Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   08  ஏப்ரல் 2019  
                       தவக்காலம் 5ம் வாரம் திங்கள்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே!

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 2: 1-9,15-17,19-30,33-62

அந்நாள்களில் பாபிலோனில் யோவாக்கிம் என்னும் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சூசன்னாவை மணந்தார். சூசன்னா கில்கியாவின் மகள்; அவர் பேரழகி; ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர். அவர் பெற்றோர் நேர்மையாளராய் இருந்ததால், தங்கள் மகளை மோசே சட்டத்தின் வழியில் பயிற்றுவித்தனர்.

யோவாக்கிம் பெரும் செல்வர். அவரது வீட்டுக்கு அருகிலேயே அவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. யூதர்கள் அவரிடம் வருவது வழக்கம்; ஏனெனில் மற்ற எல்லாரையும்விட அவர் மிகவும் மதிக்கப் பெற்றார். அக்காலத்தில் மக்களுள் முதியோர் இருவர் நடுவராய் நியமிக்கப் பெற்றனர். இவர்களைப் பற்றியே ஆண்டவர், "நடுவர்களாய் இருந்து மக்களை வழிநடத்தவேண்டிய மூப்பர்கள் வாயிலாகப் பாபிலோனினின்று ஒழுக்கக்கேடு வந்துற்றது" என்று சொல்லியிருந்தார்.

இவர்கள் யோவாக்கிம் வீட்டில் நெடுநேரம் இருப்பது வழக்கம். வழக்குடையோர் அனைவரும் இவர்களை அணுகுவதுண்டு. நண்பகல் வேளையில் மக்கள் சென்றபின், சூசன்னா தம் கணவரின் தோட்டத்திற்குள் சென்று உலாவு வார். அவர் நாள்தோறும் அங்குச் சென்று உலாவுவதைப் பார்த்து வந்த அந்த முதியோர் இருவரும் அவரைக் காமுறத் தொடங்கினர். இதனால் அவர்கள் தங்கள் மனத்தைத் தகாத வழியில் செலவிட்டார்கள். விண்ணக இறைவனை நினையாதவாறும் நீதித் தீர்ப்புகளைக் கருதாதவாறும் அவர்கள் நெறி மாறிச் சென்றார்கள். அதற்கு ஏற்றதொரு நாளை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள்.

ஒரு நாள் சூசன்னா வழக்கம்போல் இரண்டு பணிப்பெண்களோடு மட்டும் தோட்டத்தினுள் நுழைந்து, குளிக்க விரும்பினார்; ஏனெனில், அன்று வெயில் கடுமையாக இருந்தது. அந்த முதியோர் இருவரைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை. அவர்களோ ஒளிந்திருந்து சூசன்னாவைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

சூசன்னா பணிப் பெண்களிடம், "நான் குளிக்க எண்ணெயும் நறுமணப் பொருள்களும் கொண்டு வாருங்கள்; பிறகு தோட்டத்தின் வாயில்களை மூடிவிடுங்கள்" என்று சொன்னார்.

பணிப்பெண்கள் வெளியேறியதும் முதியோர் இருவரும் எழுந்து சூசன்னாவிடம் ஓடோடிச் சென்றனர். அவரை நோக்கி, "இதோ! தோட்டத்தின் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. யாரும் நம்மைப் பார்க்க முடியாது. நாங்கள் உன்மேல் வேட்கை கொண்டுள்ளோம். எனவே நீ எங்களுக்கு இணங்கி எங்களோடு படு. இல்லாவிடில், ஓர் இளைஞன் உன்னோடு இருந்தான் என்றும், அதற்காகவே நீ பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டாய் என்றும் உனக்கு எதிராக நாங்கள் சான்று கூறுவோம்" என்றார்கள்.

சூசன்னா பெருமூச்சு விட்டு, "நான் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். நான் உங்களுக்கு இணங்கினால், எனக்குக் கிடைப்பது சாவு; இணங்காவிட்டால் நான் உங்களிடமிருந்து தப்ப முடியாது. ஆனால் ஆண்டவர் முன்னிலையில் பாவம் செய்வதை விட, அதைச் செய்யாமல் உங்களிடம் மாட்டிக்கொள்வதே மேல்" என்றார்.

பின் சூசன்னா உரத்த குரலில் கத்தினார்.

உடனே முதியோர் இருவரும் அவருக்கு எதிராக கூச்சலிட்டனர். அவர்களுள் ஒருவர் ஓடிப்போய்த் தோட்டத்துக் கதவுகளைத் திறந்தார். தோட்டத்தில் கூச்சல் கேட்டதும், சூசன்னாவுக்கு என்ன நிகழ்ந்ததோ என்று அறிய அவர் வீட்டில் இருந்தோர் ஓரக் கதவு வழியே ஓடிவந்தனர்.

