Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   22  ஜனவரி 2019  
  பொதுக்காலம் 2ம் வாரம் செவ்வாய்க்கிழமை 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 எதிர்நோக்கே உள்ளத்திற்குப் பாதுகாப்பானது; உறுதியான நங்கூரம் போன்றது.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 6: 10-20

சகோதரர் சகோதரிகளே, கடவுள் நீதியற்றவர் அல்ல. இறைமக்களுக்கு நீங்கள் முன்பு தொண்டாற்றி வந்தீர்கள்; இப்போதும் தொண்டு செய்து வருகின்றீர்கள். எனவே கடவுள் பெயரால் நீங்கள் காட்டிய அன்பையும் உழைப்பையும் அவர் மறக்கமாட்டார். நீங்கள் எதிர்நோக்குவது முழு உறுதி பெறும் பொருட்டு, உங்களுள் ஒவ்வொருவரும் முன்பு காட்டிய அதே ஆர்வத்தையே இறுதிவரை காட்டவேண்டும் என மிகவும் விரும்புகிறோம்.

இவ்வாறு நீங்கள், தளர்ச்சிக்கு இடம் கொடாமல், நம்பிக்கையாலும் பொறுமையாலும் இறைவாக்குறுதிகளை உரிமைப் பேறாகப் பெற்றவர்களைப்போல் வாழுங்கள். ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி அளித்தபோது, தம்மைவிடப் பெரியவர் எவர் பெயராலும் ஆணையிட்டுக் கூற இயலாததால், தம்மீதே ஆணையிட்டு, "நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்" என்றார்.

இதன்படி அவரும் பொறுமையோடு காத்திருந்து, பின் கடவுள் வாக்களித்ததைப் பெற்றுக்கொண்டார். தங்களைவிடப் பெரியவர் ஒருவர் பெயரால்தான் மக்கள் ஆணையிடுவர். எல்லாச் சச்சரவுகளிலும் ஆணையிட்டே முடிவு கட்டுவர். அம்முடிவை ஆணை உறுதிப்படுத்தும்.

அவ்வாறே, கடவுளும் தம் வாக்குறுதியை உரிமைப்பேறாகப் பெற்றோருக்குத் தம் திட்டத்தின் மாறாத் தன்மையை மிகவும் தெளிவாகக் காட்ட விரும்பி, ஓர் ஆணையால் தம் வாக்கை உறுதிப்படுத்தினார். மாறாத் தன்மையுடைய இவை இரண்டையும் பொறுத்த வரையில் கடவுள் உரைத்தது பொய்யாயிருக்க முடியாது. அடைக்கலம் தேடும் நாம், நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை விடாமல் பற்றிக்கொள்வதற்குத் தளரா ஊக்கம் கொண்டிருக்கவேண்டும். இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்திற்குப் பாதுகாப்பான, உறுதியான நங்கூரம் போன்றுள்ளது.

இது கோவிலின் திரைச்சீலைக்கு அப்பால் சென்று சேர்ந்திருக்கிறது. நமக்கு முன்னோடியாய் அந்தத் திரைச்சீலையைக் கடந்து இயேசு அங்குச் சென்று சேர்ந்திருக்கிறார். மெல்கிசதேக்கு முறைப்படி என்றென்றும் தலைமைக் குரு என்னும் நிலையில் நம் சார்பாக அவர் அங்குச் சென்றிருக்கிறார்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:111: 1-2. 4-5. 9,10 (பல்லவி: 5b)
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.

1 நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். பல்லவி

4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். 5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார். பல்லவி

9 தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது. 10உ அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எபே 1: 17-18 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 ஓய்வு நாள் மனிதருக்காக; மனிதர் ஓய்வு நாளுக்காக அன்று.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 23-28

ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர்.

அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், "பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?" என்று கேட்டனர்.

அதற்கு அவர் அவர்களிடம், "தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறை இல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?" என்றார்.

மேலும் அவர் அவர்களை நோக்கி, "ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எபிரேயர் 06:10-20

தளர்ச்சியை விட்டுவிட்டு, நம்பிக்கையோடும் பொறுமையோடும் வாழ்வோம்.

நிகழ்வு

ஒருசமயம் சாத்தான் பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பை விடுத்தது. "இத்தனை நாளும் நான் செய்துவந்த இந்தத் தொழிலை விட்டுவிட்டு, வேறொரு தொழிலைப் பார்க்கப் போகிறேன். அதனால் என்னுடைய தொழிலுக்கு நான் பயன்படுத்திய கருவிகளை எல்லாம் ஏலத்துக்கு விடப்போகிறேன். தேவைப்படுவோர் வாங்கிக்கொள்ளவும்".

