Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   17  ஏப்ரல் 2019  
                                       புனித வாரம் புதன் - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-9a

நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.

ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்.

என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 69: 7-9. 20-21. 30,32-33 (பல்லவி: 13b)
=================================================================================
பல்லவி: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

7 ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. 8 என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். 9 உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. பல்லவி

20 பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்துவிட்டது; நான் மிகவும் வருந்துகின்றேன்; ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காகத் தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை. 21 அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். பல்லவி

30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். 32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எங்கள் அரசரே போற்றப் பெறுக; எங்கள் குற்றம் கண்டு இரக்கம் கொண்டவர் நீர் ஒருவரே. அல்லது பரம தந்தைக்குக் கீழ்ப்படிகின்ற எங்கள் அரசரே போற்றப்பெறுக; அடிக்கக் கொண்டு போகப்படும் சாந்தமான செம்மறிபோல நீர் சிலுவையில் அறையப்படக் கொண்டு செல்லப்படுகிறீர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 26: 14-25

அக்காலத்தில் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, "இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டான்.

அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களிடம், "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், 'எனது நேரம் நெருங்கி வந்துவிட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப்போகிறேன்' எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்" என்றார்.

இயேசு தங்களுக்குப் பணித்தபடியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர், "உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், "ஆண்டவரே, அது நானோ?" என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.

அதற்கு அவர், "என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்" என்றார்.

அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் "ரபி, நானோ?" என அவரிடம் கேட்க, இயேசு, "நீயே சொல்லிவிட்டாய்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

தன்னை அவமானப்படுத்துவோருக்கு எதிராக செயல்படாதவர் நம்முடைய துன்புறும் ஊழியரது மற்றொரு அம்சம். (குணம்)
இதனையே பார்க்கின்றோம் யூதாசுக்கு எதிராக எந்த குரலையும் உயர்த்தவில்லை.
முத்தமிட்டா மனுமகனை காட்டிக் கொடுக்கின்றாய் என்று அவன் முத்தமிட அனுமதிக்கின்றார்.
நம்முடைய வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ துரோகம் செய்வோருக்கும், அவமானப்படுத்துவோருக்கும் நம்முடைய பதில் மொழி என்ன?
துரோகம் செய்கின்றாயே என்று எசச்ரித்துவிட்டு, உணரச் செய்து விட்டு, அமைதியடைகின்றோமா? ஏற்றுக் கொள்ள முற்படுகின்றோமா?

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 நற்செய்தி வாசகம்

மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 26: 14-25

பகைவருக்கு அருள்வாய்

நிகழ்வு

தூய ஜெரோம், ஒரு கிறிஸ்துப் பிறப்பு நாளில், பெத்லகேமில் உள்ள கிறிஸ்து பிறந்த இடத்தில் முழந்தாள்படியிட்டு வேண்டிக்கொண்டிருந்தார். அப்பொழுது குழந்தை இயேசு அவருக்கு முன்பாகத் தோன்றினார். குழந்தை இயேசுவைக் கண்டதும், தூய ஜெரோம் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்.

பின்னர் குழந்தை இயேசு தூய ஜெரோமிடம், "ஜெரோம்! உன்னிடம் நான் ஒரு பரிசு கேட்கிறேன் என்றால், எனக்காக நீ என்ன பரிசு தருவாய்?" என்று கேட்டது. தூய ஜெரோம் சிறிதும் தாமதியாமல், "குழந்தை இயேசுவே! உமக்குப் பரிசாக நான் என்னுடைய இதயத்தைத் தருவேன்" என்றார். உடனே குழந்தை இயேசு அவரிடம், "இதயத்தைவிட பெரிய பரிசு வேண்டும்" என்றது. "இதயத்தை விடப் பெரிய பரிசா? அப்படியானால், என்னையே நான் பரிசாகத் தரவேண்டும்" என்றார்.

"நீ உன்னை எனக்குப் பரிசாகத் தரவேண்டாம். மாறாக, நீ எனக்கெதிராகச் செய்த பாவங்களைத் தா. அதுபோதும்" என்றது குழந்தை இயேசு. அதற்கு தூய ஜெரோம் அதனிடம், "நான் செய்த பாவங்களையா தருவது? அதை வைத்து நீர் என்னசெய்யப் போகிறீர்?" என்றார். குழந்தை இயேசு மிகவும் அமைதியான குரலில், "எனக்கெதிராக நீ செய்த பாவங்களை எல்லாம் என்னிடம் கொடுத்தால், நான் அவற்றையெல்லாம் மன்னித்து உன்னைப் புதிய மனிதனாக மாற்றுவேன்" என்றது. இதைக் கேட்டுவிட்டு தூய ஜெரோம், "உமக்கெதிராக நான் செய்த பாவங்களை எல்லாம் மன்னிக்கப்போகிறீரா? உண்மையில் நீர்தான் ஒப்பற்ற இறைவன்" என்று கண்ணீர் விட்டு அழுதார்.

