Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   10  ஏப்ரல் 2019  
                                 தவக்காலம் 4ம் வாரம் புதன் - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
தம் தூதரை அனுப்பி, தம்முடைய ஊழியர்களை மீட்டார்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 3: 14-20, 24-25, 28

அந்நாள்களில் நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, "சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்கவில்லை என்பதும், நான் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவில்லை என்பதும் உண்மைதானா? இப்பொழுதாவது எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்டவுடன், நீங்கள் தாழவீழ்ந்து நான் செய்துவைத்துள்ள சிலையைப் பணிந்து தொழத் தயாராய் இருக்கிறீர்களா? தொழாவிட்டால் அந்த நொடியிலேயே எரிகிற தீச்சூளையில் தூக்கிப் போடப்படுவீர்கள். உங்களை என் கைகளிலிருந்து தப்புவிக்கக்கூடிய தெய்வம் ஒன்று உண்டோ?" என்றான்.

சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள் நெபுகத்னேசர் அரசனை நோக்கிப் பதில்மொழியாக, "இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை. அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர். அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும், அரசரே! நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்; நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும்" என்றார்கள்.

இதைக் கேட்ட நெபுகத்னேசர் அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்மீது வெகுண்டெழ, அவனது முகம் சினத்தால் சிவந்தது. வழக்கத்தைவிட ஏழு மடங்கு மிகுதியாகத் தீச்சூளையைச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான். பின்னர் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைக் கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போடுமாறு தன் படைவீரர்களுள் வலியவர் சிலருக்குக் கட்டளையிட்டான்.

அப்பொழுது நெபுகத்னேசர் அரசன் வியப்புற்று விரைந்தெழுந்து தன் அமைச்சரை நோக்கி, "மூன்று பேரைத்தானே கட்டி நெருப்பினுள் எறிந்தோம்!" என்றான். "ஆம் அரசரே" என்று அவர்கள் விடையளித்தனர்.

அதற்கு அவன், "கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுகிறதை நான் காண்கிறேன்! அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வ மகன் ஒருவன் போல் தோன்றுகிறானே!" என்றான்.

அப்பொழுது நெபுகத்னேசர், "சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுள் புகழப்படுவாராக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் பணிந்து தொழ மறுத்து, அரசனது கட்டளையையும் பொருட்படுத்தாமல், அவர்மேல் நம்பிக்கை வைத்துத் தங்கள் உடலைக் கையளித்த அவருடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டருளினார்" என்றான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (தானி (இ) 1: 29. 30-31. 32-33 (பல்லவி: 34)
=================================================================================

பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்.

29 எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக; என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர். மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. பல்லவி

30 உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர். 31 கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக; நீர் என்றென்றும் புகழப்படவும் ஏத்திப் போற்றப்படவும் தகுதியுள்ளவர். பல்லவி

32 உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக; என்றென்றும் நீர் புகழ்ந்தேத்தப் பெறுவீராக, ஏத்திப் போற்றப் பெறுவீராக. 33 உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; என்றென்றும் நீர் பாடல் பெறவும், மாட்சி அடையவும் தகுதியுள்ளவர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 8: 15

சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மனஉறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர்.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால், நீங்கள் உண்மையிலேயே விடுதலை பெற்றவர்கள்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 31-42

அக்காலத்தில் இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, "என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்" என்றார்.

யூதர்கள் அவரைப் பார்த்து, " உங்களுக்கு விடுதலை கிடைக்கும்' என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!" என்றார்கள்.

அதற்கு இயேசு, "பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு. மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள். நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்" என்றார்.

அவர்கள் அவரைப் பார்த்து, "ஆபிரகாமே எங்கள் தந்தை" என்றார்கள்.

இயேசு அவர்களிடம், "நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள். ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே! நீங்கள் உங்கள் தந்தையைப்போலச் செயல்படுகிறீர்கள்" என்றார்.

அவர்கள், "நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர்" என்றார்கள்.

