Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   09  ஏப்ரல் 2019  
                       தவக்காலம் 5ம் வாரம் செவ்வாய் - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9

அந்நாள்களில் ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேலர் 'செங்கடல் சாலை' வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர்.

மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: "இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது" என்றனர். உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர்.

அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, "நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ளும்" என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார்.

அப்போது ஆண்டவர் மோசேயிடம், "கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்" என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:102: 1-2. 15-17. 18-20 (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்!

1 ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்! என் அபயக் குரல் உம்மிடம் வருவதாக! 2 நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது முகத்தை மறைக்காதீர்! உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்! நான் மன்றாடும் நாளில் விரைவாய் எனக்குப் பதிலளியும்! பல்லவி

15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.
16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.
17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார்.
-பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.
19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்.
20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கென குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார்.
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
விதை கடவுளின் வார்த்தை; விதைப்பவரோ கிறிஸ்து; இவரைக் கண்டுகொள்கிற அனைவரும் என்றென்றும் நிலைத்திருப்பர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் மானிடமகனை உயர்த்தியபின்பு, இருக்கிறவர் நானே' என்பதை அறிந்துகொள்வீர்கள்.

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (8: 21-30)

அக்காலத்தில் இயேசு பரிசேயர்களை நோக்கி, "நான் போனபின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்" என்றார். யூதர்கள், " நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது' என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரோ?" என்று பேசிக்கொண்டார்கள்.

இயேசு அவர்களிடம், "நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். 'இருக்கிறவர் நானே' என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்" என்றார். அவர்கள், "நீர் யார்?" என்று அவரிடம் கேட்டார்கள்.

அவர், "நான் யார் என்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன். உங்களைப் பற்றிப் பேசுவதற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு. ஆனால் என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்" என்றார். தந்தையைப் பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.

இயேசு அவர்களிடம், "நீங்கள் மானிடமகனை உயர்த்தியபின்பு, 'இருக்கிறவர் நானே'; நானாக எதையும் செய்வதில்லை; மாறாகத் தந்தை கற்றுத்தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள். என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்" என்றார்.

அவர் இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

அவர் யார் மீது அன்புகூர்கிறாரோ அவர்களை கண்டிக்கின்றார், தண்டிக்கின்றார்.

கண்டித்து திருந்தாதவன், தண்டிக்கப்படுகின்றான்.

பாவங்கள் பெருகும் போது, பார்த்துக் கொண்டிராத கடவுள், பலரின் மூலம் அவர்களை திருந்த அழைக்கின்றார். திருந்த மறுக்கும் போது, கொள்ளி வாய் பாம்புகளை அனுப்பி கடிக்க செய்கின்றார். கடியுண்டவர்கள், கதறியழுது, மனம் வருந்தி, திருந்த முன்வரும் போது, தண்டித்தவரே, குணமாக்கவும் செய்கின்றார்.

கண்டிப்பு வரை காத்திருப்பதா? இல்லை தண்டிப்பினையும் பெற்றுத் தான் திருந்தனுமா?

பாவத்தை பெருக்காது, பாவத்திலேயே உழலாது, மற்றவர்களையும் பாவத்திற்கு தூண்டாது இருக்க தீர்மானிப்போம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9

இஸ்ரயேலரின் குற்றமும் அதை மன்னித்த இறைவனும்

நிகழ்வு

முன்பொரு காலத்தில் வெலிங்டனைத் தலைநகராகக் கொண்டு, நியூசிலாந்தை அரசர் ஒருவர் ஆண்டுவந்தார். அவரிடம் மிகத் திறமையானதொரு படை இருந்தது. அந்தப் படையில் படைவீரன் ஒருவன் இருந்தான். அவன் அடிக்கடி படையிலிருந்து தப்பியோடி, ஒளிந்துகொண்டிருந்தான். அரசரும் அவனை ஆட்களை வைத்துத் தூக்கிவந்து மீண்டுமாகப் படையில் சேர்ந்து வந்தார். அவனோ அரசர் கொடுத்த வாய்ப்புகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு, மீண்டும் மீண்டுமாகப் படையிலிருந்து தப்பியோடிதால், அரசர் ஒருகட்டத்தில் பொறுமையிழந்து, அவனுக்கு மரணதண்டனை விதித்தத் தீர்மானித்தார்.

