Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   03  ஏப்ரல் 2019  
                       தவக்காலம் 4ம் வாரம் புதன் - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 8-15

ஆண்டவர் கூறியது: தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்; நாட்டை மீண்டும் நிலைநாட்டவும் பாழடைந்து கிடக்கும் உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும் நான் உம்மைப் பாதுகாத்து மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக ஏற்படுத்தினேன். சிறைப்பட்டோரிடம் 'புறப்படுங்கள்' என்றும், இருளில் இருப்போரிடம் 'வெளிப்படுங்கள்' என்றும் சொல்வீர்கள்.

பாதையில் அவர்களுக்கு மேய்ச்சல் கிடைக்கும்; வறண்ட குன்றுகள் அனைத்திலும் பசும் புல்வெளிகளைக் காண்பர். அவர்கள் பசியடையார்; தாகமுறார்; வெப்பக் காற்றோ, வெயிலோ, அவர்களை வாட்டுவதில்லை.

ஏனெனில் அவர்கள்மேல் கருணைகாட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார்; அவர் அவர்களை நீரூற்றுகள் அருகே வழிநடத்துவார். என் மலைகள் அனைத்தையும் வழியாக அமைப்பேன்; என் நெடுஞ்சாலைகள் உயர்த்தப்படும்.

இதோ, இவர்கள் தொலையிலிருந்து வருவார்கள்; சிலர் வடக்கிலிருந்தும் சிலர் மேற்கிலிருந்தும் சிலர் சீனிம் நாட்டிலிருந்தும் வருவார்கள். வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; மண்ணுலகே, களிகூரு; மலைகளே, அக்களித்து ஆர்ப்பரியுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார்.

சீயோனோ, 'ஆண்டவர் என்னைக் கை நெகிழ்ந்துவிட்டார்; என் தலைவர் என்னை மறந்துவிட்டார்' என்கிறாள். பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:145: 8-9. 13cd-14. 17-18 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.

8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

13உன ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். 14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். பல்லவி

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி

 
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 11: 25a, 26

'உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே, என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்,' என்கிறார் ஆண்டவர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறந்தோரை தந்தை எழுப்பி, அவர்களை வாழவைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-30

அக்காலத்தில் இயேசு யூதர்களிடம், "என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்" என்றார். இவ்வாறு அவர் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: "மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை மகன் மேல் அன்புகொண்டு தாம் செய்யும் அனைத்தையும் அவருக்குக் காட்டுகிறார்; இவற்றைவிடப் பெரிய செயல்களையும் அவருக்குக் காட்டுவார். நீங்களும் வியப்புறுவீர்கள். தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழ வைக்கிறார். தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை.

என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார். அவர் மானிடமகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார். இதுபற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்.

நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

தந்தை மகன் உறவு தம்முடைய உறவு என்பதனை அற்புதமாக விளக்குகின்றார்.

இந்த உறவிலே உயர்ந்தவர் தந்தையே.

மகன் அவருடைய அறிவுரை பெற்றே வாழ வேண்டும்.

நம்மோடு கொண்டுள்ள உறவிலும் அத்தகைய அம்மையப்பன் உறவு சொல்லப்படுகின்றது.

பரலோக தந்தையே என்று மன்றாட கற்றுக் கொடுக்கின்றார்.

நாமும் அவரது அறிவுரையை ஏற்று வாழ்ந்தால் நம்முடைய வாழ்வு சிறக்கும்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 நற்செய்தி வாசகம்

இறந்தோரை தந்தை எழுப்பி, அவர்களை வாழவைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-30

மறையுரைச் சிந்தனை

நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்

ஒரு சமயம் மாவீரர் அலெக்ஸ்சாண்டர் தன்னிடம் இருக்கின்ற எல்லாவற்றையும் மக்களுக்கு வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தார். ஏறக்குறைய அவருடைய அரச கருவூலத்தில் இருக்கின்ற எல்லாமும் தீர்ந்துவிடும் அளவுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த அவருடைய அவையில் இருந்த ஒருவர், "மன்னர் பெருமகனாரே, தாங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் மக்களுக்குக் கொடுத்துவிட்டால், உங்களுக்கென்று என்ன இருக்கும்?" என்று கேட்டார். அதற்கு அவர், "என்னிடத்தில் நம்பிக்கை என்று இருக்கிறது அது போதும். நான் எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு" என்றார்.

