Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

மரித்தோர் பாடல்கள் ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க!  





ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க!
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க!
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க!
நிம்மதி, நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை,
மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை,
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை,
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை!

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டது என்றது சாம்பலுமிங்கே!

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக,
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க,
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக,
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க!

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை!
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை!
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை!
மறதியைப் போலொரு மாமருந்தில்லை!

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை!
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை!
நதி மழை போன்றதே விதி என்று
கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன?

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்,
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்,
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்!
விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்!

பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்,
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்!
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர் கதையாகும்!

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும்!

மாண்டவர் சுவாசங்கள்காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!





 

இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக