கக்கூடிய விதைகளில் மிகச் சிறியது என்ற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் இயேசு கடுகுவிதையை இறையாட்சிக்கு ஒப்பிடுகின்றார். இவ்விதை மண்ணில் விதைக்கப்படும்போது மிகச் சிறியதாக இருந்தாலும் வளர்ந்து பெரியதாகும்போது வானத்துப் பறவைகள் தங்கக்கூடிய அளவுக்கு கிளைகள் பெரிதாகி விடுகின்றன.

இயேசு, இறையாட்சியைக் கடுகுவிதைக்கு ஒப்பிடக் காரணம், அது பன்னிரெண்டு பேரைக் கொண்டு தொடங்கப்பட்டாலும் படிப்படியாக வளர்ந்து, யாரும் எண்ண முடியாத அளவிற்குப் பெரியதாகும் என்பதால்தான். இயேசு பன்னிரெண்டு பேரைக் கொண்டு தொடங்கிய இறையாட்சி, பெந்தகோஸ்தே பெருவிழாவில் 3000 பேர் ஆனதையும் அதைத் தொடர்ந்து படிப்படியாக எண்ணிக்கை பெருகியதையும் (திப 4:4, 5:14, 6;1,7) ஒரு கட்டத்தில் யாரும் எண்ண முடியாத அளவிற்கு உயர்ந்ததையும் (திவெ 5:9) விவிலியம் நமக்குச் சான்று பகர்கின்றது. ஆகையால், ஒரு செயல் சிறியதாக இருந்தாலும் அதைப் படிப்படியாகச் செய்துகொண்டிருந்தால் மிகப்பெரியதாக உருமாறும் என்பதை இயேசு நமக்கு இந்த கடுகுவிதை உவமையின் வழியாக மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார்.

மனந்தளராமல் செயல்பட்டால் சிறியவற்றிலிருந்து மிகப்பெரியவற்றை உருவாக்கலாம்

கடுகுவிதை உவமை நமக்கு எடுத்துரைக்கும் செய்தி, மனந்தளராமல் முனைப்போடு செயல்பட்டால் மிகச் சிறிய காரியத்திலிருந்தும் மிகப்பெரியப் காரியத்தை செய்யலாம் என்பதாகும். சிறிய கடுகு விதை வானத்துப் பறவைகளுக்கு நிழல்தரும் அளவில் வளர்வது போல், பன்னிரெண்டு பேரைக் கொண்டு தொடங்கப்பட்ட இறையாட்சி எண்ணமுடியாத அளவுக்கு மக்களை உள்ளடக்கி இருப்பதுபோல், மனந்தளராமல் முனைப்போடு செய்யப்படும் ஒரு சிறு செயல் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.

சிந்தனை

நான் சிறியவன், எளியவன், வறியவன் என்னால் என்ன செய்ய முடியும் என்று எண்ணிக்கொண்டிருக்காமல், மிகச் சிறிய கடுகுவிதையிலிருந்து மிகப்பெரிய மரத்தைத் தோற்றுவித்த இறைவன் நம்மையும் மிகப்பெரிய மனிதராக மாற்றுவார் என்ற நம்பிக்கையோடு, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கின்ற சிறு திறமையையும் முனைப்போடு பயன்படுத்தி, மிகப்பெரிய அளவில் வளர்ந்து, இறைவனுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
எபிரேயர் 10: 32-39

உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டுவிடாதீர்கள்.
இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு


நிகழ்வு

பத்தொன்பாம் நூற்றாண்டில் ஒருங்கிணைந்த நெல்லை ஜில்லாவிற்கு வந்து ஆன்மீகப் பணியையும் சமூகப் பணியையும் ஒருங்கே செய்தவர் அருட்தந்தை ரேனியஸ் என்பவர். இவர் நெல்லை ஜில்லாவில் பணிசெய்தது பதினெட்டு ஆண்டுகள்தான் என்றாலும், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களை திறந்துவைத்து, மக்களுக்கு நல்லதொரு கல்வியை வழங்கினார் என்பது குறிப்படத் தக்கது.

