• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறை இரக்கத்தின் நவநாள்

   
இறை இரக்கத்தின் நவநாள்

(இந்த நவநாள், பெரிய வெள்ளிக்கிழமை (இன்று ) தொடங்கி உயிர்ப்பு ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை இறை இரக்கத்தின் பெருவிழாவில் முடிவடைகிறது)

++++++++++++++++++

முதல் நாள் - 1


இயேசுவின் விருப்பம்

இன்று மனுக்குலம் முழுவதையும் சிறப்பாக பாவிகள் அனைவரையும் என்னிடம் கூட்டிவந்து, என் இரக்கக் கடலில் முழ்கவை. இதன்மூலம் ஆன்மாக்களின் இழப்பினால் கடுத்துயரத்தில் ஆழ்ந்துள்ள எனக்கு ஆறுதலளிப்பாய்.

மனுக்குலம் முழுவதும் சிறப்பாக, பாவிகள் இறைவனின் இரக்கத்தை அடையவேண்டுமென்று ஜெபிப்போமாக.


இரக்கம் நிறைந்த இயேசுவே! எங்களுக்கு இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவரே எமது பாவங்களைப் பாராமல் உமது அளவற்ற நன்மைத்தனத்தில் நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாரும். கருணை மிகுந்த உமது இதய இல்லத்தில் எங்களை ஏற்றுக் கொள்ளும். எவரும் அதிலிருந்து பிரிந்து போகவிடாதேயும். பரமதிரித்துவத்தில் பிதாவோடும் தூய ஆவியோடும் உம்மைப் பிணைக்கும் அன்பின் பேரால் உம்மை இரந்து மன்றாடுகிறோம்.

விண்ணுலகிலிருக்கற...
அருள் நிறைந்த...
தந்தைக்கும்....

நித்திய பிதாவே உமது திருக்குமாரனும் எமதாண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயத்திலே நம்பிக்கை வைத்துள்ள மனுக்குலத்தின் மீதும் உமது கருணைக் கண்களை திருப்பியருளும். அவரது துயரம் நிறைந்த பாடுகளைப் பார்த்து எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும். எல்லாம் வல்ல உமது இரக்கத்தை என்றென்றும் போற்றுவோமாக.

ஆமென்

++++++++++++++++++

தூய மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா கையேட்டுக் குறிப்புகள்:

கடவுள் எல்லாரையும் அன்புசெய்கிறார். நாம் எவ்வளவு பெரும் பாவியாக இருந்தாலும் அவரது அளவிடமுடியாத இரக்கத்தில் நம்பிக்கை வைத்து அவரை நாடி நம் பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கோரும்போது கடவுளின் அளவிட முடியாத இரக்கம் நம்மீது பாய்தோடி வரும். பாவியின் சீர்கேடு எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கு இரக்கத்தை பெறும் உரிமையும் அதிகமாக உள்ளது. ஆழம் காண முடியாத எனது இரக்கத்தில் நம்பிக்கை வைக்க எல்லா ஆன்மாக்களுக்கும் அழைப்பு விடு, எனெனில் எல்லாரையும் மீட்க நான் விரும்புகிறேன்.

எல்லா ஆன்மாக்களுக்காகவும் சிலுவை மரத்தில் ஈட்டியால் குத்தி திறக்கப்பட்டுள்ளது எனது இரக்கத்தின் ஊற்று. நான் யாரையும் ஒதுக்கி விடுவது இல்லை. என் இரக்கத்தை நீங்கள் பெற்றது போல் நீங்களும் பிறருடன் இரக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள். நான் மன்னிப்பதுபோல் பிறர் குற்றங்களை நீங்களும் மன்னியுங்கள். பாவத்தில் வீழ்ந்துகிடக்கும் ஆன்மாக்களை இரக்கமுள்ள என் இதயத்தருகே வரும்படி சொல். நான் அமைதியால் நிரப்புவேன். நம்பிக்கையோடு என் இரக்கத்தை நாடி என்னிடம் வருவோருக்கு மீட்பை அள்ளித்தருவேன்.


