Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   05  ஏப்ரல் 2019  
           தவக்காலம் 4ம் வாரம் வெள்ளிக்கிழமை- 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a,12-22

இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக்கொண்டார்கள்: நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்; நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள்.

கடவுளைப் பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என அவர்கள் பறைசாற்றுகிறார்கள்; ஆண்டவரின் பிள்iளைகள் எனத் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள். அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது; அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது.

அவர்களது வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையினின்று வேறுபட்டது; அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை. இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்; தூய்மையற்ற பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல நம்முடைய வழிகளினின்று விலகிச் செல்கிறார்கள்; நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக் கருதுகிறார்கள்; கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள்.

அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார்.

அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள். இறைப்பற்று இல்லாதவர்கள் இவ்வாறு எண்ணி நெறி தவறிச் சென்றார்கள்.

அவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டது. அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறிய வில்லை; தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை; மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:34: 16-17. 18-19. 20,22 (பல்லவி: 18a)
=================================================================================
பல்லவி: உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்.

16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி

18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். பல்லவி

20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. 22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 4b

'மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.'
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1,2, 10, 25-30

அக்காலத்தில் இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக்கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.

யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்.

எருசலேம் நகரத்தவர் சிலர், "இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்து கொண்டார்களோ? ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே" என்று பேசிக்கொண்டனர்.

ஆகவே கோவிலில் கற்பித்துக் கெண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், "நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே" என்றார்.

இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

நேரம் வரவில்லை.

மனிதர்கள் நேரம் பார்த்து செயல்படுகின்றனர்.

மனிதர்கள் கடவுளின் கணக்கை சரிவர கணித்து விட முடியுமா?

கடவுள் வகுத்த திட்டத்தின்படியே எல்லாம் இயங்கி வருகின்றது. அவரது கணக்கை அறிந்து கொள்ள மனிதனால் இயலாது என்பதுவே உண்மை.

இதனோடு, மனிதர்கள் அறிய வேண்டியது, நேரங்களில் நல்ல நேரம், கெட்ட நேரம் என்று எதுவும் இல்லை. நேரத்தையும் காலத்தையும் அறிந்தவர் அவரே. அவர் என்றும் நல்லவராகவே இரந்து எல்லாவற்றையும் நல்லதென ஆக்கி வருகின்றார். அவரது நேரத்தின்படியே காரியங்கள் அரங்கேறும். பொறுமையாய் இருந்து, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று, காரியங்கள் நடந்தேற செயல்பட வேண்டும்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  நற்செய்தி வாசகம்

இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1,2, 10, 25-30


நம்மை முடக்கிப்போடும் முன்சார்பு எண்ணங்கள்


ஒருமுறை பாஸ்டன் நகரில் இருக்கும் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்திற்கு உள்ளே எழுபது வயதுக்குள்மேல் இருக்கும் ஒரு வயதான தம்பியினர் அழுக்கு உடையுடன் நுழைந்தார்கள். அவர்களைப் பார்த்த காவலர், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தான். ஆனால் அந்த தம்பியினரோ, தாங்கள் பல்கலைக்கழகத்தின் தலைவரைப் பார்த்து ஒருசில விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டும் என்று சொன்னதும் அவர்களை உள்ளேவிட்டான். அதுவும் மூன்று மணிநேர காத்திருப்புக்குப் பின்னர்.

பல்கலைக்கழகத்தின் தலைவர் அந்த வயதார தம்பதியினரின் வறிய கோலத்தைப் பார்த்துவிட்டு மிகவும் மெத்தனமாக நடந்துகொண்டார். அவர்கள் பல்கலைக்கழகத் தலைவரிடம், "எங்களுடைய பையன் இந்த பல்கலைக்கழகத்தில்தான் ஒருசில ஆண்டுகளுக்கு முன்னால் படித்தான். ஆனால் அவன் ஒரு எதிர்பாராத விபத்து ஒன்றில் இறந்துபோய்விட்டான். எனவே அவனுடைய நினைவாக இங்கே ஒரு நினைவுச் சின்னம் எழுப்பவேண்டும்" என்று சொன்னார்கள்.

