|
|
|
அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின்
வாழ்த்துக்கள் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இறந்த இயேசு உயிர்த்தெழுந்தபின்பு
அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34a, 37-43
அந்நாள்களில் பேதுரு பேசத் தொடங்கி, "திருமுழுக்குப் பெறுங்கள்
என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும்
நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல்
தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால்
அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து
எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும்
எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள்.
மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால்
கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச்
செய்தார்.
ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன்
தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த
அவர் உயிர்த்தெழுந்த பின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச்
சாட்சிகள்.
மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால்
குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும்
சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை
கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று
இறைவாக்கினர் அனைவரும் அவரைக் குறித்துச் சான்று பகர்கின்றனர்" என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 118: 1-2. 16-17. 22-23 (பல்லவி: 24)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்;
அகமகிழ்வோம்.
அல்லது
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும்
உள்ளது அவரது பேரன்பு. 2
"என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு" என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! பல்லவி
16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச்
செயலாற்றியுள்ளது. 17 நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின்
செயல்களை விரித்துரைப்பேன். பல்லவி
22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து அமர்ந்திருக்கிறார்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து
வாசகம் 3: 1-4
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால்
மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின்
வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.
இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்.
ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள்
வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது.
கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது
நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
அல்லது
நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாய் இருப்பீர்கள். ஆகையால், பழைய
புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 5: 6b-8
சகோதரர் சகோதரிகளே, சிறிதளவு புளிப்பு மாவு, பிசைந்த மாவு முழுவதையும்
புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே
புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அப்போது
நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாய் இருப்பீர்கள். உண்மையில்
நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள்.
ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.
ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை
போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற
அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
தொடர் பாடல்
இன்று இதைச் சொல்ல வேண்டும் அல்லது பாட வேண்டும்.
எண்கிழமை நாள்களில், விரும்பினால், சொல்லலாம்.
பாஸ்காப் பலியின் புகழ்தனையே பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே.
மாசில் இளமறி மந்தையினை மாண்பாய் மீட்டுக்கொணர்ந்தாரே; மாசறு
கிறிஸ்துவும் தந்தையுடன் மாசுறு நம்மை இணைத்தாரே.
சாவும் உயிரும் தம்மிடையே புரிந்த வியத்தகு போரினிலே உயிரின்
தலைவர் இறந்தாலும் உண்மையில் உயிரோடாளுகின்றார். வழியில் என்ன
கண்டாய் நீ?
மரியே, எமக்கு உரைப்பாயே.
உயிரோடுள்ள கிறிஸ்து பிரான் கல்லறைதன்னைக் கண்டேனே; உயிர்த்து
எழுந்த ஆண்டவரின் ஒப்பரும் மாட்சியும் கண்டேனே.
சான்று பகர்ந்த தூதரையும் போர்த்திய பரிவட்டத்தினையும் அவர்தம்
தூய துகிலினையும் நேராய்க் கண்ணால் கண்டேனே.
கிறிஸ்து என்றன் நம்பிக்கை, கல்லறை நின்று உயிர்த்தாரே, இதோ,
உமக்கு முன்னாலே செல்வர் கலிலேயாவிற்கே.
மரித்தோர் நின்று உண்மையிலே கிறிஸ்து உயிர்த்தது யாமறிவோம்.
வெற்றிகொள் வேந்தே, எம்மீது நீரே இரக்கங் கொள்வீரே.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
1 கொரி 5: 7b-8b
அல்லேலூயா, அல்லேலூயா! நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.
ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9
வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும்
முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த
கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.
எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த
மற்ற சீடரிடமும் வந்து, "ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு
போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!"
என்றார்.
இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.
இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக
ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது
துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப்
பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள்
நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த
துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில்
தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே
சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ
வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
I திருத்தூதர் பணிகள் 10: 34a, 37-43
II கொலோசையர் 3: 1-4
III யோவான் 20: 1-9
ஆண்டவரின் உயிர்ப்பு - புதுவாழ்வுக்கான அழைப்பு
நிகழ்வு
அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பைக் குறித்துப் பாரம்பரியமாகச்
சொல்லப்படுகின்ற நிகழ்வு இது. இயேசு இறந்ததும் இவர் பிலாத்திடம்
சென்று, இயேசுவின் உடலைக் கேட்டு வாங்கி, தனக்கெனப் பாறையில்
வெட்டியிருந்த கல்லறையில் அடக்கம் செய்தார். அப்பொழுது இவருக்குத்
தெரிந்த ஒருசிலர் இவரிடம், "உங்களுக்கென வெட்டிய இந்த அழகான கல்லறையை
இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டீரே...! நீர் ஏன் இப்படிச்
செய்தீர்...?" என்று கேட்டார்கள். இதற்கு இவர், "இயேசு இந்தக்
கல்லறையில் இரண்டு நாள்கள்தான் இருப்பார். மூன்றாம்தான் உயர்த்தெழுந்து
விடுவார். அதனால்தான் கொடுத்தேன்" என்றார்
ஆம், இயேசு இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று
சொன்னார். அவர் சொன்னது போன்றே உயிர்த்தெழுந்தார். அதைத்தான்
இன்று நாம் உயிர்ப்புப் பெருவிழாவாக நினைவுகூர்ந்து
கொண்டாடுகின்றோம். இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக்
கொண்டாடும் இந்த நாளில், இன்றைய நாளில் நாம் வாசிக்கக்கேட்ட
இறைவார்த்தை நமக்குச் சொல்லும் செய்திகளைக் குறித்துச்
சிந்தித்துப் பார்ப்போம்.
கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் அர்த்தம்
தரும் இயேசுவின் உயிர்ப்பு
திருத்தூதரான புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல்
திருமுகத்தில், இவ்வாறு கூறுவார்: "கிறிஸ்து உயிருடன்
எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பறைசாட்சிய நற்செய்தியும்
நீங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்"
(1கொரி 15:14). பவுலின் இவ்வார்த்தைகள் இயேசுவின்
உயிர்ப்புதான் கிறிஸ்துவ நம்பிக்கைக்கும் நற்செய்தி
அறிவிப்புக்கும் அர்த்தம் தருவதாகவும் அடித்தளமாகவும்
இருக்கின்றது என்று ஆணித்தரமாகச் சொல்கின்றன.