இயேசு கிறிஸ்து தனக்கெதிராகத் தீமை/ பாவம் செய்பவர்களையும் மன்னித்து, அன்பு செய்யும் அன்பு இறைவன் என்பதை இந்நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தியிலும் இயேசு தனக்கேதிரகத் தீங்கு செய்த/ செய்ய இருந்த ஒருவரை மன்னித்து, அவர்மீது அன்புகொள்கிறார். நற்செய்தியில் வரும் அந்த மனிதர் யார்? இயேசு அவரை எப்படியெல்லாம் அன்புசெய்தார்... அவருக்கு எந்தளவுக்கு மதிப்பளித்தார் என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

நண்பராய் இருந்து துரோகியாய் மாறிய யூதாசு இஸ்காரியோத்து

நற்செய்தியில் இயேசு தன்னுடைய இறுதி இராவுணவின்போது, தன்னைக் காட்டிக் கொடுக்கவிருப்பவர் யார் என்ற உண்மையை உடைக்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னதைக் கேட்டு சீடர்கள், "ஆண்டவரே, அது நானோ?" என்கிறார்கள்.

இயேசுவுக்குக் தன்னைக் காட்டிக்கொடுக்க இருப்பவர் யார் என்பது தொடக்கத்திலேயே தெரியும் (யோவா 6:64). அப்படியிருந்தும் அவர் அதை யாருக்கும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, தன்னைக் காட்டிக்கொடுக்க இருந்த யூதாசை அன்போடும் பொறுமையோடும் உரிய மரியாதையோடும் நடத்துகிறார். பாஸ்கா விருந்தின்போது, தலைவருடைய இடப்பக்கம் அமர்வது என்பது மிகப்பெரிய பேறு. அத்தகைய பேற்றினை இயேசு யூதாசுக்கு அளித்தார். அதுமட்டுமின்றி, அப்பத்தைப் புளிப்புக்கீரை இருக்கும் பாத்திரத்தில் தொட்டு உண்பதும் அல்லது உண்ண அனுமதிப்பதும் பெரிய பேறு (திபா 41:9) அதையும் இயேசு யூதாசுக்குக் கொடுத்தார். அப்படியிருந்தும் யூதாசு இஸ்காரியோத்து இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டு, அவரைக் காட்டிக் கொடுக்கத் துணிகின்றார். இயேசு யூதாசிடம் காட்டியதோ பேரன்பு. அதற்குக் கைமாறாக யூதாசு இயேசுவுக்குச் செய்ததோ மிகப்பெரியத் துரோகம். இவ்வாறு வளர்த்த கிடாவே மார்பில் பாய்ந்த கதை இயேசுவில் வாழ்வில் உண்மையானது.

ஒவ்வொருவரும் அவரவருடைய செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்

யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுப்பது கடவுளின் திட்டத்தில் (!) ஒன்றாக இருந்தாலும், அவர் செய்தது மிகப்பெரிய தவறு என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், கடவுள் அவருக்குக் கொடுத்த ஞானத்தை, அறிவைப் பயன்படுத்தி தான் செய்வது சரிதானா? என்று சிந்தித்துப் பார்த்திருக்கவேண்டும். ஆனால், அவர் எல்லாம் கைமீறிப் போனபிறகு சிந்தித்துப் பார்த்து, கடைசியில் தற்கொலை செய்துகொள்கின்றார். இந்த யூதாசைப் போன்றுதான் பலரும் தாங்கள் செய்வது சரியானதா? இறைவனுக்கு உவப்பானதா? என்று தெரியாமலேயே செய்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகையோர் செய்யும் செயல்களுக்கு அவர்கள் பொறுப்பாக வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.