இதைக்கேட்க பல்கலைக்கழகத் தலைவர் இன்னும் கடுப்பானார். "உங்களைப் போன்று இப்படி எல்லாரும் இறந்துபோன தங்களுடைய மகன்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்புவதாகச் சொன்னால், இந்த பல்கலைக்கழகமே மயான பூமியாகிவிடுமே" என்று கத்தினார். அதற்கு அவர்கள், "நாங்கள் நினைவுச் சின்னம் என்று சொன்னது கல்லறையல்ல, மாறாக எங்களுடைய மகன் பேரில் ஒரு கட்டிடம்" என்றார்கள். அதைக் கேட்ட தலைவர், ஒரு கட்டடம் கட்டுவதற்குப் சில கோடிகள் ஆகுமே, அது உங்களால் எப்படிச் சாத்தியப்படும்" என்று சொல்லிவிட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையைச் சொன்னார்.

உடனே அந்தத் தம்பதியனர், ஒரு கட்டடம் கட்டுவதற்கு இவ்வளவு பணம்தான் ஆகுமா? அப்படியானால் எங்களிடம் இருக்கும் பணத்தை வைத்துகொண்டு, நாங்களே நாங்கள் இருக்கும் கலிபோனியாவில் ஒரு பல்கலைக்கழகம் கட்டிக்கொள்கிறோம்" என்று சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றனர். எல்லாவற்றையும் பார்த்து வியப்படைந்து நின்றார் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர்.

அந்த வயதான தம்பியியர் கலிபோனியாவிற்குச் சென்று, ஸ்டேன்போர்ட் (Stanford University) என்ற பல்கலைக்கழகத்தை நிறுவினர். அவர்களின் பெயர்கள் (1885) லீலண்டு ஸ்டேன்போர்ட் (Leland Stanford) ஜானே லாத்ராப் ஸ்டேன்போர்ட் (Jane Lathrop Stanford) அவர்களுடைய ஒரே மகனின் பெயர் லேலண்டு ஸ்டேன்போர்ட் ( Leland Stanford).

யார் சாதாரணமானவர்கள், அழுக்கானவர்கள் என்று கருதப்பட்டார்களோ, அவர்களே ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவக்கூடிய அளவுக்கு பெரும்பணக்காரர்கள் என்பது மிகவும் அதிர்ச்சிதரும் உண்மை. இந்நிகழ்வு வெளித்தோற்றத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடுபவர்களுக்கு ஒரு சாட்டையடி.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவைக் கொல்வதற்கு ஒருகூட்டம் அலைந்துகொண்டிருந்தாலும், அவர் வெளிப்படையாக மக்களிடம் பேசுகிறார். இதைப் பார்க்கும் எருசலேம் நகரத்தவர், "மக்கள் இவரைக் கொல்ல வழிதேடும்போது, இவரோ வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருக்கிறாரே" என்று பேசிவிட்டுச் சொல்கின்றனர், "மெசியா எங்கிருந்து வருவார் என்று யாவக்கும் தெரியாது, ஆனால் இவர் எங்கிருந்து வருகிறார் என்று நமக்குத் தெரியுமே" என்கின்றனர். வேறுவிதமாகச் சொல்லவேண்டுமென்றால் யோவான் நற்செய்தி 1:46 ல் நத்தனியேல் இயேசுவைப் பார்த்து, "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ" என்று கேட்பதுபோன்று இருக்கிறது இவர்களின் பேச்சு. இது நாசரேத்து/கலிலேயாப் பகுதியிலிருந்து வரக்கூடியவர்கள் என்றால் ஒன்றும் தெரியாதவர்கள், பாவிகள். அவர்களிடமிருந்து நல்லது ஒன்றும்வராது என்ற முன்சார்பு எண்ணத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது.