உலகில் தோன்றிய நான்கு பெரிய மதங்கள் யூதமதம், புத்தமதம்,
இஸ்லாம் மதம், பமற்றும் கிறிஸ்தவ மதம். இதில் யூத மதத்தைத்
தோற்றுவித்த ஆபிரகாம் கி.மு.1900 ஆம் ஆண்டு இறந்தார் என்று
சொல்லப்படுகின்றது. அவர் உயிர்த்தெழுந்ததாக எங்கேயும்
சொல்லப்படவில்லை. அதே போன்று புத்தமதத்தைத் தோற்றுவித்த
புத்தர் கி.மு.483 ஆம் ஆண்டு இறந்தார் என்று
சொல்லப்படுகின்றது; அவரும் உயிர்த்தெழுந்ததாக எங்கும் குறிப்பு
இல்லை. இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்த முகமது நபி கி.பி 632 ஆம்
ஆண்டு, ஜூன் திங்கள் 6 ஆம் இறந்தார் என்று சொல்லப்படுகின்றது;
அவரும்கூட உயிர்த்தெழுந்தார் என்று சொல்லப்படவில்லை. ஆனால்
இயேசு பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இறந்து மூன்றாம்
நாள் உயிர்த்தெழுந்தார். இதற்குச் சான்றுகளாக இருப்பவைதான்
இயேசுவின் வார்த்தைகளும் வெற்றுக்கல்லறையும் சீடர்களின்
சாட்சிகளும் ஆகும். அதனால் இயேசுவின் உயிர்ப்பே கிறிஸ்தவ
நம்பிக்கைக்கும் நற்செய்தி அறிவிப்பும் அர்த்தம் தருவதாகவும்
அடித்தளமாகவும் இருக்கின்றது என்று உறுதியாகச் சொல்லலாம்.
சீடர்கள் நடுவில் மாற்றத்தை ஏற்படுத்தும் இயேசுவின் உயிர்ப்பு
இயேசுவின் உயிர்ப்பு, சீடர்கள் நடுவில் ஒரு மிகப்பெரிய
மாற்றத்தை ஏற்படுத்தியது என்று ஆணித்தரமாகக் கூறலாம்.
அதுவரைக்கும் யூதர்களுக்கு அஞ்சித் தங்களை அறைக்குள்
அடைத்துகொண்டு வாழ்ந்துவந்த இயேசுவின் சீடர்கள், இயேசுவின்
உயிர்ப்புப் பிறகு யூதர்களுக்கு அஞ்சாமல், ஆண்டவர் இயேசுவைப்
பற்றிய நற்செய்தியை மிகத் துணிச்சலாக எல்லாருக்கும்
அறிவிக்கின்றார்கள். இதுதான் இயேசுவின் உயிர்ப்பு சீடர்கள்
நடுவில் ஏற்படுத்திய மாற்றம் என்று சொல்லலாம்.
இன்று நாம் கொண்டாடக்கூடிய உயிர்ப்புப் பெருவிழா, பாஸ்கா விழா
அல்லது பாஸ்கா ஞாயிறு என்றும் அழைப்படுகின்றது. வழக்கமாக
யூதர்கள் அப்பம் சுடுகின்றபொழுது புளிப்பேறிய மாவில் அப்பம்
சுடுவார்கள்; ஆனால், பாஸ்கா விழாவிற்கு அப்பம் சுடுகின்றபோது,
புளிப்பற்ற மாவில் அப்பம் சுடுவார்கள். புளிப்பு என்பது
தீமையின் அடையாளமாக இருக்கின்றது (1 கொரி 5:8). இயேசுவின்
உயிர்ப்புப் பெருவிழாவும் நமக்கு உணர்த்தும் செய்தியும்
இதுவாகத்தான் இருக்கின்றது. ஆம். நாம் உயிர்த்த ஆண்டவர்
இயேசுவின் சீடர்களாக இருக்கின்றோம் என்றால், தீமை
விளைவிக்கக்கூடிய வழியில் அல்லது தீய வழியில் செல்லக்கூடாது.
மாறாக நல்லவராம் கடவுள் காட்டுகின்ற நல்ல வழியில்
செல்லவேண்டும்.
கொலோசையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில் இதைத்தான் புனித பவுல், "நீங்கள்
கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால், மேலுலகு
சார்ந்தவற்றை நாடுங்கள்" என்று கூறுகின்றார். ஆகவே, இயேசுவின்
உயிர்ப்பு சீடர்கள் நடுவில் மாற்றத்தை ஏற்படுத்தியது போன்று,
நம்முடைய வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். அந்த
மாற்றம் நம்மை மேலுலகு சார்ந்தவற்றை நாடுபவர்களாக இருக்கச்
செய்யவேண்டும். .
இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாவோம்
இயேசுவின் உயிர்ப்பு நமக்கு விடுக்கும் மேலான அழைப்பு, நாம்
ஒவ்வொருவரும் இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாகத்
திகழவேண்டும் என்பதாகும். இதை வேறு வார்த்தைகளில்
சொல்லவேண்டும் என்றால், நாம் ஒவ்வொருவரும் உயிர்த்த ஆண்டவரைப்
பற்றிய நற்செய்தியை எல்லாருக்கும் அறிவித்து, அவர்களை
இயேசுவின் சீடர்களாக மாற்றவேண்டும் என்பதாகும்.
நற்செய்தியில் மகதலா மரியா உயிர்த்த ஆண்டவரைக் கண்டதும்,
அவரைப் பற்றி சீடர்களுக்கு அறிவிக்க விரைகின்றார். முதல்
வாசகத்தில் புனித பேதுரு, உயிர்த்த ஆண்டவர் இயேசுவைப் பற்றி
பிற இனத்தைச் சார்ந்த கொர்னலேயுக்கு அறிவிக்கின்றார்.
மட்டுமல்லாமல், இயேசுவின் உயிர்ப்பு "நாங்கள் சாட்சிகள்" என்று
சொல்கின்றார். அப்படியானால், நாம் ஒவ்வொருவரும் இயேசுவைப்
பற்றி மக்களுக்கு அறிவித்து, அவருடைய உயிர்ப்புக்குச்
சாட்சிகளாகத் திகழவேண்டும் என்பதுதான் நமக்கு முன்பாக
இருக்கும் அழைப்பாக இருக்கின்றது.
தெற்குப் பசிபிக் கடலில் உள்ள நியூ ஹெப்ரிட்ஸ் தீவிலிருந்த
மனித மாமிசம் சாப்பிடும் மக்களுக்கு நடுவில் ஆண்டவர் இயேசுவைப்
பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவர்களைப் புதிய மனிதர்களாக
மாற்றிய பெருமை ஜான். ஜி.பேட்டன் என்பவரைச் சாரும். இவர் நியூ
ஹப்ரிட்ஸ் தீவுகளுக்கு நற்செய்தி அறிவிக்கச் செல்லும் முன்,
இவருக்கு முன்பாகச் சென்ற இரண்டு மறைப்பணியாளர்கள் அத்தீவில்
இருந்த மனிதமாமிசம் சாப்பிடுபவர்களால் கொல்லப்பட்டார்கள்.