ஆனால் முதியோர் தங்கள் கட்டுக் கதையைச் சொன்னபொழுது, பணியாளர் பெரிதும் நாணங்கொண்டனர்; ஏனெனில் சூசன்னாவைப் பற்றி இது போன்ற எதையும் அவர்கள் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை.

மறுநாள் சூசன்னாவுடைய கணவர் யோவாக்கிம் வீட்டில் மக்கள் திரண்டு வந்தார்கள். சூசன்னாவைக் கொல்லும் தீய நோக்குடன் அந்த முதியோர் இருவரும் சேர்ந்து வந்திருந்தனர்.

அவர்கள் மக்கள் முன்னிலையில், "கில்கியா மகளும் யோவாக்கிம் மனைவியுமான சூசன்னாவை இங்கு அழைத்து வருமாறு ஆள் அனுப்புங்கள்" என்று கட்டளையிட்டார்கள்.

உடனே அவரை அழைத்து வர ஆள் அனுப்பினர். சூசன்னா வந்தார். அவரோடு அவருடைய பெற்றோர், பிள்ளைகள், உறவினர் எல்லாரும் வந்தனர். அவருடைய உற்றார் உறவினரும், அவரைப் பார்த்தவர் அனைவருமே அழுதுகொண்டிருந்தார்கள்.

முதியோர் இருவரும் மக்கள் நடுவே எழுந்து நின்று, சூசன்னா தலைமீது தங்கள் கைகளை வைத்தனர். அவரோ அழுதுகொண்டே விண்ணக இறைவனை நோக்கினார்; ஏனெனில் அவர் உள்ளம் ஆண்டவரை நம்பியிருந்தது.

அப்பொழுது முதியோர் பின்வருமாறு கூறினர்: "நாங்கள் தோட்டத்தில் தனியாக உலாவிக் கொண்டிருந்த பொழுது, இவள் இரு பணிப்பெண்களோடு உள்ளே வந்தாள்; தோட்டத்து வாயில்களை மூடியபின், பணிப் பெண்களை வெளியே அனுப்பி விட்டாள். பின்னர் அங்கே ஒளிந்துகொண்டிருந்த ஓர் இளைஞன் இவளிடம் வந்து இவளோடு படுத்தான். நாங்களோ தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்தோம்; இந்த நெறிகெட்ட செயலைக் கண்டதும் அவர்களிடம் ஓடிச் சென்றோம். அவர்கள் சேர்ந்திருந்ததைப் பார்த்தோம். ஆனால் அந்த இளைஞனை எங்களால் பிடிக்க முடியவில்லை; ஏனெனில் அவன் எங்களை விட வலிமை மிக்கவன். எனவே அவன் கதவைத் திறந்து வெளியே ஓடிவிட்டான். நாங்கள் இவளைப் பிடித்து, அந்த இளைஞன் யார் என்று கேட்டோம். இவளோ எங்களுக்கு மறுமொழி கூற மறுத்துவிட்டாள். இவற்றுக்கு நாங்களே சாட்சி".

அவர்கள் மக்களுள் மூப்பர்களாகவும் நடுவர்களாகவும் இருந்ததால், மக்கள் கூட்டம் அவர்கள் சொன்னதை நம்பி சூசன்னாவுக்குச் சாவுத் தீர்ப்பிட்டது.

அப்பொழுது சூசன்னா உரத்த குரலில் கதறி, "என்றுமுள்ள இறைவா, மறைவானவற்றை நீர் அறிகிறீர். நிகழுமுன்பே எல்லாம் உமக்குத் தெரியும். இவர்கள் எனக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியுள்ளனர் என்பதும் உமக்குத் தெரியும். இவர்கள் என்மீது சாட்டிய குற்றம் எதுவும் நான் செய்தறியேன்.

ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே!" என்று சொன்னார். ஆண்டவர் சூசன்னாவுடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்தார். கொல்லப்படுமாறு அவர் நடத்திச் செல்லப்பட்டபொழுது, தானியேல் என்னும் பெயருடைய இளைஞரிடம் தூய ஆவியைக் கடவுள் தூண்டி விட்டார்.

தானியேல் உரத்த குரலில், "இவருடைய இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை" என்று கத்தினார்.

மக்கள் அனைவரும் அவர்பால் திரும்பி, "நீர் என்ன சொல்கிறீர்?" என்று வினவினர்.

அவரோ அவர்கள் நடுவே நின்றுகொண்டு பின்வருமாறு சொன்னார்: "இஸ்ரயேல் மக்களே, வழக்கை ஆராயாமலும், உண்மையை அறிந்துகொள்ளாமலும் இஸ்ரயேல் மகள் ஒருத்தியைத் தீர்ப்பிடத் துணிந்துவிட்டீர்களே! அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா? நீதி வழங்கும் இடத்திற்குத் திரும்பிப் போங்கள்; இம்மனிதர்கள் இவருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியிருக்கிறார்கள்" என்றார். எனவே மக்கள் எல்லாரும் விரைவாகத் திரும்பி வந்தார்கள்.

