Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் -மனிதன் இதோவென தூய வெள்ளி

1) மனிதன் இதோவென மன்னனும் சொல்ல
மரணத்தைக் கொடுமென யூதர் முழங்க
மாசற்ற செம்மறி மௌனத்தைக் காக்க
மானிட நீதியும் வீழ்ந்தது மெல்ல

2) மானிடர் பாவத்தை மனுமகன் தாங்க
மனுமகன் தோள்களும் காயத்தில் வீங்க
சிலுவையின் பாரத்தை விரும்பியே ஏற்க
தந்தையின் திருவுள்ளம் தாங்கி நடக்க

3) இடறிய கால்களும் ஓய்வினைத் தேட
இருபுறம் யூதர்கள் சாட்டையை வீச
இருட்டிய கண்களில் மயக்கம் உண்டாக
இயேசு விழுந்தார் இருதயம் நோக

4) வியாகுலமானது தாய் மரி; நெஞ்சம்
கண் குழமானது தவிக்கிது உள்ளம்
கண்மணியே எனக் கொஞ்சிய தாயே
கள்வரின் கோலத்தை பார்த்தழுதாயே

5) அன்பரும் நண்பரும் சீடரும் எங்கே?
நோய் குணமாகி மீண்டவர் எங்கே
உயிர் தருவேன் என்ற சீமோன் எங்கே?
சிலுவையைச் சுமந்தார் சீமோன் இங்கே

6) குருதியும் புழுதியும் வியர்வையும் சேர்ந்து
இயேசுவின் முகமும் களைத்தது சோர்ந்து
தடைகளைக் கடந்தாள் ஆங்கொருமாது
முகம் துடைத்தாள் கொஞ்சம் தணிந்தது சோர்வு

7) வீழ்வதும் எழுவதும் விருட்சத்தின் பண்பு
மனுமகன் வீழ்ந்தது மானிடப் பண்பு
இறுதி வரை அவர் காட்டிய அன்பு
இரண்டாம் முறையும் வீழ்த்தியேதிங்கு

8) பட்டமரம் படும் பாட்டினைக் காண்க
பாவமில்லாதொரு வாழ்வினை வாழ்க
பச்சைமரம் தனைக் காப்பதற்காக
பெண்ணினமே நீ அழுது புலம்பு

9) ஓங்கிய சிலுவையை தாங்கி நடந்து
சோர்ந்தது இயேசுவின் கால்களிரண்டு
சொல்லிட முடியா துன்பம் நிறைந்து
சாய்ந்தது இயேசுவின் மேனி தளர்ந்து

10) மானத்தை இழந்தார் மானிட மைந்தன்
ஆடையை உரித்தார் காவலன் ஒருவன்
உயிரும் பெரிது மானமும் பெரிது
இரண்டையும் கொடுத்த இறையன்பு பெரிது

11) கைகளில் கால்களில் ஆணி துளைக்க
கழுமர சிலுவையை தூக்கி நிறுத்த
வானுக்கும் பூமிக்கும் அந்தரமாக
வானவன் துடித்தது என்னென்று சொல்ல

12) மரணத்தினால் ஓரு முடிவுருவாகும்
மரணத்தினால் ஒரு அமைதியுண்டாகும்
மரணத்தினால் இங்கு மீட்புருவாகும்
மனுக்குலம் வாழ்ந்திட வழியுருவாகும்

13) ஆயர்கள் அரசர்கள் தூதர் வணங்க
அகமகிழ்ந்தேனே அன்றொரு நாளில்
ஆற்றிட முடியா துயரடைந்தேனே
ஆண்டவர் சித்தம் இதையுணர்ந்தேனே

14) கல்லறை செல்வது காலத்தின் நீதி
சாம்பலும் எலும்பும் தானிங்கு நீதி
ஆறுக்கு ரெண்டடி தானிங்கு இறுதி
ஆண்டவன் நம்மை மீட்பது உறுதி




 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?