Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   24 ஜனவரி 2019  
  பொதுக்காலம் 2ம் வாரம் வியாழக்கிழமை 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 இயேசு தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்து, எக்காலத்திற்குமே பலியை நிறைவேற்றினார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் (7: 25-8: 6)

சகோதரர் சகோதரிகளே, இயேசு தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்துபேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார். இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர்.

ஏனைய தலைமைக் குருக்கள் செய்வதுபோல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும், பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒரு முறைக்குள் செய்து முடித்தார். திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள்.

ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார். இத்தகைய தலைமைக் குரு நமக்கு வாய்த்துள்ளார் என்பதே இதுகாறும் நாம் கூறியவற்றின் தலையாய கருத்து. இவர் விண்ணகத்தில் பெருமைமிகு கடவுளுடைய அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

அங்கே மனிதரால் அல்ல, ஆண்டவராலே அமைக்கப்பட்ட உண்மையான கூடாரமாகிய தூயகத்தில் ஊழியம் செய்கிறார். ஒவ்வொரு தலைமைக் குருவும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். எனவே பலி செலுத்துவதற்கு இவரிடமும் ஏதேனும் ஒரு பொருள் கட்டாயம் இருக்க வேண்டும். உலகிலேயே இருந்திருப்பாரென்றால் இவர் குருவாக இருந்திருக்கமாட்டார்.

ஏனெனில், திருச்சட்டத்தின்படி காணிக்கைகளைச் செலுத்த ஏற்கெனவே இங்குக் குருமார்கள் இருக்கிறார்கள். இவர்கள் வழிபடும் இடம் விண்ணகக் கூடாரத்தின் சாயலும் நிழலுமே.

மோசே கூடாரத்தை அமைத்தபோது, "மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி நீ இவற்றையெல்லாம் செய்யுமாறு கவனித்துக்கொள்" என்று கடவுள் பணித்தது இதைச் சுட்டிக்காட்டுகிறது.

ஆனால், இவரோ அவர்களுடைய குருத்துவப் பணியைவிட மிக மேன்மையான குருத்துவப் பணியைப் பெற்றிருக்கிறார். ஏனெனில் சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இவரை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையை விடச் சிறப்பு மிக்கது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:40: 6-7a. 7b-8. 9, 16 (பல்லவி: 7a, 8b)
=================================================================================
 பல்லவி: என் கடவுளே, உமது திருவுளம் நிறைவேற்ற வருகின்றேன்.

6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7a எனவே, 'இதோ வருகின்றேன்.'
-பல்லவி

7b என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது.
8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான்.
-பல்லவி

9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.
-பல்லவி

16 உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், 'ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!' என்று எப்போதும் சொல்லட்டும்!
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 "இறைமகன் நீரே" என்று தீய ஆவிகள் கத்தின. இயேசு தம்மை வெளிப்படுத்த வேண்டாமெனச் சொன்னார்.

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (3: 7-12)

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத்திலிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.

மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்.

மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார்.

ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொட வேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந் தனர். தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, "இறைமகன் நீரே" என்று கத்தின. அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எபிரேயர் 7: 25 8:6

நமக்காகப் பரிந்துபேசும் இயேசு

நிகழ்வு

நகர்புறத்தில் இருந்த கலைக்கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு படித்து வந்தான் தமிழ் என்ற மாணவன். சாதாரண ஒரு குடும்பப் பின்னணியிலிருந்து வந்தாலும், படிப்பில் அவன் கெட்டிக்காரன். அதனாலேயே அவனை அவனுக்குப் பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு சமயம் மாணவன் தமிழினுடைய வகுப்பு மாணவி ஒருத்தியை வேறொரு வகுப்பைச் சார்ந்த மாணவன் ஒருவன் கிண்டல் செய்தான் என்பதற்காக, அவன் தன்னுடைய வகுப்புத் தோழர்கள் ஒருசிலரைச் சேர்த்துக்கொண்டு மாணவியைக் கிண்டல் செய்த மாணவனை நைய்யப் புடைத்தான். இதனால் அடிபட்ட மாணவன் தக்க தருணம் பார்த்து, தமிழையும் அவனோடு இருந்த அவனுடைய வகுப்புத் தோழர்களையும் பதிலுக்கு அடித்ததால் பிரச்சினை மிகவும் பெரிதானது. கடைசியில் தமிழ்தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று கல்லூரியின் முதல்வர் முன்பாக நிறுத்தப்பட்டான்.