மற்ற மூப்பர்கள் தானியேலிடம், "நீர் வந்து, எங்கள் நடுவே அமர்ந்து, எங்களுக்கு விரிவாய் விளக்கிக் காட்டும்; ஏனெனில் மூப்பருக்குரிய சிறப்பை கடவுள் உமக்கு அளித்துள்ளார்" என்று வேண்டிக்கொண்டார்கள்.

அப்பொழுது தானியேல், "இவர்களைத் தனித்தனியே பிரித்துத் தொலையில் வையுங்கள். நான் இவர்களை வினவுவேன்" என்றார். எனவே அவர்கள் இருவரையும் தனித்தனியே பிரித்து வைத்தார்கள்.

அப்பொழுது தானியேல் அவர்களுள் ஒருவரை அழைத்து, "தீச்செயலில் விளைந்தவனே! நீ முன்பு செய்த பாவங்கள் இப்பொழுது வெளியாகிவிட்டன. "மாசற்றவர்களையும் நீதிமான்களையும் சாவுக்கு உள்ளாக்காதே" என்று ஆண்டவர் சொல்லியிருந்தும் நீ முறைகேடாகத் தீர்ப்புகள் வழங்கி, மாசற்றவர்களைத் தண்டித்து, குற்றவாளிகளை விடுவித்துள்ளாய். இதோ! நீ உண்மையிலேயே சூசன்னாவைப் பார்த்திருந்தால், எந்த மரத்தடியில் அவர்கள் கூடியிருக்கக் கண்டாய், சொல்" என்று கேட்டார்.

அதற்கு அவர், "விளா மரத்தடியில்" என்றார்.

அதற்குத் தானியேல், "நீ நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில் கடவுளின் தூதர் ஏற்கெனவே இறைவனிடமிருந்து தீர்ப்பைப் பெற்றுவிட்டார். அவர் உன்னை இரண்டாக வெட்டிப் பிளப்பார்" என்றார்.

பின் அவரை அனுப்பிவிட்டு மற்றவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு பணித்தார். அவரை நோக்கி, "நீ யூதாவுக்கல்ல, கானானுக்குப் பிறந்தவன். அழகு உன்னை மயக்கிவிட்டது; காமம் உன்னை நெறிதவறச் செய்து விட்டது. நீங்கள் இருவரும் இஸ்ரயேல் மகளிரை இவ்வாறே நடத்தி வந்திருக் கிறீர்கள். அவர்களும் அச்சத்தால் உங்களுக்கு இணங்கிவந்திருக்கிறார்கள். ஆனால் யூதாவின் மகளாகிய இவரால் உங்கள் தீச்செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதோ! எந்த மரத்தடியில் சேர்ந்திருக்கும்பொழுது நீ இவர்களைப் பிடித்தாய்? சொல்" என்றார். அவரோ, "கருவாலி மரத்தடியில்" என்றார்.

தானியேல் அவரிடம், "நீயும் நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில் உன்னை இரு கூறாக வெட்டவும், இவ்வாறு உங்கள் இருவரையும் அழித்தொழிக்கவும் கடவுளின் தூதர் வாளுடன் காத்துக்கொண்டிருக்கிறார்" என்றார்.

உடனே மக்கள் கூட்டம் முழுவதும் உரத்த குரல் எழுப்பி, தம்மில் நம்பிக்கை வைப்போருக்கு மீட்பளிக்கும் கடவுளைப் போற்றியது. அவர்கள் அந்த முதியோர் இருவருக்கும் எதிராக எழுந்தார்கள்; ஏனெனில் அவர்கள் பொய்ச் சான்று சொன்னதை அவர்கள் வாய்மொழியாகவே தானியேல் மெய்ப்பித்திருந்தார். அம்முதியோர் பிறருக்குச் செய்ய இருந்த தீங்கை அவர்களுக்கே மக்கள் செய்தார்கள். மோசே சட்டப்படி அவர்களைக் கொன்றார்கள். இவ்வாறு மாசற்ற சூசன்னா அன்று காப்பாற்றப்பட்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

அல்லது - குறுகிய வாசகம்

குற்றம் எதுவும் நான் செய்தறியேன்; ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 2: 41c-62

அந்நாள்களில் இஸ்ரயேல் மக்கள் கூட்டம் சூசன்னாவுக்குச் சாவுத் தீர்ப்பிட்டது. அப்பொழுது சூசன்னா உரத்த குரலில் கதறி, "என்றுமுள்ள இறைவா, மறைவானவற்றை நீர் அறிகிறீர். நிகழுமுன்பே எல்லாம் உமக்குத் தெரியும். இவர்கள் எனக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியுள்ளனர் என்பதும் உமக்குத் தெரியும். இவர்கள் என்மீது சாட்டிய குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே!" என்று சொன்னார்.

ஆண்டவர் சூசன்னாவுடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்தார். கொல்லப்படுமாறு அவர் நடத்திச் செல்லப்பட்டபொழுது, தானியேல் என்னும் பெயருடைய இளைஞரிடம் தூய ஆவியைக் கடவுள் தூண்டி விட்டார்.