சாத்தான் விடுத்த இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பலர் சாத்தான் பயன்படுத்திய தொழில் கருவிகளை வாங்க போட்டி போட்டுக்கொண்டு வந்தனர். மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த கருவிகளில் தன்னலம், ஆணவம், வெறுப்பு, கோபம், பொறாமை, பேராசை, பதவி வெறி, சாதி வெறி, மதவெறி என்று பல்வேறு தொழில் கருவிகள் இருந்தன. இவற்றின் விலையோ மக்கள் ஓரளவுக்கு வாங்கக்கூடிய அளவில்தான் இருந்தன. ஆனால் இவற்றுக்குப் பின்னால் மிகவும் தேய்ந்துபோய், அதே நேரத்தில் விலை அதிகமாக இருந்த ஒரு கருவி காணப்பட்டது.

அதைப் பார்த்துவிட்டு ஒருவர் சாத்தானிடம், 'இது என்ன கருவி, தேய்ந்துபோய் இருக்கின்ற இந்தக் கருவிக்கு மட்டும் ஏன் விலை இவ்வளவு அதிகமாக உள்ளது?, இதன் இரகசியம்தான் என்ன?" என்று கேட்டார். அதற்கு சாத்தான் அவரிடம், "இந்த கருவிக்குப் பெயர் ஊக்கத்தைக் கெடு அல்லது அதைரியமூட்டு (Discouragement) என்பதாகும். என்னிடத்தில் உள்ள மற்ற எல்லாக் கருவிகளும் செயல்படுகிறதோ இல்லையோ, இந்தக் கருவி கட்டாயம் செயல்படும். அந்தளவுக்கு இந்தக் கருவிக்கு சக்தி இருக்கின்றது. என்னுடைய இந்தக் கருவி ஒருவரிடத்தில் செயல்படும் பட்சத்தில், அவர் எப்படிப்பட்ட மனிதராக இருந்தாலும் வீழ்த்திவிடுவேன்" என்றது.

இப்படிச் சொல்லிவிட்டு சாத்தான் தொடர்ந்து சொன்னது, "இந்த உலகத்தில் இருக்கின்ற பெரும்பாலான பேர் என்னுடைய இந்தக் கருவிக்குப் பலியாகி, மனம் தளர்ந்து போய், மீண்டும் எழமுடியாமல் இருப்பவர்கள்தான். அதனால்தான் இந்தக் கருவி இப்படித் தேய்ந்து போய் இருக்கின்றது, விலையும் மிக அதிகமாக இருக்கின்றது.

ஆம், ஊக்கம் கெட்டு, மனம்தளர்ந்து, நம்பிக்கை இழந்துபோய் இருக்கின்ற ஒருவர் தன்னுடைய வாழ்வில் முன்னுக்கு வருவது மிகக் கடிதம்தான். இத்தகைய சூழலில் இன்றைய முதல் வாசகம் என்ன செய்தியைச் சொல்கிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

மனம் தளராதே, நம்பிக்கை இழக்காதே!

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், "நீங்கள் எதிர்நோக்குவது முழு உறுதிபெறும்பொருட்டு, உங்களுள் ஒவ்வொருவரும் முன்பு காட்டிய அதே ஆர்வத்தை இறுதிவரைக் காட்டவேண்டும் என மிகவும் விரும்புகிறோம். இவ்வாறு நீங்கள் தளர்ச்சிக்கு இடம் கொடாமல், நம்பிக்கையாலும் பொறுமையாலும் இறைவாக்குகளை உரிமைப்பேறாகப் பெற்றவர்களைப் போல் வாழுங்கள்" என்கின்றார். அதாவது நாம் மனந்தளர்ந்து போகாமலும் நம்பிக்கையை இழக்காமலும் இறுதிவரை முழு ஆர்வத்தோடு இருக்கவேண்டும் என்று எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் நமக்கு எடுத்துச் சொல்கின்றார்.

இன்று நம்முடைய நம்பிக்கை வாழ்விலும் வரி, அன்றாட வாழ்விலும் சரி, நம்பிக்கைத் தளர்ச்சி என்பது மிக அதிகமாகக் காணப்படுகின்றது. இறைவனிடத்தில் ஒரு தேவைக்காக ஒருமுறையோ அல்லது இருமுறையோ வேண்டுகின்றோம். அது கிடைக்கவில்லை என்றதும், இறைவனை அப்படியே மறந்துவிட்டு, நம்முடைய சொந்த வழியில் நடக்கத் தொடங்கிவிடுவோம். அதுபோன்றுதான் நம்முடைய அன்றாட வாழ்விலும், நாம் மேற்கொண்ட ஏதோ ஒரு முயற்சி தோல்வி அடைந்ததும், நம்முடைய அத்தனை முயற்சிகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒரு மூலையில் முடங்கிப் போய்விடுகின்றோம். நம்மை இப்படித் தளர்வுறச் செய்கின்ற, நம்பிக்கையை இழக்கச் செய்கின்ற எண்ணங்களைத் தவிர்த்து நம்பிக்கையோடும் பொறுமையோடும் வாழவேண்டும் என்றுதான் இறைவன் இன்றைய முதல் வாசகத்தின் வழியாக நமக்கு அழைப்புத் தருகின்றார்.

நாம் ஒருபோதும் மனந்தளர்ந்து போகக்கூடாது என்பதற்காக விவிலியத்தில் வருகின்ற ஒரு மிகச் சிறந்த உதாரணம்தான் யாக்கோபு ஓர் இரவில் ஆடவர் ஒருவரோடு போரிட்ட நிகழ்வாகும் (தொநூ 32:26). யாக்கோபு அந்த ஆடவரோடு இரவு முழுவதும் போரிடுகின்றார், கடைசியில், "நீ எனக்கு ஆசிர் வழங்கினாலொழிய நான் உம்மைப் போகவிடமாட்டேன்" என்று சொல்லி யாக்கோபு அவரிடமிருந்து ஆசி பெறுகின்றார். நாமும் மனந்தளராமல் இருந்தால், ஒருநாள் வெற்றியைப் பெறுவோம் என்பது உறுதி.

சிந்தனை

இன்று நம்முடைய மனதை தளர்வுறச் செய்ய, நம்முடைய நம்பிக்கையை இழக்கச் செய்ய, சாத்தான் மிகத் தந்திரமாக வேலைபார்த்துக் கொண்டிருக்கின்றது. நாம் மனவுறுதியோடு நின்று சாத்தானின் தந்திரங்களை வெற்றிகொள்வதுதான் சிறப்பானது.

ஆகவே, மனந்தளராமல், நம்பிக்கையை இழக்காமல், ஆண்டவர்மீது இறுதிவரை பற்றுக்கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 02: 23 -28

மனிதர்களா? மரபுகளா?


நிகழ்வு

2018 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 16 ஆம் நாள், தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளைத் தாக்கிய கஜா புயலில் இறந்தவர்கள் பலர். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் விஜயலட்சுமி என்ற பதினான்கு வயதே ஆன சிறுமி.

பட்டுக்கோட்டையை அடுத்துள்ள அணைக்காடு என்ற கிராமத்தைச் சார்ந்த இந்தச் சிறுமி, கஜா புயல்தாக்கி இறந்தார் என்று சொல்வதைவிடவும், அவருடைய குடும்பத்தார் அல்லது இந்த சமூகம் தாங்கிப்பிடித்த மூடப்பழக்கவழக்கங்களுக்கு, மரபுகளுக்குப் பலியானார் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு குழந்தை பூப்படைந்தால் வயதுக்கு வந்தால் வீட்டுக்குள் வைக்கக்கூடாது; அப்படி வைத்தால் அது தீட்டு. மாறாக பூப்படைந்த அந்த குழந்தையை வீட்டுக்கு வெளியே தென்னங்கீற்றுகளால் ஒரு குடிசை அமைத்து அதனுள் வைக்கவேண்டும் அல்லது ஒருதனியறையில் வைக்கவேண்டும்.. இதுதான் தஞ்சாவூர் பகுதிகளில் பின்பற்றப்பட்டு வரக்கூடிய மரபு. இந்நிலையில் கஜா புயல் வருவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக பூப்படைந்த சிறுமி விஜயலட்சுமி அப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுக்கு ஏற்ப வீட்டுக்கு வெளியே தென்னங்கீற்றால் வேயப்பட்ட ஒரு குடிசையில் வைக்கப்பட்டாள். இத்தனைக்கும் கஜா புயலைக் குறித்த முன்னறிவிப்பு சொல்லப்பட்டபோதும், மரபுகளை எப்படி மீறுவது என்று அவருடைய குடும்பத்தார் அவரை வீட்டுக்கு வெளியே அமைக்கப்பட்ட தென்னங்கீற்றுக் குடியிலேயே வைத்திருந்தனர். இதனால் புயல் வந்தபோது தென்னைமரம் மேலே சரிந்து விழுந்து சிறுமி விஜயலட்சுமி இறந்துபோனாள்.