சிந்தனை


'இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்'(இச 30: 15) என்பார் ஆண்டவராகிய கடவுள். நமக்கு முன்பாக வாழ்வும் சாவும் இருக்கின்றன. இதில் நாம் யூதாசைப் போன்று சாவுக்கான வழியைத் தேர்ந்தெடுத்து அழிந்து போகப் போகிறோமா? அல்லது வாழ்விற்கான வழியைத் தேர்ந்தெடுத்து வாழ்வடையப் போகிறோமா? என்று சிந்திப்போம்.

வாழ்விற்கான வழியைத் தேர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
முதல் வாசகம்

நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-9a

துணையாக இருக்கும் ஆண்டவர்

நிகழ்வு

ஒரு கிராமத்தில் இருந்த அரசு உயிர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புப் படித்து வந்தாள் மகிழினி என்ற மாணவி. படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்த மகிழினி, ஒருநாள் பள்ளியில் நடைபெற்ற ஒரு பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு பேசியதைப் பார்த்துவிட்டு, ஆசிரியை செல்வி, மகிழினியிடம் அற்புதமாகப் பேசும் திறமை ஒளிந்திருப்பதை அறிந்தார். அன்றைய நாளில் பேச்சுப் போட்டியில் அவளுக்குத்தான் முதல்பரிசும் கிடைத்தது.

பேச்சுப்போட்டி முடிந்ததும் மகிழினியைச் சந்தித்த ஆசிரியை செல்வி, அவளை மனதாரப் பாராட்டிவிட்டு, "உன்னிடம் அருமையாகப் பேசும் திறமை இருக்கின்றது. அதனால் அதனை நன்றாக வளர்த்துக்கொள்" என்றார். மட்டுமல்லாமல் மேடையில் எப்படியெல்லாம் பேசவேண்டாம், பேச்சினை எப்படியெல்லாம் மெருகேற்றிக்கொள்ளவேண்டும் என்பது தொடர்பான ஆலோசனகளையும் ஆசிரியை செல்வி, மாணவி மகிழினிக்குக் கூறி அவளை நல்ல முறையில் வளர்த்துவந்தார். இதனால் மகிழினி தான் கலந்துகொண்ட பேச்சுப் போட்டி அனைத்திலும் வெற்றிபெற்று வந்தாள்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. இப்பொழுது மாணவி மகிழினி பத்தாம் வகுப்புப் படித்துகொண்டிருந்தாள். ஒருநாள் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிக்கான அறிவிப்பு வந்தது. இதைக் கண்டதையும் ஆசிரியை செல்வி, மகிழினியை அப்பேச்சுப் போட்டிக்காகத் தயார்படுத்தினார். யாழினியோ, "பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் இருப்பார்கள். அவர்களுக்கு முன்பாக சாதாரண மாணவியாக நான் எப்படிப் பேசுவது?" என்று சற்றுத் தயங்கினாள். அதற்கு ஆசிரியை செல்வி. "அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நீ எவ்வளவு பெரிய திறமைசாலி என்பது எனக்குத் தெரியும். எனவே, முதலில் உன்னை நம்பு... கடவுள் உனக்குத் துணையாக இருக்கிறார் என்பதையும் நம்பு. அப்போது உன்னால் நிச்சயம் போட்டியில் வெற்றிபெற முடியும்" என்று உற்சாகப்படுத்தினார். மாணவி யாழினியும் தன்மீதும் கடவுள் தனக்குத் துணையாக இருக்கிறார் என்பதையும் நம்பி, பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு பேசினார். அவள் பேசியதைப் பார்த்துவிட்டு எல்லாரும் வியந்துபோய் நின்றார்கள். இறுதியில் மாணவி மகிழினிக்கே போட்டியில் முதல் பரிசு கிடைத்தது.

மகிழினி என்ற அந்த மாணவி மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல் மாணவியாக வந்ததற்கு காரணம், அவள் தன்மீது கொண்ட நம்பிக்கையும் கடவுள் தனக்குத் துணையாக இருக்கிறார் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும்தான் காரணம் என்றால் அது மிகையாகாது. இன்றைய முதல் வாசகமும் கடவுள் தனக்குத் துணையாக இருக்கிறார் என்று நம்பி வாழ்ந்த ஒருவரைக் குறித்துப் பேசுகின்றது. அவர் யார்? கடவுள் அவருக்கு எப்படித் துணையாக இருந்தார்? என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நலிந்தவரை நல்வாக்கால் ஊக்குவிக்கும் இறைஊழியர்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், இறைஊழியர் அல்லது துன்புறும் ஊழியராம் இயேசுவைக் குறித்து எடுத்துக்கொள்கின்றது. இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறும் துன்புறும் ஊழியரைப் பற்றிய நான்கு பாடல்களுள் ஒன்றாக இருக்கும் இன்றைய முதல் வாசகம் துன்புறும் ஊழியர் எதற்காகத் துன்புறுத்தப்படுவார்? எப்படித் துன்புறுத்தப்படுவார்?, அப்படிப்பட்ட தருணங்களில் இறைவன் அவருக்கு எப்படித் துணையிருப்பார்? என்பது பற்றிய தெளிவைத் தருகின்றது.

