Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   04  ஏப்ரல் 2019  
                       தவக்காலம் 4ம் வாரம் வியாழன் - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-14


அந்நாள்களில் சீனாய் மலையில் ஆண்டவர் மோசேயை நோக்கி, "இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர். நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக்குட்டியை வார்த்துக்கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, `இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே' என்று கூறிக்கொள்கிறார்கள்'' என்றார்.

மேலும் ஆண்டவர் மோசேயிடம், "இம்மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள். இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்'' என்றார்.

அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, "ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமை மிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்? `மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்' என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்? உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்.

உம் அடியாராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்; நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே'' என்று வேண்டிக்கொண்டார்.

அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:106: 19-20. 21-22. 23 (பல்லவி: 4a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே! உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூரும்!

19 அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்; 20 தங்கள் மாட்சிக்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்துகொண்டனர். பல்லவி

21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்; 22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். பல்லவி

23 ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 3: 16

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 31-47

அக்காலத்தில் இயேசு யூதர்களை நோக்கிக் கூறியது: "என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது. என்னைப்பற்றிச் சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப்பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும்.

யோவானிடம் ஆள் அனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன்.

யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள். யோவான் பகர்ந்த சான்றைவிட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.

"என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார். நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை; அவரது உருவைக் கண்டதுமில்iலை. அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை; ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை. மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே! அம்மறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது.

வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை. மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை. நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே! உங்களால் எப்படி என்னை நம்ப இயலும்? தந்தையின் முன்னிலையில் உங்கள்மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார். நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைப் பற்றித்தான் எழுதினார். அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்பவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?"

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  விடுதலைப் பயணம் 32: 7-14

மன்னிக்கும் இறைவன்

நிகழ்வு

பிலிப்பைன்ஸ் நாட்டில் குருவானவர் ஒருவர் இருந்தார். அவர் குருமாணவராகப் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு பாவம் செய்தார். அந்தப் பாவத்திற்காக அவர் மனம்வருந்தி, நல்லதொரு ஒப்புரவு அருட்சாதனத்தை மேற்கொண்டபோதும், ஏனோ அவர் செய்த பாவம் அவருடைய மனதை விட்டு நீங்காமல், அவரை முள்ளாகத் தைத்துக்கொண்டே இருந்தது.

இந்நிலையில் அவர் பங்குத்தந்தையாக இருந்த ஆலயத்தில் நடைபெறும் திருப்பலிக்கு மூதாட்டி ஒருத்தி நாள்தவறாமல் வந்துபோனார். அவர், கடவுள் தனக்குக் காட்சி கொடுப்பதாகவும் அந்தக் காட்சியில் அவர் அந்த மூதாட்டிக்கு பல உண்மைகளை வெளிப்படுத்துவதாகவும் சொல்லிவந்தார். ஒருநாள் அந்த மூதாட்டியை அழைத்த குருவானவர், "கடவுள் உங்களுக்குக் காட்சிதருவது உண்மை என்றால், நான் குருமாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு பாவம் செய்தேன். அது என்ன பாவம் என்று கடவுளின் கேட்டுச் சொல்லுங்கள்" என்றார். மூதாட்டியும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

ஒருவாரம் கழிந்தது. ஒருவாரத்திற்குப் பிறகு குருவானவர் அந்த மூதாட்டியைக் கோவிலில் சந்தித்து, "நான் கேட்டது என்னவாயிற்று?" என்று கேட்டார். அதற்கு அந்த மூதாட்டி, "நான் கடவுளின் கேட்டேன், 'எங்கள் பங்குத்தந்தை குருமாணவராக இருக்கும்போது செய்த பாவம் என்ன?' என்று. அதற்கு அவர் என்னிடம், "அதுவா! அவர் செய்த பாவத்தை எப்போதோ நான் மன்னித்து மறந்துவிட்டேன்... இப்போது அது எனக்கு நினைவில் இல்லை என்றார்" என்றார். இதைக் கேட்ட அந்த குருவானவர், "கடவுள் என்னுடைய பாவங்கள் மன்னித்து மறந்துவிட்டாரா? இனிமேலும் நான் அதை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கமாட்டேன்" என்று மகிழ்ச்சியடைந்தார்.

கடவுள், நாம் செய்த குற்றங்களை எல்லாம் மன்னித்து, நம்மை அவருடைய பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறார் என்ற உண்மையை இந்நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகமும் அத்தகைய செய்தியைத்தான் நமக்கு எடுத்துரைக்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

உண்மைக் கடவுளை மறந்து பொற்கன்றுக்குட்டி செய்து வழிபட்ட இஸ்ரயேல் மக்கள்

விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், மோசே சீனாய் மலைக்குச் சென்ற வேளையில், மலைக்கு கீழே இருந்த மக்கள் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து அதை வழிபடத் தொடங்குகின்றார்கள். இதைப் பார்த்துவிட்டு ஆண்டவராகிய கடவுள் மோசேயிடம், "நீ எகிப்திலிருந்து அழைத்து வந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர்" என்கின்றார்.