அறிவியலும் விஞ்ஞானமும் இவ்வளவு வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்திலும்கூட மரபுகளையும் மூடப்பழக்கவழக்கங்களையும் தூக்கிப்பிடித்து, அநியாயமாக ஒரு குழந்தையைப் பழிகொடுத்தது மிகவும் வேதனைக்குரியது.

யூதர்களின் ஓய்வுநாள் சட்டங்கள்

நற்செய்தி வாசகத்தில், இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல்வழியே நடந்து சென்றபோது, இயேசுவின் சீடர்கள் பசி மிகுதியால் கதிர்களைக் கொய்து உண்ணத் தொடங்குகிறார்கள். இதைப் பார்த்த பரிசேயர்கள், "பாரும், ஓய்வுநாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?" என்று இயேசுவிடம் கேட்கிறார்கள். இங்கு சீடர்கள் செய்த தவறு (?) என்ன, சீடர்கள் செய்தது தவறு என்று சொன்ன பரிசேயர்களுக்கு இயேசு என்ன பதிலளித்தார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

"ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வுநாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகருக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்" (விப 20:10) என்பது கடவுள் மோசேக்குக் கொடுத்த சட்டம். இச்சட்டத்தின் தலையான நோக்கம் ஆறு நாட்கள் வேலைபார்த்த மக்கள் ஏழாம் நாள் ஓய்ந்திருக்கவும் இறைவனைத் தொழவும்தான். ஆனால் 'சமயக்காவலர்கள்' என்று தங்களைக் காட்டிக்கொண்ட பரிசேயக்கூட்டம் ஓய்வுநாளில் எந்தவொரு வேலையும் செய்யக்கூடாது என்று அதற்கு விளக்கம் தந்தது. மேலும் ஓய்வுநாளில் செய்யக்கூடாத 39 வேலைகளை அவர்கள் பட்டியலிட்டது. இந்த அடிப்படையில் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டது சட்டமீறல் என்பதால், பரிசேயர்கள், "ஓய்வுநாளில் செய்யக்கூடாததைச் செய்துவிட்டதாக" இயேசுவின் சீடர்கள்மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது

தன்னுடைய சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறிவிட்டதாக குற்றம் சுமத்தும் பரிசேயர்களிடத்தில் இயேசு, தாவீது அரசரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைச் ( 1 சாமு 21:1-6) சுட்டிக்காட்டி, அவர்களுக்குப் பதிலளிக்கின்றார். தாவீதும் அவரோடு இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது, கோவிலுக்குள் நுழைந்து, குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை (லேவி 24: 5-9), வேறு எவரும் உண்பது மிகப்பெரிய குற்றமாகும். ஆனாலும் தாவீது அரசரும் அவரோடு இருந்தவர்களும் உண்டதால் அது குற்றமாகப் பார்க்கப்படவில்லை. இங்கே ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து உண்டவர்கள் ஓய்வுநாளுக்கும் ஆண்டவரான இயேசுவின் சீடர்கள். அப்படியிருக்கும்போது அதை மட்டும் எப்படிக் குற்றமாகப் பார்க்கலாம் என்பதுதான் இயேசு முன்மொழியும் வாதமாக இருக்கின்றது.

அடுத்ததாக, ஓய்வுநாள் சட்டமே மனிதர்களுக்காக உண்டாக்கப்பட்டது. அப்படியிருக்கும்போது பசியாய் இருந்த தன்னுடைய சீடர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஓய்வுநாளைத் தூக்கிப்பிடிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்பதுதான் இயேசு எழுப்புகின்ற அடுத்த கேள்வியாக இருக்கின்றது.

சிந்தனை

சகமனிதர்களை விட சட்டங்கள் ஒன்றும் பெரிதில்லை. ஆண்டவர் இயேசு சட்டங்களை விட சகமனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இயேசுவின் வழியில் நடக்கின்ற நாமும் சக மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!