பல நேரங்களில் நாமும்கூட இன்றைய நற்செய்தியில் வரும் எருசலேம் நகரத்தவர் போன்று முன்சார்பு எண்ணத்தோடு வாழ்கிறோம். இவன் இப்படித்தான், அந்த இடத்திலிருந்து வரக்கூடியவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்ற முன்சார்பு எண்ணத்தோடு நாம் வாழ்ந்து வருகின்றோம். நிறைய நேரங்களில் இது தவறாகவே இருக்கின்றது. அதேவேளையில் நம்முடைய உறவு வாழ்வுக்கும் இது மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கின்றது.

"உங்கள் வாழ்வு உங்கள் எண்ணத்தால் ஏற்படுகின்றது" என்பார் மார்க்ஸ் ஆரலியஸ் என்ற அறிஞன். ஆகவே பிறரைப் பற்றிய தவறான, முன்சார்பு எண்ணங்களைத் தவிர்ப்போம். மற்றவர் நம்மைவிட உயர்ந்தவர் என மனநிலையோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நற்செய்தி வாசகம்

இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1,2, 10, 25-30

இன்னொரு முறை முயற்சி செய்

நிகழ்வு

குரு மரணப்படுக்கையில் இருந்தார். அவருக்கு அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான். குரு மெல்ல அவனை அழைத்து, "சீடனே! ஏன் கவலைப்படுகிறாய்? உனக்காக நான் எப்பொழும் இருப்பேன். கலக்கம் அடையாதே." உடனே கலங்கிய கண்களுடன் சீடன் கூறினான், "குருவே! நீங்கள் கூறியபடி இறைவேண்டலும் தியானமும் செய்து வருகிறேன். ஆனால், ஆன்மீக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லை... எதுவரை எனது ஆன்மீக பயிற்சியை தொடர்வது? உங்கள் காலத்திற்கு பிறகு யாரிடம் நான் கேட்பது?"

அணையும் விளக்கு பிரகாசகமாகச் சுடர்விடும் என்பதைப்போல மிகவும் பிரகாசமான முகத்துடன் சீடனைப் பார்த்தார் குரு. "கவலைகொள்ளாதே. இந்த கட்டிலுக்கு அடியில் ஒரு பெட்டி இருக்கிறது. அதனுள்ளே உனக்குப் பிற்காலத்தில் போதிக்கவேண்டியதை வைத்திருக்கிறேன்... அது அனைத்து விடயங்களையும் போதிக்கும். எனது போதனை தேவைப்படும்பொழுது மட்டும் பெட்டியை திறந்து பார்... எனது ஆசிகள்" எனக் கூறியபடி தன்னுடைய இறுதி மூச்சைவிட்டார். நாட்கள் சென்றன. தனது ஆன்மீகச் சாதனையில் தனக்கு பலன் கிடைப்பதாக சீடனுக்குத் தெரியவில்லை. 'இறைவேண்டலையும் தியானத்தையும் விட்டுவிடலாமா' என எண்ணினான். உடனே அவனுக்கு அவனுடைய குரு சொன்னது நினைவுக்கு வந்தது. மறுகணம் அவன் குருவின் போதனையைக் கேட்க பெட்டியைத் திறந்தான். பெட்டியைத் திறந்த அடுத்த நொடியில் அவன் ஞானம் அடைந்தான்.

நாட்கள் சென்றன. சீடன் கூறிய கருத்துகளை மக்கள் ஏற்காமல் கலகம் செய்தனர். மீண்டும் குருவின் போதனையைக் கேட்க பெட்டியை திறந்தான்... உற்சாகத்தோடு பணிசெய்யத் தொடங்கினான். மக்களும் அவனுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். நாட்கள் சென்றன. இப்பொழுது சீடன் தனது இறுதி காலத்தை அடைந்திருந்தான். அப்பொழுது அந்த சீடன் இப்பொழுது அவன் குரு தனது சீடனைக் கூப்பிட்டுப் பேசத் தொடங்கினான்: "எனது அன்பிற்கினிய சீடனே! எனது குரு எனக்கு அளித்த போதனையை உனக்கு அளிக்கிறேன்... எனது போதனை தேவையானபொழுது மட்டும் இந்தப் பெட்டியை திற. எனது போதனை கிட்டும்." இவ்வாறு சொல்லிவிட்டு அந்த சீடன் இறந்துபோனான்.

