Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   13  ஏப்ரல் 2019  
                       தவக்காலம் 5ம் வாரம் சனி  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
இஸ்ரயேலரை ஒரே நாட்டினர் ஆக்குவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 21-28

தலைவராகிய ஆண்டவர் கூறியது: இதோ நான் இஸ்ரயேலர் சிதறுண்ட நாடுகளிலிருந்து அவர்களை அழைத்து, எம்மருங்கினின்றும் கூட்டிச் சேர்த்து, அவர்களின் சொந்த நாட்டிற்குக் கொணர்வேன், இஸ்ரயேலின் மலைகள் மீது அவர்களை ஒரே நாட்டினர் ஆக்குவேன்.

அவர்கள் எல்லாருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் இனிமேல் ஒருபோதும் இரு நாடுகளாகவோ இரு அரசுகளாகவோ பிரிந்திரார். அவர்கள் இனிமேல் ஒருபோதும் தங்கள் தெய்வச் சிலைகளாலோ இழிந்த அருவருப்பான பொருள்களாலோ தங்கள் வேறெந்த குற்றங்களாலோ தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பாவம் செய்த எல்லாக் குடியிருப்புகளிலிருந்தும் அவர்களை நான் மீட்டுத் தூய்மையாக்குவேன்.

அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்; நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன். என் ஊழியன் தாவீது அவர்களுக்கு அரசனாய் இருப்பான். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஆயன் இருப்பான். என் நீதிநெறிகளின்படி அவர்கள் நடப்பர்; என் நியமங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிப்பர். நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் மூதாதையர் வாழ்ந்ததுமாகிய நாட்டில் அவர்கள் வாழ்வர். அவர்களும், அவர்களின் மக்களும், மக்களின் மக்களும் அங்கு என்றென்றும் வாழ்வர். என் ஊழியன் தாவீது என்றென்றும் அவர்களின் தலைவனாய் இருப்பான்.

நான் அவர்களுடன் நல்லுறவு உடன்படிக்கை செய்துகொள்வேன். அது அவர்களுடன் என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர்களை நிலைபெறச் செய்து அவர்களைப் பெருகச் செய்வேன். என் தூயகத்தை அவர்கள் நடுவே என்றென்றும் நிலைக்கச் செய்வேன். என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும்; நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர். என் தூயகம் அவர்கள் நடுவே என்றென்றும் நிலைத்திருக்கையில், இஸ்ரயேலைத் தூய்மைப்படுத்துபவர் ஆண்டவராகிய நானே என வேற்றினத்தார் அறிந்துகொள்வர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (எரே 31: 10. 11-12ab. 13 (பல்லவி: 10b)
=================================================================================
பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்.

10 மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்; 'இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்; ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள். பல்லவி

11 ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார். 12ab அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்; ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள். பல்லவி

13 அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எசே 18: 31

எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர்.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்ப்பதற்காக இறக்கப் போகிறார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 45-57

அக்காலத்தில் மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர். ஆனால் அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று இயேசு செய்ததைத் தெரிவித்தனர்.

தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, "இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்துகொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்? இவனை இப்படியே விட்டு விட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே!" என்று பேசிக்கொண்டனர்.

கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், "உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை" என்று சொன்னார்.

இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காகவும், தம் இனத்திற்காக மட்டுமன்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார்.

ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள். அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்; அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார். யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழ இருந்தது. விழாவுக்கு முன் தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றப் பலர் நாட்டுப் புறங்களிலிருந்து எருசலேமுக்குச் சென்றனர்.

அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள். "அவர் திருவிழாவுக்கு வரவேமாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கோவிலில் நின்று கொண்டிருந்தவர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

ஏனெனில் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க எண்ணி அவர் இருக்கும் இடம் யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் வந்து அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்ப்பதற்காக இறக்கப் போகிறார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 45-57

நம் அனைவருக்காகவும் தன்னுயிர் தந்த இயேசு

சில ஆண்டுகளுக்கு முன்பாக பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் போர்களும் கலகங்களும் அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. அந்த சமயத்தில் சீக்கிய மதத்தைச் சார்ந்த ஓர் இளைஞரும் இந்து மதத்தைச் சார்ந்த இரண்டு இளைஞர்களும் ஒரு தேநீர் கடையில் கூடிவந்து தங்களுடைய அன்பையும் நட்பையும் புதுப்பித்துக்கொண்டு வந்தார்கள்.

ஒருநாள் இந்து மதத்தைச் சார்ந்த இரண்டு இளைஞர்களில் ஒரு இளைஞர் அங்கு வரவில்லை. ஒருவர் போக இன்னொரு இந்து சமயத்தைச் சார்ந்த இளைஞரும் சீக்கிய மதத்தைச் சார்ந்த இளைஞரும் அந்த தேநீர் கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இந்து மதத்தைச் சார்ந்த இளைஞர் மற்றவரிடம், "இப்போது எனக்கு ஏதாவது ஆபத்து வந்தால், நீ எனக்காக உன்னுடைய உயிரைத் தருவாயா?" என்று கேட்டார். அதற்கு சீக்கிய மதத்தைச் சார்ந்த இளைஞர், "அதிலென்ன சந்தேகம், உனக்காக எதை வேண்டுமானாலும் தருவேன், ஏன் என்னுடைய உயிரையும் தருவேன்" என்றார்.

அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது தீவிரவாதிகள் சிலர் திடீரென இந்து மதத்தைச் சார்ந்த இளைஞர்மீது பாய்ந்து அவரை துப்பாக்கியால சுடப் பார்த்தனர். அப்போது அங்கிருந்த சீக்கிய மதத்தைச் சார்ந்த இளைஞர் தீவிரவாதிகள் முன்பாகச் சென்று, "தயவு செய்து என்னுடைய நண்பனை ஒன்றும் செய்யாதீர்கள். அவனுக்காக என்னுடைய உயிரை நான் தருகிறேன். அவனை ஒன்றும் செய்யாதீர்கள்" என்றார். உடனே தீவிரவாதிகள் இந்து மதத்தைச் சார்ந்த இளைஞரை விட்டுவிட்டு சீக்கிய மதத்தைச் சார்ந்த இளைஞரைச் சுட்டுத் தள்ளிவிட்டு, அங்கிருந்து விரைந்து சென்றார். உயிர் பிழைத்த இந்து மதத்தைச் சார்ந்த இளைஞரோ, தனக்காக தன்னுடைய உயிரைத் தந்த சீக்கிய மதத்தைச் சார்ந்த நண்பரின் தியாகத்தை நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டு, அவருடைய நினைவாலே வாழ்ந்து வந்தார்.

தன்னுடைய நண்பன் வாழவேண்டும் என்பதற்காக தன்னுடைய இன்னுயிரையே தியாகம் செய்த அந்த சீக்கிய மதத்தைச் சார்ந்த இளைஞரின் தியாகம் பாராட்டுக்குரியது.

ஆண்டவர் இயேசுவும் நாம் அனைவரும் வாழ்வு பெறவேண்டும் என்பதற்காக தன்னுடைய உயிரையே தியாகமாகத் தந்தது எத்துணை சிறப்பு.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்கிறார். இதனால் மக்கள் அவர்மீது நம்பிக்கைக் கொள்ளத் தொடங்குகிறார்கள். இதனைக் கண்ணுற்ற தலைமைச் சங்கத்தில் உள்ளவர்கள், இயேசுவை அப்படியே விட்டால் அவர் பின்னால் மக்கள் அனைவரும் சென்றுவிடுவர், அவர்மீது நம்பிக்கை கொண்டுவிடுவார். அப்போது உரோமையர் வந்து தம் தூய இடத்தையும் இனத்தையும் அழிந்து விடுவார்கள் என்கின்றனர். அதற்கு அப்போது தலைமைக் குருவாக இருந்த கயபா என்பவர், "உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை" என்கிறார்.