இயேசு அவர்களிடம் கூறியது: "கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 தானியேல் 3: 14-20, 24-25, 28

நம்பினோரைக் கைவிடாத இறைவன்

நிகழ்வு

ஒருசமயம் மிகச்சிறந்த மறைபோதகரான ஜார்ஜ் முல்லர் க்யூபக் என்ற நகரில் உள்ள ஓர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று 'இறைவேண்டலின் வல்லமையைக்' குறித்துப் போதிப்பதற்காக கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் பயணம்செய்துகொண்டிருந்த கப்பலை மூடுபனியானது சூழ்ந்துகொள்ள, கப்பலை ஓட்டிச்சென்ற மாலுமி செய்வதறியாது திகைத்தார்.

அவர் ஜார்ஜ் முல்லரிடம் வந்து, "ஐயா! இப்போது இருக்கின்ற நிலைமையைப் பார்த்தால், வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் நீங்கள் க்யூபக் நகருக்குச் செல்வது மிகவும் கடினம்" என்றார். அதற்கு ஜார்ஜ் முல்லர் அவரிடம், "இந்த மூடுபனி விலகுவதற்கு என்னிடம் ஒரு வழி இருக்கிறது" என்றார். "அது என்ன வழி?" என்று மாலுமி கேட்க, ஜார்ஜ் முல்லர் அவரிடம், "நம்பிக்கையுடன் கூடிய இறைவேண்டல்தான் அந்த வழி" என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டுச் சிரித்த மாலுமி, "இறைவேண்டலால் எப்படி மூடுபனி விலகும்?" என்றார். ஜார்ஜ் முல்லரோ அவரிடம், "இதுவரைக்கும் எத்தனையோ காரியங்களை என்னுடைய நம்பிக்கையுடன் கூடிய இறைவேண்டலால் சாதித்துள்ளேன். இப்பொழுதும் நான் செய்யும் இறைவேண்டலால், இந்த மூடுபனி விலகி, வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் நான் க்யூபக் நகருக்குச் செல்வேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது" என்று சொல்லிவிட்டு முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டத் தொடங்கினார்.

அவர் இவ்வாறு முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டத் தொடங்கிய ஒருசில மணிநேரத்திற்குள் அவர் பயணம்செய்துகொண்டிருந்த கப்பலை மூடியிடுந்த மூடுபனியானது விலகியது. இதைப் பார்த்துவிட்டு அந்தக் கப்பலை ஓட்டி வந்த மாலுமி உட்பட, அங்கிருந்த எல்லாரும் வியந்துபோய் நின்றார்கள். இதற்குப் பின்பு கப்பல் மாலுமி கப்பலைச் சீராக ஓட்ட, ஜார்ஜ் முல்லர் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாக க்யூபக் நகருக்குச் சென்று, இறைவேண்டலின் வல்லமையைக் குறித்து மக்களுக்குப் போதித்தார்.

இறைவனிடம் நம்பிக்கையோடு மன்றாடுகின்றபோது அல்லது இறைவனை நம்பி வாழ்கின்ற ஒருவரை, அவர் ஒருபோதும் கைவிட்டுவிடுவதில்லை என்னும் உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல்வாசகமும் இறைவனை நம்பி வாழ்கின்றவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நெபுகத்னேசர் தெய்வங்களை வணங்கச் சொல்தலும் மூன்று இளைஞர்கள் தங்களுடைய நம்பிக்கையில் உறுதியாக இருத்தலும்

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில் நெபுகத்னேசர் என்ற மன்னன் தன்னுடைய தெய்வத்தையும் பொற்சிலையையும் வணங்குமாறு ஆணையிடுகிறான். அவனுடைய ஆணைக்குப் பணிந்து எல்லாரும் அவனுடைய தெய்வத்தையும் பொற்சிலையையும் வணங்கிவிட்டுச் செல்ல, சாத்ராக்கு, மேசாக்கு, ஆபத்நெகோ ஆகிய மூன்று யூத இளைஞர்கள் மட்டும் அவற்றை வணங்க முடியாது என்று தங்களுடைய நம்பிக்கையில் கொள்கையில் - மிக உறுதியாக இருக்கிறார்கள். இதைப் பார்த்துக் கடுஞ்சினம் கொள்ளும் மன்னன் அவர்களை எரிகின்ற தீச்சூளைக்குள் தள்ளிவிடுவதாக அவர்களை மிரட்டுகிறான். அப்போதும் அவர்கள், "நாங்கள் வழிபடுகின்ற கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர்... ஒருவேளை அவருக்கு மனமில்லாமல் போனாலும், அரசரே! நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்" என்று உறுதியாக இருக்கினார்கள்.

