Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   30  ஜனவரி 2019  
             பொதுக்காலம் 3ம் வாரம் புதன்கிழமை - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 தாம் தூயவர் ஆக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 11-18

சகோதரர் சகோதரிகளே, ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை.

ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். தாம் தூயவர் ஆக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார்.

இதுபற்றித் தூய ஆவியாரும், "அந்நாள்களுக்குப் பிறகு அவர்களோடு நான் செய்ய இருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன்" என்று நமக்குச் சான்று பகர்கிறார்.

இவ்வாறு சொன்னபின், "அவர்களது தீச்செயலையும் அவர்களுடைய பாவங்களையும் இனிமேல் நினைவுகூர மாட்டேன்" என்றும் கூறுகிறார்.

எனவே பாவ மன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமே இல்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:110: 1. 2. 3. 4. (பல்லவி: 4a)
=================================================================================
 பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.

1 ஆண்டவர் என் தலைவரிடம், 'நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப் பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். பல்லவி

2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி

3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில், தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். பல்லவி

4 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையே விதை; அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைந்தவரோ என்றென்றும் நிலைத்திருப்பார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20

அக்காலத்தில் இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார்.

அவர் அவர்களுக்குக் கற்பித்தது: "இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன.

ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை.

ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்."

அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி அவரிடம் கேட்டார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், "இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் 'ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்' " என்று கூறினார்.

மேலும் அவர் அவர்களை நோக்கி, "இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும், உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால், பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்" என்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எபிரேயர் 10: 11-18

மன்னிப்போம், மறப்போம்

நிகழ்வு

Forgive and Forget என்ற நூலில் அதன் ஆசிரியர், லெவிஸ் ஸ்மெட்ஸ் என்பவர் குறிப்பிடுகின்ற ஒரு நிகழ்வு.

ஹிட்லரின் நாசிப் படையில் பணியாற்றி வந்த படைவீரர் ஒருவர், ஒரு மருத்துவ மனையில், இறக்கும் தருவாயில் இருந்தார். அவர் அங்கு பணியாற்றி வந்த ஒரு செவிலியிடம், "என்னுடைய சாவு நெருங்கி வந்துவிட்டதை உணர்கின்றேன். நான் சாவதற்கு முன்பாக, என்னால் துப்பாக்கியால் சுடப்பட்டு, இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற ஒரு யூதரிடம் நான் மன்னிப்புக் கேட்கவேண்டும். அப்படி அவர் வந்து என்னை மன்னித்தால்தான் என்னுடைய ஆன்மா அமைதியில் இளைப்பாறும்... இதற்கு நீங்கள் ஏற்பாடு செய்வீர்களா?" என்று கேட்டார்.

அந்த செவிலியும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, அந்தப் படைவீரர் குறிப்பிட்ட யூதரைக் கூட்டிக்கொண்டுவந்தார். படைவீரர் படுக்கையில் படுத்திருக்க, யூதர் அவருக்கு முன்பாக வந்து நின்றார். அப்போது படைவீரர் அந்த யூதரிடம், "ஐயா! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்... உங்களுடைய இந்த நிலைக்குக் காரணமே நான்தான். அதனால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் என்னுடைய ஆன்மா அமைதியில் இளைப்பாறும்" என்றார். இதைக் கேட்ட அந்த யூதர் படைவீரரைக் கோபவெறியோடு பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

இதனால் அந்த நாசிப் படையைச் சார்ந்த படைவீரர், தன்னால் பாதிக்கப்பட்ட அந்த யூதர் தன்னை மன்னிக்கவில்லையே என்ற மனவருத்தத்தோடு இறந்துபோனார்.

தன்னை துப்பாக்கியால் சுட்ட படைவீரரை, எப்படி அந்த யூதர் கடைசி வரைக்கும் மன்னிக்காமல் இருந்தாரோ, அதுபோன்றுதான் நாமும் நமக்கெதிராகத் தவறு செய்தவர்களை மன்னிக்காமல், உள்ளத்தில் பகைமையோடும் குரோதத்தோடும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, ஆண்டவராகிய கடவுள் மன்னிப்பதில் தாராள மனத்தவராகவும் குற்றங்களை நினைவில் கொள்ளாதவராகவும் இருக்கின்றார். அவர் எந்தளவுக்கு குற்றங்களை மன்னிப்பதில் தாரளமாக இருக்கின்றார் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