அதற்கு முன்னதாக, அந்தப் படைவீரனுக்குப் பொறுப்பாக இருந்த படைத்தளபதியிடம், "இவனை என்ன செய்தால் திருந்துவான்?" என்று கேட்டார். அதற்குப் படைத்தளபதி, "இந்தப் படைவீரனை வழிக்குக் கொண்டுவர என்னவெல்லாமோ முயற்சி செய்து பார்த்துவிட்டீர்கள்... இறுதியாக இவனை மன்னித்துப் பாருங்கள்... என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்" என்றார். படைத்தளபதி சொன்னதுபோன்று அரசரும் படைவீரனை மனதார மன்னித்தார். இதற்குப் பின்பு அவன் படையிலிருந்து தப்பித்து ஓடவில்லை. மாறாக, அரசருக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவனாக இருந்து, நாட்டிற்காக எதையும் இழக்கத் துணிந்தான்.

தவறுசெய்த படைவீரனை மன்னித்து, நல்வழிக்குக் கொண்டுவந்த நியூசிலாந்து நாட்டு அரசரைப் போன்று, ஆண்டவராக கடவுளும் இஸ்ரயேல் மக்கள் தவறுசெய்தபோது மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார். இன்றைய முதல் வாசகம் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு எதிராகச் செய்த பாவத்தையும் அதை ஆண்டவர் எப்படி மன்னித்தார் என்பதையும் எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராகச் செய்த பாவம்

எண்ணிக்கை நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் ஏதோம் நாட்டைச் சுற்றிப்போவதற்காக ஓர் என்ற மலையிலிருந்து செங்கடல் சாலை வழியாகப் பயணப்படும்போது, பொறுமையிழந்து கடவுளுக்கு எதிராகவும் மோசேக்கு எதிராகவும் முறையிடுகிறார்கள். அவர்கள் கடவுளுக்கு எதிராக முறையிட்ட விடயம் நமது கவனத்திற்கு உரியது.

இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக, "உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்ப உணவு வெறுத்துப் போய்விட்டதாக" முறையிடுகிறார்கள். இஸ்ரயேல் மக்கள் தாங்கள் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்குத்தான் செல்கின்றோமே ஒழிய, சாப்பிடுவதற்கு அல்ல என்பதை உணராதவர்களாய் கடவுளுக்கு எதிராக முறையிடுகிறார்கள். கடவுள் ஒன்றும் இஸ்ரயேல் மக்களை பட்டினி போடவில்லை. மாறாக, அவர்களுக்கு "வானதூதரின் உணவு" (திபா 78: 25) எனப்படும் மன்னாவைக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல், காடைகளையும் அவர்களுக்கு உணவாகக் கொடுத்தார். அவற்றின் மகத்துவத்தை உணராமல் அவர்கள், "இவ்வுணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது" என்கின்றார்கள். இதன்மூலம் அவர்கள், "மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்வான்" (மத் 4:4) என்ற கடவுளின் கட்டளையை நம்ப மறுத்து, அவருக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். இதனால் கடவுள் அவர்கள் மத்தியில் கொள்ளிவாய்ப் பாம்புகளை அனுப்பி, அவர்களைச் சாகடிக்கின்றார்.

தவறு செய்தவர்களை மன்னித்த இறைவன்

இஸ்ரயேல் மக்கள் தன்மீது நம்பிக்கை வைக்காமல் முறையிட்டதால், கடவுள் அவர்களுக்கு மத்தியில் கொள்ளிவாய்ப் பாம்புகளை அனுப்பி அவர்களைச் சாகடிக்க, அவர்கள் தங்களுடைய தவற்றை உணர்ந்து, "நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ளும்" என்று மோசேயிடம் கெஞ்சிக் கேட்கிறார்கள். இதைப் பற்றி மோசே ஆண்டவரிடம் எடுத்துச் சொல்ல, அவர் அவரிடம், "(வெண்கலத்தால்) கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைத்துக் கொள்வான்" என்கின்றார்.

