Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   28  ஜனவரி 2019  
        பொதுக்காலம் 3ம் வாரம் திங்கள்கிழமை - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்த கிறிஸ்து, மீண்டும் ஒரு முறை தோன்றுவார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 15, 24-28

சகோதரர் சகோதரிகளே, இயேசு புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராய் இருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட, என்றும் நிலைக்கும், உரிமைப் பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. இது ஒரு சாவின்மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பு அளிக்கிறது.

அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார்.

தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும்.

அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார். மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி.

அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:98: 1. 2-3ab. 3உன-4. 5-6 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: அவரது வியத்தகு செயல்களுக்காய், புதியதோர் பாடல் பாடுங்கள்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ab இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3உன உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி, கொம்பினை ஊதி, ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
02 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 சாத்தானின் அழிவு.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30

அக்காலத்தில் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், "இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது" என்றும் "பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஆகவே இயேசு அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: "சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு.

முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்."

"இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது' என்று தம்மைப்பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எபிரேயர் 9:15, 24-28

தம்மையே பலியாகக் கொடுத்து நம் பாவங்களைப் போக்கிய இயேசு

நிகழ்வு

புதிதாகத் திருமணம் முடிந்திருந்த ஒரு தம்பதியர் 'விருந்துச் சாப்பாடு சாப்பிடுவதற்காக நெருங்கிய உறவினர் ஒருவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

உறவினர் வீட்டில் விருந்து மிகவும் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுமணத் தம்பியரை இன்முகத்தோடு வரவேற்ற உறவினர், அவர்களை மிகவும் அழகுபடுத்தப்பட்ட விருந்து மேசையின் முன்பாக அமரவைத்து உணவு பரிமாறினர். புதுமணத் தம்பதியரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட விருந்தினை மிகவும் அனுபவித்து உண்டு கொண்டிருந்தனர்.

அப்போது தனக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த கறிக்குழம்பினை மாப்பிளை தவறுதலாகக் கொட்டிவிட, அது வெள்ளைநிறத்தில் இருந்த மேசை விரிப்பினில் பட்டு மிகவும் அலங்கோலமானது. விருந்துக்கு அழைத்திருந்த உறவினர் வேகமாக வந்து, கறிக்குழம்பு பட்டுக் கறையான அந்த மேசை விரிப்பை ஒரு துணியை வைத்துத் துடைத்தபோதும், அதிலிருந்து கறைமட்டும் போகவே இல்லை. இதனால் மாப்பிளை ஒருவிதமான குற்ற உணர்வோடு விருந்தினை சாப்பிடு முடிந்தார்.

இதைக் கவனித்த உறவினர், "தம்பி! மேசை விரிப்பில் கறையாகிவிட்டதே என்று வருத்தப்படவேண்டாம், இதோ! அதை நன்றாகச் சோப்புப் போட்டு அலசிவிட்டால் கறை போய்விடப்போகிறது" என்று சொல்லிவிட்டு, உடனே சென்று சோப்புப் போட்டு அலசிவிட்டு, அதை முன்புபோல் மிகவும் அழகாகக் கொண்டுவந்தார். இப்போது மாப்பிளையின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கிவரத் தொடங்கியது.

இந்த நிகழ்வில், மேசையில் சிந்திய கறிக்குழம்பினை உறவினர் ஒரு துணியை வைத்துத் துடைத்தபோது, அது போகவேயில்லை. இதுபோன்றுதான் இஸ்ரயேல் மக்களிடைய இருந்த குருக்கள் மக்கள் செய்த பாவங்களுக்காகப் பலி ஒப்புப்கொடுத்தபோதும் அவர்களுடைய பாவக்கறை போகவில்லை. ஆனால், எப்படி உறவினர் மேசை விரிப்பினில் படிந்திருந்த கறையினை சோப்புப் போட்டுக் கழுவி தூய்மையாக்கினாரோ, அதுபோன்று ஆண்டவர் இயேசு தன்னுடைய இரத்தத்தையே பலிபொருளாகச் சிந்தித்து, நம் பாவங்கள் அனைத்தையும் போக்கி, நமக்கு விடுதலை வாழ்வினை வழங்கினார்.

முற்கால பலிகளும் இயேசுவின் பலியும்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், இயேசு தன்னையே பலியாகச் செலுத்தி, நம் பாவங்கள் அனைத்தையும் போக்கியத்தையும், அவர் செலுத்திய பலியின் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசுகின்றார். நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில், தூயகத்திற்குள் பலிசெலுத்தச் செல்லும் தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்தை எடுத்துச் சென்று, அதைக்கொண்டு பலிசெலுத்துவார். இதை அவர் ஒவ்வொரு ஆண்டும் செய்துவந்தார். இப்படிப்பட்ட பலி மக்களுடைய பாவங்களைப் போக்கியது என்று மக்கள் நம்பினார்கள். ஆனால், அது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், ஆண்டவர் இயேசு செலுத்திய பலி அப்படியல்ல, அவர் தன்னுடைய உடலை ஒரே ஒருமுறை தூய பலியாகச் செலுத்தி, நம்முடைய பாவங்களை எல்லாம் போக்கினார். இதனால் நாம் அனைவரும் மீட்கப்பட்டவர்கள் ஆனோம்.