துன்புறும் ஊழியராம் இயேசு நலிந்தவர் எனப்படும் ஏழைகளுக்கு நல்வாக்காம் இறைவார்த்தையை எடுத்துரைத்தார். இதனால் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டி, அவரைக் கொலைசெய்தார்கள். எளியவருக்கு இறைவாக்கை எடுத்துரைத்த இயேசுவைப் போன்று வேறு யாரும் அவ்வளவு கொடூரமாகக் கொலைசெய்யப்படவில்லை என்பதுதான் வேதனை கலந்த உண்மை.

இறைஊழியருக்குத் துணையாய் இருந்த தலைவராம் ஆண்டவர்

இன்றைய முதல் வாசகம் இறைஊழியராம் இயேசு, எப்படியெல்லாம் துன்பப்படுவார் என்பதைக் குறித்து எடுத்துக்கூறும் அதே வேளையில், அவருக்கு இறைவன் எப்படியெல்லாம் துணையிருப்பார் என்பதைக் குறித்தும் எடுத்துச் சொல்கின்றது. இயேசு தன்னுடைய பணிவாழ்வில் சந்தித்த பிரச்சனைகளும் சவால்களும் ஏராளம். அவற்றையெல்லாம் நாம் வார்த்தைகளால் விவரித்துச் சொல்லிவிட முடியாது. அப்படிப்பட்ட தருணங்களில் ஆண்டவர் இயேசு, தந்தைக் கடவுள் தன்னோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து செயல்பட்டார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. யோவான் நற்செய்தியில் வருகின்ற, "நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்" (யோவா 16: 32) என்ற வார்த்தைகள் இதை உறுதிசெய்வதாக இருக்கின்றன.

இயேசு எப்போதும் இறைத்திருவுளத்தின்படி நடந்ததால், அவருக்குத் துணையாக இருந்த இறைவன், அவரைப் போன்று நாமும் இறைத்திருவுளத்தின்படி நடக்கின்றபோது நமக்கும் துணையாய் இருப்பார் என்பது உறுதி.

சிந்தனை

'ஆண்டவரே உனக்குமுன் செல்வார். அவர் உன்னோடு இருப்பார்'(இச 31:8) என்கிறது இறைவார்த்தை. ஆகவே, இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் இயேசுவைப் போன்று இறைவனின் வார்த்தையை எல்லாருக்கும் அதிலும் குறிப்பாக ஏழைகளுக்கு எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
நற்செய்தி வாசகம்

மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 26: 14-25


பணத்திற்காக பரமனையே காட்டிக்கொடுக்கும் மானிடப் பதர்கள்

செல்வந்தன் ஒருவன் அவ்வூரில் இருந்த மகானை தரிசிக்கச் சென்றான். அவரைப் பார்த்து வணங்கிவிட்டு, தான் கையோடு கொண்டுசென்ற பணமுடிப்பை அவரிடம் காணிக்கையாகக் கொடுத்தான். அதை அவர் பெற்றுக்கொள்ளத் தயங்கினார்.

"நீ எனக்கு காணிக்கையாகக் கொடுக்கும் இந்தப் பணம், நேர்வழியில் சம்பாதித்ததில்லை என்று என் உள்மனது சொல்வதால், இதை நான் உன்னிடமிருந்து பெற்றுக்கொள்ளமாட்டேன்" என்று சொல்லி வாங்க மறுத்துவிட்டார். அதற்கு அந்த செல்வந்தர், "மகான் அவர்களே! பணம் முறையற்ற வழியில் வருகிறதா? அல்லது முறையான வழியில் வருகிறதா என்று பாராமல், பணம் வருகிறதே அதை நினைத்து சந்தோசப்படுங்கள்" என்றார்.

