Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   15  ஏப்ரல் 2019  
                                 புனித வாரம் திங்கள் - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-7

ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.

விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:27: 1. 2. 3. 13-14 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி 2 தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள். பல்லவி

3 எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன். பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி

================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எங்கள் அரசரே போற்றப் பெறுக. எங்கள் குற்றம் கண்டு இரக்கம் கொண்டவர் நீர் ஒருவரே.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-11

பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார். அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார்.

மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத் தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது.

இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து, "இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டான்.

ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்வதுண்டு.

அப்போது இயேசு, "மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும். ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை" என்றார்.

இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச்செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள். ஆதலால் தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள்.

ஏனெனில் இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

துன்புறும் ஊழியனின் வாழ்வு முறை இந்த நாட்களிலே சிந்திக்க தரப்பட்டுள்ளது.

தனக்காக, தன் துன்பத்தினால் அவர் குரலை உயர்த்தமாட்டார்.

மற்றவர்களுக்காக, ஏழைகள், விதவைகள், பாவிகள், ஒதுக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்ததால், துன்பங்களை வாங்கிக் கொண்டார்.

இவரை நாமும் பின்பற்றி நம்முடைய துயரங்களுக்கு, துன்பங்களுக்கு புலம்புவதை விடுத்து, பிறருக்காக குரல் கொடுக்க, அதனால் துன்பங்களை ஏற்றுக் கொள்ள முன்வருவோம்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எசாயா 42: 1-7

அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்

நிகழ்வு

இரஷ்யாவை ஆண்டுவந்த ஜோசப் ஸ்டாலினுடைய வாழ்வில் நடந்ததாக சொல்லப் படுகின்ற ஒரு நிகழ்வு.

ஒருநாள் அவர் நாடாளுமன்றத்துக்குள் சென்றபோது கையில் கோழியுடன் சென்றார். 'அதிபர் எதற்குக் கோழியோடு வருகிறார்?' என்று நாடாளுமன்றத்தில் இருந்த எல்லாரும் அவரை ஆச்சரியாகப் பார்த்தார்கள். அப்பொழுது அவர் கோழியின் இறகுகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கிக் கீழே போட்டார். கோழியோ வலியால் கத்தியது, துடிதுடித்தது. கோழியிடமிருந்து இறகுகளை முற்றிலும் பிடுங்கிய பின், அவர் அதைத் தூக்கிக் தூர எறிந்தார். பின்னர் அதன்முன்னால் சிறிது தானியத்தைத் தூவினார். அந்தக் கோழி அதைத் தின்றுகொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது. மேலும் அவர் சிறிது தானியத்தைத் தனது காலடிவரை தூவினார். அதைப் பொறுக்கியபடி அந்தக் கோழி கடைசியில் அவரது காலடியில் வந்து நின்றது.

இவையெல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து ஸ்டாலின் இவ்வாறு கூறினார்: "இதுதான் அரசியல், மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கிப் பிழிந்து எடுத்துவிட்டு, கடைசியில் சிறிது தானியத்தை தூவினால் நம் காலடியில் வந்து கிடப்பார்கள்."

இரஷ்ய அதிபர் ஸ்டாலின் கூறிய இவ்வார்த்தைகள், நம்மை ஆண்டுகொண்டிருக்கின்ற தலைவர்கள் நம்மை எப்படியெல்லாம் சுரண்டமுடியுமோ, அப்படியெல்லாம் சுரண்டிவிட்டு, அநீதியான முறையில் ஆட்சியையும் செய்துவிட்டு, 'இலவசங்கள்' என்ற பெயரில் ஒருசில எலும்புத் துண்டுகளைப் போட்டு, ஏமாற்றிக்கொண்டு போகிறார்கள் என்பதை வேதனையோடு பதிவுசெய்வதாக இருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமக்கெல்லாம் நேர்மையான ஆட்சியையும் நீதியையும் வழங்குகின்ற ஒருவரைக் குறித்து இன்றைய முதல் வாசகம் எடுத்துச் சொல்கின்றது. அவர் யார்? அவர் மக்களுக்கு எப்படி நீதிவழங்குவார்? என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

தூய ஆவியார் தங்கியிருக்கும் இறைஊழியர்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், இறை ஊழியர் அல்லது துன்புறும் ஊழியரைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. இறைவாக்கினர் எசாயா நூலில் மொத்தம் ஐந்து இறை ஊழியர் பாடல்கள் இடம்பெறுகின்றன. அவற்றுள் இன்றைய முதல் வாசகமும் ஒரு பாடல். மற்றவை பின்வரும் இறைவார்த்தைப் பகுதிகளில் இடம்பெறுகின்றன: எசா 49: 1-6; 50: 1-11; 52: 13-53:12.