நம்பிக்கை என்று ஒன்று இருக்கின்ற போது எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தனது நீண்ட போதனையை தொடங்குகிறார். இது யோவான் நற்செய்தியில் இடம்பெறும் முதல் நீண்ட போதனையாகும். இதில் இயேசு கிறிஸ்து நம்பிக்கையினால் விளையும் நன்மைகளைக் குறித்துப் பேசுகிறார். "என் வார்த்தைகளைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்" என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் எதைச் சுட்டிக்காட்டுகின்றது என்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

விவிலிய அறிஞர்கள் 'கடவுளை நம்புவது' என்பதில் மூன்று முக்கிய உண்மைகள் அடங்கி இருப்பதாகச் சொல்வார்கள். முதலாவது கடவுள் நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வதாகும், இரண்டாவதாக இயேசு போதித்த போதனைகளின் படி வாழ்வதாகும். மூன்றாவதாக தூய ஆவியானவரும், இறைமகனாகிய இயேசு கிறிஸ்துவும் அருளக்கூடிய உதவிகளை நம்முடைய வாழ்வில் உணர்வதாகும். ஆக, எவர் ஒருவர் கடவுளின் அன்பை உணர்ந்து, தூய ஆவியின் உதவிகளை தங்களுடைய வாழ்வில் ஏற்றுக்கொண்டு, இயேசு போதித்த போதன்களின் படி எத்தகைய துன்பம் வந்தாலும் மனவுறுதியோடு வாழ்கிறாரோ அவர் இறைவன் தரக்கூடிய நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வார் என்பதுதான் இயேசு இங்கே வலியுறுத்திக்கூறும் செய்தியாக இருக்கின்றது.

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு இறைவன் மீது நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ளும் அதே வேளையில், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்காமல், இறைவன்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்போர் அவர்தரக்கூடிய நிலைவாழ்வைப் பெறாமல் போவார் என்பது வேதனையான செய்தி.

அடுத்ததாக இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, இறைவனின் மீது நம்பிக்கைக் கொள்ளக்கூடியவர் யாவரும் புதிய ஓர் உறவுநிலைக்குள் நுழைவார்கள் என்று விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள். எந்த மாதிரியான உறவு என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம். முதலாவது அவர்கள் (கடவுள்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோர்) கடவுளோடு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வார்கள். கடவுளோடு நல்லுறவு ஏற்படும்போது பயத்திற்கு அங்கு இடமில்லாமல் போய்விடும். இரண்டாவதாக கடவுள் மீது நம்பிக்கை வைத்து வாழ்வோர் தங்கள் அயலாரோடும் மற்றவரோடும் நல்ல உறவினை ஏற்படுத்திக்கொள்வார்கள். இவ்வாறு இறைவன் நம்முடைய விண்ணகத் தந்தை, நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்றொரு உறவுநிலை அங்கு உண்டாகும்.

மூன்றாவதாக, கடவுளை நம்பிக்கை வாழ்வோர் தன்னோடும் நல்லுறவினை ஏற்படுத்திக்கொள்வார்கள். எப்படி என்றால் கடவுள் தன்னை முழுமையாய் அன்பு செய்கிறார், தன்னோடு இருக்கிறார் என்று உணர்கின்ற ஒருவர் இயல்பாகவே தன்னோடு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வார். கடவுளோடும் பிறரோடும் தன்னோடும் நல்லுறவை ஏற்படுத்துகின்ற ஒருவர் விண்ணகத்தில் மட்டுமல்ல, இந்த மண்ணகத்தில் நிலை வாழ்வை பெறுவது என்பது உறுதி.