தீச்செயல்களையும் பாவங்களையும் நினைவுகூராத இறைவன்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், அதன் ஆசிரியர், "அவர்களது தீச்செயலையும் அவர்களுடைய பாவங்களையும் இனிமேல் நினைவுகூர மாட்டேன்" என்று தூய ஆவியார் கூறுவதாக எழுதுகின்றார். இதைக் குறித்து நாம் இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

விவிலியம் முழுமைக்கும் நாம் படித்துப் பார்க்கின்றபோது, இறைவன் மன்னிப்பதில் தாராளமானவர் என்ற செய்தியை உணர்ந்து கொள்ளலாம். குறிப்பாக எசாயா புத்தகம் 55:7 ல், மன்னிப்பதில் இறைவன் தாராள மனத்தினர் என்றும், சீராக்கின் ஞான நூல் 16:11 ல் மன்னிப்பதில் அவர் வல்லவர் என்றும் சொல்லப்பட்டப்படுகின்றது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்றபோது, இறைவன் நம்மை அளவு கடந்த விதமாய் மன்னிக்கின்றார் என்ற செய்தியை உறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற 'தீச்செயல்களையும் பாவங்களையும் நினைவுகூராத இறைவன்' என்ற வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வி நமக்கு எழலாம்.

தொடக்கத்தில் நாம் பார்த்த மன்னிக்க மனமில்லாத அந்த யூதரைப் போன்று, இன்றைக்குப் பலர் தனக்கு எதிராக துரோகம், கெடுதல் போன்றவற்றைச் செய்தவர்களை மன்னிக்க மனமில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை மன்னித்தாலும் அதனை மறக்கமுடியாமல், அதையே நினைத்து மனத்திற்குள் புழுங்கிக்கொண்டு இருக்கிறவர்கள் ஏராளம். ஆனால், ஆண்டவரோ நம்முடைய பாவங்களை எல்லாம் மன்னிப்பவராக மட்டுமல்லாமல், அதை மறந்துபோனவராக, நினைவில் கொள்ளாதவராக இருக்கின்றார். இதுதான் மனிதர்கள் மன்னிப்பதற்கும் இறைவன் மன்னிப்பதற்கும் உள்ள வித்தியாசமாக இருக்கின்றது. மனிதனுடைய மன்னிப்பு மடுவளவு என்றால், இறைவனின் மன்னிப்பு மலையளவாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மன்னிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகின்றார். 'மற்றவர்கள் செய்த குற்றத்தை நாம் மன்னித்தால்தான், இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிப்பார்' என்கிறார் (மத்6:14) ஆகவே, நாம் தீமை செய்பவர்களை மன்னிப்பவர்களாக, மன்னிப்பதோடு மட்டுமல்லாமல், அதனை மறக்கின்றவர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம்.

சிந்தனை

மன்னிப்பு என்பது விண்ணகத்திற்கு நாம் செல்வதற்கான ஒரு கயிறு போன்றது. ஒருவேளை நாம் பிறருடைய குற்றங்களை மன்னிக்காதுபோனால், நம்மால் விண்ணகத்திற்கு ஏறிச் செல்லமுடியாது" என்பார் ஜார்ஜ் ஹெர்பர்ட் என்ற அறிஞர். இதுதான் உண்மை. எப்போது நாம் பிறரை மன்னித்து, அதை அப்படியே மறந்து போகின்றோமோ, அப்போது இறைவன் நமது குற்றங்களை மன்னித்து, அதை நினைவில் கொள்ளாது விடுகின்றார்.

ஆகவே, இறைவனைப் போன்று நாமும் மன்னிப்பதில் தாராள உள்ளத்தினராய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 4: 1-20

'சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காவும் சிலர் நூறு மடங்காவும்..'

நிகழ்வு

அமெரிக்காவை செதுக்கிய சிற்பிகளுள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் கார்ரோல்டனைச் சேர்ந்த சார்லஸ் கரோல் என்பவர். அமெரிக்கா, இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்ற பிறகு தன்னுடைய ஆக்கப்பூர்வமான சிந்தனையால் சுதந்திரத்திற்கான அறிவிப்பினை (Declaration of Independence) உருவாக்கி, மக்கள் உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிக்க பெரிதும் உழைத்தவர் இந்த சார்லஸ் கரோல்.