இதனால் அந்தத் தீவுகளுக்குச் சென்று நற்செய்தி அறிவிக்க யாரும்
முன்வர வில்லை. ஜான் ஜி. பேட்டன் அந்தத் தீவுகளுக்கு நற்செய்தி
அறிவிக்கப் போவதாகச் சொன்னபோது, இவருக்கு அறிமுகமான ஒருவர்,
அங்கு செல்லவேண்டாம். அப்படிச் சென்றால், மனித மாமிசம்
சாப்பிடுபவர்களால் கொல்லப்படுவாய் என்று எச்சரித்தார்.
அதற்கு ஜான். ஜி.பேட்டன், "ஒருவேளை நான் அங்கு சென்று
நற்செய்தி அறிவிக்கும்போது, அவர்கள் என்னைக் கொன்றால்,
அவர்களுக்கு இரையாவேன். ஒருவேளை நான் அறிவித்த நற்செய்தியைக்
கேட்டு, அவர்கள் மனம்மாறினார்கள் என்றால், இறுதியில்
எல்லாரையும் போல நான் புழுக்களுக்கு இரையாவேன்...
எப்படியிருந்தாலும் நான் இறுதிநாளில் இயேசு தோன்றுபோது, மாட்சி
பொருந்தியவராய்த் தோன்றுவேன்" என்றார்.
"எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. நான் ஆண்டவரைப் பற்றிய
நற்செய்தியை அறிவிப்பேன்" என்று சொன்ன மறைப்பணியாளரான
ஜான்.ஜி.பேட்டனின் துணிச்சல் நாம் எவ்வொருவரும்
உரித்தாக்கிக்கொள்ளவேண்டியது. ஆகையால், நாம் இயேசுவின்
உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்ற இந்த வேளையில்,
அவருடைய உயிர்ப்புச் சாட்சிகளாகத் திகழ்ந்து, அவர்தருகின்ற
அமைதியையும் அருளையும் பெறுவோம்.
சிந்தனை
"நம்முடைய துன்பத்தைத் தீர்ப்பதற்கும், நம்முடைய குழப்பங்களை
நீக்குவதற்கும், நம்முடைய அச்சங்களைப் போக்குவதற்கும், நம்
சுமைகளை எளிதாக்குவதற்கும், கண்ணீரைத் துடைப்பதற்கும்,
நம்முடைய இதயத்தின் ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதற்கும்,
நம்முடைய மனத்தை அமைதிப்படுத்துவதற்கும் உயிர்த்த ஆண்டவர்
இயேசுவுக்கு வல்லமை இருக்கின்றது" என்பார் சி.ஹச்.
மேக்கின்டோஷ் என்ற எழுத்தாளர். ஆகையால், நமக்குப் புதுவாழ்வு
தரும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொண்டவர்களாய்,
அவருடைய உயிர்ப்புக்குச் சாட்சிகளாய் வாழ்வோம். அதன்வழியாய்
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
கிறிஸ்து உயிர்த்தார் அல்லேலூயா!
இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரம் அடைந்திருந்த தருணம். அந்த
ஆண்டில் வந்த புனித வாரத்தின் புதன்கிழமை அன்று, அதிகாலை
வேளையில், பிரான்சு நாட்டில் இருந்த ஒரு பிரசித்த பெற்ற தேவாலயத்தில்
பெண்ணொருத்தி கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய அழுகைச்
சத்தம் ஆலயத்தின் பின்னால் இருந்து ஜெபித்துக்கொண்டிருந்த
குருவானவரை ஏதோ செய்தது.
உடனே குருவானவர் அழுதுகொண்டிருந்த பெண்மணியின் அருகே வந்து,
"ஏனம்மா! இந்த அதிகாலை வேளையில் இப்படி அழுதுகொண்டிருக்கின்றாய்?
உனக்கு ஏதாவது பிரச்சனையா? உன்னுடைய பிரச்னையை என்னிடம் சொல்.
என்னால் முடிந்த மட்டும் உனக்கு நான் உதவி செய்கிறேன்" என்றார்.
அந்தப் பெண்மணியோ அழுகையை அடக்கமுடியாதவளாய், தன்னுடைய கையில்
வைத்திருந்த தந்தியை எடுத்து, குருவானவரிடம் கொடுத்து, "என்
மகன் நாட்டிற்காக இராணுவத்தில் பணியாற்றிக்கொண்டு வருகின்றான்.
ஆனால், போர்க்களத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை. நேற்று இரவு
"என் மகனைக் காணவில்லை, அவனை எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை"
என்று தந்தி வந்திருக்கின்றது. அந்தத் தந்திதான் உங்களுடைய
கையில் இப்போது இருப்பது. என்னுடைய ஒரே மகனும் என்னைவிட்டுப்
போய்விட்டானே, இப்போது நான் என்ன செய்வேன்?" என்றாள். அதற்கு
குருவானவர் அந்தத் தாயிடம், "கவலைப்படாதீர்கள் அம்மா! உங்களுடைய
மகனுக்கு ஒன்றும் ஆகியிருக்காது. நீங்கள் கவலைப்படாமல்
வீட்டிற்குச் செல்லுங்கள்" என்று சாந்தப்படுத்தி, குருவானார்
அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அடுத்த நாள் பெரிய வியாழன். அன்றைய தினத்தில் குருவானவர்
திருப்பலியை நிறைவேற்றும்போது தற்செயலாக முன்வரிசையில் அமர்ந்திருந்தவர்களைப்
பார்த்தார். அங்கு முந்தைய தினத்தில் மகனைக் காணவில்லை என்று
அழுத பெண்மணி, அன்றைக்கும் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தார்.
அந்தத் தாயின் நிலை கண்டு, அவளுக்காகத் திருப்பலியில் மிக உருக்கமாக
ஜெபித்தார். திருப்பலி முடிந்த பிறகும்கூட குருவானவர் அந்த
தாயினை சந்தித்து, அவரைத் தேற்றினார். மறுநாள் பெரிய வெள்ளி.
அன்றைக்கும் அந்தத் தாயானவள் ஆலயத்தில் அமர்ந்து அழுதுகொண்டே
இருந்தாள். அன்றைய நாளில் அவளுடைய அழுகையில் அதிகமான வேதனை
வெளிப்படுவதை அறிந்து குருவானவர் அவளுக்காகவும், அவளுடைய மகனுக்காகவும்
வழிபாட்டில் மிக உருக்கமாக ஜெபித்தார்.