இப்பொழுது சீடனுக்குச் சீடனாகப் பரமசீடன் குருவாக மாறியிருந்தான். அவன் தனது ஆன்மீகப் பயணத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதை உணர்ந்தான். உடனே குருவின் போதனையை அறிய பெட்டியை திறந்தான். அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: "இன்னொரு முறை முயற்சி செய்". இதைப் படித்ததும் அவன் புதிய உத்வேகத்துடன் இன்னும் சிறப்பாகப் பணிசெய்யத் தொடங்கினான்.

சீடனுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தொய்வு ஏற்படும்பொழுது 'இன்னொரு முறை முயற்சிசெய்' என்ற தாரக மந்திரத்தைப் பயன்படுத்தினால், அது நம்முடைய வாழ்வை இன்னொரு கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்து கிடையாது.

பிரச்சினைகளைக் கண்டு பின்வாங்காத இயேசு

நற்செய்தி வாசகத்தில் இயேசுவைக் கொல்வதற்கான சூழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படியிருந்தும் அவர் யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கின்றார்.

இயேசு ஓய்வுநாளில் உடல்நலம் குன்றியிருந்தவரைக் குணப்படுத்திவிட்டார் என்பதற்காகவும் தன்னை இறைமகன் என்று அழைத்துவிட்டார் என்பதற்காகவும் (இறைமகனை இறைமகனை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை!) யூதர்கள், அதிலும் குறிப்பாக பரிசேயக்கூட்டம் இயேசுவைக் கொல்வதற்கு வழிதேடுகின்றது (யோவா 5: 1-30). ஆனாலும் இயேசு அவர்கள் தன்னைக் கொல்வதற்கு சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதற்காக தன்னுடைய இலக்கிலிருந்து பின்வாங்கிவிடவில்லை. மாறாக வெளிப்படையாக மக்களுக்குப் போதிக்கின்றார். இதைப் பார்த்துவிட்டுத்தான் ஒருசிலர், "இவர் இங்கு வெளிப்படையாகப் பேசுகிறாரே... ஒருவேளை தலைவர்கள் இவரை மெசியா என்று ஏற்றுக்கொண்டுவிட்டார்களோ" என்று பேசிக்கொள்கிறார்கள். அதற்கு இயேசு என்ன பதிலளித்தார் என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்

இயேசுவை மெசியா என ஏற்க மறுத்த யூதர்கள்

யூதர்கள் மத்தியில், 'மெசியா எங்கிருந்து வருவார் என்று யாருக்கும் தெரியாது' என்ற எண்ணம் இருந்தது. இதன்மூலம் இயேசுவின் ஊர் எது? அவருடைய பெற்றோர் யார்? என்பதை நன்கறிந்திருந்த அவர்கள், 'அவர் மெசியா அல்ல' என்ற கருத்தினை முன்வைத்தார்கள். அப்பொழுதுதான் இயேசு, "நான் யார்? என் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் என்னை அனுப்பியவரை உங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரியும்" என்கின்றார். இவ்வாறு இயேசு தான் இறைமகன் என்பதை யூதர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார். அவர்களோ அவர் தன்னைக் கடவுளுக்கு இணையாக்கிக் கொண்டார் என்று அவரைப் பிடிக்க முயல்கிறார்கள். ஆனாலும் அவருடைய நேரம் அவருடைய பாடுகளின் நேரம் வராததால், அவர்களால் அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை.