அவர் தொண்ணூற்று ஆறு ஆண்டுகள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து, சாகும் தருவாயில் இருந்தார். அப்போது அவரைச் சூழ்ந்துகொண்டு ஏராளமான பேர் இருந்தார்கள். அவர் அவர்களிடத்தில் மெதுவாகப் பேசத் தொடங்கினார். "எனக்கு இப்போது தொண்ணூற்று ஆறு வயது ஆகின்றது. இத்தனை ஆண்டுகளும் நான் நல்ல உடல் உள்ள சுகத்தோடும் வசதி வாய்ப்போடும் மரியாதையோடும் வாழ்ந்து வந்திருக்கிறேன். இவற்றுக்குக்கெல்லாம் மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது".

"அது என்ன காரணம்?" என்று அவரைச் சூழ்ந்து நின்றவர்கள் மிக ஆவலோடு கேட்டார்கள். அப்போது அவர் அவர்களிடத்தில் சொன்னார். "இறைவனுடைய வார்த்தையை நான் அனுதினமும் கடைப்பிடித்து வந்தேன். அதுதான் நான் நல்ல உடல் உள்ள சுகத்துடனும் வசதி வாய்ப்போடும் மரியாதையோடும் இருக்கக் காரணம்".

ஒருவர் இறைவனின் வார்த்தையை தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ்கின்றபோது, அவர் எந்தளவுக்கு முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலன் தருபவராக/ பெறுபவராக இருக்கின்றார் என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

நான்குவிதமான நிலமும் நான்குவிதமான உள்ளமும்

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விதைப்பவர் உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இதில் வருகின்ற விதை இறைவார்த்தை (லூக் 8:11), விதைப்பவரோ இறையடியார் (1 கொரி 3: 5-9), நிலமோ மனிதருடைய உள்ளம். இப்படி இறையடியாரால் உள்ளம் என்னும் நிலத்தில் விதைக்கப்படும் இறைவார்த்தைக்கு நாம் எப்படி செவிமடுக்கின்றோம் என்பதுதான் இந்த உவமையின் சாராம்சமாக இருக்கின்றது.

உவமையில் வரக்கூடிய வழியோர நிலம் என்பது கடின உள்ளத்தைக் (Hard Heart) குறிப்பதாக இருக்கின்றது. எப்படியென்றால் வழியோர நிலம் என்பதால் பலரும் போவர், வருவர். அப்படி அவர்கள் போகிறபோதும் வருகின்றபோதும் அவர்களுடைய கால் பட்டு நிலமானது விதை உள்ளே போகமுடியாத அளவுக்கு இறுகிப்போய்விடும். இதனால் பறவை நிலத்தின் மேலேயே கிடக்கின்ற விதையை எளிதாகக் கொத்திச் சென்றுவிடும். இதைப் போன்றுதான் பலருடைய கருத்துகளையும் மனதினுள் வாங்கக்கூடியவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் எது உண்மை, எது பொய் என்று தெரியாமல், மனம் இறுகி வாழ்வைத் தொலைத்து நிற்பார்கள். இப்படிப்பட்டவர்கள் இறைவார்த்தை மட்டும் தங்களுடைய உள்ளத்தை ஊடுருவுமாறு பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது (நீமொ 4: 23)

பாறைநிலை என்பது மேம்போக்கான இதயத்தைக் (Shallow Heart) குறிப்பதாக இருக்கின்றது. பாறைநிலத்தில் விதைக்கப்படும் விதை, சில காலத்திற்கு நன்றாக வளரும். அதன்பிறகு வேரை நன்றாக ஊன்ற முடியாமல் போய் அது கருகிவிடும். சிலர் இறைவார்த்தையைக் கேட்பார்கள், ஆனால் பிரச்சனை என்று வந்தவுடன் எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். அதனாலேயே இவர்கள் மேம்போக்கான இதயத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

மூன்றாவதாக வருகின்ற முட்செடி நிலம் என்பது பலவகையான எண்ணங்களுக்கு ஆட்பட்ட இதயத்தைக் (Crowed Heart) குறிப்பதாக இருக்கின்றது. முடிசெடி நிலத்தில் பலவகையான செடிகொடிகள் வளரும். ஒரு கட்டத்தில் அவையெல்லாம் வளர்ந்து விதைத்தவன் விதைத்த செடியை நெருக்குகின்றபோது அது ஒன்றுமில்லாமே போய்விடும். இறைவார்த்தைக்கு மட்டுமல்லாமல் எல்லாவிதமான கருத்துகளுக்கும் மனதில் இடம் கொடுப்பவர்கள் இப்படித்தான் எல்லாவற்றாலும் நெருக்கப்பட்ட கடைசியில் ஒன்றுமில்லாமல் போவார்கள்.