மறுநாள் சனிக்கிழமை. அதாவது உயிர்ப்புப் பெருவிழா கொண்டாட்டத்தின்
ஒருசில மணித்துளிகளுக்கு முன்பாக, உயிர்ப்புப் பெருவிழா வழிபாட்டிற்கு
எல்லாம் தயாராக இருக்கின்றதா? என்று குருவானவர் எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது மகனைக் காணவில்லை என்று
மூன்று நாட்களாக அழுதுகொண்டிருந்த தாயானவள் அவரிடம் வந்தாள்.
ஆனால், அவள் முன்பு இருந்ததைப் போன்று இல்லை, அவளுடைய முகத்தில்
ஒருவிதமான மாற்றம் பிறந்திருந்தது. அவள் குருவானவரிடம் ஒரு தந்தியைக்
கொடுத்து, "சுவாமி! போர்க்களத்தில் என் மகன் காணாமல் போய்விட்டதாகச்
சொன்னேனே. அவன் இப்போது கிடைத்துவிட்டான் என்று தந்தி வந்திருக்கின்றது.
அந்தத் தந்திதான் இது" என்று அந்தத் தாயானவள் தன்னிடம் இருந்த
தந்தியை எடுத்து, குருவானவரிடம் படிக்கக் கொடுத்தார். தந்தியைப்
படித்துப் பார்த்த குருவானவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
"இயேசு கிறிஸ்து இறந்து உயிர்த்தெழுந்ததுபோல், உங்களுடைய மகனும்
உயிர்த்தெழுந்திருக்கின்றான்
- காணாமல் போய் கிடக்கப்பெற்றிருகின்றான்.
அதனால் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். இந்த உயிர்ப்புப்
பெருவிழா உங்களுக்குத்தான் மிகவும் பொருள் நிறைந்தது" என்று
வாழ்த்தி, அவரை அனுப்பி வைத்தார்.
போர்க்களத்தில் காணாமல் போன அந்தத் தாயின் மகன் கிடைக்கப் பெற்றதைப்
போன்று - உயிர்த்தெழுந்ததைப் போன்று
- நம் ஆண்டவர் இயேசுவும்
சாவை வென்று வெற்றிவீரராக உயிர்த்தெழுந்துள்ளார். ஆகையால்,
நாம் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். அது மட்டுமல்லாமல் இந்த உயிர்ப்புப்
பெருவிழாவில் உயிர்த்த ஆண்டவர் இயேசு நமக்குத் தரும் செய்தி என்ன
என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இயேசுவின் உயிர்ப்பு ஒரு கட்டுக்கதையோ அல்லது ஒரு பொய்யான பரப்புரையோ
அல்ல. அது உண்மையிலும் உண்மையானது. இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும்
கிடையாது.
இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்தார் என்பதற்கு நம்மிடம்
இருக்கும் முதன்மையான சான்று வெற்றுக் கல்லறையாகும். ஆம்,
வாரத்தின் முதல்நாளில் இயேசு அடக்கம் செய்துவைப்பட்ட
கல்லறைக்கு வந்த மகதலா மரியா, அங்கு கல்லறையை மூடியிருந்த கல்
அகற்றப்பட்டு, கல்லறை வெறுமையாக இருப்பதைப் பார்த்தார். ஆனால்,
அவரால் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நம்பமுடியவில்லை.
அவரோ திகைத்துப் போய், நடந்தவற்றை எல்லாம் திருத்தூதர்களிடம்
எடுத்துச் சொல்ல விரைகின்றார். அவர் திருத்தூதர்களிடம்
நடந்தவற்றைச் சொன்னதும், பேதுருவும் யோவானும் கல்லறைக்கு
விரைந்து வருகின்றார்கள். பேதுரு முதலில் கல்லறைக்குள்
செல்கின்றார். அவருக்குப் பின்னால் யோவான் கல்லறைக்குள்
செல்கின்றார். கல்லறையில் இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டு,
மற்ற துணிகளோடு இல்லாமல், தனியாக சுருட்டி
வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கின்றார். கண்டார், ஆண்டவர் இயேசு
உண்மையாகவே உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நம்புகின்றார். அந்த
வகையில் வெற்றுக் கல்லறை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்கு
முதன்மையான சான்றாகத் திகழ்கின்றது.
இயேசுவின் உயிர்ப்புக்கு இரண்டாவது சான்றாக இருப்பது
திருத்தூதர்களின் சான்றுகள்தான். திருத்தூதர் பணிகள்
நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பேதுரு,
"இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு எங்கும் நன்மை
செய்துகொண்டே சென்றார், யூதர்களோ அது பிடிக்காமல், அவரைச்
சிலுவையில் அறைந்து கொன்றார்கள். ஆனால், கடவுளோ அவரை
மூன்றாம்நாள் உயிர்த்தெழச் செய்தார். இதற்கு அவரோடு இருந்த
நாங்கள் சாட்சிகள்" என்கிறார். எனவே, திருத்தூதர்களின்
சான்றுகளை வைத்து இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என நாம்
உறுதியாக நம்பலாம். ஆண்டவர் இயேசுகூட, "இக்கோவிலை இடித்து
விடுங்கள். நான் இதை மூன்று நாட்களில் கட்டி எழுப்புவேன்"
என்று கூறி, தான் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று
தன்னுடைய உயிர்ப்பைக் குறித்து முன்கூட்டியே சொல்கின்றார்.
ஆகையால், வெற்றுக் கல்லறை, சீடர்களின் சான்றுகள், இயேசுவின்
வார்த்தைகள் இவையெல்லாம் வைத்து இயேசு உண்மையாகவே
உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நாம் உறுதிபடச் சொல்லச்
சொல்லலாம். பவுலடியார் இன்னும் ஒரு படி மேலே சென்று, "கிறிஸ்து
உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் அறிவித்த
நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் வீண்: (
1கொரி 15:14) என்று சொல்லி, இயேசுவின் உயிர்ப்பில்தான்
திருச்சபை கட்டியெழுப்பப் பட்டிருக்கின்றது என்று ஆணித்தரமாகக்
கூறுகின்றார். எனவே, இயேசுவின் உயிர்ப்பு கட்டுகதையோ, பொய்யான
பரப்புரையோ அல்ல, மாறாக அது உண்மையானது என்பதை உறுதியாக
நம்பலாம்.
இயேசுவின் உயிர்ப்பு மெய்யானது என்பதை பல்வேறு சான்றுகளின்
சான்றுகளின் வழியாக அறிந்த நாம், இயேசுவின் உயிர்ப்பை எப்படி
அர்த்தமுள்ளதாக்கப் போகின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் உயிர்ப்பை மக்களுக்கு அறிவிக்கின்றபோது
திருத்தூதர்கள் குறிப்பாக பேதுரு, "இவற்றிற்கு நாங்கள்
சாட்சிகள்" என்பார். சாட்சிகள் என்று சொல்லும்போது அதில்
மூன்று முக்கிய உண்மைகள் உள்ளடங்கி இருக்கின்றன. ஒன்று இயேசுவை
முழுமையாக அறிதல். இரண்டு அறிந்ததை மக்களுக்கு அறிவித்தல்.