இறை ஊழியரைப் பற்றிய பாடலாக அமைந்திருக்கும் இன்றைய முதல் வாசகம், இறைஊழியர் என்பவர் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவராகவும் தூய ஆவியார் தங்கி இருப்பவராகவும் இருப்பார் என்று எடுத்துச் சொல்கின்றது. அப்படியென்றால் இங்கு குறிப்பிடப்படும் இறைஊழியர், இயேசுதான் என்று உறுதியாகச் சொல்லலாம். ஏனென்றால் இயேசுதான் தூய ஆவியாரின் வல்லமை பொழியப்பட்டவராய் எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் (திப 10:38); இயேசுதான் தந்தைக் கடவுளின் அன்பார்ந்த மகனாக இருந்தார் (மத் 3:17; 17:5).

மக்களினங்களுக்கு நீதி வழங்கும் இறைஊழியராம் இயேசு

இன்றைய முதல் வாசகம், இறைஊழியரானவர் தூய ஆவியாரால் நிரப்பப்பட்டவர் என்ற செய்தியைக் கூறும் அதேவேளையில், அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார் என்ற செய்தியையும் எடுத்துச் சொல்கின்றது.

இறைஊழியராம் இயேசு மக்களினங்களுக்கு நீதி வழங்குகிறார் எனில், அவர் இவ்வுலகில் இருக்கின்ற நீதிபதிகள் போன்று நீதி வழங்குவதில்லை. இவ்வுலகில் இருக்கின்ற நீதியரசர்கள் பணத்திற்கும் சுகபோகங்களுக்கு விலைபோகி, ஏழைக்கு ஒரு நீதியும் பணக்காரருக்கு ஒரு நீதியுமாய் வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இயேசு அப்படி நீதி வழங்குவதில்லை. அவர் நெரிந்த நாணலைப் போன்று, மங்கி எரியும் தீயைப் போன்று இருக்கும் ஏழை எளியவர் மட்டில் கரிசனையும் அன்புகொண்டு நீதி வழங்குவார். அதிகாரமும் அந்தஸ்தும் கொண்டிருக்கின்ற பணக்காரருக்கோ அறத்தின் வழிநின்று நீதி வழங்குகின்றார்.

பிறஇனத்தாருக்கு ஒளியாக இருக்கும் இறைஊழியர்

இறை ஊழியராம் இயேசு, தூய ஆவியாரால் நிரப்பப்பட்டு, மக்களினங்களுக்கு நீதி வழங்கும் அதேவேளையில் அவர் புறவினத்தாருக்கு ஒளியாகவும் இருப்பார் என்று முதல் வாசகம் எடுத்துச் சொல்கின்றது. அது உண்மைதான் என்பதை, இயேசுவை அவருடைய பெற்றோர் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும்போது, அவரைத் தன் கைகளில் ஏந்திய சிமியோன் உரைக்கும், "இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி" (லூக் 2:32) என்ற வார்த்தைகள் உறுதி செய்வதாக இருக்கின்றன.

ஆகையால் இயேசு யூதருக்கு மட்டுமல்ல, புறவினத்தாருக்கும் ஒளியாக இருக்கின்றார், அவர்களுக்கும் நீதியை வழங்குகிறார் என்ற உண்மையை உணர்ந்துகொள்வது நல்லது.