கயபாவின் வார்த்தைகளை நாம் நமது சிந்தனைக்கு உட்படுத்துதற்கு முன்பாக யூதர்களின் சமூக நிலையை சிறுது நாம் புரிந்துகொள்ளவேண்டும். யூதர்களில் இருந்த உயர் குடிகளில் பரிசேயர்களும் சதுசேயர்களும் உள்ளடங்கி இருந்தார்கள். பரிசேயர்கள் சட்டத்தை நுணுக்கமாகக் கடைபிடிக்கிறேன் பேர்வழி என்று சாதாரண மக்களை ஒடுக்கி வாழ்ந்தார்கள். ஆனால் சதுசேயர்களோ அப்படியில்லை. அவர்கள் பரிசேயர்களையும் விட சற்று பொருளாதாரத்தில் உயர்ந்திருந்தார்கள். தலைமைச் சங்கத்தில் இடம்பெற்றிருந்த பெரும்பாலனவர்கள் இவர்கள். இவர்களுக்கு அதிகாரமும் அந்தஸ்தும்தான் பெரிதாகப் பட்டது. அதனால்தான் தங்களுடைய அதிகாரத்திற்கு இயேசுவால் பங்கம் வந்துவிடும்; உரோமையர்களிடமிருந்து இயேசுவால் தங்களுக்கு ஆபத்து வந்துவிடும் என்பதற்காக அவரைக் கொல்ல வழி தேடினார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் தலைமைக் குருவாக இருந்த கயபா, "இனம் முழுவதும் அழிந்து போவதை விட, ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது" என்கிறார். சாத்தான் வேதம் ஓதும் என்பதுபோல அதிகாரத்திற்கும் அந்தஸ்திற்கும் அடிமையாகி போன கயபா இறைவாக்கு உரைக்கின்றார். அவர் சொன்னது போன்று ஆண்டவர் இயேசு மக்கள் அனைவருக்கும் தன்னுடைய உயிரைத் தருகின்றார். அவர் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்ததன் பயனாக நாம் அனைவரும் வாழ்வைப் பெறுகின்றோம்.

ஆகவே, இயேசுவைப் போன்று மக்கள் அனைவரும் வாழ்வுபெற நம்மைத் தருவதுதான் இயேசுவின் சீடர்களாக இருக்கும் நமக்குப் பெருமையாக இருக்கின்றது. எனவே, இயேசுவைப் போன்று எல்லாரும் வாழ்வு பெற (யோவா 10:10), நம் உயிரைத் தியாகமாகத் தருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நற்செய்தி வாசகம்

சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்ப்பதற்காக இறக்கப் போகிறார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 45-57

மக்களுக்காக இறந்த இயேசு!

நிகழ்வு

பத்தொன்பதாம் நூற்றாண்டில், அமெரிக்காவில் அடிமைச்சந்தையானது கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது. இதற்கொரு முடிவுகட்ட நினைத்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், ஒரு சட்டம் இயற்றினார். அச்சட்டம், அடிமைச்சந்தையில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஆபிரகாம் லிங்கனுக்கு வெள்ளையர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. ஒருசிலர் அவரைக் கொல்வதற்கும் திட்டம் தீட்டினார்கள். 1865 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14 ஆம் நாள், ஜான் வில்கிஸ் பூத் என்ற நடிகன் ஆபிரகாம் லிங்கனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

இதைத் தொடர்ந்து அவருடைய உடலானது, அவரது சொந்த ஊரான எலினாவுக்குக் கொண்டுவரப்பட்டது. அவருக்கு இறுதிஅஞ்சலி செல்வதற்கு ஆயிரக்கான மக்கள் அங்கு திரண்டுவந்தார்கள். அப்பொழுது கைக்குழந்தையோடு வந்திருந்த ஒரு நீக்ரோ இனத்தைச் சார்ந்த பெண், ஆபிரகாம் லிங்கனின் உடலைச் சுட்டிக்காட்டித் தன் மகனிடம், "என் அன்பு மகனே! இதோ கொல்லப்பட்டுக் கிடக்கிறாரே இந்த மனிதர்! இவர் உன்னைப் போன்ற, என்னைப் போன்ற அடிமைகளின் விடுதலைக்காகத் தன்னுடைய இன்னுயிரை ஈந்தவர்... இவரை ஒருபோதும் நீ மறந்துவிடக்கூடாது" என்றார்.