மூன்று அதற்காக உயிரைத் தருதல் என்பதாகும். பேதுரு உட்பட
திருத்தூதர்கள் அனைவரும் இயேசுவை முழுமையாக அறிந்து, அறிந்தததை
மக்களுக்கு அறிவித்து, அதற்காக தங்களுடைய உயிரையும்
தந்தார்கள். நாம் இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாகச்
திகழவேண்டும் என்றால், இயேசு உயிர்த்துவிட்டார் என்று
அறிந்திருப்பது மட்டும் போதாது, அறிந்ததை அடுத்தவருக்கு
அறிவிக்கவேண்டும். அதனை நம்முடைய வாழ்வாக்கவேண்டும்.
அப்போதுதான் நாம் இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாகத் திகழ
முடியும்.
ஒரு சமயம் ஒரு குருவானவரும், சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தை
நடத்தி வந்தவரும் காலார நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள்.
இரண்டாமவருக்கு கடவுள்மீது நம்பிக்கை கிடையாது. அவர்கள்
இருவரும் பேசிக்கொண்டு போகும்போது, வழியில் அப்பாவி மனிதன்
ஒருவனை முரடர்கள் சிலர் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தார்கள்.
இவர்கள் இருவரையும் பார்த்த முரடர்கள் அங்கிருந்து
ஓடிவிட்டார். அப்போது சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர்
குருவானவரிடம், "இந்த உலகத்தில் கடவுள் என்ற ஒருவர் கிடையவே
கிடையாது. அவர் மட்டும் இருந்திருந்தால் இந்தக் கொடுமைகள்
எல்லாம் நடக்காது அல்லவா?" என்றார். அதற்கு குருவானவர் பதில்
ஒன்றும் சொல்லாமல், அப்படியே சென்றார்.
சிறுது தூரத்தில் அழுக்குத் துணியுடன் சிறுவன் ஒருவன் எதிரே
நடந்து வந்துகொண்டிருந்தான். அவனைப் பார்த்த குருவானவர்,
சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவரிடம், "இந்த உலகத்தில்
சோப்பு என்ற ஒன்று கிடையாது என்றார். அதற்கு அவர், ஏன்
அப்படிச் சொல்கின்றீர்கள்?" என்று கேட்டார். "சோப்பு என்ற
ஒன்று இருந்திருந்தால், இந்தச் சிறுவன் இப்படி அழுக்குத்
துணியுடன் திரியமாட்டான் அல்லவா" என்றார் குருவானார்.
"அழுக்குப் போகவேண்டும் என்றால், சோப்பினைப்
பயன்படுத்தவேண்டும். அதைவிடுத்து, சோப்பைப் பயன்படுத்தாமல்,
உலகத்தில் சோப்பே இல்லை என்று எப்படிச் சொல்லலாம்" என்றார்.
உடனே குருவானவர் அவரிடம், "இப்போது சொன்னீர்களே அழுக்குப்
போகவேன்றால் சோப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று, அது
போன்றுதான் உலகில் உள்ள தீமைகள் குறைந்து நன்மைகள்
பெருகவேண்டும் என்றால், மக்கள் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை
வாழவேண்டும். அப்படி வாழாமல், கடவுள் இந்த உலகத்தில் இல்லவே
இல்லை என்று ஒருபோதும் சொல்ல முடியாது" என்றார்.
ஆம், கடவுள் இந்த உலகத்தில் இருக்கின்றார் என்பதை நம்முடைய
வாழ்வால் நிரூபிக்கவேண்டும் என்பதைப் போன்று, ஆண்டவர் இயேசு
உண்மையாகவே உயிர்த்தெழுந்து விட்டார் என்பதை நம்முடைய சாட்சிய
வாழ்வால் நிரூபிக்கவேண்டும்.
இயேசு இந்த உலகிற்கு அன்பையும், உண்மையான அமைதியையும்,
மன்னிப்பையும் கொண்டு வந்தார். நாம் அவருடைய விழுமியங்களின்
படி நடக்கும்போது இயேசு உண்மையாகவே உயிர்த்துவிட்டார் என
உறுதிபடச் சொல்லலாம். மட்டுமல்லாமல், இன்றைய இரண்டாம்
வாசகத்தில் (கொலோசையருக்கு எழுதப்பட்ட திருமுகம்) பவுலடியார்,
"கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு
சார்ந்தவற்றையே நாடுகள்" என்பார். கடவுளுக்கு உகந்த வாழ்ந்த
வாழ்வதே மேலுலகு சார்ந்த வாழ்க்கையாகும்.
ஆகவே, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம்,
அவருடைய உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொள்வோம், அவருடைய
உயிர்ப்புக்கு சாட்சிகளாகத் திகழ்வோம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
நில் கவனி செல் - அன்பில்
ஏப்ரல் 1 ஏமாளிகள் தினம். இன்று நமதாண்டவரின் உயிர்ப்புப்
பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றோம். காதலர்
தினத்தன்று தொடங்கிய நமது தவக்காலப் பயணம், ஏமாளிகள் தினத்தன்று
அதன் நிறைவை அடைந்து இருக்கின்றது. யார் ஏமாளிகள் ? அறிவு இல்லாதவர்களா?
அனுபவம் இல்லாதவர்களா? இல்லவே இல்லை. முட்டாள், ஏமாளி என்ற பட்டம்
கிடைப்பதற்கு அறிவு அனுபவம் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
அதிக அன்போடு இருந்தாலே போதும் அப்பட்டங்கள் கிடைத்துவிடும்.
கிறிஸ்துவின் அன்பை அதிகமதிகமாக சுவைத்து மகிழ்ந்து , அதை பிறருக்கும்
கொடுக்கும் நாமும் ஏமாளிகளாக முட்டாள்களாக பிறர் கண்களுக்குத்
தென்படலாம். ஆனால் உண்மையில் நாம் கிறிஸ்துவின் அன்பர்கள். உயிர்த்த
இயேசுவின் உன்னத சீடர்கள். உலக மக்களுக்கு வேண்டுமானால் இத்தினம்
உலக முட்டாள்கள் தினமாக இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவை அவர் உயிர்ப்பை
நம்பும் நமக்கு உவகையின் நாள். உண்மை வெற்றியின் உன்னத நாள்.
நமக்கு யாராவது இன்று ஏமாளிகள் தின வாழ்த்து சொன்னால் அதை ஏற்றுக்
கொள்வோம். ஏனெனில் உயிர்ப்பைக் கொண்டாடுவார்கள் என எண்ணி இருந்தோம்
. ஆனால் நம்மை ஏமாற்றி உலகப் போக்காக ஏமாளிகள் தினம்
.கொண்டாடுகிறார்களே . உயிர்ப்பு அனுபவம் பெற்றவன் உயிர்ப்பு
விழா கொண்டாடுகிறான். நாம் யார் ஏமாளிகளா? உயிர்ப்பு
பெருவிழாக்காரர்களா?
இன்றைய நற்செய்தியின் வாசகங்களுக்கு வருவோம். மகதலா மரியாள் கல்லறை
நோக்கி அதிகாலையில் பயணமாகிறார். கல்லறைக் கல் புரட்டப் பட்டிருக்கிறது.
சீடர்களுக்கு அறிவிக்கிறார். அவர்களும் வந்தனர், பார்த்தனர்,
நம்பினர். கிறிஸ்துவின் மரணம் கல்லறையோடு நின்றிருந்தால் இன்று
நம் திருச்சபை இல்லை. கிறிஸ்தவமும் இல்லை. அவருடைய உயிர்ப்பில்
தான் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு ஆரம்பமாகிறது. விசுவாசத்தில்
ந்ங்கூரமிடப்பட்டு திருச்சபை உருவாகி கிறிஸ்தவம் தழைத்திருக்கிறது.
உயிர்ப்பு தான் உண்மைக் கிறிஸ்தவர்களின் மையம். அதை மையமாக
வைத்து தான் நமது திருவழிபாட்டு காலங்கள் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன.
நமது கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு பயணம். சாலையில் பேருந்து அல்லது
வாகனங்களில் பயணம் செய்யும்போது போக்குவரத்து சமிக்கை ஒளியைக்
கவனித்திருப்போம். சாலை விதிகளில் ஒன்றான அவற்றைப் பின்பற்றி
பயணிக்கும்போது,நம்முடைய பயணம் சிறப்பானதாக, மகிழ்வானதாக அமைகிறது.
அதில் உள்ள சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ணா நிறங்கள் குறிக்கும்
நில், கவனி , செல் என்பவை தான் இன்றைய உயிர்த்த இயேசு நமக்கு
தரும் சமிக்கைகள் . நமது வாழ்க்கைப் பயணம் சிறப்பானதாக மகிழ்வானதாக
அமைய இயேசு தரும் உன்னத சமிக்கைகள் இவைகள்.
இன்றைய நற்செய்தியில் நாம் காணும் அனைத்து நபர்களும் இந்த சமிக்கைகளுக்கு
கட்டுப்பட்டு தங்கள் பயணத்தை இனிதாக மாற்றியிருக்கிறார்கள்.
பயணம் இனிதாக பாதை சரியாக இருந்தால் மட்டும் போதாது பயணிக்கும்
நாம் பயண விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்கவும் வேண்டும்.
மகதலா மரியாள்.
அதிகாலையில் கல்லறை நோக்கி ஆயத்தமாகிறார்.
கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டு நிற்கிறார்.
ஆண்டவரின் தூதரது செயலையும் குரலையும் கவனிக்கிறார்.
தனக்கு கொடுக்கப்பட்ட பணியைச்செய்யவிரைந்து செல்கிறார்.
உயிர்த்த இயேசுவை முதலில் கண்டவர் என்ற பெரும் பேற்றை பெற்று
இன்று திருத்தூதர்களின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகிறார்.
பிறப்பு தரித்திரமானாலும் இறப்பு சரித்திரமாகட்டும் என்ற
கூற்றை மெய்ப்பித்தவர்.
பேதுரு:
கல்லறைக்குள் விரைந்து சென்று நிற்கிறார்.
இயேசுவின் உடலைச்சுற்றி இருந்த துணிகளைக் கவனிக்கிறார்.
பின் உயிர்த்த இயேசுவைக் காண விரைந்து கலிலேயா செல்கிறார்.
அன்புச்சீடரும் பிறசீடர்களும்;
பேதுருவுக்கு முன்பாக வந்தாலும் தலைமைக்கும் வயதிற்கும் மரியாதைக்
கொடுத்து உள்ளே செல்லாமல் வெளியே நிற்கின்றனர்.
சூழ்நிலையைக் கவனிக்கின்றனர்.
நம்பிக்கையோடு இயேசுவின் உயிர்ப்பைக் கொண்டாட , அவரைக் காண
விரைகின்றனர்.
நமது வாழ்க்கையிலும் இந்த சமிக்கைகளைக் கடைபிடித்தால் பல நல்ல
பயன்களை நமக்குத் தரும். எவ்வாறு இந்த மூன்று போக்குவரத்து சமிக்கைகளும்
இல்லாத பயணம் சிறப்பான பயணமாக பாதுகாப்பான பயணமாக அமையாதோ அது
போல இவை ( நில், கவனி, செல்) மூன்றும் கடைபிடிக்கப்படாத
வாழ்க்கை மகிழ்வான பாதுகாப்பான வாழ்க்கையாக அமையாது. அன்பில்
நிலைத்து நில், அன்பைக் கவனி, அன்போடு செல். அன்பு தான்
வாழ்வின் அங்கம். அன்பினால்தான் இயேசு இவ்வுலகிற்கு மனிதனாக வந்தார்.
அன்பினால் தான் காயப்பட்டார். சிலுவை மரணம் வரை கொண்டு செல்லப்பட்டார்.
அதே அன்பினால் தான் உயிர்த்து எழுந்திருக்கிறார். அன்பு இல்லை
என்றால் உயிர்ப்பு இல்லை. உயிர்ப்பு இல்லை என்றால் கிறிஸ்தவமே
இல்லை.
அன்பு தான் உயிர்த்த ஆண்டவரைக் கண்டு கொள்கிறது.
அவரை அதிகமாக அன்பு செய்த மகதலாமரியாள்.
அவரால் அன்பு செய்யப்பட்ட அன்புச்சீடர்.
அன்பு செய்கிறாயா? என்று கேட்கப்பட்ட பேதுரு.
ஆக ஆண்டவர் இயேசுவை அன்பு செய்கிறவர்கள் உயிர்ப்பு அனுபவம்
பெறுவது உறுதி. நாம் ஆண்டவர் இயேசுவை அன்பு செய்பவர்களா? இல்லை
அவரால் அன்பு செய்யப்பட்டவர்களா? இல்லை என்னை அன்பு செய்கிறாயா
என கேட்கப்படுபவர்களா? சிந்திப்போம். அன்பைப் பெற்றவர்களுக்கும்
கொடுப்பவர்களுக்குமே உயிர்ப்பு விழா பொருத்தமானதாக இருக்கும்.