நாம் இறைமகன் இயேசுவின் வார்த்தைகளை கேட்டு, அதன்மூலம் எல்லாம் வல்ல இறைவனிடம் நம்பிக்கை கொண்டு வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் இயேசுவின் வார்த்தைகளை பெயரளவுக்கு கேட்டு, அதன்படி வாழாமல், நம்முடைய மனம்போன போக்கில் வாழத் தொடங்கிவிடுகின்றோம். இலவோதிக்கேயா திருச்சபையானது இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டது, ஆனால் அதன்படி வாழாமல் தன்னுடைய மனம்போன வாழ்வையை வாழ்ந்தது. "எனக்கு செல்வம் உண்டு, வளமை உண்டு, ஒரு குறையும் இல்லை என சொல்லிக்கொண்டு திரிந்தது. அதனால் கடவுளின் தூதர் அதனிடத்தில், நீ இழிந்த, இரங்கத்தக்க, வறிய, பார்வையற்ற, ஆடையற்ற நிலையில் இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை" (தி வெ 3:17,18) என்று சொல்லி கடிந்துக்கொள்கிறார்.

ஆகையால், இயேசுவின் வார்த்தைகளைக் கேளாமல், இறைவனிடத்தில் நம்பிக்கை கொள்ளாமல் வாழக்கூடிய நிலை இழிநிலைக்குச் சமமானது என்பதை இலவோதிக்கேயா திருச்சபையே நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

எனவே, நம்முடைய அன்றாட வாழ்வில் இறைமகன் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, அவரை அனுப்பிய இறைவனிடத்தில் நம்பிக்கை கொள்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் நிலைவாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நற்செய்தி வாசகம்

இறந்தோரை தந்தை எழுப்பி, அவர்களை வாழவைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-30


தந்தை இன்றும் செயலாற்றுகிறார்

பெருநகரில் இருந்த அடுக்குமாடிக் கட்டடத்தில் இளம்பெண் ஒருத்தி வசித்து வந்தாள். அவளுடைய கணவன் அவளை விட்டுப் பிரிந்துசென்றதால், அவள் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டார்.

அப்பெண்ணின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்த ஒருசிலர், கணவன் இல்லாது அவள் மிகவும் கஷ்டப்படுகிறாள் என்று நினைத்து அவளுக்கு உதவி செய்வதற்காக அவளுடைய வீட்டிற்குச் சென்றார்கள். அவர்கள் அனைவருடைய நினைப்பு எல்லாம் இளம்பெண் துன்பத்தில் துவண்டுபோய் இருப்பாள் என்பதாகத்தான் இருந்தது. ஆனால் ஆனால் அவர்கள் அவளுடைய வீட்டுக்குள் சென்றபோது அவர்களுடைய எண்ணமெல்லாம் தவிடுபொடியானது. ஏனென்றால் அந்த இளம்பெண் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

அப்போது அவர்கள் அவளிடம், "உன்னுடைய கணவனை இழந்த இந்த கஷ்டமான காலத்திலும் உன்னால் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. இதன் இரகசியம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவள், "என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். அது வேறொன்றும் இல்லை. கடவுளின் அருளில் நான் முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறேன். அந்த அருள்தான் நான் வாழ்வதற்கும், இயங்குவதற்கும் ஆற்றலைத் தருகிறது" என்றாள்.

இதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டு நின்றார்கள்.

கடவுள் இன்றும் செயலாற்றுகிறார். அவர் நமக்கு எல்லா ஆசிரும், அருளையும் தந்து வழிநடத்துகிறார் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு அழகுற விளக்குகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தந்தைக் கடவுளைப் பற்றியும், அவருக்கும் தனக்கும் எத்தகைய உறவு இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக விளக்குகின்றார். அப்படி விளக்கும்போது இயேசு சொல்கிறார், "தந்தை (கடவுள்) இன்றும் செயலாற்றுகின்றார்" என்று.