இறை இரக்கத்தின் நவநாள்   - 02

"இன்று குருக்கள், துறவியரின் ஆன்மாக்களை என்னிடம் அழைத்து வந்து ஆழங்காண முடியாத எனது இரக்கத்தில் மூழ்கவிடு. எனது கசப்பான பாடுகளை நான் சகித்துக் கொள்ள எனக்கு சக்தியளித்தவர்கள் இவர்கள்தாம். வாய்க்கால்களாகிய இவர்கள் வழியாக எனது இரக்கம் மனுக்குலத்தின் மேல் பாய்கிறது."
இறைவனின் இரக்கம் மனுக்குலத்தின் மீது பெருகுவதற்கு வழியாயிருக்கும் குருக்கள், துறவியர் அனைவருக்காவும் செபிப்போமாக.
இறக்கம் மிகுந்த இயேசுவே! உம்மிடமிருந்தே எல்லா நன்மையும் வருகின்றன. குருக்கள், துறவியர், கன்னியர்களின் ஆன்மாக்களில் உமது அருட்கொடைகள் பெருகச் செய்யும். அதனால் அவர்கள் தமது பணிகளை தக்கவிதமாகவும், பயன்தரக்கூடியதாகவும் நிறைவேற்றி தமது சொல்லாலும், வாழ்வாலும் அனைவரையும் இறை இரக்கத்தில் பக்தி வணக்கம் கொள்ளச் செய்வார்களாக.

செபிக்கவும் - பரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்....

நித்திய பிதாவே! உமது திராட்சைத் தோட்டததிற்கென நீர் தெரிந்துள்ள உமது குருக்கள், கன்னியர், துறவியரின் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருக்குமாரனின் விஷுச அன்புக்குப் பாத்திரமான இவர்களை உமது ஆசீரால் உறுதிப்படுத்தி பிறரை மீட்பின் பாதையில் வழிநடத்தும் ஞானத்தையும், உமது இரக்கத்தை நோக்கி அவர்களை ஈர்க்கின்ற சக்தியையும் அளித்தருளும்.இறை இரக்கத்தின் நவநாள்

(மூன்றாம் நாள் - 3)

++++++++++++++++++

இயேசுவின் விருப்பம்

இன்று பக்தி பிரமாணிக்கமுள்ள அனைத்து ஆன்மாக்களையும் அழைத்து வந்து, என் இரக்க கடலில் மூழ்கவை. என் சிலுவையின் பாதையில் இவர்கள் எனக்கு ஆறுதலாய் இருந்தார்கள். கசப்பான துயரக்கடலின் நடுவில் எனக்கு கிடைத்த ஒரு துளி ஆறுதல் இவர்கள்தான்.

பிரமாணிக்கமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவருக்காகவும் செபிப்போமாக.

இரக்கம் மிகுந்த இயேசுவே! உமது இரக்கக் கருவூலத்திலிருந்து எல்லாருக்கும் உமது அருளை ஏராளமாக பொழிகின்றீர். இரக்கத்தின் இருப்பிடமாகிய உமது இதயத்தினுள் விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஏற்றருளும். அங்கிருந்து அவர்கள் பிரிந்து போகவிடாதேயும். ஆவியோடும் உம்மைப் பிணைக்கும் அன்பில் பேரால் உம்மை இரந்து மன்றாடுகிறோம்.

விண்ணுலகிலிருக்கற...
அருள் நிறைந்த...
தந்தைக்கும்....

நித்திய பிதாவே! உமது திருமகனின் வாரிசுகளாகிய விசுவாசிகள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம் நிறைந்த அவரது திருப்பாடுகளின் பெயரால் இவர்களுக்கு உமது ஆசிரை வழங்கி, உமது இடைவிடாத பராமரிப்பால் இவர்களை அரவணைத்துக் கொள்ளும். இதனால் அவர்கள் உம்மீது கொண்ட அன்பையும், தமது விசுவாசத்தையும் ஒருபோதும் இழக்காமல் தேவதூதர் புனிதர் சேனைகளுடன் உமது எல்லையில்லா இரக்கத்தை நித்தியத்திற்கும் மகிமைப் படுத்துவார்களாக. ஆமென்.
இறை இரக்கத்தின் நவநாள்