தானியேல் உரத்த குரலில், "இவருடைய இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை" என்று கத்தினார்.

மக்கள் அனைவரும் அவர்பால் திரும்பி, "நீர் என்ன சொல்கிறீர்?" என்று வினவினர். அவரோ அவர்கள் நடுவே நின்றுகொண்டு பின்வருமாறு சொன்னார்: "இஸ்ரயேல் மக்களே, வழக்கை ஆராயாமலும், உண்மையை அறிந்துகொள்ளாமலும் இஸ்ரயேல் மகள் ஒருத்தியைத் தீர்ப்பிடத் துணிந்துவிட்டீர்களே! அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா? நீதி வழங்கும் இடத்திற்குத் திரும்பிப் போங்கள்; இம்மனிதர்கள் இவருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியிருக்கிறார்கள்" என்றார். எனவே மக்கள் எல்லாரும் விரைவாகத் திரும்பி வந்தார்கள்.

மற்ற மூப்பர்கள் தானியேலிடம், "நீர் வந்து, எங்கள் நடுவே அமர்ந்து, எங்களுக்கு விரிவாய் விளக்கிக் காட்டும்; ஏனெனில் மூப்பருக்குரிய சிறப்பை கடவுள் உமக்கு அளித்துள்ளார்" என்று வேண்டிக்கொண்டார்கள்.

அப்பொழுது தானியேல், "இவர்களைத் தனித்தனியே பிரித்துத் தொலையில் வையுங்கள். நான் இவர்களை வினவுவேன்" என்றார். எனவே அவர்கள் இருவரையும் தனித்தனியே பிரித்து வைத்தார்கள்.

அப்பொழுது தானியேல் அவர்களுள் ஒருவரை அழைத்து, "தீச்செயலில் விளைந்தவனே! நீ முன்பு செய்த பாவங்கள் இப்பொழுது வெளியாகிவிட்டன. "மாசற்றவர்களையும் நீதிமான்களையும் சாவுக்கு உள்ளாக்காதே" என்று ஆண்டவர் சொல்லியிருந்தும் நீ முறைகேடாகத் தீர்ப்புகள் வழங்கி, மாசற்றவர்களைத் தண்டித்து, குற்றவாளிகளை விடுவித்துள்ளாய். இதோ! நீ உண்மையிலேயே சூசன்னாவைப் பார்த்திருந்தால், எந்த மரத்தடியில் அவர்கள் கூடியிருக்கக் கண்டாய், சொல்" என்று கேட்டார். அதற்கு அவர், "விளா மரத்தடியில்" என்றார்.

அதற்குத் தானியேல், "நீ நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில் கடவுளின் தூதர் ஏற்கெனவே இறைவனிடமிருந்து தீர்ப்பைப் பெற்றுவிட்டார். அவர் உன்னை இரண்டாக வெட்டிப் பிளப்பார்" என்றார்.

பின் அவரை அனுப்பிவிட்டு மற்றவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு பணித்தார். அவரை நோக்கி, "நீ யூதாவுக்கல்ல, கானானுக்குப் பிறந்தவன். அழகு உன்னை மயக்கிவிட்டது; காமம் உன்னை நெறிதவறச் செய்து விட்டது. நீங்கள் இருவரும் இஸ்ரயேல் மகளிரை இவ்வாறே நடத்தி வந்திருக்கிறீர்கள். அவர்களும் அச்சத்தால் உங்களுக்கு இணங்கிவந்திருக்கிறார்கள். ஆனால் யூதாவின் மகளாகிய இவரால் உங்கள் தீச்செயலைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதோ! எந்த மரத்தடியில் சேர்ந்திருக்கும்பொழுது நீ இவர்களைப் பிடித்தாய்? சொல்" என்றார்.

அவரோ, "கருவாலி மரத்தடியில்" என்றார்.

தானியேல் அவரிடம், "நீயும் நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில் உன்னை இரு கூறாக வெட்டவும், இவ்வாறு உங்கள் இருவரையும் அழித்தொழிக்கவும் கடவுளின் தூதர் வாளுடன் காத்துக்கொண்டிருக்கிறார்" என்றார்.

உடனே மக்கள் கூட்டம் முழுவதும் உரத்த குரல் எழுப்பி, தம்மில் நம்பிக்கை வைப்போருக்கு மீட்பளிக்கும் கடவுளைப் போற்றியது. அவர்கள் அந்த முதியோர் இருவருக்கும் எதிராக எழுந்தார்கள்; ஏனெனில் அவர்கள் பொய்ச் சான்று சொன்னதை அவர்கள் வாய்மொழியாகவே தானியேல் மெய்ப்பித்திருந்தார். அம்முதியோர் பிறருக்குச் செய்ய இருந்த தீங்கை அவர்களுக்கே மக்கள் செய்தார்கள். மோசே சட்டப்படி அவர்களைக் கொன்றார்கள். இவ்வாறு மாசற்ற சூசன்னா அன்று காப்பாற்றப்பட்டார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 4ab)
=================================================================================
பல்லவி: இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும், நான் எதற்கும் அஞ்சிடேன்.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார். 3a அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

 
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எசே 33: 11

'தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பமன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே என் விருப்பம்,' என்கிறார் ஆண்டவர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 12-20

அக்காலத்தில் இயேசு மக்களைப் பார்த்து, "உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்றார்.