ஆம், கடவுள் இன்றும் செயலாற்றுகிறார்; அவர் நம் மத்தியில் பிரசன்னமாக இருக்கின்றார். இது எவராலும் மறுக்க முடியாத உண்மை. மத்தேயு நற்செய்தி அதிகாரம் 28: 20 ல் வாசிப்பதுபோல கடவுள் இன்றும், ஏன் உலக முடிவு வரை நம்மோடு இருக்கிறார்; நம் வழியாகச் செயல்படுகிறார்.

முகம் தெரியாத மனிதருக்கு ஓர் உதவியைச் செய்கிறபோதும், யாரோ ஒரு மனிதருக்கு உணவிடுகிறபோதும், மழலைச் பேச்சிலும், பூவின் சிரிப்பிலும் கடவுள் உண்மையிலே பிரசன்னமாக இருக்கிறார். எனவே இத்தகைய கடவுளின் ஆசிர் நமக்குக் கிடக்கவேண்டும் என்றால் நாம் செய்யக்கூடிய முதன்மையான காரியம் கடவுள் அனுப்பிய இயேசுவை நம்புவதுதான்.

நற்செய்தியில் இயேசு கூறுவார், "என் வார்த்தைகளைக் கேட்டு, என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்" என்று. ஆகவே நாம் நிலைவாழ்வைப் பெற, கடவுள் நம்மத்தியில் செயல்பட, நாம் கடவுளை நம்புவோம்.

ஆனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் உண்மையிலே கடவுளை நம்பித்தான் வாழ்க்கையை அமைக்கிறோமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. நாம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்தோம் என்றால், நம்மிடத்தில் பிரிவினைக்கு வழியில்லை; சண்டைச் சச்சரவுகளுக்கு வழியில்லை; ஏன் அடிமைத் தனத்திற்கும், ஏழ்மைக்கும் கூட வழியில்லை. பெயரளவுக்கு கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக வாழ்வதனால்தான் நம்மிடத்தில் இவ்வளவு குழப்பங்களும், பிரச்னைகளும்.

ஆதலால் இறைவன் நம்மில் இன்றும் செயலாற்ற, அவர்மீது முழுமையான நம்பிக்கை வைத்து வாழ்வோம், அந்த நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
எசாயா 49: 8-15

தாயான இறைவன்!

நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு திரைப்படக்குழு, திரைப்படம் எடுப்பதற்காக, ஆப்ரிக்கக் காட்டிற்குள் சென்றது. அத்திரைப்படக் குழுவானது மிக மும்முரமாகத் திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது, தொலைவில் நான்கைந்து செந்நாய்கள் ஒரு மான்கூட்டத்தைத் துரத்திக்கொண்டுவந்தது. செந்நாய்கள் துரத்துவதைக் கண்டு மான்கூட்டம் நாலாபக்கமும் சிதறி ஓடியது. அதில் ஒரே ஒரு மான்குட்டி மட்டும் கால் இடறிக் கீழே விழுந்தது. இதைத்தொடர்ந்து பின்னால் துரத்திக்கொண்டு வந்த நான்கு செந்நாய்களும் அந்த மான்குட்டியின் மிக அருகில் வந்தன.

இதைத் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த திரைப்படக் குழு, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று உற்றுக் கவனிக்கத் தொடங்கியது. அப்பொழுது எங்கிருந்தோ வேகமாக ஓடிவந்த தாய் மானானது, அந்தக் குட்டிமானின் அருகில் சென்று படுத்துக்கொண்டு, 'என் குட்டியோடு என்னையும் சேர்த்து உண்ணுங்கள்' என்பதுபோல் அந்த செந்நாய்களைப் பார்த்தது. மறுகணம் அந்த நான்கு செந்நாய்களும் அந்தத் தாய் மானின்மீதும் குட்டி மானின்மீதும் பாய்ந்து, அவற்றைத் தங்களுக்கு இரையாக்கிக் கொண்டன. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த திரைப்படக் குழு, 'இதுவல்லவோ தாய்ப்பாசம்' என்று வியந்துநின்றது.