சிந்தனை

'கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் பொழிந்தருளினார் . அதனால் அவர் எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்' (திப 10:38) என்கிறது திருத்தூதர் பணிகள் நூல். இயேசுவைப் போன்று தூய ஆவியாரால் நிரப்பப்பட்டிருக்கும் நாமும் எங்கும் நன்மை செய்துகொண்டு செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
யோவான் 12: 1-11

நேர்மையாளர்மீது ஆசி பொழியும்; பொல்லாரின் பெயரோ அழிவுறும்

நிகழ்வு

முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பிறந்தநாள் வந்தது. எனவே அரண்மனையில் இருந்த அனைவரும் சேர்ந்து அரசனின் பிறந்தநாள் விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடினர். அரசனோ வந்தவர்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்லாது பரிசுகளை வாரி வாரி வழங்கினான்.

அங்கு வந்த ஒருவன் அரசனைப் பணிவாக வணங்கினான்.
"அரசர் பெருமானே! நான் வறுமையில் வாடுகிறேன்... வளமாக வாழ நீங்கள் அருள் புரிய வேண்டும்" என்று வேண்டினான். "உனக்கு என்ன வேண்டும்? தயங்காமல் கேள்" என்றான் அரசன். பேராசை கொண்ட அவனுக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை. "அரசர் பெருமானே! என் உள்ளம் மகிழுமாறு நீங்கள் பொற்காசுகளைத் தாருங்கள்'" என்றான் அவன். 'இவன் பேராசை கொண்டவனாக இருக்கிறான்... அதனால்தான் இப்படிக் கேட்கிறான்' என்று நினைத்த அரசன், அவனைக் கருவூலத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு குவியல் குவியலாகப் பொற்காசுகள் கொட்டிக்கிடந்தன. அவற்றை வியப்புடன் பார்த்தான் அவன்.

"உனக்கு எவ்வளவு பொற்காசுகள் வேண்டுமோ அவ்வளவு பொற்காசுகளை இங்கிருந்து எடுத்துச் செல்லலாம். ஆனால், நீ இங்கிருந்து ஒரே ஒருமுறைதான் பொற்காசுகளை எடுத்துச்செல்ல வேண்டும்... வெளியே செல்லும்வரை அவற்றைக் கீழே வைக்கக் கூடாது... கீழே வைத்தால் பொற்காசுகள் மீண்டும் கருவூலத்தில் சேர்ந்து விடும்" என்றான் அரசன். பின்னர் அவனை அங்கேயே விட்டுவிட்டு வெளியே சென்றான். 'நான் வலிமையாக இருக்கிறேன்... இங்கிருந்து ஏராளமான பொற்காசுகளை எடுத்துச் செல்ல முடியும்... இனிமேல் இந்த நாட்டில் பெருஞ்செல்வந்தன் நான்தான்' என்று மகிழ்ச்சி அடைந்தான் அவன். அதன்பிறகு அங்கிருந்த சாக்குப்பை ஒன்றை எடுத்தான். அதற்குள் பொற்காசுகளை அள்ளி அள்ளிக் கொட்டினான்.

பையில் பாதி நிரம்பியது. அதைத் தூக்கிப் பார்த்தான். அவனால் தூக்க முடிந்தது. பேராசை கொண்ட அவன், இன்னும் தன்னால் தூக்கமுடியும் என்று நினைத்தான். மேலும், பொற்காசுகளைப் பைக்குள் போட்டான். அப்போதும் அவனுக்கு நிறைவு ஏற்படவில்லை.
'கருவூல வாயில்வரை தூக்கிச் செல்லவேண்டும்... சிறிது தொலைவுதானே... எப்படியும் தூக்கிச் செல்லலாம்' என்று நினைத்தான். பை நிரம்பப் பொற்காசுகளைப் போட்டான். அந்தப் பையை அசைத்துப் பார்த்தான். மிகவும் கனமாக இருந்தது. முயற்சி செய்து அந்தப் பையைத் தூக்கி முதுகில் வைத்து அதைச் சுமந்தபடி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான். பத்தடி எடுத்து வைத்திருப்பான். அதற்குமேல் அவனால் ஒரு அடியும் எடுத்து வைக்க முடியவில்லை; பையைக் கீழே போடவும் விரும்பவில்லை. முதுகெலும்பு முறிந்து அங்கேயே விழுந்தான் அவன். பொற்காசுப் பை அவன் மேல் கிடந்தது. அப்படியே இறந்து போனான்.