எப்படி அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் அடிமைகளின் விடுதலைக்காகத் தன்னுடைய இன்னுயிரை ஈந்தாரோ, அதுபோன்று இயேசு நம் ஒவ்வொருவருடைய மீட்புக்காகவும் தன்னுடைய இன்னுயிரைத் தந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய நற்செய்தி வாசகம், இயேசு தன்னுடைய இன்னுயிரை எப்படி மக்களுக்காகத் தரப்போகிறார் என்பதை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவின்மீது நம்பிக்கைகொள்ளத் தொடங்கிய மக்கள்

இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு முந்தைய பகுதியில், இயேசு தன்னுடைய நண்பரும் மார்த்தா, மரியாவின் உடன்பிறப்புமுமான இலாசரை உயிர்தெழச் செய்கின்றார். இந்நிகழ்வு ஒருபக்கம் மக்களுள் பலரை அவர்மீது நம்பிக்கைகொள்ள வைக்கின்றது. இன்னொரு பக்கம் பரிசேயர்களை அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்ட வைக்கின்றது.

இயேசு, இலாசரை உயிர்த்தெழச் செய்த இந்நிகழ்வை, இயேசு சொல்லும் ஏழை இலாசர், பணக்காரர் உவமையோடு ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்த்தால் இன்னும் ஒருசில உண்மைகள் விளங்கும். குறிப்பாக இயேசு சொல்லும் அவ்வுவமையில் பணக்காரன் பாதாளத்திலிருந்து சொல்கின்ற, "இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்" (லூக் 16:30) என்ற வார்த்தைகள் மிகவும் சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன. அது எப்படியெனில், பணக்காரர், தந்தை ஆபிரகாமிடம் சொல்வது போன்று, இறந்த இலாசர் கல்லறையிலிருந்து உயிரோடு வெளியே வருகின்றார். ஆனால், மக்கள் அவரை ஏற்றுக்கொண்ட அளவுக்கு பரிசேயக் கூட்டம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் இயேசுவைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.

இயேசு இறந்துபோன இலாசரை உயிர்த்தெழச் செய்ததன் வழியாக நல்லதொரு செயலைத்தான் செய்தார். ஆனால், பரிசேயர்கள் மக்களெல்லாரும் அவர்பின்னால் சென்றுவிடுவார்கள்... அப்பொழுது உரோமையர்கள் வந்து தூயகத்தையும் தங்களது இனத்தையும் அழித்துவிடுவார்களே! என்று பேசிக்கொள்வது மிகவும் வியப்பாக இருக்கின்றது.

தலைமைக்குரு கயபா வழியாக இறைவாக்கு

பரிசேயர்கள் மேலே சொன்னவாறு பேசிக்கொண்டதைக் கேட்ட கயபா, "இனம் முழுவதும் அழிந்துபோவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை" என்கின்றார். தலைமைக்குருவான இந்தக் கயபா ஒரு சதுசேயர் என்பது குறிப்பிடத்தக்கது (திப 23:6-10) இவர், யூதர்களுக்காக இயேசு இறக்கப்போவதாக நினைத்துக்கொண்டு சொல்கின்றார். னால், இயேசு எல்லா மக்களுடைய மீட்புக்காகவும் கொலையுற இருக்கின்றார் (எசா 53:8; யோவா 4:42; 10:16) என்பதாக இறைவனின் திருவுளம் இருக்கின்றது.