இங்கு தவறு செய்த இஸ்ரயேல் மக்களை இறைவன் வழக்கமான முறையில் மன்னிக்கவில்லை. மாறாக, வெண்கலத்தாலான கொள்ளிவாய்ப் பாம்பைப் செய்யச் சொல்லி, அதை பார்க்கின்ற யாவரும் பிழைப்பான் என்று சொல்லி மன்னிக்கிறார் அல்லது அவர்களுக்கு வாழ்வளிக்கின்றார். உயர்த்தப்பட்ட கொள்ளிவாய்ப் பாம்பு என்பதை சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் (யோவா 3:14) கொள்ளிவாய்ப் பாம்பை பார்த்தவர்கள் உயிர்பிழைத்ததைப் போன்று ஆண்டவரை நம்பிக்கையோடு பார்க்கிறவர்கள் உயிர்பிழைப்பார்கள் (எசா 45:22; எபி 2: 8-19) ஏனெனில் பார்வையினால் (தொநூ 3:6) அது கொடுத்த மயக்கத்தினால்தான் மனிதன் முதலில் பாவம் செய்தான். எனவே, நம்பிக்கையோடு இயேசுவைப் பார்க்கும்போது மட்டுமே ஒருவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, வாழ்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது உறுதி.

சிந்தனை

"ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவார்" (உரோ 10: 13) என்கிறது இறைவார்த்தை. இஸ்ரயேல் மக்கள் தவறுசெய்தபோது ஆண்டவரின் திருப்பெயரைக் கூவி அழைத்து, மன்னிப்புப் பெற்று வாழ்வு பெற்றார்கள். நாமும் அவ்வாறு ஆண்டவரின் திருப்பெயரைச் சொல்லி மன்றாடினால் மீட்புப் பெறுவது உறுதி.

ஆகவே, நம்முடைய குற்றங்களை உணர்ந்து, ஆண்டவரின் திருப்பெயரைச் சொல்லி மன்றாடி மன்னிப்பையும் வாழ்வையும் இறையருளையும் நிறைவாய்ப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
கடவுள் கொடுத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துவோம்

ஒரு சமயம் மாவீரர் அலெக்ஸ்சாண்டர் ஏதென்ஸ் நகரில் இருந்த லிசிபசின் (Lysipus) சிற்பக் கூடத்திற்குள் நுழைந்தார். அவருடைய சிற்பக்கூடம் முழுவதும் பல்வேறு சிற்பங்களால் நிறைந்து இருந்தது.

சிற்பக் கூடத்தில் இருந்த எல்லாச் சிற்பங்களும் திறந்த நிலையில் இருக்க, ஒரே ஒரு சிற்பம் மட்டும் முகம் மூடப்பட்டு இருந்தது. உடனே அவர் லிசிபசிடம், "இந்த சிற்பத்தின் பெயர் என்ன?" என்று கேட்டார். அதற்கு அவர், "இதன் பெயர் வாய்ப்பு (Oppertunity)" என்றார். "எதற்காக இதனுடைய முகம் மூடப்பட்டு இருக்கின்றது" என்று அரசன் கேட்க, அவர், "கடந்து போகின்ற வாய்ப்புகளை எல்லாராலும் கண்டுகொள்ள முடிவதில்லை, ஒருசிலரால் மட்டுமே அதனைக் கண்டுகொள்ள முடியும். அதனால்தான் அதன் முகம் மூடப்பட்டு இருக்கின்றது" என்றார்.

தொடந்து அரசர் அவரிடத்தில் "இந்த சிற்பத்தில் இறகுகள் தோளில் இல்லாமல், காலில் இருக்கிறது?" என்று கேட்டார். அதற்கு அவர், "வாய்ப்புகள் எப்போதும் அடிக்கடி வராது, அது ஒரு முறை நம்மைக் கடந்துவிட்டால் மீண்டுமாக திரும்ப வராது (Lost Oppertunity does not come) என்பதைக் குறித்துக் காட்டவே அதனுடைய கால்களில் இறகுகள் இருக்கின்றன" என்றார். எல்லாவற்றையும் கேட்டு தெரிந்துகொண்ட அலெக்ஸ்சாண்டர், "சிற்பம் மிகவும் அற்புதமாக இருக்கின்றது" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

வாழ்க்கையில் நமக்கு வருகின்ற வாய்ப்புகள் திரும்ப வருவதில்லை என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பரிசேயர்களிடத்தில், "நான் போனபின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள், நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்" என்கிறார். இயேசு சொன்ன வார்த்தைகளில் இருக்கும் உண்மைப் பொருளை நாம் உணர்ந்து கொள்வோம். இயேசு இந்த உலகத்திற்கு வாழ்வை அதுவும் நிறைவாழ்வைக் கொடுக்க வந்தார் (யோவா 10:10), ஆனால் யூதர்களோ அவரைப் புரிந்து கொள்ளாமலும் ஏற்றுக்கொள்ளாமலும் அவரைப் புறக்கணித்தார்கள் (யோவா 1:11). இவ்வாறு அவர்கள் மீட்புப் பெறுவதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பினை இழந்து போனார்கள். அதனால்தான் இயேசு அவர்களிடத்தில், நான் போனபின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள்" என்கிறார்.

பல நேரங்களில் நாமும்கூட யூதர்களைப் போன்று, கடவுள் நம்மைத் தேடி வருவதை உணராமலும், அவர் நமக்குக் கொடுக்கும் வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தாமல் இருக்கின்றோம். வேதனை என்னவென்றால் ஒருமுறை கிடைந்த வாய்ப்பு மறுமுறை கிடைக்காது. ஆகையால், நாம் கடவுள் நமக்குக் கொடுக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வோம்.

திருவெளிப்பாடு நூல் 3:20 ல் வாசிக்கின்றோம், "நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்" என்று. ஆம், கடவுள் நம்மைத் தேடி வருகின்றபோது, அவர் கொடுக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தும்போது நம்முடைய வாழ்வில் நாம் எல்லா நலன்களையும் பெறுவது உறுதி. அதை விடுத்து, அவர் கொடுத்த வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட்டோம் என்றால் அதனால்தான் நாம்தான் மிகப்பெரிய இழப்புகளைச் சிந்திப்போம்.

நற்செய்தியில் இயேசு, "நான் போனபின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள்" என்று சொல்கிறபோது ஆண்டவர் இயேசு இந்த உலகத்தில் வாழும் காலம் மிகக் குறுகியது. ஆகையால் இந்தக் குறுகிய காலத்திற்குள் கடவுளை உணர்ந்துகொண்டு அவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தோமென்றால் அவரிடமிருந்து ஆசியைப் பெறுவோம், அதை விடுத்து, அவரை உணராது இருந்தால் தண்டனைத் தீர்ப்பைப் பெறுவோம் என்று விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள். இயேசு வாழ்ந்த காலத்தில் அவரை சாதாரண மக்களும், ஏழைகளும், பாவிகளுமே கண்டுகொண்டார்கள். அதனால் அவர்கள் இயேசுவிடமிருந்து வாழ்வினைக் கொடையாகப் பெற்றுக்கொண்டார்கள். மாறாக பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் அவரைப் புறக்கணித்தார்கள். அதனால்தான் அவர்களிடமிருந்து (பரிசேயர்கள்) வாழ்வானது அப்புறப்படுத்தப்பட்டு, அது பாவிகளுக்கும், புறவினத்தாருக்கும் கொடுக்கப்பட்டது (மத் 22:41).

எனவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், கடவுள் நம்மை ஒவ்வொருநாளும் தேடி வருவதை உணர்ந்துகொண்டு, அவர் தரும் வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வை கொடையாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
தந்தை (கடவுள்) என்னோடு இருக்கிறார்; நான் தனியாளாக இல்லை.

ஓர் ஊரில் இறையடியார் ஒருவர் இருந்தார். அவரிடம் ஊரில் இருந்த மக்கள் அனைவரும் தங்களுடைய பிரச்சனைகளை, குறைகளை எடுத்திச்சொல்லி குறை நீங்கப்பெற்று, மன அமைதியோடு வீடு திரும்பினார்கள். யாராவது வாழ்க்கையில் விரக்தியோடு இருந்தாலும், அவர்கள் இறையடியாரோடு சில மணிநேரம் பேசினால்கூட, அதன்பிறகு அவர்கள் தங்களுடைய வாழ்வில் மேம்பட்டவர்களாய் விளங்கினார்கள்.

இவற்றையெல்லாம் நீண்டநாட்களாகக் கூர்ந்து கவனித்துவந்த ஒருவர் இறையடியாரிடம் சென்று, "எவ்வளவோ மனிதர்கள் உம்மால் நலமான வாழ்வு பெறுகிறார்களே, இதன் இரகசியம் என்ன?" என்று கேட்டார்.