பரிசேயர் அவரிடம், "உம்மைப்பற்றி நீரே சான்று பகர்கிறீர்; உம் சான்று செல்லாது" என்றனர்.

அதற்கு இயேசு, "என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தாலும் என் சான்று செல்லும். ஏனெனில் நான் எங்கிருந்து வந்தேன், எங்குச் செல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன், எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. ஆனால் நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்பு செல்லும். ஏனெனில் நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார். இருவருடைய சான்று செல்லும் என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளது அல்லவா? என்னைப்பற்றி நானும் சான்று பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்" என்றார்.

அப்போது அவர்கள், "உம் தந்தை எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக, "உங்களுக்கு என்னையும் தெரியாது; என் தந்தையையும் தெரியாது. என்னை உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை என் தந்தையையும் தெரிந்திருக்கும்" என்றார்.

கோவிலில் காணிக்கைப் பெட்டி அருகிலிருந்து இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு சொன்னார். அவரது நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைப் பிடிக்கவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 நானே உலகின் ஒளி

சூஃபி ஞானிகளில் ராபியா என்ற பெண் சூஃபி ஞானி மிகவும் முக்கியமானவர். அவருடைய போதனையைக் கேட்பதற்காக ஏராளமான மக்கள் கூடிவருவார்கள்.

ஒருநாள் அவர் வித்தியாசமான ஒரு காரியத்தைச் செய்துகொண்டிருந்தார். அது என்னவென்றால் ஒரு மெழுகுதிரி, ஒரு ஊசி, ஒரு கட்டுத் தலைமுடி யாவற்றையும் சொர்க்கத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தார்.

இதைக் கவனித்த ஒருவர் அவரிடம், "தாயே! அப்படி என்ன மும்முரமாகச் செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர், "நான் இந்த மெழுகுதிரி, ஊசி, ஒருகட்டுத் தலைமுடி யாவற்றையும் சொர்க்கத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன்" என்றார். உடனே கேள்வி கேட்டவர் மீண்டுமாக அவரிடம், "எந்த ஒரு காரியத்தையும் ஏதாவது ஓர் அர்த்தத்தோடு செய்யும் நீங்கள், இப்போது இந்த மெழுகுதிரி, ஊசி, ஒருகட்டுத் தலைமுடி இவற்றின் வழியாக எங்களுக்குக் கூறுவது தான் என்ன?" என்று கேட்டார்.

அதற்கு ராபியா என்ற பெண் சூஃபி ஞானி சொன்னார், "மெழுகுதிரியானது தன்னையே இழந்து மற்றவருக்கு ஒளிதருகின்றது. அதுபோன்றுதான் ஊசியும். ஊசியானது, தான் ஆடை உடுத்தாவிட்டாலும் மற்றவர் ஆடை உடுத்த உதவுகின்றது. ஆகவே யாராரெல்லாம் மெழுகுதிரியைப் போன்று, ஊசியைப் போன்று தங்களுடைய வாழ்க்கையை பிறருக்காகத் தியாகம் செய்து, அவர்களுடைய வாழ்வில் ஒளியேற்றி வைக்கிறார்களோ, அவர்களுடைய வாழ்வு இந்த ஒருகட்டுத் தலைமுடி போன்று மிகவும் உறுதியாக இருக்கும்" என்றார்.

பிறருடைய வாழ்வில் ஒளியேற்றி வைப்பவர்களின் வாழ்வு என்றும் ஒளி நிறைந்ததுதான். அதுதான் மேலே சொல்லப்பட்ட நிகழ்வின் அர்த்தம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நானே உலகின் ஒளி" என்கிறார். ஆம், இயேசுவே உலகின் ஒளி. அவரால்தான் காரிருள் சூழ்ந்த மானிடரிடன் வாழ்வானது ஒளி நிறைந்ததாய் மாறியது. அவரால்தான் இருள் மண்டிக்கிடந்த மாந்தரின் மனதில் அருள்பொங்கி வழிந்தது.