இதிலுள்ள இன்னொரு உண்மையையும் நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும். அது என்னவெனில், யூத சமூகத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள், இயேசுவின் இறப்பு உட்பட எல்லாமும் தங்களுடைய கையில் அல்லது கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைத்தார்கள். ஆனால், கடவுள்தான் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்பதை அவர்கள் மறந்துபோனார்கள். கடவுளின் கைகளில் நாம் சிறு கருவிகள் என்பதை மறந்துவிடக்கூடாது.

சிந்தனை

'கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்' (யோவா 12:24) என்பார் இயேசு. ஆகவே, நமக்காகத் தன்னுயிர் தரும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
முதல் வாசகம்

இஸ்ரயேலரை ஒரே நாட்டினர் ஆக்குவேன்
.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 21-28

அவர்கள் இனிமேல் இரு நாடுகளாகவோ இரு அரசுகளாகவோ பிரிந்திரார்

நிகழ்வு

ஓர் அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் ஒற்றுமையின் வலிமையை உணர்த்த ஒரு போட்டி வைத்தார்கள். நூறு மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தனர். இரண்டு குழுக்களில் தலா ஐம்பது நபர்கள். அவர்களின் பெயர்களை காற்றடைக்கப்பட்ட பலூனில் எழுதி, இரண்டு தனி அறைகளில் போட்டனர். போட்டி தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள் அவரவர் பெயர் எழுதிய பலூனைத் தேடி எடுக்கவேண்டும். ஒரு பலூனும் வெடித்துவிடாமல் மென்மையாக விடையாட வேண்டும். குழுவில் உள்ள அனைவருமே குறிப்பிட்ட நேரத்திற்குள் அவரவர் பெயர் எழுதப்பட்ட பலூனை எடுத்தால் மட்டுமே அந்தக் குழு வெற்றியடைந்ததாகக் கருதப்படும். குழுவில் உள்ள யாரோ ஒருவர் தனக்குரிய பலூனை எடுக்கத் தவறினாலும் வேறொருவரின் பெயர் எழுதப்பட்ட பலூனை எடுத்திருந்தாலும் அது ஒட்டுமொத்த குழுவுக்கும் தோல்வியாக அமையும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

போட்டி தொடங்கியதும் இரண்டு குழுக்களைச் சார்ந்த மாணவர்களும் அவர்களுக்கான பலூன்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் போனார்கள். கதவு அடக்கப்பட்டது. ஓர் அறையில் இருந்து மட்டும் சத்தம் வர, இன்னொரு அறையில் அமைதி நிலவியது. ஒரு நிமிடத்திற்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. சத்தம் வந்த அறையில் உள்ள அனைவரும் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூனை கையில் ஏந்தியிருந்தனர். அமைதி நிலவிய அறையில் சிலர் மட்டுமே தங்களுக்குரிய பலூனை எடுத்திருந்தனர். பல பலூன்கள் உடைந்திருந்தன. இரண்டு குழுக்களின் தலைவர்களும் உள்ளே என்ன நடந்தது என்பதை விளக்கியபோதுதான் ஒற்றுமையின் வலிமை புரிந்தது.

தோல்வியடைந்த குழுவில் இருந்த மாணவர்கள் அனைவரும் அறைக்குள் நுழைந்ததும், தங்களுடைய பெயருள்ள பலூனைத் தேடி அலைந்தனர். மற்றவர்களின் பெயருள்ள பலூனை எடுத்திருந்தால், உடனே அதைக் கீழே வேகமாகப் போட்டுவிட்டு, வேறொரு பலூனை எடுத்துப் பார்த்தனர். அவசர அவசரமாகப் பலரால் தூக்கி வீசப்பட்டதால், நிறையப் பலூன்கள் உடைபட்டன. சிலருக்கு மட்டுமே அவர்கள் பெயருள்ள பலூன் கைகளுக்கு வந்து சேர்ந்தது.