மேலும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தலைமைக்குரு இஸ்ரயேல் மக்களுடைய பாவங்களைப் போக்க பலி ஒப்புக் கொடுத்தார். இயேசுவோ இந்த உலக மக்கள் அனைவருடைய பாவங்களையும் போக்க தன்னுடைய உடலை பலியாக ஒப்புக்கொடுத்தார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பலி ஒப்புக்கொடுத்த தலைமைக்குரு தூயகத்திலிருந்து வெளியே வந்தார். இயேசு கல்வாரி மலையில் தன்னைப் பலியாகத் தந்ததும், விண்ணகத்திற்குச் செல்கின்றார்.

இவைதான் பழைய ஏற்பாட்டுக் காலப் பலிகளுக்கும் புதிய ஏற்பாட்டுக் கால அல்லது இயேசுவின் பலிக்கும் உள்ள வித்தியாசமாகும். இயேசுவின் பலியில் நம்மீதுகொண்ட உண்மையான அன்பும் தியாகவும் பரிவும் இருந்தது. பழைய ஏற்பாட்டுக் கால பலியில் அது இருந்ததா? என்பதுதான் சந்தேகம். ஆகையால், இயேசு இந்த மானுட சமூதாயத்தின் மீது கொண்டிருந்த அன்பினால், தன்னையே பலியாகத் தரமுன்வந்தது போன்று, நாம் ஒவ்வொருவரும் நம்மையே தூய, மாசற்ற பலியாகத் தரவேண்டும் என்பதுதான் நம்முன்னே இருக்கின்ற சவாலாக இருகின்றது. அத்தகைய சவாலினை நாம் எதிர்கொண்டு, நம்மையே நாம் இந்த மானிட சமுதாயத்திற்காகத் தருவதுதான் சிறப்பான ஒன்றாக இருக்கும்.

சிந்தனை

"தன் நண்பருக்காக உயிரைத் தருவதை விடவும், சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" என்பார் இயேசு (யோவா 15:13). ஆகவே, நாமும் இயேசுவைப் போன்று பிறர் வாழ, நம்மையே தூய, மாசற்ற பலியாகத் தருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 3: 22-30

"இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது"

நிகழ்வு

நகர்புறத்தில் தன்னுடைய தாத்தா பாட்டியோடு வளர்ந்துவந்த பேரன், ஒருநாள் தன் தாத்தாவிடம், "தாத்தா! மற்றவர்கள் என்னை அவமானப்படுத்தினால், அதை நான் எப்படி எதிர்கொள்வது?" என்று கேட்டான்.

உடனே தாத்தா தனது அறிவுக் களஞ்சியத்திலிருந்து அவனுக்கு அற்புதமான ஒரு பதிலைத் தந்தார், "யாராவது உன்னை அவமானப்படுத்தினால், முதலில் அதை நிராகரித்துவிடு. முடியாவிட்டால் சிரித்துக்கொண்டே கடந்துவிடு. ஆனால், அந்த அவமானம் ஒருவகையில் அவசியம் என்று தோன்றினால், அதுதரும் வலிகளையும் வேதனைகளையும் விட்டுவிட்டு, பாடத்தை மட்டும் எடுத்துக்கொள்".

நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கின்ற அவமானங்கள், விமர்சனங்கள் போன்றவற்றை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது குறித்தான தெளிவைத் தரும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

மக்களோ மலைத்துபோய் நிற்க, மறைநூல் அறிஞர்கள் இயேசுவிடம் குற்றம் கண்டுபிடித்தார்கள்

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு பார்வையற்றவரும் பேச்சற்றவருமான ஒருவரிடமிருந்து பேயை ஓட்டுகின்றார். இயேசு செய்த இந்த அருமடையாளம் மக்கள் மத்தியில் இருவேறு விதமான எதிர்வினைகளைப் புரியச் செய்கின்றது. இயேசு செய்த இந்த அருமடையாளத்தைப் பார்த்து மக்கள் மலைத்துப்போய், "தாவீதின் மகன் இவரோ" என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞரோ, "இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது" என்றும் "பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்றும் சுற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.