இந்த உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் தோன்றியிருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லாம் எப்படி நிலவு சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று, உலகிற்கு வழங்குகின்றதோ, அதைபோன்று அவர்கள் பல்வேறு நிகழ்வுகளிலிருந்து, மனிதரிடமிருந்து ஒளிபெற்று, அந்த ஒளியை உலகிற்கு வழங்கினார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ தாமாகவே உலகிற்கு ஒளியாக விளங்குகின்றார். இதுதான் இயேசுவுக்கும், மற்ற தலைவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

இயேசு உலகின் ஒளியாக இருக்கிறார் என்று சொன்னால், அவர் வழியில் நாம் நடக்கின்றபோது ஒருபோதும் இடறி விழமாட்டோம்; ஒருபோதும் நாம் உலக மாயைக்குள் சிக்கிச் சீரழியமாட்டோம். திருப்பாடல் 119:105 ல் வாசிக்கின்றோம், என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!, என் பாதைக்கு ஒளியே அதுவே!" என்று. ஆகவே இயேசுவின் ஒளியில், அவரது வழியில் நடக்கின்றபோது நமக்கு அழிவு இல்லை. ஆபத்து இல்லை.

ஆனால் இன்றைக்கு ஒளியான இயேசுவின் வழியில் நடக்காமல் இருளின் பாதையில் பலர் நடப்பதுதான் மிகவும் வேதனையளிப்பதாக இருக்கின்றது.

தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 13 ஆம் அதிகாரம் 12-14 வரையுள்ள வசனங்களில் படிக்கின்றோம் "இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்" என்று.

ஆகவே இருளில் வழியில் நடக்காமல் உலகின் ஒளியாகிய இயேசுவின் வழியில் நாம் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
பிறரைக் குற்றவாளி எனத் தீர்ப்பிட நாம் யார்?

அந்த கிராமத்தில் இருந்த விவசாயி ஒருவர் தன்னுடைய பண்ணையிலிருந்து கிடைக்கும் வெண்ணெயை (Butter) எடுத்து வந்து, அந்த ஊரிலிருந்த கடைக்காரருக்குக் கொடுத்து வந்தார். பதிலுக்கு கடைக்காரரிடமிருந்து அவர் வெண்ணெய்க்கு சமமாக ரொட்டியைப் பெற்று வந்தார் இதனை அவர் ஒவ்வொருநாளும் வழக்கமாகவே செய்து வந்தார்.

ஒருநாள் வெண்ணெய் பெறும் கடைக்காரருக்கு விவசாயின் மீது சந்தேகம் வந்தது. அவர் ஒவ்வொருநாளும் ஒரு கிலோ அளவு வெண்ணெய் கொடுக்கிறாரா? அல்லது அதை விடவும் குறைவாகக் கொடுக்கின்றாரா? என்று அளந்து பார்க்க விரும்பினார். உடனே அவர் தன்னுடைய கடையில் இருந்த தராசில் வைத்து அதனை நிறுத்துப்பார்த்தார். ஆனால் விவசாயி கொடுத்து வந்த வெண்ணையின் அளவு ஒரு கிலோவுக்கும் கொஞ்சம் குறைவாக இருந்தது. இதை அறிந்து கடைக்காரார் வெகுண்டெழுந்தார். இத்தனை நாளும் விவசாயி தன்னை ஏமாற்றி இருக்கிறாரே என்று சொல்லி அவர்மீது வழக்குத் தொடுத்தார். இதனால் விவசாயி நீதிமன்ற வாசலில் ஏறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நீதிமன்ற விசாரணையில் நீதிபதி விவசாயிடம், "நீங்கள் கடைக்காரருக்கு ஒரு கிலோவையும் விட குறைவான அளவு வெண்ணெய் கொடுத்து வருகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு விவசாயி அவரிடத்தில், "அப்படியெல்லாம் இல்லை ஐயா. நான் சரியான அளவில்தான் வெண்ணெய் கொடுத்து வருகிறேன்" என்றார். "அப்படியானால் எப்படி எடை குறையும்?, நீர் எந்த எடைக்கல்லை வைத்து ஒரு கிலோ வெண்ணெயை நிறுத்துக் கொடுக்கின்றீர்?" என்றார் நீதிபதி. "ஐயா! என்னிடம் எடை கல்லெல்லாம் கிடையாது. நான் படித்தவனும் கிடையாது. ஆனால் இந்த கடைக்காரர் எனக்குக் கொடுக்கக்கூடிய ஒரு கிலோ ரொட்டியை வைத்துதான் நான் ஒரு கிலோ வெண்ணையைக் கொடுக்கிறேன். ஒருவேளை என்னுடைய அளவில் குறையிருந்தால் அது அந்த கடைக்காரரையே சாரும்" என்றார்.

இதைக் கேட்ட கடைக்காரர் வெலவெலத்துப் போய் நின்றார்.

