Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   31  ஜனவரி 2019  
  பொதுக்காலம் 3ம் வாரம் வியாழக்கிழமை 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 எதிர்நோக்கில் நிலையாய் இருந்து, அன்பு செலுத்தி, ஒருவரையொருவர் தூண்டியெழுப்புவோம்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 19-25

சகோதரர் சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்திற்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி. மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு.

ஆதலால், தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக. நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர்.

எனவே நாம் எதிர்நோக்கியிருப்பதைப் பற்றித் தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக. அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக. சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒன்று கூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்; எனவே இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 6a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4ab கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 119: 105

அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-25

அக்காலத்தில் இயேசு மக்களிடம், "விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா? வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்றார்.

மேலும் அவர், "நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும்.

ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என்று அவர்களிடம் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எபிரேயர் 10: 19-25

"அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டி எழுப்பவும் கருத்தாயிருப்போமாக"

நிகழ்வு

இந்திய மண்ணில் வாழ்ந்து வந்த சாது வாஸ்வானி ஒருசமயம் தன் சீடரோடு பக்கத்துக்கு ஊருக்குப் போய்க்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பெரிய மரத்திற்கு அடியில் கிழிந்த ஆடையோடும், உடலெல்லாம் சேறோடும் சகதியோடும் பிச்சைக்காரர் ஒருவர் இருக்கக் கண்டார். அவரைப் பார்த்து இரக்கப்பட்ட சாது வாஸ்வானி அவரருகே சென்று, அவரைப் பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த ஆற்றிற்கு தன்னுடைய சீடரின் உதவியுடன் தூக்கிக்கொண்டு சென்று குளிப்பாட்டினார். பின்னர் அவரை முன்பு அவர் அமர்ந்திருந்த இடத்திற்குத் தூக்கிக்கொண்டு வந்து அமர வைத்து, தான் உடுத்தியிருந்த மேலாடையைக் கழற்றி அவருக்குப் போர்த்தினார். சாது வாஸ்வானி தன்னுடைய தலையில் தொப்பி ஒன்றை அணிந்திருந்தார். அதையும் அவர் கேட்டதால், உடனே அதைக் கழட்டிக்கொடுத்துவிட்டு, தொடர்ந்து நடக்கத் தொடங்கினார்.

இதைப் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்த சாது வாஸ்வானியின் சீடர் அவரிடம், "ஐயா! உங்களிடத்தில் இருந்த மேலாடை, தொப்பி முதற்கொண்டு எல்லாவற்றையும் அந்த பிச்சைக்காரரிடம் கழற்றிக் கொடுத்துவிட்டீர்களே... ஏன் அப்படிச் செய்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு சாது வாஸ்வானி அவரிடம், "கடவுள் எனக்கு இந்த மேலாடையையும் தொப்பியையும் கொடுத்ததே, வறியநிலையில் இருக்கின்ற ஒருவருக்குக் கொடுத்து உதவத்தான். அப்படியிருக்கும்போது, என்னிடம் கொடுக்கப்பட்டதை நான் மட்டும் வைத்திருப்பேனாகில், நான் மிகப்பெரிய சுயநலவாதி ஆகிவிடுவேன்" என்றார்.

நம்முடைய வாழ்வும் சரி, நம்மிடம் கொடுக்கப்பட்ட கொடைகளும் திறமைகளும் சரி, நமக்கானதல்ல அது பிறருக்கானது என்ற ஆழமான உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

தன்னலம் கடந்து, பொதுநலத்துடன் கூடிய வாழ்வு

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், அதன் ஆசிரியர், "அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டி எழுப்பக் கருத்தாயிருப்போமா" என்று கூறுகின்றார். இவ்வார்த்தைகளை இதற்குப் பின்னால் வரக்கூடிய 'சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை' என்று வார்த்தைகளோடு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும்.

எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர், இந்தத் திருமுகத்தை எழுதிய காலத்தில், அவருடைய சபையில் இருந்தவர்கள் சபைக்கூட்டங்களில் ஒழுங்காகக் கலந்துகொள்ளாமல் இருந்தார்கள். இங்கே ஓர் உண்மையை நாம் நம்முடைய மனதில் பதிய வைத்துகொள்ளவேண்டும். சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வது என்பது இறைவனை வழிபடுவதற்கு மட்டுமில்லை, சபையில் சபையில் சகோதர, சகோதரிகளை உற்சாகப்படுத்துவதற்கும் அன்பினால், நற்செயல்கள் தேற்றுவதற்கும்தான். எபிரேயர்கள் மத்தியில் அப்படிப்பட்ட வழக்கம் குறைந்துபோனதால்தான், ஆசிரியர் இவ்வாறு எழுதுகின்றார்.

எபிரேயர்களிடத்தில் இருந்த இதே வழக்கம்தான் கொரிந்து நகர மக்களிடத்திலும் இருந்தது. ஆனால் அது சான்று வித்தியாசமாக இருந்தது. 'அகாப்பே' விருந்துக்கு வந்த செல்வந்தர்கள், தாங்கள் கொண்டுவந்த உணவை தாங்கள் மட்டுமே உண்டுவிட்டு, உணவில்லாமல் வந்த ஏழை, எளிய மக்களைக் கண்டும் காணாமல் போனார்கள். அதனால்தான் பவுலடியார்கள் அவர்களிடம், "நீங்கள் ஒன்றாகக் கூடிவந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல, ஏனெனில் நீங்கள் உண்ணும் நேரத்தில், ஒவ்வொருவரும் தாம் கொண்டுவந்த உணவை மற்றவர்களுக்கு முன்பே உண்டுவிடுகிறீர்கள். இதனால் சிலர் பசியாய் இருக்க, வேறு சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள்" என்கின்றார் (1 கொரி 11:20-21). கொரிந்து நகர மக்களிடம் பொதுநலம் இல்லாமல், தன்னலம் மட்டுமே இருந்தது. அதனால்தான் பவுலடியார் அவர்களை இவ்வாறு கடிந்துகொள்கிறார்.

ஆகையால், இறைவனின் திருப்பெயரால், இறைமக்கள் சமூகமாக ஒன்றாகக் கூடிவருகின்ற ஒவ்வொருவரும் தன்னல நாட்டங்களைத் தவிர்த்துவிட்டு, பிறர் நலத்தில் அக்கறை கொண்டு, அன்பினாலும் நற்செயல்களாலும் நல்வாக்காலும் ஒருவரை ஒருவர் தேற்றவேண்டும். அதுதான் நாம் இறைமக்கள் சமூகம், இறைவனின் அன்பு மக்கள் என அழைக்கப்பட தகுதியுள்ளதாக இருக்கும். அப்படியில்லாத பட்சத்தில் நம்முடைய வழிபாட்டுக் கொண்டாட்டங்கள் அனைத்தும் வெற்றுச் சடங்குகளாகவே இருக்கும்.

சிந்தனை

"நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால், தன்னிலே உயிரற்றது" என்பார் தூய யாக்கோபு (யாக் 2:20). ஆம், நம்முடைய நம்பிக்கை வாழ்வு ஆண்டவரிடத்தில் வேரூன்றியதாக இருக்கவேண்டும். அப்படி இருக்கின்ற வாழ்வு அடுத்தவர் மட்டில் அன்பு காட்டக்கூடியதாக, வறியவரைக் கண்டு இரங்கக்கூடியதாக, சோர்ந்து போனவருக்கு ஊக்கமூட்டக் கூடியதாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட வாழ்வே உண்மையான சீடத்துவ வாழ்வு.

ஆகவே, நம்முடைய வாழ்வை அன்பாலும் நற்செயல்களாலும் நிரம்பி, அதற்கு செயல் வடிவம் கொடுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 4: 21-25

எல்லாருக்கும் ஒளி கொடுக்குமாம் விளக்கு!