இயேசு பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஒட்டுவதாக மறைநூல் அறிஞர்கள் சொல்கிறார்களே, உண்மையில் 'யார் இந்த பெயல்செபூல்?' இயேசு பெயல்செபூலைக் கொண்டுதான் பேய்களை ஓட்டுகிறாரா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

பெயல்செபூல் என்றால் வீட்டுத்தலைவன் (master of the house) என்பது பொருள். இந்த பெயல்செபூலைக் குறித்து அரசர்கள் 2 ஆம் புத்தகம், முதல் அதிகாரத்தில் நாம் வாசிக்கின்றோம். இந்த பெயல்செபூல், எக்ரோனின் தெய்வம். யூதர்களுக்குத்தான் புறவினத்தாரைக் கண்டால் ஆகாதே, இதில் அவர்கள் வணங்கக்கூடிய தெய்வத்தை மட்டும் அவர்களுக்குப் பிடித்துவிடுமா என்ன! இயேசுவை இந்த பெயல்செபூலைக் கொண்டுதான் பேய்களை ஒட்டுவதாக மறைநூல் அறிஞர்கள் இயேசுவின்மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

மறைநூல் அறிஞர்கள் முன் வைத்த வாதத்தில் இருந்த அடிப்படைப் பிழை

தான் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டுதான் பேய்களை ஓட்டுவதாகச் சொன்ன மறைநூல் அறிஞர்களிடம், இயேசு "தனக்கு எதிராகத் தானே பிளவுபவும் எந்த வீடும் நிலைத்து நிற்கமுடியாது" என்ற அடிப்படை உண்மையைச் சொல்லி, சாத்தான் ஒருபோதும் தனக்கெதிரான தந்திர வேலையில் ஈடுபடாது, மேலும் தன்னுடைய வீழ்ச்சியிலும் அது மகிழ்வுறாது. அப்படியிக்க, மறைநூல் அறிஞர்கள் சொல்வதுபோன்று தான் எப்படி பேய்களின் தலைவனான பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்ட முடியும்?. என்பதுதான் இயேசு முன்வைக்கின்ற ஆணித்தரமான பதிலாக இருக்கின்றது.

அடுத்தாக, ஒருவரை அல்லது அவருடைய செயல்பாடுகளை விமர்சிக்கின்றபோது, விமர்சிப்பதற்கான அப்படித் தர்மமாவது கடைபிடிக்கவேண்டும். மறைநூல் அறிஞர்களைப் பொறுத்தளவில் அவர்கள் எந்தவிதவிதத்திலும் அடிப்படை தர்மத்தைக்கூட கடைபிடிக்காமல், கண்மூடித்தனமாக இயேசுவை விமர்சித்தார்கள் என்பதுதான் அப்பட்டமான உண்மை. இன்றுகூட பலர், இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த மறைநூல் அறிஞர்களைப் போன்று பலரையும் விமர்சிப்பது மிகவும் வேதனையாகவும் அதே நேரத்தில் வேடிக்கையாகவும் இருக்கின்றது. இப்படிப்பட்டவர்கள் திருந்தி நடப்பது நல்லது

மன்னிக்க முடியாத குற்றம்

மறைநூல் அறிஞர்கள் இயேசுவை நோக்கி வைத்த குற்றச்சாட்டுக்கு சரியான பதிலடி கொடுத்த இயேசு கடைசியில், "தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்" என்கின்றார். இயேசு ஏன் இவ்வாறு சொல்கின்றார் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு திருச்சபையை வழிநடத்திச் செல்லக்கூடியவர் தூய ஆவியார். அவர் சாதாரணமானவர் அல்ல, துணையாளர்; தமதிருத்துவத்தின் மூன்றாம் நாள். அப்படியிருக்கும்போது அவரைப் பழித்துரைப்பவருடைய பாவங்கள் எப்படி மன்னிக்கப்படும்!.

சிந்தனை

கேலிச் சித்திர நிபுணர் ஆண்ட்ரு மேத்யூஸ் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், "காற்று புழுதியை வாறி இறைத்தால், அதைப் பழிவாங்குவீர்களா? அல்லது பறவை தலையில் எச்சமிட்டால் அதை துரத்திப்பிடிப்பீர்களா?... இல்லைதானே. உங்களைத்தான் நீங்கள் தூய்மை செய்துகொள்வீர்கள். அப்படியிருக்கும்பொது மனிதர்கள் அறியாமையாலோ, அகங்காரத்தாலோ தீமை செய்தால் ஏன் பழி வாங்கத் துடிக்கிறீர்கள்? உங்களைச் சரிசெய்துகொண்டு போய்க்கொண்டே இருங்கள்" இது நாம் அனைவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும் ஒரு சேதி.

ஆகவே, நம்மீது சுமத்தப்படும் அர்த்தமற்ற விமர்சனங்களை இயேசுவைப் போன்று புறந்தள்ளுவோம்; இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!