மகதலா மரியாள் போல ஆண்டவரைத் தேடும் நல்ல உள்ளம் வேண்டுவோம்.
ஆண்டவரைக் காணவில்லை என்றதும் பதறித் துடித்து கண்டடைய ஓடிய,
பேதுரு போல ஆண்டவரோடு வாழ்பவர்களாக மாறுவோம். ஆண்டவரின் உடல்
சுற்றப் பட்டிருந்த துணியைக் கொண்டே அவர் உயிர்த்ததை நம்பிய அன்புச்சீடர்
போல நம்பிக்கை உடையவர்களாவோம். அன்பில் நிலைத்து நிற்போம் அன்பு
எதில் உள்ளது எனக் கூர்ந்து கவனிப்போம். அன்போடு உடன் பயணிப்போம்.
உயிர்த்த ஆண்டவரின் அருளும் சமாதானமும் என்றும் நம்மோடும் நம்
குடும்பத்தோடும் என்றும் இருப்பதாக ஆமென்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 4
=================================================================================
கல்லை நமக்கு யார் அகற்றுவார்?
இந்த ஆண்டு திருநீற்றுப் புதன் மற்றும் பாஸ்கா ஞாயிறு வருகின்ற
தேதிகள் உலகின் பார்வைக்கு சற்றே வித்தியாசமாக உள்ளன.
பிப்ரவரி 14, உலகமே வாலன்டைன் டே (காதலர் தினம்) கொண்டாடும் நாளன்று
திருநீற்றுப் புதன் வந்தது. ஏப்ரல் 1, உலகமே முட்டாள்கள் தினம்
கொண்டாடும் அன்று பாஸ்கா பெருவிழா வருகிறது. தமக்குரியவர்களை
இறுதிவரை அன்பு செய்த மனுக்குலத்தின் காதலன் இயேசுவின் உயிர்ப்பு
ஆள்வோரின் பார்வையில் ஒரு முட்டாள்தனமான நிகழ்வாக இருந்திருக்கலாம்.
"இயேசு உயிர்த்துவிட்டார்" என்ற செய்தி "ஏப்ரல் ஃபூல்"
செய்தியாக இருந்திருக்கலாம். அல்லது "ஏப்ரல் ஃபூல்" என எல்லாரையும்
ஏமாற்றிவிட்டு அந்த மாபரன் உயிர்த்துவிட்டார் என வைத்துக்கொள்ளலாம்.
இயேசுவின் உயிர்ப்பை அவரோடு இருந்தவர்களைத் தவிர எல்லாரும்
நம்பி எதிர்நோக்கினர்.
இயேசுவின் எதிரிகளும் அவரை சிலுவையில் அறைந்தவர்களும் அவர்
உயிர்த்துவிடுவார் என்று நம்பியதால் கல்லறைக்குக் காவல்
வைக்கின்றனர். இயேசு உயிர்த்துவிடுவார் என்ற நம்பிக்கை
இல்லாததால் என்னவோ சீடர்களும், சீடத்திகளும், நலவிரும்பிகளும்
நறுமணப்பொருள்களை எடுத்துக்கொண்டு கல்லறை நோக்கி விரைகின்றனர்.
அவர்களின் எண்ணம் மற்றும் ஏக்கம் இயேசுவின் உயிர்ப்பு அல்ல.
மாறாக, "கல்லை நமக்கு யார் அகற்றுவார்?" என்ற கவலையே அவர்களின்
உள்ளங்களில் இருந்தது.
"கல்" - இயேசுவுக்கும் வெளியில் இருப்பவர்களுக்கும் நடுவில்
இருக்கும் தடை. இந்த தடை அகன்றால்தான் அவர்கள் அவரின் உடலை
நெருங்க முடியும்.
"கல் அகற்றப்பட்டது இயேசுவை வெளியேற்றுவதற்கு அல்ல. மாறாக,
சீடர்களை உள்ளே அனுப்புவதற்கு" என்கிறார் தூய அகுஸ்தினார். ஆக,
கல் அகற்றப்படவில்லையென்றாலும் இயேசுவால் உயிர்க்க முடியும்.
அதைத்தான் அவருடைய உயிர்ப்புக்குப் பின் நிகழ்வுகளும்
காட்டுகின்றன. பூட்டிய அறைக்குள் அப்படியே நுழையும் இயேசுவால்
பூட்டிய கல்லறையிலிருந்து வெளியேற முடியும்.
தன் உயிர்ப்பு அனுபவத்தை "உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்"
என்ற மூன்று வார்த்தைகளால் பதிவு செய்கிறார் யோவான் (காண்.
யோவா 20:8).
"இயேசு இல்லை" என்பதைக் கண்டு அவர் உயிர்த்துவிட்டார் என
நம்பினார்.
ஆக, இல்லாத ஒன்று இருக்கின்ற மற்றொன்றை அவருக்குச்
சொல்லிவிடுகிறது. இவ்வாறாக, இல்லாமையும்கூட இருத்தலைச்
சொல்லிவிட முடியும்.
பாஸ்கா இரவுத் திருப்பலியில், ஏழு முதல் ஏற்பாட்டு
வாசகங்களும், ஒரு திருமுகமும், ஒரு நற்செய்தி வாசகமும் என
மொத்தம் ஒன்பது வாசகங்கள் வாசிக்க வேண்டிய அறிவுறுத்தல்
இருந்தாலும், இவற்றில் ஐந்து வாசகங்களையாவது வாசிக்க வேண்டியது
கட்டாயம்.
ஒளி, இறைவார்த்தை, திருமுழுக்கு, நற்கருணை என இன்றைய வழிபாடு
ரொம்ப கலர்ஃபுல்லாக இருக்கிறது. இந்த இரவு திருவிழிப்புதான்
எல்லா திருவிழிப்புகளுக்கும் தாய் என்றும் அழைக்கப்படுகின்றது.
முதல் ஏற்பாட்டு நிகழ்வான விடுதலைப்பயணத்தையும், இயேசுவின்
உயிர்ப்பையும் இணைத்து இன்றைய வழிபாடு
உருவாக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில் (தொடக்கநூல்) "இல்லாமையிலிருந்து"
"இருப்புக்கும்", "குழப்பத்திலிருந்து," "தெளிவுக்கும்,"
"இருளிலிருந்து," "ஒளிக்கும்" உலகம் கடந்து வருகிறது. இதுதான்
படைப்பு.
இரண்டாம் வாசகத்தில் (விடுதலைப்பயணம்) "எகிப்தின்
அடிமைத்தனத்திலிருந்து," "வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கும்,"
"பாரவோனை அரசனாகக் கொண்டதிலிருந்து," "யாவேயை அரசனாகக்
கொள்வதற்கும்," "வாக்குறுதிக்கான காத்திருப்பிலிருந்து,"
"வாக்குறுதியின் நிறைவேறுதலுக்கும்" கடந்து செல்கின்றனர்
இஸ்ரயேல் மக்கள். இதுதான் விடுதலைப்பயணம்.