சிந்தனை

உண்மையாய் இருக்கின்றது ஓராயிரம் பிரச்சினைகள் வரலாம். இயேசுவுக்கு அப்படித்தான் பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகள் வந்துகொண்டிருந்தன. இயேசு அவற்றைக் கண்டு பயப்படாமல், துணிந்து நின்றார். இறுதியில் வெற்றியும் கண்டார். நாமும் நம்முடைய வாழ்வில் வரும் பிரச்சினைகளைக் கண்டு மனம் தளர்ந்து போகாமல், இன்னொரு முறை முயற்சி செய்து கொண்டே இருந்து, இயேசு கண்ட இறையாட்சிக் கனவை நனவாக்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a,12-22

"அவர்களை வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் சோதித்தறிவோம்"

நிகழ்வு

மிகச்சிறந்த மறைபோதகரான ஜார்ஜ் முல்லரிடம் இளைஞன் ஒருவன் வந்தான். அவன் அவரிடம், "ஐயா! உங்களுடைய இறைவாக்குப் பணியின் வெற்றிக்குக் காரணமென்ன?" என்று கேட்டான். அதற்கு அவர், "கிறிஸ்துவோடு நான் சிலுவையில் அறையப்படேன், என் சுயம் மரித்தது. இதுவே என்னுடைய இறைவாக்குப் பணியின் வெற்றிக்குக் காரணம்" என்றார்.

"ஐயா! மீண்டுமாக உங்களிடம் கேள்விகேட்கின்றேன் என்று என்மேல் சினம்கொள்ளாதீர்கள்... சுயம் மரித்தல் என்றால் என்ன?" என்றான். உடனே ஜார்ஜ் முல்லர் அவனிடம், "தம்பி! இதுகுறித்து நீ இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் எனில், அருகே உள்ள கல்லறைத் தோட்டத்திற்குச் செல்... அங்குள்ள கல்லறைகளுக்கு முன்பாக நின்றுகொண்டு வாய்க்கு வந்தபடி பேசு. பின்னர் அந்தக் கல்லறைகளில் இருப்போரைப் புகழ்ந்து பேசு. அப்போது என்ன நடக்கின்றது என்று பார். அதைப் பார்த்துவிட்டு என்னை வந்து சந்தி" என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, அருகில் இருந்த கல்லறைத் தோட்டத்திற்குச் சென்று, ஜார்ஜ் முல்லர் அவனிடம் சொன்னதுபோன்று செய்துவிட்டு, அவரிடம் திரும்பி வந்தான்.

"தம்பி! நான் சொன்னதுபோல் செய்தாயா?" என்று கேட்டார் ஜார்ஜ் முல்லர். அந்த இளைஞனோ, "ஆமாம் ஐயா! நீங்கள் சொன்னதுபோல் கல்லறைத் தோட்டத்திற்குச் சென்று, அங்கிருந்த கல்லறைகளுக்கு முன்பாக நின்றுகொண்டு திட்டினேன், வசைபாடினேன், வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினேன். சிறிதுநேரம் கழித்து கல்லறையில் இருந்தவர்களைப் புகழ்ந்து பேசினேன்" என்றான். அவன் சொன்னதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ஜார்ஜ் முல்லர் அவனிடம், "நீ கல்லறைகளில் இருந்தவர்களைப் பார்த்துத் திட்டும்போதும் அவர்களைப் புகழ்ந்து பேசியபோதும் அவர்கள் ஏதாவது எதிர்வினை (React) ஆற்றினார்களா?" என்றார். அவனோ, "இல்லை" என்றான். "இதற்குப் பெயர்தான் சுயம் மரித்தல் என்பது. நான் என்னுடைய இறைவாக்குப் பணியைச் செய்யும்போது பலரும் என்னைத் திட்டினார்கள். அதற்காக நான் மனமுடைந்து போய் என்னுடைய பணியை நிறுத்திக்கொள்ளவில்லை. ஒருசிலர் என்னுடைய பணியைப் பார்த்துவிட்டு என்னை வானளாவப் புகழ்ந்தார்கள். அதற்காக நான் வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கவில்லை. எப்போதும் போல் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கைவைத்து என்னுடைய பணியைத் தொடர்ந்து செய்துவந்தேன். அதனால்தான் என்னுடைய இறைவாக்குப் பணியில் வெற்றிகண்டேன்" என்றார் அவர்.

