Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய சந்தியாகப்பர் புனித சந்தியாகப்பர் மன்றாட்டு மாலை  
புனித சந்தியாகப்பர் மன்றாட்டு மாலை


சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ மாதாவால் சிநேகிக்கப்பட்ட சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கலிலேயா நாட்டைச் சேர்ந்த செபதேயு என்பவருக்கு அருமை மகனான சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் சுவாமி உம்மை அழைக்கும் போது தந்தையையும், வலைகளையும் விட்டு மனமுவந்து அவரைப் பின்சென்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவராலே உம்முடைய சகோதரனோடு இடியின் மக்களென்று அழைக்கப்பட வரம் பெற்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் சுவாமி உருமாறினபோதும், நூற்றுவர் தலைவனின் இறந்த மகளை உயிர்ப்பிக் கும்போதும் அவர் அருகே இருந்த சந்தியாகப்பரேஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் சுவாமி பூங்காவனத்திற்குப் போகும்போது, அவரோடு போகும் பேறுபெற்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் சுவாமி மோட்சம் சென்ற பின், அவரைத் தவிர வேறு தெய்வமில்லை என்று யூதேயா தேசத்திலும், சமாரியா தேசத்திலும் போதித்த சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஸ்பெயின் நாட்டில் பலருக்கு சத்திய வேதத்தை போதித்து, மாயவித்தைக்காரனாகிய இரமோசன் என்பவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்த சந்தியாகப்பரே
 எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுக்கிறீஸ்து நாதர் சுவாமியுடைய வேதத்தைத் திடனோடு போதித்ததை கேட்ட எரோது அகரிப்பா என்பவன் உமக்கு மரணத் தீர்ப்பிட்டபோது மனமகிழ்ச்சி அடைந்த சந்தியாகப்பரே
 எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை கொலைக் களத்துக்கு கூட்டிக் கொண்டு போகும்போது, உம்மோடு கூட வந்தவன் நீர் வேத சாட்சியாவதற்கு உமக்கிருந்த அகமகிழ்ச்சியைக் கண்டு, தானும் கிறீஸ்தவன் என்றபோது மிகவும் மகிழ்ச்சியடைந்த சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இவன் கொலைக் களத்திற்குப் போய் சேர்ந்த உடனே, உம்மைக் கொலைக்களத்திற்கு சேவகனாக கூட்டிக்கொண்டு வந்ததை நினைத்து உம்மிடம் பொறுத்தல் கேட்டபோது, அவனைத் தழுவி முத்தமிட்டு உனக்கு சமாதானம் உண்டாகுக என்று வாழ்த்திய சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நூறு சம்மனசுக்கள் உம்மை சூழ்ந்து வர இத்தாலி நாட்டிற்கு போய், திருச்சபையைப் போதித்து அவ்விடத்தில் சேசுநாதர் சுவாமி யுடைய வேதம்போதித்துக் கொண்டே ஸ்பெயின் நாட்டிற்கு வந்த சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அற்புதமான வகையாய் எபேசு நகரில் தேவ அன்னையைக் கண்டு, அவர்கள் பாதத்தில் விழுந்து வணங்கிய சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போது தேவ அன்னை உம்முடைய கரத்தைப் பிடித்துத் தூக்கவும், அனேக வரங்களை அந்த இராக்கினியிடத்தில் பெற்றுக் கொள்ளும் பேறு பெற்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போது நீர் ஜெருசலேம் பட்டணத்தில் வேத சாட்சியாகப் போகிறீரென்று தேவ அன்னை சொல்லக் கேட்டு அத்தருணத்தில், எனக்கு உதவியாக வரவேண்டுமென்று அவளைக் கேட்டுக் கொண்ட சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜெருசலேம் பட்டணத்திலே மகா தைரியத்தோடு வேதத்தைப் போதிக்கும்போது, திருச்சபையின் எதிரிகளாலே பிடிபட்டு, தேவ அன்னை கொடுத்த வாக்கை நினைத்து, அவளை நோக்கி மன்றாடிய சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அந்நேரத்தில் தேவ அன்னை அநேக சம்மனசுக்களால் புடைசூழ வருவதை கண்டு அக்களித்து, துன்புற்றோருக்குத் தேற்றரவே என அகமகிழ்ந்து உரத்த சத்தமாய் கூவின சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய தலையை வெட்டும்போது, தேவ அன்னை உன் ஆன்மாவை கையில் ஏந்தி சேசுநாதருக்கு ஒப்புக் கொடுக்க வரம்பெற்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய திருச்சரீரம் கொம்போஸ்தெல்லா என்கிற பட்டணத்திற்குக் கொண்டு போகப் பட்டபோது, அவ்விடத்தில் அற்புதங்கள் பல நடக்கவே மக்கள் பொருத்தனை செய்து வணங்கப் பெற்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீர் மோட்சம் சென்றபின் ஸ்பெயின் நாட்டின் கிறீஸ்தவர்கள்பேரில் பகைவர் படை எடுக்கும்போது, அவர்கள் உம்மைப் பார்த்து வேண்டுதல் செய்ய, பயங்கரத் தோற்றமுள்ள வெள்ளைக் குதிரை மீதேறி வந்து, பகைவர் படையை முறியடித்துத் துரத்திய சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களா யிருக்கத்தக்கதாக. அர்ச்சிஷ்ட சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

எங்கள் ஆண்டவரான சேசுக் கிறீஸ்துவே! அப்போஸ்தலரான அர்ச்சியசிஷ்ட சந்தியாகப்பருக்கு உன்னதமான வரங்களைத் தந்து, ஜெருசலேம் பட்டணத்திலும் இஸ்பானியா தேசத்திலும், இத்தாலியா தேசத்திலும் அவரால் அநேக புதுமைகளைச் செய்து ஏராளமான மக்களைத் சத்திய வேதத்தில் உட்படுத்தினீரே, அவரைப் போற்றித் துதிக்கிற எங்களுக்கும் வாழ்வின் துன்பங்கள் எல்லாவற்றையும் வென்று இவ்வுலகப் பற்றுகள் நீங்கி மோட்ச முடிபெற அருள்புரிவீராக.

ஆமென்.





 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!