கல்லாரி முதல்வரோ தமிழிடம், "உன்னைப் போன்ற ஆட்களால்தான் இந்தக் கல்லூரிக்குக் கெட்ட பெயர் வருகிறது. பேசாமல் டீசியை வாங்கிக்கொண்டு வேறொரு கல்லூரியில் சேர்ந்துகொள். அப்போதுதான் உனக்குப் புத்திவரும்" என்று கத்திக்கொண்டு இருந்தார். கல்லூரி முதல்வர் தமிழை நோக்கி இவ்வாறு சத்தம் போட்டுக் கொண்டிருந்த நேரம் பார்த்து, தமிழின் வகுப்பு ஆசிரியர் ஜீவா உள்ளே நுழைந்தார். அவர் மாணவன் தமிழின்மீது மிக உயர்வான மதிப்பு வைத்திருந்தார். ஜீவாவின் மீதுகூட கல்லூரியின் முதல்வர் மிக உயர்வான மதிப்பு வைத்திருந்தார்.

கல்லூரியின் முதல்வர் தமிழை கடுமையாகத் திட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த பேராசிரியர் ஜீவா அவரிடம், "ஐயா நான் சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த தமிழ் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன். ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் இப்படியொரு தவறைச் செய்துவிட்டான். இந்த ஒருமுறை மட்டும் இவனை மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் இவன் எந்த ஒரு தவறும் செய்யாதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று அவர் தமிழுக்காகப் பரிந்து பேசினார். கல்லூரி முதல்வரும், பேராசிரியர் ஜீவா மாணவன் தமிழைக் குறித்து நல்லவிதமாய் சொன்னதன் பொருட்டு, அவனை அந்தக் கல்லூரியிலேயே தொடர்ந்து படிக்க அனுமதித்தார்.

இதற்குப் பின்பு வெளியே வந்த தமிழிடம் பேராசிரியர் ஜீவா வந்து, "தமிழ்! இன்று மாலை என்னை வந்து நீ தனியாகச் சந்தித்துவிட்டுப் போ. உன்னிடத்தில் நான் ஒருசில விஷயங்களைப் பேசவேண்டும்" என்றார். அவர் சொன்னது போன்றே, தமிழ் வகுப்பு முடிந்ததும் பேராசிரியர் ஜீவாவைப் போய் சந்தித்தான். அவர் அவனுக்கு நிறைய அறிவுரைகளைச் சொன்னார். தமிழும் அவர் சொன்னது எல்லாவற்றையும் மிகப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு விட்டு, அவரிடமிருந்து விடைபெறும்போது, "சார் இன்று நான் கல்லூரியில் இருப்பதே உங்களால்தான். நீங்கள் செய்த இந்த உதவியை என்றைக்கும் மறக்கமாட்டேன். அதே நேரத்தில் நீங்கள் சொன்னதுபோன்றே நான் பொறுப்பை உணர்ந்து படிப்பேன். சமுதாயத்தில் பெரிய மனிதனாக மாறுவேன்" என்று சூழுரைத்துவிட்டு புது உத்வேகத்துடன் அவரிடமிருந்து விடை பெற்றுச் செய்றான்.

எப்படி தமிழுக்காகப் பரிந்துபேச பேராசிரியர் ஜீவா இருந்தாரோ, அது போன்று நமக்காகப் பரிந்து பேச நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இருக்கிறார்.

நமக்காக பரிந்துபேச இருக்கும் இயேசு

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், "ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருவோரை அவர் முற்றிலும் மீட்க வல்லவராக இருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்" என்கிறார். ஆம், நம்முடைய தலைமைக் குருவாகிய இயேசு நம்முடைய வலுவின்மையைக் கண்டு மனமிரங்காதவர் அல்ல. அவர் நம்முடைய வலுவின்மையைக் கண்டு மனமிரங்குகிறவர், நமக்காகப் பரிந்து பேசுகிறவர். ஆகவே இத்தகைய ஒரு (நமக்கு ஏற்ற, தூய, மாசற்ற, வானங்களுக்கு மேல் உயர்த்தப்பட்ட) தலைமைக் குருவை இறைவன் நமக்குக் கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

மேலும், இவரைப் போன்று நம்மிலும் வலுவற்ற நிலையில் உள்ளவர்களுக்காக நாம் இறைவனிடம் பரிந்து பேச வேண்டும். அதுவே நாம் செய்யவேண்டிய தலையாய பணி ஆகும்.

சிந்தனை

இன்றைய சூழலில் வலுவற்ற நிலையில் உள்ளவர்கள் மீது மனமிரங்குகிறவர்கள் மிக குறைவு. ஆனால் இயேசு அப்படி அல்லாமல், நம்முடைய வறிய நிலைகண்டு நமக்காக மனமிரங்கினார். அவரைப் போன்று நாமும் வாழ்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 3:7-12

மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு...