இவ்வுலகில் தாயின் அன்பிற்கும் பாசத்திற்கும் இணையாக வேறெதுவும் இல்லை என்பதை இந்நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கின்றது. ஆனால், 'இப்படிப்பட்டத் தாய் மறந்தாலும் நான் உன்னை மறக்கமாட்டேன்' என்ற செய்தியை இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் எடுத்துரைக்கின்றார். எனவே, ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது கொண்டிருந்த அன்பு எத்தகையது என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

வழிதவறிப் போன இஸ்ரயேல் மக்களும் கடவுளின் பேரன்பும்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம், எதிரிநாட்டவரால் நாடுகடத்தப்பட்டு, அடிமைகளாக்கப்பட்டு, சிறுமைக்குள்ளாக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள்மீது ஆண்டவராகிய கடவுள் இரக்கம்கொண்டு, அவர்களுக்கு அவர்களுடைய சொந்த நாட்டைத் திரும்ப அளிக்கின்ற ஆறுதலான செய்தியை எடுத்துச் சொல்கின்றது.

இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளை மறந்து, அவர் கொடுத்த கட்டளைகளையும் உதறித்தள்ளிவிட்டு, வேற்று தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள். அதனால் அவர்கள் நாடுகடத்தப்பட்டு, வேற்றுநாட்டில் அடிமைகளைப் போன்று வாழ்ந்துவந்தார்கள். ஆனாலும் கடவுள் அவர்களைக் கைவிட்டுவிடாமல், அவர்கள்மேல் இரக்கம்கொண்டு அவர்களை அவர்களுடைய சொந்தநாட்டிற்குக் கூட்டிக்கொண்டு வருகின்றார். அப்படியிருந்தபோதும், இஸ்ரயேல் மக்கள், "ஆண்டவர் எங்களைக் கைவிட்டுவிட்டார்; எங்கள் தலைவர் எங்களை மறந்துவிட்டார்" என்று அபயக் குரல் எழுப்புகிறார்கள். அப்பொழுதுதான் ஆண்டவராக கடவுள் அவர்களுக்கு மிக முக்கியமானதொரு செய்தியை எடுத்துரைக்கின்றார். அது என்ன செய்தி என்று இப்பொழுது பார்ப்போம்.

"தாய் மறந்தாலும் நான் உன்னை மறவேன்" என்று சொல்லும் இறைவன்

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது இரக்கம்கொண்டு அவர்களுக்கு எல்லாவற்றையும் செய்து தருவதாகச் சொன்னபோதும், அவர்கள் அதை நம்பாமல் 'ஆண்டவர் எங்களைக் கைவிட்டுவிட்டார்" என்று சொன்னதால், அவர் அவர்களிடம், "பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்" என்று உரைக்கின்றார்.

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து இங்கு கூறுகின்ற வார்த்தைகளையும் "தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்" (எசா 66:13) என்ற வார்த்தைகளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், தந்தைக் கடவுளிடம் வெளிப்படும் தாயன்பை நம்மால் புரிந்துகொள்ள முடியும். கடவுளை ஒரு தந்தையாகவே பார்த்துப் பழகிய இஸ்ரயேல் மக்களுக்கு, அவரிடம் இருந்த இன்னொரு முகம், அதாவது தாயின் முகம் அவர்களுக்குப் புதிதாகவே இருந்திருக்கும்.

இந்த உலகத்தில் எத்தனையோ பேர் நம்மை அன்பு செய்வதற்கும் நம்முடைய தாய் நம்மை அன்பு செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. தாயின் அன்பு தனித்துவமானது, அது மற்ற எல்லாருடைய அன்பையும் விட உயர்வானது. ஆனால், அந்தத் தாய் மறந்தாலும் நான் உன்னை மறக்கவேண்டும் என்று ஆண்டவராகிய கடவுள் சொல்வதில்தான் அவருடைய அன்பின் தன்மை மேலோங்கி இருக்கின்றது. இத்தகைய அன்பைத்தான் கடவுள் இஸ்ரயேல்மீது பொழிவதாக வாக்குறுதி தருகின்றார்.


