Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1539-  சிலுவைப்பாதை

எங்கே சுமந்து போறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போறீர்
பொங்கும் பகைவராலே அங்கம் நடுநடுங்க
எங்கே போறீர்...

1) மனித பாவத்தாலே மரணத்தீர்வை பெற்று
தூய செம்மறிபோல துக்கத்துடன் வருந்தி
எங்கே போறீர்...

2) பாரச்சிலுவையை நீர் பாசத்துடன் அணைத்து
பாவத்தின் சுமை தாங்கி பாரத்துடன் நடந்து
எங்கே போறீர்...

3) கல்வாரி மலைநாடி தள்ளாடித் தரைவீழ்ந்து
எல்லோரின் பாவங்களை தனிமையாய்ச் சுமந்து
எங்கே போறீர்...

4) மாமரி கன்னி அன்னை மகனின் கோலங்கண்டு
மாதுயருடன் வாடி மனம் நொந்து வருந்த
எங்கே போறீர்...

5) உதிரம் ஆறாய்ச் சிந்தி உள்ளவீரமிழந்து
சீரோன் சீமோன் துணையை ஏற்று வழிநடந்து
எங்கே போறீர்...

6) கர்த்தனே உம்வதனம் இரத்தக்கறையால் மங்கி
உத்தமி வெரோணிக்கா வெண் துகிலால் துடைத்தும்
எங்கே போறீர்...

7) பாவங்கள் ஒன்றாய் சேர்ந்த பாரச்சுமையினாலே
மீண்டும் தரையில் வீழ்ந்தும் வீரத்துடன் எழுந்து
எங்கே போறீர்...

8) புண்ணிய பெண்மணிகள் புலம்பி அழும்வேளை
தேற்றுதல் கூறி நீரும் நேசக் கண்ணீர் சொரிந்து
எங்கே போறீர்...

9) தூரவழி சிலுவை தாங்க பெலமுமின்றி
மூன்றாம் முறை தரையில் முகம்படிந்தெழுந்தும்
எங்கே போறீர்...

10) நீட்டாடை சுழற்றவே கோடிக் காயங்களாலே
இரத்தமாறாய்ப் பெருக வேதனையால் வருந்தி
தூயா நின்றீர்...

11) நீட்டிய கை கால்களில் நீண்ட இரும்பாணிகள்
நிஷ்டூரமாய் அறைய நேசத்தினாலே வெந்து
பலியானீர்...

12) சிலுவைப் பீடமேறி மும்மணி நேரம் தொங்கி
நேயப்பிதாவை வேண்டி ஆருயிர் ஒப்படைத்து
பலியானீர்...

13) உமது மடிமீதில் மரித்த மகன் தாங்கி
ஏழுசோக வாட்களால் ஊடுருவி வருந்தி
தாயே நின்றீர்...

14) கர்த்தனே நின் உடலை கல்லறைக்குள் அடக்க
உத்தானம் ஜீவனுமாய் உயிருடன் எழுந்து
காட்சி தந்தீர்...

 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?