அங்கு வந்த அரசன், அவன் கீழே விழுந்து இறந்து கிடப்பதைப் பார்த்தான். 'பேராசை இல்லாதிருந்திருந்தால், இவன் வாழ்நாள் முழுமையும் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்... பேராசையால் இப்படி மாண்டுபோய்விட்டானே' என்று அவனுடைய நிலைமையை எண்ணி வருந்தான் அரசன்.

ஒருவனிடம் இருக்கும் பேராசை அவனுடைய உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தி வாசகமும் பேராசை அல்லது பணத்தாசை பிடித்த ஒருவரைக் குறித்தும் பணத்தை ஒரு பொருட்டாகக் கருதாத ஒருவரைக் குறித்தும் எடுத்துச் சொல்கின்றது. நாம் அவர்களைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் காலடிகளில் நறுமணத்தைலம் பூசிய மரியாவும் யூதாசு இஸ்காரியோத்தும்

இயேசு பெத்தானியாவிலிருந்த இலாசரின் வீட்டிற்குச் சென்றபொழுது, அவரது சகோதரி மரியா, இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலத்தைப் பூசி, கூந்தலால் துடைக்கின்றார். மரியா, இயேசுவின் காலடிகளில் பூசிய நறுமணத்தைலத்தின் மதிப்பு ஒருவரின் ஓராண்டு ஊதியத்திற்குச் சமம் (2சாமு 24:24). இதைப் பார்த்துவிட்டு பணத்தாசை பிடித்த யூதாஸ், மிகவும் தந்திரமாக, "இத்தைலத்தை விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கலாமே" என்கின்றான்.

இங்கு ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். மரியாவோ தன்னிடமிருந்த அவ்வளவு மதிப்புமிக்க நறுமணத் தைலத்தை இயேசுவின் காலடிகளில் பூசுகின்றார். அதனால் தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்வதோடு மட்டுமல்லாமல், அவரது செயல் முறையான செயலாகின்றது (மத் 26:10). இதற்கு மாறாக, பணத்தை எப்படியாவது அபகரிக்கவேண்டும் என்று முறைகேடாகச் செயல்பட்ட யூதாசோ இறுதியில் மிகப்பெரிய அழிவினைச் சந்தித்துத் அழிந்துபோகின்றான். இவ்வாறு மரியா, யூதாஸின் செயல்களே அவர்களுடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

சிந்தனை

'நேர்மையாளர்மீது ஆசி பொழியும்; பொல்லாரின் பெயரோ அழிவுறும்' (நீமொ 10: 6,7) என்கின்றது நீதிமொழிகள் புத்தகம். நமது செயல் யூதாசின் செயல்போன்று கடவுளுக்கு உரியதைப் பேராசையோடு எடுப்பதாக இல்லாமல், மரியாவின் செயலைப் போன்று எல்லாவற்றையும் கடவுளுக்குத் தருவதாக இருக்கச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
பணத்தாசை பிடித்து அலையும் மனிதர்கள்

இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்தவர் சர்ச்சில். அவர் மக்களுக்கு முக்கியமான ஓர் உரையாற்றுவதற்காக வானொலி நிலையம் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் தன்னுடைய வாகனத்தில் போனால் பாதுகாப்பு இருக்காது என்று கருதி, வேறொரு வாடகை வாகனகத்தில் போகலாம் என்று உறுதிசெய்தார்.

சர்ச்சில் தன்னுடைய வீட்டிலிருந்து வாடகை வாகனம் இருக்கும் இடம்வரை நடந்தே வந்தார். அது இரவு நேரமாக இருந்ததால், அவரை யாராலும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

சர்ச்சில் வாகனம் இருக்கும் இடத்தை அடைந்ததும், அங்கே நின்றுகொண்டிருந்த டாக்சி ஓட்டுனரிடம், "வண்டி வானொலி நிலையம் வரை வருமா?" என்று கேட்டார். அதற்கு அவர், "அதெல்லாம் முடியாது. இன்று இரவு நாட்டின் பிரதமர் சர்ச்சில் வானொலியில் உரையாற்றப் போகிறார், அதனால், நான் வீட்டுக்குப் போய், அவரது உரையைக் கேட்கவேண்டும்" என்றுசொல்லி மறுத்துவிட்டார்.