பிறரைக் குற்றவாளி என தீர்ப்பிடுவதற்கு முன், நாம் சரிதானா என சிந்தித்துப் பார்க்க இந்த நிகழ்வு நம்மைத் தூண்டுவதாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் பரிசேயர்கள் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்து, அவருக்கு என்ன தீர்ப்பளிக்கலாம் என்று கேட்கிறார்கள். விபச்சாரத்தில் பிடிபட்டவர் கல்லால் எறிந்து கொல்லப்படவேண்டும் என்பது மோசேயின் சட்டம் (லேவி 20:10, இச 22:13- 21). ஆனால் இயேசுவோ அன்பையும் இரக்கத்தையும் போதித்துக்கொண்டு வருபவர். அப்படியிருக்கும்போது அவர் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை கல்லால் எறிந்து கொல்லச் சொல்கிறாரா? இல்லை மன்னித்துவிடச் சொல்கிறாரா? என்று சோதித்துப் பார்க்க விரும்பினர். ஒருவேளை அவர் அப்பெண்ணை கல்லால் எறிந்துகொல்லச் சொன்னால், இதுவரை அவர் போதித்து வந்த அன்பும் இரக்கமும் எங்கே? என்று கேட்கலாம், அவர் அப்பெண்ணை மன்னித்து விடலாம் என்று சொன்னால் அவர் மோசேயின் சட்டத்தை மீறுவதாக குற்றம் சுமத்தலாம் என்றே அவர்கள் இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான சூழலை இயேசுவுக்குத் தருகிறார்கள்.

ஆனால் ஆண்டவர் இயேசுவோ தரையில் குனிந்து எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் இப்படிச் செய்வதற்கு விவிலிய அறிஞர்கள் பல விளக்கங்களைச் சொல்வார்கள். முதலாவதாக அவர் அவர்களுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கலாம். இரண்டாவதாக அவர்கள் மீண்டுமாக அதே கேள்வியை இயேசுவிடத்தில் கேட்கவேண்டும் என்பதற்காக இயேசு அப்படி இருந்திருக்கலாம், ஏனென்றால் அவர்கள் அதே கேள்வியைத் திரும்பக் கேட்கின்றபோது தங்களுடைய பாவ நிலையை அவர்கள் உணரக்கூடும். மூன்றாவதாக இயேசுவுக்கு அவர்களுடைய முகத்தைப் பார்ப்பதற்கு மிகவும் அறுவறுப்பாக இருந்திருக்கலாம். நான்காவதாக இயேசு அங்கிருந்தவர்கள் செய்த பாவத்தை எழுதிக்கொண்டிருக்கலாம். அதனால் இயேசு அவர்களைப் பார்க்கவில்லை என்றும் சொல்வர்.

இயேசுவை அவர்கள் தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டே இருந்திருக்கவேண்டும். அதனால் இயேசு அவர்களிடத்தில், "உங்களில் பாவமில்லாதவர், முதலில் இப்பெண்மீது கல்லை எரியட்டும்" என்கிறார். இயேசு சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டு அங்கிருந்த எல்லாரும் கலைந்து செல்கிறார்கள். இயேசு மட்டுமே அங்கு இருக்கின்றார். அப்போது இயேசு அப்பெண்ணிடம், "யாரும் உன்னைத் தீர்ப்பிடவில்லையா.., நானும் உன்னை தீர்ப்பிடவில்லை, இனிமேல் பாவம் செய்யாதே என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

இயேசு அவர்களுக்குச் சொன்ன பதிலில், தீர்ப்பிடுகின்ற அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே உரியது; ஒருவரைத் தீர்ப்பிடும்போது பரிவோடு நடந்து கொள்ளவேண்டும் என்ற உண்மைகளை நமக்கு விளக்கிச் சொல்கிறார். எனவே, நம்முடைய அன்றாட வாழ்வில் பிறரைக் குற்றவாளி என்று தீர்ப்பிடும் போக்கினை கைவிடுவோம், பரிசேயர்களைப் போன்று அல்லாமல், ஆண்டவர் இயேசுவைப் போன்று எல்லாரிடத்திலும் பரிவோடு நடந்து கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
யோவா 8: 12-20

உலகின் ஒளியாம் இயேசு

நிகழ்வு

திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர், திருத்தந்தையாக இருந்த சமயம் அவரைச் சந்திக்கப் பெரும் எண்ணிக்கையில் திருப்பயணிகள் வந்திருந்தனர். அவர்களோடு அவர் அன்பொழுகப் பேசினார். பின்னர் அவர்கள் அவரிடமிருந்து விடைபெற்றுச் செல்லவேண்டிய நேரம் வந்ததும், அவர் அவர்களுக்கு இறையாசி வழங்கத் தொடங்கினார். அப்பொழுது அவர் அந்தத் திருப்பயணிகளில் பதிமூன்று வயது மதிக்கத்தக்க பார்வையற்ற சிறுவன் ஒருவன் இருப்பதைக் கண்டார்.

உடனே அவர் அவனைத் தனியாகக் கூப்பிட்டு, "தம்பி! ஒன்றை மனதில் வைத்துக்கொள். இறைவனின் பேரொளியைப் பெறவில்லை என்றால், இங்கிருக்கின்ற எல்லாரும் பார்வையற்றவர்கள்தான். அதனால், உன்னால் இவ்வுலகைப் பார்க்க முடியவில்லையே என்று வருந்தாதே... இறைவனின் பேரொளி உன்னை எந்நாளும் வழிநடத்தட்டும்" என்று அவனுக்கு ஆசிகூறி அனுப்பிவைத்தார்.

திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர் அந்தச் சிறுவனுக்குக் கூறிய வார்த்தைகளிலிருந்து இறைவன்தான்/ இயேசுதான் பேரொளி என்ற உண்மையானது உறுதியாகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும், இயேசுவே உலகின் ஒளி என்று எடுத்துச் சொல்கின்றது. அவர் எப்படி உலகிற்கு ஒளியாக இருக்கின்றார் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இறைவனோடு தொடர்புபடுத்திப் பேசப்பட்ட ஒளி

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் சூரியன் இறைவனோடு தொடர்பு படுத்திப் பேசப்பட்டது. கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாக இருக்கின்றார் (திபா 84: 11) என்ற வார்த்தைகளும் நீதியின் கதிரவன் (மலா 4:2) என்ற வார்த்தைகளும் இதற்குச் சான்றுகளாக இருக்கின்றன. மேலும் யோவானின் முதல் திருமுகத்தில் வருகின்ற "கடவுள் ஒளியாய் இருக்கின்றார்" என்ற வார்த்தைகளும் (1 யோவா 1:5) ஒளியும் கடவுளும் வேறுவேறு அல்ல என்ற உண்மையை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. இந்தப் பின்னணில், நற்செய்தியில் இயேசு கூறுகின்ற, "உலகின் ஒளி நானே" என்று வார்த்தைகளை வைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் சாலச் சிறந்தது.

உலகின் ஒளியாம் இயேசு

நற்செய்தி வாசகத்தில் இயேசு, "உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்கின்றார்.

யோவான் நற்செய்தியாளர் பழைய ஏற்பாட்டில் இடம்பெறும் முக்கியமான மூன்று விடயங்களைத் தன்னுடைய நற்செய்தியில் பயன்படுத்துகின்றார். ஒன்று, மன்னா (யோவா 6). இரண்டு, தண்ணீர் (யோவா 7). மூன்று இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் ஒளி (யோவா 8).. இங்கு அவர் இயேசு சொன்ன "உலகின் ஒளி நானே" என்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டுவிட்டு, பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் நெருப்புத்தூணின் உதவியால் பாலைவனத்தில் நடந்துசென்றதையும் யூதர்கள் கொண்டாடிய கூடாரப் பெருவிழாவில் (Feast of Tabernacles) வைக்கப்படும் நான்கு பெரிய விளக்குதண்டுகளையும் நினைவுபடுத்தி, உண்மையாகவே இயேசு உலகின் ஒளி என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றார். மேலும் யாராரெல்லாம் இயேசுவைப் பின்தொடர்ந்து நடக்கின்றார்களோ அவர்கள் ஒருபோதும் இருளில் நடக்கமாட்டார்கள், வாழ்விற்கான ஒளியைக் கொண்டிருப்பார்கள் என்ற செய்தியையும் எடுத்துச் சொல்கின்றார்.

இயேசு கூறியதை நம்ப மறுத்த பரிசேயகூட்டம்

இயேசு, "உலகின் ஒளி நானே" என்று சொன்னதைக் கேட்ட பரிசேயக் கூட்டம், "உம்மைப் பற்றி நீரே சான்று பகர்கின்றீர்; உன் சான்று செல்லாது" என்கின்றார். யூதர்கள் தனியொரு நபருடைய சான்றினை ஏற்றுக்கொள்வது கிடையாது (எண் 35: 30; இச 17:6). அந்த அடிப்படையில் அவர்கள் தனியொரு மனிதனாக (!) இயேசு தன்னைக் குறித்து சான்று பகர்வது செல்லாது என்கின்றார்கள். ஆனால், இயேசுவோ தன்னைப் பற்றித் தான் மட்டுமல்ல, தந்தைக் கடவுளும் சான்று பகர்கின்றார் என்கின்றார். அவர்களோ இயேசு சொல்வதை ஏற்றுக்கொள்ளாத மந்த புத்தியுடைவர்களாக இருக்கின்றார்கள். இது ஒருபக்கம் இருந்தாலும், உலகின் ஒளியாம் இயேசுவைப் பின்தொடர்ந்து நடக்கின்றபோது வாழ்வினைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது மறுக்கமுடியாது. ஏனெனில், வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்ற (யோவா 6: 63) வார்த்தைகளைப் பேசுகின்ற, இயேசுவைப் பின்பற்றி நடக்கின்ற ஒருவர் நிலைவாழ்வைப் பெறாமல் போகார் (யோவா 6:58)

சிந்தனை

'என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே' (திபா 119:105) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, வாழ்க்கைப் பாதைக்கு பயணத்திற்கு - ஒளிதருகின்ற உலகின் ஒளியாம் இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!