நிகழ்வு

         அந்தப் பெருநகரில் இருந்த ஓர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் குடியிருந்து வந்த ஒரு பணக்காரப் பெண்மணியிடம் நூறு ஆண்டுகளுக்கும் பழமையான, அதே நேரத்தில் விலையுயர்ந்த கண்ணாடிக் கூஜா ஒன்று இருந்தது. அதை அவர் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வந்தார். அது மட்டுமல்லாமல், தன்னைப் பார்க்க வந்தவர்களிடத்தில் எல்லாம் அவர் அதனுடைய பெருமையை நீண்டநேரம் பேசிவந்தார்.

இப்படியே நாட்கள் உருண்டோடிக் கொண்டிருக்கும்போது, ஒருநாள் தவறுதலாக அவருடைய கை பட்டு, அவர் வைத்திருந்த கண்ணாடிக் கூஜாவானது சுக்கு நூறாக நொறுங்கிப்போனது. அப்போது அவர் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. அதை நினைத்தே அவர் ஒருசில வாரங்கள் கவலையில் மூழ்கியிருந்தார்.

இந்நிலையில் அவருடைய வீட்டிற்கு தெரிந்த பெரியவர் ஒருவர் வந்தார். அவர் அந்தப் பெண்மணி கவலை தோய்ந்த முகத்தோடு இருப்பதைப் பார்த்துவிட்டு, அவருடைய கவலைக்கான காரணத்தைக் கேட்டார். அந்தப் பெண்மணியும் நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் பெரியவரிடத்தில் எடுத்துச் சொன்னார். அப்போது அந்த பெரியவர் சொன்னார், "ஒரு சாதாராண கண்ணாடிக் கூஜா உன்னுடைய மகிழ்ச்சியைப் பறித்துக்கொண்டு விட்டதே. இந்த கண்ணாடிக் கூஜா என்றில்லை. எதன்மீதும் நீ அளவுக்கு அதிகமாக பற்றுக்கொண்டால் இதுதான் நடக்கும். ஆகையால் எதற்கும் அடிமையாமலும் எதன்மீதும் அளவுக்கதிகமான பற்றுக்கொள்ளாமலும் இரு. அப்போது உன்னுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்".

ஆம், எதற்கும் அடிமையாகாமலும் எதன்மீதும் பற்றுக்கொள்ளாமலும் இருந்தால் நம்முடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.

மக்கள்கூட்டத்திடமிருந்து விலகியே இருந்த இயேசு

         நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்கள்கூட்டம் தன்னை நெருக்கிவிடாதவாறு இருக்க, தன்னுடைய சீடர்களிடம் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு சொல்கின்றார். இயேசு ஏன் அவ்வாறு சொல்கிறார் என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்று சிந்தித்துப் பார்த்து, அவர் கடைப்பிடித்து வந்த விழுமியங்களை நாம் நம்முடைய வாழ்வில் எப்படிக் கடைப்பிடித்து வாழ்வது என்று பார்ப்போம்.

இயேசு மக்கள் கூட்டத்திடமிருந்து விலகி இருந்ததற்கான முதன்மையான காரணம், அவர் எதன்மீதும் ஆசையில்லாமல், பற்றில்லாமல் இருந்தார் என்பதே ஆகும். இயேசுவின் காலத்தில் இருந்த பரிசேயர்களும் மறைநூல்கள் அறிஞர்கள் மக்கள் தங்களைப் பார்க்கவேண்டும் (மத் 23:5), புகழவேண்டும் என்று எல்லாவற்றையும் செய்துவந்தார்கள். இயேசுவுக்கு மக்களுடைய பாராட்டோ, புகழ்ச்சியோ தேவையே இல்லை ஏனெனில் அவர் கடவுள் தன்மையிலிருந்து தம்மையே வெறுமையாக்கியவர் (பிலி 2: 7-8). அப்படிப்பட்ட இயேசு தாமரை இலை தண்ணீர் போல மக்கள் கூட்டத்திடமிருந்து "விலகியே" இருந்தார்.

இரண்டாவது காரணம், இயேசுவை மக்கள் ஒரு "புதுமைகள் செய்பவராகப்" பார்த்தார்கள். இயேசுவிடத்தில் சென்றால், வயிறார உணவு கிடைக்கும் (யோவா 6:26); நோய்கள் எல்லாம் நீங்கும் என்ற எண்ணத்தோடும் சென்றார்கள். இதை ஒன்றும் குறை என்று சொல்லமுடியாது என்றாலும்கூட, இயேசு போதித்த விழுமியங்களின்படி வாழ அவர்கள் தயங்கினார்கள். "எவ்வளவு வேண்டுமாலும் உம்மிடமிருந்து ஆசிபெற்றுக்கொள்வோம். ஆனால் நீர் போதிப்பதை எல்லாம் எங்களால் கடைப்பிடித்து வாழமுடியாது" என்ற மனநிலையில் மக்கள் இருந்ததால், இயேசு அவர்களிடமிருந்து விலகியே இருக்கின்றார்.