வெற்றிபெற்ற குழுவினர் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டது தெரிந்தது. அறைக்குள் சென்றதும், ஒவ்வொருவரும் ஆளுக்கொரு பலூனைக் கையில் எடுத்தனர். யாரும் தங்களுடைய பெயர் எழுதப்பட்ட பலூனைத் தேடி அலையவில்லை. மாறாக, தங்கள் கையிலுள்ள பலூனில் எழுதப்பட்ட பெயரை சத்தமாக வாசிக்க, அந்தப் பெயருக்குரியவர் அவருடைய பலூனைப் பெற்றுக்கொண்டனர். இப்படியே ஒவ்வொருவரும் தங்கள் கையில் இருந்த பலூனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே எல்லாரும் பலூன் எடுத்து முடித்திருந்தனர்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒற்றுமையாக இருக்கும்போது அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் எத்தகையவை என்பதை இந்த நிகழ்வானது மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகமும் ஒற்றுமையின் மகத்துவத்தையும் அந்த ஒற்றுமை எப்படி ஏற்படுகின்றது என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

ஓரினமாக இருந்த இஸ்ரயேல் மக்கள் இரண்டு நாடுகளாகப் பிரிந்த கதை

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள், வட நாடு, தென்னாடு என்று இரண்டு நாடுகளாகப் பிரிந்துகிடந்த இஸ்ரயேல் மக்களை ஒரே நாட்டினராக ஆக்குவதாக வாக்குறுதி தருகின்றார்.

இஸ்ரயேல் மக்களை சாலமோன் அரசர் ஆட்சி செய்த காலம்வரைக்கும் அதாவது கி.மு. 931 ஆம் ஆண்டு வரைக்கும் இஸ்ரயேல் நாடானது ஒரே நாடாகத்தான் இருந்தது. அதற்குப் பின்வந்த விவேகமில்லாத அரசர்களால் இஸ்ரயேல் நாடு வடநாடாகவும் தென்னாடாகவும் பிரிந்துபோனது. நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நாட்டில் இருந்த மக்களுக்கு உண்மைக் கடவுளை மறந்து, பிற தெய்வத்தை வழிபடத்தொடங்கினார்கள். அதன் காரணமாக நாடுகடத்தப்பட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஆண்டவராக கடவுள் பிரிந்துகிடந்தவர்களை ஒரே நாட்டினராக ஆக்குவேன் என்று வாக்குறுதி தருகின்றார்.

பிரிந்த கிடந்தவர்களை ஒரே நாட்டினராக கடவுள் எப்படி மாற்றுவார்?

இரண்டு நாடுகளாகப் பிரிந்து கிடந்த இஸ்ரயேல் மக்களை ஒரே நாட்டினராக ஆக்குவேன் என்று கடவுள் சொல்கிறாரே, அது எப்படி என்று கேள்வி எழலாம். அதற்கான பதில் இன்றைய முதல் வாசகத்திலேயே இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில், 'அவர்கள் எல்லாருக்கும் ஒரே அரசன் இருப்பான்' என்ற வரி வருகின்றது. இங்கே வருகின்ற 'அரசன்' என்பவர் வேறு யாருமல்ல, மெசியாவாம் இயேசு கிறிஸ்துவே. இயேசுதான் சிதறுண்டு கிடக்கும் இஸ்ரயேல் மக்களை நம் அனைவரையும் - ஒரே நாட்டினராக மாற்றப்போகிறார். தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் வருகின்ற, "அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாகத் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார்" (எபே 4:12) என்ற வரி இதற்குச் சான்றாக இருக்கின்றது

ஆகையால், இயேசுவின் வழியாக, பிரிந்து கிடந்த மக்களை ஒரே நாட்டினராக மாற்ற இருக்கும் இறைவனின் திருவுளம் நிறைவேற நாமும் அவரோடு இணைந்து செயல்படுவோம்.

சிந்தனை

'நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்' (1கொரி 1:10) என்பார் தூய பவுல். ஆகவே, எல்லாரையும் ஓரினமாக மாற்ற இருக்கும் இறைவனின் திட்டம் நிறைவேற நாமும் அவரோடு சேர்ந்து ஒத்துரைழைப்போம்; ஒரே மனத்தவராக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
நற்செய்தி (யோவா 11:45-57)
ஒரு மனிதன் இறப்பது

இயேசுவின் பணியாலும், போதனையாலும், அரும் அடையாளங்களாலும் மக்கள் ஈர்க்கப்படுவதையும், அதனால் கண்களில் விழுந்த தூசியாக இயேசுவை யூதத் தலைவர்கள் எண்ணிக்கொண்டிருப்பதையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம்.

'இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே!' - இது அவர்களின் அச்சமாக இருக்கிறது.

அப்போது அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்த கயபா,

'உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்துபோவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை' என்கிறார்.

அதாவது, பொதுநலனுக்காக தனிநபர்நலன் பலியிடப்படுவது நல்லது என்கிறார் கயபா.

இதையொட்டிய ஒரு நிகழ்வு மகாபாரதத்திலும் வருகின்றது.

பாண்டவர்களின் தலைவரான யுதிஷ்டிரர் கௌரவர்களால் - துரியோதன் மற்றும் அவருடைய மாமா சகுனி - ஏமாற்றப்பட்டு, சூதாடுவதற்காக திரிடிராஷ்டிரர் முன் அழைத்து வரப்படுகின்றார். சகுனி ஏமாற்றி விளையாடியதால் யுதிஷ்டிரர் ஒவ்வொன்றாக இழந்து வருவதைப் பார்த்து வருத்தப்படுகின்றன விதுரர் உடனடியாக அரசன் குறுக்கிட்டு சூதாட்டத்தை நிறுத்துமாறு கேட்கின்றார். 'ஒட்டுமொத்த அரசின் நலனை மையமாக வைத்து உம் மகனின் தன்னலத்தைக் கடிந்துகொள்ளும்' என்று விதுரர் கேட்கிறார்:

'ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு தனிநபரை இழக்கலாம்.
ஒரு கிராமத்தைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தை இழக்கலாம்.
ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு கிராமத்தை இழக்கலாம்.
ஒரு ஆன்மாவைக் காப்பாற்ற ஒட்டுமொத்த பூமியையே இழக்கலாம்' (மகாபாரதம், இரண்டு, 55.10)

ஆனால், திரிடிராஷ்டிரர் இவ்வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை. சற்று நேரத்தில் தன் மனைவி உள்பட அனைவரையும் அனைத்தையும் சூதாட்டத்தில் கௌரவர்களிடம் இழக்கிறார் தருமர் என்றழைக்கப்படுகின்ற யுதிஷ்டிரர்.

பெரியவற்றிக்காக சிறியது துன்புறலாம் என்பது நாம் காலங்காலமாக எழுதி வைத்துள்ள பாடம்.

ஒரு பெரிய மனிதனுடைய பாவத்திற்கு ஒரு சிறிய கோழிக்குஞ்சு பலியாக்கப்படுவதில்லையா?

இப்படிப்பட்ட புரிதல் ஒரு வகையான குழு சர்வாதிகாரம். இல்லையா?

அதே வேளையில் உயிர்காக்கும் மருத்துவத்தில் இம்முறையே பயன்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த உடல் சர்க்கரை நோயில் அழிவதை விட ஒரு விரலை எடுப்பது அல்லது ஒரு காலை எடுப்பது போன்றது. ஆக, முழுமை முழுமையாக இருக்க அதன் பகுதிகள் துன்புறலாம் என்பது எழுதாத பாடமாக இருக்கிறது.

இங்கே இயேசு பிறருக்காக துன்புறத் தயாராகின்றார்.

ஒட்டுமொத்த குடும்ப நலனுக்காக ஒரு தாய் கஷ்டப்படுவது, தந்தை கஷ்டப்படுவது, பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்வது எல்லாமே ஏறக்குறைய இதே கோட்பாட்டின் நீட்சியே.

இந்த அறநெறி சரியா? என்று கேள்வி கேட்கலாம்.

ஆனால், 'எது தேவையோ அதுவே தருமம்' என்கின்றன புனித நூல்கள்.


Rev. Fr. Yesu Karunanidhi

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!