இதனால் இன்னும் சினமுற்ற மன்னன், அவர்களைத் எரிகின்ற தீச்சூளைக்குள் தூக்கிப் போடுகிறான்; மட்டுமல்லாமல் தீயை ஏழு மடங்கு உயர்த்துகின்றான். மன்னன் நினைத்தான், அந்த மூன்று இளைஞர்களும் வேதனையைத் தாங்க முடியாமல் தன்னுடைய வழிக்கு வருவார்கள் என்று. ஆனால், அவன் நினைத்ததற்கும் மாறாக, அவர்கள் தங்களுடைய நம்பிக்கையிலிருந்து பிறழாமல் மனவுறுதியோடு இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களோடு தெய்வ மகனைப் போன்று இன்னொருவரும் இருக்கக் கண்டு, அவன் அம்மூன்று பேரையும் வெளியே எடுத்துகின்றான். இறுதியில் 'இஸ்ரயேலின் கடவுளே உண்மையான கடவுள்' என்று நம்பத் தொடங்குகின்றான்.

இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோருக்கு மீட்பு உண்டு

சாத்ராக்கு, மேசாக்கு, ஆபத்நெகோ என்ற மூன்று இளைஞர்களும் தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, தாங்கள் வேற்று தெய்வங்களை வழிபடுவதில்லை என்று தங்களுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார்கள். அதனால் இறைவன் அவர்களைத் தீச்சூளையினின்று காப்பாற்றுகின்றார்.

இந்நிகழ்வு, ஆண்டவராகிய கடவுள் தங்களை மறந்துவிட்டார் என்று நினைத்திருந்த இஸ்ரயேல் மக்களுக்கு, அவர் தங்களைக் கைவிட்டுவிடவில்லை என்ற நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது. மேலும் யாராரெல்லாம் ஆண்டவரை மதித்து வாழ்கின்றார்களோ அவர்களை ஆண்டவர் மதிக்கின்றார் (1 சாமு 2:30) என்ற இறைவார்த்தையை நிரூபிப்பதாக இருக்கின்றது. சாத்ராக்கு, மேசாக்கு, ஆபத்நெகோ என்ற மூன்று இளைஞர்களும் இறைவன் தங்களை தீச்சூளையினின்று காப்பாற்றாவிட்டாலும் பரவில்லை, வேற்று தெய்வத்தை ஒருபோதும் வழிபடுவதில்லை என்று கடவுளிடம் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். நாமும் இறைவன் நமக்கு இதைச் செய்தால்தான் அவருக்கு நம்பிக்கைக்குரியவராக இருப்பேன் என்று இல்லாமல், எல்லாச் சூழ்நிலையிலும் அவருக்கு நம்பிக்கைக்குரியவராக இருக்கவேண்டும். அதற்கு இந்த மூன்று இளைஞர்களும் முன்னோடி.

சிந்தனை

'இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்' (திவெ 2:10) என்பார் ஆண்டவர். ஆகவே, நாமும் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபத்நெகோ ஆகிய மூன்று இளைஞர்களைப் போன்று இறுதிவரைக்கும் இறைவனிடம் நம்பிக்கையோடு இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்.

ரவி என்ற சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுடைய பெற்றோர்கள் அவன்மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார்கள். அவன் நேரியவழியில் நடக்கவேண்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக்கூடாது என்றும் அறிவுறுத்தியே அவனது பெற்றோர்கள் வளர்த்து வந்தார்கள். அவனும் தன்னுடைய பெற்றோருடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து, நேரிய வழியில் நடந்து வந்தான்.