நான்காவதாக வருகின்ற நல்ல நிலமோ பலன்தரும் இதயத்தைக் குறிப்பதாக (Fruitful Heart) இருக்கின்றது. இந்நிலத்தில் விழுகின்ற விதை முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலன்தரும். அதுபோன்றுதான் இறைவாத்தையைக் கேட்டு, அதன்படி நடப்போருடைய வாழ்வும் இருக்கும்.

ஆகையால், வாழ்வு தரக்கூடிய இறைவார்த்தைக்கு நாம் செவிமடுத்து, அதனைக் கடைப்பிடித்து வாழ்ந்தோம் என்றால், நாம் அதிகமாக பலந்தருவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

சிந்தனை

வாழ்வு தரும் இறைவார்த்தையை வெறுமனே கேட்பதோடு நின்றுவிடாமல், அதனை வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
விதைகள் உவமை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் விதைகள் உவமை அல்லது விதைப்பவர் உவமையையும், அதற்கு இயேசு தரும் விளக்கத்தையும் வாசிக்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது:
(அ) உவமை,
(ஆ) உவமைகளின் நோக்கம்,
(இ) உவமையின் விளக்கம்.

அ. உவமை

இந்த உவமையில் நான்கு காரணிகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன.

1. விதைப்பவர்
2. விதைகள்
3. நிலம்
4. புற எதிரிகள்

1. விதைப்பவர் - இவர் ஒரே ஆள்தான். ஆனால், விதைகள் சரியாகப் பலன் கொடுக்காததற்கு இவரும் ஒரு காரணரே. இவர் அகலக் கை படைத்தவர். பணக்காரர். ஆகையால்தான், விதைகளை அள்ளி அவர் விருப்பம்போல தெளிக்கிறார். சிக்கனக்காரர் என்றால் சரியாக விதைகளை அளந்து, நல்ல நிலத்தில் மட்டும் தெளித்திருப்பார். இவரின் அகலக்கையே இவரைக் கடவுள் எனச் சொல்லிவிடுகிறது. ஏனெனில் கடவுள்தான், 'நல்லோர் மேலும் தீயோர் மேலும் கதிரவன் ஒளிரவும் மழை பொழியவும் செய்கின்றார்.'

2. விதைகள் - விதைகள் அனைத்தும் ஒரே வகை வீரியம் கொண்டவையாகத் தெரிகின்றன. ஆனால், நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் ஒரே பலனைத் தராமல் சில முப்பது, சில அறுபது, சில நூறு எனத் தருவதைப் பார்த்தால் விதைகளின் வீரியத்திலும் வித்தியாசம் இருப்பது போல இருக்கிறது. ஆனால், இறைவார்த்தையை விதைகளுக்குப் பொருத்திப் பார்த்தால் இறைவார்த்தையின் வீரியம் ஏற்றத்தாழ்வாக இருக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

3. நிலம் - வழியோரம், பாறை, முட்புதர், நல்ல நிலம்.

மக்கள் நடக்கும் வழி வழக்கமாக இறுகிப்போய் இருக்கும். அதில் விழும் விதை நிலத்திற்குள் செல்லாது. மேலும் பறவைகளின் கண்களுக்குத் தெளிவாகத் தெரியும். பாறை நிலம். மேலோட்டமாக மண். கொஞ்சம் தாண்டினால் பாறை. பாதி வழி செல்லும் வேர் மீதி வழி செல்ல முடியாது. முட்புதர். பசுமையான இடம்தான். ஆனால், விதைக்குத் தேவையான ஊட்டத்தை முள் எடுத்துக்கொள்வதோடு ஒரு கட்டத்தில் விதைக்கு இடம் இல்லாமல் நெருக்கிவிடும். நல்ல நிலம். நன்றாக உழப்பட்டு, உரமிடப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்ட நிலம். விரிந்துகிடக்கும் மண் அப்படியே விதையை விழுங்கி விடுகிறது. பலன் தர ஆரம்பிக்கிறது விதை. எல்லா விதைகளையும் நல்ல நிலம் ஒன்று போல வாங்கினாலும் பலன் கொடுப்பது என்னவோ விதைகளைப் பொறுத்தே இருக்கிறது.