அதற்கு அவர் தன்னுடைய சிறுவயதில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார். அந்த நிகழ்வானது:

இறையடியாரான அவர் சிறு வயதிலே எல்லாவற்றையும், ஏன் தான் அதிகமாக அன்பு செய்த தாயையும் விட்டுவிட்டு, துறவற வாழ்வு மேற்க்கொள்ள நினைத்தார். அப்போது அவருடைய தாயார் அவரிடம், "நீ துறவறம் மேற்கொள்வதற்கு முன்பாக எனக்கு ஒரு சத்தியம் செய்துகொடுத்துவிட்டுச் செல்" என்றார். உடனே சிறுவன் (இறையடியார்), "அம்மா! முதலில் நான் உங்களுக்கு சத்தியம் செய்துகொடுப்பதற்கு முன்பாக, என்ன காரியத்திற்காக சத்தியம் செய்கிறேன் என்று சொல்லிவிடுங்கள். அதன்பிறகு நான் சத்தியம் செய்கிறேன்" என்றான். ஆனால் தாயோ, "சத்தியம் செய்தால்தான் அது என்ன காரியம் என்று சொல்வேன்" என்று உறுதியாக இருந்ததால், சிறுவன் இறுதியில் சத்தியம் செய்தான்.

அப்போது தாய் அவனிடம், "மகனே! நீ ஒவ்வொரு நாளையும் தொடங்குவதற்கு முன்பாகவும் இறைவனிடம் ஜெபித்துவிட்டுத் தொடங்கு" என்றார்.

அன்று சொன்ன தாயின் வார்த்தைக்கு இணங்கி இன்றுவரையிலும் நான் ஒவ்வொரு நாளையும் இறைவனிடம் ஜெபித்துவிட்டுதான் தொடங்குகிறேன், அதனால் இறைவன் என்னோடு இருக்கிறார், எனக்கு எல்லா வெற்றியையும் தருகிறார். இதுதான் எனது வெற்றிக்கான இரகசியம்" என்றார்.

ஜெபத்தின் வழியாக இறைவன் எப்போதும் நம் உடன் இருக்கிறார், நமக்கு வெற்றியைத் தருகிறார் என்பதை இந்தக் கதையானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை" என்கிறார். விண்ணகத்திலிருந்து மண்ணகத்திற்கு வந்த இயேசு, விண்ணகத்தையே மண்ணகத்தில் உருவாக்க நினைத்தார். அதற்காக இயேசு கொடுத்த விலை அதிகம், சந்தித்த எதிர்ப்புகளும், சவால்களும் அதிகம். அத்தகைய தருணங்களில் தந்தை இறைவன் தன்னுடன் இருக்கிறார் என்பதை இயேசு உணர்ந்திருந்தார். அந்த அப்பா அனுபவத்தால்தான் இயேசுவால் எல்லா வல்ல செயல்களையும் செய்ய முடிந்தது.

இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் இயேசு பெற்ற தந்தை அனுபவத்தை நாமும் பெற்று, வாழ்வில் வரக்கூடிய இடர்களையும், சவால்களையும் துணிந்து எதிர்கொள்ளவேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பமாக இருக்கின்றது. ஆகவே நாம் தந்தை கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உறுதியான் நம்பிக்கையோடு வாழவோம்..

திருப்பாடல் 118: 6 ல் வாசிக்கின்றோம், "ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்சவேண்டும்; மனிதர் எனக்கெதிராக என்ன செய்ய முடியும்" என்று.

எனவே வாழ்வின் எல்லாக் கட்டத்திலும் இறைவன் நமக்குத் துணியாக இருக்கின்றார், அவர் என்றும் நம்மைக் காக்கின்றார் என்ற நம்பிக்கையோடு அவருக்கு உகந்த மக்களாக வாழ்வோம். இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
கடவுள் கொடுத்த வாய்ப்பை நழுவவிட்டவர்கள் யார்?