இங்கு ஆண்டவராகிய கடவுள் மோசேயிடம் பேசிய வார்த்தைகளை மிக நுட்பமாகக் கவனிக்கவேண்டும். இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து விடுவித்த கடவுளை மறந்து, பொன்னாலான கன்றுகுட்டியைச் செய்து வழிபட்டதால், கடவுள் அவர்களைத் தன்னுடைய மக்கள் என அழைக்காமல், மோசேயிடம், "உன் மக்கள்" என அழைக்கின்றார். இதிலிருந்து நாம் ஓர் உண்மையை உணர்ந்து கொள்ளவேண்டும். எப்போதெல்லாம் நாம் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்கின்றோமோ, அப்போதெல்லாம் நாம் கடவுளின் மக்களாக இருப்பதற்கான தகுதியை இழந்துவிடுகின்றோம் என்பதாகும்.

இஸ்ரயேல் மக்கள் தன்னை மறந்து, கன்றுக்குட்டியை வழிபடத் தொடங்கியதால், கடவுள் அவர்கள்மேல் சினம்கொண்டு அவர்களை அழித்தொழிக்க முடிவுசெய்கின்றார். அப்பொழுது மோசே கடவுளிடம் என்ன பேசினார்? அவர் எப்படி கடவுளின் எண்ணத்தை மாற்றினார்? என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

தன் எண்ணத்தை மாற்றிக்கொண்ட கடவுள்

கடவுள் இஸ்ரயேல் மக்களை அழித்தொழிக்கப் போவதாகச் சொன்னதும், மோசே அவரிடம், "நீர் அவர்களை அழித்துவிட்டால், எகிப்தியர்கள், 'இஸ்ரயேலரை அழித்தொழிக்கத்தான் அவர்களுடைய கடவுள் அவர்களை இங்கிருந்து கூட்டிக்கொண்டு போனாரோ' என்று பேசுவார்கள் என்பதையும் ஆபிரகாமிடம் அவர், 'இஸ்ரயேல் மக்களைப் பெரிய இனமாக்குவேன்' என்று உடன்படிக்கை செய்ததையும் எடுத்துக்கூறி, இஸ்ரயேல் மக்களுக்கு அவர் கொடுக்க இருந்த தண்டனையிலிருந்து தப்புவிக்கின்றார்.

இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராகச் செய்த குற்றம் மன்னிக்க முடியாதது என்றாலும், மோசே கடவுளிடம் அவர்களுக்காகப் பரிந்துபேசியதால் அவர்களை அவர் தண்டியாது விடுகின்றார். இதன்மூலம் 'பாவிகள் அழிந்துபோகவேண்டும் என்பதல்ல, மாறாக அவர்கள் மனம்மாறவேண்டும் என்றே கடவுள் விரும்புகின்றார்' (எசே 18:23) என்ற இறைவார்த்தை நிரூபணமாகிறது.

சிந்தனை

'தீயோரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, நீதியையும் நேர்மையையும் கடைபிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி' (எசே 18:21) என்பார் இறைவாக்கினர் எசேக்கியேல். ஆகவே, நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் இறைவனிடம் நம்முடைய குற்றங்களை அறிக்கையிட்டு, மனம்மாறி புதியதொரு வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
யோவான் 5: 31-47

இயேசுவின்மீது நம்பிக்கைகொள்ளா மனிதர்கள்!

நிகழ்வு

நண்பர்கள் இருவர் தேசிய நெடுஞ்சாலையில் காரை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றனர். இடையில் ஓரிடத்தில் இப்படியோர் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது: பால வேலை நடந்துகொண்டிருப்பதால், மாற்றுப்பாதையில் செல்லவும்." இவ்வறிவிப்பைப் படித்ததும் காரை ஓட்டிக்கொண்டு வந்த நண்பர் காரை மாற்றுப்பாதையில் ஓட்ட முயன்றார்.

உடனே பக்கத்தில் இருந்த நண்பர், "இந்த அறிவிப்பைச் சும்மா வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்... இதோ பார்! இப்பொழுதுதான் ஏதோவொரு வாகனம் இந்த வழியாகச் சென்றதற்கான தடம் இருக்கின்றது... அதனால் வாகனத்தை மாற்றுப்பாதையில் ஓட்டிச் செல்லாமல், இந்தப் பாதையிலேயே ஓட்டிச் செல்" என்றார்.