(நான்காம் நாள் - 4)

++++++++++++++++++

இயேசுவின் விருப்பம்

இன்று என்மீது நம்பிக்கை அற்றவர்களையும் இன்னும் என்னை அறியாதவர்களையும் என்னிடம் அழைத்துவா. எனது கசப்பான பாடுகளின்போது இவர்களையும் நினைத்துக் கொண்டேன். என்னை அறியவேண்டுமென்ற இவர்களது எதிர்கால ஆர்வம் என் இதயத்திற்கு ஆறுதலாய் இருந்தது. என் இரக்கமாகிய மாபெரும் கடலில் இவர்களை ஆழ்த்திவிடு.

இறைவனின் இரக்கத்தை இன்னும் அறியாத மக்களுக்காக ஜெபிப்போம்.

இரக்கம் மிகுந்த இயேசுவே! நீரே உலகின் ஒளி. உம்மை இன்னும் அறியாத மக்கள் இரக்கத்தின் உறைவிடமாகிய உமது இதயத்தினுள் ஏற்றருளும். உமது அருட்கதிர்கள் இவர்களுக்கு ஒளியூட்ட இவர்களும் எம்மோடு இணைந்து நித்தியத்திற்கும் உமது அற்புதமான இரக்கத்தைப் போற்றுவார்களாக.

விண்ணுலகிலிருக்கற...
அருள் நிறைந்த...
தந்தைக்கும்....

நித்திய பிதாவே! உமது திருக்குமாரனும் எமது ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயத்தை விசுவசியாதவர்கள் மீதும் இன்னும் அறியாத மக்கள் மீதும் கருணைக் கண்நோக்கியருளும். இவர்களை நற்செய்தியின் ஒளிக்கு இழுத்தருளும். உம்மை அன்பு செய்வது எத்துணை இன்பம் என்பதை உணர்ந்து, இவர்களும் உமது இரக்கத்தை ஊழியுள்ள காலமும் வாழ்த்த வரமருளும். ஆமென்.


இறை இரக்கத்தின் நவநாள்

நாள் - 05

"இன்று பிரிந்து போன சகோதரர்களின் ஆன்மாக்களைக் கொணர்ந்து என் இரக்கப் பெருங்கடலில் அமிழ்த்து. என் கசப்பான பாடுகளின் போது எனது உடலையும், உள்ளத்தையும் இவர்கள் கிழித்தவர்கள். திருச்சபையின் ஒற்றுமைக்கு இவர்கள் திரும்பி வந்து சேர்ந்தால்தான் என் காயங்கள் குணமாகும். இதன் வழியாக என் பாடுகளின் அகோரத்தை தணிப்பார்கள்."
விசுவாசத்தில் தவறுவோருக்காக செபிப்போமாக.

இரக்கம் மிகுந்த இயேசுவே! நன்மையின் உருவே! உம்மிடம் ஒளியைத்த தேடும் எவரையும் நீர் மறந்ததில்லை. பிரிந்துபோன எம் சகோதரர்களை இரக்கத்தின் உறைவிடமாகிய உமது இதயத்தினுள் ஏற்றருளும். திருச்சபையின் ஒன்றிப்பில் இவர்கள் இணைய உமது ஒளியை இவர்களுக்கு அளித்தருளும். அவர்களும் எம்மோடு சேர்ந்து நித்தியத்திற்கும் உமது இரக்கக் கொடைகளை வணங்குவார்களாக.

செபிக்கவும் - பரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...

நித்திய பிதாவே! பிரிந்துபோன எமது சகோதரர்களின் ஆன்மாக்கள் மீது சிறப்பாக உமது கருணைக்கண்களைத் திருப்பியருளும். அவர்களது குறைகளைப் பாராமல் 'அவர்கள் அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக' என்று தமது மரணத்திற்கு முந்திய நாள் உம்மை உருக்கமாக வேண்டிய உமது திருக்குமாரனின் அன்பையும், அவர் அனுபவித்த கசப்பான பாடுகளையும் பார்த்தருளும். இவர்கள் மீண்டும் அந்த ஒன்றிப்பில் இணைந்து நித்திய காலத்திற்கும் உமது இரக்கத்தைப் போற்றுவார்களாக. - ஆமென்.