நிகழ்வு

ஒரு கணிணி நிறுவனத்தில் தரை துடைக்கும் பணியாளராக ஒருவர் பணிபுரிந்து வந்தார். ஒருநாள் அந்த நிறுவனத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர் அங்கு பணிபுரியும் எல்லாருடைய மின்னஞ்சல் முகவரியையும் கேட்டார். கணிணி குறித்து எதுவும் தெரியாத அந்தத் தரை துடைக்கும் பணியாளருக்கோ மின்னஞ்சல் முகவரி கிடையாது. இதை அவர் மேலாளரிடம் தெரிவித்தார். உடனே மேலாளர் அவரிடம், "கணிணி நிறுவனத்தில் வேலை பார்ப்பவருக்கு மின்னஞ்சல் முகவரி இல்லை என்றால் எப்படி?" எனக் கூறி அந்தப் பணியாளரை மேலாளர் வேலையில் இருந்து நீக்கினார்.

வேலை இல்லை என்றதும், அந்த மனிதருக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. தன் சேமிப்பில் இருந்த 1,000 உரூபாயைக் கொண்டு சந்தையில், வெங்காயம் வாங்கினார். அதைக் குடியிருப்புப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று, கூவிக்கூவி விற்றார். சில ஆண்டுகளில் பெரிய வெங்காய வணிகரானார்.

இந்நிலையில் ஒரு வங்கியில் கணக்கு தொடங்குவது தொடர்பாக வங்கி ஊழியர் அந்த வணிகரைச் சந்தித்தார். கணக்கு தொடங்குவதற்கான விவரங்களைப் படிவத்தில் பூர்த்தி செய்துவிட்டு, மின்னஞ்சல் முகவரியை எழுதுவதற்காக முகவரியைக் கேட்டார். அதற்கு அந்த மனிதர், "எனக்குக் கணிணி குறித்து எதுவும் தெரியாது. எனவே, மின்னஞ்சல் முகவரி இல்லை" என்றார். உடனே அந்த வங்கி ஊழியர், "மின்னஞ்சல் முகவரி இல்லாமலே இந்தளவுக்கு முன்னேறி இருக்கிறீர்கள்... உங்களுக்குக் கணிணி, மின்னஞ்சல், இணையம் குறித்துத் தெரிந்திருந்தால், எந்த அளவு முன்னேறி இருப்பீர்கள்?" என வியப்பாகக் கேட்டார். அதற்கு அந்த வெங்காய வணிகர், "அது தெரிந்திருந்தால், நான் ஒரு கணிணி நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்" என்றார்.

முதலில் தரை துடைப்பவராக இருந்து, பின்னாளில் பெரிய வணிகராக மாறிய அந்த வணிகர் தனக்குக் கிடைத்த வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்தினார், அதனால் மிகப்பெரிய வணிகரானார். நமக்கும் இறைவன் வாய்ப்பினைக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றார். அவ்வாய்ப்பினை நாம் சரியாகப் பயன்படுத்தினோமா? அல்லது யூதர்களைப் போன்று அவ்வாய்ப்பினை நழுவ விட்டோமா? என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக சிந்தித்துப் பார்ப்போம்.

இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் வழங்கிய நன்மைகள்/வாய்ப்புகள்

நற்செய்தி வாசகத்தில், இயேசு யூதர்களிடம், "நான் போனபின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள்... நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்" என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் அவ்வளவு அர்த்தம் பொதிந்திருக்கின்றது. அது என்ன என்று இப்பொழுது பார்ப்போம்.

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது தனிப்பட்ட அன்புகூர்ந்து (இச 7:7), அவர்களை அடிமைத்தான வீடாகிய எகிப்திலிருந்து விடுவித்து, பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்தில் குடியமர்த்தினார். அது மட்டுமல்லாமல் அவர்களை வழிநடத்துவதற்கு நீதித்தலைவர்களையும் இறைவாக்கினர்களையும் ஏன் அரசர்களையும்கூடக் கொடுத்தார். இவற்றையெல்லாம் கொடுத்துவிட்டு, அவர்கள் தனக்குப் மக்களாக இருக்கவேண்டும் என்றும் (எரே 7:23) தான் மட்டுமே அவர்களுக்குக் கடவுளாக இருக்கவேண்டும் என்றும் (விப 20:2-3) அன்புகட்டளை கொடுத்தார். இவ்வாறு கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது அபரிவிதமாய் ஆசி வழங்கினார்.