தன்னுடைய பேச்சுக்கு இவ்வளவு பெரிய இரசிகனா இவன், இவனைச் சோதித்துப் பார்க்கவேண்டுமே என்று நினைத்துக்கொண்டு அவர் அவனிடம், "ஐயா! வானொலி நிலையத்துக்குப் போக இன்னும் 50 பவுண்டுகள் அதிகமாகத் தருகிறேன். தயவுசெய்து வாருங்கள்" என்றார். இதைக் கேட்டதும் அந்த டாக்சி ஓட்டுனர், "சர்ச்சிலாவது கிர்ச்சிலாவது, அவரது பேச்சை யார் கேட்பார். வேலை வெட்டி இல்லாதவர்தான் கேட்பார்" என்று சொல்லிவிட்டு, அவரை வாகனத்தில் ஏற்றுக்கொண்டு, வானொலிநிலையம் நோக்கி வண்டியை விரட்டத் தொடங்கினார். எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த சர்ச்சிலுக்கு தூக்கி வாரிப்போட்டது.

பணத்திற்கு முன்னால் எல்லாம் குப்பை என்பதே இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, இலாசரின் வீட்டுக்குப் போனபோது, அவருடைய சகோதரி மரியா நறுமணத் தைலத்தால் இயேசுவின் காலடிகளில் பூசி, கூந்தலால் துடைக்கிறார். இதைக் கவனிக்கும் யூதாசு இஸ்காரியோத்து, "இதை விற்று, அதிலிருந்து வரக்கூடிய பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கலாமே" என்கிறார். இயேசு அவருடைய உள்ளுணர்வை அறிந்தவராய், "மரியாவைத் தடுக்காதீர்கள், என் அடக்க நாளை முன்னிட்டு, அவர் இதைச் செய்யட்டும். ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருப்பதில்லை" என்று பதிலளிக்கிறார்.

யூதாசின் எண்ணமெல்லாம் பணத்தை எப்படி கையாடல் செய்வது, எப்படி பணத்தைத் திருடுவது என்பதாகத் இருந்தது. அதனால்தான் இயேசுவை அவன் முப்பது வெள்ளிக்காசுக்காக காட்டிக்கொடுக்கின்றான்.

பல நேரங்களில் நம்முடைய வாழ்க்கையிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. பணம், பணம் என்று அலைகின்றோம். ஆனால் பணத்தை வைத்துக்கொண்டு நம்மால் நிம்மதியாக வாழ முடியவில்லை.

ஒருவன் எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டேயிருந்தான் .அவனைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன், 'நீ எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டே இருக்கின்றாயே. எதற்கு?' என்று கேட்டான். அவன் "'குளிர் காய்வதற்கு" என்றான். கேட்டவனோ, "நீ குளிர் காய்வதை நான் பார்த்ததில்லையே?'என்றான்.

அவனோ "சுள்ளி பொறுக்கவே நேரம் சரியாக இருக்கின்றது. குளிர் காய நேரமில்லை"' என்றான். நம்மில் பெரும்பாலோர் இப்படித் தான் இருக்கின்றோம். பணம் சம்பாதிப்பது வாழ்க்கையின் சுகங்களை அனுபவிப்பதற்கு. ஆனால் சிலர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள். அந்தப் பணத்தால் பெறக்கூடிய சுகங்களை அனுபவிப்பதில்லை. கேட்டால் அதற்கு எல்லாம் நேரம் இல்லை என்கிறார்கள். இதென்ன பைத்தியக்காரத்தனம்?.

ஆகவே, பணம் தேடுவதிலே நம்முடைய வாழ்வைத் தொலைக்காமல், பணம் நமக்கு ஒரு வேலையாள்தானே ஒழிய, நாம் அதற்கு வேலையாள் அல்ல என்பதை உணர்ந்து, அனைத்திக்கும் மேலாக கடவுளைவும், அவருக்கு ஏற்புடைய காரியங்களையும் நாடுவோம் (மத் 6:33). அப்போது கடவுள் நமக்கு எல்லா ஆசிரையும் தந்து, வழிநடத்துவார்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!