இறைவாக்குப் பணியில் அல்லது நற்செய்திப் பணியில் இன்பமும் துன்பமும் ஏற்றமும் இறக்கமும் வரலாம். அவற்றால் பாதிக்கப்படாது, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துப் பணிசெய்தால் வெற்றிபெறலாம் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

இறைப்பற்றில்லாதவர்கள் இறைப்பற்றுக்கொண்டோருக்கு எதிராக எதிராகச் செய்யும் சூழ்ச்சிகள்

சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், இறைப்பற்றில்லாதவர்கள் இறைப்பற்றுள்ளோருக்கு அல்லது இறையடிகளுக்கு எதிராகச் செய்யும் சூழ்ச்சிகளையும் தன்னுடைய அடியார்களுக்கு இறைவன் எப்படியெல்லாம் பாதுகாப்பு அளிக்கின்றார் என்பதையும் குறித்து எடுத்துச் சொல்கின்றது.

இறையடியார்கள் இறைவனைப் பற்றிய அறிவைப் பெற்றிருக்கிறார்கள் என்றும் அவர்கள் தங்களை இறைவனுடைய பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்கின்றார்கள் என்றும் அவர்களுடைய செயல்கள் தங்களுக்குத் தொல்லையாய் இருக்கின்றது என்றும் இறைப்பற்றில்லாதவர்கள் இறையடியார்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றார்கள். இங்கு சொல்லப்படும் 'இறையடியார்கள்' என்ற இடத்தில் திருமுழுக்கு யோவானையும் இயேசுவையும் பொருத்திப் பார்த்தால் இந்த இறைவாக்குப் பகுதி நமக்குச் சொல்லவரும் செய்தி நன்றாக விளங்கும். திருமுழுக்கு யோவான் ஏரோது மன்னனின் தவற்றைச் சுட்டிக்காட்டினார் அதனால் அவன் திருமுழுக்கு யோவானை பெரிய அச்சுறுத்தலாக உணர்ந்தான். இயேசுவோ இறைவனை தனக்குத் தெரியும் என்றும் (யோவா 8:55) இறைவன் தன்னுடைய தந்தை என்றும் (மத் 27: 39-43) சொன்னதால் பரிசேயக் கூட்டம் அவரைக் கொலைசெய்யத் துணிகின்றது. ஆனாலும் இறையடியார்களை இயேசுவை இறைவன் கைநெகிழவில்லை என்பதுதான் உண்மை.

இறையடியார்களுக்கு இறைவன் அளிக்கும் உடனிருப்பு

இன்றைய முதல் வாசகம் இறைப்பற்றில்லாதவர்கள், இறைப்பற்றுக்கொண்டவர்களுக்கு எதிராகச் செய்யும் சூழ்ச்சிகளைக் குறித்துப் பேசும் அதே வேளையில், இறையடியார்களுக்கு இறைவன் தரும் பாதுகாப்பையும் குறித்துப் பேசுகின்றது. "நீதிமான்கள் கடவுளின் மக்கள். எனவே அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவர்களிடமிருந்து அவர்களை விடுவிப்பார்" என்று இறைப்பற்றில்லாதவர்கள் பேசும் வார்த்தைகளே அதற்குச் சான்றாக இருக்கின்றது. எனவே, இறைப்பணி செய்கின்ற நாம் எதிர்வரும் எதிர்ப்புகளைக் கண்டு பயந்து, பின்வாங்காமல், இறைவன் நம்மோடு இருக்கின்றார் என்ற மனவுறுதியோடு இறைப்பணி செய்யத் தயாராவோம்.

சிந்தனை

'என்னை அனுப்பியர் என்னோடு இருக்கின்றார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை' (யோவா 8:29) என்பார் இயேசு. இயேசு தன்னுடைய பணிவாழ்வு முழுவதும் இறைவன் தன்னோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து, மனவுறுதியோடு பணிசெய்தது போன்று, நாமும் மனவுறுதியோடு பணிசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!