கடவுள் கொடுத்த வாய்ப்பினை நழுவிய விட்ட யூதர்கள்/ இஸ்ரயேல் மக்கள்

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு அபரிவிதமாய் ஆசி வழங்கினார் / வாய்ப்புகளைக் கொடுத்தார் என்று மேலே பார்த்தோம். அந்த ஆசியை அல்லது வாய்ப்புகளை அவர்கள் சரியாகப் பயன்படுத்தினார்களா என்றால்? இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் உண்மைக் கடவுளை மறந்துவிட்டு பிறதெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள்; இறைவார்த்தையை எடுத்துச் சொன்ன இறைவாக்கினர்களைத் துன்புறுத்தினார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக வழிதவறிப்போன ஆடுகளான (மத் 10:6) அவர்களை மீட்க இறைவன் தன் திருமகனையே அனுப்பி வைத்தபோதும், அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பினைப் பயன்படுத்தி கடவுளுக்கு உகந்த மக்களாக மாறவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறே நடந்தார்கள். இப்படித் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட எல்லா வாய்ப்புகளையும் யூதர்கள் உதறித்தள்ளியதால்தான் இயேசு அவர்களைப் பார்த்து, "நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்" என்கின்றார்.

கடவுள் யூதர்களுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பினைத் தருகின்றார் அந்த வாய்ப்புகளை அல்லது இயேசுவை ஏற்றுக்கொண்டு வாழ்வதும் வீழ்வதும் (திவெ 2:20) நம் ஒவ்வொருவருடைய கையில்தான் உள்ளது.

சிந்தனை

"உங்களுக்கான வாய்ப்பு வரும்போது, நீங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம்" என்பார் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி (Benjamin Disraeli). ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாய்ப்புகளை, இந்த வாழ்வை நல்லமுறையில் பயன்படுத்துவோம். அதற்கு இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவருடைய விழுமியங்களின் படி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================

'இயேசு, 'என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார்...நானும் அவருக்கு
உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்' என்றார்" (யோவான் 8:29)

அன்பார்ந்த நண்பர்களே!

-- இயேசுவின் வாழ்க்கையில் துலங்கிய ஒரு முக்கியமான பண்பு அவர் எப்போதுமே கடவுளின் திருவுளத்திற்கு அமைந்து நடந்ததாகும். கடவுளிடமிருந்து வந்த இயேசு கடவுள் தன்மை கொண்டவராக இருந்தாலும், நம்மைப் போல மனித இயல்பை ஏற்றுக்கொண்டார். கடவுள் அவருக்கு அளித்த பணியை நிறைவேற்றுவதில் இயேசு கண்ணும் கருத்துமாயிருந்தார். அவர் தம் சொந்த விருப்பப்படி செயல்படவில்லை. மாறாக, கடவுள் எதை விரும்பினாரோ அதையே இயேசுவும் தம் விருப்பமாகக் கொண்டிருந்தார். தம்மை அனுப்பிய கடவுள் தம்மோடு இருப்பதை இயேசு எப்போதுமே உணர்ந்திருந்தார். எனவேதான் இயேசு நற்செய்தி அறிவிப்புக்கு இடையிலும் கடவுளோடு தனித்திருந்து இறைவேண்டலில் ஈடுபட்டார். கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவிய ஆழ்ந்த உறவு அந்த இறைவேண்டல் நேரங்களில் இன்னும் அதிகமாக ஆழப்பட்டிருக்க வேண்டும்.

-- கடவுளோடு ஒன்றித்திருந்த இயேசு மனிதரோடும் தம்மை ஒன்றுபடுத்திக் கொண்டார். ஏன், மனிதருக்குக் கடவுளின் அன்பைக் கொடையாக வழங்குவதற்குத் தானே இயேசு வந்தார்? கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்னும் உணர்வு நம்மில் ஆழப்பட வேண்டும். கடவுள் நம்மோடு இருப்பதால் நாம் கடவுளின் குரலுக்குச் செவிமடுப்பது தேவை. கடவுளின் குரலை நம் உள்ளத்திலும் வாழ்வு அனுபவத்திலும் நாம் கேட்டு உள்வாங்கும்போது அக்குரல் நம் இதயத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த அனுபவம் நம்மில் நிலைக்கும்போது நாமும் "கடவுளுக்கு உகந்தவற்றையே செய்திட" முன்வருவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!