ஒருநாள் அவன் தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது புதியவர் ஒருவர் வந்தார். அவர் சிறுவன் ரவியிடம், "நான் உன்னுடைய அப்பாவைப் பார்ப்பதற்காக வங்கியிலிருந்து வந்திருக்கிறேன். ஒருவேளை வீட்டில் உன்னுடைய அப்பா இருந்தால், நான் வந்திருப்பதாகச் சொல்" என்றார். சிறுவன் அவரை அருகே இருந்த மரப்பெஞ்சில் அமரவைத்துவிட்டு வீட்டுக்குள்ளே போனான்.

வீட்டுக்குள்ளே அவனுடைய தந்தை கட்டிலில் படுத்திருந்தார். அவரிடம் சென்று சிறுவன் ரவி வங்கியிலிருந்து ஒருவர் உங்களைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னான்.

அதைக் கேட்ட அவனுடைய தந்தை, தான் வங்கிக்கு கொடுக்கவேண்டிய நிலுவைப் பணத்தைத் திரும்பப் பெறத்தான் வங்கி மேலாளர் வந்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டு, தன்னுடைய மகனிடம், "அப்பா வீட்டில் இல்லை எனச் சொல்" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

இந்நாள்வரைக்கும் எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக்கூடாது என்று வளர்த்த தனது தந்தையே, இன்றைக்கு பொய்சொல்லச் சொல்கிறாரே, இது என்ன?" என்று குழம்பியவரே அவன், வெளியே நின்றுகொண்டிருந்த வங்கி மேலாளரிடம் சென்றான். அவன் அவரிடத்தில் சென்று, "ஐயா! அப்பா வீட்டில் இல்லையாம், என்று என்னுடைய அப்பா சொல்லச் சொன்னார்" என்றான்.

இதைக் கேட்ட வங்கி மேலாளர் சிறுவனின் தந்தையின்மீது வருத்தத்தோடு சென்றாலும், உண்மை பேசியதற்காக அவனை வெகுவாகப் பாராட்டிச் சென்றார்.

"எக்காரணத்தைக் கொண்டும் பொய்பேசாது, உண்மை பேசவேண்டும்" என்பது வாழ்க்கை நெறியாக இருந்தாலும், அதனை எத்தனை பேர் முழுமையாகக் கடைபிடிக்கிறார்கள் என்பதை மேலே சொல்லப்பட்ட கதையானது நமக்கு நன்றாக மண்டையில் உரைக்கும்படியாகச் சொல்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு "உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்" என்கிறார். ஆம், பொய் பேசுகிறவன்தான் தினமும் அஞ்சி அஞ்சிச் சாகவேண்டும். ஆனால் உண்மை பேசுபவன் அப்படி அஞ்சச் தேவையில்லை. வேண்டுமானால் உண்மை பேசியதற்காக ஒருசில எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடலாம். ஆனால் உண்மைதான் வெல்லும். அதனைத் தான் இயேசு, "உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்" என்கிறார்.

இயேசு இதனைப் போதித்ததோடு நின்றுவிடாமல், தன்னுடைய வாழ்வில் செயல்படுத்தியும் காட்டுகிறார். யோவான் நற்செய்தி 18ஆம் அதிகாரம் 37ஆம் வசனத்தில் பிலாத்துவுக்கு பதிலாகக் இயேசு கூறுவார், "உண்மையை எடுத்துரைப்பதே என்னுடைய பணி" என்று. ஆகவே இயேசு உண்மையின் வழியில் நடந்து, உண்மைக்குச் சான்று பகர்ந்து வாழ்ந்தார் என்பதை இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.

இயேசுவின் சீடர்களாகிய நாம் உண்மையின் வழியில் நடந்து இயேசுவுக்கு சான்று பகர்கிறோமா? என்று சிந்தித்தப் பார்க்கவேண்டும். நீதிமொழிகள் புத்தகம் 12:19 ல் வாசிக்கின்றோம், "ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும், பொய்யுரைப்போரின் வாழ்வோ இமைப்பொழுதே" என்று.

ஆகவே பொய்க்கு அடிமையாகாமல், உண்மையின் வழியின் நடப்போம். உண்மை ஒருநாள் நம்மை விடுவிக்கும், இறைவனின் அருளைப் பெற்றுத்தரும்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!