மூன்றாம் வாசகத்தில் (எசேக்கியேல்) "உலர்ந்த நிலையிலிருந்து,"
"உயிர்பெற்ற நிலைக்கு" எலும்புகளும், "நாடுகடத்தப்பட்ட
நிலையிருந்து," "சொந்த நாடு திரும்பும் நிலைக்கு" இஸ்ரயேல்
மக்களும் திரும்புகின்றனர். இது அவர்களுக்கு இரண்டாம் மீட்பு.
நான்காம் (உரோமையர்) மற்றும் ஐந்தாம் வாசகங்களில் (லூக்கா),
இயேசுவின் உயிர்ப்பு மையமாக இருக்கின்றது. "இறப்பிலிருந்து,"
"உயிர்ப்புக்கு" இயேசு கடந்து போனதை கிறிஸ்தவ வாழ்வின்
உருவகமாக பவுலும், "உயிரற்ற அவர்," "உயிரோடிருக்கும் நிலைக்கு"
என நேரிடையாக லூக்காவும் சொல்கின்றனர்.
ஆக, மேற்காணும் இந்த ஐந்து நிலைகளிலும், முன்னால் இருந்தது
இப்போது இல்லை.
முன்னால் இருந்த குழப்பம் இல்லை.
முன்னால் இருந்த அடிமைத்தனம் இல்லை.
முன்னால் இருந்த நாடுகடத்தல் இல்லை.
முன்னால் இருந்த பாவ இயல்பு இல்லை.
முன்னால் இருந்த இறப்பு இல்லை.
"முந்தைய நிலை" மாறிவிட்டது. அல்லது "கடந்து விட்டது".
முந்தைய நிலையை மறைத்திருந்த கல் புரட்டப்படுகிறது.
எதற்காக மனித மனம் இந்த கடத்தலை அல்லது மாற்றத்தை
விரும்புகிறது? இந்த ஐந்து நிகழ்வுகளும் அறிவியல்
கோட்பாட்டிற்கும், லாஜிக்கிற்கும் அப்பால் இருக்கின்றன. இருள்
ஒளியாகிறது. தண்ணீர் வறண்ட நிலமாகிறது. எலும்பில் சதையும்
உயிரும் பிறக்கிறது. பாவம் புதுவாழ்வாகிறது. உயிரற்ற உடல்
உயிர் பெறுகிறது.
முந்தைய நிலையிலிருந்து பிந்தைய நிலைக்கான மாற்றம் கல்
நகர்த்தலில் இருக்கின்றது.
"அவர்கள் நிமிர்ந்து நோக்கியபோது"
- இதுவரை தங்கள் துக்கத்தால் முகத்தை கவிழ்த்து வைத்தவர்கள்
நிமிர்ந்து பார்க்கும்போது தங்கள் கண்களுக்கு முன் அந்த
அதிசயம் நடந்தேறியிப்பதைப் பார்க்கிறார்கள். "கல்
புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்" அவர்கள். "அது பெரியதொரு
கல்" என கல்லுக்கு வர்ணனை தருகின்றார் மாற்கு நற்செய்தியாளர்.
உள்ளே செல்கிறார்கள். இன்னொரு ஷாக் அங்கே அவர்களுக்குக்
காத்திருக்கிறது. "வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர்
வலப்புறம் அமர்ந்திருக்கிறார்."
"அவர் இங்கே இல்லை ... அவர் சொன்னது போலவே உயிர்த்தெழுந்தார்"
என்கிறார் இளைஞர்.
ஆக, இயேசுவின் உயிர்ப்பை நம்பவேண்டுமென்றால் அவருடைய
வார்த்தைகளை நம்ப வேண்டும்.
இந்த மகிழ்ச்சி செய்தியைக் கேட்ட அவர்கள் ஓட்டம்
பிடிக்கிறார்கள். "எல்லாரிடமும் கூறுங்கள்" என்று சொன்னாலும்
அவர்கள் சொல்லாமல் மெய்மறந்தவர்களாகின்றனர். "அவர்கள் அச்சம்
கொண்டிருந்தார்கள்."
அதிகாலையில் விடியலுக்கு முன்பே எழுந்த வந்த மூன்ற பெண்கள்
அடுத்தடுத்து அச்சத்தால் ஆள்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறாக,
மாற்கு நற்செய்தியில் இறுதிவரை இயேசுவை அவருடைய சீடர்கள்
புரிந்துகொள்ளாமலேயே இருந்துவிடுகின்றனர்.
இந்த புரிந்துகொள்ளாமைக்கு முதல் காரணம் அச்சம்.
கல் பற்றிய அச்சம், வானதூதர் பற்றிய அச்சம், இளைஞர் பற்றிய
அச்சம், உயிர்ப்பு பற்றிய அச்சம் என வரிசையாக இவர்கள்
அச்சத்தால் பீடிக்கப்படுகின்றனர்.
பல நேரங்களில் கல் தானாகவே அகன்றுவிடும் - அது எவ்வளவு பெரிய
கல் என்றாலும் - என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அதற்குக்
காரணம் நம்மிடம் இருக்கும் அச்சம்.
"அச்சம்" - இந்த ஒன்று நமக்கும் நம் எதார்த்தத்திற்கும் இடையே
ஒரு பெரிய கல்லை நகர்த்திவைத்துவிடுகிறது.
ஆக, கல்லறையின் வெளியே இருந்த பெரிய கல் அகற்றப்பட்டாலும்
அவர்கள் கண்களுக்கு முன் இருந்த கல் அகற்றப்படவில்லை. இன்று
நம்மிடம் துலங்கும் அச்சங்களை நினைத்துப் பார்ப்போம்.
கல்லை நமக்குப் புரட்ட இறைவன் இருக்கிறார் என்றாலும், நமக்கு
நாமே வைத்துள்ள கல்லை நாம் அகற்ற முன்வருவோம்.
நம் பாதைக்கு தடைக்கல்லாக இருந்த கெட்ட பழக்கங்கள், எண்ணங்கள்
ஆகியவற்றை கஷ்டப்பட்டு 40 நாள்கள் தள்ளி வைத்திருந்தோம்.
இனியும் அவைகள் கற்களாக நம்முன் நிற்க வேண்டாம். கல் விலகியது.
கட்டின்மை பிறந்தது.
என் கண்முன் நிற்கும் கற்கள் புரட்டப்பட அருள்தாரும் இறைவா!
அனைவருக்கும் உயிர்ப்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
(அருட்தந்தை இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdiocese of Madurai
|
|