இவருடைய காலத்தில், ஒரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில், ஆசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பில் இருந்த மாணவர்களுடைய பெயர்களையும், அவர்களுடைய அப்பா, அம்மாவினுடைய பெயர்களையும் வரிசையாகக் கேட்டுவந்தார். ஒருமாணவன் மட்டும் தன்னுடைய அப்பாவின் பெயர் தெரியாது என்று சொன்னான். இதைக் கேட்டு திடுக்கிட்டுப் போன ஆசிரியர் அந்த மாணவனிடத்தில், "அப்பா பெயர் தெரியாமல் பள்ளிக்கூடத்திற்கு வருவதா... மறுநாள் பள்ளிக்கு வருகின்றபோது உன்னுடைய அம்மாவைக் கையோடு கூட்டிக்கொண்டு வா" என்று சொல்லி அனுப்பினார்.

மறுநாள் அந்த மாணவன் பள்ளிக்கு வந்தபோது, கையோடு தன்னுடைய தாயைக் கூட்டிக்கொண்டு வந்தான். அவரிடத்தில் ஆசிரியர், "என்னம்மா! உன்னுடைய மகனிடத்தில் தந்தையின் பெயரைக் கேட்டால், அவன் தெரியாது என்று சொல்கிறானே! என்ன பிரச்சனை?" என்று கேட்டார். அதற்கு அந்த மாணவனின் தாய், "உண்மையில் அவனுக்கு அவனுடைய தந்தையின் பெயர் தெரியாது. ஏனெனில் நான் ஒரு தேவதாசி" என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியர், இப்பிரச்சனையை அருட்தந்தை ரேனியசிடம் கொண்டுபோனார்.

இதைக் குறித்து ஆழமாக சிந்தித்துப் அருட்தந்தை, தந்தையின் பெயர் தெரியவில்லை என்பதற்காக தேவதாசிகளின் பிள்ளைகளுக்கு கல்வி மறுப்பது நல்லதல்ல, அதே நேரத்தில் அந்த தேவதாசிகளின் குழந்தைகளுடைய பெயர்களுக்கு முன்பாக இனிஷியல் இல்லாமல் இருப்பதும் நல்லதல்ல என்று, தேவதாசிகளின் பிள்ளைகள் அவர்களுடைய தாயாரின் பெயரை இனிஷியலாகப் போட்டுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

இதற்காக அருட்தந்தை ரேனியசுக்கு திருஅவைக் கூட்டத்தில், 'எப்படி தேவதாசிகளின் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கலாம், அப்படியே அவர்களைச் சேர்த்தாலும் தாயின் பெயரை எப்படி இனிஷியலாகப் போடலாம்' என்று பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதைக் கண்டு அவர் பயந்துவிடாமலும், தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்காமலும் மிகத் துணிச்சலாகச் சொன்னார். "சமூகக் கட்டமைப்பினால் தேவதாசிகளாய் போன பெண்களின் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதிலும், அந்தப் பெண்களின் பெயர்களையே அவர்களுடைய குழந்தைகளின் பெயர்களுக்கு இனிஷியலாகப் போடுவதிலும் என்ன தவறிருக்கின்றது?, அவர்களும் கடவுளுடைய பிள்ளைகள்தானே".

அருட்தந்தை ரேனியஸ் பேசிய பேச்சுக்கு யாரும் மறுபேச்சுப் பேசவில்லை. அன்றுமுதலே தேவதாசிகளுடைய பிள்ளைகள் முறையான கல்விபெற தடையில்லா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தனக்கு வந்த எதிர்ப்புகளைக் கண்டு பயந்து அருட்தந்தை ரேனியஸ் மட்டும் தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்கி இருந்தால், அக்காலத்தில் நெல்லையைச் சுற்றியிருந்த பல தேவதாசிகளுடைய குழந்தைகள் கல்விகற்க முடியாமலே போயிருக்கும். அன்றைக்கு அவர் எடுத்த மிகத் துணிச்சலான முடிவினால்தான், இன்றைக்கும் அவர் மக்களுடைய மனங்களில் நிறைந்து நிற்கின்றார்.

வெற்றியாளர் பின்வாங்குவதில்லை, பின்வாங்குகின்றவர் வெற்றியாளர் ஆவதில்லை

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், "உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டுவிடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு" என்று எழுதுகின்றார். இதைக் குறித்து நாம் இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய எபிரேயர்கள்/ யூதர்கள் ஆட்சியாளர்களால் பல்வேறு வகையில் இன்னுலுக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டார்கள். இதற்குப் பயந்து ஒருசிலர் கிறிஸ்துவின் மீது வைத்திருந்த நம்பிக்கையை துறந்துவிட்டு முந்தைய நிலைக்குத் திரும்பினார்கள். இதைக் கண்டுதான் ஆசிரியர், "உங்களிடம் இருக்கும் துணிவை விட்டுவிடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு என்கின்றார். ஆம், நாம் கிறிஸ்துவின் மீது உண்மையான பற்றுக்கொண்டு, அவரில் இறுதிவரைக்கும் துணிவோடு நிலைத்திருந்தால் அவர் நமகுக் கைம்மாறு தருவார் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