நண்பர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, காரை ஓட்டிக்கொண்டு வந்த நண்பர் காரை வழக்கமான பாதையில் வேகமாக ஓட்டத் தொடங்கினார். ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தள்ளி பால வேலைகள் முடிவுறாமல், அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. சற்று வேகமாகச் சென்றிருந்தாலும் இருவரும், மேலிருந்து கீழே விழவேண்டி இருந்திருக்கும்! எப்படியோ வாகனத்தை ஓட்டிச்சென்ற நண்பர் வாகனத்தை கஷ்டப்பட்டு நிறுத்தினார். பின்னர் வாகனத்தைத் திரும்பிக்கொண்டு, மாற்றுப்பதைக்கு வரத்தொடங்கினார். அப்படி வரும்பொழுது இவ்வாறு ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது: "பால வேலை நடைபெறுகின்றது என்று நாங்கள் சொன்னோம். அப்பொழுது நம்பவில்லை... இப்பொழுது நீங்கள் நம்புகிறீர்களா... இனிமேலானது பார்த்துச் செல்லவும்." இதைப் படித்துப்பார்த்துவிட்டு அவர்கள் அவமானத்தால் உறைந்துபோனார்கள்.

அறிவிப்புப் பலகையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதை நம்பாமல் போய், அவமானப்பட்டுத் திரும்பிய அந்த இரண்டு நண்பர்களைப் போன்றுதான் பலரும் யார் சொல்வதையும் கேட்காமல், யாரையும் நம்பாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தானது. நற்செய்தியிலும் இயேசுவை நம்பாத யூதர்களைக் குறித்து வாசிக்கின்றோம். யூதர்களின் இத்தகைய போக்கிற்கு இயேசு எப்படிப் பதிலளித்தார் என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவே இறைமகன்

இயேசு, தான் இறைமகன் என்பதை பல்வேறு சான்றுகளின் வழியாக யூதர்களுக்கு எடுத்துக்கூறினார். அவர்களோ அவரை நம்பாமலும் ஏற்றுக்கொள்ளாமலும் இருந்தார்கள். பொதுவாக யூதர்கள், ஒருவர் தருகின்ற சான்றினை ஏற்றுக்கொள்வது கிடையாது; குறைந்தது இருவராவது வேண்டும். அப்பொழுதுதான் அச்சான்றானது ஏற்றுக்கொள்ளப்படும் (எண் 35:30; இச 17:6). ஆனால், இயேசுவோ மூன்றுவிதமான சான்றுகளின் வழியாக தான் இறைமகன் என்பதை யூதர்களுக்கு எடுத்துரைக்கின்றார். அந்த மூன்று சான்றுகள் என்னென்ன என்று இப்பொழுது பார்ப்போம்.

திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பற்றி சொன்னது

இயேசு இறைமகன் என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கக்கூடிய முதன்மையான சான்று, திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பற்றிச் சொன்னது. அவர் இயேசுவை கடவுளின் ஆட்டுக்குட்டி என்றும் (யோவா 1:29) இறைமகன் என்றும் (யோவா 1:36) எடுத்துச் சொன்னார்; அவரைக் குறித்துச் சான்றும் பகர்ந்தார். அப்படியிருந்தும் யூதர்கள் இயேசுவை இறைமகன் என்றோ மெசியா என்றோ ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அவர் தன்னை இறைமகன் என்று சொன்னதற்காக (யோவா 5:17) அவரோடு பிரச்சினையில் ஈடுபடுகிறார்கள்; அவரைக் கொள்வதற்கும் முயல்கிறார்கள்.

இயேசு செய்த அருமடையாளங்கள்

இயேசு இறைமகன் என்று எடுத்துரைக்கும் இரண்டாவது சான்று, அவர் செய்துவந்த செயல்கள் மற்றும் அவர் ஆற்றிவந்த அருமடையாளங்கள். இவைகளெல்லாம் இயேசுவே இறைமகன் என்பதை எடுத்துக் கூறுகின்றன. நற்செய்தியில் வரும் நிக்கதேம், இயேசுவைப் பற்றிச் சொல்கின்ற, "ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது" (யோவா 3:2) என்ற வார்த்தைகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன. ஆகையால், இயேசு இறைமகன் என்பதை அவர் ஆற்றிவந்த பல்வேறு அருமடையாளங்களின் வழியாகவும் நாம் அறிந்துகொள்ளலாம்.

தந்தைக் கடவுள் இயேசுவைப் பற்றிச் சொன்ன வார்த்தைகள்

இயேசு இறைமகன் என்று எடுத்துரைக்கும் மூன்றாவது, அதே நேரத்தில் மிக முக்கியமான சான்று, தந்தைக் கடவுள் இயேசுவைப் பற்றி உரைக்கும் வார்த்தைகள். இயேசு திருமுழுக்குப் பெற்ற பொழுதும் உருமாற்றம் அடைந்தபொழுதும் "என் அன்பார்ந்த மைந்தன் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்ற வார்த்தைகள் (மத் 3:17; 17:5) இதை உறுதிசெய்வதாக செய்கின்றன. இப்படியெல்லாம் இயேசு, தான் இறைமகன் என்று எடுத்துரைத்தபோதும், யூதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததுதான் மிகவும் வேதனையான விடயம்.

சிந்தனை

'இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இருந்திருக்கிறார்' என்பார் யோவான் (1யோவா 4:15). ஆகையால், நாம் இயேசுவே இறைமகன் ஏற்றுக்கொண்டு அவருடைய விழுமியங்களின்படி வாழ முயற்சி செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!