நிகழ்வு

அஸ்ஸாம் மாநிலத்தில், தள்ளுவண்டியில் காய்கறி விற்றுவந்தவர் சோபரான் என்ற மனிதர். ஒருநாள் அவர் வழக்கமாக காய்கறிகளை விற்கும் தெருவில் காய்கறிகளைக் கூவிக் கூவி விற்றுக்கொண்டு சென்றபோது, தெருவோரத்தில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.

உடனே அவர் பதறிப்போய் குப்பைத் தொட்டியின் அருகே சென்று பார்த்தார். அங்கே பிறந்து ஓரிரு மணிநேரமே இருக்கும் ஓர் அழகான பெண்குழந்தை கைகளையும் கால்களையும் ஆட்டி ஆட்டி அழுந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்து இரக்கப்பட்ட சோப்ரான் அக்குழந்தையை வீட்டிற்குத் தூக்கிப்போய் வளர்க்கலாமா என்று யோசித்தார். தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அப்படியிருக்கின்றது இந்தக் குழந்தையை வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு போய் வளர்த்தால், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தீவிரமாக யோசித்தார். பின்னர் அவர் 'மற்றவர்கள் எண்ணமும் நினைத்துவிட்டுப் போகட்டும், நாம் இந்தக் குழந்தையை வளர்ப்போம்' என்று முடிவுசெய்து அந்தப் பெண் குழந்தையை தன்னுடைய வீட்டிற்குத் தூக்கிக்கொண்டு போய், அதற்கு சோதி எனப் பெயரிட்டு வளர்க்கத் தொடங்கினார்.

சோதியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, கல்வி கேள்வியில் சிறந்துவிளங்கி வந்தாள். 2013 ஆம் ஆண்டு Computer Science பிரிவில் இளங்கலைப் பட்ட பெற்ற சோதி, 2014 ஆம் அண்டு அஸ்ஸாம் பப்ளிக் சர்விஸ் கமிஷன் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று சேல்ஸ் டாக்ஸ் அசிஸ்டன்ட் கமிஷனராக மாறினார். இதற்குப் பின்பு தன்னுடைய வாழ்க்கையையே தியாகம் செய்து, தன்னை வளர்த்தெடுத்து, தன்னுடைய வாழ்வில் சோதியை ஒளியை ஏற்றிவைத்த தன்னுடைய (வளர்ப்புத்) தந்தை சோப்ரானை நல்லமுறையில் பராமரித்து வருகின்றார். ஆனாலும்கூட சோப்ரான் தனக்கு காய்கறித் தொழில் செய்வதில் மனநிறைவு கிடைக்கிறது என்று அத்தொழிலை தொடர்ந்து செய்துவருகின்றார்.

ஒரு குப்பைத் தொட்டியில் அனாதையாகக் கிடந்த சோதியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த சோப்ரான், நாம் ஒவ்வொருவரும் இந்த உலகிற்கு ஒளியாக விளங்க மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.

விளக்குத் தண்டின்மீது வைக்கபடவே விளக்கு!

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, விளக்கினுடைய பயன்பாட்டையும் அதனுடைய முக்கியத்துவத்தையும் குறித்துப் பேசுகின்றார். இங்கே விளக்கு என்று இயேசு குறிப்பிடுவது அவருடைய சீடர்களாக இருக்கின்ற நம் ஒவ்வொருவரையும்தான். மலைப்பொழிவில் இயேசு இதைத்தான், "நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" என்பார் (மத் 5:14). ஆகையால், நாம் ஒவ்வொருவரும் இந்த உலகத்திற்கு விளக்காக இருந்து ஒளி கொடுக்கவேண்டும் என்பதே இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கினறது.