சிந்தனை

"இறுதிவரை மனவுறுதியோடு இருப்பவரே மீட்கப்படுவர்" என்பார் நம் ஆண்டவர் இயேசு. நம்முடைய நம்பிக்கை வாழ்வில் வரும் இன்னல்கள், இடையூறுகள், துன்பங்கள் இவற்றைக் கண்டு நாம் மனம்தளர்ந்து போகக்கூடாது, மாறாக இறுதிவரைக்கும் நிலைத்து நிற்கவேண்டும். அப்படிப்பட்ட வாழ்வே உண்மையான சாட்சிய வாழ்வு.

ஆகவே, இறுதிவரை நம்முடைய நம்பிக்கையில், கொள்கையில் மனவுறுதியோடும் துணிவோடும் நிலைத்து நிற்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
நற்செய்தி (மாற் 4:26-34)

எதுவும் செய்யாமலே

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, 'தானாக வளரும் விதை,' 'கடுகு விதை' என்ற இரண்டு உவமைகளை முன்வைக்கின்றார். இரண்டு உவமைகளிலும் விதைத்தவரின் வேலை விதைப்பதோடு நின்றுவிடுகின்றது. மற்றவை விதைக்குள்ளே இருந்து தானாக நடந்தேறுகின்றன.

இறையரசைப் பற்றி இது சொல்வது என்ன?

இறையரசின் விதைகளை இயேசு விதைத்துவிடுகின்றார். அவ்விதைகள் தங்களிலேயே வீரியம் கொண்டவை. ஆக, யாரும் எதுவும் செய்யாமலே அவைகள் வளர்ந்துவிட வாய்ப்பு உண்டு.

இயேசுவின் இவ்வுவமைகள் இறையரசின் பண்பைக் குறிக்கின்றனவே தவிர, நாமும் ஒன்றும் செய்யாமல் இருக்கலாம் என்ற பொறுப்பற்ற நிலையை அவை சொல்லவில்லை.

ஒரு சாதாரண விதையே தன் இயல்பாக மாறும் ஆற்றல் பெற்றிருக்கின்றது என்றால், நம் ஒவ்வொருவரிடமும் குடிகொண்டிருக்கும் இறைவனின் இயல்பை நோக்கி நாம் வளர்கிறோமா? என்பதுதான் இங்கே கேள்வி.

தானாக வளரும் விதையானது, தளிர், கதிர், தானியம் என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது.

'உரோமை நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை' என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். அது ஒரே நாளில் கட்டப்படவில்லைதான். ஆனால், அன்றன்றைக்கு உள்ள வேலையை அவர்கள் செய்திருக்கத்தான் செய்வார்கள். அன்றன்றைய வேலையைச் செய்யாமல் ஒரே நாளில் நகரமாக நாமும் உருவெடுத்துவிட முடியாது.

இன்றைய முதல் வாசகத்தில் தன் திருச்சபையினர் சிக்கல்களை எதிர்கொண்ட விதத்தைப் பாராட்டுகின்ற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், அவர்களின் அந்தச் செயல்பாட்டை ஒரு மாபெரும் வளர்ச்சி என்று குறிப்பிடுகின்றார்.

ஒவ்வொரு நாளும் எப்படி வளர்வது என்பதை இன்றைய பதிலுரைப் பாடல் அழகாச் சொல்கிறது:

'ஆண்டவரை நம்பு. நலமானதைச் செய். நாட்டிலேயே - அதாவது, எடுத்த காரியத்தில் நிலையாய் - குடியிரு. நம்பத் தக்கவராய் வாழ். ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள். உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு.'

கொஞ்சம் கொஞ்சமாய், மெதுமெதுவாய் வாழ்வதே வாழ்க்கை.

அரக்கப் பரக்க, வேகமாக ஓடுவது வாழ்க்கை அல்ல. அது வளர்ச்சியும் அல்ல.

பிறக்கின்ற இந்தப் பிப்ரவரியில் இன்னும் கொஞ்சம் வேகம் குறைப்போம்.


Rev. Fr. Yesu Karunanidhi
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!