மூன்றாவது, அதே நேரத்தில் மிக முக்கியமான காரணம், இயேசு செய்த அருமடையாளங்களை எல்லாம் பார்த்துவிட்டு மக்கள் "இவரே உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர்" என்று அவரைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்க முயன்றார்கள் (யோவா 6:14-15). அதனாலும் இயேசு மக்கள் கூட்டத்திலிருந்து விலகியே இருந்தார். இயேசு இந்த உலகத்திற்கு அதிகாரம் செலுத்தவோ, அடக்கி ஆளவோ வரவில்லை. மாறாக ஒரு துன்புறும் ஊழியனைப் போன்று மக்களுக்காக தன்னையே தரவந்தார். அதற்காகத்தான் அவர் அருமடையாளங்களை ஆற்றிவந்தார். ஆனால் மக்கள் அவற்றினைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரை அரசராக்க முயன்றதுதான் வேடிக்கையிலும் வேடிக்கையானது.

சிந்தனை
    
         "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு" என்பார் ஐயன் திருவள்ளருவர். இந்த உலக செல்வத்தின் மீதான நம்முடைய பற்றுகளை விடுத்து, உண்மையான இறைவன்மீது மட்டுமே பற்றுக்கொண்டு வாழவேண்டும் என்பதுதான் இதன் அர்த்தமாக இருக்கின்றது. எனவே, நாமம் நம் ஆண்டவர் இயேசுவைப் போன்று இந்த உலக மாயைகளில் சிக்கிவிடாமல், உண்மையான இறைவன்மீது மட்டுமே பற்றுக்கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


 
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
"பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத்
தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்துகொண்டிருந்தனர்" (மாற்கு 3:10)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- நோயுற்ற மக்களுக்கு இயேசு குணமளித்ததை மாற்கு நற்செய்தி விரிவாக எடுத்துரைக்கிறது. இயேசுவின் பணியில் மிக முக்கியமான கூறு அவர் மக்களுக்கு நலமளித்ததே என உறுதியாகக் கூறலாம். அவரைத் தேடி நலம் பெற வந்த மனிதர் தம்மில் குறையிருப்பதை உணர்ந்தனர். எனவே, தங்களுடைய குறையை நீக்கி நிறைவளிக்க வல்லவர் இயேசு என அவர்கள் நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. நம்மில் குறையிருப்பதை நாம் கண்டுகொள்ளத் தவறினால் அக்குறையிலிருந்து விடுபடுவதற்கான எண்ணமே நம்மில் எழாது. ஆனால் இயேசுவைத் தேடி வந்த மக்கள் இயேசுவின் வல்லமையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இயேசுவை அணுகிச் சென்று, அவரை நேரடியாகச் சந்தித்து அவரோடு உரையாட வேண்டும் என்னும் ஆவல் பலரிடம் இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், எப்படியாவது இயேசுவைத் தொட்டுவிட்டால் போதும் தங்களுக்கு நலம் கிடைக்கும் என மக்கள் நினைத்தனர்.

-- இவ்வாறு இயேசுவைத் தொட்டதும் தங்களுக்கு நலம் கிடைக்கும் என மக்கள் நம்பியது முழு நம்பிக்கையின் வெளிப்பாடு எனக் கூறுவதற்கில்லை. எனினும் நம்பிக்கையின் தொடக்கம் அங்கே உள்ளது எனலாம். நம்பிக்கை என்பது உள்ளத்தில் உறுதியான பிடிப்புக் கொண்டு, கடவுளைப் பற்றிக்கொள்வதில் அடங்கும். இத்தகைய பற்றுறுதி மக்களிடம் இருந்ததால் அவர்களுக்குக் கடவுள் இயேசு வழியாக நலம் அளித்தார். ஆனால் இயேசு வழங்கிய நலன் உடலைச் சார்ந்தது மட்டுமல்ல, உள நலமும் ஆன்ம நலமும் இயேசு நமக்குக் கொடையாக அளிப்பதே. இயேசுவைத் தொடவும் அவரால் தொடப்படவும் வேண்டும் என்றால் நாமும் அவரை அணுகிச் செல்ல வேண்டும். அப்போது நாம் கடவுளின் வல்லமையை நம் வாழ்வில் உணர்ந்தறிவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!