இறைவன் என்னும் எண்ணெய் ஒருவருள் இருக்கின்றபோதுதான் அவரால் ஒளி கொடுக்கமுடியும்

இந்த உலகிற்கு நாம் ஒளியாக இருக்கவேண்டும் என்று இயேசு சொல்கிறார் எனில், அது நம்மால் மட்டுமே முடியாது, எல்லாம் வல்ல இறைவன் நம்முள் இருக்கின்றபோதுதான் சாத்தியப்படும் (யோவா 15:5). அந்தக் காலத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட கிண்ணத்தில் எண்ணெய் ஊற்றப்பட்டு, திரி ஏற்றப்பட்டுதான் விளக்கானது எரியும். ஒருவேளை அந்தக் களிமண் கிண்ணத்தில் எண்ணெய் இல்லையென்றால் அதனால் ஒளி கொடுக்க முடியாது. அதுபோன்றுதான் இறைவன் நம்முள் இருக்கின்றபோதும் இறைவார்த்தையை நாம் வாழ்வாக்கின்றபோதும் மட்டுமே நம்மால் ஒளிகொடுக்க முடியும். அப்படியில்லாதபோது நம்மால் எதுவும் சாத்தியப்படாது.

நற்செய்தியில் இயேசு தொடர்ந்து சொல்வார், "உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என்று. ஆம், நாம் இறைவனை நம்முள் வைத்துக்கொண்டு ஒளிகொடுக்கின்றபோது நம் ஒளி மேலும் மேலும் பெருகும். அதே நேரத்தில் இறைவன் நம்முள் இல்லாதபோது, ஏற்கனவே நம்முள் இருப்பதும் இல்லாமல் போய்விடும். ஆகவே, அருட்பெரும்ஜோதியாகிய இறைவனை நம்முள் வைத்துக்கொண்டு நாம் வாழ்ந்தோமில் நம்மால் மிகுந்த ஒளி கொடுக்க முடியும் என்பது உறுதி.

சிந்தனை

இன்றைய உலகில் மனிதர்கள் தாங்கள் பெற்ற தாலந்துகளை, வசதி வாய்ப்புகளை தங்களுக்காக மட்டுமே பயன்படுத்தும் ஓர் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது யாரும் ஒளியாக அல்ல, இருளாகவே இருக்கிறார்கள் என்பதுதான் அப்பட்டமான உண்மை. ஆகவே, நாம் ற்ற தாலந்துகளை, வசதி வாய்ப்புகளை பிறருக்காகப் பயன்படுத்தி, பிறருடைய வாழ்வில் ஒளியேற்றி வைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
நற்செய்தி (மாற் 4:21-25)

விளக்குத்தண்டின் மீது

நேற்று மாலை மருந்தகம் சென்றேன். திருச்சியின் பிரபலமான பி.ஜி. நாயுடு ஸ்வீட்ஸின் மேலப்புதூர் கிளையைத் தாண்டி இருக்கிறது அம்மருந்தகம். அம்மருந்தகத்தை நெருங்கச் சில அடிகளே இருக்க, மூதாட்டி ஒருவர் பார்வையற்ற ஒருவரை அவர் ஊன்றி வந்த குச்சியைப் பிடித்து சாலையில் அழைத்து வந்துகொண்டிருந்தார். இம்மூதாட்டி ஸ்வீட் கடையின் வெளியில் அமர்ந்து யாசகம் செய்பவர். பார்வையற்ற நபர் இவருடைய வயதை ஒத்தவராகவும், நீட்டான பேண்ட், சர்ட் அணிந்தவராகவும் இருந்தார். இருளாகிவிட்டதாலும், அவர் குச்சியை ஊன்றி நடக்க வேண்டியிருந்ததாலும் ஒரு வேளை பார்வையற்ற நபரை இப்பெண் அழைத்துக்கொண்டு போகிறார் என நினைத்துக்கொண்டேன். மருந்தகம் சென்று திரும்பும்போது இப்பெண் திரும்பவும் தன் இடம் திரும்பிக்கொண்டிருந்தார். வழக்கமாக கூனிக் குறுகி அமர்ந்திருக்கும் இப்பெண் பெருமிதத்தோடு நடந்து வந்துகொண்டிருந்தார். 'அடுத்தவரின் கையை நம்பி இருந்த நான் இன்று ஒருவருக்கு கை கொடுத்தேன்!' என்ற எண்ணம் பெருமிதம் தந்ததா? அல்லது 'நான் இன்று ஒரு நல்லது செய்தேன்!' என்ற எண்ணம் பெருமிதம் தந்ததா? அல்லது 'என் இயல்பே நல்லது செய்வதுதானே!' என்ற எண்ணம் பெருமிதம் தந்ததா?

