Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் நிந்தையும் கொடிய வேதனையும் தூய வெள்ளி
நிந்தையும் கொடிய வேதனையும்
நிறைந்துள்ள உம் திருப்பாடுகளை
சிந்தையில் கொண்டு தியானிக்கவே
தினம் அருள் புரிவீர் ஆண்டவரே
சிலுவையிலேதான் மீட்சியுண்டு தேடும் வானக மாட்சியுண்டு - 2

1. இயேசுவை சிலுவையில் அறையுமென்றோம்
இடியெனக் கூக்குரல் எழுப்பி நின்றோம்
மாசற்ற செம்மறி ஆனவர்க்கு
மரண தண்டனையாம் விதித்து நின்றோம்
அவரோ மௌனம் காத்து நின்றார்
அகமுவந்ததனை ஏற்றுக்கொண்டார் (சிலுவையிலே)

2. பாவத்தின் சுமையாம் சிலுவைதனை
பரமனின் திருவுளம் நிறைவுறவே
ஆவலாய்த் தோளில் சுமந்து சென்றார்
ஆண்டவர் கல்வாரி மலை நோக்கி
எனைப்பின் செல்பவன் தனை மறுத்து
சிலுவையை எடுத்துப் பின் செல்கவென்றார் (சிலுவையிலே)

3. சிலுவையின் பாரம் அழுத்தியதால்
திருமகன் தரையில் விழலானார்
வலுவற்ற அடியோர் எழுந்திடவே
வல்லப தேவா வரமருள்வீர்
எமைப் பலப்படுத்தும் அவராலே
எல்லாம் செய்திடக் கூடுமன்றோ (சிலுவையிலே)

4. உதிரம் வியர்வைத் தூசியினால்
உருவிழந்திருந்த தன் மகனை
எதிர்கொண்டு வந்த அன்னை மனம்
இயம்பருந் துயரால் கலங்க வைத்தோம்
அந்நிய காலம் வரையெங்கள்
அடைக்கலமாய் நீ இருந்திடம்மா (சிலுவையிலே)

5. உம் திருச்சிலுவையைச் சுமந்து செல்ல
உதவிய சீமோன் போல் யாமும்
எம் அயலார்க்குத் தயங்காமல்
என்றுமே உதவிடச் செய்தருள்வீர்
நிரந்தரமாகப் பிறரன்பில் நிலைத்திடும்
வரம் தர வேண்டுகின்றோம் (சிலுவையிலே)

6. துகள்படிந்திருந்த திருமுகத்தைத்
துணிந்து வெரோணிக்காள் துடைக்க வந்தாள்
இகமென்ன சொல்லும் என நினைந்து
இழந்திடலாமோ விசுவாசம்
இயேசுவை மனிதர் முன் ஏற்றுக்கொள்வோர்
எய்துவர் அழியாப் பேரின்பம் (சிலுவையிலே)

7. மீண்டும் மீண்டும் பாவத்திலே
விழுந்திடும் பாவியை மீட்டிடவோ
ஈடிணையில்லா இறைமகனார்
இவ்விதம் புழுதியில் விழலானார்
நமை நிதம் இறைவன் மன்னிப்பதால்
நாமும் பிறரை மன்னிப்போம் (சிலுவையிலே)

8. எங்கணும் நன்மை செய்தவர்க்கு
ஏனிந்தக் கோலம் என வருந்திப்
பொங்கிடும் கடல்போல் அழுதரற்றிப்
புண்ணிய மாதரும் புலம்பினரே
அழுகின்ற பேர்கள் பேறுபெற்றோர்
ஏனெனில் ஆறுதல் அடைந்திடுவர் (சிலுவையிலே)

9. அளவற்ற களைப்போ பெருந்துயரோ
அடியற்ற மரம்போல் விழலானார்
உளந்தொறும் தாழ்ச்சி தழைத்திடவே
உயர்பரன் அடிமை போல் விழலானார்
தயையுயர்த்திடுவோன் தாழ்வடைவான்
தனைத் தாழ்த்திடுவோன் உயர்வடைவான் (சிலுவையிலே)

10. உடையினை சேவகர் பிடித்திழுத்து
உரித்திடும் வேளை காயமெல்லாம்
மடைதிறந்தோடும் வெள்ளமென
மறுபடி உதிரம் சொரிந்ததையோ
அந்நியரும் வழிப்போக்கரும் நாம்
அடக்குவோம் தீய ஆசைகளை (சிலுவையிலே)

11. கழுமரம் என்ற சிலுவையிலே
களங்கமில்லாத இறைமகனை
விழுமிய நலம் பல புரிந்தவரை
வெறுத்திருப்பாணியால் அறைந்து வைத்தோம்
ஒரு கணமேனும் இயேசுவேயாம்
உமைப் பிரியாமல் வாழச் செய்வீர் (சிலுவையிலே)

12. நண்பனுக்காக தன்னுயிரை
நல்குவதினுமேலான அன்பு
கொண்டவர் யாருமே இல்லையன்றோ?
கொடுத்தார் இயேசு தம் உயிர் நமக்காய்
தமையன்பு செய்தார் நமக்காக
தமைமுழுதும் அவர் கையளித்தார் (சிலுவையிலே)

13. மண்ணில் கோதுமை மணி விழுந்து
மடிந்தால் தானே பலன் அளிக்கும்
விண்ணில் வாழ்வு நமக்கருள
விருப்புடன் இயேசு உயிர்துறந்தார்
வியாகுல அன்னை மடிவளரும்
மீட்பரே எம்மைக் காத்தருள்வீர் (சிலுவையிலே)

14. உலகின் ஒளியாய்த் தோன்றியவர்
ஒரு கல்லறையுள் அடங்கிவிட்டார்
விலகும் மரண இருள் திரையும்
விளங்கும் கிறிஸ்துவின் அருள் ஒளியால்
கிறிஸ்துவே எனக்கு உயிராகும்
மரணம் எனக்கு ஆதாயம் (சிலுவையிலே)


 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?