இறை இரக்கத்தின் நவநாள்

நாள் - 06

"இன்று சாந்தமும் தாழ்ச்சியுமுள்ள ஆன்மாக்களையும், சிறுகுழந்தைகளின் ஆன்மாக்களையும் என்னிடம் அழைத்துவா. என் இரக்கத்தில் மூழ்க வை. இவர்கள் என் இதய கசப்பான வேதனையின் போது எனக்குச் சக்தியளித்தவர்கள். இவர்கள் எனது பீடங்களின் அடியில் கண்விழித்துக் காத்திருக்கும் உலக வானதூதர்களாக இவர்களைக் காண்கிறேன். இவர்கள் மேல் என் அருளைப் பொழிகின்றேன். தாழ்மையான ஆன்மாக்கள் மட்டுமே எனது அருளைப் பெற முடியும். இவர்கள் மட்டுமே என் நம்பிக்கைக்கு உரியவர்கள்." சிறு குழந்தைகளுக்காகவும் அவர்களைப் போல் ஆகியவர்களுக்காகவும் ஜெபிப்போமாக.

இரக்கம் நிறைந்த இயேசுவே "நான் சாந்தமும் இதய தாழ்ச்சியும் உள்ளவன் என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்" என்று நீர்தாமே சொல்லியிருக்கிறீர். சாந்தமும் தாழ்ச்சியுமுள்ள ஆன்மாக்களையும் சிறு குழந்தைகளின் ஆன்மாக்களையும் இரக்கம் மிகுந்த உம் இதய வீட்டில் ஏற்றருளும்.

இவர்கள் வானுலகைப் பரவசத்தில் ஆழ்த்தி உமது பரலோக தந்தையின் அரியாசனத்தின் முன் மணம் வீசும் மலர்களாக விளங்குவார்கள். உமது திரு இருதயத்தில் நிலையான இடம் கொண்டு இறைவனின் இரக்கத்தை இடையறாது போற்றுவார்களாக.

செபிக்கவும் - பரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...

நித்திய பிதாவே! சாந்தமும் தாழ்ச்சியும் உள்ள உம் அடியார்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இவர்கள் உமது திருக்குமாரனின் சாயலை மிகவும் ஒத்திருக்கிறார்கள். இவ்வான்மாக்களில் நறுமணம் மண்ணுலகிலிருந்து எழுந்து உமது அரியணையை அடைகிறது. இரக்கத்தின் தந்தையே! இந்த ஆன்மாக்கள் மட்டில் உமக்குள்ள அன்பையும் இவர்களில் உமக்குள்ள மகிழ்ச்சியையும் இட்டு, எம்மையும் உலகம் முழுவதையும் ஆசீர்வதித்தருளும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உமது இரக்கத்தை என்றென்றும் போற்றுவோமாக. - ஆமென்.
இறை இரக்கத்தின் நவநாள்

நாள் - 08

"இன்று உத்தரிப்பு ஸ்தலத்தில் சிறைப்பட்டுள்ள ஆன்மாக்களை கொணர்ந்து என் இரக்கத்தின் ஆழத்தில் அமிழ்த்து. என் உதிரப்பெருக்கு, இவர்களைச் சுட்டெரிக்கும் தீயை குளிரச்செய்யட்டும். இவ்வான்மாக்கள் என்னால் அதிகம் அன்புசெய்யப்பட்டவர்கள். என் நீதிக்கு பரிகாரம் செய்கின்றார்கள். இவர்களுக்கு விடுதலை அளிப்பது உன் கையில் இருக்கிறது. என் திருச்சபை அளிக்கும் எல்லா பலன்களையும் எடுத்து இவர்களுக்கு ஒப்புக்கொடு. இவர்கள் செலுத்த வேண்டிய கடனைத் தீர்ப்பாய். "

இறைநீதிப்படி உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக செபிப்போமாக.

இரக்கமுள்ள இயேசுவின் திருஇரத்தம் அவர்களின் வேதனையைத் தணிப்பதாக.
இரக்கம் நிறைந்த இயேசுவே! 'என் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்' என்று மொழிந்தீரே. இறைவனுடைய நீதிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்களை இரக்கம் நிறைந்த உமது இதயத்தினுள் ஏற்றருளும். உமது இதயத்திலிருந்து பீறிட்டு வரும் உதிரமும் நீருமாகிய அருவிகள் இவர்களைச் சுத்திஇருக்கும் அனற்பிழம்புகளை அணைக்கட்டும். இதனால் எங்கும் உமது இரக்கத்தின் வல்லமை போற்றப்படுவதாக.

செபிக்கவும் - பரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...

நித்திய பிதாவே! உத்தரிப்பு ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருமகன் இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் பெயராலும் அவரது திருஇருதயத்தில் நிறைந்த துயரத்தின் பெயராலும் உம்மை மன்றாடுகிறோம். உமது நீதியின் தீர்ப்பினால் வேதனைப்படும் இவ்வான்மாக்களுக்காக உமது இரக்கத்தை காட்டியருளும். உமது திருமகன் இயேசுவின் இரக்கம், அவரது நீதியைவிட மேலோங்கி நிற்பதால் அவரது திருக்காயங்களின் வழியாக இவர்களை நோக்கியருளுமாறு உம்மை வேண்டுகிறோம். - ஆமென்.


இறை இரக்கத்தின் நவநாள்

(ஒன்பதாம் நாள் - 9)
+++++++++++++++++++இயேசுவின் விருப்பம்


இன்று வெதுவெதுப்பான ஆன்மாக்களை என்னிடம் அழைத்துவந்து எனது இரக்கத்தில் மூழ்கவிடு. இவ்வான்மாக்கள் என் உள்ளத்தை மிகவும் நோகச் செய்கிறார்கள். இந்த ஆன்மாக்களாலேயே நான் ஜெத்சமனிப் பூங்காவில் பங்கர வேதனைகள் அனுபவித்தேன். பிதாவே உமக்குச் சித்தமானால் இக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும் என்று நான் கூறியதற்குக் காரணம் இவர்கள்தாம். என் இரக்கத்தை நோக்கி ஓடி வருவதுதான் இவர்களது மீட்பின் கடைசி நம்பிக்கை.

_ஒலிவத் தோப்பில் கிறிஸ்து நாதருக்குப் பயங்கர வேதனை ஏற்படக் காரணமாக இருந்த வெதுவெதுப்பான ஆன்மாக்களுக்காக இறைமகன் இயேசுவிடம் செபிப்போமாக.

இரக்கம் மிகுந்த இயேசுவே! நீர் நன்மையே உருவானவர். ஒலிவத் தோப்பில் உமக்கு மிகுந்த வேதனையும் அருவருப்பும் உண்டாக்கிய நடைப்பிணங்களைப் போன்ற வெதுவெதுப்பான இந்த ஆன்மாக்களை உமது இரக்கம் நிறைந்த இதயத்தினுள் ஏற்றருளும். உமது தூய அன்பின் அக்கினிச்சுவாலையில் இவர்களை மூழ்கச் செய்யும். இதனால் இவர்கள் உமது எல்லையற்ற கருணையை என்றென்றும் புகழ்வார்களாக.

விண்ணுலகிலிருக்கற...
அருள் நிறைந்த...
தந்தைக்கும்....

தந்தை கடவுளிடம் மன்றாடுவோமாக

நித்திய பிதாவே! வெதுவெதுப்புள்ள இந்த ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் கசப்பான பாடுகளின் பெயராலும், சிலுவையில் மூன்று மணிநேரமாக அவர் அனுபவித்த வேதனைகளின் பெயராலும் இந்த ஆன்மாக்களுக்கு, உமது மகிமையின் மீது ஒரு புதிய ஆசையை ஊட்டுமாறு உம்மை இரந்து மன்றாடுகிறோம். அவர்கள் உள்ளத்தில் அன்பு பெருகச் செய்தருளும். இதனால் உயிருட்டப் பெற்ற இவர்கள், உலகில் இரக்கச் செயல்களைப் புரிந்து, என்றென்றும் உமது இரக்கத்தைப் போற்றி புகழ்வார்களாக. ஆமென்.
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்