சிந்தனை

'உலகம் அனைத்தையும் ஒரு தட்டினாலும் தாயை மறுதட்டிலும் வைத்து நிறுத்தால், உலகின் தட்டு மேலிருக்கும். தாயின் தட்டு எப்போதும் கீழே இருக்கும்' என்பார் லாங்டேல் பிரபு என்ற அறிஞர். தாயின் அன்பைப் பற்றிச் சொல்வதற்கு இந்த உலகில் வார்த்தைகள் இல்லை. ஆனால், அந்தத் தாயைவிடவும் மேலாக நம்மை அன்பு செய்யும் கடவுளின் பேரன்பு மிகப்பெரியது. ஆகவே, அப்படிப்பட்ட கடவுளுக்கு நாம் எப்போதும் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
யோவான் 5: 17-30

(என்) தந்தை இன்றும் செயலாற்றுகின்றார்

நிகழ்வு

அன்பான கணவர், அருமையான இரண்டு பெண் குழந்தைகள் என்று மிரியத்தின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது. இப்படிப்பட்ட நிலையில், மிரியத்தின் கணவர் திடிரென ஒரு விபத்தில் சிக்கி இறந்துபோனார். கணவர் இறந்த துக்கத்திலிருந்து மீண்டுவருவதற்குள் அவளுக்கு இன்னோர் அதிர்ச்சி செய்தி வந்தது. அது என்னவெனில், அவளுக்கு புற்றுநோய் (Cancer) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மிகவும் மனமுடைந்து போன மிரியம் கண்ணீர் விட்டு அழுதாள்.

இதெல்லாம் நடந்து ஒரு மாதம் கழித்து மிரியத்தின் நெருங்கிய தோழி ஒருத்தி அவளைப் பார்ப்பதற்காக அவளுடைய வீட்டிற்குச் சென்றாள். செல்லும் வழியில் அவள், 'கணவனை இழந்து இரண்டு பெண் குழந்தைகளையும் வைத்துக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த மிரியத்திற்கு மீண்டும் இப்படியொரு சோதனையா? வருத்தத்தில் அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாளோ?' என்று பதைபதைப்போடு சென்றாள். அவள் மிரியத்தின் வீட்டை அடைந்து அவளைப் பார்த்துபொழுது மிரியம் மிகவும் தெளிவாக இருந்தாள். இதைப் பார்த்துப் வியந்துநின்ற மிரியத்தின் தோழி அவளிடம், "கணவனை இழந்த பின்பும் உனக்குத் புற்றுநோய் வந்திருக்கின்றது என்று தெரிந்தபின்பும் எப்படி உன்னால் இவ்வளவு தெளிவாக இருக்க முடிகிறது?" என்று கேட்டாள்.

அதற்கு மரியம் அவளிடம், "நான் என்னுடைய கணவனை இழந்தபின்பும் எனக்குப் புற்றுநோய் இருப்பது தெரிந்தபின்பும் கடவுளிடம் நான் இவ்வாறு வேண்டினேன்: 'கடவுளே! நான் உம்முடைய நகத்தின் நுனியைப் பிடித்துக்கொண்டுதான் கடைசிய வரைக்கும் தொங்கவேண்டுமா? வேறு பிடிமானம் கிடையாதா?' அப்பொழுது கடவுள் என்னிடம், 'நீ ஏன் அப்படி நினைத்துக்கொண்டிருக்கின்றாய்... நான் உன்னை என்னுடைய கைகளில் வைத்துத் தாங்கிக்கொண்டிருக்கின்றேன்... அதனால் நீ எதை நினைத்தும் வருந்தாதே' என்றார். இதற்குப் பின்பு நான் கடவுளின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து வாழத் தொடங்கினேன். நேற்றைய நாளில் என்னுடைய கணவருக்கு அறிமுகமான செல்வந்தர் ஒருவர் தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் என்னுடைய இரண்டு மகள்களையும் 'பெண்கேட்டு' வந்தார். அவர் என்னுடைய இரண்டு மகள்களையும் தன்னுடைய இரண்டு மகன்களுக்கு எந்தவொரு சீர்வரிசையும் இல்லாமல் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி தந்துவிட்டுச் சென்றார். அவர் சொன்னதைக் கேட்பதற்கு எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அந்நேரத்தில் நான் இவ்வாறு நினைத்துக்கொண்டேன்: 'கடவுள் எனக்குச் சொன்னது போன்று அவர் என்னைக் கைவிட்டுவிடவில்லை... அவர் என்னையும் என்னுடைய குடும்பதையும் தனது கைகளில் வைத்துத் தாங்கிக்கொண்டிருக்கின்றார்... அவர் எங்கள் மத்தியில் இப்பொழுதும் செயலாற்றிக்கொண்டிருக்கிறார்.' அதனால்தான் நான் தொடர் பிரச்சினைகளுக்கும் பின்னும் இவ்வளவு தெளிவாக இருக்கிறேன்" என்றார்.

