புனிதவாரப்பாடல்கள் | 1542-எனது சனமே நான் உனக்கு | தூய வெள்ளி |
எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் ? சொல் எதிலே உனக்குத் துயர் தந்தேன்? எனக்குப் பதில் நீ கூறிடுவாய் எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக் கொண்டு வந்தேனே அதனாலோ உன் மீட்பருக்குச் சிலுவை மரத்தை நீ தந்தாய்? நான் உனக்காக எகிப்தியரை அவர்தம் தலைச்சன் பிள்ளைகளை வதைத்து ஒழித்தேன், நீ என்னைக் கசையால் வதைத்துக் கையளித்தாய் பார்வோனை செங்கடலிலாழ்த்தி எகிப்தில் நின்றுன்னை விடுவித்தேன் நீயோ என்னைத் தலைமையாம் குருக்களிடத்தில் கையளித்தாய் நானே உனக்கு முன்பாகக் கடலைத் திறந்து வழி செய்தேன் நீயோ எனது விலாவை ஓர் ஈட்டியினாலே குத்தித் திறந்தாயே! மேகத் தூணில் வழிகாட்டி உனக்கு முன்னே யான் சென்றேன் நீயோ பிலாத்தின் நீதி மன்றம் என்னை இழுத்துச் சென்றாயே! பாலை வனத்தில் மன்னாவால் நானே உன்னை உண்பித்தேன் நீயோ என்னைக் கன்னத்தில் அடித்து கசையால் வதைத்தாயே! இனிய நீரை பாறை நின்று உனக்குக் குடிக்கத் தந்தேனே நீயோ பிச்சுக் காடியையே எனக்குக் குடிக்கத் தந்தாயே! கானான் அரசரை உனக்காக நானே அடித்து நொறுக்கினேன் நீயோ நாணல் தடி கொண்டு எந்தன் தலையில் அடித்தாயே! அரசர்க்குரிய செங்கோலை உனக்குத் தந்தது நானன்றோ? நீயோ எந்தன் சிரசிற்கு முள்ளின் முடியைத் தந்தாயே! உன்னை மிகுந்த திறனோடு சிறந்த நிலைக்கு உயர்த்தினேன் நீயோ என்னைச் சிலுவை என்னும் தூக்கு மரத்தில் தொங்க வைத்தாய்! |