தன் இருப்புக்கு, தன் இயக்கத்திற்கு அடுத்தவர் இடும் யாசகத்தைச் சார்ந்திருக்கும் பெயரில்லா இந்தப் பெண் எனக்கு இன்றைய நற்செய்தி வாசகத்தின் உருவகமாகத் தெரிகின்றார்.

தன் விளக்கை அவர் மரக்காலின் உள்ளேயோ, கட்டிலின் கீழேயோ வைக்காமல் விளக்குத் தண்டின் மீது வைத்தார்.

தொடர்ந்து இயேசு சொல்லும் வார்த்தைகள் ஒரே நேரத்தில் ஆறுதலாகவும், நெருடலாகவும் இருக்கின்றன:

'எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். இன்னும் கொஞ்சம் சேர்த்தும் கொடுக்கப்படும்'

- ஆக, வாழ்வில் இது செய்தால் இது கிடைக்கும் என்பதில்லை. அப்படியும் கிடைக்கலாம். அதற்கு மேலும் கிடைக்கலாம். ஏன்? கிடைக்காமல்கூடப் போகலாம்!

'உள்ளவருக்குக் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்'

- அப்படின்னா பேங்க் லாக்கரை உடைத்து 5 கோடி மதிப்புடைய தனக்கு உரிமையில்லாத நகையை ஒருவர் உரிமையாக்கிக்கொண்டால் அவருக்கு இன்னும் 5 கோடி கொடுக்கப்படுமா? அல்லது ஒரு பெருநிறுவனம் சின்னஞ்சிறு நிறுவனங்களை எல்லாம் விழுங்குகிறது என்றால் அதன் பசிக்கும் இன்னும் பல நிறுவனங்கள் பலியாகுமா?

இல்லை.

'உள்ளவர்' என்பதையும் 'இல்லாதவர்' என்பதையும் அளவிடும் அளவுகோல் எனக்கு வெளியில் இல்லை. மாறாக, எனக்கு உள்ளேதான் இருக்கிறது.

ஒன்றும் இல்லாததாக உணர்ந்த அந்தப் பெண் தன் உதவும் குணத்தை தன்னுடைய கையிருப்பாகப் பார்த்தார். ஆக, அது அவரின் மகிழ்வைப் பெருக்கும்.

ஒன்று மட்டும் நிச்சயம்.

நம் அளவை மாறுபட்டாலும், நமக்கு அளக்கப்படும் அளவை மாறுபட்டாலும், நம்மை உள்ளவர் அல்லது இல்லாதவர் என்று மற்றவர் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், எனக்கு மிகுதியாகக் கூடினாலும் கூடவில்லை என்றாலும்,

என் விளக்கை நான் கட்டிலின் கீழ் வைத்துவிடக்கூடாது!

அப்படி வைப்பது - யாருக்கும் பயன் இல்லாமல் போவதோடல்லாமல், கட்டிலும் எரிந்துவிட, விளக்கும் அணைந்துவிட வாய்ப்பிருக்கிறது.

கண் தெரியாதவரைக் கரை சேர்த்த அந்த யாசகி விளக்குத் தண்டின்மீது விளக்கு.

அவர் அந்த நிலைக்கு வர முயற்சி அவசியம்.

தன் இருப்பை விட்டு எழ வேண்டும்.

தனக்கு அந்நேரம் வரும் யாசகத்தை இழக்க வேண்டும்.

தான் திரும்பி விரும்போது தன் இடம் பறிபோயிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இருந்த இடத்தில் எரிவதும், கட்டிலின் கீழ் எரிவதும், மரக்காலில் எரிவதும் பாதுகாப்பாகத் தோன்றலாம். ஆனால், அந்தப் பாதுகாப்ப எந்நேரமும் ஆபத்தாக மாறலாம்.


Rev. Fr. Yesu Karunanidhi
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!