கடவுள் தன் மக்களை விட்டு விலகுவதுமில்லை, பிரிவதுமில்லை. அவர் இன்றைக்கும் தன் மக்களுக்கு மத்தியில் செயலாற்றிக்கொண்டிருக்கின்றார் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

இன்றும் செயலாற்றும் தந்தைக் கடவுள்

இன்றைய நற்செய்தி வாசகம், நேற்றைய நற்செய்தியின் தொடர்ச்சியாக இருக்கின்றது. நேற்றைய நற்செய்தியில், இயேசு முப்பத்தெட்டு ஆண்டுகளாய்ப் படுத்த படுக்கையாய்க் கிடந்த உடல்நலமற்ற ஒருவரைக் குணப்படுத்தியதைக் குறித்து வாசித்தோம். இன்றைய நற்செய்தியில் அந்த உடல்நலமற்ற மனிதரைக் குணப்படுத்தியபின்பு இயேசு பேசிய வார்த்தைகளையும் அதற்கு யூதர்கள் எப்படி எதிர்வினை ஆற்றினார்கள் என்பதையும் குறித்து வாசிக்கின்றோம்.

'என் தந்தை இன்றும் செயலாற்றுகின்றார்; நானும் செயலாற்றுகின்றேன்" இதுதான் இன்றைய நற்செய்தியில் இயேசு பேசுகின்ற வார்த்தைகளாக இருக்கின்றது. இயேசு சொல்வதுபோல் தந்தைக் கடவுள் இன்றும் செயலாற்றுகின்றாரா? என்றால் உறுதியாக ஆம் என்று சொல்லவேண்டும். எவ்வாறெனில், தந்தைக் கடவுளும் இயேசுவும் வேறு வேறு அல்ல, இயேசுவைக் காண்பது தந்தைக் கடவுளைக் காண்பது (யோவா 14:9). இயேசுவின் வார்த்தைகளிலும் அவர் ஆற்றிய செயல்களிலும் தந்தைக் கடவுளைக் கண்டுகொள்ளலாம். அதனால்தான் இயேசு யூதர்களிடம், "தந்தை (தன் வழியாக) இன்றும் செயாலாற்றுகின்றார்" என்கின்றார்.

இயேசுவின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய யூதர்கள்

இயேசு உடல்நலம் குன்றியவரைக் குணப்படுத்தியது ஓர் ஓய்வுநாள் என்று அவரிடம் பிரச்சினையில் ஈடுபட்ட யூதர்கள், அவர் கடவுளை 'என் தந்தை' என்று சொன்னதைக் கேட்டு, இன்னும் சீற்றம் அடைகின்றார்கள். காரணம் யூதர்கள் கடவுளை 'எங்கள் தந்தை' என்று சொல்வதுதான் வழக்கம். எனவேதான் இயேசு அவர்களிடம் "தந்தை, தாம், வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளேன்" என்று தந்தைக் கடவுளுக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமையைக் குறித்துப் பேசி அவர்களை வாயடைக்கின்றார்.

சிந்தனை

இயேசு சொன்ன, '(என்) தந்தை இன்றும் செயலாற்றுகின்றார்' என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில், அவர் நம் வழியாகச் செயல்பட நம்மையே முழுமையாய் அவருக்குக் கையளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!