இவனுக்கு நல்ல ஒரு பாடம் புகட்டவேண்டும் என்று நினைத்த மகான், தன்னுடைய அறைக்குள் சென்று, ஒரு டம்ளரில் பால் கொண்டுவந்து, அதை அவர் குடிக்கக் கொடுத்தார். செல்வந்தரும் அந்தப் பாலை வாங்கி, குடிப்பதற்காக தன்னுடைய வாயருகே கொண்டு சென்றார். ஆனால், பாலைக் குடிக்காமல் முகம்சுழித்தவாறே அப்படியே கீழே வைத்துவிட்டார்.

"மதிப்பிற்குரிய மகானே! இது பாலா? அல்லது மண்ணெண்ணையா? ஒரே மண்ணெண்ணை வாடை அடிக்கிறதே" என்றார். அதற்கு மகான், "இது பால்தான், ஆனால், இந்தப் பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சாமல், சிம்னி விளக்கில் வைத்துக் காய்ச்சினேன். அதனால்தான் மண்ணெண்ணெய் வாடை அடிக்கிறது" என்றார். தொடர்ந்து மகான் செல்வந்தனிடம், "எப்படி பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சாமல், சிம்னி விளக்கில் வைத்துக் காய்ச்சியதால் மண்ணெண்ணெய் வாடை அடிக்கின்றதோ, அதுபோன்றுதான் முறையற்ற வழியில்/ நேர்மையற்ற வழியில் சம்பாதிக்கப்படும் செல்வமும் நாற்றமடிக்கும்; அது ஒருபோதும் உனக்கு நிம்மதியைத் தராது" என்று முடித்தார்.

அதன்பிறகு செல்வந்தர் புத்தி தெளிந்தவராய், நேர்வழியில் பணமீட்டத் தொடங்கினார். நேர்வழியில் ஈட்டப்படும் செல்வமே ஒருவருக்கு நிம்மதியைத் தரும். அதைவிட்டுவிட்டு, முறையற்ற வழியில் ஈட்டப்படும் செல்வம் ஒருவருக்கு ஒருபோதும் நிம்மைதியைத் தராது, மாறாக, அவருக்கு குற்ற உணர்வைத்தான் தரும் என்பதை இக்கதையானது நமக்கு எடுத்துரைக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் யூதாஸ் இஸ்காரியோத்து பணத்திற்காக/ முப்பது வெள்ளிகாசுக்காக ஆண்டவர் இயேசுவையே காட்டிக்கொடுக்கின்றான். அவன் தலைமைக் குருக்களிடம் சென்று கேட்கின்றான், "இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று. அதற்கு அவர்கள் முப்பது வெள்ளிக்காசுகளை எண்ணிக்கொடுக்கிறார்கள்.

யூதாசு இயேசுவோடு மூன்று ஆண்டுகள் இருந்தவர்; அவரோடு உணவு உண்டவர். அப்படிப்பட்ட யூதாசே பணத்திற்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்தது என்பது யாருமே நினைத்துப் பார்த்திராத ஒன்று. பணம் பாதாளம் வரை பாயும் என்பது யூதாசின் வாழ்க்கையில் நிரூபணம் ஆகின்றது.

யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்தனால் பெற்ற முப்பது வெள்ளிக்காசுகளை வைத்து நிம்மதியாக இருந்தானா? என்றால் நிச்சயமாக இல்லை. ஏனென்றால் அவன் 'தான் பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்று சொல்லி, அந்த முப்பது வெள்ளிகாசுகளைக் கோவிலில் எறிந்துவிட்டு, தூக்குப் போட்டுக் கொள்கிறான். ஆக, முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்ட அந்த முப்பது வெள்ளிக்காசுகள், யூதாசுக்கு முறையற்ற சாவைத் தந்தது.

பல நேரங்களில் நாமும்கூட பணத்திற்காக, பணம் சம்பாதிப்பதற்காக எப்படியெல்லாமோ குறுக்குவழியில் நடந்துகொள்கிறோம். இப்படி குறுக்கு வழியில் ஈட்டப்படும் செல்வம் நமக்கு ஒருபோதும் நிம்மதியைத் தாராது என்பதே இறைவார்த்தை நமக்குத் தரும் பாடமாக இருக்கின்றது.

ஆகவே, திருப்பாடல் 98:11 ல் வாசிக்கக்கேட்பது போன்று, நேரிய உள்ளத்தோடு நடந்து இறைவன் அளிக்கும் மகிழ்வையும், முடிவில்லா வாழ்வையும் பெற்றிடுவோம்..

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!