4. புற எதிரிகள் - வழியோரத்தில் பறவைகள், பாறை நிலத்தில் பாறை, முட்புதர் நடுவில் முட்செடிகள் என புற எதிரிகளும், நல்ல விதைக்கு புற எதிரிகளும் இல்லை.

ஆ. உவமைகளின் நோக்கம்

காண இயலாத ஒன்றைக் காண்பதிலிருந்து சுட்டிக்காட்டுவதே உவமையின் இயல்பு. எடுத்துக்காட்டாக, 'சிம்சோன் சிங்கத்தைப்போல வலிமையானவன்' என்ற வாக்கியத்தில். சிங்கத்தின் வலிமை நமக்குத் தெரிந்த ஒன்று. தெரிந்த ஒன்றைச் சொல்லி தெரியாத ஒன்றான சிம்சோனின் வீரத்தைப் பதிவு செய்வதாக இவ்உவமை அல்லது உருவகம் அமைகிறது.

இ. உவமைகளின் விளக்கம்

மாற்குவின் குழுமத்திற்கு இறைவார்த்தையைப் பற்றிய ஒரு போதனை தேவைப்பட்டது. ஆகையால், இந்த உவமையைப் பதிவு செய்து இயேசுவின் சொற்களாலேயே விளக்குகிறார் மாற்கு. இறைவார்த்தையை ஏற்றுப் பலன் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனையாக விளக்கம் அமைகிறது.

இந்த நற்செய்தி வாசகம் நமக்கு என்ன சொல்கிறது?

இன்றைய கால கட்டத்தில் இறைவார்த்தையை நாம் பல வழிகளில் ஏற்கிறோம். நம் வாழ்வு ஏறக்குறைய மூன்றாம் நிலம்போலத்தான் இருக்கிறது. நிறைய சிக்கல்களுக்குள் விழுகிறது இறைவார்த்தை. எடுத்துக்காட்டாக, கிரிக்கெட் விளையாடும்போது நாம் அடிக்கும் பந்து முட்புதருக்குள் விழுகிறது என வைத்துக்கொள்வோம். நம்மால் பந்தைப் பார்க்க முடியும். ஆனால், பந்தை நெருங்க முடியாது. அப்படி நெருங்க வேண்டுமென்றால் ஒவ்வொரு தடையாகக் கடக்க வேண்டும். பந்தைப் பார்த்தவுடன் நேரடியாக நாம் அதை நோக்கிக் கையை நீட்டினால் முட்கள் நம் கைகளையும், முகத்தையும், கால்களையும் காயப்படுத்திவிடும். அப்படி அனைத்தையும் விலக்கி அருகில் சென்றாலும் அந்த பந்து ஏற்கனவே அங்கிருந்த முள் ஒன்றால் காற்றிழக்கவும் வாய்ப்பிருக்கிறது.

முட்புதர் இருக்கின்ற நிலம் நல்ல நிலம்தான். நல்ல நிலமாய் அது இருப்பதால்தான் அங்கே முள் வளர்கிறது. ஆனால், தேவையற்ற அந்த முள் விதையின் தேவையைத் திருடிவிடுகிறது.

ஆக, இன்று இறைவார்த்தை என்னில் விழ, எதெல்லாம் அதை நெறித்துவிடுகிறது? என எண்ணிப் பார்ப்போம். அவற்றை ஒவ்வொன்றாக எடுக்க முற்படுவோம்.

எடுத்துக்காட்டாக, மரியாளின் வாழ்வு. கபிரியேல் தூதர் இறைவார்த்தையை விதைக்கிறார் மரியாவில். மரியாளிடமும் ஒரு முள் இருந்தது. தயக்கம். 'இது எங்கனம் ஆகும்?' என்கிறார். தூதர், 'கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை. உன் உறவினள் எலிசபெத்தும்...' என்று அடையாளம் தர, தயக்கம் என்ற முள்ளை அகற்றி, 'ஆம்' என்கிறார். வளனாருக்கு, சந்தேகம் என்ற முள். பேதுருவுக்கு தன் பாவம் என்ற முள், பவுலுக்கு தன் பழைய வாழ்வு என்ற முள், அகுஸ்தினாருக்கு மேனிக்கேயம் என்ற முள் - முள்களை அகற்றியவர்கள் நல்ல நிலம் ஆனார்கள்.

நிலம் அங்கே பலன் தந்தது.


Rev. Fr. Yesu Karunanidhi
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!